27 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 3...


பத்தாம் வகுப்பில் 
உடன் படித்த ரேணுகாதேவி
ஒரு சலவைத்தொழிலாளியின் மகள்
அப்போது மிகுதியாக 
சாதி பார்த்துப்பழகும் என் ஊரில்
அவளென்றால் யாவருக்கும் பிரியம்தான் 
அழகு தேவதை அவள்
ஒரு நாள் அவளும் நானும்
இன்னபிற தோழிகள் சூழ 
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 
குழுமியிருந்தபோது
கடந்து போனதொரு வண்ணத்துப்பூச்சியொன்று
”அய்.. வன்னாத்திப் பூச்சி”யென்றேன்
சடாரெனக் கோபம் கொண்ட ரேணுகா
“அது வண்ணத்துப்பூச்சிடா” எனத் திருத்தினாள்..

பணிரெண்டாம் வகுப்பில்
ஒரு அரையாண்டுத் தேர்வின் மத்தியில்
எங்கள் இருவரின் காதலை
கழிவறை சுவற்றில் உறுதிப்படுத்தினார்கள்
சக தோழர்கள் ..

எங்கள் காதலின் உறுதியால் 
ஒரு சலவைத் தொழிலாளியின் குடும்பம் 
ஊரை விட்டு வெளியேறும் உத்தரவை 
ஏற்றுக்கொண்டது
முதல்நாள் இரவே 
இருவரும் ஓடிப்போகும் முடிவெடுத்து 
ஊர் எல்லையைக் கடக்குமுன் பிடிபட்டு 
அவரவர் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டோம்..

மறுநாள் காலை 
அவளின் தற்கொலையுடன் விடிய 
நான் என் தற்கொலை முயற்சியில் காப்பற்றப்பட 
இப்போதும் 
ஊருக்குப் போனால் 
தனியறையில் இருக்கும் நேரம் 
எங்கிருந்தோ வருகிறது 
வண்ணத்துப்பூச்சியொன்று 
அறையின் ஏதோ ஒரு மூலையில் 
வெகு நேரம் தவமிருக்கும் 
பின் 
ஏதோ ஒரு பல்லிக்கு உணவாகி
செத்துப்போகும்..

ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி..

ஊருக்குப் போவதை நிறுத்திய பின்னரும் 
எப்போதாவது
இந்த நகரத்தின் கொடிய இரவுகளில் 
சாத்திய சன்னல்களையும் மீறி 
எப்படியோ வந்துவிடுகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி
எங்கிருந்தோ வந்து சேர்க்கிறது 
ஒரு பல்லி..

சமீபமாக 
வண்ணத்துப்பூச்சிகளைத் தின்றால்
செத்துப்போக முடியுமா? என
விசாரித்துக்கொண்டிருக்கிறேன்..

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வண்ணத்துப்பூச்சிபற்றி இத்தனை நினைவுகளா.இப்படியும் அலசமுடியுமா என்று யோசிக்கிறேன் !

பெயரில்லா சொன்னது…

எப்புடி இருந்த நா..ன்!இப்புடி ஆயிட்டேன்!!...Super Appu.