1 அக்., 2014

இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போ!...

ஒரு கடைசி சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத்தெரியாமல் நாம் தயங்கிக்கொண்டிருந்தோம். நாம் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்க்க வேண்டிய ஒன்றை மவுனமாக ஏற்றுக்கொள்ள எது நம்மை பக்குவப்படுத்தியது அல்லது சிறுமைப்படுத்தியது என்பதான மன உளைச்சல் இந்த அதிகாலை குளிரிலும் வியர்வை சொட்டுகளாய் எட்டிப்பார்த்தது. காதல் உன்னதமானது என்றவனை புனிதனில் இருந்து பயித்தியக்காரனாய் உருமாற்றும் வித்தையும் காதலுக்குத்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.

நம் காதலுக்கு உறவு, பணம், ஜாதி என பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் இல்லாதது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? என கூதுகலித்தாய். உன்னை எனக்குள் முழுமையாய் கலந்த நாள் அது. சந்தர்ப்பங்கள்தான் எவ்வளவு அற்புதமானதும், அபத்தமானதுமாக மாறிவிடுகிறது. அன்று நீ மகிழ்ந்து சொன்ன அதே காரனம் இருந்தால் கூட சந்தோசமாக இருந்திருக்குமே!.

உறவுகள் சிக்கலானது என்பதை இத்தனை சிக்கலான தருணத்தில் நாம் உணரவேண்டிய அவசியத்தை காலம் கோரமாக செய்துமுடித்து விட்டது. எனக்கு அத்தை மகள் உறவென்பதால் நாம் உறவாடியதை ஊர் சுற்றியதை யாரும் கண்டிக்காமல் போனதும், எப்போதும் நான் உன் வீட்டில் பழியாய் கிடந்தபோது, உன் அம்மா என்னை மருமகனே என வாய் நிறைய அழைத்து மகிழ்ந்ததும், நாம் தனியறையில் தூங்கியபோதும் “படிக்கிற புள்ளைங்க, அதான் தொந்தரவு செய்யல” என வெகுளியாய் சொன்னபோதும். அது, நம்மை உடல்மொழியும் கற்றுக்கொள்ள வைத்துவிட்டது என்பதும். ஒரு காதலை இயற்கை எப்படியெல்லாம் கொண்டாடுகிறது பார்த்தயா? என கவிதையாய் சிரிப்பாயே ஒரு பூ மலர்வது மாதிரியான உன் சிரிப்பு பிரத்யோகமானது, எனக்கே எனக்கானது என இருமாந்து கிடந்தேனே. இனி எப்போதும் அது கிடையாது என்பதை எப்படி எதிர்கொள்வேன்.

நாம் அதிர்ந்துதான் போனோம். அன்றைய பொழுது எப்போதும் மறக்கமுடியாத நாளாக மாறித்தான் போனது. என் சித்தப்பாவும், உன் அக்காவும் காதலிக்கிறார்கள் என்று நம் வீட்டின் ஒரு விஷேச நாளில் எல்லோர் முன்னும் சித்தப்பா சொன்னபோது மொத்த குடும்பமுமே சந்தோசத்தில் ஆர்ப்பரிக்க, நீயும் நானும் உடைந்து நொறுங்கினோம். அவருக்கு தன் அக்காள் மகள் மேல் காதல் வருவது எதார்த்தம் கடந்த உரிமை என அறிவு சொன்னாலும் என் தந்தையைவிட நான் மதிக்கக்கூடிய, குடும்பத்தை இத்தனை வருடங்களாக தூக்கிச்சுமந்த, அதற்காக வெளிநாட்டில் எட்டு வருடங்களாக உழைத்து, இப்போதும் தனக்கு பணம் தேவைப்பட்டால் அப்பாவிடம் கேட்க தயங்கி, அம்மாவிடம் விண்ணப்பம் வைக்கும் மரியாதையில், பாசத்தில் உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அடுப்படியும், குமுதமும், விகடனும் தவிர்த்து இப்படி ஒரு பெண் உன் வீட்டில் இருக்கிறாள் என்பதே ஊரில் பல பேருக்கு தெரியுமா? என சொற்ப வார்த்தைகளால் தன் தினசரிகளை நகர்த்தும் உனது மூத்த சகோதரி மிக, மிக பொருத்தமானவர்தான்.

ஒரே வகுப்பில் தொடர்ந்து கல்லூரிவரைக்கும் பயிலும் நம்மை அவர்கள் காதலர்களாக எப்போதுமே பார்த்ததில்லை என்கிற உண்மை அப்போதுதான் நாமே உணர்ந்தோம். எப்போதும் சண்டைக்கோழிகளாய் திரிந்த நம் காதலை நண்பர்களே அறியவில்லை என்பதும், நமக்குள் எந்த தருணத்தில் அது பூத்தது என்பதே நினைவில்லை என்பதும் கூட இப்போதுதானே நினைவுக்கு வருகிறது!. கல்லூரி வாழ்க்கை முடிந்து வேலையும் கிடைத்துவிட்டது என உன் வீட்டில் வைத்து சந்தோசத்தில் ஆர்பரித்தபோது, ”இவளையும் கூட்டிட்டு போயிடேன், படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போவட்டும்”   என அத்தை கிண்டலடித்தபோது “ஏன், நானும் அவனோட போகத்தான் போறேன்” என்று கலகலவென சிரித்தாயே!. நான் போகிறேன்,சென்னையில் கிடைத்த வேலையை உதறிவிட்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கேம்புக்கு வேலைக்கு போகிறேன்.  இனி வரவே கூடாது என்கிற தீர்மானத்துடன் போகிறேன். நீ நிற்கிறாய், எப்போதும் பேசியே கொல்பவள், பேசாமல் நிற்கிறாய்!, இனி நீ என்ன ஆகப்போகிறாய்?, உறவுகளில் எப்படி வாழப்போகிறாய்?. நான் கோழை, உன்னை மட்டும் உறவுகளிடம் விட்டுப்போகிற கோழை.

எல்லாம் கண நேரத்தில் மாறிவிட்டது. நம் தற்கொலை குடும்பத்தின் நிம்மதியை நிரந்தரமாய் குலைத்துவிடக்கூடும் என்கிற உண்மையை உனக்கு புரிய வைப்பதே பெரும்பாடகிவிட்ட எனக்கு, எப்போது நாம் சந்திக்க நேர்ந்தாலும் உன் கண்கள் அணிச்சையாய் கலங்குவதை இனி என் வாழ்நாளில் நான் பார்க்கவே கூடாது. உன்னுடன் நான் வாழ்ந்த நிமிடங்கள் என் மீதி நாட்களுக்கு போதும். காலம் நம்மை மாற்றலாம், அல்லது மாற்றமில்லாத வாழ்வை விரும்பி வாழலாம். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. இனி எது நடக்கப்போகிறதோ!, அது ஒருபோதும் நன்றாக நடக்காது!. தத்துவங்கள் எப்போதும் பொதுவானவையாக இருப்பதில்லை.அழாதே என்று சொல்ல முடியவே இல்லை. இனி அது மட்டும்தான் உன்னை எப்போதும் ஆறுதல்படுத்தும் என்பதால். அழு... நான் விடைபெறுகிறேன்.

13 ஆக., 2014

இரவுகளின் இசை...

உலகில் பெரும்பாலோருக்கு இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என் போன்ற தனிமை விரும்பிகளுக்கு அது வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கைக்கு எதிராகவே  நீ எப்போதும் இருக்கிறாய் என்பான் நண்பன். அவனுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அது அவனை ஒரு நிறுவனத்தின் மேலாளராக உயர்த்த மட்டுமே உதவியது. தனிமை மிகப்பெரிய வரம், இரவும் அப்படித்தான். இரண்டும் ஒரு சேரக் கிடைத்தால் நாம் இறைவனாய் மாறலாம்.


ஊரில் இருந்தபோது காதலித்தவள் அகாலமரணம் அடைந்த இக்கட்டான தருணத்தில், நள்ளிரவில் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்வதுண்டு என்னைப்போலவே தனித்திருக்கும் பேய்கள் இருந்தால் அதனுடன் கொஞ்சம் அளவளாவி வரலாமே என்று தோனும். ஆனால் அப்போது பேய்களும் என்னை புறக்கணித்தன. மெல்லிய மதுவின் போதையில் என் தனித்த அழுகை வானுலகு சென்ற என் காதலியை ஒருபோதும் எட்டியதில்லை. ”தற்கொலை செய்து பார்க்கலாமா?” எனும் ஆர்வம் மேலோங்கிய காலம் அது. அப்போதே போயிருக்கலாம் இத்தனை அவலங்களை கடந்து வாழும் இப்பேய் வாழ்வுக்கு அது உத்தமம் என இப்போது புரிகிறது. ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையைப்போல் வாழ்வென்னும் அடர்ந்த இருள்படர்ந்த இக்காட்டை கடந்து வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு. சமீபத்தில் ஊருக்கு போனபோது அந்த சுடுகாட்டை சுற்றி நிறைய வீடுகள் இருந்தன.


சிங்கப்பூரில் இருந்தபோதும் தொடர்ந்து இரவு நேர வேலைகளை மட்டுமே விரும்பி செய்ததுண்டு. ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பேய் இருப்பதாக சொல்லி இரவு நேர வேலைக்கு யாரும் வருவதில்லை என்றபோது நான் அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக  தனியாளாக இரவு வேலை பார்ப்பேன். ஆனால் அங்கும் நானும், அப்பேயும் எங்கள் தனிமைக்குள் சந்தோசமாகவே இருந்தோம்.


எங்கு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் நண்பர்கள் இல்லாத தனித்த பயணங்களையே விரும்புவேன். எப்போதும் சகபயணியிடம் பேச விரும்பாத ஆள் நான். ஆனால் எல்லா பயணங்களும் அப்படி அமைந்து விடாது. சில நபர்கள் நம்மை வறுத்தெடுப்பார்கள். அப்படியான சில பயணங்களில் நான் வழியில் இறங்கி வேறு வண்டி மாறுவேன். சில சமயங்களில் மொத்த இரவையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் கழித்ததுண்டு. இரவு நேர பேரூந்து நிலையங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவக்களம். பலதரப்பட்ட பெரும்பாலும் ஏழ்மை பாரம் சுமக்கும் உன்னதமான மனிதர்களை சந்திக்கலாம். இங்கிருக்கும் இரவு நேர டீக்கடைகளில் விடிய விடிய இளையராஜா இசைக்க ஐந்தாறு டீயும் மனதிற்கு நெருக்கமான விலாசங்கள் தேவைப்படாத சில மனிதர்களும் வாழ்வில் எல்லோருக்கும் கிட்டாத ஒன்று.

சில வருடங்கள் முன்பு வரைக்கும் இரவு நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை செய்திருக்கிறேன். இரவை தன் சிறிய வெளிச்சங்களால் விரட்டிப்பாயும் வாகனங்கள். சில்லிடும் காற்று. வழியில் நிறுத்தும் காவலர்கள். சம்யங்களில் முகம் தெரியாத நபர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வழிநெடுக ஏதும் பேசாமல் கடைசியில் மனம் நிறைய நன்றிகளுடன் அவர்கள் விடைபெறும் தருணம். இவற்றை வயது காரணமாக இப்போது அனுபவிக்க முடிவதில்லை.

சில நெருங்கிய உறவுகளின் இறுதி நேரத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன்.


இருபதாவது வயதில் மாமா ஒருவர் தலையில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் 21 நாட்கள் கோமாவில் இருந்தார். அவரின் இறுதி நாளில் நான் மட்டுமே உடன் இருந்தேன். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவர் நினைவு திரும்பினார். அவரின் விழிகள் என்னிடம் எதுவோ சொல்ல ஆசைப்பட்டன. ஆனால் கண்ணீர் வழியும் அவரின் விழிகளில் என்னால் எதுவுமே படிக்க முடியவில்லை. இரவு 8 மணிக்கு அவர் இறந்து போனார். மறுநாள் காலை அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.


என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தான். பணி முடிந்து வீட்டிற்கு செல்லவேண்டிய ஒரு செவிலிய சகோதரி என்னுடன் அவன் அருகிலேயே இருந்தார். ”ஏன் வீட்டிற்கு செல்லவில்லை?” எனக்கேட்டேன். ”இல்லண்ணே மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றார். மேலும் தான் ஒரு நாத்திக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அறிவின் நீட்சியைத் தாண்டி இப்போது ப்ரார்த்தனை செய்யனும்போல இருக்கு என்றார். என்னதான் சாவுகளை விதம் விதமாக பார்த்திருந்தாலும் இப்படி சின்னப் பிள்ளைங்க சாகும்போது வாழ்க்கையே வெறுத்துப் போயிடுது என்றார். இவ்வளவு சிறிய வயதில் அவருக்கிருந்த நிறைந்த ஞானம் என் சோகத்தை நிதானப்படுத்தியது.

சென்ற வருடம் அப்பா தன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அவ்விரவின் விடியற்காலையில் அவரின் மூச்சு முற்றிலும் அடங்கியபோது ஒரு தனித்த அழுகுரல் மெல்ல மெல்ல எங்கள் வீட்டை பலரின் அழுகுரல்களுடன் அந்நாள் முழுதும் நிரப்பின. தன் வாழ்வை தான் விரும்பியபடி அவர் வாழ்ந்து முடித்திருப்பாரா? என்பதுதான் என் அப்போதைய கேள்வியாக இருந்தது.


இரவுகள் எப்போதும் ஆசானாகவே இருந்து என்னை வழிநடத்தட்டும்.

10 ஆக., 2014

இயக்குனர் ஆவது எப்படி?!... நெடுந்தொடர் அல்ல!!

திரைக்கதை எழுதுவது எப்படி?, உலக சினிமா, தமிழ் சினிமாவில் இலக்கியம்!, வாங்க சினிமா எடுக்கலாம்!, இப்படியாக ஏராளமான பேர் எண்ணற்ற தலைப்புகளில் புத்தகம் எழுதிவிட்டனர். ஒப்பு நோக்கினால் சுஜாதா போன்ற ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் சினிமாவில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது மாதிரியான சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் தமிழன் தனக்கான தலைவனை திரையில் இருந்தே தேர்ந்தெடுக்கும் அதாகப்பட்டது அட்டைகத்திகள் தேர்ந்தெடுத்த தெர்மக்கோல் கத்திகள் என  வரலாறு ஆணித்திரமாக நெஞ்சில் இறங்கிவிட்டதாலும், சென்னை நோக்கி படையெடுக்கும் லட்சத்தில் ஒரிருவர் குறைவாக மற்றவரெல்லாம் சினிமாவை காப்பாற்றும் உன்மத்தம் பிடித்தே வந்து சேர்கிறார்கள்.

சமீபமாக சமூக தளங்களின் உதவியாலும் தொழில்நுட்பம் தன் பரிணாம வளர்ச்சியை செல்போன் கேமராவரை கொண்டு வந்துவிட்டதாலும் சினிமா என்பது ரெண்டே நிமிடத்தில் அல்வா செய்வது எப்படி? என்பது மாதிரியான இன்ஸ்டண்ட் சமாச்சாரம் ஆகிவிட்டது. அதிலும் என்னை மாதிரி ஒலகத்தை புரட்டும் கடப்பாரை சுமந்தவர்கள் கூட அரசியல், சமூகம் என்பதை தாண்டி சினிமா விமர்சனம் எழுத வந்துவிட்டதற்கு ஒரு காரன காரியம் எனக்கு தனியாக இருந்தாலும், இருக்கிற அதிலும் எப்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர் என பழியாய் தவம் கிடந்து விரல் தேய்க்கும் முன்னூத்தி சொச்சம் (நெஜமாவே அவ்வளவு பேர்தான் தமிழில் இருக்காங்க) பேர்களையும் தாண்டி ஆதியில் தோன்றிய பதிவுலகில் இன்னும் விமர்சனத்தில் கேபிளின் இடத்தை இட்டு நிரப்ப  சிலர் முப்பது ரூவா திருட்டு டிவிடியில் (காசு கொடுத்தாலும் திருட்டு டிவிடிதான்) பாத்துட்டு படம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வருவதற்கு முதல் நாளுக்குள்ளாவது விமர்சனம் எழுதும் ரேங்கோளாறு ஆட்களும் உண்டு. அதிலும் ஸ்பீல் ஃபெர்க்கிற்கே யோசனை, இந்தப்படத்தை நான் இயக்கினால் என புதிய பரிணாமங்களில் விமர்சனம் எழுதும் திரை விமர்சன மேதைகளும், படம் பார்க்க போன கதைகளை தொகுப்பாக போடும் அளவுக்கு எழுதும் விமர்சனங்களும் நம்மை சினிமா எனும் மாயவலை எப்படியெல்லாம் வீசப்பட்டு அமுக்கப்படுகின்றன எனும் சொற்ப உதாரணங்கள் ஆகும்.

எங்களுடைய தலைவன் கேபிள் படம் இயக்கப்போகிறார்  என்றதும், அது வரைக்கும் கூடவே சுற்றிய செவ்வாழையாக இருந்த எனக்கு கண்டிப்பாக அவர் ஏதாவது வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்தது ஒரு குத்தமாங்க!?.  அப்பதான் தெரிந்தது கேபிள் ஒரு பாவப்பட்ட ஆத்மான்னு மனுசனுக்கு அண்டார்டிகாவிலிருந்து கூடவா ரெகமெண்டேஷன் வரும். நடிக்க, உதவி இயக்குனர் ஆக இன்னும் பலப்பலவாக தினம் நூறு வின்னப்பங்கள் அதற்கான பரிந்துரைகள் என பதிவுலகம், முகநூல் மற்றும் தெரிந்த தெரியாத ஆட்கள் அவரின் படத்தில் பணிபுரிய தவம் கிடக்க மனுஷன் ஒரே கார்க்கியை மட்டும் கூட வச்சுகிட்டு (அதில் பணியாற்றிய கோ டைரக்டர், உதவி டைரக்டர்கள் எல்லாம் அனுபவம் உள்ளவர்கள்) படத்தை எடுத்து முடிச்சுட்டார். பொறவு நான் எப்புடி வாய்ப்பு கேட்பேன். அதனால அவருக்கு இருக்கும் MAASS பாத்து எனது சகல மயிர்கால்களும் இயக்குனர் ஆகியே தீர்வது என லட்சியத்தின் உச்சத்தை நோக்கி நீண்டு விட்டது. என்ன அதற்குள்ளாகவே ஓடுறீங்க இன்னும் ஒரு பாரா மட்டும்தான் இருக்கு அதையும் படிச்சிருங்க அப்பதான் என்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை ஒங்களுக்கு புரியுன்றேன்.

அதாகப்பட்டது சுமாராக 2000 ஒலகப்படங்கள் பார்த்திருக்கிறேன். இப்பவும் கேபிள் மற்றும் சிவாவுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், என சகல மொழிப்படங்களையும் தினசரிக்கு ஒன்று எனும் ஆர்வகோளாறால் பார்க்கிறேன். அப்படியிருக்க உதவி இயக்குனராக பணியாற்ற வந்த நண்பர் ஒருவரின் சினிமா அனுபவம் என்னை ஆச்சர்யத்தின் நடு மண்டையில் கொட்டோ கொட்டோ என கொட்டி தீர்த்தது. அதாகப்பட்டதுங்க  படம் பார்க்கிற வழக்கமெல்லாம் அவருக்கு கெடயவே கெடயாதுங்க, எப்பயாச்சும் பொழுது போவலன்ன படம் பார்க்கிற குரூப்பாம் அவரு. அதிலும் ஒலகப்படங்கள் என்றால் ஜாக்கிசான் நடிச்சதுதானாம்!!!. சரி நீங்க எதுக்காக சினிமாவுக்கு வந்தீங்கன்னு கேட்டா “சொம்மா டைம் பாசுக்குதான்” னு சொன்னதும் அப்படியே ஷாக்காயிட்டேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் நம்ம பதிவுலக சக ஒருத்தரு சினிமா விமர்சனம் எழுதுனா இயக்குனர் ஆகலாம் என சொல்லிருந்தாரு. இப்ப டைம் பாசுக்கே இயக்குனர் ஆகலான்னு ஒருத்தர் சொல்றாரு. அப்ப இவ்ளோ படத்தையும் பார்த்த நான் இயக்குனர் ஆவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆகவே நண்பர்களே யாராவது படம் தயாரிக்க ஆசைப்பட்டால் உடனே அனுகவும்:
        


மன்னார் அண்டு கம்பேனி,
கவுண்டமணி - செந்தில் ஃஃபேன்ஸ் கிளப்,
கோடம்பாக்கம், சென்னை.
கிளைகள்: வட பழநி, தி.நகர், மாம்பலம்
தொடர்புக்கு : கப்பல் யாவாரி (மேனேஜர்)
                                            

22 ஜூலை, 2014

தனிமையின் இசை…

ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம் அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்று கொண்டிருந்தது. தனிமை எனக்கு மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளைக்கூட ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுபவன் நான். சொற்ப மதுவுடன் கூடிய தனிமை ஒரு வரம்.

வெளியே பெய்யும் பெருமழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது. இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம். அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடனான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையைப் பிடிக்கும் உத்வேகத்தை எனக்குள் அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடோடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது!.

ஒரு அசாதரனமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பரவாயில்லை எனச் சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள் வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. 
அதன்பின் சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும் சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது!. உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம். காதலை சொல்லமுடியாமல் தவிப்பது கூட விரும்பி அனுபவிக்கும் ஒரு சுகம்தான் என அப்போது தெரியவில்லை. காலத்தை தேவன் சுகமாக வைத்திருக்கிறான், சமயங்களில் அவன் பைத்தியக்காரனாகவும் மாறித்தான் விடுகிறான்.

ஒரு உச்சி வெயில் பொழுதில் உனக்கு வேலை மாறுதல் கடிதம் வந்த செய்தியை தோழி மூலம் அறிந்துகொண்டேன். மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாகப் பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுதுக் களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று உன் சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வதுபோல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம், திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.

இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால் அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்ததால், மாலையில் கடைத்தெருவுக்கு  சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர் கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும் என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள். உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.

மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.

25 ஜூன், 2014

வித் யூ.. விதவுட் யூ.. விமர்சனம் - (ஈழ வியாபாரம்)

யாரோ ஒரு அனானி பிவிஆர் சினிமாவுக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக சொல்லி படத்தை திரையிடவில்லை என படத்தின் இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் தமிழ் அமைப்புகள் தடைகள் எதுவும் கேட்காத போதே, அவர்கள் மேல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ் ஸ்டுடியோ அருண் 22 மணி நேர போர்கால முயற்சியில் நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வியில் தன் சொந்த செலவில் திரையிட்டார்.

படத்தின் கதை: சிங்கள கிராமங்கள் சூழ்ந்த ஒரு மலையகத் தமிழ் கிராமத்தில்(தகவல் - வ.ஐ.ச. ஜெயபாலன்) அடகுக் கடை நடத்தி வருகிறார் சிங்கள இளைஞர்? ஒருவர். அவர் கடைக்கு தன் நகைகளை அடகு வைக்க வரும் தமிழ்ப்பெண் மீது அவர் காதல் வயப்படுகிறார். யாழ்பாணத்தை சேர்ந்த அந்தப்பெண் போரினால் குடும்பத்தை இழந்து உறவினர் வீட்டில் அடைக்கலமானவள், அவளின் உறவினர்கள் அவளை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு கட்டிவைக்க முடிவு செய்துள்ள நிலையில் அடகுக் கடை வைத்திருப்பவர் வீட்டில் சமையல் வேலை செய்யும் தமிழ்ப் பெண்மணி உதவியால் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நாயகனின் பெற்றோர் குறித்து நாயகி விசாரிக்கும்போது அவன் தனக்கென யாரும் இல்லை என்றும் பழசு எதையும் கிளற வேண்டாம் எனவும், அதைப்போல் தானும் அவளின்  கதை பற்றி அறிய விரும்பவில்லை என்று சொல்கிறான். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் வாழும்போது. நாயகனின் நண்பன் வீட்டுக்கு வருகிறான். அவன் மூலம் நாயகன் முன்னாள் சிங்கள ராணுவ வீரன் என நாயகிக்குத் தெரிய வருகிறது. நாயகி இதை ஏன் என்னிடம் மறைத்தாய் என அவனிடம் கோபப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறாள். இந்நிலையில் நாயகன் தன் பழைய கதைகளை அவளிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான். ஆனால் நாயகியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படாமல் போகவே தன் அடகுக் கடையை விற்றுவிட்டு அவளுக்கு விருப்பமான இந்திய பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். ஆனால் நாயகி மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். அதன்பின் நாயகியின் நினைவுகளுடன் அவன் வாழ்வதாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

இதில் மேலோட்டமாக ஒரு சினிமாவாகப் பார்த்தால் அபத்தமான ஒரு படம் அவ்வளவுதான். ஆனால் இதில் பின்னால் பேசப்படும் அரசியல் வெகு ஆபத்தானது.

முதலில் யாழ்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்டவள் எப்படி ஒரு சிங்களவனை நம்புவாள். அடுத்து எதோ ஒரு தேவைக்காக அவள் திரும்பத் திரும்ப அடகுக் கடைக்கு வருகிறாள். அது எதற்காக என விளக்கம் இல்லை. வேலை தேடும் அவளை ஏன் தோட்ட வேலைக்கு போகக்கூடாது? என அவள் உறவினர்கள் சொல்கிறார்கள். படித்த மேல் தட்டு பெண்ணை ஏன் அவர்கள் தோட்ட வேலைக்கு செல்ல நிர்பந்திக்கவேண்டும். படத்தில் அவர்கள் வீட்டில் விஜய் படத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். நாயகன் நாயகியை திரையரங்கிற்கு அழைத்துச்செல்லும் படமும் விஜய் படம்தான். படத்தில் சாலைக் காட்சிகளில் பின்னனி இசையாக தமிழ் படத்தின் பாடல்கள் வீடுகளில் ஆட்டோக்களில் ஒலிப்பதாக காட்டப்படுகிறது. மேலும் அதிகாலையில் ஊர் முழுக்கவே பக்திப்பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும் காட்டப்படுவது அங்குள்ள தமிழர்கள் ஒரு இணக்கமான அமைதியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை திணிக்க பயண்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் தேவாலயத்தில் இருந்து திரும்பும் நாயகியிடம் உன் கடவுள் உன்னைக் காப்பாற்றாது. நான்தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்கிறான் நாயகன். ஆனால் அவன் தினமும் புத்தரை வணங்கிவிட்டுத்தான் தன் அன்றாட வேலைகளை துவங்குகிறான்.

நாயகன் முன்னாள் ராணுவத்தினன் என்பதாலேயே நாயகி அவனை வெறுக்கிறாள். ஆனால் சாதாரன சிங்களவர்களிடம் அவளுக்கு வெறுப்பில்லை என்று காட்டப்படுகிறது. இதற்காக ஒரு படுக்கையறை காட்சி ஒன்று காட்டப்படுகிறது. ராணுவத்திலும் நல்ல சிங்களர்கள் இருக்கிறார்கள் குற்ற உணர்சி மிகுந்த நாயகன் பாத்திரம் அதைத்தான் காட்ட பயண்பட்டிருக்கிறது.

தமிழர் தரப்பு நியாயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். நாயகன் நாயகியிடம் உன் சகோதரர்கள் புலித்தீவிரவாதிகள் என்று நான் சொல்லவில்லையே என கேட்கிறார். அதற்கு நாயகி அவர்கள் பள்ளி சிறுவர்கள் என்றும் தன்னைக் காப்பாற்றுவதற்காகவே ராணுவத்தினருடன் சண்டை போடும்போது சுடப்பட்டனர் என்று சொல்கிறாள்.

படம் முழுவதும் ஒரு அடகுக்கடை, ஒரு வீதியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக நகரும் திரைக்கதை, திரும்பத் திரும்ப காட்டப்படும் காட்சிகள் என திரையங்கிற்கு வந்தால் சில காட்சிகள் கூட ஓடாத இப்படத்தை ஏன் வேண்டுமென்றே ஒரு வதந்தியைப் பரப்பி 22 மணிநேரம் போராடி இயக்குனரை அழைத்து படத்தை இலவசமாகக் காட்டுகிறார்கள். இதனால் அங்குள்ள தமிழர்களுக்கு நல்லது எதாவது நடந்து விடுமா? ஒரு சிங்கள இயக்குனருக்காக இப்படி தீவிரமாக வேலை செய்யும் இவரகள் ஏன்? முடங்கிப்போன தமிழ்ப்படகளுக்காக வேலை செய்யவில்லை. தொடர்ந்து சிங்களர்களுக்கு டாய்லெட் கழுவத்தயாரக இருக்கும் இவர்கள்தான் தமிழ் அமைப்புகளை தீவிரவாதிகள் என தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகிறார்கள்.

இன அழிப்பு நடைபெற்று இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற இத்தனை ஆண்டுகளில் அதனை ஒருமுறை கூட கண்டிக்கத் துப்பில்லாத சாரு, எஸ்.ரா போன்றவர்கள் இந்தப் படத்தின் திரையிடலுக்கு வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் வ.ஐ.ச. ஜெயபாலன் படத்தின் இயக்குனருக்கு சத்தமாக நன்றி சொன்னார். அவர் இந்தப்படத்தை எதற்காக ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இயக்குனர் இந்தப்படத்தை எடுத்ததன் மூலம் அங்கு போருக்குப் பின் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. ஆனால், தமிழர்கள் இன்னும் ராணுவத்தின் மேல் மட்டும் (அதில் சில நல்லவர்கள் இருந்தாலும்) வெறுப்பாக இருக்கின்றனர். என சொல்கிறார். 13வது திருத்த சட்டத்தையே அமல்படுத்த மாட்டோம் என பகிரங்கமாக சொல்லும் சிங்கள அரசாங்கத்தை விமர்சனம் செய்ய துப்பில்லாதவர்கள்தான் இங்கு இலக்கியம் ஊடக சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுகிறார்கள். இனத்துக்காக போராடுகிறவர்களை இவர்கள்தான் ஈழவியாபாரிகள் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் குடும்பத்துக்காக இனத்தை விற்பவர்கள். அவர்களை போற்றும் அடிமைகளிடம் இருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

அரங்கு நிறைந்து வழிந்தது. படம் முடிந்தவுடன் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர் சிலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சினிமா அடிமைகள் என்பதைத்தான் படத்தில் இயக்குனர் பலமுறை காட்டியுள்ளார். அது உண்மைதான் என நேற்று தெரிந்தது. தங்கள் எதிர்கால முதல்வரை இன்னும் வெள்ளித்திரைகளில்தான் தமிழன் (மொத்த இந்தியனும்) தேடிக்கொண்டிருக்கிறான். இவன் இப்படி இருக்கும் வரைக்கும் வெறும் ஒன்றரை கோடி பேர் இருக்கும் இலங்கை. 120 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்திய மீனவனை என்ன வேண்டுமானாலும் செய்வான். ஏனென்றால் உதைபடும் மீனவன் பற்றிய நியாயத்தைவிட உதைக்கும் சிங்களனுக்கான நியாயத்தை  கைக்காசு போட்டு விளக்க முயலும் தமிழ் ஸ்டூடியோ அருண் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

சிங்களர்களுக்காக கூட இங்கு குரல் கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர். சினிமாவை வெறும் சினிமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறாகள். ”வாழ்க ஜனநாயகம்” ஆனால், அது தமிழச்சிகளின் பெண் குறிகளின் மேல் நிலைநாட்டப்படுகிறது. அதுவும் இங்கிருக்கும் அவர்களின் ரத்த உறவுகளினால் என்பதுதான் வேதனை.