21 பிப்., 2012

வெயில்...


”இந்த வெயிலை என்ன செய்ய
அறையெங்கும் மின்வெட்டால்
பரவும் புழுக்கத்தில் கசியும் வியர்வை 
பெருக்கெடுத்து ஆடைகளை நனைக்க
பெரு நகரமெங்கும் இப்படியாக
வெயிலை வருடம் தப்பாது வைதாலும்
வெறுப்புடன் பொருத்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது ஒரு
வேண்டா விருந்தாளியைப் போல... ”

"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.

நினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாள் பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாறிவிட்ட என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போது சென்னையின் மே மாத வெயில். வெயில் என்னுள் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப்போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது

எத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.

முதல் காதல் மலர்ந்த மழைராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு மழைதான். கிராமத்து நாட்களில் காலைப்பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.

என் மூத்த சகோதரன் கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும் எனக்கு. நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 

ஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போது திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

சென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில் தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.

அதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் "மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா?"  என்று கேட்டபோது "கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை" என்று சொல்லிவிட்டு, "ஏன் அப்படி கேட்டீர்கள்?" என்றார். நான் சிரித்துக்கொண்டே "என் ராசி அப்படி!" என்றேன். அப்போது அவர் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என!.

சொன்னமாதிரி அந்த வருடமும் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததால் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும்   தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.

எனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என்  தனிமையை நீக்க தொடர்ந்து கூவியபடி இருந்தது.

குறும்புகள் செய்யும் காதலியைப்போல மழை என்னுடன் எப்போதும் தீராவிளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல்முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது. 

இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

6 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

சூஊஊஊஊஊஊஊப்ப்ப்பர் செந்தில்!...

sakthi சொன்னது…

வெயிலும் மழையுமாய் வாழ்கை
அழகான உணர்வுபூர்வமான பதிவு செந்தில்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி//

எழுதியுள்ளீர்களே என்றுதான் நானும் நினைத்தேன்.

வேர்கள் சொன்னது…

வெயில் என்றால்
பள்ளி தேர்வு முடிந்து கோடை விடுமுறை
மாம், பலா,புளியம் பழங்கள்
கோடை காலத்து சாயங்கால காற்று
மதியத்து கிணற்று குளியல்
நிழலின் அருமை
நீண்ட பகல் பொழுது கொடுக்கும் சுறுசுறுப்பு
தண்ணீரின் அதீத சுவை
எனக்கும் எஸ் இராமகிருஷ்ணனைபோன்று வெயில் ரொம்பபிடிக்கும்

ஹேமா சொன்னது…

அழகான குளிர்ச்சியான பதிவு செந்தில்.அண்ணா,வீரவேல் மனதில் சாரல் தூவிப் போனார்கள்.எனக்கும் மழை,குளிர் பிடிக்கும்.இங்கு -19 ல் குளிர் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !