பதிவுலகின் No.1 பிளாக்கரான
கேபிள் சங்கரை எனக்கு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகத்தான் தெரியும். நான் தி.நகரிலும், அவர் சைதாப்பேட்டையிலும் இருந்தாலும் நான் அவரை பதிவுகளில் பார்ப்பதுடன் சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயங்களில் நான் அதிகம் சிங்கப்பூர், மலேசியா என சுற்றிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூரில் இருந்து வந்தபிறகு அவர் சிங்கப்பூர் சென்றபோது அவர் BUZZ ல் தன் சிங்கப்பூர் வருகையை பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு போனினேன். அங்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் எனக்குப் போனும்படி சொன்னேன். ஆனால் சிங்கை நண்பர்களின் அமோக கவனிப்பால் ( கேலாங் உள்ளிட்ட) என் உதவி அவருக்கு தேவைப்படவில்லை. அதன்பிறகு அவர் டைகர் ஏர்வேஸில் ஊருக்கு வந்த அதே நாள் என் நண்பனும் அதே ஏர்வேஸில் எனக்காக
GLENFIDDICH விஸ்கியுடன் வருவதாக சொன்னதும் அவனை முக்கியமாக அந்த விஸ்கிக்காய் ஏர்போர்ட் சென்றபோது நமது பதிவுலக தானைதலைவன் (அ) தானே தலைவன் வந்தார். அவரை அடையாளம் கண்டு ஒரு அலோ சொன்னதும் என்ன ஆட்டோகிராஃப் வேனுமான்னார். அண்ணே நானும் பிளாக்கர்தான்னு சொல்லி என் பேரை சொன்னதும் அவர் கையிலிருந்த பாட்டிலின்மேல் என் பார்வை சென்றதும் இன்னொரு நாள் பார்க்கலாம் தலைவா என விடைபெற்றார்.
அதன்பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பாரில்வைத்து பரஸ்பரம் அறிமுகமாகி அதன்பிறகு ஒருநாள் இரவு எனக்கு போனியபோது இன்னோரு முக்கியமான நபர் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார். அவர் பதிவுலக பஸ்ஸுலக அண்ணன் ( இன்னும் புரியலியா?) அப்புறம், அண்ணனுக்கு நேரம் கிடைக்கும்போதும் ஸ்ரீதேவி ஓட்டலில் சந்திப்புகள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் அல்ல தம்பி என்று தெரிந்தபின்னும் அவரை அண்ணன் என்றே அழைத்து வருவது தனிக்கதை. இதற்கு மேல் எழுதினால்
அண்ணன் அப்துல்லா அவர்கள் என் நட்பினை (மறு)பரீசலனை செய்யக்கூடும் என்பதால் மறுபடியும் தானைத்தலைவன் பற்றி...
அதன்பிறகு தினசரி இரவு 9.30 க்கு எங்கைய்யா இருக்கேன்னு போனுவார். ரெண்டு பேரும் சினிசிட்டி போயி கையில் இருப்பு வைத்திருந்த கடைசி சொத்து அழியும்வரை குடித்து இருக்கிறோம். அதன்பிறகு கிடைத்த நூரு ரூவாய்க்கு ஒரு குவாட்டர் வாங்கி வீட்டு மொட்டைமாடியில் அடிப்போம் அதன்பிறகு புரவலர்கள் அழைக்காத நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைத்தோம்.
இத்தனை மாதங்களில் கேபிளின் ஆளுமையை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தகைய ரகசியத்தையும் அவரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். அவரது சிறுகதைகளில் மறைமுகமாக வருமே தவிர நம்பிக்கைகு உரிய ஆள் அவர். தனக்கு இருக்கும் சிரமங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லமாட்டார். ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்க முடிவுசெய்திருக்கும் மூன்று படங்களின் திரைகதையும் நான் முழுவதும் கேட்டிருக்கிறேன். அதனால் அது கண்டிப்பாக வெற்றிபெரும் என எனக்குத்தெரியும்.
ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என நினைத்து இவரின் ”மீண்டும் ஒரு காதல் கதை” யை வெளியிட்ட போதுதான் அவரின் உண்மையான மதிப்பீடு தெரிந்தது. அதற்குபிறகு நான்கு புத்தகங்கள் வெளியிட்டு நாங்கள் பதிப்பக துறையில் நுழையும்போதே லாபத்துடன் நுழைந்ததற்கு கேபிள்தான் காரனம். எந்தவொரு விசயத்தையும் வியாபார நோக்கத்தில் அனுகும்போது வரக்கூடிய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிக்கக் கூடிய புத்திசாலி, அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.
அவர் மட்டும் சினிமா தவிர்த்து வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார். ஆனாலும் சினிமாவின் வீச்சு அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் ஓடு மீன் ஓட காத்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
இவரின் சமீபத்திய வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரனம்
யுடான்ஸ் திரட்டி ஆரம்பித்த சில வாரங்களில் அதன் வளர்ச்சி அபாரமானது. அதில் மற்ற திரட்டிகளில் இல்லாத அனேக அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக டி.வி மற்றும் வீடியோ பிளாக்கிங் வசதிகள் பதிவுலகிற்கு புதியது. இன்னும் ஏகப்பட்ட அம்சங்களை அதில் கூடுதலாக வைக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்.
இத்தனை பன்முக திறமைகள் வாய்ந்த அவர் எப்போதும் கர்வமின்றி இருப்பதுதான் அவரின் பெருமையே. . அதேபோல் புதிதாக வருகிற பிளாக்கராக இருக்கட்டும், எந்த நேரத்தில் போனுகிற ஒரு வாசகனாக இருக்கட்டும் அந்த நேரத்தில் அவர்களுடன் பேச முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும்போது அவர்களுடன் பேசிவிடுவார்.
என் நெருங்கிய நண்பரும் சீனியர் பிளக்கருமான நரேன் கேபிளைப்பற்றி சொன்னார் : “ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட....