28 நவ., 2011

இயலாமை..


வறுமையின் நிழல் படியாத ஒருவன் சினிமா ஆசையில் சென்னை வந்தால் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பான் எனத் தெரியாது. எனது நெருங்கிய நண்பர் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் சினிமா ஆசையில் சென்னை வந்து, இந்த நரக வாழ்வின் சுமை தாங்காது மீண்டும் கிராமத்துக்கே வந்துவிட்டார். இன்னொரு நண்பன் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதலாவதாகவும், அதன்பின் காந்தி கிராமத்தில் படித்து கோல்டு மெடல் வாங்கியவனுமான அவன் ஒரு நாள் இதேபோல சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து இன்றுவரைக்கும் திருமணம் ஆகாமல் போராடிக் கொண்டிருக்கிறான். இளங்கோ என பெற்றோர் வைத்த பெயரை எண்ஜோதிடப்படி வர்கோத்தமன் என மாற்றிக்கொண்டான். அதென்னடா வர்கோத்தமன் என்றால் இரட்டை வெற்றிகளைப் பெறுபவன் எனச்சொன்னான். மேலும் தன் ஜாதகப்படி சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிபெரும் வாய்ப்பு இருப்பதாக சொல்வான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.

இவன் மட்டுமன்றி சமீபத்தில் விகடனில் ராஜு முருகனின் "வட்டியும் முதலும்" கட்டுரையில் சொன்னதுபோல சினிமாவுக்காக அல்லது சினிமாவால் வாழ்வினைத் தொலைத்தவர்கள் ஏராளம். எனது நெருங்கிய நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் கடந்த இருபது வருடமாக கிடைக்கும் சின்ன சின்ன வேடங்களுக்காக கைக்காசை செலவழித்துதான் வந்து போகிறார். சமீபத்தில் வெளிவந்து யாருக்கும் தெரியாது ஓடிப்போன "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை" படத்தில்தான் அதிக நேரம் தலைக்காட்டியிருப்பார். 

ஆனால் சினிமா என்று மட்டுமல்லாது தொழில் முடங்கி பாதிக்கப்பட்ட எத்தனயோபேர் தினமும் காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கின்றனர். வங்கிகளில் அல்லது தனி நபர்களிடம் கடன் வாங்கி அதனை திருப்பி அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தலைமறைவாகின்றனர். எங்கோ கிராமத்தில் பிறந்து கனவுகளுடன் வெளிநாடு செல்லும் ஒருவன் அங்கு சிரமப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணம் இங்கு குடும்பத்தினரால் செலவு செய்யப்பட்டு அவன் திரும்ப வந்து பார்க்கும்போது மறுபடியும் கடன் வாங்கப்பட்டு அல்லது பாதி கட்டிய வீடு முடிப்பதற்காய், சகோதரிகளின் திருமணத்திற்காய் மீண்டும் வெளிநாடு செல்ல நேர்கிறான். இப்படி எல்லா இடங்களிலும் கடனால், லட்சியத்தால், துரோகங்களால் தன் வாழ்வை தொலைத்தவர்களை பார்க்கும்போது எளிமையாய் அட்வைஸ் செய்து அனுப்பி விடுகிறோம். தன் இருப்பை தொலைத்த அவர்களால் மறுபடி வாழ்வை தொடங்குவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டால் அவன் தற்கொலை முடிவை எட்ட நேர்கிறது.

ஒரு நாள் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு விரைவு டீலக்ஸ் பேரூந்தில் ஊருக்கு போய்க்கொண்டிருந்தேன். பகல் நேரப்பயணம் என்பதால் நடத்துனர் தாம்பரம் வரை டிக்கெட் வழங்கவில்லை. தாம்பரம் தாண்டியதும் டிக்கெட் வழங்கிக்கொண்டிருந்தபோது ஒருவர் நடத்துனரிடம் சண்டைபோட ஆரம்பித்தார். அது டீலக்ஸ் சொகுசு பேரூந்து என்பதால் கட்டணம் அதிகம். ஆனால் தான் சாதாரண பேரூந்து என நினைத்து ஏறிவிட்டேன். அதனால் தானும் அவருடன் வந்த அவருடைய மகளும் இறங்கிக்கொள்வதாக சொன்னதும் நடத்துனர் தாம்பரம் வரைக்குமான டிக்கெட் வாங்கித்தான் ஆகவேண்டும் எனச்சொல்லி டிக்கெட்டை கிழித்துவிட்டார். ஆனால் அந்த  நபரோ தன்னிடம் கும்பகோணம் வரை சாதாரண பேரூந்தில் செல்லத்தான் பணம் வைத்திருந்தேன். இந்த டிக்கெட் வாங்கிவிட்டால் வேறு பேரூந்திலும் போக முடியாது என சண்டை பிடிக்கவே, பேரூந்தில் இருந்த நான் உட்பட சில நபர்கள் அவர்கள் இருவருக்கான கூடுதல் கட்டணத்தை கும்பகோணம் வரைக்கும் செலுத்துவதாக சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டு தாம்பரம் வரைக்குமான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டார். அதனைப் பார்த்த எனக்கு ஏழையாக இருந்தாலும் அந்த நபரின் தன் சுயகவுரவத்தின்மேல் வைத்திருந்த மரியாதையை நினைத்து பெருமையாக இருந்தது.

நான் தினமும் அலுவலகத்துக்கு பயணம் செய்யும் பாதையில் சமீபமாக திருமங்கலம் சிக்னல் அருகே ஒரு பையன் நின்றுகொண்டு புழல் போக பைக் ஒட்டுபவர்களிடம் உதவி கேட்ப்பான். நான் அவ்வழியே போவதால் அவனை ஏற்றிக்கொள்வேன். புழல் அருகே ஒரு அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் வீட்டார் செங்குன்றத்தில் இருந்து முகப்பேருக்கு வீடு மாறிவிட்டதால் தன்னுடைய இலவச பஸ் பாசை பயன்படுத்த முடியவில்லை என்றும். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேரூந்து கட்டணத்தால் தனக்கு வீட்டில் அதிகமாக தேவைப்படும் காசை கொடுக்க இயலவில்லை என்பதால் இப்படி தினம்தினம் பைக் ஒட்டுபவர்களிடம் உதவி கேட்டுப் போவதாக சொன்னான். இந்த வருடப் படிப்பு முடிந்தவுடன் அடுத்தவருடம் முகப்பேர் பள்ளியில் சேர்ந்துவிடுவேன் என்றான். உனக்காக நான் பெரியவர்களுக்கான பஸ் பாஸ் வாங்கித்தரவா? என்றேன். இல்லைன்னே வீட்டுல திட்டுவாங்க என்றான். 

நம் அரசாங்கத்தை நிர்வகிக்கும் முதல்வர், அமைச்சர் பெருமக்கள். உயர் அதிகாரிகள் ஒருவாரம் பேரூந்தில் பயணம் செய்தால் தெரியும் அடித்தட்டு மக்களின் வாழ்வின் அவலங்களை. ஆனால் கோமான்கள் எப்போதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வருவதாலும். மத்திய அமைச்சர் சசிதரூர் ஒருமுறை மலிவு விமானப் பயணங்களையே மாட்டு தொழுவம் என கிண்டலடித்து பேசியதும், நாம் ஒருகாலும் மக்களை புரிந்துகொண்டு அதிகாரம் செய்யும் ஆட்சியாளர்களைப் பெறப்போவதில்லை என்பதையே காட்டுகிறது.

வாழ்க இந்திய ஜனநாயகம்!!!

8 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

என்னது கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையில் சிங்கப்பூர் துரைராஜ் நடித்திருக்கிறாரா...? பார்க்க வேண்டுமே...

ப.கந்தசாமி சொன்னது…

//வாழ்க இந்திய ஜனநாயகம்!!!//

நானும் உங்கள் கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்.

Bala சொன்னது…

//நம் அரசாங்கத்தை நிர்வகிக்கும் முதல்வர், அமைச்சர் பெருமக்கள். உயர் அதிகாரிகள் ஒருவாரம் பேரூந்தில் பயணம் செய்தால் தெரியும் அடித்தட்டு மக்களின் வாழ்வின் அவலங்களை.//
இதைப் படிக்கும் போதுதான் நினைவில் வந்தது. பழங்காலத்தில் ராஜாக்கள் எல்லோரும், அவ்வப்போது மாறுவேடத்தில் நகரசோதனை மேற்கொண்டு நாட்டு மக்களின் குறை அறிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்வார்களாம். ஆனால் இப்பொது.... அது அந்தகாலம் என்ற பெருமூச்சுதான் வருகிறது.

Unknown சொன்னது…

வீழ்க பணநாயகம்!

CS. Mohan Kumar சொன்னது…

இயலாதவர்களுக்கு தான் சுய கௌரவம் அதிகமாக உள்ளதை நானும் கவனித்துள்ளேன். நல்ல பகிர்வு

Unknown சொன்னது…

//வறுமையின் நிழல் படியாத ஒருவன் சினிமா ஆசையில் சென்னை வந்தால் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பான் எனத் தெரியாது//
உண்மைதான்! சினிமா பற்றி இப்படி எவ்வளவோ சம்பவங்கள்...இருந்தாலும்..!

அந்தச் சிறுவன் பற்றிய பகிர்வு மனம் கனக்க வைக்கிறது!

Unknown சொன்னது…

அரசு எது செய்தாலும் அதை வன்மையாக கண்டிக்க பழகிவிட்டோம்!
ஆனால் அரசும் பல சமயங்களில் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது
ஆள்பவர்கள் ,மக்கள் ஒன்றுக்கு நிறைய முறை யோசிக்க வேண்டும் .
ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா .

Unknown சொன்னது…

ntuc fair price சிங்கப்பூர் அரசின் நிறுவனமா இல்லை வெளிநாட்டு நிறுவனமா ?
பிரதீபாவின் கேள்வி தல