சென்னை என்கிற பெருநகரில் அன்றாடம் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சில நூறு பேர் தங்கள் வாழ்வின் தொடர்ச்சியை சென்னையில் நிலை நாட்டும் அதீதமான ஆர்வத்தில் வந்திறங்கும் எத்தனை பேருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தேகமே!. தன் வாழ்வின் தீராத பெருங்கனவுகளை, லட்சியங்களை, ஆசைகளை நிஜமாக்கி பார்க்கும் உந்துதலில் அல்லது வெறுப்பின் உச்சத்தில் வீட்டினருடன் சபதம் போட்டுவிட்டு பஸ்ஸோ, ரயிலோ, லாரியோ கிடைத்த வாகனத்தில் ஒரு மூட்டை வேட்கையுடன் வரும் யாவருக்கும் எதையாவது செய்துகொண்டுதான் இருக்கிறது இப்பெருநகரம்.
வந்த இடத்தில் தங்குவதில் ஆரம்பித்து உணவு, வேலை, சக வேலையாட்கள் என ஒருவனின் லட்சியங்கள் ஆரம்பத்திலேயே சவக்குழிக்குள் புதைக்கப்படும் அபாயமே இங்கு அதிகம். முன்பெல்லாம் பேச்சிலருக்கு வீடு தர விரும்பாத உரிமையாளர்கள். I.T இளைஞர்கள் வந்தபிறகு அவர்கள் வீசியெறியும் அதிகமான வாடகையால் இப்போதெல்லாம் பேச்சிலர்களுக்குத்தான் சுலபமாக வீடு கிடைக்கிறது. இதுவே குடும்பத்தவன் என்றால் பெரும்பாலான விளம்பரங்களில் சைவம் மட்டும் என்பதான குறிப்புகளில் ஆரம்பித்து. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும் வீடுகளில் கிட்டதட்ட ஒரு பயங்கரவாதியைப் போல் பார்க்கப்படும் அவலம் சமீபமாக வீட்டு வாடகைதாரரின் விபரங்களை காவல்துறை கேட்டபிறகு இன்னும் அதிகமாகிவிட்டது. பாதுகாப்பு என்பது வெறும் விபரங்களால் கிடைத்துவிடும் என நம்பும் அல்லது நம்பவைக்கும் காவல்துறையின் அறிவை எப்படி மெச்சுவதென தெரியவில்லை. இதில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது என்கிற பெருமை வேறு. இவர்களுக்கு ஸ்காட்லாந்து என்கிற ஒரு நாடு எங்கிருக்கிறது என்றே தெரியாது!
திருவல்லிக்கேணி எனும் காளைகளின் தொழுவம்தான் தமிழ்நாட்டு இளைஞர்களின் சென்னை இல்லம். மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில் நல்ல மெஸ்கள் நிறைய உண்டு என்பதுதான் ஒரே ஆறுதல். மற்றபடி தலைக்கு இவ்வளவு என ஆண்கள்,பெண்கள் விடுதிகள் நகரம் முழுவதும் ஒரு புதிய வியாபார வாய்ப்பினை வழங்கியுள்ளது. இங்கு தினசரி வாழ்க்கையில் பேருந்தில் ஆரம்பித்து அலுவலகம் வரை பின்பு விடுதி வந்தால் துணி துவைப்பதில் ஆரம்பித்து வெவ்வேறு ரசனை கொண்டவர்களுடன் ஒரு மாதிரி இணக்கமான அனுசரிப்பு என நித்தம் நித்தம் யுத்தம்தான். இங்கு இருக்கும் முதல் அடிப்படை பிரச்சினை சம்பளம்தான். கிடைக்கும் சொற்ப சம்பளதில் உண்டு, உறங்கி, கழுவி, களித்து மீதமிருக்கும் சொற்ப காசை ஊருக்கு கொடுத்தனுப்பினால் ரீசார்ஜ் தீரும்வரைக்கும் ஊரில் இருந்து பெற்ற கடன் கேட்டோ, சகோதர கப்பம் கேட்டோ யாராவது புலம்புவதில் துவங்கும் மாலை பின் டாஸ்மாக் புண்ணியத்தால் இரவுகள் கழியும்.
எத்தனையோ விசயங்களை பேசும் அதிகார வர்க்கம் தனியார் நிறுவனங்களின் சம்பள விகிதத்தை சரிவர கவனிக்காமல் இருக்க நன்றாக கவனிக்கப்படுவதால் தனியார் முதலாளிகள் அங்காடித்தெரு படம்போல் ஒரு அடாசான தங்குமிடம் தந்து கூடவே ஒரு திராபையான சாப்பாடும் தந்து பணிரெண்டு மணி நேரத்துக்கு அதிகமாக வேலை வாங்குகின்றனர். சென்னையின் பிரதான வியாபார தளமான தியாகராய நகரில் இருக்கும் பெரும்பாலான கடைகளில் வேலை பார்க்கும் இளைய சகோதரிகளை பார்க்க நேரும்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும் திட்டி தீர்ப்பதில் என் கோபம் அந்தக்கடைகளில் எதையும் வாங்கக்கூடாது என்கிற தீர்மானத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. அந்த சகோதரிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அவரகள் காசில் சாப்பிடும் வக்கற்ற அவர்கள் பெற்றோரும், சகோதரர்களும் மனிதப்பிறவிகளாக எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சென்னை மற்றுமல்லாது ஏனைய பெரு நகரங்களிலும் இப்போது வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் வந்திறங்கி தமிழ்நாட்டை முன்னேற்றவும் அபடியே கிடைத்த சந்தில் திருடிக்கொள்ளவும் முயல்கிறார்கள். துப்பாக்கிகள் அதிகம் புழங்கும் அவர்கள் கலாச்சாரம் தமிழகத்தில் மெல்ல தலை தூக்க துவங்கியிருக்கிறது. இதுவரை தமிழக வீதிகளில் கத்திகளை வைத்து வீரம் காட்டிய உள்ளூர் தாதாக்கள் இனி வெளியூர் சிறார்களிடம் அடிமை வேலைக்குப் போகலாம்.
இந்த கையேந்தி பவன்களை பற்றி பெரிய சரித்திரமே எழுதலாம். அப்படியே ரோட்டோரம் ஒரு சிறிய தள்ளுவண்டியில் நடத்தப்படும் கடைகளால் சென்னை வந்தேறிகள் பசி போக்கப்படுகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சுத்தமாக இருப்பது இல்லை. அவர்களின் உணவு தயாரிக்கும் முறை பார்க்கும் ஒருவர் அப்புறம் வாழ்நாளில் கையேந்தி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார். கையேந்தி பவன் மட்டுமல்ல நிறைய உணவகங்களின் சமையலறையை ஒருமுறை தரிசித்து விட்டால் போதும் அப்புறம் சென்னையை நாம் வாழ்நாளில் மறக்க இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.
சினிமா என்கிற ரத்தக்காட்டேரிக்கு தன்னை பலியாக்கிக்கொள்ளும் என்னற்ற இளைஞர்கள். கோடம்பாக்கம், வடபழனி என தங்களை இன்னொரு ஷங்கராகவும், ரஜினியாகவும், விஜய் ஆகவும் கனவு கண்டு வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். 40 வயதை தொடும் என் நண்பனை ”ஏண்டா இப்படி இருக்கேன்னு” கேட்டா ரஜினி, எம்.ஜி.ஆர் என நாற்பது வயதுக்கு மேல் சாதித்தோரின் பட்டியலை வாசிப்பான். இவனிடம்
ஒருநாள் ”என்னடா கதை ஏதாவது இருக்கா?” என்றேன். ”ஏன் யாராவது புரொடியூசர் இருக்காரா?” என்றான். ”இல்லைடா, சும்மா கேட்டேன்” என்றேன். அதற்கு அவன் ஒரு கதை சொன்னான். ”ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கா?” என்றேன். “புரொடியூசர் அட்வான்ஸ் கொடுத்தால்தான் அதெல்லாம் தயார் செய்யமுடியும்” என்றான். ”எனது நண்பர் கேபிள் ஐந்து ஸ்கிரிப்ட் ரெடியா வச்சிருக்கார், அனைத்து படங்களையும் பார்க்கிறார், தினசரி சினிமா விசயமாக யாரையாவது சந்தித்தவாறு இருக்கிறார். சினிமாவின் அடிப்படை விசயம் முதல் அதனை கடைசி ரசிகன் வரை கொண்டுபோகும் திறமை உள்ளவர், அவருக்கே ஒரு புரொடியூசர் கிடைக்கல, நீ இப்படி சொன்னா எப்படிடா? என்றபோது, அவன் தன் ஜாதகத்தில் தான் ஒரு சிறந்த இயக்குநர், நடிகர், அமைச்சர் ஆகும் யோகம் இருப்பதால் எல்லாம் தானாக நடக்கும் என்றான்.
நான் வெறுத்துப்போய் இப்போதெல்லாம் அவனைப் பார்த்தால் இரண்டு பாக்கெட் சிகெரெட், 100 ரூபாய் பணத்தோடு நிறுத்திக்கொள்வேன். சமீபத்தில் ஒரு நாள் நான் சிங்கப்பூர் போகிறேன் என்றதும். அங்கு நல்ல? புரொடியூசர் இருந்தா சொல்லு ஒரு நல்ல கதை வச்சிருக்கேன். ஒன்றரை கோடில படம் பண்ணிறலாம் என்றான். ஒன்றரை கோடியை மிகச்சாதாரனமாக சொன்ன அவன் ஸ்டைலை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் இவனைப்போல் ஏகப்பட்ட இளைஞர்கள் அங்கு இப்படித்தான் சுற்றுகிறார்கள். அவன் சீக்கிரமே ஷங்கராகி, ரஜினியாகி, எம்.ஜி.ஆராக ப்ராப்திஸ்து. ஏனெனில் அவன் அமைச்சரவையில் அடியேனுக்கு இடமளிக்காமல் போயினும் அவன் அல்லக்கையாக மாறி கோஷம் போட இப்போதே தயாராகிவிட்டேன்.