14 அக்., 2011

சொல் ...

We are masters of the unsaid words, but slaves of those we let slip out. -Winston Churchill
குறள்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
விளக்கம் :
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்

மொழியில் வளமை அதன் வார்த்தைகளில்தான் இருக்கிறது. ஆதியில் தோன்றிய தமிழ் மெல்ல மறுவி இன்று சென்னைத்தமிழ் அளவுக்கு வந்து நிற்கிறது. அதிலும்  தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் தமிழ் படும்பாடு ஐயோ பாவம்! நல்ல வேளை பாரதி செத்துப்போனான். இப்பவும்கூட தமிழுக்கு சோறு போடுவதாக சொல்லிக்கொள்ளும் வைரமுத்து கூட இதைபற்றி பேசுவது இல்லை. அவருக்கு சோறு போடும் தலைவரின் ஊடகத்திலும் தமிழ்க்கொலை வெகுவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை தமிழ்கொலை அல்ல. வார்தைகளை கையாளும் விதம்.

பொதுவாகவே தமிழர்களுக்கு பேசப்பிடிக்கும் அதனால்தான் காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் இருந்து திராவிட இயக்க பெரியவர்களால் விரட்ட முடிந்தது. பெரியாரால் மூடனம்பிக்கைக்கு எதிராக ஆட்களை திரட்டமுடிந்தது. திரையில் தோன்றும் ஒல்லிகுச்சி நாயகன் தன் பெரிய எதிரியை ஒரு அசந்தர்ப்ப வசனதுடன் ஊதித்தள்ளும்ப்போது அவனால் கைதட்டி ரசிக்கவும், பின்னால் கைதுக்கி முதல்வர் ஆக்கவும், ஆக்கியபின் அவர்முன்னால் கைகட்டி வணங்கி நிற்கவும், சிலர் ஒருபடி மேலேறி காலில் விழவும் செய்கின்றனர்.

கிரமங்களில் வீட்டின் முக்கியமான சடங்குகளின் போது உறவின்முறையில் வரும் தகராறுகளில் ஒருவருக்கு ஒருவர் பேசும் வார்தைகளால் நிரந்தரமாக உறவு அற்றுப்போன குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்கள் மீண்டும் சேரும் வாய்புள்ள ஒரே இடம் சாவு வீடாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில்தான் தன் கவுரவங்களை விட்டுக்கொடுப்பார்கள். தவறு செய்த நபரும் தன் உறவின் பெருந்தன்மையால் தன் துக்கத்தை மீறி ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டு அழுததை என் கண்முன்னால் கண்டிருக்கிறேன்.

உறவுகளில் என்றில்லாமல் நட்புகளிலும் ஒரே ஒரு வார்த்தையை தவறாக பிரயோகித்து அதனால் முறிந்துபோன உயிர் நட்புகளையும் நான் பார்த்திருக்கிறேன். கடைசிவரை எதிராளி தன் தவறான வார்த்தைக்காக மண்ணிப்பு கேட்டபிறகும் மண்ணிக்காத நண்பர்கள் இருக்கிறார்கள்.

காதலில்தான் இது நிறைய நடக்கும். பெரும்பாலும் பெண்கள் தன்னை காதலிக்கும் ஆண்கள் தன் பேச்சை மதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் நம் இனம் அப்படியா காதலில் விழும்வரைக்கும்தான் எல்லா நடிப்பும் அதன்பிறகு நம் சுயரூபத்தை காட்டுவோம். அப்போது நேரும் தகராறில் ஆண்கள் உடனே கீழிறங்கி வந்து சாமாதானம் செய்யாவிட்டால் அவ்வளவுதான், அதன்பிறகு சின்ன சண்டை வளர்ந்து அல்லது வளர்க்கப்பட்டு நிரந்தரமாக உறவு முடிந்துபோகும்.

இப்படித்தான் என் வீட்டில் எனது தயார் அவருக்கும் எனது மனைவியான அவரது பேத்திக்கும் (என் சகோதரியின் மகளைத்தான் நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன்)  நடந்த சின்ன சண்டையில் நான் என் மனைவியை கண்டிக்கவில்லை என எனது தாயார் என்னிடம் வருத்தப்பட, நான் உங்க சண்டையை ஏன் என்னிடம் கொண்டுவருகிறீர்கள்? என கோபப்பட, அப்போது என்னைப்பார்த்து என் தாயார் உனக்கு நான் முக்கியமா? இல்லை உன் மனைவி முக்கியமா? எனக்கேட்க நானும் மிகுந்த நாணயஸ்தனாய் என் மனைவிதான் எனக்கு முக்கியம் என்று சொல்ல, என் தாயார் எங்கள் இருவரையும் வீட்டைவிட்டு போகச்சொல்லிவிட்டார். அன்று வீட்டைவிட்டு வெளியே வந்த நான் கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளாய் இன்னும் என் வீட்டிற்குப்போகவில்லை.

இது சம்பந்தமாக என்னிடம் சமாதானதுக்கு வந்த அத்தனைபேரிடமும் நான் சொன்னது : “ நான் அந்த வீட்டிற்கு கண்டிப்பாக வருவேன். என் பெற்றோர் இறந்தால் வருவேன்” அல்லது “ அவர்களுக்கு முன் நான் இறந்தால் என் உடல் வரும் என்று சொன்னேன்.

7 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

தாயா தாரமா என்பதில் தான் பல குடும்பங்கள் பிரிகின்றன... பின்னால் ஒரு நாள் அதரவு நாடி தாய் வரும் பொழுது எதுவும் பேசாமல் மறந்து சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

சத்ரியன் சொன்னது…

பாட்டியும் பேத்தியும், மாமியார் மருமகள் என மாற்றம் கண்டதால்,
உறவுகளுக்குள் பிளவு.

சொற்களை கையாளும் திறன் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை.

”நாவினால் சுட்ட வடு ஆறாது” தான். ஆனாலும் பரிசீலனைக்கு உரியது என்பதை நினைவில் வைக்கவும்.

பெயரில்லா சொன்னது…

கல்யாணம்..அவ்வ்!!

கும்மாச்சி சொன்னது…

சின்ன சொல் ஒரு நல்ல உறவை முறிப்பது நல்லதல்ல. விட்டுடுங்க பாஸ்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

உண்மையான பதிவு . நன்றி

ரகோத்மன் சொன்னது…

எனக்கு உங்களின் கருத்தில் உடன்பாடில்லை. தாயா அல்லது மனைவியா என்பது யாரும் கேட்க கூடாத கேள்விதான். இருந்தாலும் நீங்கள் அந்த கேள்வியை எதிர்கொண்ட விதம் சரியல்ல என்று எனக்கு படுகிறது. நீங்கள் எந்த மாதிரியான ஒரு சூழ் நிலையில் இருந்திர்கள் என்பது தெரியாது. ஆனால், உங்களுக்கு எப்படி உங்கள் தாய் உங்களை வெளியே போக சொன்ன போது கோவம் வந்ததோ, அதை விட அதிக கோவம் உங்கள் தாயாருக்கு இருந்திருக்க வாய்ப்பும் அதில் நியாயமும் உண்டு. எந்த ஒரு தாயும் தன்னை விட தன் மருமகள் உயர்வு என்பதை பொறுத்து கொள்ள மாட்டாள், எப்படி இதை உங்கள் மனைவி ஒத்து கொள்ள மாட்டார்களோ அதை போல.
ஆகவே, நீங்கள் உங்கள் வீட்டுக்கு போய் வருவதுதான் சரி. அதிலும் உங்கள் கடைசி வாக்கியங்கள் நீங்கள் மாற்றி கொள்ள வேண்டிய ஒன்று.