க்ரூரமாய் தகிக்கும்
மத்திய நாள் சூரிய அம்புகளென
உன் வார்த்தைகள்
என் நடு மண்டைக்குள்
அனலடிக்கின்றன
தகிப்பின் உக்கிரத்தில்
மூளை
உனக்கான வேட்டையைத்
துவக்கும் நாளினை
குல தெய்வ சாட்சியாய்
சத்தியம் செய்கிறது..
இது குருஷேத்ரமல்ல
ஆனாலும்
சகுனியைத் துதித்து
ஒரு முதல் அம்பு
அது உன்னை
உன் குடும்பத்தை
குடும்ப உறுப்பினர்களை
துளைத்து
ஒரு தேநீர் கடை வாசலில்
என்னிடம் திரும்ப வந்தது..
நியூட்டன் விதிகள்
சமயங்களில்
எதிராய்த் திரும்பும்
என முன்பே கணித்திருந்த
என் சீரிய அறிவை மெச்சியவாறே
அடுத்த கனையை ஏவினேன்
அது தேநீரோடு
அங்கிருந்த அனைவருக்கும்
பகிரப்பட்டு
ஊர் முழுதும் பரவத்துவங்கிய
நாளின்
நள்ளிரவில்
நீ ஊரை நீங்கினாய்..
ஜெயித்தலின் க்ரூரம்
வார்த்தைகளில்
விஷம் தடவியபடி
நாளை முதல்
இந்த ஊரெங்கும்
வலம் வரும்..
3 கருத்துகள்:
மனித மனதின் வெளிப்பாடு..வார்த்தை அம்பை விட கொடிய விஷம் வேறாக இருக்க முடியாது..க்ரூரம் அச்சுறுத்துகிறது கவிதை என்ற போதிலும்...
க்ரூரம்...என் இந்த இரவின் படுக்கையிலும் கூட...!
வித்தியாசமான கவிதை !
கருத்துரையிடுக