2 ஏப்., 2010

தேவதை கதைகள் "அலமேலு"
















நான் சிங்கப்பூரில் இருந்தபோது நிறைய நண்பர்கள் பழக்கம், அப்படி ஏற்பட்ட பழக்கத்தினால் ஒரு உதவி செய்யப்போய் அதனால் ஏற்பட்ட அனுபவம் இது.


அன்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது, தொலைபேசியில் தனக்கு அவசரமாக ஒரு உதவி வேண்டும் என்றார் கருணாமூர்த்தி, இவர் சிங்கப்பூர்காரர் தான் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றலாகி போவதாகவும், அவசரத்திற்கு தன் வீட்டு பணிப்பெண்ணை கூட்டி செல்ல முடியவில்லை என்றும் அதனால் ஒரு மாதத்திற்கு அப்பெண்ணை எங்காவது தங்க வைக்க முடியுமா?என்றார். நாளை இரவுக்குள் ஏற்பாடு செய்கிறேன் என சொன்னேன், எனக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டேன் ஆனால் மறுநாள்வரை யாரும் தனக்கு பணிப்பெண் வேண்டாம், அதிலும் ஏதாவது பிரச்சினை வரும் என பயந்தனர்.

எனக்கு உடனே தனஞ்செய் நினைவுக்கு வந்தார், அவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சிறுவயதில் தாயை இழந்தவர் சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தவர், பின்னாளில் தந்தை மறுமணம் செய்துகொண்டது பிடிக்காமல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் நண்பன் மூலமாக சிங்கபூர் வந்து விட்டார், தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார், எனக்கு ஒரு நண்பர் மூலமாக அறிமுகமான அவர் மிகவும் நல்லவர், அவரிடம் எனக்கு பிடிக்காத ஒன்று வீட்டை குப்பை கூடமாக ஆக்கி வைத்திருப்பார். என்றாவது சனிக்கிழமை இரவுகளில் அவர் வீட்டுக்கு செல்வேன், அங்கு சென்று விடிய விடிய பீர் குடிப்போம். ஒருமுறை என்னிடம் சமைக்க தெரிந்த பையன் இருந்தால் சொல்லுங்கள் என்னுடன் தங்கிகொள்ளட்டும், வாடகை எதுவும் தரவேண்டாம், சமைத்துவைத்தால் போதும், வீட்டை கொஞ்சம் சுத்தபடுத்தினால் போதும், கொஞ்சம் சிரமபடுகிற வேலை அனுமதியில் வந்திருக்கும் பையனை அனுப்பி வையுங்கள் என்றார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் இருக்கும், இருந்தாலும் கேட்டு பார்க்கலாமே என அன்று இரவு தொலைபேசியில் பிடித்தேன்

அவரோ நான் பையன்தான் கேட்டேன் பெண் என்றால் வேண்டாம் என்றார். நான் பிடிவாதமாக அது வயதான பெண்மணி, ஒரு மாதத்திற்கு மட்டும் இருந்தால் போதும் , இல்லை தற்சமயத்துக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருக்கட்டும், வேறொரு வீடு கிடைத்தால் நான் அங்கு அனுப்பிவிடுகிறேன், கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றேன். அரைமனதாக சரி என்றார்.

மறுநாள் கருனாமூர்த்தியிடம் நண்பர் தனஞ்செய் உங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து போவார் என்றேன். அவரும் நாளை மாலை வரசொல்லுங்கள், நாங்கள் நாளை இரவுதான் கிளம்புகிறோம், அவரும் வந்தால் அப்போதே அழைத்து போகட்டும் என்றார்.

மறுநாள் இரவு மீண்டும் கருணாமூர்த்தி பேசினார், என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க என்றார் கோபமாக, என்னன்னே ஆச்சு அவர் வரலியா? என்றேன். இல்ல தம்பி அவர் வந்துட்டார், ரொம்ப சின்ன பையனா இருக்கார், அதுவும் அவர் மட்டும்தான் தனியாக இருக்காராம்! அவர நம்பி எப்படி அனுப்ப முடியும் என்றார். நானோ அண்ணே, இப்போதைக்கு இரண்டு நாளைக்கு இருக்கட்டும், அதன்பிறகு வேறு வீடு பார்த்து அனுப்பி வைக்கிறேன், மேலும் தனஞ்செய் மிகவும் நல்லபைய்யன் அவரை நம்பி அனுப்புங்கள் என்றேன்

அதற்குள் தம்பி அவர் உங்ககிட்டே பேசனுமாம் என்று தொலைபேசியை அவரிடம் கொடுத்தார். தனன்ஜெய்யும் என்னங்க நீங்க வயசானவங்கன்னு சொன்னீங்க, ஆனா சின்ன பொண்ணா இருக்கு, என்னால கூட்டிட்டு போக முடியாதுங்க என்றார். எனக்கோ குரங்கு அசைத்த ஆப்பின் கதைதான் நினைவுக்கு வந்தது, என்னடா உதவி செய்யபோய் கெட்டபேர் ஆகிவிட்டதே எப்படியாவது இதனை சரி செய்ய வேண்டுமே என தனன்ஜெய்யிடம், மன்னிச்சுகங்க நண்பா அவங்க பேரு "அலமேலு"ன்னு சொன்னதும் வயசானவங்களா இருக்கும்ன்னு நம்பிட்டேன், தயவு செஞ்சு நாளை மாலை வரை உங்கள் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதன்பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கருணாமூர்த்தி தம்பி உங்கள நம்பித்தான் போறேன்,அது சின்னபொன்னு ரொம்ப பாவம் ஒரு பிரச்சினையும் வராம பாத்துக்கணும் என்றார். தனன்ஜெயோ வீட்டிற்கு சென்றவுடன் நண்பா உங்களுக்காதான் அழைச்சிகிட்டு வந்தேன், நாளை மாலை வந்து கூட்டி போய்விடுங்கள், இல்லன்ன அவங்கள வெளில அனுப்பிவிடுவேன், அப்புறம் வருத்தபடாதீங்க என டொக்கென தொலைபேசியை வைத்தார்.

எனக்கோ வடிவேலு மாதிரி ஆகிட்டோமே, உனக்கு வேணுண்டா... இனிமே யாரவது உதவின்னு கேட்டா பண்ணுவியா என என்னையே திட்டிகொண்டேன், அன்று இரவு எனக்கு தூக்கமற்று கழிந்தது. மறுநாள் வேலைக்கு போகவில்லை, அந்த பெண்ணிற்கு ஏதாவது வழி பன்னவேண்டுமே.. முகமறியாத அந்த பெண்ணிற்க்காக நான் அன்று அவ்வளவு அலைந்தேன்.

மாலைவரை ஒருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டனர், எப்படியாவது தனன்ஜெய்யிடம் சொல்லி இன்னொரு நாள் கேட்க்கவேண்டும் என முடிவு செய்தேன். அன்று இரவு எட்டுமணி வாக்கில் தனன்ஜெயிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன சொல்வாரோ என கலவரமாகவே வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றேன், அவரோ உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியுது, ஏன் வரலை என்றார்? மன்னிச்சுகங்க இன்னைக்கு வேலை அதிகம் எனவே நாளை மாலை நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ பரவயில்லைங்க அவங்க இங்கேயே ஒரு மாதம் இருக்கட்டும், அத சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றார், எனக்கோ அப்பாடா என்றிருந்து ஆவலை அடக்கமுடியாமல் என்ன ஆச்சுங்க எதனால அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என்றேன்.

அவரோ நான் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீடு மாறி வந்திட்டோம்ன்னு நெனெச்சேன், ஒரு நாளைக்குள்ள என் வீட்டை தலைகீழா மாத்திட்டாங்க, வீடே இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு, சமைச்சு வேற வச்சுருக்காங்க.. சரி இங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவு செய்தேன், எதற்கும் அவங்களிடம் இங்க இருப்பதில் சங்கடம் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க என தொலைபேசியை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் நீங்க சொன்னா இருக்கிறேன் என்றது, நானும் பிரச்சினை தீர்ந்ததே என்ற சந்தோசத்தில் நீ அங்கேயே இரும்மா, நான் வரும் சனிக்கிழமை பார்க்கிறேன் என சொன்னேன்.

அன்று எனக்கு தெரிந்தவில்லை நான் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறேன் என்று. ..

அதன்பிறகு இரண்டு வாரம் கழித்துதான் நான் தனஞ்செய் வீட்டுக்கு போனேன். அங்கு அந்த பெண் அலமேலுவை அன்றுதான் பார்த்தேன். அந்த பெண்ணின் பெயர் அலர்மேல் மங்கை சுருக்கமாக அலமேலு ஆகிவிட்டது. முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. உங்களுக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே என்றது. எனக்கும் அது புரிந்தது ஏனென்றால் அந்த வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது. எனக்கு நிறைய ஆடைகள் எடுத்து தந்தார் என எடுத்து வந்து காட்டியது. அவ்வளவும் நல்ல விலை உயர்ந்த ஆடைகள். வேறு குறைகள் இருக்கிறதா என்றேன். அவர் தினமும் தண்ணி அடிக்கிறார் தயவு செய்து அதை குறைக்க சொல்லுங்கள், மற்றபடி என்னிடம் மிக குறைவாகத்தான் பேசுவார். எனக்கு இங்கு இருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லண்ணே என சமைக்க போய்விட்டது. அன்று இரவு அங்குதான் சாப்பிட்டேன், அருமையாக சமைத்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய கருணாமூர்த்தியும் அங்கு இந்திய பணிப்பெண்ணை அழைத்துகொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் தான் தனன்ஜெயிடமும், அலமேலுவிடமும் பேசிவிட்டேன், அந்த பெண் அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

ஒரு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் தனஞ்செய் என்னை அழைத்தார், நானும் வேலைப்பளு காரணமாக அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. சரி வீட்டுக்கு வருகிறேன் என்றேன். ஆனால் அவரோ கோவிலுக்கு வாருங்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார். அங்கு போனவுடன் தனக்கு அலமேலுவை மிகவும் பிடித்திருக்கு எனவும் அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இதில் அலமேலுவுக்கு விருப்பமா என்றேன். இல்லை நண்பா அதை நீங்கள்தான் கேட்டு சொல்லவேண்டும் என்றார். இன்னைக்கே முடிவு பண்ணிடலாம் வாங்க வீட்டுக்கே போவோம் என வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில் எதனால் இந்த முடிவை எடுத்தீங்க என்று கேட்டேன். இடையில் அலமேலுவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, கடுமையான காய்ச்சல் இருந்தது, நான்தான் மருத்துவமனைக்கு கூட்டிசென்றேன். வீட்டிற்கு வந்தும் அவளால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை, நான்தான் அவளுக்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், அந்த நாட்களில் நான் வீட்டை வழக்கம்போல் குப்பையாக்கி விட்டேன். அப்போதுதான் தெரிந்தது, எனக்கு நிச்சயம் ஒரு திருமணம் வேண்டும் , அது என் அலமேலுவாக இருக்ககூடாது எனத்தோன்றியது , எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன் மேலும் அந்த நாட்களில்தான் அவளின் கதையை கேட்டேன் அது என்னை மிகவும் பாதித்தது. என்னால் அவளிடம் நேரிடையாக கேட்கமுடியவில்லை. அதனால்தான் உங்களை கேட்கசொல்கிறேன் என்று அலமேலுவின் கதையை சுருக்கமாக சொன்னார்.

அலமேலுவும் தாயை இழந்த பெண், சொந்த சித்தியே அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக இருந்த சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் வந்ததும், பாசம் குறைந்து போனது அலமேலு நன்றாக படிக்கும் பெண். ஆனால் வீட்டு வேலை மற்றும் காணி வேலைகளை அலமேலுதான் செய்யவேண்டும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு என நிறுத்திவிட்டனர், மேலும் அப்போது தன் தூரத்து உறவினர் பேச்சை கேட்டு தன்னை பணிப்பெண்ணாக சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டனர். காசு அனுப்பினால் போதும் நன்றாக இருக்கிறாயா என கேட்டதில்லை. வந்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரை ஊருக்கு வரச்சொல்லி சொன்னதில்லை. மேலும் தான் சந்தோசமாக இருந்தது இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில்தான், இத்தனை வருட காலத்தில் தன்னை பாசமாக பார்த்து கொண்டது நீங்கள்தான் என அழுதாள். எனக்கு என்னமோ போலாகிவிட்டது அப்போதே அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.

வீட்டிற்கு வந்து அலமேலுவிடம் கேட்டதும் உடனே தனஞ்செய் காலில் விழுந்து அழுதது. எனக்கு அதன் சந்தோசம் புரிந்தது, தனன்ஜெயிடம் அதுக்கு சம்மதம்தான். எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு நான் மறுபடி வந்து பார்த்துக்கொள்கிறேன் என கிளம்பினேன். ஒரு காதல் பூக்கும்போது நமக்கென்ன வேலை? உடனே அலமேலு அண்ணே என என் காலிலும் விழ முயற்சி செய்ய, நான் பதறி தடுத்தேன், உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என என் கையை பிடித்துக்கொண்டு அழுதது. இல்லம்மா உங்க நல்ல மனசுக்கும், தனன்ஜெய்யின் நல்ல மனசுக்கும் அமைந்த வாழ்க்கை. நான் அடுத்தவாரம் வாரேன் என பிடிவாதமாக சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தியபோதும் கிளம்பிவிட்டேன். இப்போது அவர்களுக்கு தேவை தனிமைதான்............

அதன்பிறகு இரண்டே வாரங்களில் தனஞ்செய் ஊருக்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று தந்தையிடம் பேசியதில் அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்து அவர் சம்மதம் கேட்கவே. தான் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டேன் எப்படியாவது போய்க்கோ என பத்து லட்ச ரூபாயை கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அதனை கொண்டு பொய் அலமேலு வீட்டில் கொடுத்து பெண் கேட்டிருக்கிறார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை உடனே சம்மதித்து விட்டார்கள். அப்புறம் நான்தான் அலமேலுவை ஊருக்கு அனுப்பி வைத்தேன். கோவிலில் வைத்து தாலிகட்டி இரண்டே வாரங்களில் சிங்கப்பூர் கூட்டி வந்துவிட்டார்.

வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து, அதற்கடுத்த ஆறு மாதத்தில் தனன்ஜெயக்கு கம்பெனி அவரை அமெரிக்காவுக்கு மாற்றம் செய்தது . அதன்பிறகு எனக்கு எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை.
இந்த கதையில் அவர்களின் உண்மையான பெயர்களே பயன்படுத்தி இருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமானால் தொடர்பு கொள்வார்கள் என நம்புகிறேன்..

3 கருத்துகள்:

www.thalaivan.com சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

shortfilmindia.com சொன்னது…

செந்தில் நன்றாக இருக்கிறது. உங்களது நிதர்சன கதை.:)

கேபிள் சங்கர்

balaji-paari சொன்னது…

ithellaam seyya oru intution venum. ungallukku irukku. vaazhthukkal.