”உங்களைப் பற்றி, உங்களுக்குப் புரியவைத்து உன்னத ஊழியனாக்கும்
பயிற்சிக்கூடம் இந்தப் புத்தகம்.” புத்தகத்தின் மேலட்டையில்
குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. ஒரு நல்ல திறமையான ஊழியனாக மாறும் மேஜிக்
பற்றிய புத்தகம் ஒரு சிறந்த தொழிலதிபராக ஆசைப்படும் நமக்கு எப்படி உதவ
முடியும் என்கிற எண்ணத்துடன் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். கையில்
எடுத்த புத்தகத்தை வைக்கவே இல்லை. ஒரே வீச்சில் படித்துவிட்டேன். நல்ல
புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும். எனக்கும் ஒரு பழக்கம் உண்டு. என்னை
சுவாரஸ்யப்படுத்தும் புத்தகத்தை முதலில் ஒரே வீச்சில் படித்து விடுவேன்.
பின்பு இரண்டு நாள் கழித்து அதே புத்தகத்தின் முக்கியமான விசயங்களை
ஒவ்வொன்றாக படித்து அதனை அசைபோட ஆரம்பிப்பேன்.
ESCAPE
நாம் பெரும்பாலும் இந்த வார்த்தைக்கு பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவது
என்றுதான் அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், ஆசிரியர் சுரேகா
நமக்கு இவ்வார்த்தையின் மூலம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு
நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் மேனேஜ்மெண்ட் பற்றிய
புத்தகங்களின் மைல் கல். ஆரம்பம் முதலே கதையின் நாயகன் நரேந்திரனாக நாம்
மாறிவிடுகிறோம். கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிகாரியான நரேன் தனக்குப்பின்
வேலைக்கு சேர்ந்து தனக்கே மேலதிகாரியாக பதவி உயர்வு பெறும் சத்யா எனும்
இளம் பெண்ணின் மீது பொறாமை கொள்ளாமல், தனது நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு
ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார். அதன்பின் சத்யாவால் அவர் முடிவை
மாற்றிக்கொண்டு தன் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கான காரனங்களை
ஆராய்கிறார். அப்போது ஒரு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்படி
நிறுவனம் அவருக்கு பரிந்துரைக்கிறது. அங்குதான் மேலாண்மை பயிற்றுனராக
விக்னேஷ் வருகிறார். யார் இந்த விக்னேஷ்?.
நீங்கள்
சுரேகாவின் “தலைவா வா!” படித்திருக்கிறீர்களா?, படிக்கவில்லை எனில் உடனே
வாங்கிப்படியுங்கள். “தலைவா வா!” புத்தகத்தின் நாயகன்தான் இந்த விக்னேஷ்.
விக்னேஷ் யார்? அவர் எப்படி ஒரு மேலாண்மை பயிற்றுனராக மாறினார் என்பது ஒரு
சுவாரஸ்யமான கதை. அதனை நான் இங்கு விவரிப்பதைவிட நீங்கள் அப்புத்தகத்தை
படிப்பதுதான் சரி. ஏனென்றால் தலைவனாக மாற எல்லோருக்கும் ஒரு ரகசிய ஆசை
இருக்கும். ஆனால், அதற்கு நாம் எப்படி நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
விக்னேஷ் எப்படி படிப்படியாக ஒரு தலைமை அதிகாரியாக மாறினார் என்பது நாம்
ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய விதிகள். எனவே உடனே ”தலைவா வா!” மற்றும்
”எஸ்கேப்” இரண்டு புத்தகங்களையும் வாங்குங்கள். முதலில் ”தலைவா வா!”
படியுங்கள், பிறகு ”எஸ்கேப்” படியுங்கள். வாழ்வின் மாற்றம் உங்களை அறியாமலே
உங்களுக்கு ஏற்படுவதை உங்களால் உணரமுடியும்.
இப்போது ESCAPE பற்றி பார்ப்போம். ESCAPE என்பதை ஆறு படிகளை கொண்ட வாழ்வின் வெற்றிக்கான ஏணியாக
நாயகன் நரேனாக மாறிய நமக்கு விக்னேஷாக மாறிய சுரேகா விளக்குகிறார். ஓவ்வொரு
படிகளும் ஒவ்வொரு வாரம். வாரா வாரம் படிப்படியாக நாயகன் நரேன் தன்
தவறுகளை, நல்ல விசயங்களை, மேலாண்மை விதிகளை படிக்க ஆரம்பிக்கிறார். அவர்
தன் மேலாண்மை வகுப்பை முடிக்கும்போது தனது நிறுவனத்திலும், தன் அன்றாட
பணிகளிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்து தன்னையே முழுதுமாக
உணர்கிறார் என்பதை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்த பயணியாக நம்மை மாற்றி
விடுகிறார் சுரேகா.
வியாபாரம்
செய்யும் எனக்கு இப்புத்தகம் என்ன மாதிரியான பாடத்தை கற்பிக்க முடியும்
என்கிற அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், இப்போது
என் கம்ப்யூட்டர் அருகில் ESCAPE தத்துவத்தை எழுதி என் ஒவ்வொரு
செயல்பாட்டையும் அதனுடன் ஒப்பிட்டே இறுதி செய்கிறேன்.
’எஸ்கேப்’
படித்து முடிக்கும் வரைக்கும் எங்கேயும் நம்மை எஸ்கேப் ஆகவிடாத எழுத்து.
எனவே சகலரும் இதனை வாங்கிப்படித்து வாழ்வில் மாற்றத்தைக்கான பரிந்துரை
செய்கிறேன்.
‘எஸ்கேப்’
ஆசிரியர் : சுரேகா
வெளியீடு : மதி நிலையம்
விலை : ரூ.80
கிடைக்குமிடங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ், அகநாழிகை புத்தக உலகம்.
1 கருத்து:
புத்தகத்தை உடனே வாங்கத்தூண்டும் விமர்சனம்.
கருத்துரையிடுக