30 மார்., 2012

குழந்தையின் கனவில் சுழலும் லத்திகள் ...


குப்பைகளை 
தெருவில் கொட்டுகிறார்கள் சிலர் 
அதிலிருந்து 
வாழ்வை துவங்குகிறார்கள் சிலர்..

’மாமூலான’ வாழ்வை
லத்திகளால் சுழற்றும்
காவலர்கள்..

தெருவோரக் கடையொன்றின் 
பரபரப்பான வியாபாரத்தை 
பாதிக்காமல் 
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை..

மந்திரிமார்களும், அதிகாரிகளும் 
அடிபொடிகளும் 
சாலையைக் கடந்தபின்பு 
கூவிக்கொண்டிருந்தான் ஒருவன் 
"எதை எடுத்தாலும் பத்து ரூவா!" ..

சப்தங்களாலும் 
தூசிகளாலும் 
நிரம்பியிருக்கும் இந்த நகரத்தில் 
மனிதர்களோடு 
சில பறவைகளும் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..

விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக 
சொல்லிக்கொள்கிறோம் 
சபிக்கப்பட்டிருந்தாலும்!..

27 மார்., 2012

பெருநகர சிறுவாழ்வு...


சென்னை என்கிற பெருநகரில் அன்றாடம் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சில நூறு பேர் தங்கள் வாழ்வின் தொடர்ச்சியை சென்னையில் நிலை நாட்டும் அதீதமான ஆர்வத்தில் வந்திறங்கும் எத்தனை பேருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தேகமே!. தன் வாழ்வின் தீராத பெருங்கனவுகளை, லட்சியங்களை, ஆசைகளை நிஜமாக்கி பார்க்கும் உந்துதலில் அல்லது வெறுப்பின் உச்சத்தில் வீட்டினருடன் சபதம் போட்டுவிட்டு பஸ்ஸோ, ரயிலோ, லாரியோ கிடைத்த வாகனத்தில் ஒரு மூட்டை வேட்கையுடன் வரும் யாவருக்கும் எதையாவது செய்துகொண்டுதான் இருக்கிறது இப்பெருநகரம்.

வந்த இடத்தில் தங்குவதில் ஆரம்பித்து உணவு, வேலை, சக வேலையாட்கள் என ஒருவனின் லட்சியங்கள் ஆரம்பத்திலேயே சவக்குழிக்குள் புதைக்கப்படும் அபாயமே இங்கு அதிகம். முன்பெல்லாம் பேச்சிலருக்கு வீடு தர விரும்பாத உரிமையாளர்கள். I.T இளைஞர்கள் வந்தபிறகு அவர்கள் வீசியெறியும் அதிகமான வாடகையால் இப்போதெல்லாம் பேச்சிலர்களுக்குத்தான் சுலபமாக வீடு கிடைக்கிறது. இதுவே குடும்பத்தவன் என்றால் பெரும்பாலான விளம்பரங்களில் சைவம் மட்டும் என்பதான குறிப்புகளில் ஆரம்பித்து. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும் வீடுகளில் கிட்டதட்ட ஒரு பயங்கரவாதியைப் போல் பார்க்கப்படும் அவலம் சமீபமாக வீட்டு வாடகைதாரரின் விபரங்களை காவல்துறை கேட்டபிறகு இன்னும் அதிகமாகிவிட்டது. பாதுகாப்பு என்பது வெறும் விபரங்களால் கிடைத்துவிடும் என நம்பும் அல்லது நம்பவைக்கும் காவல்துறையின் அறிவை எப்படி மெச்சுவதென தெரியவில்லை. இதில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது என்கிற பெருமை வேறு. இவர்களுக்கு ஸ்காட்லாந்து என்கிற ஒரு நாடு எங்கிருக்கிறது என்றே தெரியாது! 

திருவல்லிக்கேணி எனும் காளைகளின் தொழுவம்தான் தமிழ்நாட்டு இளைஞர்களின் சென்னை இல்லம். மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில் நல்ல மெஸ்கள் நிறைய உண்டு என்பதுதான் ஒரே ஆறுதல். மற்றபடி தலைக்கு இவ்வளவு என ஆண்கள்,பெண்கள் விடுதிகள் நகரம் முழுவதும் ஒரு புதிய வியாபார வாய்ப்பினை வழங்கியுள்ளது. இங்கு தினசரி வாழ்க்கையில் பேருந்தில் ஆரம்பித்து அலுவலகம் வரை பின்பு விடுதி வந்தால் துணி துவைப்பதில் ஆரம்பித்து வெவ்வேறு ரசனை கொண்டவர்களுடன் ஒரு மாதிரி இணக்கமான அனுசரிப்பு என நித்தம் நித்தம் யுத்தம்தான். இங்கு இருக்கும் முதல் அடிப்படை பிரச்சினை சம்பளம்தான். கிடைக்கும் சொற்ப சம்பளதில் உண்டு, உறங்கி, கழுவி, களித்து மீதமிருக்கும் சொற்ப காசை ஊருக்கு கொடுத்தனுப்பினால் ரீசார்ஜ் தீரும்வரைக்கும் ஊரில் இருந்து பெற்ற கடன் கேட்டோ, சகோதர கப்பம் கேட்டோ யாராவது புலம்புவதில் துவங்கும் மாலை பின் டாஸ்மாக் புண்ணியத்தால் இரவுகள் கழியும். 

எத்தனையோ விசயங்களை பேசும் அதிகார வர்க்கம் தனியார் நிறுவனங்களின் சம்பள விகிதத்தை சரிவர கவனிக்காமல் இருக்க நன்றாக கவனிக்கப்படுவதால் தனியார் முதலாளிகள் அங்காடித்தெரு படம்போல் ஒரு அடாசான தங்குமிடம் தந்து கூடவே ஒரு திராபையான சாப்பாடும் தந்து பணிரெண்டு மணி நேரத்துக்கு அதிகமாக வேலை வாங்குகின்றனர். சென்னையின் பிரதான வியாபார தளமான தியாகராய நகரில் இருக்கும் பெரும்பாலான கடைகளில் வேலை பார்க்கும் இளைய சகோதரிகளை பார்க்க நேரும்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும் திட்டி தீர்ப்பதில் என் கோபம் அந்தக்கடைகளில் எதையும் வாங்கக்கூடாது என்கிற தீர்மானத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. அந்த சகோதரிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அவரகள் காசில் சாப்பிடும் வக்கற்ற அவர்கள் பெற்றோரும், சகோதரர்களும் மனிதப்பிறவிகளாக எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சென்னை மற்றுமல்லாது ஏனைய பெரு நகரங்களிலும் இப்போது வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் வந்திறங்கி தமிழ்நாட்டை முன்னேற்றவும் அபடியே கிடைத்த சந்தில் திருடிக்கொள்ளவும் முயல்கிறார்கள். துப்பாக்கிகள் அதிகம் புழங்கும் அவர்கள் கலாச்சாரம் தமிழகத்தில் மெல்ல தலை தூக்க துவங்கியிருக்கிறது. இதுவரை தமிழக வீதிகளில் கத்திகளை வைத்து வீரம் காட்டிய உள்ளூர் தாதாக்கள் இனி வெளியூர் சிறார்களிடம் அடிமை வேலைக்குப் போகலாம்.

இந்த கையேந்தி பவன்களை பற்றி பெரிய சரித்திரமே எழுதலாம். அப்படியே ரோட்டோரம் ஒரு சிறிய தள்ளுவண்டியில் நடத்தப்படும் கடைகளால் சென்னை வந்தேறிகள் பசி போக்கப்படுகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சுத்தமாக இருப்பது இல்லை. அவர்களின் உணவு தயாரிக்கும் முறை பார்க்கும் ஒருவர் அப்புறம் வாழ்நாளில் கையேந்தி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார். கையேந்தி பவன் மட்டுமல்ல நிறைய உணவகங்களின் சமையலறையை ஒருமுறை தரிசித்து விட்டால் போதும் அப்புறம் சென்னையை நாம் வாழ்நாளில் மறக்க இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

சினிமா என்கிற ரத்தக்காட்டேரிக்கு தன்னை பலியாக்கிக்கொள்ளும் என்னற்ற இளைஞர்கள். கோடம்பாக்கம், வடபழனி என தங்களை இன்னொரு ஷங்கராகவும், ரஜினியாகவும், விஜய் ஆகவும் கனவு கண்டு வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். 40 வயதை தொடும் என் நண்பனை ”ஏண்டா இப்படி இருக்கேன்னு” கேட்டா ரஜினி, எம்.ஜி.ஆர் என நாற்பது வயதுக்கு மேல் சாதித்தோரின் பட்டியலை வாசிப்பான். இவனிடம் 
ஒருநாள் ”என்னடா கதை ஏதாவது இருக்கா?” என்றேன். ”ஏன் யாராவது புரொடியூசர் இருக்காரா?” என்றான். ”இல்லைடா, சும்மா கேட்டேன்” என்றேன். அதற்கு அவன் ஒரு கதை சொன்னான். ”ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கா?” என்றேன். “புரொடியூசர் அட்வான்ஸ் கொடுத்தால்தான் அதெல்லாம் தயார் செய்யமுடியும்” என்றான். ”எனது நண்பர் கேபிள் ஐந்து ஸ்கிரிப்ட் ரெடியா வச்சிருக்கார், அனைத்து படங்களையும் பார்க்கிறார், தினசரி சினிமா விசயமாக யாரையாவது சந்தித்தவாறு இருக்கிறார். சினிமாவின் அடிப்படை விசயம் முதல் அதனை கடைசி ரசிகன் வரை கொண்டுபோகும் திறமை உள்ளவர், அவருக்கே ஒரு புரொடியூசர் கிடைக்கல, நீ இப்படி சொன்னா எப்படிடா? என்றபோது, அவன் தன் ஜாதகத்தில் தான் ஒரு சிறந்த இயக்குநர், நடிகர், அமைச்சர் ஆகும் யோகம் இருப்பதால் எல்லாம் தானாக நடக்கும் என்றான்.

நான் வெறுத்துப்போய் இப்போதெல்லாம் அவனைப் பார்த்தால் இரண்டு பாக்கெட் சிகெரெட், 100 ரூபாய் பணத்தோடு நிறுத்திக்கொள்வேன். சமீபத்தில் ஒரு நாள் நான் சிங்கப்பூர் போகிறேன் என்றதும். அங்கு நல்ல? புரொடியூசர் இருந்தா சொல்லு ஒரு நல்ல கதை வச்சிருக்கேன். ஒன்றரை கோடில படம் பண்ணிறலாம் என்றான். ஒன்றரை கோடியை மிகச்சாதாரனமாக சொன்ன அவன் ஸ்டைலை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் இவனைப்போல் ஏகப்பட்ட இளைஞர்கள் அங்கு இப்படித்தான் சுற்றுகிறார்கள். அவன் சீக்கிரமே ஷங்கராகி, ரஜினியாகி, எம்.ஜி.ஆராக ப்ராப்திஸ்து. ஏனெனில் அவன் அமைச்சரவையில் அடியேனுக்கு இடமளிக்காமல் போயினும் அவன் அல்லக்கையாக மாறி கோஷம் போட இப்போதே தயாராகிவிட்டேன்.

24 மார்., 2012

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்...


ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல் 
எப்போதும் 
நடந்து கொள்கிறார்கள் 
அரசியல்வாதிகள்..

அடிவருடிகள் 
அடிமைகள் 
அல்லக்கைகள் 
தமிழுக்கு சோறுபோடும் பிச்சைக்காரர்கள் 
பிறந்தது முதலே தமிழ்ப்புடுங்கிகள் 
என மூளை மழுங்கிய கூட்டம் சூழ 
தலைவன் கடவுளாக 
தலைவனின் பெரிய வீடு 
சின்ன 'வூ'டு உபகடவுளாக 
பிள்ளைகள் 
பேரப்பிள்ளைகள் 
மற்றும் 
மாவட்டம் 
வட்டம் 
பகுதிக்கடவுளாக..
 
தலைவிக்கு வேறு வடிவம் 
காக்கும் காளிக்கு 
அன்னை மேரிக்கு 
தைரிய லட்சுமிக்கு 
சகலமும் ப்ளெக்ஸ் மயம்..
 
பெரியார் 
அண்ணா 
காமராஜர் 
பகுத்தறிவு 
வெங்காயம்..

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல் 
எப்போதும் 
நடந்து கொள்கிறார்கள் 
அரசியல்வாதிகள் 
நேற்று அவர்களுடன் 
இன்று இவர்களுடன் 
நாளையும் தலைவர் விருப்பம்தான் 
கொள்ளைதான் 
கொள்கை என்றானபின் 
கூவிக் கூவி
தலைவனை புகழும்  
அடிமைகள்தான் பாவம் ..

22 மார்., 2012

கீர்த்தனாவும், கெடா வெட்டும்..

எல்லாத்தையும் வெவரமா  சொல்லணும் 
பெரிய அத்தைக்கு 
நடுமாமா தண்ணிபோட்டால் மட்டும் தகராறு செய்வார் 
பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சேதி சொன்னாப்போதும் 
மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய்த்தான்  கூப்பிட்டாகனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி சாமானெல்லாம் வாங்கி வந்த
பெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு
சித்தி பாவம் எதைச் சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும்
கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருக்கணும் 
செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறை தொடர
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமாசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..

கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா 
குடும்ப உத்தரவால் பேசவே இல்ல என்கிட்டே 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு
பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்குப்  போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமெம் பொண்ணு  கீர்த்தனா
வெக்கபட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு
இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு
வேண்டிகிட்டேன் ...

16 மார்., 2012

சதுரங்க முத்தங்கள்....

சதுரங்கப் பலகையில் 
எதிரெதிர் அமரும்போது 
நீ கவனமாக 
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை 
நான் விரும்பித் தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது 
உன் கண்களுக்கு தப்புவதில்லை 
எனது பிஷப்புகளும் 
ஆமென்.. 

கொடுத்தாலும் வாங்கினாலும் 
முத்தங்களுக்காய் பலியான 
சிப்பாய் நான்.. 

செக் வைத்த இறுமாப்பில் 
நீ 
வெற்றிச் சிரிப்பை
காற்றில் பரவவிட்டபோது 
உறைந்துபோன முத்தங்களால் 
இந்த கவிதை தன்னையே 
இன்னொரு முறை 
எழுதத்துவங்கியது ..

அடுத்த ஆட்டம் 
இன்னும் சிறிது நேரத்தில் 
ஒரு 
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும் 
நீ ராணியாகவும் 
நான் ஜெயிக்க நீ தோற்க 
நீ ஜெயிக்க நான் தோற்க..

15 மார்., 2012

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் -Sri Lanka's Killing Fields 2 ...

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; 
ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம். - தோழமையுடன், ஸ்டாலின் பெலிக்ஸ்..


13 மார்., 2012

மது புட்டிகள் காலியாகின்றன...


நித்திரை தொலைத்து
நாட்கள் வாரங்களாகின
நீ தழுவிய நெடுந்தோள்
நெருப்பென தகிக்கிறது
சொற்களில் சொக்கட்டான்
ஆடுபவள் நீ
நாளை நாளை என்கிறாய்
ஒரு நாளைப்போல்
மறு நாள் இல்லை நீ
இக்கட்டான தருணத்தில்
உறவைக் கைவிட மறுத்து
தடுமாறுகிறாய்
தடம் மாறிவிடப்போகிறாய்
கவனமாயிரு
முடிவெடு
கிளம்பி வா!
உனக்கென ஊரே இருக்கலாம்
எனக்கென நீ மட்டுமே
ஒவ்வொரு இரவிலும்
மிகுதியாக பகலிலும்
நீ குடித்த என் உயிரை
மது குடித்துக்கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் உச்சத்தில்
நீ வராமலே
நடக்கலாம் என் 
இறுதி யாத்திரை..

11 மார்., 2012

மு.கருணாநிதிக்கு சமர்ப்பணம்...

10 மார்., 2012

போர்க்குற்றம்.. இந்தியா... தமிழர்கள்...


இலங்கையில் நடந்த இன அழிப்பின்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பை வகித்த கருணாநிதி அப்போது நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு தன் விசுவாசத்தையும், புலிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன் நடுவிரலை உயர்த்திக் காட்டினார். போர் குற்றம் தொடர்பாக அப்போது ராஜபக்‌ஷேவிற்கு உதவிய அத்தனை நாடுகளையும், குறிப்பாக இந்தியாவையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும். முக்கால் மணி நேர உண்ணாவிரதத்தால் ஈழ மக்களை கருணாநிதி காப்பாற்றி விட்டதாக அப்போது உடண்பிறப்புகள் தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியது இன்னொரு காலக்கொடுமை. அதே துரோகி இப்போது அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இந்த ஆள் அப்போதும் அப்படித்தான் வீடியோகளை பார்த்துவிட்டு சொன்னார். இப்போதும் அப்படித்தான் சொல்கிறார். இருந்தாலும் கூடங்குளம் விவகாரத்தில் இவர் வெளிப்படையாக தன் கருத்தை சொல்லியதுபொல் சும்மாவாச்சும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க சொல்வதற்காக நன்றி சொல்லி வைப்போம்.

இந்தியாவை பொருத்தவரை இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிக்கிறது. வடக்கே ஒடிஷா, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இதேபோல் இந்தியாவின் நிலமையும் கேள்வி கேட்கப்படும் என்பதாலும் சோனியாவின் பழிவாங்கும் வெறி இன்னும் அடங்காததால் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவு தரும் முடிவிலும் மாற்றம் இருக்காது. சோனியாவின் புதல்வன், புதல்வி, மருமகன், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட அனைவரும் தொண்டை கிழிய கத்தியும் எந்த பலனலிக்காத வட இந்திய தேர்தல் தோல்வியாலும். இனி அடுத்த மத்திய அரசை காங்கிரசால் கைப்பற்றமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்ததாலும் மலையாளிகள் தீர்மானிக்கும் காங்கிரஸ் அரசு தமிழனுக்கு கொள்ளிவைக்கத்தான் ஆசைப்படும்.

தமிழக காங்கிரஸ்காரன் எல்லாம் தன் அன்னை சோனியா பாதம் தொட்டு வணங்கிவிட்டுத்தான் பேட்டியே கொடுப்பார்கள் போல. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரும் அத்தனை காங்கிரஸ்காரனும் இலங்கையில் எல்லோரும் மிக மகிழ்சியாக வாழ்வதாக வாய்கூசாமல் சவடால் அடிக்கின்றனர். இன்னமும் உம்மன் சாண்டி புதிய அணை கட்டியே தீருவேன் என முல்லை பெரியாறு விசயத்தில் கூவிக்கொண்டிருக்கும்போதும் கூடங்குளம் திறக்க தனக்கு ஆகவே ஆகாத பி.ஜே.பி காரன் கூட இணைந்து போராட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறவர்கள். ஈழப் பிரச்சினையில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி ஒரு பயலும் வாயை திறக்கவில்லை. தன் இனம் பற்றியும் இந்திய தேசம் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாமல் இத்தாலியை பூர்விகமாக கொண்ட ஒரு பெண்மணியை தலைவியாக ஏற்றுக்கொண்டவர்களிடம் நாம் மனித நேயத்தை எதிர்பார்க்கக் கூடாதுதான்.

அடுத்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பு கூட இல்லாத பி.ஜெ.பி இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவைக்க தமிழக பி.ஜே.பி காரர்கள் இன்னும் மவுனம் காப்பது வெட்கக்கேடு. இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்க??

ஜெயலலிதாவை பொருத்தவரை இம்முறை பதவிக்கு வந்தது முதல் ஈழப் பிரச்சினையில் தமிழர்களின் நலன் சார்ந்தே செயல்படுவது தமிழர்கள் அனைவருக்கும் ஆறுதலான விசயம். தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக அவர் இருப்பதும். கூடங்குளம் விவகாரத்தில் மக்களின் போராட்டத்தை மதித்து இவ்வளவு காலமும் பொறுமையாக இருப்பதும் பாரட்டக்கூடிய விசயம். தமிழகம் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூடங்குளம் விவாகரத்தில் மக்களின் போரட்டத்தை தடுக்காமல் இருப்பதும். இந்த விசயத்தில் அவசரப்படாமல் யோசிப்பதும் அவரின் பக்குவத்தை காட்டுகிறது. கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதாரத் தடை, அகதி முகாம்களுக்கு அதிக சலுகை என தமிழக மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார்.

எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்த் “கேப்டன் பிரபாகரன்” என்ற படத்தின் மூலம் தன்னை கேப்டன் என்று அழைக்கும்படி சொன்ன அவர். ஈழம் மலரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என அறிவித்த அவர். தன் மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்த அவர். காங்கிரஸ் மீது கொண்ட தனிப்பட்ட பாசத்தால் எப்போதும் பெயருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு தன் தமிழ் பாசத்தை காட்டிக்கொள்வதோடு கடமையை முடித்துக்கொள்கிறார். மக்கள் இப்போதாவது இவரை புரிந்துகொண்டால் தமிழும், தமிழகமும் தப்பிக்கும்.

ஊடகங்களை பொருத்தவரை “புதிய தலைமுறை” தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. “தினத் தந்தியும், விகடனும்” தவிர மற்ற பத்திரிக்கைகள் இந்த விசயத்தில் தொடர்ந்து மோசமாகவே நடந்துகொள்கின்றன. தமிழக மக்கள் எல்லோரும் தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் சில சுயநல அரசியல்வாதிகளைப் போல இலங்கையில் இருக்கும் சிலரும், புலம்பெயர்ந்த சிலரும் தொடர்ந்து த்மிழக இன உணவாளர்களை கேலி பேசுவதும் வருத்தமாக இருக்கிறது. 

எது எப்படியோ விடுதலைப்புலிகளை காட்டி தமிழ் மக்களை புறக்கணித்த உலகம். விடுதலைப்புலிகள் இல்லாமல் ஆன பிறகும் தன் அரசியல் நிலைப்பாட்டை நடுநிலமையோடு எடுக்கும் என்று நம்புவோம். தொடர்ந்து முன்னெடுப்புகளையும், கவன ஈர்ப்புகளையும், போராட்டங்களையும் நடத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்..

”தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!!

6 மார்., 2012

பயோடேட்டா - கூடங்குளம் ...


பெயர்                                  : அணுச்சமாதி
இயற்பெயர்                        : 
கூடங்குளம்
தலைவர்                            : உதயகுமார்
துணை தலைவர்கள்       : நாராயணசாமி, கலாம் & Co
மேலும் 
துணைத் தலைவர்கள்    : காங்கிரஸ் & பி.ஜே.பியில் வெட்டியாய் இருப்பவர்கள்
வயது                                : 15 வருடங்கள்

தொழில்                         : மின்சாரம் தயாரிப்பதாக சொல்வது
பலம்                                 : சளைக்காமல் போராடும் மக்கள்
பலவீனம்                          : அநியாய மின்வெட்டு
நீண்ட கால சாதனைகள் : அரசியல்வாதிகளை, விஞ்ஞானிகளை? புலம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள்   : தமிழக அரசின் மவுனம்
நீண்ட கால எரிச்சல்         : காங்கிரஸ்காரர்கள், தினமல்ர்
சமீபத்திய எரிச்சல்          : கருணாநிதி
மக்கள்                                : உரிமையை விட்டுக் கொடுக்காதவர்கள்
சொத்து மதிப்பு                : 
14000 கோடியாம்
நண்பர்கள்                          : ஊடகங்கள்
எதிரிகள்                            : கூடங்குளத்துக்கு வெளியில் இருக்கும் 

                                              அத்தனை சுயநலவாதிகளும், 
ஆசை                                : நிரந்தரத்தடை
நிராசை                              : விரைவில் தமிழக அரசின் ஆதரவோடு திறந்துவிடுவார்கள்

பாராட்டுக்குரியது            :  உதயகுமாரின் மனவலிமை
பயம்                                 : அணு உலைகளின் வரலாறு
கோபம்                             : மக்களை மதிக்காத அரசியல்வாதிகள்

காணாமல் போனவை  : பதினெட்டு கேள்விகளுக்கான பதில்
புதியவை                        :  நிரூபிக்க முடியாத வெளிநாட்டு பண உதவிகள்
கருத்து                             : மக்களிடம் இருக்கக்கூடாதது
டிஸ்கி                              : வாக்குக்காக மக்களின் முன் காலில் விழும் அரசியல்வாதிகள்
                                            இப்போது மட்டும் மக்களை சந்திக்கமாட்டோம் என்று சொல்வது
                                            அயோக்கியத் தனத்தின் உச்சம்.
                                            

4 மார்., 2012

சின்னாத்தா...


தொரட்டிய எடுத்துட்டு காலம்பர 
ஆடுகளயும் பத்திட்டு போவும்
பெரியசாமித்தேவர் 
பொழுசாயத்தான் வருவாரு..

கெழவனும் சொத்துபத்த பிரிச்சுட்டு
வாக்கப்பட்டவ போனபின்னே 
மருமவகிட்ட கையேந்தாம 
கொல்லையில குடிசபோட்டு ஆடுகளோட 
கெடக்காரு..

தேவருக்கு தொடுப்புன்னு ஊரு சனம் பேசும் 
செல்லாயி சாதி சனம் அத்தவ 
ஊரு விட்டு ஓடி வந்து அடைக்கலமானவ,
பாம்பு புடுங்கி புருசன்காரன் செத்துப்போவ
தேவர் தரும் வெத்துலாக்கு போட்டுட்டு 
கஞ்சி காச்சி எறக்கி வப்பா...

ஒரு நா  தேவரும் பொசுக்குன்னு போவ 
பதினாறு நாளும் அழக்கூட இல்லாம 
அம்புட்டு வேலையும் ஒத்தயா பாத்து 
ஆடுகள பாத்துகிட்டு, ஆருட்டயும் பேசாம 
அங்கனயே கெடந்தா...

பதினேழாம் நாளு
கெழவனோட குடிசையும்,ஆடும் 
யாருக்குன்னு வந்தப்ப..
”செல்லாயி எங்க சின்னாத்தா மாதிரிதென்
அவளே அங்கெருந்து பொங்கி தின்னட்டும்”
எனக் கெழவனோட பெரிய மவன் சொல்ல,
பெருங்குரலெடுத்து
”நாம் பெத்த மக்கா”ன்னு ஒப்பாரி வச்சா 
சின்னாத்தா.. 

2 மார்., 2012

காலம்...


பிரேதேச இருப்பில்
துப்பாக்கிகள் பேசின
நடுங்கும் இதயம் கொண்ட
திராணியற்ற தலைவன் 
யாவும் நானென்றான்
அப்படியே ஆகுக
வழிமொழிந்த பேய்கள்
எப்போதும் வழிமறிக்கும்
கன்னியர் விலக்கான நாளில்
சாபமிட்ட முனிவர்கள்
சிரம் கொய்தன..

ரத்தம் சிதறிய நாளிதழ்கள்
காதலை வகைப்படுத்தின
கொலைகளை விவரித்தன
செவ்வகப் பெட்டிக்குள்
வாழ்வை தொலைத்த பெண்கள்
உஷ்ண மூச்சுகளால்
மின்சாரம் சாடினர்..

போலிச் சாமியாடி
கருத்த திரேகத்தில்
அறியாத் தழும்புகளோடு
புதிர் அவிழ்க்கும்போது
நிலநடுக்க நேரம்
பத்தே வினாடிகள்
சகலமும் ஆடி 
சமம் மீண்டன..