26 டிச., 2010

சீமான்; மாற்று அரசியலுக்கான சாவி ...

A healthy democracy requires a decent society; it requires that we are honorable, generous, tolerant and respectful. -Charles W. Pickering 

நேற்று 25.12.2010 மாலை டிஸ்க்கவரி புக் பேலஸில் நடைபெற்ற சுரேகாவின் "நீங்கதான் சாவி " புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். போகும் வழியில் எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியின் ஏற்ப்பாட்டில் பெரியாருக்கும். எம்.ஜி.ஆருக்கும் வீரவணக்க கூட்டம், சீமான் தலைமையில் நடைபெறுவதாக மேடை அமைக்கப்பட்டு , விளம்பரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. புத்தக வெளியீடு முடிந்தபின் இங்கு வந்து பேசுவார் என்பதால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என நினைத்துக்கொண்டே புத்தக வெளியீட்டு விழாவுக்கு போனேன். அங்கு பதிவர்கள் மணிஜி, அதிஷா, லக்கி, மயில்ராவணன்,வாசு, மணிகண்டன், நர்சிம், சுகுமார், ரமேஷ்வைத்யா, பெஸ்கி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே புத்தக வெளியீட்டு விழாவுக்கு சீமான் வர தாமதம் ஆகவே, அண்ணாசாலையில் நடைபெற்ற மனுஷ்யபுத்திரன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். பெஸ்கியும், தம்பி சாமிதுரையும் மட்டும் கடைசிவரை இருந்தனர். சீமான், நாம் தமிழர் கட்சியின் தோழர் ஒருவருடன் மட்டுமே வந்து ஆச்சர்யப்படுத்தினார். புத்தகத்தை வெளியிட்டு ஐந்து நிமிடங்கள் அதனைப்பற்றி சிறப்பாக பேசினார். அப்போது தமிழ்வனம் பதிப்பக உரிமையாளர் காந்தி அவர்களின் இரண்டாவது மகன் ரிஷி சீமானிடம் "இறையாண்மை என்றால் என்ன மாமா? "என்று கேட்டான். சிரித்தவாறே தெரியலயே என்ற சீமான் அதனைப்பற்றி மிகசிறந்த விளக்கம் ஒன்றை சொல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பிவிட்டார்.

நாங்களும் விடைபெற்றுக்கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும்போது போலீசார் எங்களை திசைமாற்றி விடவும், ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தே வந்தோம், அப்போதே நல்ல கூட்டம் இருந்தது, நேரம் ஆக ஆக சாலையின் மூன்று பகுதிகளையும் கூட்டம் நிரப்பியது, வந்திருந்த அத்தனை முகங்களிலும் சீமான் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்ததை காண முடிந்தது. முதலில் புரட்சிப்பாடல்களை மேடையில் நிகழ்திக்காட்டினர். அடுத்து எல்லோருக்கும் வீரவணக்கம் செலுத்தியபின் ஒன்பது மணிக்கு சீமான் தன் உரையை துவக்குவார், எனவே பேசவரும் அத்துணை பெரும் அதனை அனுசரித்து பேசும்படி கேட்டுகொள்ளப்பட்டார்கள். இந்தக்கூட்டம் பற்றி கேள்விப்பட்டு கேரளாவில் இருந்து நால்வர் வந்திருந்தனர். முதலில் பேசவந்த அனைவரில் வேலு பிரபாகரன் மட்டும் தன் நீண்ட உரையால் மக்களை நெளியவைத்து அதற்கடுத்து பேசவந்தவர்களின் நேரத்தையும் எடுத்துக்கொண்டு விட்டதால், அதன்பிறகு வந்தவர்கள் மிக சுருக்கமாக பேசி அமர்ந்தனர். பேசியவர்களில் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது காங்கிரசார் பீகாரைபோல் தமிழகத்தில் தனித்து நிற்கமுடியுமா? என சவால் விட்டார். அடுத்து பேசிய கோட்டைகுமார் என்கிற சினிமா தயாரிப்பாளர் சோனியா , கலைஞர் இருவரையும் ஒரு பிடி பிடித்தார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி ரேவதி நடராஜன் இது கீழ்வெண்மணி படுகொலையின் நினைவு நாளும் என சொல்லி சீமான் பின் அனைவரும் நிற்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதன்பின் சீமான் சிறையிலிருந்தபோது அவருக்காக வழக்காடிய அனைவருக்கும் நன்றி சொல்லியபின் சீமான் பேச அழைக்கப்பட்டார்.

சீமான் சிறையிலிருந்து வெளியே வந்தபின் நடக்கும் முதல்கூட்டம் என்பதால் கூட்டம் மொத்தமும் சீமான் பேச வந்ததும் ஆர்பரித்து உற்சாகம் எழுப்பியது. சீமான் தந்தை பெரியாரை பற்றி சுருக்கமாக பேசிவிட்டு எம்.ஜி.ஆரை பற்றி பேச ஆரம்பித்தார். தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்புவரைக்கும் எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தது இல்லை என்றும், அவர் ஒரு மலையாளி என்று அவரை ஒதுக்கி வைத்திருந்தேன் என்றும், அதற்கு முக்கிய காரணமே கலைஞரின் பேச்சை சின்ன வயதில் இருந்தே முன்வரிசையில் அமர்ந்து கேட்டதுதான் என்றும், பிரபாகரனை தான் சந்திக்கும்போதுதான் எம்.ஜி.ஆர் தமிழனுக்காக சத்தமில்லாமல் செய்த அத்தனை தொண்டுகளை அறிந்ததாகவும் அது முதல் எம்.ஜி.ஆரை பற்றி தேடித்தேடி படித்தும், அவர் படங்களை பார்த்தும் அவரை நிராகரித்த பாவத்தை கழுவிக்கொண்டதாகவும், பட்டுகோட்டயாரின் பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் திரையில் நேர்மையாக பயன்படுத்திகொண்ட விதம் பற்றி பேசினார். சீமான் மீது பொதுவாக அனைவரும் வைக்கும் குற்றசாட்டு அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர் மேலும் அவர் இந்தியாவின் பிரச்சினைகளை பற்றி பேசாமல் ஈழத்தை பற்றி மட்டுமே பேசுகிறார் என்பதாகும். இந்தகூட்டத்தில் எம்.ஜி.ஆரை பற்றி பேசி முடித்ததும் அவர் இந்தியாவின் இறையாண்மை இன்றைய ஆளும் வர்க்கத்தால் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டு வருகிறது என பட்டியலிட்டார். காங்கிரசையும், அதற்கு துணைநிற்கும் தி.மு.க வையும் கடுமையாக சாடினார். காங்கிரசுக்கு கலைஞரை விட சிறந்த அடிமை இல்லை என்பதையும் அதற்கு காரணம் என்னவென்பதையும் சொன்னபோது கூட்டம் வெகுநேரம் கைதட்டியது. வருகிற தேர்தலிலும் தான் அ.தி.மு.க வைத்தான் ஆதரிக்கபோகிறேன் என்றும், அப்படி ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது என்பதையும் விளக்கினார். அடுத்து முழு மூச்சாக கலைஞரை விளாசினார். அது யார் காதுக்கு எட்டியதோ போலீசார் வந்து நேரமாகிவிட்டதால் கூட்டத்தை முடிக்குமாறு சொல்லவே, கூட்டம் மொத்தமும் போலீசாரை திட்டியது. ஆனால் சீமானோ அவர்களை ஒன்றும் சொல்லவேண்டாம் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என கூட்டத்தை அமைதிபடுத்தி இன்னும் ஐந்து நிமிடத்தில் முடித்துகொள்வதாக போலீசாரிடம் வாக்கு கொடுத்து அதன்படியே ஐந்துநிமிடத்தில் முடித்துக்கொண்டார். 

மொத்தகூட்டமும் சீமான் பேச்சை முழுவதுமாக கேட்டபின்தான் கலைந்தது. இந்த கூட்டத்தில் சீமான் பேசும்போது வெகு நிதானமாக பேசினாலும் தன் கருத்துகளை மிக ஆணித்தரமாக வைத்தார். சுமார் 25000 பேருக்குமேல் கூடியிருந்த கூட்டம் சீமான் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரு சான்று. சமீப வருடங்களில் பிரியாணி, குவார்ட்டர், ஆயிரம் ரூபாய், நாளிதழ்களில் கால், அரை, முழுபக்க விளம்பரங்கள் கொடுக்காமல் வந்த கூட்டம் இது. வந்த அத்துணை பெரும் ஒரு மாற்றத்துக்கான ஆவலை கொண்டிருந்தார்கள். கலைஞர் பற்றி பேசும்போதெலாம் கூட்டத்தினர் அடித்த கமெண்டுகள் அவர்மேல் எத்தனை வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதைக்காட்டியது. 

எனக்கிருக்கும் கவலையே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சீமான் தன் அரசியல் இருப்பை நிர்ணயம் செய்துகொள்ளவேண்டும் என்பதே. அதற்கு இப்போது தன்னுடன் இணைய வருகிறவர்களை சரியாக ஆராய்ந்து இணைத்துக்கொள்ளவேண்டும், ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் வந்து சேர்ந்தால் அவரின் நோக்கத்தை குலைத்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

காலம் நிச்சயம் அதனை சொல்லிவிடும் அவர் பத்தோடு பதினொன்றா? அல்லது ஒரு விடிவெள்ளியா? என்பதை என்றாலும் நேற்று அவருக்காக கூடிய கூட்டம் "ஒரு மாற்று அரசியலுக்கான சாவியாக" அவர் இருப்பார் என்பதையே காட்டியது.

38 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் வந்து சேர்ந்தால் அவரின் நோக்கத்தை குலைத்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. //

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//"ஒரு மாற்று அரசியலுக்கான சாவியாக" அவர் இருப்பார் //

Repeat

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சீமான்..மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய காலம்..

மாணவன் சொன்னது…

//எனக்கிருக்கும் கவலையே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சீமான் தன் அரசியல் இருப்பை நிர்ணயம் செய்துகொள்ளவேண்டும் என்பதே. அதற்கு இப்போது தன்னுடன் இணைய வருகிறவர்களை சரியாக ஆராய்ந்து இணைத்துக்கொள்ளவேண்டும், ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் வந்து சேர்ந்தால் அவரின் நோக்கத்தை குலைத்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. //

முற்றிலும் உண்மையான கருத்து அன்ணே, மிகச் சரியாக சொன்னீர்கள்

தினேஷ்குமார் சொன்னது…

கண்டிப்பாக சீமான் அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இன்று மக்களிடையே உண்மைதான் அண்ணா அவர் சிந்தித்து செயல் படவேண்டிய காலமும் இதுதான் அரசியல் கட்ச்சிகள் அவரை ஓட்டுக்காக மாற்றமுயலும் மாறாமல் பெரியாரின் கொள்கைகளுடனே களமிறங்குவார் என்ற நம்பிக்கை சாயவில்லை நம்மில் இன்றும் மாற்றம் காணுவோம்

ராஜ நடராஜன் சொன்னது…

”பகிர்வுக்கு” நன்றிங்ண்ணா!

முதல் முறையாக பாலிமர் தொலைக்காட்சியில் அலெக்ஸ் ஜெரால்டு என்ற கேள்வியாளரிடம் சீமான் தந்த பதில்களையும் காண நேர்ந்தது.

சீமான் கோபப்படுகிறார் என்கின்ற விமர்சனம் மாற்று அரசியலுக்கு சீமானை தமிழகம் அடையாளம் காட்டுகிறது என்று நம்புபவர்களாலேயே முன்வைக்கப்படுகிறது.சீமான் கோபப்படுகிறார் என்பதை நிச்சயம் அவர் முகபாவங்களும்,சொற்களும் காட்டிக்கொடுத்து விடுகின்றன.

அனைத்து நேரத்து கோபங்கள் எதிர்மறையான விளைவுகளையும் பிம்பத்தையும் உருவாக்கும் என்பதை சீமான் உணரவேண்டும்.

சுயநலமில்லாத மொழி,ஈழம்,கொள்கை,மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வான தொலைநோக்குப்பார்வை கொண்ட தன்னுடனான ஒரு குழுவையும்,நண்பர்களையும் சேர்ப்பது தற்போதைக்கு அவசியமான ஒன்று.

THOPPITHOPPI சொன்னது…

சீமான்; மாற்று அரசியலுக்கான சாவி ..."
------------------------------------

தலைப்பின் முடிவில் ஒரு கேள்விக்குறியை போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். நீங்களே வழிமொழிவது போல் ஆகிவிட்டது. இப்படித்தான் எங்கள் ஊரில் நித்யானந்தரை பற்றி பேசியவர்கள் இப்போது தலையில் முக்காடுப்போட்டு வெளியே வரவேண்டி இருக்கு.

தயவு செய்து மற்றவனை கூரை கூறி தனது பேச்சால் மக்களை கவர்பவனை மாற்று அரசியல்வாதி, சாவி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் இழந்தது அதிகம் கொஞ்சம் யோசித்து முடிவு எடுங்க.

Jerry Eshananda சொன்னது…

தலைப்பும்,செய்தியும் என்னை க்கவர்ந்தது,நம்பிக்கை வீண் போகாது.

பெயரில்லா சொன்னது…

”பகிர்வுக்கு நன்றிங்க"

Unknown சொன்னது…

ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் வந்து சேர்ந்தால் அவரின் நோக்கத்தை குலைத்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.//
சரியாக சொன்னீர்கள் அந்த பன்னாடைகளை சேர்த்தால் அது பத்தோடு பதினொன்றாகிவிடும். மேலும் மக்களுக்கு கொஞ்சம் நாட்டைபற்றி யோசிக்கிற மக்களை பற்றி கவலைப்படுகிற தலைவன் தவை சீமானுக்கு அந்த தகுதி இருப்பதையே அவருக்காக கூடிய கூட்டம் காட்டுகிறது.

Bibiliobibuli சொன்னது…

சீமானும் மாற்று அரசியலும்!!! சீமான் என்ற ஒற்றை மனிதர் மீது தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்புவோர் கொண்டிருக்கும் நம்பிக்கை ஜெயிக்கட்டும்.

சண்முககுமார் சொன்னது…

"சீமான்..மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய காலம்.."


சரியாக சொன்னிர்கள்


இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

செங்கோவி சொன்னது…

உண்மைதான்..சீமான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நேரம் இது.

----செங்கோவி
வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

தமிழ்க்காதலன் சொன்னது…

நல்ல பகிர்வு. நல்ல அலசல். உங்களின் தெளிவான பார்வை. சீமானை ஒரு மாற்றாக நினைக்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய அரசியலும், காலமும் தந்து விடும் என்றே நினைக்கிறேன். சீமான் இலங்கைத் தமிழர்கள் மேல் கொண்டுள்ள அன்பை அப்படியே தமிழக தமிழர்களிடமும், உலகத் தமிழர்களிடமும் காட்டுதல் நலம் பயக்கும் என்பது என் எண்ணம். நன்றி.

vinthaimanithan சொன்னது…

இரண்டு நாட்களுக்குமுன் ஜோதிஜி தளத்தில் சீமான் பற்றிய விவாதத்துக்குப் பின்னர் தீவிரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்... சீமான் என்கிற மனிதன் பற்றி...

எப்படி இருப்பினும் சரி, தற்போதைக்கு சீமானுக்கு வாழ்த்துக்கள் மனப்பூர்வமாக! அவரோடு கைகோர்ப்பதும் பின் தொடர்வதும் அவர் தெரிவு செய்யும் பாதையைப் பொறுத்தமையும்.

'ஜனநாயகக்' கடமையாற்ற எத்தனையோ பேய்களுக்கும் பிசாசுகளும் உண்டுகொழுக்கும் பெருச்சாளிகளுக்கும் வாக்களித்து இருக்கிறோம்.சீமானை ஆதரிப்பதால் ஒன்றும் குடிமுழுகிவிடப் போவதில்லை. ஆனால் அவர் ஜெயாவை ஆதரிக்கச் சொன்னால் யோசிக்க வேண்டும்...
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்த சாபக்கேட்டை எதிர்த்து தீவிரமாகத் தேர்தல் வேலை செய்யும் எண்ணம் எனக்கு இருக்கிறது...குறைந்தபட்சம் எங்கள் அருகாமையில் உள்ள தொகுதிகளிலாவது...

ஜோதிஜி சொன்னது…

விளம்பரம் இல்லாத கூட்டத்தின் மூலம் தான் சில பல மக்கள் விருப்பங்கள் விருட்சமாக வளரும்.

Thekkikattan|தெகா சொன்னது…

நல்ல கவரேஜ்! சுரேகா புத்தக வெளியீட்டு விழா நிறைவாக நடந்தேறியிருக்கிறது என்று அறிந்து கொள்ள முடிகிறது.

சீமான் கண்டிப்பாக மாற்று அரசியலுக்கான சாவியேதான். அவர் அனைத்து பிரச்சினைகளையிம் பேசி மென்மேலும் வளர்வார் என்று நம்புகிறேன்.

உண்மையான உணர்வோடு கூடும் கூட்டமே கடைசி வரைக்கும் நிற்கும் என்பதற்கு இந்த 25 ஆயிரம் மக்களே சாட்சி...

உமர் | Umar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன், அண்ணா சந்திக்க முடிந்ததா?

விந்தை மனிதன், நிலைப்பாடு ஆச்சர்யமாய் உள்ளது. வாழ்த்துகள்.

ரதி, தமிழக அரசியலின் அவலம்தான் இங்கே நம்பிக்கையாகவும், கூட்டமாகவும் மாறியுள்ளது.

இன்று நான் சென்றிருந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் எனக்கருகே அமர்ந்திருந்த பத்திரிகையாளர்கள் சீமான் குறித்துதான் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த சூழலில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனிக்க இயலவில்லை. சீமான் பற்றிய பேச்சு பரவலாகியுள்ளது. அது அவருக்கு ஆதரவோ, எதிர்ப்போ, ஆனாலும் இன்று அனைவராலும் தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்படும் ஒரு நபராகிவிட்டார்.

நசரேயன் சொன்னது…

காலம்(கோவி அண்ணன் காலம் இல்ல) தான் பதில் சொல்லணும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழ்மணம் நெம்பர் 2 பிளெஸ்க்கு வாழ்த்துக்கள்

கட்டுரை வழக்கம் போல் அருமை.

சீமான் இன்னும் மக்கள் செல்வாக்கு பெற உழைக்க வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

தகவல்களுக்கு நன்றி !

சக்தி கல்வி மையம் சொன்னது…

கண்டிப்பாக சீமான் அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.
இந்த பேச்சு mp3வடிவில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

சசிகுமார் சொன்னது…

//காலம் நிச்சயம் அதனை சொல்லிவிடும் அவர் பத்தோடு பதினொன்றா? அல்லது ஒரு விடிவெள்ளியா?//

யாரைத்தான் ஒழுங்காக அரசியல் செய்ய விட்டு இருக்கு இந்த சாக்கடை அரசியல்

ராஜன் சொன்னது…

கண்டிப்பாக சீமான் அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.

seeprabagaran சொன்னது…

தமிழக தேர்தல் அரசியலில் தமிழர்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுப்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப அண்ணன் சீமான் முயற்சிப்பது பாராட்டக்குரியதே. இருப்பினும் சீமான் என்ற ஒரு தனிநபரை நம்பி ஒரு இயக்கத்தை கட்டமைக்ககூடாது என்பது என் கருத்து.

சீமான் தலைமையில் சனநாயக முறையிலான பல்வேறு செயல் தலைமைகள் உருவாக்கப்படவேண்டும். சீமான் இல்லை என்றாலோ அல்லது அவர் ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டாலோ நாம் தமிழர் இயக்கத்தின் செயல்பாடுகள் எழுச்சியோடு முன்னெடுக்க இயக்கத்தில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

Rajan சொன்னது…

வரட்டும்! நல்லது நடந்தா சரி!

அன்புடன் நான் சொன்னது…

அண்ணன் சீமானிடம் நேர்மையான உணர்வாளர் அவரின் நேர்மையையும்... உணர்வயும் மக்கள்தான் தாங்கி பிடிக்க வேண்டும்.... அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,

உங்க பகிர்வுக்கு மிக்க நன்றிங்க செந்தில்.

ssk சொன்னது…

உணர்ச்சி பேச்சு தமிழனுக்கு பிடித்த ஒன்று. ஆனால் ஒன்றுக்கும் உதவாது. எந்த காரியமும் நடவாது. உதாரணம் வைகோ. வெட்டி பேச்சு பேசி நரம்புகளை துடிக்க வைத்து பிறகு செயல் என்று வரும் போது பம்முவது உணர்சியாளர்களின் பொதுவான குணம்.
சீமான் அடுத்த தேர்தலில் ஜெவுக்கு காவடி தூக்குவார் என்பது மிக அவலம். ஈழ மக்களின் அத்தனை சோகத்துக்கும் காரணம் பார்பான் மற்றும் காங்கிரஸ்.
தமிழர் மேல் உண்மை ஆர்வம் உள்ள சீமான் காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் அவர்களை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.
முதலில் இன எதிரி தோற்கடிக்க பட வேண்டும். அதனால் உணர்ச்சி பேச்சு பேசாமல் குறைவாக பேசி காரியத்தில் விவேகம் செலுத்தி செயல் பட, சீமான் நிச்சயம் ஒரு மாற்று சக்தி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கட்டுரை வழக்கம் போல் அருமை.

Rajaraman சொன்னது…

சீமான் = அடுத்த வைகோ

ஹேமா சொன்னது…

சீமான்...அக்கறையா அன்பா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் !

அன்பு சொன்னது…

சீமான் ஒரு சிறந்த போராளி, திமுக வை அகற்ற அதிமுக வோடு கை கோர்த்தால் அவரும் தமிழக அரசியலில் பத்தோடு ஒன்றாகிவிடுவார். இது காலம் நமக்கி காட்டும் உண்மை, நிதானித்து நிலையான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது....

அன்பு சொன்னது…

சீமான் ஒரு சிறந்த போராளி, திமுக வை அகற்ற அதிமுக வோடு கை கோர்த்தால் அவரும் தமிழக அரசியலில் பத்தோடு ஒன்றாகிவிடுவார். இது காலம் நமக்கி காட்டும் உண்மை, நிதானித்து நிலையான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது....

Unknown சொன்னது…

சீமான்; மாற்று அரசியலுக்கான சாவி ... அல்ல!!!

திமுக-காங்கிரசை வீழ்த்த அதிமுகவை ஆதரிப்பேன் என்று ஆரம்பத்திலேயே தள்ளாடும் சீமான் எப்படி மாற்று அரசியலை ஏற்படுத்துவார்? சீமான் சொல்வது போல வெறும் அரசியல் மாற்றம் என்பது வேலைக்காகாது... சமூக மாற்றத்துடன் கூடிய அரசியல் மாற்றமே இந்தியாவை காக்கும்! இனம் மொழி ஆகியவற்றை அரசியலில் புகுத்தியவர்கள் இப்போது ஜாதியையும் பண பலத்தையும் புகுத்தி விட்டார்கள்... அரசியல் தூய்மையாக இருக்க வேண்டுமானால் மதம், இனம், மொழி, ஜாதி மற்றும் பணபலம் இவற்றை அரசியலிலிருந்து அகற்ற வேண்டும்... அதற்கு சீமான் போன்றவர்கள் முதலில் சமூகப்பணியாற்ற வரவேண்டும்... இப்போது நமக்கு தேவை இன்னொரு அரசியல் தலைவரல்ல... சமூகப்பணிகளை முன்னெடுக்கும் பல சமூக சேவகர்கள்!!!

தாராபுரத்தான் சொன்னது…

சீமானாவது தப்பிக்கட்டும்.

ரோஸ்விக் சொன்னது…

எனக்குத் தெரிந்த அளவில் அவருக்கு நல்ல நோக்கங்கள் உண்டு. அதை அவர் செயல்படுத்தவும், செயல்வீரர்களை உருவாக்கவும் இன்னும் பல பாடுபட வேண்டும்.

பேச்சு பேசுவதை பலர் குறையாகக் கூறியுள்ளனர். அது தவறு. அதுதான் அவரது பலமும் ஆயுதமும். இந்த பேச்சுப் பேசாவிட்டால் இன்று அவரை அடையாளம்கூட தெரியாமல் போயிருக்கலாம். எத்தனையோ உணர்வாளர்கள் இந்தப் பேச்சு இல்லாமல், யாருக்கும் தெரியாமல், அவருக்கென்று ஒரு கூட்டம் சேராமல் காணாமல் போயிருக்கிறார்கள்.

காங்கிரசுக்கும், திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் ஓட்டுப்போடுவதை விட இவருக்கு ஒட்டுப்போடுவதில் ஒன்றும் தவறிருக்கமுடியாது. பெரும்கட்சிகள் இவரது செல்வாக்கைப்பார்த்தாவது கொஞ்சமேனும் அஞ்சும் நிலையாவது வரலாம்.

ரோஸ்விக் சொன்னது…

தெனாலிராமன் கதையில வரும் poonaikkup பால் ஊத்தும் பகுதி நினைவுக்கு வருகிறது.

அவன் பாலூத்துவான் இவன் பாலூத்துவான்னு சொல்லி எல்லாப் பயலுகளும் தண்ணி ஊத்துன கதையா...

நம்மளும், இப்போ அவனை ஆதரிக்கமாட்டேன்... அவன் ஆட்சியைப் புடிச்சிட்டு அதை சமத்தா நடத்திக்காட்டுனா அவனை ஆதரிக்கிறேன் என்பதும். அப்புறம் எப்படி சாமி அவன் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்?

திரும்பவும் சொல்றேன் இந்த கொள்ளை, கொலைக் கூட்டங்களான தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும், காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் வாக்களிப்பதைவிட சீமானுக்கோ, விஜயக்காந்துக்கோ வாக்களிப்பதில் எள்ளளவேனும் தவறில்லை.

podang_maan சொன்னது…

//அவரின் நோக்கத்தை//

அவரோட நோக்கம் என்னங்க? எனக்கு உண்மையிலேயே தெரியல.