ஒருகாலத்தில் போர் என்றால் கத்தி, வாள், ஈட்டி, வில் முதலிய ஆயுதங்களோடும் ரத,கஜ,துர,பதாதிகள் எனப்படும் நால்வகைப்படைகளோடும் நடைபெறும் என்று படித்திருக்கிறோம். காலம் நவீனமாக, நவீனமாக துப்பாக்கிகளும், பீரங்கிகளும் போர்க்களத்தினை ஆக்கிரமித்தன. பிறகு அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வந்தன. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பயோகெமிக்கல் வார் என்கிற சொற்பதமும் புதிதாகச் சேர்ந்துகொண்டது. ஆனால் இப்போது நடைபெறும், இனி வருங்காலங்களில் நடைபெறப்போகும் போர் என்பது பொருளாதாரப்போர்! நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார ஆக்கிரமிப்பாகவும், பொருளாதாரத்தடைகளாகவும் நடைபெறும் இந்தப்போரில் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான் உலக வல்லரசுச் சக்தியாக இருக்க முடியும். அது என்ன பொருளாதாரப்போர்?!
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்,அந்நிய மூலதனம் என்ற கூச்சல் நம் செவிப்பறையை கிழித்துகொண்டிருக்கும் நேரம் இது. அந்நிய மூலதனமும், பன்னாட்டு நிறுவனங்களும்,சிறப்பு பொருளாதார மண்டலங்களும் சொர்க்கத்தை பாரத கண்டத்திற்கு இறக்குமதி செய்துவிடும் என்று நம்மை நம்பவைக்க ஊடகங்கள் ஒற்றைக்காலில் தவமியற்றிகொண்டிருக்கின்றன.
புத்தகத்தை பிரித்து முதல் பக்கத்தில் பதிப்புரையை வாசித்தால் அதன் முதல் பாராதான் மேலே இருப்பது. என் சோசலிஸ்ட் நண்பன் சொன்னான், நம்முடைய உண்மையான எதிரி அமெரிக்காவும், ஐரோப்பாவும்தான் அவர்கள் எப்போதுமே அவர்களின் சோதனைச்சாலை எலிகளாகத்தான் நம்மை நினைத்து உபயோகித்து வருகிறார்கள் என. அதுதான் அப்பட்டமான உண்மையும் கூட என நம்மிடம் சொல்லும் ஒரு அமெரிக்க அதிகாரியின் வாக்குமூலம்தான் இந்தப் புத்தகம்.
அமெரிக்க பெரியண்ணனை பொறுத்தவரை தன் செல்வாக்கினை உலகெங்கும் நிலைநிறுத்த என்னவேண்டுமானாலும் செய்யத்துணிந்த ஆள். அதற்காக செலவழிக்கும் தொகையை உலக மக்களின் வறுமையை இல்லாதொழித்துவிட முடியும். ஆனால் உலகின் ஒப்பற்ற தலைவனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மூன்றாம், நான்காம் உலக நாடுகளை தனது பொருளாதார மாயவலையால் சிக்கவைத்து அடிமைப்படுத்தி விடுகிறது.
ஜான் பெர்கின்ஸ் என்கிற அமெரிக்க அதிகாரியினால் எழுதப்பட்டு இரா.முருகவேள் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்கிற நூலை படித்து முடித்தும் நம் இந்திய தேசமும் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிவிட்ட அவலத்தை உணர முடிகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் 2005 நவம்பர் 12 ஆம் தேதி கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டும்தான் நமக்குத்தெரியும். அதே நாளில் இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது அது இந்திய அமெரிக்க வேளான்மைக்கல்வி, ஆரய்ச்சி, சேவை மற்றும் வணிகம் பற்றிய ஒரு ஒப்பந்தம்தான் அது. கிட்டத்தட்ட நமது மரபுசார்ந்த விதைகளை அழித்துவிட்டு மரபணு மாற்ற விதைகளை விற்பதற்கு வழிகோலும் ஒப்பந்தம் அது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும் வாய்கிழிய பேசிய நம் இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி பேசாமல் விட்டதன் பலனை அனுபவிக்கத்தான் போகிறோம்.
இனி கொஞ்சம் ஜான் பெர்கின்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
1963 ல் பிறந்த ஜான் பெர்கின்ஸ் படிப்பை முடித்தபின் மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். ஆரம்பத்தில் தன் வேலைகளைப்பற்றி அதிகம் அறியாத அவர் போகப்போக தான் ஏற்றுக்கொண்ட பணியினை திறம்பட செய்யப்போக தான் ஒரு பொருளாதார அடியாளாக பணியாற்றுவதை உணர்கிறார். இவரின் மற்றும் இவர் அடங்கிய குழுவின் வேலையே எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள வளங்களை ஆராய்ந்து மெல்ல அந்நாட்டின் அரசியல்வாதிகளை, அதிகாரிகளை வளைத்து அவர்கள் உதவியுடன் முதலில் அந்நாட்டின் பொருளாதார, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் என்பதே மின்சாரம், சாலைகள், துறைமுகம் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும். இதற்க்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்னவெனில் பின்னாளில் அமெரிக்காவின் நிறுவனங்கள் உள்நுழையும்போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முன்பே ஏற்ப்படுத்தி வைக்கத்தான்.
இப்படி ஆரம்பத்தில் செய்யப்படும் அனைத்து கட்டமைப்புக்களுமே உலகவங்கியால் சொற்ப வட்டியில் கடன் வழங்கப்படும். மக்களும் ஆகா முட்டாப் பசங்க இவ்வளவு குறைவான வட்டில தருகிறானே என அவனின் உள்நோக்கம் புரியாமல் ஏற்றுக்கொள்வார்கள். இந்த இடத்தில் இப்போது ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் நமது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்கும் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 0.01%. அதன்படி திட்டங்கள் செயலான பிறகு தங்கள் நிறுவனங்களை உள்ளே கொண்டுவரும் அமெரிக்கா. அடுத்தடுத்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வலைவிரித்து அப்போதைய மந்திரிமார்களை சரிகட்டி கடன் வாங்கவைக்கும் இந்தக் கடன்களுக்கான வடி கணிசமாக உயர்த்தப்பட்டு அதிகப்படியான கடன்களை வழங்கி மீளாக் கடனில் சிக்கவைத்து விடும்.
இப்படி ஆரம்பித்த இந்தோனேசிய அரசாங்கம் இன்றைய தேதிவரைக்குமே தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த அமெரிக்கர்களின் புத்திசாலிதனத்தை நாம் இங்கேதான் புரிந்துகொள்ள வேண்டும். தான் உள்ளே நுழைய மந்திரிமார்களுக்கு கொடுக்கும் லஞ்சப்பணத்தை சுவிஸ் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் போட்டுவிடும். பொதுவாகவே சுவிஸ் வங்கிகளில் நாம் வைத்திருக்கும் கள்ள கணக்குகளுக்கு நாம்தான் சேவைத் தொகை செலுத்த வேண்டும். ஆனால் அந்தப் பணத்தை அந்த வங்கிகள் வெளியில் வட்டிக்கு விட்டு சம்பாதித்துகொள்ளும். ஒரு முறை ஐரோப்பியர் ஒருவர் சொன்னார் "பணக்கார இந்தியா ஏழை ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் தருகிறது" என. அதாவது சுவிஸ் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்குவதே ஐரோப்பாவும், அமெரிக்காவும்தான்.
நமது இந்திய அரசியல்வாதிகளின் பணம் கிட்டத்தட்ட 72 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல்களை இப்போது யோசித்துப்பாருங்கள். நம்மை எந்த அளவுக்கு இந்த அரசியல்வாதி பன்னாடைகள் அடகு வைத்திருக்கிறார்கள் என்பதை. இப்போது சில மாநிலங்களில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையை நீக்க நிச்சயம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனகள் உள்ளே நுழையப்போகின்றன. அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளைதான் இப்போதைய ஆளும் வர்க்கத்தினர் தன்னிறைவு திட்டங்களை தாமதமாக செயல்படுத்துகின்றனர். நம்மை அணுசக்தி மின்சாரத்தை எற்றுக்கொள்ளவைக்கும் சதியாகத்தான் இந்தப் புத்தகத்தை படித்தபின் நான் இதையும் பார்க்கிறேன்.
இந்தப் புத்தக ஆசிரியர் இந்தோனேசியாவின் கிராமங்களில் சுற்றியபோது அங்கிருக்கும் கம்யூனிஸ்டுகள் அப்போதே அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குப் புரிந்து இருந்தது. ஆனால் அவர்களின் புரிதல் வேறுவிதமாக இருந்தது என்கிறார். அதாவது அது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியரை அழிக்கப்போகிறார்கள் என்பதாகவே பரப்புரை செய்யப்பட்டு இருந்தது. இந்தோனேசியா முதலான அரபு இஸ்லாமிய நாடுகளை கபளீகரம் செய்வதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது என அவர்கள் கருதினார்கள் எனக்குறிப்பிடுகிறார். உண்மையில் அமெரிக்காவின் நோக்கமே வேறாக இருந்திருக்கிறது அது தன் பொருளாதார, ராணுவ, நிறுவனங்களின் வளர்ச்சியை அந்த நாடுகளில் நிலைநிறுத்துவதையே அது விரும்பியது.
இந்தோனேசியாவை விடவும் சவூதி அரேபியாவில்தான் அமெரிக்கா தன் இருப்பை வெற்றிகரமாக நிலைநாட்டியது. அங்கிருக்கும் அரச குடும்பங்களை எண்ணையிலிருந்து கிடைத்த பல்லாயிரம் கோடி டாலர்களையும் அமெரிக்க முதலீடு செய்யவும் அதில் கிடைக்கும் வட்டியைக்கொண்டு நீர் விநியோக முறைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், பெரு நகரங்கள், விமான தளங்கள் ஆகியவற்றை அமைக்க அமெரிக்க நிறுவனங்களையே அமர்த்தியது.
இவர்கள் தோல்வியடைந்த திட்டங்களும் இருக்கவே செய்கிறது, பனாமா மற்றும் ஈரானிடம் இவர்கள் பருப்பு வேகவில்லை. ஈராக்கை தந்திரமாக குவைத்தை பயன்படுத்தி வெற்றி கண்டாலும் அதற்காக அமெரிக்கா கொடுத்த விலை அதிகமே. இப்போது ஆப்கனில் தன் இருப்பை நிலைநாட்டும் அமெரிக்காவின் முக்கிய இலக்கே எண்ணெய் வளம்தான்.
இந்தியாவில் அடிமைகள் சல்லிசாக கிடைப்பதால் அமெரிக்காவுக்கு பிரச்சினையில்லை. இந்தியா தனக்கு எதிர்ப்பாக இருந்தவரைக்கும் பாகிஸ்தானை ஆதரித்த அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து இந்தியாவிற்குள் தன் காலடியை எடுத்துவைத்தது. ஆரம்பத்தில் தனக்கு சாதகமாக இருந்த பி.ஜெ.பி.யை விடவும் சோனியா சிறந்த தேர்வாக தெரிந்ததும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதன் இருப்பை தீர்மானித்தது. சிதம்பரம் போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் செயிக்க வைக்கப்பட்டதற்க்கு இருக்கும் அசாத்தியமான வலைப்பின்னலை அறியாமல் கைமாறிய கோடிகளைப் பற்றிய கதைகளை ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்தே கைமாறிய பெருமையாக பேசிக்கொள்கிறோம். இன்றைக்கு இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழகத்தில்தான் ஓட்டுக்கு பணம் தருகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த ஒரு பொருளைப் பற்றியே பேசமுடியாத நமக்கு ஐந்து வருடங்கள் கேவலம் நூறுக்கும், ஐநூறுக்கும் விலைபோகிறோம்.
ஒரு கேவலமான செயலை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தின் அடுத்த ஆட்சிக்காக காத்திருக்கும் கருணாநிதி சாகும்வரைக்கும் ஆட்சியில் இருந்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழனை காவு கொடுக்கவும், இந்தியத் தமிழனை குடிகாரனாக்கவும் முயன்றுவருகிறார். இதற்க்கு போட்டியாக வரும் மிடாஸ் ஆத்தா என்னென்ன செய்ய காத்திருக்கோ.
இப்படியாக உலக தாதாக்களிடமும், உள்ளூர் தாதாக்களிடமும் அடிமையாக கிடக்கும் நாம் ஒருபோதும் சுதந்திரமாக வாழ வாய்ப்பே இல்லை என்பதை இந்தப்புத்தகம் முழுமையாக நமக்கு உணர்த்துகிறது. சமூக அக்கறை உள்ள ஒவொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ் தமிழில்: இரா.முருகவேள்
வெளியீடு: விடியல் பதிப்பகம் , கோவை
விலை:ரூ.150 /-