அந்தக் குற்றப்பத்திரிக்கை
அவர்கள் விருப்பம்போல்
புனையப்பட்டிருந்தன
நீ
மறுக்க மறுக்க
உன் விரல் ரேகை பதியப்பட்டு
தயாரிக்கப்படிருந்த அந்த ஆவணம்
நாளை விசாரணைக்கு
ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது..
நீ
குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடினும்
நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டு
ஒருவேளை
உன்னை தூக்கிலிட
ஆணை பிறப்பிக்கப்படலாம்
உன் மரணத்திற்கான தேதிகள்
பலர் கை மாறலாம்
நிராகரிக்கவோ
ஆதரிக்கவோ
அவர்களுக்கு
பல காரணங்கள் தேவையாக இருக்கிறது..
ஒரு பழி வாங்கலாக
ஒரு அரசியல் ஆதாயமாக
சந்தர்ப்பங்கள் உனக்கு சாதகமாக
அல்லது
எதிராக முடிவெடுக்க வைக்கலாம்
அவர்களுக்கு தேவை
அவர்களின் நலனே
மேலும்
அவர்களின் வாரிசுகள் நலனும்
அதில் அடங்குகிறது..
ஒரு உண்ணாவிரதமோ
மனிதச்சங்கிலியோ
பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ
உன் வாழ்நாளை
நீட்டிக்க உதவலாம்
நீ
உன் சாவை
எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
மரண நீட்டித்தல் என்பது
மரணத்தை விடவும்
கொடுமையான தண்டனை என்பதை
உன்னைத் தவிர யாருக்கும் புரியாது
அவர்கள் உன் மரணத்திற்கான
தற்காலிக
இடைவெளிக் கடவுள்களாக
தங்களை கருதுபவர்கள்..
உன் தண்டனையை
நிறைவேற்றுபவர்களுக்கு
உன் வாழ்வில்
எந்த அக்கறையும் கிடையாது
தன்னைக் கடிக்காத போதிலும்
ஒரு எறும்பை நசுக்கிவிடுகிற
மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்..
எனவே
உன்னை தூக்கிலிட
கட்டளையிடுமாறு
கூச்சல் போடுவார்கள்
அவர்கள் தலைவனை விடவும்
வாழும் தலைவியின்
மனம் குளிர்ந்தால் போதும்
மனித இனத்தின்
நீங்கா களங்கம் அவர்கள்
பக்கத்தில்
கூப்பிடும் தூரத்தில் அரங்கேறிய
கற்பழிப்புகளை, கொலைகளை
நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்..
இங்கு நியாயம் என்பதே
வரையறைக்கு உட்பட்டதுதான்
யார் வரையறை செய்யும்
அதிகாரத்தில் இருக்கிறார்கள்
என்பதே முக்கியம்
எனவே
நீதி கேட்டு
நெடும்பயணம் செய்து
கலைத்துப்போவாள் உன் தாய்
உன் தந்தை, சகோதரி, உறவினர்
முகம் அறிந்த, அறியாத
உன் நியாயம் உணர்ந்தோர்
வெகு சொற்பமே
அவர்களின் அழுகுரல்
தொலைக்காட்சி நாடகங்களால்
மறைக்கப்படும்
இங்கு ஊடகங்கள்
வியாபாரத்துக்கு மட்டுமே
அவைகள்
இன்று உன்னையும்
நாளை வேறொன்றையும் வைத்து
பிழைப்பு நடத்தும்
முத்தமிழ் அறிஞரே
மானாட, மயிலாட நடத்திப்பிழைக்கும்போது
ஊடகங்கள் உனக்கு துணைவராது..
சுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே
குருடாகவும், செவிடாகவும்
நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில்
நாமெல்லாம் அடிமைகளே..
எனவே சகோதரனே
இனி நீதிக்காக போராடாதே
எல்லோரும் அம்மணமாக ஓடும்போது
உனக்கேன் கோவணம்
நிர்வாணம் பழகிக்கொள்
இருக்கவே இருக்கிறது
அருமருந்தாய் டாஸ்மாக்
அரசாங்கமே நடத்துகிறது
குடித்து, களித்து வாழ்வை நகர்த்து
கொஞ்சமாக கோஷமிடவும் கற்றுக்கொள்
தி.மு.க வோ, அ.தி.மு.க வோ
காங்கிரசோ, பி.ஜே.பி யோ
அல்லது
ஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது
உறுப்பினராக மாறு
ஒருபோதும் கம்யூனிஸ்டாக மாறிவிடாதே
அது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..
தமிழ் கோசம்
இனி ஒன்றுக்கும் உதவாது
சமயங்களில்
உயிரும்
மயிருக்கு சமமாகப் போகும்..
காயடிக்கப்பட்டு வாழ்வதைவிட
சாவே மேலென நினைத்தால்
எழு, புறப்படு, கைதாகு
அதன்பின்
இந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து
துவங்கும் உன் வரலாறு..
9 கருத்துகள்:
அப்பா எனன ஒரு கோபம், எத்தனை ஆதங்கம்,
'தன்னைக் கடிக்காத போதிலும்
ஒரு எறும்பை நசுக்கிவிடுகிற
மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்.' என்ற வரிகள்
இல்லாத பயிரை மேய்ந்துவிடக்கூடிய பயத்தில் எல்லா வெள்ளாட்டையும் துரத்தும் கூட்டம் என நீங்கள் குறிப்பிடும் அவர்களைப்பற்றி நான் என்றோ எங்க்கோ எழுதி வைத்திருப்பது ஞாபகம் வருகிறது.
மிக ஆக்ரோசமான கவிதையை நாசுக்கான வரிகளில் கொடுத்ததற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாயும் மறுபுறம் இப்படித்தான் உள்ளது நிலைமை என நினைக்கையில் ஆதங்கமாகவும் இருக்கிறது.
// அவர்களின் அழுகுரல்
தொலைக்காட்சி நாடகங்களால்
மறைக்கப்படும்//
உண்மைதான். அதே போன்று தானே இந்த (க)விதையும். திரைப்பட செய்திகளை தாண்டி எத்தனை பேரால் வாசிக்கப்படும்?
சாட்டையடி... யம்மாடி...!
எத்தனை நாட்கள் அடக்கி வைத்த கோபங்களோ ? ஒவ்வொன்றும் உள்ளுக்குள் இறங்கும் சிலுவை ஆணிகள் அண்ணே ....
தமிழர்கள் சுயமாக ஆண்டாள்தான் விடிவு.
தமிழ் கோசம்
இனி ஒன்றுக்கும் உதவாது
சமயங்களில்
உயிரும்
மயிருக்கு சமமாகப் போகும்..//
சத்தியமான உண்மைகளை போட்டு, முகத்தில் சப்பு சப்புன்னு அறைஞ்சிட்டீங்க அண்ணே....!
நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில்
நாமெல்லாம் அடிமைகளே..
கோபமும் ஆதங்கமும் புரிகிறது! என்ன செய்வது நம் சமூகம் இப்படி கெட்டு குட்டிச்சுவராய் இருக்கிறது!
கோபமும் ஆதங்கமும் கலந்த கலக்கல் கவிதை.
கருத்துரையிடுக