உணவானான் - காசி ஆனந்தன்.
தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் எனும் புத்தகம் "தோழமை" வெளியீடாக திரு.மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது திலீபன் கீழ்க்கண்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.
1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது
சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும்
சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும்
சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது
உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என
அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு,
தமிழ்க் கிராமங்கள், பள்ளிகூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள
இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்க்கொண்டார். அதிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
அவர் உண்ணாவிரதம் மேற்கொண்ட 12 நாட்களும் திரு.வாஞ்சிநாதன் அவர்கள் திலீபனுடன் உடனிருந்த பரபரப்பான நாட்களை நம் கண்முன் நிருத்துகிறார்.
ஒவ்வொரு நாளும் திலீபனின் உடல் மாற்றங்கள். அவரின் போராட்டத்தால் நடந்த அரசியல் நிகழ்வுகள். மக்கள் எழுச்சி, இந்திய, இலங்கை அரசின் கயவாளித்தனங்கள் என அனைத்தையும் சுருக்கமாக சொல்கிறார்.
புத்தகத்தை வாசிக்கும்போது நாமும் ஒவ்வொரு அத்தியாத்திலும் திலீபனுக்காகவும் நமது இனத்தின் ரத்த உறவுகளுக்காகவும் கண்ணீர் வடிக்க நேரிடுகிறது.
தன் இனத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்த திலீபன்தான் நமக்கு குலதெய்வமாக இருக்க வேண்டியவன். ஆனால் நாம் தமிழகத்தில் யார் யாருக்கோ அடிமையாக இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்.
இந்தியாவில் தமிழகத்தைப் பொருத்தவரை ஈழப் போராட்டம் என்பது அரசியல் லாபங்களுக்காக ஒவ்வொரு அரசியல் தலைவரும் ஒவ்வொரு விதமாய் கையாண்ட துரோகமும் நம்மை கூனிக்குறுக வைக்கிறது. இந்திராகாந்தி, எம்.ஜி.ஆருக்குப் பின் நெடுமாறன் வைகோ தவிர யாரும் அக்கறை கொள்ளவில்லை. கருணாநிதி விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பில் மொத்த இனத்தையும் சோனியாவுடன் பழி தீர்த்துக்கொண்டார்.
இப்போதும் விடுதலைப்புலிகள் இல்லாத ஈழத்தில் இன்னமும் முள்வேலி முகாமுக்குள்தான் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை இந்திய அரசோ, அதில் அங்கம் வகிக்கும் கருணாநிதியோ அது பற்றி வாய்திறக்கவே இல்லை. இங்கிருக்கும் முகாம்களில் இருப்பவர்களுக்கு இப்போது ஜெயலலிதா செய்யும் உதவிகளைக் கூட கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் தன்னை பற்றிய பாராட்டு விழாக்களும், ஈழம் பற்றி பேசியவர்களுக்கு சிறை வாசமும்தான். சென்ற தேர்தலில் கருணாநிதி,திருமாவளவனும்,ராமதாசும் நடத்திய கேளிக்கூத்துகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்தும் இப்போது வரைக்குமே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவில்லை.
தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்
வெளியீடு : தோழமை பதிப்பகம்
விலை : ரூ. 55