6 செப்., 2013

கடவுள்களும்...பிரார்த்தனைகளும்..பலன்களும்...

Photo : KRP Senthil
கவிஞர் வைரமுத்து ஒரு நாத்திகர். ஆனால் ஒருமுறை அவரது பேட்டியில் ஆம்புலன்ஸ் ஏதாவது நாம் போகும் வழியில் கடந்தால் உள்ளிருக்கும் நோயாளி குணமடைய வேண்டும் என வாழ்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் சிறிது காலம் ஆன்மீகம் பயின்ற வகையில் ஆம்புலன்ஸ் கடந்தால் ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தி வைக்கிறேன். அடிப்படையில் ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் நல்ல பலனைத்தரும் என்பது ஆன்மீகத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. எல்லா மதங்களிலும், தனிப்பட்ட அமைப்புகளிலும் இவ்வாறு பிரார்த்தனை குழுமம் ஒன்று இயங்கவே செய்கிறது. ஆனால் பிரார்த்தனையின் ஏகப்பட்ட வடிவங்கள் இப்போது பெருவணிகமாக மாறிவிட்டது.

பிரார்த்தனை என்பது ஒரு incident management. அதாவது பிரச்சனை வந்தபிறகுதான் பிரார்த்தனை யாவருக்கும் தேவைப்படுகிறது. பொதுவாக எல்லோருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால் சிறிய விசயத்தில் துவங்கி மிகப்பெரிய ஆள்வோர்களின் பிரச்சனைகள் வரை பிரார்த்தனைகள் விரும்பும் வகையில், பணத்தின் இருப்பை பொருத்து மாறுபடுகிறது. ஏழைகளுக்கு ஒரு ரூபாய் நாணயம் போதுமானதாக இருக்கிறது, அதனை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அதனை காணிக்கை செலுத்துவார்கள். சிலர் கடன் வாங்கி செலவழிப்பதும் உண்டு. பெரும்பாலும் குலதெய்வ கெடா வெட்டுக்கு இப்படி கடன் வாங்கி செலவு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பணம் படைத்தோர் வேறு மாதிரி எடைக்கு எடை கொள்ளையடித்ததில் பங்கு கொடுத்து விடுவார்கள். எனக்கு தெரிந்த வரையில் சிலர் திருப்பதி ஏழுமலையானை தொழில் பங்குதாரர் ஆக்கி வருடா வருடம் லாபப் பங்கினை உண்டியலில் செலுத்துகிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படி நம்பிக்கைகளை வியாபாரம் செய்து சம்பாதிக்கும் ஆட்கள்  உண்டு. எந்தக் கடவுளும்  எனக்கு இதனை செய்தால் உனக்கு அதனை செய்வேன் என கேட்டதே இல்லை. எல்லாம் மனிதர்கள்தான் மனிதர்களால்தான்.

இஸ்லாத்தில் அல்லாவைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது ஆனால் அல்லாவின் பெயரால் நோய்களை குணமாக்குவதாக சொல்வதும், மாந்ரீகம் செய்வதும் மனிதர்களே. நாகூர் தர்காவிற்கு போனால் இப்படி ஏராளாமானோர் பிழைப்பதை பார்க்கலாம். வேளாங்கண்ணி மாதாவை கிட்டதட்ட இந்துக்கடவுளாகவே மாற்றி விட்டனர். கிருத்துவனாக இருந்தால் மட்டும் போதும், நீ எப்படி வேண்டுமானாலும் வணங்கு என சகலரையும் கிருத்துவர்கள் ஆக்கும் தொழிலை மும்முரமாக செய்கிறார்கள். இங்கு உடல் உபாதைகள் இருந்து நிவர்த்தியாக பிரார்த்தனை செய்தால் அதே உறுப்புகளை வசதிப்படி தங்கமாகவோ, வெள்ளியாகவோ செய்து காணிக்கை செலுத்துகிறார்கள். மேரி மாதா எப்போது இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தாள் என்பது ஃபாதர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்து மதத்தில்தான் சகலத்துக்கும் தீர்வு கிடைக்கிறது. சாலையில் வேப்ப மரமோ, அரச மரமோ இருந்துவிடக்கூடாது!. அதனை கடவுளாக்கி விடுகின்றனர். ஜோசியர்களின் திறமையால் சகலத்துக்கும் சாங்கியம் உண்டு. பெரும்பாலும் இப்படி தொடர்ச்சியாக எல்லோரும் ஏமாறுவதற்கு காரனம் என்னவென்றால், நம்ம ஆட்களுக்கு ஒரு குணம் உண்டு. பொதுவாகவே புதிதாக கிருத்துவனாக மாறிய ஆட்களை பார்த்தால் அவர்கள் கிருத்துவால்தான் சகலமும் மாறியதாக ஒருவர் விடாமல் ஒப்பிப்பார்கள். அதாவது தான் ஒன்றும் தவறான வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை பறைசாற்ற வேண்டி தான் காலையில் கக்கா போவதை சுலபமாக்கியது கூட எல்லாம் வல்ல ஆண்டவர்தான் என்பார்கள். இரவு 9 மணிக்கு மேல் சில தொலைகாட்சிகளில் இவர்கள் பேயோட்டுவதை பாருங்கள். ஏற்கனவே நொந்து நூலாகி பிரச்சனைக்கு தீர்வு கான இவர்களிடம் வந்தால், மேடையில் அவர்களின் காட்டு கூச்சலில் இருக்கும் மன தைரியத்தை இழக்கவே செய்வார்கள்.


நம்பிக்கை என்கிற வார்த்தைக்கு தெளிவின்மை என்பதே பொருள் என யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அதாவது உண்மையான ஒன்றை யாரும் நம்பவைக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போது சகலரும் கடவுளை நம்பச் சொல்கிறார்கள். கடவுளை நம்பச் சொல்லி மனிதர்கள் மூலம் தூதனுப்பும் கடவுள் ஏன் நம்மிடையே நேரடியாக சொல்லிவிடலாமே என எவனுமே யோசிப்பது இல்லை. தூதர்களும், ஃபாதர்களும், ஆனந்தாக்களும் எப்படி கடவுளிடம் வேலைக்கு சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை. சாதாரனமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்றாலே இங்கு ஏகப்பட்ட விசாரனைகளை கடக்க வேண்டும். ஆனால் இங்கு கடவுளாதல் சுலபம். காரனம் இங்குதான் சாருநிவேதிதா என்கிற குப்பை எழுத்தாளனை கொண்டாடும் கூட்டம் இருக்கு,. இந்த ஆள்தான் நித்தியை புரமோட் செய்தார். அப்புறம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபின் அந்தர்பல்டி அடித்தார். இதில் என் எழுத்தை இங்கு கொண்டாடவில்லை என்கிற கூச்சல் வேறு.

இங்குதான் கடவுளுக்கு மீடியேட்டர் தேவைப்படுகிறது. இங்கு எல்லோரும் கடவுளாக மாறத்துடிக்கிறோம். முடியவில்லை என்றால் அடிமைகளாக மாறி ஊரெங்கும் சூரியனே, சரித்திரமே, தமிழகமே, கேப்டனே, தெய்வமே என ஃப்ளெக்ஸ் வைக்கிறோம். இப்போது கவுண்டமணி சினிமாவில் இல்லை. இருந்திருந்தால் அவர் ஒரு படத்திலாவது தனக்கு பொறம்போக்கே, புண்ணாக்கே, வெத்து வேட்டே என செந்திலையோ, சத்யராஜையோ வைத்து கிண்டலடிக்க சொல்லியிருப்பார்.

இப்போது ஏசுவோ, நபியோ, புத்தரோ இவ்வுலகில் இருந்தால் இவர்களுக்காகவா நாம் இத்தனை சிரமப்பட்டோம் என தற்கொலை செய்துகொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக இவர்கள் போராடினார்கள். ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டும் வந்தார்கள். ஆனால் இப்போது???????

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சக மனிதன் துன்பத்தில் துவளும் போது நம் உள்ளம் நம்மை அறியாது பதைக்கும், புறக் காரணிகளால் உதவ முடியாமல் போகும் போது எழும் குற்ற உணர்வை நீக்கவே பிறருக்காக பிரார்த்திப்பது, ஒரு வகை சுயநலமே, கடவுள் காப்பாற்றுவார் என இல்லாத ஒன்றின் மீது பாரமிட்டு விடுவதும் அவ்வாறே. தனக்கோ தன்னைச் சார்ந்தோருக்கு துன்பம் வரும் போது, அதனை நீக்க வழி இல்லாதோ, தெரியாதோ போகும் போது உடனடி தீர்வ்வுக்கும் மன ஆற்றுப்படுத்தல்களுக்கும் கடவுளையோ, கடவுளின் புரோக்கர்களையோ, இன்ன பிற வேண்டுதல்களையோ அவரவர் செல்வம், வளங்கள், வாழ்விடங்களுக்கு தகுந்தார் போல செய்கின்றனர். வேண்டுதல் நல்ல முடிவைத் தரும் போது பலித்து விட்டது, கடவுள் சக்தி, கடவுளின் புரோக்கர் சக்தி என்பதும், வேண்டுதல் பலிக்காத போது, விதி, பாவம், கடவுள் சித்தம் என மழுப்பி மன்தை ஆற்றுப்படுத்துவதும் வழக்கமாகும். உண்மையில் உள்ளத்தில் ஏற்படும் கலக்கத்தை, துன்பத்தை, குற்ற உணர்வை தற்காலிகமாக நிறுத்த, மறக்கவே கடவுள் & கோ என்ற கான்சப்ட் ஆகும். உண்மையில் மனமே இருப்பதாய், நடப்பதாய் சிந்தித்துக் கொள்கின்றன. கடவுள் என்ற ஒன்று வேறு எங்கும் இல்லை, ஒவ்வொரு மனித மூளையில் ஒரு எண்ணமாக நிழலாடுகின்றன. பலவீனமான மனிதர்களுக்கு என்றும் கடவுள் தேவைப்படுகின்றார்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உண்மைதான் எந்த தெய்வமும் இதைக் கொடு என்று கேட்பதில்லை! நாம் தான் இதைக் கொடு இதை தருகிறேன்! என்று டிமாண்ட் செய்கிறோம்! நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே கடவுள்! அதற்கு நாம் பல பெயர்களை வைத்து வழிபடுகிறோம்! மோகன் குமாரின் புத்தகத்தில் படித்த ஒரு வாக்கியம் என்னை கவர்ந்தது! நடந்ததை மாற்ற கடவுளால் கூட முடியாது! சத்தியமான வார்த்தைகள்! அருமையான பகிர்வுக்கு நன்றி!

ஜோதிஜி சொன்னது…

மணிமகுட பதிவு

தமிழ்மகன் சொன்னது…

கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்! ----- http://mytamilpeople.blogspot.in/2013/09/common-computer-problems.html