8 பிப்., 2012

களவு - 4 - சென்னையில் ஒரு இரவு ...

13.06.2010 சென்னை இரவு 8.00 மணி

இன்று காலை முதலே நரேன் உற்சாகமாக இருந்தான். கையில் இருக்கும் பணம் அவனை அதை உடனே செலவு செய்யத் தூண்டியது, நண்பன் வேலை விட்டு வந்தவுடன் அவனிடம் 3000 ரூபாயைக் கொடுத்தான்.

“ஏதுடா! இவ்வளவு பணம்?” - நண்பன்
“இதுக்கேவா? இங்க பாரு” என மீதமுள்ள பணத்தைக் காட்டினான்.
“டேய் பணம் எப்படி வந்துச்சுன்னு சொல்லு”

நரேன் நடந்த அனைத்தையும் அவனிடம் மறைக்கால் சொன்னான்..

“என்னடா இப்படி பண்ணிட்டே! ஒன்னும் பிரச்சினை வராதே?”
“வந்தா பாத்துக்கலாம், முதல்ல நீ குளிச்சிட்டு தூங்கு, இன்னைக்கு ஒனக்கு லீவுதானே? நாம இன்னைக்கு பாருக்குப் போவோம்!”

நரேன் எப்போதுமே பணம் இருந்தால் அதனை உடனே செலவழித்து விடுவான்.

சென்னையின் மத்தியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பாருக்கு அவனும் நண்பனும் சென்றபோது இரவு மணி 8.00.

இரவு பத்து மணிக்கு மேல் ஒரு குரூப் வந்தது. அவர்கள் உள்ளே நுழைந்ததும் மொத்த பாரும் கொஞ்சம் அடக்கியே வாசித்தமாதிரி இருந்தது. அவர்களுக்கு அவசரம் அவசரமாக் டேபிள் ஒதுக்கப்பட்டது. அவர்களுடன் ஒரு புகழ்பெற்ற நடிகையும் இருந்தாள்.

சரக்கு ஏறிப்போனதும் அவர்கள் மையத்துக்கு வந்து ஆடத்துவங்கினர். நரேனும் அவர்களுடன் சென்று ஆடினான். ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்து. அப்பொது அந்த பிரபல நடிகை நரேனைக் கட்டிபிடித்து கண்ணதில் முத்தமிட்டால். நரேன் அவளுடன் சேர்ந்து ஆட முயற்சி செய்யும்போது அந்தக் கூட்டதில் இருந்த ஒருவன் நரேனை பளீரென அறைந்தான். இருவரும் கட்டிபுரண்டனர். எங்கிருந்தோ போலீஸ் வந்து நரேனை மட்டும் அள்ளிக்கொண்டனர்.

நரேன் முகத்தில் தண்ணீரை அடித்தார் ஒரு போலிஸ். கண் முழித்து பார்த்தபோது ஒரு அறையில் தன்னை சுற்றி நான்கு தடிதடியான போலிஸ் பாதி யூனிஃபர்மில் இருந்தனர். மெல்ல எழுந்தான்.

அப்போது கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவருக்கு சல்யூட் வைத்தனர். நரேனுக்கு முதல் நாள் இரவு ஏதோ விபரீதமாக நடந்திருப்பதாக உணர்ந்தான்.

“தம்பி உன் பேர் என்னப்பா?” - அதிகாரி
“நரேன் சார்!”
“குடிக்க வந்த எடத்துல ஒழுங்கா நடந்துக்க மாட்டியா?”
“சார் என் மேலே எந்த தப்பும் இல்ல!”
“அது தெரியும்பா! நீ யாரோட பிரச்சினை வச்சுகிட்டேன்னாவது தெரியுமா?”
“சார் நடிகை யாருன்னு தெரியும், அவங்கதான் என்னோட ஆட வந்தாங்க”

அவர் கொஞ்ச நேரம் யோசித்தார். பின்...
“தம்பி அது பிரச்சினை இல்ல, அவளை அழைச்சிட்டு வந்தது முக்கியமான வி.ஐ.பி யோட புள்ள, அவளை யாராவது தொட்டா அவன் பிரச்சினை பன்னுவான்”
“சார் அதுக்கு போலீஸ் எதுக்கு சார்?”
“ம்... அவன் அரசியல்வாதி புள்ளே, பின்னே எங்களைத்தான் ஏவுவான்’

கண்ட நாயி சொல்றதெல்லாம் கேக்க வேண்டியிருக்கு என சலித்துக்கொண்டார்.
பின் ஒரு அதிகாரியை அழைத்து.

”இவென்.. மேலெ ஒரு வாரம் ஜெயில்ல போடுறது போல ஒரு கேஸ் புக் பண்ணிருங்க:” 
“சார் நான் என்ன தப்பு பண்ணேன் சார்”
” பெரிய ஓட்டலுக்கு ஒன்னை மாதிரி ஆளெல்லாம் போறதே தப்புதான்,”
“சார் கேசெல்லாம் எதுக்கு சார்?”

நரேனிடம் அருகே வந்து மெதுவாக கிசுகிசுத்தார்..

”தம்பி அந்த நாதாரி ஒங்கள அடிச்சி கை காலெ ஒடைச்சு வெளிள வீசுங்கன்னு சொல்லிட்டான், அவனுக்கு அவ மேல கோவத்த காட்டமுடியாது, இப்ப ஒங்கள வெளில விட்டா கோவதுல அவென் ஆளுங்க ஏதாச்சும் பண்ணிருவாங்க, அப்புறம் எங்களுக்கதான் தலைவலி. இவென் இப்படி சொல்றான் அவென் அப்பன் ஒன்னை பதினஞ்சு நாள் செயில்ல போடச்சொல்றான், அவென் அப்பனுக்கு ஏதாச்சும் கொலக்கேசு ஆயிப்போச்சுன்னா தன்னோட அரசியல் பாதிக்கும்ன்னு கவெல, புள்ளைய கண்டிக்க முடியாத அப்பென் மக்களுக்கு என்னத்தே கிளிப்பானோ! அதானால புரிஞ்சுக்கோங்க”
“சார் நான் இப்ப என்ன செய்யனும்?”

அதன் பிறகு அவன் கோர்ட்டுக்கு ஏற்றப்பட்டான் குடிபோதையில் சாலையில் போவோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளை தரகுறைவாக திட்டியதாகவும் FIR பதிவு செய்திருந்தனர்.

நீதிபதி பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அவனை அழைத்துகொண்டு புழல் சிறைச்சாலை சென்றார் ஒரு அதிகாரி..


நரேன்..

வயது 28 (பிறந்த நாள் தெரியாது)

கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் - விசாலாட்சி தம்பதியரின் ஒரே மகன். பூர்வீகம் மன்னார்குடி. கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் நிறைய சகோதர, சகோதரிகளுடன் பிறந்தவர். சிறு வயது முதலே பெரியாரைப் பிடிக்காத ராஜாஜியின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் தொண்டருமான அவரின் அப்பாவால், பெரியார் அப்படி என்னதான் பேசுகிறார் என ஆர்வமாகி அப்பாவுக்கு தெரியாமல் திராவிடர் கழக கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். அது அவரின் பேரறிவைத் தூண்டி ஒரு நாத்தியவாதியாக மாறினார். அதனால் தந்தையால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு நீடாமங்கலத்தில் உள்ள பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். பின் தாத்தாவின் சிபாரிசால் சென்னையில் ஒரு பிரபலமான ஐயங்கார் கம்பெனியில் வேலை கிடைத்தது. மிகவும் நேர்மையானவர். சிறந்த தொழிற்ச்சங்கவாதி எனப்பெயர் எடுத்தவர். எந்த ஐயங்கார் குடும்பமும் பெண் தர முன்வராததால் அதே தாத்தா பார்த்து ஒரு ஏழை ஐயங்கார் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

நரேனின் அம்மாவிற்கு அப்பாதான் தெய்வம். அப்பாவின் கொள்கை காரனமாக அவளும் கடவுளை நிராகரித்தாள். ஒரு பையன் போதும் என அப்பா முடிவெடுத்தில் அம்மாவுக்கு மட்டும் வருத்தம் தங்களைப் போல பிள்ளையும் தனியாக வாழவேண்டிவரும் என அப்பாவிடம் மன்றாடினாள். ஆனால் இந்தியா போன்ற வருமை நாட்டில் ஒரு குழந்தையே அதிகம் என மறுத்து விட்டார். அப்பாவின் தீவிர நாத்திகத்தால் அவர் உயிரோடு இருந்தவரைக்கும் எந்த சொந்தமும் அவரை வந்து பார்க்கவில்லை. இவரும் போகவில்லை. அவரைப் பொருத்தவரை. வீடு, அலுவலகம், சங்கம் ஓய்வாக இருந்தால் படிப்பு என வாழ்க்கையை சுருக்கிக் கொண்டார். மயிலாப்பூரில் அரை கிரவுண்டில் சொந்த வீடு வாங்கினார், நரேனை M.Com வரை படிக்க வைத்தார். தனது 50வது வயதில் தூங்கும்போதே மாரடைப்பில் செத்துப்போனார்.

அப்பா போனதும் அம்மா அந்தக் கவலையால் படுக்கையில் விழுந்தாள். அப்பாவின் அலுவலகம் அவனுக்கு வேலை தர முன் வந்தது. ஆனால் அம்மாவை கவனிக்க யாரும் இல்லாததால் அவன் வேலையை மறுத்துவிட்டான். அப்பாவின் அலுவலகம் தந்த பணம், அப்பாவின் பிராவிடண்ட் பணம், வங்கி சேமிப்பு. அம்மாவின் சொற்ப நகைகள் என அனைத்தும் அம்மாவுக்கே செலவானது. கையில் காசு தீர்ந்த ஒரு இரவில் அவனை அருகே அழைத்து கையை இறுகப் பற்றியவாறே இறந்து போனாள். அப்பா இறந்தபோது அவரின் அலுவலக நண்பர்கள், சங்கத்தினர் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டனர். அம்மா இறந்ததும் நரேனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுதும் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான். விடிந்ததும் அப்பாவின் அலுவலகத்துக்கு சென்று சங்க ஆட்களிடம் சொன்னபிறகு அவர்களில் சிலர் மட்டும் வந்து அம்மாவின் அடக்கம் செய்யும் வரைக்கும் உடன் இருந்தனர். அடக்கம் செய்யும் வரைக்குமான செலவுகளையும் சங்க ஆட்கள் பகிர்ந்துகொள்வதாகவும். அவன் விருப்பப்பட்டால் அவனுக்கு மீண்டும் கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று விடைபெற்றனர்.

நரேனுக்கு அதற்குப் பிறகு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. அவன் நண்பர்கள் முடிவு செய்து மறுநாள் காரியம், பதினாறாம் நாள் செய்யவேண்டியவை என எல்லாம் முடிந்தபோது யாருமற்ற வீட்டில் தனியாக இருந்தான். அப்பாவின் கம்பெனியில் வேலைக்கான ஆர்டர் வந்தது ஆனால் ஓசூர் கிளையில் பணியாறும்படி உத்தரவு வந்தது. அவனுக்கு அதில் விருப்பமில்லை.

கல்லூரி நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வீட்டை வங்கியில் வைத்து பணம் வாங்கி வியாபாரம் செய்தான். ஆரம்பத்தில் பிரமாதமாகப் போனது, பின் இரண்டாவது வருடத்தில் பிசினஸ் படுத்து விட்டது. நண்பன் திடீரென கிடைத்த வெளிநாட்டு வேலையால் பறந்துவிட. வீடு வங்கியால் ஏலத்திற்குப் போய் நடு ரோட்டுக்கு வந்தான்.

அன்றைய தினத்தில் இருந்து கிடைத்த வேலைகளை செய்வது. தன் கல்லூரி நண்பனின் அறையை பகிர்ந்துகொள்வது என வாழ்வை சகித்துக்கொண்டான். அபாரமான கணக்கியல் நிபுனன். ஆனால் எதிர்கால லட்சியம் என்று எதுவுமில்லை. ஒரு முறை மன்னார்குடி சென்று உறவினர்களைப் பார்த்ததில் யாருக்கும் இவன்மேல் அக்கறை இல்லை. இவனும் ஐயங்கார் பழக்கங்களில் இருந்து விடுபட்டு கிடைததை சாப்பிடுவான். நினைத்தால் திருவண்ணாமலைக்கு போவான். ஒரு வாரம் தங்கி எல்லா சாமியார்களையும் பார்ப்பான்,. கொஞ்சமாக அப்போது மட்டும் கஞ்சா அடிப்பான். ஆனால் வேறு சமயங்களில் சிகிரெட்டை தொடமாட்டான்.

படித்த கம்யூனிஷ, பெரியாரிஷ புத்தகங்களைக் காட்டிலும் ஓஷோவு, ஜே.கேவும் யு.ஜி கிருஷ்ண மூர்த்தியும்தான் பிடித்திருந்தார்கள். ஃப்ராய்டை புரிந்து கொள்வதில் தீவிரம் காட்டுபவன். காதல் என்பது செக்ஸ்க்காக மட்டும் என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன். அதனால் தன்னைக் காதலிக்க முயற்சி செய்த மூவரில் இருவரை மடக்க முடியாமைக்கு இப்போதும் வருந்துபவன். நண்பர்கள் அதிகம். ஆனால் யாரையும் நெருக்கமாக நினைக்க மாட்டான். அறையை பகிர்ந்துகொள்ளும் ஒரே நெருக்கமான நண்பனும், ஒரு தற்காலிக காதலி ஒருத்தி (ஆடிட்டர் ஒருவரின் காரியதரிசி) தவிர யாருடனும், எதையும் பகிர மாட்டான்.

தொடரும்...

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எப்படியெல்லாம் திசைமாற்றுகிறது காலம் வாழ்வை !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விறுவிறுப்பாக செல்கிறது ! தொடருங்கள் ! நன்றி !

ரமேஷ் வீரா சொன்னது…

அருமை அண்ணா , தொடருங்கள் ..................