\"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.\"
-செம்புலப் பெயனீரார்.
What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting.
இந்த குறுந்தொகை கவிதையைத்தான் நான் அவளுக்கு கடிதமாக அனுப்பினேன், மேலும் கடிதத்தில் இதைதவிர வேறு எதுவும் எழுதவில்லை. ஏனென்றால் என் காதலை இதைவிட எப்படி சிறப்பாக சொல்லமுடியும். என் மனதை படித்த கவிதை இது.
மனம் பதைபதைக்க என்ன சொல்வாளோ என்ற பதட்டத்துடன் சென்றேன். கோவிலுக்குள் நுழைந்தவுடன் அவளை பார்க்கும்போது கோபமாகத்தான் அமர்ந்திருந்தாள்.. சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.. இதற்குமேல் நடந்தவற்றை உரையாடலாக தருகிறேன்..
\'\'உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே குமார்\'\'
\'\' அதன் சொல்லிட்டேனே\'\'
\'\'நமக்குள்ள இது எப்படி ஒத்துவரும்ன்னு நெனைக்கிறே\'\'
\'\'ஏன் ஒத்துவராது?\"
\" எதுவுமே ஒத்துவராது\'\' முதல்ல நீங்க தேவர், நாங்க வேளாளர். அப்புறம் உங்க ஊரு பரவாக்கோட்டை, அந்த பேரை சொன்னாலே அப்பா சம்மதிக்கமாட்டார், அப்பிடி ஒரு பேரு வாங்கியிருக்கிங்க, எதுக்கெடுத்தாலும் வெட்டு, குத்துதான்.. அதனால இது நமக்கு சரிப்பட்டு வராது குமார்..
\" நீயா எல்லாத்தியும் முடிவு பன்னிர்றதா? அஞ்சலி\"
\"என்ன இப்பவே அதிகாரம் தூள் பறக்குது.. முதல்ல எனக்கு உன்னை புடிக்கணும் தெரியுமா?\"
\'\' அப்ப புடிக்காமதான் இவ்வளவு நாளும் பழகினியா?\"
\" பாத்தியா நீயும் சராசரிதான்னு நிருபிச்சுட்டே.. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?\'\'
\'\' என்னை விரும்புகிறாயா? இல்லையா? அத மட்டும் சொல்லு அஞ்சலி..\"
\"இல்லை குமார் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை\"
\"அத சொல்லிட்டு போ.. அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணாத\"\'
\" ஏன் கோபப்படுறே நியாயமா எனக்குதானே கோபம் வரணும்\"
\" நான் உன்னை விரும்புகிறேன் அவ்வளவுதான். புடிச்சா பேசு இல்லாட்டி போய்கிட்டே இரு அஞ்சலி\"
\'\'ரொம்ப பேசுறே குமார், உன்னோட ஊர் குணத்த என்கிட்டே காட்டாத\"
\" இப்ப என்னை என்னதான் பண்ண சொல்றே\"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்.. பிறகு
ஒன்றை நீ புரிஞ்சுக்கணும் ஒரு நல்ல நண்பனாக நீ இருக்கமுடியும் ஆனால் வாழ்க்கை முழுக்க ஒன்னோட வாழனும்னா அது கஷ்டம், ஏன்னா முதல்ல என்னோட வீட்டுல இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க, அவங்கள எதுத்துக்கிட்டு என்னால எதுவும் பண்ண முடியாது, இவ்வளவு நாள் அப்பா, அம்மாவ பிரிஞ்சு இருந்தாச்சு, இனிமே என்னால அவங்கள பிரிய முடியாது.
அப்புறம் முக்கியமா இது நமக்கு வயசில்லை, உன்னை பொறுத்தவரை இன்னும் அஞ்சு வருசமாவது போவனும், சும்மா வெட்டியா பொழுது போக்குற உன்னை நான் எப்படி நம்ப முடியும். அதனால இன்னையோட நாம எல்லாத்தியும் முடிச்சிக்கலாம், நான் உன்னை சராசரிக்கும் மேல் இருப்பாய் என நினைத்தேன், ஆனால் நீ அப்படி இல்லை, இதற்க்கு பிறகும் வெறும் நட்போட உன்னால் என்கூட பழக முடியாது, இப்ப நான் உன்னை நான் பாத்து பேசுறது கூட நீ எனக்கு எழுதுன லெட்டர்தான் அந்த கவிதை அற்புதம். இதையே ஒரு அஞ்சு வருடம் கழித்து கொடுத்து இருந்தா, நல்லா இருந்திருக்கும். அப்படின்னு சொல்லிட்டு இனி நான் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என சொன்னாள்........
நானோ முதல்ல நீ எனக்கு அட்வைஸ் பன்றத நிறுத்து, என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும், நான் என் விருப்பத்த சொன்னேன், உனக்கு பிடிக்கலேன்னா, சொல்லிட்டு போ, இனிமே உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லேன்னு சொன்னா எப்படி, அப்புறம் ஒரு அஞ்சு வருஷம் போகட்டும், அப்ப உனக்கு பிடிச்சுருந்தா பாக்கலாம், இல்லேன்னா நட்பா இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை என்றேன்.
இல்ல குமார் இனிமே அப்படி இருக்கமுடியாது, உன்ன பார்க்கிரப்பல்லாம் நீ இதைபத்திதான் பேசுவே, இனிமே நமக்குள்ள நட்பு மட்டும் இருக்காது, எனவே தயவு செய்து என்னை மறந்திடு. ஒரு சிறப்பான வாழ்க்கை உனக்கு உண்டு, வேன்னா ரெண்டு வருஷம் போவட்டும், நீ முதல்ல உன் எதிர்கால வாழ்க்கைக்கு இப்பவே திட்டமிடு. அதற்கு அப்புறமும் நீயும் நானும் இதே மனநிலையில் இருந்தால் அப்ப பாக்கலாம் என்றாள்.
நான் எதுவுமே பேசவில்லை, கனத்த மௌனத்துடன் தலை தொங்கி அமர்ந்திருந்தேன், என்தலையை நிமிர்த்தி, ப்ளீஸ் புரிஞ்சுக்கப்பா என்றாள். நான் பதில் சொல்லவில்லை, என் வலது கையை எடுத்து தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துகொண்டாள், என் கை நடுங்கியது. அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, மெல்ல என் கையை விடுவித்து ஒரு சிறிய சங்கினை கொடுத்தாள், என்னைப்பற்றி நீ நெனைக்கிற போதெலாம் இதபாரு உனக்கு சில விசயங்கள் புரியும், அயம் வெரி வெரி சாரி குமார் உன்னை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று சொல்லிவிட்டு விறுவென நடந்துவிட்டாள்.
நான் அமர்ந்திருந்தேன் அவள் தூரமாய் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன், என் உயிர் என்னைவிட்டு பிரிகிறமாதிரி இருந்தது, எனக்கு ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது..
நீ
அமர்ந்து போன இடங்களில்
உதிர்ந்து போன மல்லிகை மொக்குகளை
மெல்ல எடுத்து நான்
பாட புத்தகங்களில் பாதுகாத்து வைத்தது
தெரியாது
உனக்கு தெரியாது..
நீ
நடந்து போன பணிபாதைகளில்
நசுங்கிப்போன பசிய புற்களை
அன்பாய் பார்த்து
தடவிகொடுத்தபின் மெல்ல நிமிர்கிற அவற்றிடம்
உனக்காக நான் மன்னிப்பு கேட்டது
தெரியாது
உனக்கு தெரியாது..
மன்மத சாட்டையாய்
நீண்டு கிடக்குமுன் கூந்தல்
பின்னழகில் உரச உரச நீ
நடந்து போகையில்
என் மனக்காடுகளில்
தீப்பிடித்து எறிந்த கதை
தெரியாது
உனக்கு தெரியாது..
ஓர்
இராப்பிச்சைகாரனாய்
உன்னை மட்டுமே பின் தொடர்ந்து வரும்
எனக்கு
கோயிற் குளத்து மீன்களுக்கு
ரொட்டி துண்டுகளை பிய்த்து போடுகிற மாதிரி
சின்ன சின்ன புன்னகைகளை
நீ
பிச்சை இட சம்மதிக்கிறாய்
மெல்ல
மெல்ல..
ஓர் வானவில் போல்
நம் காதல் வளர ஆரம்பிக்கிறது..
இறுதியில்
நீ போகிறாய்
திரும்பித்
திரும்பி பார்த்தபடி
நீ போகிறாய்
போகப் போக பார்த்துக்கொள்ளலாம்
என்றவள் போகிறாய்
போகப் போக பார்த்தாயா
நான் நிற்கிறேன்
மெல்ல
மெல்ல..
ஓர் வானவில்போல்
வளர்ந்த நம் காதல்
இதோ உடைந்த வளையல் துண்டாய்
புழுதியில் கிடக்கிறது...
என் மனதை அப்படியே படம் பிடித்த இந்த கவிதை எழுதியவரை நான் மானசீகமாக வணங்கினேன்..
இத்தோடு முடிந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும், ஆனால் விதி வலியது. எங்களை அது ஒரு கை பார்த்துவிட்டே சென்றது, அவள் மீண்டும் என்னை தேடிவந்தாள் இதற்க்கு அப்புறம் நடந்தவற்றை அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்
2 கருத்துகள்:
அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
WOW NICE
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN
கருத்துரையிடுக