நாங்கள்
ஒரு குற்றமும் செய்யவில்லை
பெண்ணாகப் பிறந்து விட்டோம்
அவ்வளவுதான்...
11.06.2010 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி..
“மகமாயி! நீ மெட்ராசு போயித்தான் ஆவனுமா புள்ளே?”- பாவனாவின் அப்பா
“அப்பா என்னை அந்தப்பேர் சொல்லிக் கூப்பிடாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது”- பாவனா
“அது கெடக்கட்டு கலுத, நாங் கேட்டதுக்கு பதுல சொல்லு”
“ஆமாப்பா, டிக்கெட் கூட வாங்கிட்டேன், பத்தரை பஸ்சுக்கு இப்ப கெளம்புனாத்தான் சரியா இருக்கும்”
“ஏதோ பெத்தவுக ஒன் நல்லதுக்குத்தானே கலியாணம் பத்தி பேசுனோம். அதுக்காவ இப்புடி கோச்சுட்டு போலாமா புள்ளே?”
“அப்பா நான் கோவிச்சுட்டு ஒன்னும் போவல! வேலைக்குதான் போறேன்”
உங்க மாப்புளயும் அவன் மொகரெயும் என முனகினாள்..
அதற்குள் பாவனாவின் சித்தப்பா மகன் பைக்கை எடுத்து வரவே, பாவனாவின் அம்மா
“தோ.. உன் பொறந்தவென் வந்துட்டான், கெளம்புடி” என கண்களை துடைத்தாவாறே எழுந்தாள்..
பாவனா..
வயது சரியாக 23 (பிறந்த தேதியெல்லாம் தேவையா என்ன?)
ஒரு குக்கிராமத்தில் குறி சொல்லும் சிவனாண்டித் தேவர் - பாக்கியத்தம்மாளுக்கு பிறந்த மூன்றாவது பெண், முதல் இரண்டுப் பெண்களுக்கு பிறகு பையந்தான் என சத்தியம் செய்த சிவனாண்டியின் வாக்கு பொய்யாகி பெண்ணாகப் பிறந்தவள். நல்ல கருப்பாக பிறந்த அவளுக்கு ’மகமாயி’ எனப் பெயர் வைத்தார். தன் வாக்கு பொய்த்தாலும் மாரியாத்தாவே தனக்குப் பிறந்திருப்பதாக ஊரெல்லாம் சொல்லுவார். சரக்கு உள்ளே போனால் மட்டும் மாரியாத்தாளுக்கு வசவுதான்.
இப்படியாக ஜனித்த மகமாயிக்கு பத்தாம் வகுப்பு வரைக்கும் அந்தப் பெயரால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவளுக்கு அது அவமானமாக இருந்தது. அதிலும் கம்யூனிஸ்டான சித்தப்பாவால் படிக்க கிடைத்த புத்தகங்கள் அவளுக்கு வேறு மாதிரியான உத்வேகத்தை தந்தது. அவளுக்கு முன்னால் “மகமாயி” என்றும் அவள் இல்லாதபோது ‘கருப்பாயி’ என்றும் எல்லொரும், அக்காள்கள் உட்பட அழைப்பது அவளுக்கு தெரியும். எனவே தன் பெயரை மாற்றிக் கொள்வது பற்றி அவள் தீவிரமாக யோசிக்கத் துவங்கினாள். சித்தப்பா ஜென்னி என பெயர் சொன்னார். அது அவளூக்குப் பிடித்திருந்தாலும் யாராவது ஜன்னி என கூப்பிடுவார்கள் என நிராகரித்தாள்.
இறுதியில் தன் ஆங்கில ஆசிரியையின் பெயரான பாவானா அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவளின் ஆசிரியை ‘மகமாயி’ மேல் மிகுந்த பரிவு கொண்டிருந்தாள். புதுக்கோட்டையில் இருந்து தினசரி வந்து போக முடியாமல் அந்த கிராமத்தில் ‘மகமாயி’ வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடிவந்தாள். மகமாயிக்கு அவள் ஆசிரியை ஒரு தேவதையாகவே தெரிந்தாள். அவள்தான் ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசும் அளவுக்கு சொல்லித் தந்தாள். எனவே ஆசிரியை மிகுந்த கூச்சத்துடன் அனுமதிக்க பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன் “பாவனா” வானாள்.
அதன்பிறகு பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகள் புதுக்கோட்டையிலும் MCA வல்லம் பெரியார்- மணியம்மையிலும் படித்தாள். பெண்ணுக்கு படிப்பெதுக்கு என சிவனாண்டிதேவர் கல்லூரிக்கு பணம் கட்ட மறுத்துவிட்டார். சித்தப்பாதான் பணம் கட்டினார். கல்லூரியில் படித்த பெரியார் புத்தகங்கள் அவளை முழு நாத்திகவாதியாக மாற்றிவிட்டது.
கல்லூரி முடிந்தவுடன் வேலை கிடைப்பது சிரமமாக மாறியது, அவளின் சித்தப்பாவும் யார் யாரிடமோ சொல்லிப்பார்த்து கடைசியில் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மாதம் 3000 ரூபாய் சம்பளத்திற்கு
வேலைக்குப் போனாள். பள்ளியின் பேரூந்து தன் ஊருக்கும் வந்து போகும் என்பதால் வாங்கும் சம்பளத்தில் சித்தப்பாவுக்கு 1500, அம்மாவுக்கு 500 (மதிய சாப்பாட்டுக்கு) தனக்கு ஆயிரம் என பிரித்துக் கொள்வாள்.
தன் முதல் இரண்டு மகள்களில் ஒருத்தியை சொந்த மைத்துனனுக்கும், இன்னொருத்தியை தூரத்து சொந்தத்தில் ஒருவனுக்கும் இருந்த நிலத்தை விற்று கட்டிக்கொடுத்த சாமியாடி சிவனாண்டியின் மகமாயி என்கிற பாவனாவுக்கு மாப்பிள்ளை கிடைக்கவேயில்லை. அவருக்கும் இப்பல்லாம் பெரிசா வருமானம் இல்ல. எல்லாரும் டவுனு ஜோசியக்காரன் கிட்ட எதிர்காலம் அறியச்சென்று விடுவதால் தலித்துகள் மட்டும் இன்னமும் இவரிடம் குறி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் இப்போது குவாட்டருக்கு காசு கொடுப்பது இல்லை. வியாதிக்கெல்லாம் மருந்து கொடுப்பாரு இப்ப அதுவும் போய் ஊருக்குள்ள ஒரு மெடிக்கல்ஸ் வந்து செட்டு மாதிரைகளால் சகல வியாதிகளையும் குணப்படுத்தினர்.
சாதில இருக்கிற பசங்க பெரும்பாலும் படிக்காம சிங்கப்பூர், மலேசியா போய் சம்பாதிக்கிறவனுங்க, அவனுகள மகமாயிக்கு புடிக்கவே இல்லை, வெளியூரு மாப்பிள்ளைக போட்டோ பாத்துட்டு இவ்வளவு கருப்பா இருப்பதால் வேண்டாம் என பொண்ணு பார்க்க வராமலே பதில் சொல்லி அனுப்பி விடுகின்றனர்.
இப்படியாக மாப்பிள்ளைகள் கழிந்ததில் பாவனாவுக்கு கூட வருத்தம்தான். இதற்கிடையில் பாவனாவின் பள்ளி பேரூந்து ஓட்டுனன் (அவனும் தேவர்தான்) அவளுக்கு நூல் விட்டான். பத்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவன் அவன். பாவனாவுக்கு அவனை பரிசீலிக்கலாமா? கூடாதா? என பகுத்தறிவு சிந்தனைகள் குழப்ப. அதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்த ஒரு எஞ்சினியர் தன் முதல் மனைவி கேன்சரில் இறந்துவிட இரண்டாம் தாரமாய் பாவனாவைக் கேட்க, பொண்ணு பாக்க வந்து தனக்கு மனைவி என்பது கூட முக்கியமில்லை. தன் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் வேண்டும் என்பதால்தான் இந்தத் திருமணம் என்றான். அவன் கூடவே வந்த இரண்டு பிள்ளைகளும் இது நம்ம மம்மியா? ஐயோ வேண்டாம் டாடி என அப்போதே முரண்டு பிடித்தன.
பாவனாவுக்கு குழப்பமாக இருந்தது. அவனுக்கு 40 வயது என்பதும், அவனின் இரண்டுப் பிள்ளைகளும் அவளை பயமுறுத்தின. அவன் தெளிவாக தனக்கு சொந்தமான ஊரில் உள்ள வீட்டில் பாவனாவின் பெற்றோர் குடியிருக்கலாம் என்றும். இரு அக்காள் வீட்டுக்காரனுக்கும் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதும். குடும்பம் மொத்தமும் பாவனவுக்கு அவனை கட்டிக்கொள்ளச் சொல்லி வேப்பிலை அடித்தது. ஆனால் அவளின் சித்தப்பா தெளிவாக இருந்தார். சிங்கப்பூரில் மெய்ட் கிடைப்பது சிரமம். அதிலும் இரண்டுப் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் வேலைக்கு யாரும் வர விரும்ப மாட்டார்கள். அதனால்தான் உன்னை வேலைக்காரியுமாச்சு, பொண்டாட்டியுமாச்சுன்னு நெனெக்கிறான் வேண்டாம் புள்ளே என்றார்.
அதுநாள் வரை சித்தப்பாவை எல்லாமாக நினைத்த குடும்பம் அவரை தூற்றியது. இப்படியாக திசை மாறிய பாவனாவின் வாழ்க்கை. அவளின் தோழி மூலமாக சென்னைக்கு இடம் மாறியது.
தொடரும்...
5 கருத்துகள்:
செந்தில்...தொடர் புனைவானாலும் சுவாரஸ்யமாகத் தொடர்கிறது !
தொடருங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.யதார்த்த வாழ்க்கை மிகவும் கண்ணாமூச்சிகாடி பாயமுறுத்துவதை சொல்லி செல்கிறது.வாழ்த்துக்கள்.
தொடருங்கள் ! ஆவலாய் உள்ளது ! நன்றி !
ராஜபார்ட் அடுத்த பார்ட் எப்ப ??????
இன்றுதான் தொடர்களை படித்தேன் ... அருமை......... தொடர் அனைத்தும் உண்மை போல் தெரிகிறது ...
தொடருங்கள் ... வாழ்த்துக்கள் .............
கருத்துரையிடுக