26 மே, 2011

ரகசியம்...


Three can keep a secret, if two of them are dead. - Benjamin Franklin

யாருமற்ற ஊரில் உறவுகளற்ற ஒரு பெண்ணை காதலித்த மூன்று ஆடவர்களின் கதையை கேட்டிருக்க மாட்டீர்கள். யாருமற்ற ஊரில் ஒரு பெண் எப்படி வந்திருப்பாள் என்ற சந்தேகத்தை விடவும், அவளை காதலிக்கும் மூன்று ஆடவர்கள் என்கிற தொடர்ச்சியின் வசீகரம் அந்தப் பொய்யில் உங்களை கட்டிப்போடக்கூடும். வழி தவறிய ஆட்டுக்குட்டிக்கு அதனைப் பார்த்த முதல் ஆள் தற்காலிக சொந்தக்காரனாகி விடுவதைப்போல இப்படியான கட்டுக்ககதைகள் காற்றின் திசைகளில் பரவும் தூசியென மனிதர்களின் மனங்களின் பரவிவிடுகிறது.

யாரும் வைத்துக்கொள்ள முடியாத ரகசியங்களை நம்பிக்கை வைத்து சொல்லும்போது அது அதன் ஸ்திரத்தன்மையை இழந்துவிடுகிறது. அதனை பெற்றுக்கொண்ட நம்பிக்கை நண்பரின் மற்றொரு நம்பிக்கை நண்பர் வழி ஊரெங்கும் ஒரே நாளில் பரவும் ரகசியம் அதிகம் உண்டு. அதிலும் பிரபலங்களைப் பற்றிய ஊகங்களை தினமும் பரப்பும் ஒரு கும்பல். அந்த ஊகங்கள் பின்பு கண். காது, மூக்கு வைத்து உருவமெடுத்து ஊரெங்கும் சுற்றிவரத்துவங்கும். ஒரு ரகசியத்தை இன்னொரு ரகசியமே வீழ்த்துகிறது.

இருந்தாலும் மனிதின் கருப்பு பக்கங்களில் ஒவ்வொருவருக்குமே சாகும் வரைக்கும் யாரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியங்கள் இருக்கவே செய்கின்றன. உறவுகளால் ஏற்படும் தனி மனித துரோகங்களும், அவமானங்களும் யாரிடத்தும் சொல்லப்பட முடியாமல் மனதில் பூட்டிவைத்து அது அழுத்தி அழுத்தி மன நோய்க்கு ஆளானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ரகசியங்கள் மிக சுவாரஸ்யமானவை பக்கத்து வீட்டுக்காரரோ, அலுவலக நண்பரோ, போற்றும் பிரபலமோ யாருடையதாக இருந்தாலும் ரகசியங்கள் மிக சுவாரஸ்யமானவை. அது கேட்பவரையும் சொல்லுபவரையும் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தும். பாலியல் ரகசியங்கள்தான் உலகின் முன்னணியானது. அதற்கடுத்து அலுவலக காக்காய் பிடித்தால், சிண்டு முடிதல் என தான் சார்ந்த உலகின் அதீத பக்கங்களை ரகசியங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம்.

நாடு தழுவிய ரகசியங்கள் காசு தரக்கூடியவை, ஆட்சிகளை புரட்டிப்போடும் ரகசியங்களை தேடி ஊடகங்கள் அனுதினமும் சல்லடை போடுகின்றன. பெரும்பாலும் அண்டர்கிரவுண்ட் கவனிப்பில் முடக்கப்பட்ட ரகசியங்கள்தான் அதிகம். சமீபத்திய விக்கிலீக்ஸ் வரை நமக்கு எது உண்மை எது பொய் என்று பிரித்து அறிய இயலாத அளவுக்கு பணம் சார்ந்த ரகசியங்கள்தான் உலகை ஆள்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஊழலில் ஒன்றான ஸ்பெக்ட்ரம் பற்றியும், கைமாறிய பணம் பற்றியும் இங்கு ஆளாளுக்கு ஒரு கருத்தினை பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த பரந்த இணைய கட்டமைப்பில் இனி ரகசியங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகம்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் இருந்து ஒரு அரசு பஸ்ஸில் சென்னை வந்து கொண்டிருந்தேன், அப்போது எனக்கு முன்னால் சீட்டில் கடுமையான போதையில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் அது பஸ் என்பதையும் மறந்து தனது நண்பரிடம் தன் மனைவி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். கேட்கவே அருவருப்பாக இருந்ததால் எழுந்து சத்தம் போட்டேன். திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் அவர். அதுவரை அவர்மேல் வெறுப்பாக இருந்த சக பயனியர் ஆளாளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். அன்று அவர் பஸ்ஸில் தன் மனைவி பற்றி உளறிக்கொட்டியது சக பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு இன்றுவரைக்குமே எங்காவது உலவிக்கொண்டிருக்கும்.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உன்மை,அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ரகசியம் என்பது கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியது. மற்றொருவரிடம் கூறிவிட்டாலே அதன் ரகசியத்தன்மை போய்விடுகிறது என்பது உண்மை தான்.

நல்ல பதிவு.

ராஜ நடராஜன் சொன்னது…

//சமீபத்திய விக்கிலீக்ஸ் வரை நமக்கு எது உண்மை எது பொய் என்று பிரித்து அறிய இயலாத அளவுக்கு பணம் சார்ந்த ரகசியங்கள்தான் உலகை ஆள்கின்றன.//

விக்கிலீக்ஸ் ரகசியங்களும் தேர்ந்தெடுத்த கால நேரம் பார்த்து அடுத்தவர் காதில் ஊதும் ரகசியம்தான்.

இந்திய செய்திகளைப் பொறுத்த வரை இந்து ராம் தேர்வின் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் செய்திகள் கால நேரம் பார்த்து வெளியாகிறது.

அசாங்கி தனது சுயத்தை என்.ராமிடம் அடகுவைத்துவிட்டார்.

ஹேமா சொன்னது…

ரகசியம் தொடங்கின இடமும் முடிச்ச விதமும் அழகு !

Unknown சொன்னது…

ரகசியங்கள் சுவாரஸ்யமானவை. இப்போது கூட நீங்க ஏதோ ரகசியம் சொல்லப்போரிங்கனுதான் வந்தேன்.

rajamelaiyur சொன்னது…

.....................................................(ஷ் ... ரகசியம் )

rajamelaiyur சொன்னது…

////
பிளாகர் வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

ரகசியம் என்பது கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியது. மற்றொருவரிடம் கூறிவிட்டாலே அதன் ரகசியத்தன்மை போய்விடுகிறது என்பது உண்மை தான்.
////


ஆமாம் ...ஆமாம்

சசிகுமார் சொன்னது…

மிக அருமையான கட்டுரை

Jana சொன்னது…

உலகின் மிகப்பெரிய ஊழலில் ஒன்றான ஸ்பெக்ட்ரம் பற்றியும், கைமாறிய பணம் பற்றியும் இங்கு ஆளாளுக்கு ஒரு கருத்தினை பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த பரந்த இணைய கட்டமைப்பில் இனி ரகசியங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகம்தான்.

ம்ம்ம்ம்ம்...