14 ஆக., 2010

"பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள் !"

இன்றைய பதிவை எழுதியது டவுசர் போடாமல் திரிந்த காலம்தொட்டே என்னுடன் நல்லது, கெட்டதுகள் அனைத்திலும் இன்றுவரைக்கும் கூட நிற்கும் மாப்ள ராஜா என்ற தஞ்சாவூரான் எழுதியது.. இது ஒரு பழைய பதிவு.. இவன்தான் எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியவன்.. தினம் ஒரு பதிவு போட்டு உங்களை நான் செய்யும் டார்ச்சருக்கு இவன்தான் காரணம்.. இவனை இப்ப எழுதச் சொன்னா நேரம் இல்லைன்னு பந்தா பண்றான்.. இவன் அமெரிக்காவில் இருந்தபோது தொடர்ந்து எழுதினான், இந்தியா வந்தபிறகு ஏனோ எழுதுவதில்லை.. வசீகரமான கிராமத்து நடை இவனிடம் இருந்துதான் எனக்கு வந்தது..
குறிப்பு : பூண்டி புஷ்பம் கல்லூரி இவன் படிக்கும்போது வெளியான ஆண்டு விழா மலரில் வெளியான கவிதை நான் எழுதியது இல்லை ( மாப்ள சொல்லிட்டேன் )
இனி அவன் எழுதிய என் கிராமத்துக்கு உங்களை அனுப்பி வைக்கிறேன்...

"பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்!"

என்னங்க, ஆச்சரியமா இருக்கா? இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்!) கொண்டாட்டம்.
எனக்கு 7-8 வயது இருக்கும்போதே அந்த விழா அழிந்து விட்டது. நினைவில் இருப்பவை மட்டும் இங்கே..

அந்த விழாவுக்கு பேரு, காமன் பண்டிகை (காமாண்டி - எங்க ஊரு மொழியில!). ஒவ்வொரு தெரு முனையிலேயும் அல்லது நால்ரோடு கூடும் இடங்களிலேயும் சின்னதா ஒரு இடத்தைத் தேர்வு பண்ணி கீழே சாணம் போட்டு மொழுகி விட்ருவாங்க. நாலு மூலையிலேயும் சின்ன சின்னக் கம்பு நட்டு, சின்ன பந்தல் மாதிரி போட்டுடுவாங்க. நடுநாயகமா, ஒரு கம்பு நட்டு அதுமேலே வக்க பிரிய (வைக்கோல் கயிறு) சுத்தி உச்சியில ஒரு வரட்டிய வச்சு கட்டிவிட்ருவாங்க. அந்தக் கம்பு ஒரு கரண்டிய நட்டு வச்ச மாதிரி இருக்கும் (உத்தேசமா!). அதுக்கு, மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணியிருக்கும். 'வசதியான' தெருவா இருந்தா அதுக்குள்ள ஒரு விளக்கு ஒன்னு வச்சு சாயந்திரம் ஆனா எரியவிடுவாங்க. இதுல பாருங்க, பொம்பளைக யாரும் இந்த 'விசேசத்துல' கலந்துக்க மாட்டாங்க. ஏன்னு எனக்குத் தெரியல!

இது ஒரு 15 நாளைக்கு அப்படியே இருக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க!! தெருப் பெருசுங்க 15ஆம் நாள் முடிவுல ஒன்னு கூடி, இன்னிக்கு ராத்திரிக்கு 'காமாண்டி கொளுத்துறது' அப்பிடின்னு 'அதிகாரப்பூர்வமா' அறிவிப்பாங்க! அன்னிக்கு ராத்திரிதான் விசேசம். சாயந்திரம் ஆனா, வீட்டுல வெளையாடப் போறதா பொய் சொல்லிட்டு, தெருமொனைக்கு ஜூட் விடுவோம். வீட்டுப் பெருசுங்களுக்குத் தெரியும், காமாண்டி கொளுத்துறதப் பாக்க போறான்னு!

சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) மற்றும், 'பெருந்தனக்காரர்கள்' அளிக்கும் அஞ்சு பத்த வச்சுகிட்டு, பொட்டுக்கடலையும், நாட்டுச் சக்கரையும் வாங்கி வச்சுருப்பாங்க. ஒரு ஏழு எட்டு மணி ஆனவுடனேதான்யா, மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்' இருப்பார். அவருக்கு 'ஆனத' பாத்துகிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு - low maintenance, செல பேரு 'தண்ணி மிண்ணி' கேப்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு கொரல தட்டி சட்டி சரி பண்ணிகிட்டு!

பாட்டுக்காரர் சிக்னல் குடுத்தவுடனே, ஒரு ரெண்டு விடலப் பசங்கள செலெக்ட் பண்ணி, திருநீறு பூசி சாமி கும்பிடச் சொல்லுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்' (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி! ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார் (செல தெருவுல குழுவுக்கு ஒரு பாட்டுக்காரர் இருப்பார்). ரெண்டு குழுவுலேயிருந்தும் ஒரு 'பலசாலி' கையில் நீள துண்டோட இருப்பாரு. துண்ட அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு மொனையையும் பலசாலி கையில வச்சுருப்பாரு. ரதி, மம்முதன் ரெடி. பாட்டுக்காரரு நல்லா கொரலெடுத்துப் பாடுவாரய்யா... அப்பிடி பாடுவாரு. நமக்கு இப்போ ஒண்ணும் ஞாபகம் இல்ல! அப்பிடி, பாடும் போது, ரதி பக்கம் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. ஒடனே பலசாலி, துண்ட ஒரு இழு இழுத்து மம்முதனக் 'கட்டுப் படுத்துவாரு'!! அதே மாதிரி, ரதி் பக்கமும் நடக்கும்.

பாட்டெல்லாம் முடிஞ்ச பெறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு' தீந்தபெறகு!), போட்டு வச்ச பந்தலப் பிரிச்சுப் போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வச்சுருவாங்க!!!! அப்படியே சைடுல, பொட்டுக்கடல வினியோகம் நடக்கும். தீ அணைஞ்சவுடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க.

அடுத்த நாள், இன்னும் சரி கூத்து நடக்கும். அன்னிக்குத்தான் 'புலிவேடம்'!! வேடம் போடுறதுக்கு ஒருத்தர் ரெடியா இருப்பாரு. இத யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஒரு வீட்டில் ரகசியமா 'பெயிண்டிங்' நடக்கும். உடம்பு முழுதும் - ஆமா, உடம்பு முழுதும் (லங்கோடு ஏரியா தவுத்து!) பெயிண்ட பூசிகிட்டு, 'புலி' ரெடியாய்டும். செல படங்கள்ல காட்டுற மாதிரி துணிப்புலி இல்ல. வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி (அவங்களுக்கும் 'எறங்கி' இருக்கும்!) கூட்டம் கள கட்ட ஆரம்பிக்கும்! நாங்க வீட்டுல அதே பொய்ய சொல்லிட்டு 'புலி' ஆட்டம் பாக்க கெளம்பிடுவோம்.

எல்லாரும் ரெடியானவுடனே, டமுரு செட்டு அடி தூள் கெளப்பும். புலி ஆட ஆரம்பிக்க, வசூல் ராஜா மஞ்சள் பையோட பின்வர, ஊர்வலம் ஆரம்பிக்கும். ஒவ்வொரு வீடா போயி, ஒரு ஆட்டத்த போட்டுட்டு வசூல பண்ணிட்டு தொடருவாங்க. செல பேரு நெல்லு குடுப்பாங்க. செல பேரு வீட்டுகுள்ள போய் ஒளிஞ்சுகிட்டு, இல்லேன்னு பொய் சொல்ல சொல்லுவாங்க. இதுல, மாமன் மச்சான் புலி வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான்னா போச்சு. கணிசமா ஒரு 'துகை' (தொகை) போய்டும். அங்கங்கே புலிக்கு வாய் புளிக்க எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. அத வாயில கடிச்சுகிட்டு புலி வேக வேகமா போக ஆரம்பிக்கும். ஒரு ரெண்டு மூனு தெரு போனதுக்கு அப்புறம், புலிக்கு கொஞ்சம் கொஞ்சமா 'கிலி' புடிக்க ஆரம்பிக்கும். ஏன்னா, பெயிண்டெல்லாம் நல்லா காஞ்சு ஒடம்பு வறவறன்னு ஆக ஆரம்பிக்கும். வேர்வை சொரக்கும் ஆனா, வெளியில போக வழியில்லாமே 'புலி' படற அவஸ்தை பாவமா இருக்கும்!

ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். அப்ப 'புலி' படுற வேதன நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும். ஒரு வழியா சொரண்டல் முடிஞ்சு ஒரு குளியலப் போட்டுட்டு, அப்பிடியே மத்ததயும் உள்ளே போட்டுட்டு புலி ரெஸ்ட் எடுக்க குகைக்குள்ள (வீடுதாங்க!) போயிடும். புலிப்படை, டமுரு செட்டுக்கு செட்டில் பண்ணி அனுப்பிட்டு, வசூல எடுத்துகிட்டு 'வேட்டை' தேடி கடைக்குப் போயிடுவாங்க!! நாங்களும் திட்டு வாங்க காதுகள ரெடி பண்ணிகிட்டு மெதுவா வீட்டுப் பக்கம் ஒதுங்குவோம்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் ஏதாவது புராண கதைய ஒட்டி நடந்ததா, அந்தப் பாட்டுகளுக்கு என்ன பொருள், ரதி, மன்மதன் உண்மை மனிதர்களா, ஏன் 'காமாண்டியை' எரிக்கிறாங்க - இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா இங்கே சொல்லுங்களேன்! இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன். ஆனா, நான் பாத்தது கிட்டதட்ட வாலன்டைன்ஸ் தின கொண்ட்டட்டம்னுதான் சொல்லனும்.

கொசுறு: சிங்கப்பூரில் மட்டும்தான் இந்த நாளுக்கு ஒழுங்கான தமிழ்ப்படுத்தல் இருக்குன்னு நெனைக்கிறேன். அங்கே 'அன்பர்கள் தினம்' அப்பிடின்னுதான் சொல்றாங்க. அன்பு வைத்திருக்கும் யாருக்கும் வாழ்த்துக்கள், பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???

35 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

சிவபெருமானின் தவம்கலைக்க மன்மதன் எய்த அம்பில் அவர் தவம் கலைந்து தேவியைக் கலவினாராம்! யுகாந்திரங்களாய் நீடித்த அக்கலவியில் முயங்கி முக்குளித்த பின்னர்தான் அவருக்கு "ஆகா ! இந்தப் பொடிப் பய பண்ணின வேலையில நாம ஏமாந்துட்டமே" ன்னு கோவங்கோவமா வந்திச்சாம் ( கடவுளுக்குக்கூட 'முடிச்ச' பொறவு தான் ஞானம் பொறக்கும்போல!). ஒடனே நெற்றிக்கண்ணைத் தொறந்துபாக்க மம்முதன் எரிஞ்சு சாம்பலா போயிட்டானாம்! ரதி மட்டும் தனியா என்ன பண்ணுவா பாவம்? அவ அழுத கண்ணீர் 'ஆறாப் பெருகி ஆனை குளிச்சேற', 'கொளமாப் பெருகி குதுர குளிச்சேற', "பாவம்யா இந்தப் பொண்ணு"ன்னு பார்வதி சிபாரிசு பண்ண ( அப்பவே சிபாரிசு இருந்தாத்தான் காரியம் ஆவும்போல!) சிவனும் மனசெறங்கி சாபவிமோசனம் கொடுத்தாராம்!

அதத்தாண்ணே நம்மூரு மக்க "காமன் பண்டிகை"ன்னு கொண்டாடுறாங்க!

பின்குறிப்பு 1: இந்தக் கதையை "சூப்பர் சுருளி" வடிவேலு பாணியில் படித்து இன்புறவும்

பின்குறிப்பு 2: என்னடா இவ்ளோ ஆபாசமா கதை சொல்றானேன்னு யாரும் கோவப்படக்கூடாது. ஏன்னா மேற்படி கதை இருக்குற கந்தபுராணத்துல இதைவிட 'ஏ' கிளாஸ் கதை நெறைய இருக்கு. வேண்டியவர்கள் அதையும் படித்து 'இன்புற'லாம்!

முனியாண்டி பெ. சொன்னது…

உங்க மாப்ள ராஜாவ எழுத சொல்லுங்க. ரெம்ப நல்லா இருக்கு எழுத்து நடை.

நேசமித்ரன் சொன்னது…

ஆறாப் பெருகி ஆனை குளிச்சேற', 'கொளமாப் பெருகி குதுர குளிச்சேற', //

நல்லா இருக்கு இந்தப் பிரயோகம் இங்க :)


இடுகை நல்லா இருக்கு செந்தில் சார்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மண்மணம் கமழ எழுத உங்களிடம் ட்யூஷ்னுக்கு வரலாம்னு இருக்கேன்

UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@செந்தில்

//
viviliam சொன்னது…
"க்ளிக்" செய்து படியுங்கள்.
//


ஏண்ணே.. இந்த பீஸ் எல்லா ப்ளாக்ல போயி ஒரே மாறி வாந்தி எடுக்கு?

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

ம்ம்ம்ம்...பதிவிற்கு நன்றிங்க செந்தில்

Unknown சொன்னது…

independence dayக்கு முன்னாடி நாள் வேலண்டைன்ஸ் டே. நடத்துங்க....நடத்துங்க.

vinthaimanithan சொன்னது…

//ஏண்ணே.. இந்த பீஸ் எல்லா ப்ளாக்ல போயி ஒரே மாறி வாந்தி எடுக்கு? //

யோவ் பட்டா... மறந்தும்கூட அந்த பீஸோட பக்கம் போயிறாத... அங்க அது வாந்திய நவத்துவாரத்துல இருந்தும் எடுத்து வெச்சிருக்கு!

Unknown சொன்னது…

விவிலியம் அட்டாகாசம் தாங்க முடியல

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நடை நல்லா இருக்கு

சௌந்தர் சொன்னது…

எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன்.///


கொண்டாடுவார்கள்...விந்தை மனிதனின் விளக்கம் எல்லோரும் படிங்க

நாடோடி சொன்னது…

இதை இப்பொது தான் கேள்விப‌டுகிறேன்.. ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணே.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நடை நல்லா இருக்கு...

கலக்கல் பதிவு

Unknown சொன்னது…

நகர வாசிகலான எங்கலை போன்ரொருக்கு உங்கல் பதிவுகலை படிக்கும் போது கிரமத்து வழ்கைக்கு ஏங்கும் எங்களூக்கு உமது பதிவை படிக்கும் சில மனித்துளீகளாவது மானசிகமாக வாழ்கிறோம் நன்றீ தொடர்க உமது பதிவு பயனம் அன்புடன் அ.மாணீக்கவேலு

தமிழ் அமுதன் சொன்னது…

காமண்டி க்கு நடத்துற குறவன்-குறத்தி ஆட்டம் பத்தியும் சொல்லி இருக்கலாம்..!

குடுகுடுப்பை சொன்னது…

எங்கூர்லயும் காமன் கொளுத்துறது உண்டு, நல்லா சரக்கடிச்சிட்டு சாஞ்சிருவாங்க, இப்பயெல்லாம் இது கிடையாதுன்னு நினைக்கிறேன்.

vasu balaji சொன்னது…

எனக்கு முற்றிலும் புதிய தகவல் செந்தில். பகிர்ந்தமைக்கு நன்றி.

rajasundararajan சொன்னது…

நண்பருக்கு நாட்டுத்தமிழ் நல்லா வந்திருக்கு. அவர் தொடர்ந்து எழுதணும்கிறது என் வேண்டுகோள்.

எங்க ஊருத் திக்கம் (கமுதி-முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்) கார்த்திகைப் பண்டிகைக்கு இது மாதிரி ஒரு கொண்டாட்டம் உண்டு (ஆனா மம்முதன்-ரதி, பாட்டு-கூத்து எல்லாம் கிடையாது):

ஒட்டுப்புல்லுன்னு ஒரு காட்டுப் புல்லு கார்காலத்துல வளர்ந்து காய்ச்சுக் கெடக்கும். அதோட கருதெ உருவிப் பொட்டலம் கட்டிக்கணும். அந்தப் புல்லுமணி தலை மயிருல சிக்கிக்கிச்சுன்னா சாமானியத்துல போகாது. ஆம்பிளைப் பசங்க பொம்பிளைப் பிள்ளைங்களையும் பொம்பிளைப் பிள்ளைங்க ஆம்பிளைப் பசங்களையும் விரட்டிப் பிடிச்சு ஒட்டுப் புல்லு தேய்க்கணும். அக்கா தங்கச்சிகளெத் தொடக் கூடாது, மொறப் புள்ளைங்களெத்தான். வயசு வித்தியாசம் கிடையாது. சந்துபொந்து இண்டு இடுக்குகளுக்குள்ள சிக்குனோம், அதுலயும் வயசு கூடுன மதினிமாருககிட்ட அம்புட்டோம்னா அம்புட்டுத்தேன்.

இது அந்த மாசம் பூரா நடக்கும். கார்த்திகை அன்னிக்கு மாம்புலி (சூந்து)கட்டி, அதாவது கம்பந்தட்டைங்களெச் சேர்த்துக் கட்டி, ரெண்டு மொனையிலயும் தீக் கொழுத்தி, சிலாவரிசை போட்டு ஆம்பிளைப் பசங்க அதெ ஊர் மந்தையில ஒரு இடத்துல கொண்டு வந்து போடுவாங்க. அதுல உப்பும் மொளகாவத்தலும் போட்டு வெடிக்க விடுவாங்க. மறுநாள்க் காலையில அந்த சாம்பல ஒரு பிடி அள்ளி அவங்க அவங்க புன்செய்க் காடுகள்ல கொண்டு போயித் தூவுவாங்க.

இந்தப் பண்டிகைக்கு கறி, மீனு சேர்க்கக் கூடாது. எங்க ஊருல பிதுக்குப்பயத்தங் (மொச்சையை ஊறப்போட்டுப் பிதுக்கியது) கொழம்பு பேமஸ்.

இது ஒரு fertility rites பண்டிகை என்று கருதுகிறேன். சிவ-பார்வதி-மன்மதக் கதை இதைக் குற்ற உணர்வுக்குள் தள்ளியதொரு புனைவு என்று தோன்றுகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நீங்க பரவாக்கோட்டையா?

காமன் பண்டிகை பற்றிய தஞ்சாவூரான் பதிவு படித்திருக்கிறேன்~!

இத்தகைய பதிவுகள் அவசியம் தேவை!

நன்று!

vinthaimanithan சொன்னது…

ராஜண்ணே சொல்றது கரெக்ட்டு தான். இது ஒரு fertility rites பண்டிகைதான். இதுபோன்றே தமிழர் வாழ்வின் பாரம்பரியமான பண்டிகைகள் தமது வடிவங்களை மாற்றி மதச்சாயம் பூசிக்கொண்டன.

மேலும் ரதி-மம்முத-சிவன் கதை கந்தபுராணத்தில் சொல்லப் படுவதுதான். இதைப் போன்ற கதைகளோடு மக்களின் வாழ்வியலில் கலந்த பண்டிகைகளைக் கலந்து புனைந்துவிடுவது மதப்பண்டிதர்களின் சாமர்த்தியம்.

தோழர் தமிழ்சசி சொல்வதுபோல நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் மாயை அறுக்க நாட்டார் தெய்வங்களைப் புனரமைக்கலாம்.

தமிழ்சசி : "பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது" - தொடர்புடைய சுட்டி http://blog.tamilsasi.com/2010/07/fetna-2010.html

சிந்தனையில் ஒரு புதுக்கீற்றைப் பாய்ச்சிய அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு நன்றி.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

அடடா என்ன மண்மணம்.....

தஞ்சாவூராரே., வாங்க தினமும் மோர் குடிச்சிகிட்டே நிறைய பேசணும் போல இருக்கு

வினோ சொன்னது…

அழகிய கிராமத்து வாடை... அருமையான நடை பதிவில்.. இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் எனக்கு புதுசு...

செல்வா சொன்னது…

///வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி ///
இது புதுசா இருக்கு .!!

Unknown சொன்னது…

//டவுசர் போடாமல் திரிந்த காலம்தொட்டே//

வெக்கம் வெக்கமா வருது மாப்ளே!

//என்னுடன் நல்லது, கெட்டதுகள் அனைத்திலும் இன்றுவரைக்கும் கூட நிற்கும்//

நட்பு உறவை விட மேலானது.

//இவன்தான் எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியவன்//

போட்டுக் குடுத்திட்டயே பரட்ட. 'ஸ்வீட்' காரம் அனுப்ப போவுது ;)

//தினம் ஒரு பதிவு போட்டு உங்களை நான் செய்யும் டார்ச்சருக்கு இவன்தான் காரணம்..//

பரவால்ல. என் அளவுக்கு டார்ச்சர் குடுக்கலன்னாலும், ஓரளவுக்கு குடுக்குறே.

//இவனை இப்ப எழுதச் சொன்னா நேரம் இல்லைன்னு பந்தா பண்றான்//

உனக்குத் தெரியாததா மாப்ஸ்.

//இவன் அமெரிக்காவில் இருந்தபோது தொடர்ந்து எழுதினான், இந்தியா வந்தபிறகு ஏனோ எழுதுவதில்லை//

அங்கே எவ்வளவு பிசியா இருந்தேன்னு தெரியுதா?


//வசீகரமான கிராமத்து நடை இவனிடம் இருந்துதான் எனக்கு வந்தது..//

இதெல்லாம் நொம்ப ஓவரு...ஆமா.

//குறிப்பு : பூண்டி புஷ்பம் கல்லூரி இவன் படிக்கும்போது வெளியான ஆண்டு விழா மலரில் வெளியான கவிதை நான் எழுதியது இல்லை ( மாப்ள சொல்லிட்டேன் )//

மூணு குடுத்தே, ஒண்ணுதான் போட்டாய்ங்க. நன்றி - செந்தில்னு போட்ருக்கணுமோ?

Unknown சொன்னது…

அனைவரின் அன்புக்கும் நன்றி!

விரைவில் தொடருவேன், ஒரு கெடா வெட்டு பதிவுடன் ;)

யாரோ ஒருவன் சொன்னது…

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

ஜெய்லானி சொன்னது…

அட....அட.... பாரதிராஜா ஸ்டைலில் கதை......சூப்பர்..

உசிலை மணி சொன்னது…

என் தோள் மேல, கை போட்டு பேசுற மாதிரியே இருக்குன்னே .....

தமிழ்போராளி சொன்னது…

அருமையான பதிவு.எங்கள் ஊரில் இப்படி நடந்தது இல்லை.ஆனால் பக்கத்து ஊரில் நடைபெற்றுள்ளது. அது ஒரு வித்தியாசமான அனுப்பவும்.விடலை பருவத்தில் அடிக்கும் கூத்துக்கள் வேறு எந்த பருவத்திலும் வராது. பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றதற்கு நன்றி...

பனித்துளி சங்கர் சொன்னது…

முதல் முறையாக ஒரு புதுமையான அனுபவம் இந்த பதிவில் . மிகவும் ரசிக்கும் வகையிலும் நேரில் கண்டு கழித்த ஒரு உணர்வையும் நெச்சில் புகுத்தி சென்றது உங்களின் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

Unknown சொன்னது…

simply supper..

way of writting very good brother.

ரமேஷ் வீரா சொன்னது…

அண்ணா , நம்முடைய கிராமத்தின் பெருமையை பதிவு செய்ததுக்கு நன்றி ........... ராஜா மாமாவுக்கும் எனது நன்றிகள் ....................

dheva சொன்னது…

இந்த மலரும் நினைவுகள் எல்லாம் ஒரு சந்தோசமான காலத்தில் நாம இருந்தத சொல்லுது செந்தில்....களவாணி படம் பாத்தேன் ரீசென்டா நம்ம ஊரு வழக்க ட்ரை பண்ணி இருக்காங்க...அதுல ஒரு சீன்ல நம்ம ஊரு காமண்டி வரும்......


மிக்க நன்றி மீண்டும் பழைய நினைவுகளால் நிறைத்ததற்கு!

அருண் சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே,இலங்கையில எங்க ஊர்லயும் காமன் கூத்து,மன்மதன்-ரதி,அவங்கள இடுப்புல கட்டி பாட்டு படிக்கிறதும் அவங்க துள்றதும் நானும் பார்த்திருக்கேன் [07 வருஷத்துக்கு முன்னாடி] இப்பவும் ஊர்ப்பக்கம் இந்த கூத்தெல்லாம் நடக்குது,செம்மொழி மாநாட்டிற்கு கூட இலங்கையில இருந்து காமன் கூத்துக்கு ஒரு டீம் வந்திருந்தாங்க.தஞ்சாவூர்க்காரருக்கு என் வாழ்த்துகள்.