முதல் பகுதியைப் படித்துவிட்டு இந்தியாவின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து சொல்லி நம்பிக்கை விதைகளைத் தூவலாமே எனப் பதிவுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியும் வந்தனமும். இந்தியா நமது தாய் தேசம் இது சீர்கெட்டுப் போகிறதே என்கிற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை. பொதுவாகவே ஒட்டு மொத்த இந்தியாவும் ஆழமான கலாசார வேர்களைக்கொண்டது. ஆனால் அது மட்டுமே நமது பலம் அல்ல. நண்பர் வசந்த் இந்தியா இப்படியே இருப்பதுதான் சரி, இப்படியே இன்னும் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தால் உலகில் மற்ற நாடுகளில் வாழும் அனைவரும் இந்தியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக பார்ப்பார்கள். இயற்கைத்தன்மையுடன் நாம் வாழ்வதாக அதிசயிப்பார்கள் என்று சொல்வார்.
நீங்கள் பொது விநியோக மையங்களில் ( ரேசன் கடைகளில்௦௦) சென்று பொருட்கள் வாங்கியதுண்டா? அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தர்மத்திற்கு வேலை செய்பவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிகாரம் தூள் பறக்கும், எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்டிக் கேட்கவே முடியாது, காரணம் மீண்டும் அவன் அந்தக் கடைக்கு வந்தே ஆக வேண்டும். இதே நிலைதான் அரசு ஊழியர்கள் அனைவரின் செயல்பாடும், சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள், ஒழுங்கான வேலைகள் செய்து தருவதற்கே பணம் அழ வேண்டும். புரோக்கர்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்கிற நிலைமைதான். சமீபத்தில் சென்னையில் அரசு பேருந்து நடத்துனருக்கும், அந்த பகுதி கவுன்சிலருக்கும் நடந்த சண்டையால் அன்று நாள் முழுதும் சென்னையின் அனைத்து பேருந்து ஊழியர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசையும், மக்களையும் நிலை குலைய வைத்தனர். காவல் நிலையங்களில் ஒரு சாதாரண நபரின் புகார்களை எப்படிக் கையாளுவார்கள் எனத் தெரிந்தவர்கள் அறிவார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் அல்ல, நாம்தான் காரணம்.
ஒரு அரசு அதிகாரியோ, காவலரோ. கவுன்சிலரோ, அமைச்சரோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நம்மில் ஒருவர்தான். அவர்கள் யாரும் மேலோகத்தில் இருந்து திடீரென குதித்தவர்கள் அல்லர். ஆனால் நாம் சுலபமாக குறை கூறுகிறோம். பிரச்சினை என வந்தால் ஒதுங்கிக்கொள்கிறோம். போக்குவரத்து விதிகளை நாம் யாராவது முறையாக பின்பற்றுகிறோமா? சிக்னலில் காவல் துறை அதிகாரி இல்லையென்றால் நாம் யாரும் சிக்னலை மதிப்பதே இல்லை. ஒரு காரியம் உடனே ஆகவேண்டும் என்று அதற்கான பணத்தை லஞ்சமாகக் கொடுக்க தயாராய் இருக்கிறோம். எனது நண்பர் தனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றார், நான் அதற்கான விதிமுறைகளை விளக்கினேன் , ஆனால் அவரோ நான் போகாமல் எடுத்து தர ஆள் இருக்கா எனக்கேட்டார். பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான ஆவணம் அதை ஏஜெண்டுகள் மூலம் கொடுப்பதே இந்திய அரசின் தவறான கொள்கைகளில் ஒன்று. இப்போது ஒரு பாஸ்போர்ட் எடுக்க சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ள அரசு இன்னும் ஏன் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு நாள் நேரம் ஒதுக்கி பாஸ்போர்ட் எடுக்கப் போக விரும்பாத சோம்பேறிகள் நாம். இப்படி ஏஜெண்டுகள் மூலம் பெறப்படும் பாஸ்போர்ட்டில் நிறைய குளறுபடிகள் வந்திருக்கின்றன.
இந்தியாவின் இன்னொரு மோசமான விசயம் வரிசையில் நிற்காதது , பெட்ரோல் பங்கில் துவங்கி அனைத்து இடங்களிலும் யாரும் வரிசைப்படி செல்வதே இல்லை. மின்சார கட்டணம் கட்ட நாம் காத்திருப்போம் ஆனால் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து நேரடியாக அதிகாரியிடம் நான்கைந்து கார்டுகளை கொடுத்து பணம் கட்டும் கட்சிக்காரர்கள். மருத்துவமனையில் அதுவும் அரசு மருத்துவ மனைகளில் நம் ஆட்கள் முண்டியடிப்பது என ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நாம். சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம், ஆனால் வரிசைப்படிதான் அங்கு எல்லாம் நடக்கும். மலேசியா கூட நிறைய விசயங்களில் நம்மைவிடவும் பத்து வருடங்கள் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள், அவர்கள் கூட வரிசை மாற மாட்டார்கள். அடுத்து குப்பை போடுவது, நம் வீட்டு குப்பைகளையும், மீந்த உணவுகளையும் அப்படியே சாலையில் கொட்டுவது, இதனால்தான் நிறைய வியாதிகள் சுலபமாக பரவுகின்றன, இதையெல்லாம் விட உடல்நிலை சரியில்லாத போது தனியாக ஓய்வு எடுக்காமல் எங்கும் சுற்றி தாம் பெற்ற துன்பத்தை அனைவருக்கும் பரப்புவது. அடுத்து உணவு, இந்த விசயத்தில் நாம் மிக மோசமானவர்கள் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், நம் தேசத்தின் உணவகங்களின் சமையல் கூடங்களுக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் அப்புறம் வாழ்நாளில் உணவகம் பக்கமே போக மாட்டீர்கள், ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் சில பெரிய உணவகங்களும், சிறு நகரங்களில் பெயர் சொல்லகூடிய சில உணவகங்களும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
சீனாவை விடவும் இருபது வருடங்கள் நாம் பின்தங்கியுள்ளோம். அவர்களை நாம் பின்பற்றி உற்பத்தி துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நம் மக்கள் தொகை நமது வரப்பிரசாதம். நமக்கென்று ஒரு மிகப்பெரிய சந்தை நம் கைவசம் இருக்கிறது எனவே உற்பத்தி துறையின் மூலமே நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். உணவுப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதற்கான விசயங்களை மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும். நமது பாரம்பரிய கலைச்சின்னங்களை மேம்படுத்தி சுற்றுலா வாசிகளை அதிகம் ஈர்த்தால் , நமது கலை வடிவங்கள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாக் கிராமங்களிலும் நூலகத்தை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தினை இளையோரிடம் உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...