31 ஜூலை, 2013

Ship of Theseus - அற்புதமான படம்...

நல்ல சினிமாவை பாலிவுட் பிதாமகன்கள் முன்மொழிவதற்கு எப்போதும் தயங்கியதில்லை. பாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள், கதாநாயகர்களால் கொண்டாடப்படும் படம் இது. உண்மையில் மிகச்சிறந்த படமும் கூட, அற்புதமான ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் இழுத்துச்சென்று ஒன்றிவிடச்செய்கிறது. ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, துல்லியமாக நகரும் சீரான திரைக்கதை என ஒரு அற்புதமான காட்சிப்படுத்தல். இயக்குனர் ஆனந்த் காந்தியை நாம் என்ன பாராட்டினாலும் தகும்.

முதல் கதை மன ரீதியானது, கார்னியாவால் பாதிக்கப்பட்ட போட்டோகிராபர் Aida Al- Khashef   தன் தோழன் Faraz Khan உதவியுடன் தான் எடுத்த புகைப்படங்களுக்கு சில கூடுதல் Effects ஒரு Special Software மூலம் கொடுத்து உருவாக்குகிறார். பெரும்பாலும் கருப்பு, வெள்ளை புகைப்படங்களையே ரசிக்கிறார். ஒரு மேம்பட்ட புகழை அது அவருக்கு தேடித்தருகிறது. ஆனாலும் அவர் எடுக்கும் சில படங்கள் அவர் தோழனுக்கு பிடித்திருந்தாலும் அதனை பிடிவாதமாக அழித்துவிடும்படி சொல்கிறார். இந்த நேரத்தில் நடக்கும் வாக்குவாதங்கள், காட்சியமைப்பு, நடிப்பு என நம்மை வியக்க வைக்கிறார் ஆனந்த் காந்தி. அதன்பிறகு அவருக்கு கார்னியா பிரச்சினை சரி செய்யப்படுகிறது. மிகுந்த சந்தோசத்தோடு புகைப்படம் எடுக்க கிளம்புகிறார். ஆனால் அவர் எடுக்கும் எந்த புகைப்படமும் அவருக்கு திருப்தியை தரவில்லை. பிறகு என்ன மாதிரியான முடிவை இயக்குனர், பார்வையாளருக்கு தருகிறார் என்பதே கதை. ஆலியா மற்றும் அவர் தோழன் இன்னொரு கேரக்டராக ஆலியாவின் கேமரா என வித்தியாசமான, அழகான, அற்புதமான நடிப்பு.

இரண்டாவது கதை தத்துவார்த்தமானது, கிட்டதட்ட நமக்கு அறிமுகமில்லாத ஜைன துறவிகளின் வாழ்வை மைட்ரேயா எனும் நீரஜ் கபி வழியாக நமக்கு அறிமுகம் செய்வார். மைட்ரேயா மிருக வதைகளுக்கு எதிரானவர். மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் மருந்து கம்பெனிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பவர். Cirrhosis எனும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். மருத்துவர்கள் அதற்கான தீர்வாக Liver Tissue Replacement முன்வைக்கும்போது, அதனை மறுத்து மிருகங்களை சித்ரவதை செய்து தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்க மாட்டார். சாவுக்கு அருகில் வந்தபின் அவர் எடுக்கும் முடிவுதான் கதை. மிக ஆழமான தத்துவ விசாரனைகளை வழக்கறிஞராக வரும் இளையவர் வினய் சுக்லாவுடன் அவர் விவாதிப்பதும், ஒரு காட்சியில் அவ்விவிவாதம் ஒரு சாலையில் மிக வேகமாக நடந்துகொண்டே தொடரும்போது ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட விதமும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.

மூன்றாவது கதை வாழ்வியல் பேசுகிறது. பங்கு வர்த்தகரான நவீனாக Sohum Shah தன் பாட்டியின் சமூக போராட்டங்களை கேலி பேசும்போது. பாட்டி நீ இப்போதும் அடிமையாகத்தான் வாழ்கிறாய் என்கிறாள். வாக்குவாதம் பணமே பிரதானம் என வாழும் நவீனின் மனதை குழப்புகிறது. அப்போது சங்கர் என்பவரின் கிட்னி திருடப்பட்டு அவர் மனைவி வைக்கும் ஒப்பாரி அவன் கவனத்தை திசை திருப்ப சங்கரின் கிட்னியை திரும்பப்பெறுவதற்காக ஸ்டாக்ஹோம் வரைக்கும் செல்கிறார். இக்கதையில் சங்கர் எடுக்கும் அசாதரனமான முடிவு படத்தின் சீரியஸ் நகைச்சுவை.

கிளைமாக்சில் மூன்று நபர்களுக்குமான சந்திப்பு நிகழும் இடமும், அப்போது காட்டப்படும் ஆவனப்படமும் இயக்குனரின் பார்வையில் படத்தை முடித்து வைக்கிறது. ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமாருக்கு மிக சிறப்பான  எதிர்காலம் காத்திருக்கிறது.

உலகப்படங்கள் என்றால் என்ன என்பதற்கான அடிப்படை விசயங்கள் சில இருக்கின்றன. தமிழ் சினிமா இயக்குனர்கள் பலர் தங்களின் அப்பட்டமான கற்பனை வறட்சியை “ஒலக சினிமா அப்படின்னெல்லாம் ஒன்னுமில்ல, மத்த நாட்டுக்காரனுக்கு தமிழ்ப்படங்களும் ஒலகப்படம்தான்” என்று சொலவதை பலமுறை கேட்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் பாதை தெரியுது பார், கிராமத்து அத்தியாம், அவள் அப்படித்தான், பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை, பேசும் படம், வீடு போன்றவை உலகப்படங்களில் வைக்கப்படவேண்டியவை.

எனவே தமிழ் சினிமாவின் அத்தனை சித்தாள்கள், மேஸ்திரிகள் மற்றும் நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள் அவசியம் இப்படத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..

30 ஜூலை, 2013

கேபிள் சங்கர், அப்துல்லா என்றென்றும் YOUTHS...


இன்று  எங்கள் அன்பு அண்ணன், தமிழ் பதிவுலகின் பிதாமகன், எழுத்தாளர், கவிஞர்?, கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், எங்களின் நிரந்தர தலைவன் கேபிள் சங்கர் மற்றும் பதிவுலகின் நிரந்தர தம்பி, தளபதியின் போர்வாள், சினிமா உலகின் புதிய உதயம் சென்ற வருட சூப்பர் ஹிட் ஹீரோ உதயநிதியின் தோழன் அப்துல்லா இருவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கேபிள் சங்கர்..

 தமிழின் No.1 பதிவரான இவரின் சினிமா விமர்சனங்கள், சாப்பாட்டுக்கடை அனுபவங்கள், புத்தகங்கள், முக்கியமாக ”கொத்து புரோட்டா” என உலகின் இணையம் வழி படிக்கும் அத்துனை பேருக்கும் தெரிந்த எங்கள் தலைவனுக்கு இந்த வருடம் தன் லட்சிய கனவான படம் இயக்கும் வாய்ப்பளித்த FCS Creations திரு. துவார். சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றி. எமது தலைவன் இயக்கும் “தொட்டால் தொடரும்” அடுத்த வருட சூப்பர் ஹிட் படமாக அமைய அவரின் இந்த பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.                                                               அப்துல்லா...

வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் அண்ணா என அழைத்து எப்போதும் புன்னகை சூடிய முகத்துடன் எல்லோரிடத்தும் பழக எளிய, இனிய எமது அன்பிற்கும், வலது கைக்கு தெரியாமல் இடது கையாலும் கொடுக்கும் பண்புள்ள திராவிட இயக்கத்தின் வரலாற்று பெட்டகம்.

நாடாளுமன்றத்தில் எங்கள் அனைவரின் பெரு விருப்பமான தமிழின் குரலும், திராவிடத்தின் குரலும், தி.மு.கவின் பாரம்பரியத்தின் செரிவும், தளபதியின் தேர்வு சரியானதுதான் எனவும் இந்திய தேசம் அறியவேண்டும் என இந்த பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.

27 ஜூலை, 2013

பொன்னியின் செல்வன்...

பொன்னியின் செல்வனைப்பற்றி சொன்ன அத்தனை பேரும் அதனை எத்தனை சிலாகித்துப்பேசுவர் என தமிழ்கூறும் நல்லுலகில் அத்தனை பேருக்கும் தெரியும் ஆனால், அதனை பிடிக்காத! ஏன் வெறுக்கும் ஒரு ஆள் ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்குத்தெரியுமா?!. அது நானேதான். பொன்னியின் செல்வன் மட்டுமல்ல, உடையாரும் எனக்குப்பிடிக்காது. ஒரு புனைவாக கற்பனை நாவலாக சாண்டியல்யன் எழுதியவற்றைப்போலவே இவைகளும் என்பதுதான் எனது கருத்து. யாராவது பொன்னியின் செல்வனைப்பற்றி பேசினால் நான் மேலே சொன்ன மாதிரி என் கருத்தை சொல்லும்போது என் மீது வெறுப்பையே உமிழ்கின்றனர். ஒவ்வொருவரும் ஏகப்பட்ட தடவை அதன் மொத்த பாகங்களையும் கீழே வைக்காமல் படித்ததாக உச்சி முடி சிலிர்க்க பேசுவார்கள். நான் வெறுமனே இன்று வெயில் அதிகம் என்கிற செய்தியை கேட்பவனைப்போல் இருப்பேன். காரனம் நானும் அதனை பத்து தடவைக்குமேல் படித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்னதைப்போல் வந்தியத்தேவனோ, குந்தவையோ, வானதியோ, பழுவேட்டரையர்களோ, ஆதித்த கரிகாலனோ, ராஜராஜனோ கூட என்னை வசீகரிக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப்போல் அல்லாமல் தற்போதைய தொலைக்காட்சி மெகா சீரியல் மாதிரிதான் எனக்கு அந்த நாவல். பாலகுமாரன் எழுதிய உடையார்  மெகா மெகா சீரியலை போன்றது அவ்வளவுதான்.

தஞ்சைதான் எனக்கும் பூர்வீகம். ஆனால், என் தாத்தா காலத்தோடு ஏதோ ஒரு காரனத்துக்காக பெரு நகரமான சென்னைக்கு வந்துவிட்டோம். சென்னையில் அன்றிலிருந்து அதாவது, எனக்கு விவரம் தெரிந்த நாளிருந்து இன்றுவரை திருவல்லிக்கேணி வாசி. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். வேலை விசயமாகவோ, நண்பர்களின் மற்றும் அவர்கள் சார்ந்த விஷேசங்களுக்காகவோ பலமுறை பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன், ஏன்? பல நாடுகளுக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால் நான் போகாத ஒரே இடம் தமிழ்நாட்டில் இருந்தது என்றால் அது தஞ்சாவூர்தான். அப்போதைய தஞ்சாவூரான, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு கூட நான் போனதில்லை. நான் இன்றுவரை அதனைப்பற்றி யோசித்ததும் இல்லை.

சற்றுமுன்பு அலுவலகத்தில் அழைத்து தஞ்சாவூர் பெரியகோவிலையும், அரண்மனையும் பற்றி ஒரு ஆவனத்தயாரிப்புக்காக என்னை அதற்கான விபரங்களை சேகரித்து வரவேண்டும் என பணித்திருக்கிறார்கள். என் வேலை என்னவென்பதை உங்களிடம் சொல்லவே இல்லை இல்லையா?. நான் ஒரு தொழில் ஆலோசகனாக வேலை செய்கிறேன். அதாவது யாராவது பெரிய தொழில் தொடங்கவேண்டும் என்றால் அதற்கான பகுதியை தேர்வு செய்தபின் முதலில் என்னைத்தான் அங்கு அனுப்புவார்கள். நான் சென்று அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மனநிலை, எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என அனுமானித்தால் அவர்களின் விவரம். மேலும், அவர்களை சரிகட்டுவதற்கான யோசனைகள். பொருட்களை வாங்க, விற்க சாலை வசதிகள் சரியாக இருக்குமா?. குடிநீர் ஆதாரங்கள். அப்பகுதியை நிர்வாகிக்கும் அதிகார வர்க்கங்களில் நேர்மையான, சரிக்கட்டக்கூடியவர்களின் விபரம் மற்றும் அப்பகுதியின் ஒட்டுமொத்த சாதக, பாதகங்களையும் திரட்டுவதுதான் என் தலையாய பணி!.

தஞ்சையில் என் முதலாளியின் நண்பரின் வீட்டில் எனக்கு தங்க ஏற்பாடு செய்யப்படிருந்தது. பக்கத்து வீடு இப்போதைய அதிகாரமில்லாத மன்னரான ராஜா போன்ஸ்லேயுடையது என அங்கிருக்கும் ஒருவர் சொன்னபோது. ஏன் எனக்கு அந்த வீட்டின்மீதே ஒரு இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டது?. காலை உணவு முடிந்ததும் உதவியாளர் என்னை பெரிய கோவிலுக்கு கூட்டிச்சென்றார். உள்ளே நுழையும்போதே அங்கு கட்டப்பட்டிருந்த யானை வினோதமாக பிளிரியது. நேராக கருவூரார் சன்னதி சென்று வணங்கினேன். அதன்பிறகு அங்கிருக்கும் அரசு அதிகாரிகளிடமும், அர்ச்சகர்களிடமும் முக்கியமான விபரங்களை சேகரித்துக்கொண்டேன். ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்காக டாக்குமென்றி தயாரிக்கத்தேவை என்றதும், எவ்வித தயக்கமும் இல்லாமல் அவர்கள் சொன்னதை நான் ஒலிப்பதிவு செய்ய அனுமதித்தனர்.

மதிய உணவும் கோவிலில் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தனர். உண்மையில் ராஜ உபசரிப்பு. அதிசயமாக எல்லோரும் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தனர். மதியத்துக்குமேல் அவர்களில் ஒருவரே என்னை அரண்மனைக்கு கூட்டிச்சென்றார். அரண்மனையில் பெரும்பாலான இடங்கள் அரசு அலுவலங்களாக மாற்றப்பட்டிருந்ததை பார்த்ததும் வருத்தமும், கோபமும், இயலாமையும் ஏற்பட்டது. சரஸ்வதி மகாலில் என்னைப்பற்றிய விபரங்களை சொன்னதும் என்னுடைய மின்னஞ்சல் முகவரி வாங்கிக்கொண்டு எனக்குத்தேவையான அத்தனை விபரங்களையும் தருவதாக உறுதியளித்தார் ஒரு சினேகமான இளம் அதிகாரி.

அதன்பிறகு எனக்கு உதவியாக வந்தவரையும், கோவிலில் இருந்து வந்த அதிகாரியையும் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு அரண்மனைக்குள் தனியாக நடக்க ஆரம்பித்தேன். மாலை நான்கு மணி இருக்கும் மிகவும் அசதியாக இருக்கவே அங்கிருக்கும் ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்தேன், அப்புறம் கையிலிருக்கும் நாளிதழினை விரித்து படுத்தேன். எப்போது தூங்கினேன் எனத்தெரியாது.

அரண்மனை முழுதும் கும்மிருட்டாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கும் என மனது உற்சாகப்படுத்தியது. நான் இதனை எதற்காக செய்யவேண்டும் பகையா?, தேசபக்தியா?. ஆனால் வாக்கு கொடுத்தாகிவிட்டது. மிக வேகமாக ஆதித்த கரிகாலன், சோழநாட்டின் அடுத்த பேரரசன் நான் இருக்கும் பகுதிக்கு யார் மீதோ ஏற்பட்ட கோபத்துடன் வந்துகொண்டிருந்தான். ஒரே வீச்சு மிகச்சரியாக என் குறுவாள் அவன் இதயத்தை துளைத்தது. பத்து வருட பயிற்சி அல்லவா?!. என்னை நானே பெருமிதம் செய்துகொண்டேன். அதன் முனையில் தடவப்படிருந்த நஞ்சின் வீரியம் மிக விரைவாக வேலை செய்தது. அருகில் சென்று அவன் இறந்து விட்டதை உறுதி செய்துகொண்டேன்.

காலை எட்டு மணியாயிருச்சு எழுந்து குளிச்சுட்டு வாங்க, பத்து மணிக்கு நாம கிளம்பனும் என உதவியாளர் என்னை எழுப்பினார். முழித்ததும்தான் ஞாபகம் வந்தது. நான் நேற்று மாலை அரண்மனையில் அல்லவா இருந்தேன்?!. எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்?!. ஒரே குழப்பமாக இருந்தது.

சரி ஒரு குளியல் போட்டுவிட்டு நிதானமாக யோசிக்கலாம் என தலையணை மேல் கிடந்த துண்டை எடுத்தேன். தலையணை சற்றே நகர்ந்ததில் உள்ளிருந்து ஒரு பொருள் எட்டிப்பார்த்தது. அது ரத்தக்கறை படிந்த ஒரு குறுவாள்.

26 ஜூலை, 2013

பட்டத்து யானை

தற்போதைய தமிழ் சினிமாவின் ட்ரெண்டான காமெடியையும், கொஞ்சம் ஆக்சனையும் நம்பி களம் இறங்கியிருக்கிறார்கள். வழக்கமாக ஆக்சன் பிளாக்கிற்காக ட்விஸ்ட் வைக்க காதலைத்தான் நம்புவார்கள். இதிலும் அப்படியே..

முதலில் விஷாலுக்கு கதை தயார் செஞ்சுட்டு, சந்தானம் இப்போது வசூல் ராஜாவாக மாறியபின் கதையை சந்தானத்துக்காக மாற்றியிருப்பார்கள் போல, படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை சந்தானமே இருக்கிறார். அதாவது படத்தின் ஹீரோ சந்தானம்தான்.
விஷால் வழக்கமான பூபதி பாண்டியன் மசாலாவுக்காக சில சண்டைகளை அனல் பறக்க போடுகிறார்.

இடைவேளைக்கு சற்று முன்பும், அதன் பின்னரும் சந்தானம் இல்லாமல் செண்டிமெண்ட் பிளாஷ் பேக் வைத்திருப்பதுதான் விஷாலுக்கான கதை.

சந்தானத்திடம் வேலை பார்க்க வரும் விஷால் மற்றும் நண்பர்களால் சந்தானம் பிரச்சினயில் மாட்டிக்கொள்ள அவரிடம் விஷால் & கோ திருச்சிக்கு சென்று ஹோட்டல் வைக்கும் யோசனை சொல்லி திருச்சிக்கு வந்தபின் சந்தானம் தனியாக சிக்கிக்கொள்ள வந்த இடத்தில் பார்த்த ஐஸ்வர்யா அர்ஜூன் மேல் விஷாலுக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் வர, அங்கிருக்கும் உள்ளூர் வில்லனுக்கும் ஐஸ்வர்யா மேல் காதல் வர இடையில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை விஷால் எப்படி காமெடியாகவும், சண்டை போட்டும் சாமாளிக்கிறார் என்பதே கதை.

திருச்சியில் உள்ளூர் வில்லனிடம் உதவிகேட்டு அவரால் தரமுடியாமல் போகும்போது விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் இனி படம் முழுதும் பரபரப்பாக இருக்கும் என ரசிகனின் எதிர்பார்ப்போடு இடைவேளை வருக்கிறது. ஆனால் அடுத்த காட்சியில் விஷாலின் பழைய வாழ்க்கையை காட்டுவதற்காக வரும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது. அதன்பின் கிளைமாக்சில் சந்தானம் வந்துதான் படத்தை நகர்த்துகிறார்.

தமனின் இசையில் கானா பாலாவின் பாடல் மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் அதற்கான நடன அமைப்பு அலுத்துப்போன ஒன்று. இன்னும் எத்தனை பாட்டுக்குத்தான் லுங்கியை பிடித்துக்கொண்டு ஆடுவார்களோ?!!.

ஐஷ்வர்யா அர்ஜூன் சும்மா வந்து போகிறார். +2 படிக்கும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். படம் முடியும்வரை விஷாலிடம் காதலை சொல்லாமலே போகிறார்.

மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து..

25 ஜூலை, 2013

தனிமையின் இசை…

Photo : KRP Senthil
ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம் அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தது. தனிமை எனக்கு மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளை கொண்டாடுபவன் நான்.

வெளியே பெய்யும் மழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது. இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம். அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.

ஒரு அசாதரமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பராவாயில்லை என சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள் வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. அதன்பின் சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும் சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது. உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம்.
உன் வேலை மாறுதல் கடிதம் வந்த மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாக பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுது களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று ஒரு சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வது போல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம் திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.

இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால் அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தக்கத்தை அதிகப்படுத்திருந்ததால், கடைத்தெருவுக்கு மாலையில் சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர் கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும் என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள். உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.


மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.

19 ஜூலை, 2013

மரியான்...

பரத்பாலா, ரஹ்மான், தனுஷ் கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளை நிறைய ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. ஒரு சாதாரன மீனவ கிராமத்து இளைஞனின் காதலை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுத்திருக்கிறேன் என ரசிகனின் காதில் பிளாஸ்டிக் பூ வைத்து சுற்றியிருக்கிறார் பரத்பாலா.
 
வழக்கமான தமிழ் கதாநாயகர்களுக்கான இலக்கணத்துடன் தனுஷ் மீனவ கிராமத்து இளைஞனாக காட்டப்பட்டு இருக்கிறார். அவரை சின்ன வயதில் இருந்தே காதலிக்கும் பெண்ணாக ”பூ”  பார்வதியும் அவரின் காதலுக்கு உதவியாக அப்புக்குட்டியும், கூடவே இமான் அண்ணாச்சியும் இருக்க, தனுஷ் - பார்வதி காதல் பழைய எம்.ஜி.ஆர் படங்களின் பாணியில் நகர்கிறது. அதாவது நாயகியின் காதலை வறட்டு காரனத்திற்காக நாயகன் நிராகரிக்கிறார். நாயகி உதட்டில் முத்தமிடும்போது கூட நாயகன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறார். பின்பு அவரும் காதல் காதல் வயப்படுகிறார் ( கடற்கரையில் எம்.ஜி.ஆர் பாடுகிறார்), பிறகு வில்லன், அவனுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக இரண்டு வருட சூடான் வாழ்க்கை என தனுஷுக்கு கொடுக்கப்பட்டதை செய்கிறார்.

சூடானில் இருக்கும்போது ஒரு பிளாஷ்பேக் மீனவ கிராமம், தனுஷின்  காதல் என முந்தைய பாராவின் நிகழ்வுகள் முடிந்ததும். மீண்டும் சூடான்.பொதுவாகவே கப்பல் கடத்தலுக்கு பேர் போன சூடான் நாட்டில் அங்கு பிழைக்கப்போன தனுஷையும், ஜெகனையும் திடீரென சில சூடானிகளால் கடத்தப்படுகின்றனர்.  கடத்தப்பட்டதும் இடைவேளை வருகிறது. சரி இதற்குப்பிறகாவது சுவரஸ்யமாக கதை சொல்வார்கள் என நினைத்தால் படம் எப்படா முடியும் என்றிருக்கிறது.

படத்தில் சொல்லும்படியான எந்தக்காட்சியமைப்பும் இல்லை. இசை, பாடல்கள், ஒலிப்பதிவு என சராசரி படமாகவே நகர்கிறது. உமா ரியாஸ்கான், சலீம் போன்றவர்களை வீணடித்திருக்கிறார்கள். இழுவையான காதல் காட்சிகளும், புரிதல் இல்லாத மீனவன் வாழ்க்கையும், சூடானை காட்டுகிறேன் என டிஸ்கவரி சானலின் பியர் கிரில்ஸ் எபெக்டில் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டிருப்பதும்ரசிகனை ஆயாசத்தின் உச்சத்திற்கே நகர்த்திவிடுகிறது.

தனுஷ் சூடானின் கடற்கரையை வந்தடைந்ததும் ”இந்தியா வந்துடுச்சுப்பா” என தியேட்டரில் குரல் வந்ததும் நிறையபேர் கைதட்டினர். அது படம் முடியப்போகிறதே என்கிற சந்தோசத்தில் எழுப்பப்பட்டவை.