3 மார்., 2014

சவுக்கு - துணிவே துணை...

தமிழ் இணைய உலகில் முதன் முதலாக துணிச்சலாக  அரசுக்கு எதிரான கட்டுரைகளையும், தகவல்களையும் தருவது சவுக்கு இணைய தளம்தான். வெகு ஜன ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்லது அவதூறு வழக்குகளுக்கு பயந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளைக் கூட எழுத தயங்கும் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி அதிகார வர்க்கத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பொது வாழ்க்கையில் இயங்கும் யாரையும் விமர்சிக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் இருக்கிறது. தங்கள் மேல் குற்றம் இல்லை என்றால் விளக்கம் கேட்கலாம், வழக்கு தொடுக்கலாம். ஆனால், அதிகாரத்தை பயண்படுத்தி கைது செய்வதும், தளத்தை தடை செய்ய உத்தரவிடுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

இது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், ஆள்பவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையும் மக்களுக்காகத்தான். மக்கள் இதற்கு முன் வாய் மூடி நீங்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருந்தார்கள். இப்போது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி எல்லோர் கைகளிலும் இருக்கிறது. அவர்களுக்கு கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது. இவைகள் வரவே கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்தில், அரசோ, அமைப்புகளோ தலையிட கூடாது.

காவல் துறையும், நீதித்துறையும்தான் சாமானியன் தனது இறுதி நம்பிக்கையாக நினைக்கிறான். ஆனால் காவல் துறை அரசை ஆள்பவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எத்தகைய நேர்மையான அதிகாரிகளும் ஒரு சூழ்நிலையில் ஆள்பவர்களின் தொல்லையால் தங்களை மாற்றிக்கொண்டு விடுகின்றனர். காவல்துறையின் மீதான நம்பிக்கை இப்போது சாமானியர்களுக்கு போய்விட்டது. ஆனால் அவர்கள் தனது கடைசி நம்பிக்கையாக நீதித்துறையை மட்டுமே கருதுகிறார்கள். 

சவுக்கு தளத்தில் நீதிதுறையில் இருக்கும் குளறுபடிகளையும், ஊழலையும் எழுதி வருகிறார்கள். மேலும் அதிகாரத்தின் உச்சத்தில் இருபவர்களின் ஊழல்களையும், தவறுகளையும் வெளிக்கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு அந்த கட்டுரைகள், செய்திகள் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் மக்கள் மன்றத்தில் வையுங்கள். அல்லது, வழக்கு தொடருங்கள் அதை விடுத்து தடை செய்ய உத்தரவிடுவது எந்த விதத்தில் நியாயம் என நினைக்கிறீர்கள். 

சவுக்கு தளத்தினை தடை செய்து விட்டால் அவர் வெளியிட்ட செய்திகள் உண்மை இல்லை என்று மாறிவிடுமா?. ஒரு தனி மனிதனாக நின்று அதிகார வர்க்கத்தினை கேள்வி கேட்கும் அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. பொது மக்களின் கூட்டு மனசாட்சியே சவுக்கு. 

கூடன்குளம், மீத்தேன் திட்டம் , கெயில் திட்டம், என நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வரும்வரை கும்பிடு போடுகிறார்கள். அதிகாரம் கிடைத்தபின் லஞ்சம் கொடுத்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கேள்வி கேட்காதவரைக்கும்தான் எல்லாம். இப்போது கேள்வி கேட்கும் காலம். 

பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு குழந்தைகளுக்கு அரசியல் அறிவு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்துவிட்டு தொழில்நுட்ப அறிவில் உயர்ந்து விளங்கியவர்களால்தான் ஊழல்வாதிகளின் முகத்திரை கிழித்து எறியப்படுகிறது. 

அரவிந் கேஜ்ரிவால், மேதா பட்கர், சுப.உதயகுமார், சிவ.இளங்கோ, ஆச்சிமுத்து சங்கர் எல்லாம் தனி மனிதர்கள் அல்ல.