31 மே, 2010

பதிவர்கள் - பயோடேட்டா

பெயர்                                   : பதிவர்கள்
இயற்பெயர்                        : 'எலக்கிய’ வியாதிகள் 
தலைவர்                             : தலைவரே என்று எல்லோரும் அழைத்துக் கொள்வதால், எல்லோரும்..
துணை தலைவர்கள்       : தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்கள்
மேலும் துணைத் தலைவர்கள்         : பாலோயர்கள்
வயது                                   : நடைவண்டி தேவைப்படும் வயது
தொழில்                              : மொக்கை போடுவது (உபதொழில்: க்ரூப் சேர்த்து உள்ளரசியல் செய்வது)  
பலம்                                    : தமிழ்மணம், தமிளிஷ்
பலவீனம்                            : தனிமனித தாக்குதல்
நீண்ட கால சாதனைகள்          : எங்களுக்கும் எழுத வரும்ல 
சமீபத்திய சாதனைகள்             : வெகுஜன ஊடகங்களால் கவனிக்கப் படுவது
நீண்ட கால எரிச்சல்                  : அநானி கமெண்ட் மற்றும் போலி டோண்டு வகையறா
சமீபத்திய எரிச்சல்                     : மொக்கை எழுதுபவர்கள் பிரபலம் ஆவது 
மக்கள்                                            : இணையத்தில் படிப்பவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு                            : ஒரு கணினி அல்லது லேப்டாப்
நண்பர்கள்                                    : ஓட்டு போடுபவர்கள்
எதிரிகள்                                        : எதிர் பதிவு போடுபவர்கள்
ஆசை                                             : பத்து லட்சம் ஹிட்டுகள் 
நிராசை                                         : ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது 
பாராட்டுக்குரியது                      : பதிவர் செந்தில்நாதனுக்கு நிதி திரட்டியது
பயம்                                : அரசியல் பதிவு போடுவதற்கும், அதற்கு பின்னூட்டம் இடுவதற்கும்
கோபம்                                        : சமூக சீரழிவுகள் பற்றி எழுதுபவருக்கு மட்டும் இருப்பது 
காணமல் போனவை              : சபை நாகரீகம்
புதியவை                                    : பதிவர் சங்கம் அல்லது குழுமம்
கருத்து                                        : நாம் பொது வெளியில் உபயோகிக்கும் வார்த்தை பிரயோகங்களை கேட்டு வருத்தப் படுகிறேன்..
டிஸ்கி                            : கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டியெல்லாம் ரொம்பப் பழசு... லேட்டஸ்ட் ட்ரெண்ட் ’யாரால ரொம்ப தூரத்துக்கு துப்ப முடியும்?’

பதிவுலகின் அரசியல்

கனவுப் பறவையொன்று 
எச்சமிட்ட 
விதை வளர்ந்து கனியாகி  
இன்றைய என் போதைக்கு 
ஊறுகாய் ஆனது..

புன்னகையை தவறவிட்ட ஒருவனின் 
தாயை 
அர்ச்சனை செய்த
வார்த்தைகளை பகிர்பவனிடம் 
இரண்டு மாத அறைவாடகை 
தர வேண்டும் 

பொதுக் கழிப்பிடத்தில் 
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு 
ஓடி ஒளிகிறேன்

எல்லாக் கோவில்களும் 
குறை தீர்க்கும் சாமிகளும் 
மீடியேட்டர் ஐயர்களும் 
வாசல் பிச்சைக் காரர்களும் 
என் 
செருப்பைக் களவாண்டவனின்
முகம் அறியாதவர்கள் 

மன வீட்டில் உலவும் 
புலி  ஒன்று 
பசிக்கு புற்களை மேய்கிறது 

கூடடையும் 
பறவைகள் அறிவதில்லை 
இரைக்கு காத்திருக்கும் 
பாம்புகளை....

29 மே, 2010

ஒரு தில்லாலங்கடி அரிசிக் கடத்தல்




நீங்கள் அடிக்கடி ரேசன் அரிசிக் கடத்தலும் அதைக் கண்டுபிடித்த செய்திகளும் படித்து இருப்பீர்கள், அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அரிசிக் கடத்தல் இது..


ஆந்திராவில் சில்கி என்ற பெயரிலும், கர்நாடகாவில் சோனா மசூரி என்ற பெயரிலும் விளையும் அரிசி நம் தமிழகத்தில் விளையும் பொன்னி அரிசி மாதிரியே இருக்கும். இதனை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு போடும் வரை தஞ்சை பொன்னி என்ற பெயரில் , அரபு மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன.

சன்ன ரக அரிசியான இதனை பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் நம் ஊர்க் காரர்கள் மட்டுமே பயன் படுத்தி வந்தனர், அவர்கள் வேறு அரிசி வகைகளை சாப்பிட மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் நம் மத்திய அரசு பாசுமதி அரிசி நீங்கலாக மற்ற அனைத்து அரிசி வகைகளுக்கும் ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. உள்நாட்டில் உணவு விலைகள் குறையாமல் இருப்பதற்கு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் அரிசியை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது. இதனைக் கண்டு சந்தோசப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

தடை விதிக்கப்பட்டவுடன் இந்த வகை அரிசிக்கான விலைகள் சிங்கப்பூரில் தாறு மாறாக ஏறிவிட்டது. பதுக்கி வைத்தவர்கள் மட்டும் கொள்ளை லாபம் பார்த்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து அரிசி கிடைக்காது என்று அங்கு உள்ள நம்மவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது தாராளமாக அரிசி கிடைக்க ஆரம்பித்தது.

எந்த அரிசி இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்டதோ அதே அரிசி பாசுமதி அரிசி என்ற முத்திரையுடன் உள்ள மூட்டையில் தாராளமாக கிடைக்கிறது.
நான் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தேன் அங்கு இதைப் பற்றி விசாரித்தபோது துபாய்க்கு கப்பலில் அனுப்பி அங்கிருந்து சிங்கப்பூர் வருவதாக சொன்னார்கள். அதிலும் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரிசி அங்கு தாராளமாக கிடைக்கிறது.

இப்படி கொள்ளைலாபம் பார்ப்பது யார்? ஏன் தடை செய்த மத்திய அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை? தடை செய்ததே இப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்கதானா? அப்படிஎன்றால் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? விடை தெரியா கேள்விகள்....

இந்திய அரசின் மெத்தனத்திற்கு இது ஒரு முக்கிய சாட்சி....

28 மே, 2010

பயோடேட்டா - சீனா


பெயர்                                            : சீனா
இயற்பெயர்                                 : மக்கள் சீனம்   
தலைவர்                                       : ஹு ஜிண்டவ் 
துணை தலைவர்                       : வேன் ஜியாபோ 
மேலும் துணை தலைவர்கள் :xxxxxxxxxxx  
வயது                                             : 4000 வருடங்கள் 
தொழில்                                        : எல்லாத்துக்கும் DUPLICATE தயார் செய்வது   
பலம்                                              :  மக்கள் தொகை 
பலவீனம்                                     : அறுபது சதத்துக்கும் மேல் வயதானவர்கள் 
நீண்ட கால சாதனைகள்     : அடக்கி ஆள்வது 
சமீபத்திய சாதனைகள்        : இந்தியாவின் காலடியில் வந்து நிற்பது
நீண்ட கால எரிச்சல்           : அமேரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் 
சமீபத்திய எரிச்சல்               : இந்தியா 
மக்கள்                                       : அடிமைகள்    
சொத்து மதிப்பு                       :  உலகையே விலை பேசும் அளவுக்கு 
நண்பர்கள்                                : அமேரிக்கா, மற்றும் இந்தியாவின் எதிரிகள்   
எதிரிகள்                                    : மனித உரிமை பேசுபவர்கள் 
ஆசை                                         : உலகின் தலைவன் ஆக  
நிராசை                                      : அருணாச்சலப் பிரதேசம் 
பாராட்டுக்குரியது                 : வியத்தகு முன்னேற்றம்  
 பயம்                                            : மற்றவர்களுக்கு வரவழைப்பது 
கோபம்                                       : தியனன்மென் போராட்டம், 
காணமல் போனவை            : மாவோ கொள்கைகள் 
புதியவை                                   : மற்ற நாட்டினர் சிரமப்பட்டு கண்டுபிடிப்பவை  
கருத்து                                        : சொந்த நாட்டிற்குள் விசா நடைமுறை கொண்டு வந்தும் மக்கள் ஏற்றுகொண்டது.. வியப்பளிக்கிறது..
டிஸ்கி                                         : ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளைன்னா ஒரு ஜோடி இரண்டு பெற்றோரை பராமரிப்பார்களா?

தேவதைக் கதைகள் " தமிழ்செல்வி" இரண்டாம் பாகம்


வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நேர்கையில் நிலைகுலைந்து போகாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் சுலபமாக எதிர்நீச்சல் போடமுடியும். ஆனால் தன் வாழ்வில் தீவிர நேர்மையை கடைபிடித்த அம்மா தன் மகனுக்கு நேர்ந்த கொடுமைகளால் தவித்துப் போனார். அன்று சரவணன் என்னிடம் சொன்னவற்றை நான் அச்சில் ஏற்ற விரும்பவில்லை.ஆனால் அதைக் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள். தன்னுடைய எல்லா சிரமங்களும் முடிந்துவிட்டன என நினைத்த அந்த தாயை நினைத்து அப்போது பெரிதும் கவலைபட்டேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெண் எடுக்கும்போது குடும்பத்தை பார்த்து எடு" கொடுக்கும்போது மாப்பிள்ளையை பார்த்து கொடு என்று" தவறான ஒரு குடும்பத்துக்குள் சரவணன் மாட்டிகொண்டுவிட்டான் எனத் தெரிந்தது. சரி நான் வேண்டுமானால் அவர்களிடம் சென்று பேசிப்பார்க்கவா  என்றேன். இல்லை அண்ணா, எல்லாம் முடிந்துவிட்டது, இனி பேசி பயன் இல்லை, நான் பிரிந்து விடவே விரும்புகிறேன் என்றான்.
இதற்க்கு என்ன பதில் சொல்வது என அன்று நான் குழம்பிபோனேன், சரி ஒரு ஆறுமாதத்துக்கு பிரச்சினைகளை விட்டு விலகு, அதன் பிறகு பேசுவோம் என்றான், ஆனால் மறுநாளே பிரச்சினை பெரிதானது, அவன் சென்று ஒளியும் இடங்களெல்லாம் விரட்டி சென்று அவனை தொந்தரவு செய்தனர், வேறு வழியே இல்லாமல் யாருக்கும் தெரியாமல் அவன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான்.


அவனைத் தேடி கண்டு பிடிக்க முடியாத அந்த கும்பல் பெங்களூரில் இவர்கள் தொல்லையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த அம்மாவையும், தம்பியையும் தேடிக் கண்டு பிடித்து அவர்கள் மேலும் வரதச்சினை கேஸ் போட்டு கைது செய்து சிறையில் வைத்தனர். தன் பிள்ளைகளை நேர்மையாக மட்டுமே வாழவேண்டும் என்று கட்டுபாட்டுடன் வளர்த்த அந்த தாய், தன் பிள்ளைக்காக ஒரு மாதம் சிறையில் வாடினார். எந்த குற்றங்களும் செய்யாத ஒரு அப்பாவி பெண்மணியை, குற்ற பின்னணி உள்ள ஒரு நபர் தன் அரசியல் மற்றும் பண செல்வாக்கினை பயன்படுத்தி சிறையில் வைத்தார். தன் பெண் வாழ்க்கையை இப்படி நாசமாக்க துணிந்த குடும்பத்தையும் அப்போதுதான் நான் பார்த்தேன்.


அருண்மொழி 

சிறை விட்டு வெளியில் வந்ததும் என் வீட்டில்தான் தங்கியிருந்தார், அப்போது அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் எனக்கு செய்த உதவிகளுக்கு நான் அம்மாவுக்கு வாழ்நாள் முழுதும் கடைமைப் பட்டுள்ளேன், அந்த சமயத்தில் என் மனைவி கருவுற்று இருந்தாள், சற்று பிரச்சினையான உடல்நிலையுடன் இருந்த என் மனைவியை தன் மகள் போல் பார்த்துக் கொண்டார், பிரசவ தினத்தன்று என்னிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது, மருத்துவமனையில் வைத்து 20000 ரூபாய் கொடுத்தார், என் இரண்டாவது மகன் அருண்மொழி எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தான் என்றால் அம்மா மட்டுமே காரணம். சில மாதம்  கழித்து தன் மற்றொரு மகன் சபரியுடன் சென்று தங்கிவிட்டார். இப்போதும் தன் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரே ஆறுதல் தியானம் மட்டுமே, இப்போது வாழ்க வளமுடன் அறக்கட்டளையில் துணை பேராசிரியர் ஆக இருக்கிறார், இப்போதும் பிரச்சினைகளுக்குள் தவிப்பவர்களை அரவணைத்து நல்வழிப் படுத்தி அவர்களின் துயரங்களில் பங்கு கொண்டு சேவையாற்றி வருகிறார். இந்த உலகம் எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே தீர்மானித்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை சம்பாதித்துகாட்ட வேண்டும் என்ற தணியாத கோபத்துடன் தம்பிகள் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.

நாளைக்கு அவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வருவார்கள், மீண்டும் அவர்களின் வாழ்வில் வசந்தம் மலரும். ஆனால் காலம் ஒரு தாயை இப்படி தடுமாற வைத்த வேதனையை அவர்களால் மறக்க முடியுமா என்றுதான் தெரியவில்லை.

தம்பிகள் சபரியின் மூலமும், தினேஷின் மூலமும் அம்மா மீண்டும் சந்தோசமாக வாழ்வார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்..

27 மே, 2010

தேவதைக் கதைகள் "தமிழ்செல்வி"

தன் திருமணத்திற்குபின் துயரங்களை மட்டுமே சுமக்கின்ற ஒரு தாயின் கதை இது.

அம்மாவின் மூத்த மகன் சரவணன் எனது பாசமிகு சகோதரன். நான் மதுக்கூரில் வாழ்க வளமுடன் அறக்கட்டளை மூலம் தியானம் பயின்றபோது அறிமுகமானான். நல்ல அறிவுத்திறன் மிகுந்தவன் என்பதால் இவன்மீது அப்போதே எனக்கு தனிப்பட்ட பிரியம் இருந்தது. மதுக்கூர் பஸ் நிலையம் அருகே இவர்களுக்கு சொந்தமான தேனிர் கடையில் எப்போதும் சிரித்த முகத்துடன் அம்மா வியாபாரம் செய்வார். அப்போது அம்மாவும், சரவணனின் தம்பிகளும் ஒன்றிரண்டு சந்திப்புகளுடன் என் அறிமுகம் நின்றுபோனது.

பின்னாளில் சரவணன் சென்னை வந்தபின் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நடக்கும். அப்போதெல்லாம் பரஸ்பரம் நலம் விசாரிப்போம். சரவணன்  வேலைக்கு போனபின்பு சிரமப்பட்டு தம்பிகளையும் படிக்கவைத்தான். அதில் ஒரு தம்பி சபரி வேலைக்கு போனபின்பு அம்மாவை தேனிர் கடையை மூடிவிட்டு தங்களுடனே வந்து இருக்க சொல்லிவிட்டனர். இந்த காலங்களில் அவர்கள் பெங்களூரில் இருந்தனர்.

எனக்கு தெரிந்தவரை இந்த காலகட்டங்களில் மட்டுமே அம்மா மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. சரி சரவணனுக்கு ஒரு திருமணத்தை நடத்திவிடலாம் என முடிவு செய்து, நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லும்படி என்னிடமும் சொன்னார்கள்.

சரவணனை பற்றி சொல்லவேண்டுமானால் எந்த குறையும் சொல்லமுடியாது. நல்ல குணம் , எந்த தவறான பழக்கமும் இல்லாதவன், மிகுந்த நேர்மையானவன். எனவே இவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக அமையவேண்டும் என நானும் பார்கிறவரிடத்தில் எல்லாம் சொல்லிவைத்தேன்.

அதன்பின் வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டான். அந்த நேரங்களில் நான் ஏற்றுமதி விசயமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால் சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை. இப்படி இருக்கும்போது அவன் என்னை தொலைபேசியில் அழைத்து அண்ணா இந்த ஞாயிற்றுகிழமை அவசியம் வீட்டுக்கு வாருங்கள் பெண் வீட்டில் இருந்து வருகின்றனர் நீங்கள் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்றான்.

நான் அன்று சரவணன் வீட்டிற்கு போனேன், பெண் வீட்டினர் மிகவும் அன்பாக பழகினர், எல்லோரும் சாப்பிட்டவுடன் பெண்ணின் அப்பா என்னோடு தனியாக பேசினார். மாப்பிள்ளை  சரவணன் வரதச்சினை எதுவும் வேண்டாம் என்கிறார், நான் ஒரு பெண்தானே வைத்திருக்கிறேன் அதனால் தயவு செய்து நானாக செய்வதையாவது வாங்கிகொள்ளசொல்லுங்கள் என்றார். நான் சரவணனை அழைத்து ஏன்பா பிரச்சினை பண்றே, அவர்களாக செய்வதை செய்யட்டும், அவர்கள் பெண்ணுக்குத்தானே செய்கிறார்கள் அதனால் மறுக்கவேண்டாம் என்றேன். அவனோ அண்ணே உங்களைபார்த்துதான் நான் வரதச்சினை வாங்ககூடாது என முடிவு செய்தேன். அண்ணியை திருமணம் செய்யும்போது நீங்கள் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என மறுத்தது எனக்கு தெரியும். சரி உங்களுக்காக ஒத்துகொள்கிறேன், ஆனால் கடன் எதுவும் வாங்காமல் கையில் இருப்பதை மட்டும் செய்ய சொல்லுங்கள் என்றான். அதன்பின் கிளம்பும்போது அடுத்தவாரம் நிச்சயம் வைத்திருக்கிறோம் அண்ணியுடன் கட்டாயம் வாருங்கள் என வழியனுப்பி வைத்தான்.

அடுத்தவாரம் நிச்சயத்துக்கு அவன் கூப்பிடவில்லை, சரி வேலைபளுவில் மறந்திருப்பான் என விட்டுவிட்டேன். திருமண அழைப்பிதழ் எனக்கு மெயிலில் வந்தது. போன் செய்து விசாரித்தேன். மிகுந்த வேலைகளுக்கு இடையில் நேரில் வர இயலவில்லை. திருமனத்திற்கு அவசியம் அண்ணியுடன் வந்துவிடுங்கள் என்றான். சரி தம்பி வேலையை பாருங்கள் கட்டாயம் வருகிறேன் என்றேன்.

முதல்நாள் வரவேற்பிற்க்கு சென்றிருந்தேன், மண்டபம் களை கட்டியிருந்தது. சரவணன், சபரி, தினேஷ் மூவரும் அன்புடன் வரவேற்றனர், அம்மாவும் சந்தோசமாகத்தான் இருந்தது. நான் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு வரவேற்ப்பு நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தேன். மேடையில் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள் என்னுள் மெல்லிய கவலையை உண்டு பண்ணியது.

வீட்டிற்கு வந்தவுடன் தம்பி குமாரும், காமாட்சியும் வரவேற்ப்பு நல்லபடியாக முடிந்ததா எனகேட்டனர். ஆம் என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பாடு செய்யும்படி காமாட்சியிடம் சொன்னேன், ஏங்க கல்யாண வீட்டில் சாப்பிடலையா என்றாள். இல்லம்மா மனசு சரியில்ல அதனால் சாப்பிடமால் வந்திட்டேன் என்றேன். என்னங்க யாரும் சரியாய் கவனிக்கலையா? நீங்கதான் அத பத்தியெல்லாம் நெனைக்க மாட்டிங்களே என்றாள். அப்படியெல்லாம் இல்லை, எனக்கு சரவணனை நினைத்துதான் கவலை, ஏனென்றால் அந்தபெண்ணை இன்றுதான் பார்த்தேன் அவள் ஆண் தன்மையுடைய பெண், அவளுக்கு பெண் தன்மையுடைய ஒரு ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். ஆனால் சரவணன் யாருக்கும் கட்டுபடாதவன் இருவருக்குள்ளும் எப்படி ஒத்துபோகும் என நினைத்தேன் அதான் மிகுந்த கவலையை அளிக்கிறது என்றேன். சரி நாளைக்கு எத்தனை மணிக்கு திருமணத்துக்கு போகவேண்டும் என்றாள், இல்லம்மா போகவேண்டாம், எனக்கு மனசு சரியில்லை என்றேன். சரவணன் தப்பா எடுத்துவாருங்க நீங்க மட்டுமாவது போயிட்டு வாங்க என்றாள். சரி பார்க்கலாம் என சொல்லிவிட்டு தூங்கபோய்விட்டேன் மறுநாள் நான் போகவும் இல்லை.

அதன்பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து சரவணனிடம் இருந்து அழைப்பு வந்தது. அன்று அவன் பேசியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அதனை அடுத்து  எழுதுகிறேன்

25 மே, 2010

யார் குற்றவாளி ?



சில கொலைகள்
சில கொலை முயற்சிகள்
சில கள்ளக் காதல்கள்

தினசரி வாசிப்பவன் காதில் ஊரும் 
கற்பனை எறும்புகள்..


கொலைக்கான காரணங்கள் அலசி 
களவு போன கற்பு பற்றி 
விற்பனை பெருக்க, நல்ல பெண்களையும் 
விபச்சாரி ஆக்கும் 
வாரப் பத்திரிகைகள் சில ..

ஈழத்தில் கொல்லப் பட்டவருக்கு 
இரங்கற்பா பாடியும் 
நித்தியின் பஞ்சனை 
சித்திகளைக் காட்டியும் 
மூன்றாம் கண் வாழ்க்கை ..

சிறையில் கிடைக்கிறது 
செல்போன்
கஞ்சா 
இன்னபிற சமாச்சாரங்கள் ..
படித்து பார்ப்பவன் 
இன்னும் கூடுதலாய் சில 
கொலைகள் செய்வான்..

நான்காம் தூண் மட்டும் 
என் செய்வார்கள் ...?
காசுக்கு வேசம்
வேசிக்கு காசு ... 



23 மே, 2010

நினைவோ ஒரு பறவை ..


நள்ளிரவில் பின்தொடரும் பேய்க் கதைகளாய் 
நீ மறந்த என் கவிகளில் வழிகிறது காதல்..

சிறு தூறல் மண்வாசமென 
மனப் பிம்பங்களின் 
நேசமிகுதி உன்னைப் போலவே பார்க்கும்
உருவங்களில் தெரிகிறது.
தேவதை போலவும், பிசாசை போலவும் ..

மது ராத்திரிகள் விடியும் நேரத்தில் 
மறக்காமல் வந்து விடுகிறாய் 
நீயும், சில பிசாசுகளும்..

அறியப்படாத நபர்களின் மரணமாய் 
உன் திருமண நாள் எனக்கு,
கரி நாள்..

உன் கணவனுக்கும் இருக்கலாம் 
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...

நினைவின் ஓட்டைகள் வழியே 
வழியும் மதுவை குடிக்கும் 
சிறகை இரவல் கொடுத்த பறவை,
போதையின் உச்சத்தில் எழுதிகொண்டிருக்கும்,
பிசாசுகளின் கவிதை ...

22 மே, 2010

குஷ்பு - புதிய பயோடேட்டா


குஷ்பு பற்றி ஏற்கனவே ஒரு பயோடேட்டா போட்டிருக்கிறேன், இதுதான் சரியான பயோடேட்டா ....

பெயர்                                            : குஷ்பு 
இயற்பெயர்                                 : இனி போஸ்டரிலும், கட் அவுட்டிலும் பார்க்கலாம்  
தலைவர்                                       : கலைஞர் 
துணை தலைவர்                       : ஸ்டாலினா? அழகிரியா?
மேலும் துணை தலைவர்கள் :xxxxxxxxxxx  
வயது                                             : தலைவியாகும் வயது 
தொழில்                                        : முன்பு சினிமா, டிவி , இனிமேல் அரசியல்  
பலம்                                              :  நடிப்பது  
பலவீனம்                                     : இனிமேதான் தெரியும் 
நீண்ட கால சாதனைகள்     : கன்னத்தில் குழி விழ சிரிப்பது 
சமீபத்திய சாதனைகள்        : தி.மு.க வில் இணைந்தது 
நீண்ட கால எரிச்சல்           : கிசு கிசு 
சமீபத்திய எரிச்சல்               : ஜாக்பாட்
மக்கள்                                       : தி .மு.க வினர்    
சொத்து மதிப்பு                       :  இப்பதான் கட்சில சேர்ந்திருக்கோம் 
நண்பர்கள்                                : முன்பு சுகாசினி , கார்த்திக் , சத்யராஜ்,  இனி ராமதாஸ், திருமாவளவன்  
எதிரிகள்                                    : ஜெயலலிதா,விஜயகாந்த் 
ஆசை                                         : காங்கிரஸ் 
நிராசை                                      : பிரபு  
பாராட்டுக்குரியது                 : பிரச்சினைகளை தாங்கியது 
 பயம்                                            : இனிமே தேவையில்லை 
கோபம்                                       : அதெல்லாம் சினிமாவில் மட்டும் 
காணமல் போனவை            : கருத்து சொல்வது 
புதியவை                                   : அரசியல் மேடைகள்  
கருத்து                                        : நீங்க ஜெயலலிதாவ எதிர்த்து நிப்பேன்னு சொல்றீங்களே, அவங்க குணம் தெரிஞ்சுமா? 
டிஸ்கி                                         : கனிமொழியும் , தமிழச்சியும் உங்களை வரவேற்கவில்லையே.. ஏன்னு சொல்வாங்களா?

20 மே, 2010

பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?)

சென்னை மாநகரப் பேரூந்தின் அன்றாடப் பயணி 
ஒருவன் சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை 
உணர முடியாத நடுத்தர வாசியின் ஷேர் ஆட்டோ 
பயணத்தின் அடைசலில் சிக்கி இறங்கியபின் உடை கலைந்த 
வருத்தங்கள் பற்றி கவலைப் பட தேவையற்ற கார் 
வைத்திருப்பவனின் அலுவலக நேரம் முடிந்தபின் 
பாருக்குப் போகும்பொது மனப்பாடம் செய்த பொய்யை 
சொல்ல வேண்டிய அவசியமற்ற பணக்கார முதலாளியின் 
விமானப் பயணத்தில் தாமதம் அறிந்தும் கவலை கொள்ளாத
வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுக்கும் மரபணு மாற்ற 
விதையை பயன்படுத்தும் ஒரு அப்பாவி ஏழை விவாசாயியின் மகனாகிய 
நான் சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலை தேடி..

19 மே, 2010

தமிழன் - பயோடேட்டா

பெயர்                                   : தமிழன் 
இயற்பெயர்                : திராவிடர்கள் 
தலைவர்                            : அரசியல் தலைவர்கள், சினிமா ஹீரோக்கள்.. 
துணை தலைவர்       : சாதி தலைவர்கள் 
மேலும் துணைத் தலைவர்கள் : லோக்கல் தாதாக்கள் 
வயது                                   :  கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மூத்த குடி ... (எப்பூடி)
தொழில்                           : சினிமா மற்றும் சீரியல் பார்ப்பது, டீக்கடையில் அரசியல், பாராட்டு விழா எடுப்பது, நடிகைக்கு கோவில் கட்டுவது,  
பலம்                                     : உலகம் முழுக்க பரவியது  
பலவீனம்                          : சினிமாவில் தலைவனை தேடுவது , தனித்தனியாய் செயல்படுவது
நீண்ட கால சாதனைகள் : யாதும் ஊரே யாவரும் கேளிர் 
சமீபத்திய சாதனைகள் : காசு வாங்கிட்டு ஒட்டு போடுவது 
நீண்ட கால எரிச்சல்       : ஆங்கிலம் பேசுபவர்கள் 
சமீபத்திய எரிச்சல்            : இருட்டில் ஒன்னும் தெரியல 
மக்கள்                                          : தமிழ் பேசும் அனைவரும் ?.. 
சொத்து மதிப்பு                     : ஒரு கலர் டிவி-யும், 20 கிலோ அரிசியும் 
நண்பர்கள்                               : கடன் கொடுப்பவர்கள் 
எதிரிகள்                                    : பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் 
ஆசை                                           : வெளி நாட்டு வேலை 
நிராசை                                     : எனக்கு டிவி கிடைக்கல 
பாராட்டுக்குரியது         எல்லோரையும் நம்புவது 
பயம்                                  நமக்கெதுக்கு வம்பு 
கோபம்                                       : சொரணை உள்ளவனுக்கு இருக்க வேண்டியது  
காணமல் போனவை  : தமிழில் பேசுவது  
புதியவை                                 :  யாருக்காவது சொம்பு தூக்குவது  
கருத்து                                        : சாமியாரோ, சினிமாக்காரனோ, அரசியல்வாதியோ ஒரு தலைவன் தேவை 
டிஸ்கி                               : பக்கத்துல இன அழிப்பு நடந்தபோது எதைபற்றியும் கவலைப் படாமல் சீரியல் பார்த்தவர்கள் நாங்கள்..

18 மே, 2010

தாய்மையுடைத்து ..

புனிதர்களின் சந்தேகங்கள் தீர்க்கமானவை
பழய மொந்தையில் புதிய கள்
தலையாட்டு, பின் பற்று, 
பற்றுகள் இருந்தால் எழுதிவை .

அயோத்தியின் தீ 
சீதையை  சலவை செய்து 
ராமனை அழுக்காக்கியது,
கறைபட்ட கணவனால் கைவிட்ட 
காரிகை ஒற்றைத் துணியுடன் ,
இழுத்து வாவென்றவன் கொடையாளி.

பதி, வதியின் காதல் கொன்ற 
மதி கெட்ட மன்னன்.,மெரினாவில் 
பார்த்தால் மிரட்டிவை என்றான்.

அமாவாசை, பவுர்ணமி 
அலையும் மனதின் கூச்சல் 
பைத்தியம் என்று பெயரிடு.

மார்க்கம் சொன்ன மார்க்கம் 
கணவனின் மனைவிமார்கள்,

பாதிரிமார்கள் புனிதர்கள், 
இன்னொரு மீட்பன் வருவான்
கன்னியாஸ்த்ரீகளின் கருப்பையில் 
பிறப்பெடுக்க.

ஆதி சிவன் பாதி தந்தான்
பெண்மை தாய்மை..
கொண்டாடி கொன்று போடு...

எம்.எல்.ஏ எப்ப சாவான்



















காற்றில் ஏறி விண்ணை சாடும் வீரர்கள்  நாங்கள் 
திரைகளில் காதல் செய்ய, சண்டை போட, பாசம் வைக்க 
எமக்கான  பிம்பங்களாய் அவர்கள்,
பிரதி உபகாரமாய் போஸ்டர் ஒட்ட, பால் ஊற்ற
நாங்கள் 
இந்த மக்களை அவர்களின் துயரத்திலிருந்து மீட்கும் மீட்பராக 
அரசியல் அவதாரம் எடுப்பார்கள் அவர்கள்,
மீட்பருக்கு துணை நிற்கும் ஆடுகள் நாங்கள் ,
பிறந்த நாளோ, இறந்த நாளோ 
ஊரெங்கும் அவர்களின் பாடல்கள் 
செலவு மட்டும் எங்களோட ..
ரத்தத்தின், ரத்தமான 
உயிரின் உயிரான வார்த்தைகளுக்காக 
உயிரையும் எடுப்போம்,கொடுப்போம் 
குடும்பம், பிள்ளை குட்டிகள், உறவினர் படை சூழ 
வளமாகவே வாழ்கிறார்கள் அவர்கள்,
இன்னும் திரை அரங்குகள், தொலைக்காட்சி பெட்டிக்குள் 
இருந்து வெளிவரவில்லை நாங்கள். 
இப்போதைய எதிர்பார்ப்பு, தேவை  
எங்க தொகுதி எம்.எல்.ஏ எப்ப சாவான் ..

17 மே, 2010

மே - 18 முடிவும், துவக்கமும்


ஒருவன் புதுக் கட்சி துவங்கினான் 
ஒருவன் புதுநாடு கண்டான் 
ஒரு சிலர் பொதுக் கூட்டம் போட்டனர் 
ஒரு சிலர் இரங்கற்பா பாடினர்
ஒருவன் தலைவன் இருக்கிறான் என்றான் 
இன்னொருவன் இல்லை என்றான் 
முள்வேலி முகாமுக்குள் இருப்பவன் 
இன்னொரு நாளே என்றான் 
புலம் பெயர் வாழ்பவன் 
நம்பிக்கை கூடவோ, குறையவோ 
செய்யுது என்றான் 
போக்கத்த பயலுகள் டாஸ்மாக்கிலும் 
பாராட்டு விழாவிலும் பிசி ஆனான்கள் 
ஒரு பேடி கவிதை சொல்கிறேன் .

ROBIN HOOD - ஆங்கிலப் படம்


இது ராபின் ஹூடின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய கதைஅதாவது ராபின் ஹூட் ஆவதற்கு முன்அதை சரியாக செய்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சரியான நடிகரைஒரு சரியான இயக்குனர்மோசமான திரைக்கதையால் வீணடித்து விட்டார்அதுவும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நம் ஆயிரத்தில் ஒருவன் அளவு கூட இல்லை( நம்மாளுங்க ஜோரா கை தட்டுங்க)இத இந்திய மொழிகள்ல டப்ப போறாங்களாம்டிவி க்கு உதவும்மற்றபடி ஹாலிவுட்டுக்கு உரித்தான பிரமாண்டங்கள் உண்டுபாராட்டும்படி ஒரு அம்சம் கூட இல்லையா? இருக்கு .. அது அம்சமான கதாநாயகிக்கும்நாயகனுக்கும் மெல்ல அரும்பும் காதல், அருமை. ராபின் ஹூட் ஏன் மாறினான் என்பதற்கான சரியான விளக்கம் முன் வைக்கப்படவில்லை, ஒரு புரட்சியாளனாக தோன்றிய ராபின் ஹூடின் சிறுவயது வாழ்க்கை படத்தில் சிறிய புகை கனவுகளால் நிரப்பியிருப்பது போதாது, இங்கிலாந்து மன்னனின் சகோதரனாக நடித்திருப்பவர், நன்றாக செய்திருக்கிறார், அது போலவே அந்த கண் தெரியாத பெரியவர் பாத்திரம் நமக்கு அனுதாபத்தை தருகிறது.

 RIDLEY SCOTT : ALIEN, LEGEND, GLADIATOR, AMERICAN GANGSTER போன்ற படங்களை இயக்கியவர்இந்த படத்தை அவரின் உதவியாளரைக் கொண்டு இயக்கியுள்ளார் என நினைக்கிறேன். சொதப்பல் திரைக்கதைகிலடியேட்டரில் இருக்கும் உயிரோட்டம் இந்த படத்தில் சுத்தமாக இல்லைதமிழ் சினிமா பார்த்து கேட்டுப் போய்விட்டார். தயாரிப்பும் இவரேரஸ்ஸலுடன் சேர்ந்து .. செலவு US$474 MILLION.


 RUSSELL CROWஎனக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவர் நடித்த அநேகம் படங்களை பார்த்திருக்கிறேன்அசாத்தியமான நடிப்பில் நம்மை கவர்ந்தவர்இந்த படத்தில் இவரின் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். அப்புறம் அடுத்த படத்தில் பாப்போம் தல..


 CATE BLANCHETT: படத்தில் நம்ம தலையை தூக்கி சாப்பிட்டுவிட்டார்இவரை மைய்யமாக கொண்டு ஒரு திரைகதை செய்திருந்தால் நன்றாக வந்திருக்கும்காட்டுவாசிகள் தங்கள் உழைப்பை திருடும்போது வருகிற கோபம்நாயகன் மீது மெல்ல அரும்பும் காதல்வில்லன் ஆள் தன்னை நெருங்கும்போது காட்டும் வீரம்தன்னைக் காப்பாற்றிய காட்டு வாசிகளிடம் காட்டும் கருணை, இவரின் முந்தைய படங்களை போலவே, இந்த படத்திலும் தனித்தன்மையுடன் நடித்திருக்கிறார்.


MARK STRONG: இவரின் நடிப்பும் பாராட்டுக்கு உரியது ரஸ்ஸல் அம்பு பட்டு கிழிந்த வாயின், தைத்த வடுக்கள் ( ஒரு காண்டத்தை ஒட்டியிருப்பார்கள்) மேக்-அப் செலவு இல்லை, படத்தில் இவரின் பங்கை சரியாக செய்திருப்பார், இவர் வில்லன், ஆனால் பிரான்ஸ் மன்னனின் கையாளாக காட்டியிருப்பார்கள்.


MARC STREITENFELD: படத்தின் கம்போசர், தேவையான இடங்களில் சரியான இசைக்கோர்வைகளை பயன்படுத்தி இருப்பார், படத்தின் இறுதியில் டைட்டில் போடுகையில் மெல்ல ஆரம்பித்து பரவும் இசை அற்ப்புதம்.




JOHN MATHIESON: ஒளிப்பதிவு இயக்குனர், படத்தில் இவரின் பங்கும் சிறப்பானதே, படத்தின் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருக்கும். கி.பி.1019 ல் நடக்கும் கதை களத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

மற்றபடி இப்படத்தின் கதை பற்றிய விரிவான தகவல்களுக்கு நண்பர் கனவுகளின் காதலனிடம் அனுப்பி வைக்கிறேன், மற்ற படங்களையும் விரிவாக விமர்சனம் செய்திருக்கிறார்.