28 நவ., 2010

எங்கே போகிறது இந்தியா? பகுதி - இரண்டு...

முதல் பகுதியைப் படித்துவிட்டு இந்தியாவின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து சொல்லி நம்பிக்கை விதைகளைத் தூவலாமே எனப் பதிவுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியும் வந்தனமும். இந்தியா நமது தாய் தேசம் இது சீர்கெட்டுப் போகிறதே என்கிற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை. பொதுவாகவே ஒட்டு மொத்த இந்தியாவும் ஆழமான கலாசார வேர்களைக்கொண்டது. ஆனால் அது மட்டுமே நமது பலம் அல்ல. நண்பர் வசந்த் இந்தியா இப்படியே இருப்பதுதான் சரி, இப்படியே இன்னும் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தால் உலகில் மற்ற நாடுகளில் வாழும் அனைவரும் இந்தியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக பார்ப்பார்கள். இயற்கைத்தன்மையுடன் நாம் வாழ்வதாக அதிசயிப்பார்கள் என்று சொல்வார்.


நீங்கள் பொது விநியோக மையங்களில் ( ரேசன் கடைகளில்௦௦) சென்று பொருட்கள் வாங்கியதுண்டா? அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தர்மத்திற்கு வேலை செய்பவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிகாரம் தூள் பறக்கும், எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்டிக் கேட்கவே முடியாது, காரணம் மீண்டும் அவன் அந்தக் கடைக்கு வந்தே ஆக வேண்டும். இதே நிலைதான் அரசு ஊழியர்கள் அனைவரின் செயல்பாடும், சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள், ஒழுங்கான வேலைகள் செய்து தருவதற்கே பணம் அழ வேண்டும். புரோக்கர்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்கிற நிலைமைதான். சமீபத்தில் சென்னையில் அரசு பேருந்து நடத்துனருக்கும், அந்த பகுதி கவுன்சிலருக்கும் நடந்த சண்டையால் அன்று நாள் முழுதும் சென்னையின் அனைத்து பேருந்து ஊழியர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசையும், மக்களையும் நிலை குலைய வைத்தனர். காவல் நிலையங்களில் ஒரு சாதாரண நபரின் புகார்களை எப்படிக் கையாளுவார்கள் எனத் தெரிந்தவர்கள் அறிவார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் அல்ல, நாம்தான் காரணம்.ஒரு அரசு அதிகாரியோ, காவலரோ. கவுன்சிலரோ, அமைச்சரோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நம்மில் ஒருவர்தான். அவர்கள் யாரும் மேலோகத்தில் இருந்து திடீரென குதித்தவர்கள் அல்லர். ஆனால் நாம் சுலபமாக குறை கூறுகிறோம். பிரச்சினை என வந்தால் ஒதுங்கிக்கொள்கிறோம். போக்குவரத்து விதிகளை நாம் யாராவது முறையாக பின்பற்றுகிறோமா? சிக்னலில் காவல் துறை அதிகாரி இல்லையென்றால் நாம் யாரும் சிக்னலை மதிப்பதே இல்லை. ஒரு காரியம் உடனே ஆகவேண்டும் என்று அதற்கான பணத்தை லஞ்சமாகக் கொடுக்க தயாராய் இருக்கிறோம். எனது நண்பர் தனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றார், நான் அதற்கான விதிமுறைகளை விளக்கினேன் , ஆனால் அவரோ நான் போகாமல் எடுத்து தர ஆள் இருக்கா எனக்கேட்டார். பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான ஆவணம் அதை ஏஜெண்டுகள் மூலம் கொடுப்பதே இந்திய அரசின் தவறான கொள்கைகளில் ஒன்று. இப்போது ஒரு பாஸ்போர்ட் எடுக்க சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ள அரசு இன்னும் ஏன் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு நாள் நேரம் ஒதுக்கி பாஸ்போர்ட் எடுக்கப் போக விரும்பாத சோம்பேறிகள் நாம். இப்படி ஏஜெண்டுகள் மூலம் பெறப்படும் பாஸ்போர்ட்டில் நிறைய குளறுபடிகள் வந்திருக்கின்றன.இந்தியாவின் இன்னொரு மோசமான விசயம் வரிசையில் நிற்காதது , பெட்ரோல் பங்கில் துவங்கி அனைத்து இடங்களிலும் யாரும் வரிசைப்படி செல்வதே இல்லை. மின்சார கட்டணம் கட்ட நாம் காத்திருப்போம் ஆனால் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து நேரடியாக அதிகாரியிடம் நான்கைந்து கார்டுகளை கொடுத்து பணம் கட்டும் கட்சிக்காரர்கள். மருத்துவமனையில் அதுவும் அரசு மருத்துவ மனைகளில் நம் ஆட்கள் முண்டியடிப்பது என ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நாம். சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம், ஆனால் வரிசைப்படிதான் அங்கு எல்லாம் நடக்கும். மலேசியா கூட நிறைய விசயங்களில் நம்மைவிடவும் பத்து வருடங்கள் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள், அவர்கள் கூட வரிசை மாற மாட்டார்கள். அடுத்து குப்பை போடுவது, நம் வீட்டு குப்பைகளையும், மீந்த உணவுகளையும் அப்படியே சாலையில் கொட்டுவது, இதனால்தான் நிறைய வியாதிகள் சுலபமாக பரவுகின்றன, இதையெல்லாம் விட உடல்நிலை சரியில்லாத போது தனியாக ஓய்வு எடுக்காமல் எங்கும் சுற்றி தாம் பெற்ற துன்பத்தை அனைவருக்கும் பரப்புவது. அடுத்து உணவு, இந்த விசயத்தில் நாம் மிக மோசமானவர்கள் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், நம் தேசத்தின் உணவகங்களின் சமையல் கூடங்களுக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் அப்புறம் வாழ்நாளில் உணவகம் பக்கமே போக மாட்டீர்கள், ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் சில பெரிய உணவகங்களும், சிறு நகரங்களில் பெயர் சொல்லகூடிய சில உணவகங்களும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.சீனாவை விடவும் இருபது வருடங்கள் நாம் பின்தங்கியுள்ளோம். அவர்களை நாம் பின்பற்றி உற்பத்தி துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நம் மக்கள் தொகை நமது வரப்பிரசாதம். நமக்கென்று ஒரு மிகப்பெரிய சந்தை நம் கைவசம் இருக்கிறது எனவே உற்பத்தி துறையின் மூலமே நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். உணவுப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதற்கான விசயங்களை மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும். நமது பாரம்பரிய கலைச்சின்னங்களை மேம்படுத்தி சுற்றுலா வாசிகளை அதிகம் ஈர்த்தால் , நமது கலை வடிவங்கள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாக் கிராமங்களிலும் நூலகத்தை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தினை இளையோரிடம் உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...

27 நவ., 2010

மாவீரன் நாள் ...


நந்தலாலா - இசைத்தாலாட்டு ....

முதலில் இளையராஜாவின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு இந்த விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கிறேன். என் வாழ்நாளில் முதல்நாள் முதல் ஷோ படம் பார்த்துவிட்டு அதே படத்தை அடுத்த ஷோவும் பார்த்த ஒரே படம் நந்தலாலா மட்டும்தான். தமிழ் சினிமாக்களில் குளோசப் காட்சிகளைப் பார்த்து பார்த்து வெறுப்படைந்து இருந்த எனக்கு முதல் முறையாக முழுக்க லோ வைட் ஆங்கிளில் பெரும்பாலான காட்சிகள் நகர்வதும், ஒரு காட்சிக்குள் படத்தின் தொடர்புள்ள காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாமல் புகுத்தியுள்ள விசயமும் தமிழ் சினிமாவுக்கு புதியது.

தமிழ் படங்களில் பொதுவாக முகத்தை டைட் குளோசப்பில் காட்டிதான் வசனங்கள் தெறிக்கும், ஆனால் கால்களை வைத்தே அஞ்சாதே படத்தில் ஒரு சீனை நகர்த்திய மிஸ்கின் இந்த படத்தில் பெரும்பாலான ஷாட்டுகளை கால்களின் மூலம் புரிய வைத்திருப்பார். நிமிடத்திற்கு முப்பது கட் வைக்கும் ஆண்டனி போன்றவர்கள் நிச்சயம் இந்தப்படத்தை பார்த்து திருந்தட்டும். ஒரே ஷாட்டில் நீளமான காட்சிகளை வைத்து கதை சொல்வதும். கதை அடுத்த நகர்விற்கு போகும்போது நிலையான ஷாட்டுகளின் மூலம் நம்மை படத்திற்குள் இழுதுப்போடுவதும் முழுக்க முழுக்க இந்திய சினிமாவுக்கு புதியது.

இந்த படத்தின் மூலம் ராஜா யாராலும் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டார். படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே. தேவையான இடங்களில் மட்டும் தன்னை நிறுத்தி வசனங்களால் விவரிக்க முடியாத காட்சிகளை தன் இசையால் ரசிகனுக்கு சொல்வது அடடா.... அடுத்து ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து கேரக்டர்களை நகரவிட்டு எடுத்ததும், கேரக்டரும், கேமராவும் அசையாமல் ஸ்டில் போட்டோவை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும், கேரக்டர்கள் நகரும்போது அவர்கள் முன்னும், பின்னும், டாப், மட்டும் லோ வைட் ஆங்கிளிலும் நம்மை கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்றசெய்வதும் மகேஷ் முத்துசாமி அவர்களை தோளில் தூக்கி வைத்து பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேபோல் டிராட்ஸ்க்கி மருதுவின் கண்களை ஏமாற்றும் கலைவடிவம், தேர்ந்த எடிட்டிங் என எங்கும் குறை சொல்ல முடியாத உழைப்பு.

இது ஜப்பானிய மொழி ( Kikujiro (1999) by Takeshi Kitano )  தழுவல் என்றாலும், முற்றிலும் நமது கதைக்களனில்தான் படம் நகர்கிறது. வழி நெடுக சந்திக்கும் நபர்கள். அவர்களையும் உயிரோட்டமாக காட்டியது என முற்றிலும் மாறுபட்ட கதைக்களன். சிறுவன் அகி யாக நடித்த அஸ்வத்தின் கன்னங்களில் ஆயிரம் முத்தங்கள் தரவேண்டும். ஒரு தேர்ந்த அந்த வயதிற்கே உரிய புத்திசாலித்தனம் தனது அம்மாவை பாசமான பிம்பத்துடன் தேடி அலைவது என பையன் கலக்கியிருக்கிறான். பாஸ்கர் மணியாகவே நம்மை பார்க்க வைத்துவிட்ட மிஸ்கின் காலை தொட்டும் வணங்குகிறேன். மனிதன் என்னமா வாழ்திருக்கார். ஒரு கையில் நழுவும் பேண்டை பிடித்தபடி நடக்கவும், ஓடவும், சுமந்தவாறே ஓடவும் நிறைய சிரமப்பட்டிருப்பார். 


அடுத்து படம் முழுதும் வந்து கொண்டேயிருக்கிற தனித்தனி பாத்திரங்கள். எல்லோரும் தங்கள் பங்கினை வெகு சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பற்றி எழுத இந்தப்பதிவு போதாது. ஸ்னிக்தா, ரோகினி, இருவருமே நிறைவாக செய்து இருக்கிறார்கள். ஒரு குப்பை படத்தை 150 கோடியில் எடுத்து, அதனை ஹாலிவுட்டுக்கே சவால் என்று சொல்லிகொண்டவர்கள் இந்தபடத்தை பாருங்கள். இதுதான் நிஜமான ஹாலிவுட்டுக்கு இணையான படம். இந்த வருடத்தின் அத்தனை விருதுகளையும் பெறப்போகும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கும் அனைவரும் தயவு செய்து திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள். அதுதான் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான தமிழ் சினிமா வர வழிவகுக்கும்.  

26 நவ., 2010

எங்கே போகிறது இந்தியா? பகுதி - ஒன்று ...

தினமும் ஒரு ஊழல், சில கொலைகள், நிறைய திருட்டு, மோசடி இப்படி  நாம் படிக்கும், பார்க்கும் செய்திகள் இம்மாதிரியான விசயங்களுக்கு நாம்  பழகிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது. எப்ப பணம் வாங்கிகொண்டு ஓட்டுபோட தயாராக இருந்தோமோ அப்போதே நமக்கு இதை எல்லாம் தட்டிக்கேட்கும் அதிகாரமும் கைவிட்டுப்போயவிட்டது. மிகப்பெரிய ஜனநாயக நாடு என இன்னும் எத்தனை நாளைக்கு பெருமையாக சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள். அரசியல் பலமும், அதிகார பலமும் இப்போது நீதியையும், ஊடகத்துறையும் வலைத்துவிட்டன. தமிழகத்தில் இருக்கும் எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள் அல்லது அவர்கள் பிடியில் இருக்கின்றன. அதனால் ஒரு ஒழுங்கான செய்திகூட இப்போது வருவதில்லை. நமக்கென்ன என்று எல்லோரும் ஒதுங்கிக்கொண்டு விட்டோம். காரணம் கட்டுங்கடங்காமல் போன விலைவாசியினால் நமக்கு யோசிக்கவே நேரமின்றி பணத்தின் பின்னால் நாம் ஓடிக்கொண்டு இருப்பதுதான்.

சுதந்திரம் வாங்கியபின் காந்தி சொன்னார் காங்கிரசை கலைத்துவிடுவோம் என, அதற்கு ஒத்துகொள்ளாத தலைவர்கள் நேரு தலைமையில் இந்தியாவை ஆள ஆரம்பித்தார்கள், இந்திரா வரைக்கும் ஓரளவுக்கு நன்றாகத்தான் நடந்தது. ஆனால் ராஜீவ் காந்தி பதவிக்கு வந்ததும் இந்தியா இப்படி தரங்கெட காரணம் ஆனார். ஒரு இத்தாலி பெண்மணியை மணந்தவருக்கு எப்படி இந்திய தேசத்தின் மீது அக்கறை இருந்திருக்க முடியும். அன்றைய சந்தர்ப்பம் அவரை முடிசூட வைத்தது,. இந்திரா ஒதுக்கி வைத்திருந்த அனைவரும் சந்தர்ப்பம் பார்த்து ராஜீவுடன் கரம் கோர்த்தனர். இந்திய தேசத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை, இந்திரா உருவாக்கிய புலிகள் இயக்கத்தினரை மலையாளிகளின் வழிகாட்டுதலால் சிங்களனுக்கு ஆதரவாக களமிறங்கி தன்னையே இழந்தார் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்திக்குப் பின் காங்கிரஸ் பின்னுக்கு போகத் துவங்கியது. பாரதிய ஜனதா எழுச்சியுர ஆரம்பித்தது. பிரியங்காவை முன்னிறுத்தி காங்கிரசார் அரசியல் பன்ன விரும்ப, பிரியங்கா ஒதுங்கிக்கொண்டு தம்பி ஆளாகும்வரைக்கும் அன்னையை முன்னிறுத்தி தான் பின்னால் இருந்துகொண்டார். முட்டாள் பி.ஜெ.பி காரர்கள் சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவுகளால் மீண்டும் கட்டமைக்க முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டனர். இத்தாலியை பிறப்பிடமாக கொண்ட சோனியாவுக்கு இந்தியாவின் மீது எப்படி அக்கறை இருக்கும். வாய்ப்பு கிடைத்து தனக்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். மீண்டும் மலையாளிகளின் உதவியுடன் தமிழினத்தை பூண்டோடு அழிக்க உதவினார். அந்த நேரத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டிய நாம் மௌனம் காக்க, காங்கிரஸ் புண்ணாக்குகள் இந்திராவின் மரணத்திற்கு காரணமான இனத்தின் நபரை பிரமதர் ஆக்கி அழகு பார்க்கிற புடுங்கிகள் அன்னையின் மனம் குளிர ராஜீவ் படுகொலை பற்றி பேசி விசுவாசத்தை காட்ட அடித்துகொண்டனர். 

பிரச்சினை முடிந்து விட்டது, விடுதலைபுலிகளும் இல்லை என்று ஆனபின் இன்னும் ஏன் சமஉரிமை கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டிய இடத்தில் இருந்த கலைஞர் சரியாக அதே நேரத்தில் தன் குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி வேண்டி டெல்லியில் தவம் கிடந்தார். ஆனால் வெட்கமில்லாமல் இன்னும் அங்கு மின்வேலி முகாமுக்குள் கிடப்பவர்கள் பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் இரண்டாம் முறை பொறுப்பேற்றவுடன் வரிசையாக அதன் வண்டவாளங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. போன ஆட்சியில் போடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இப்போது எந்த நிலைமையில் இருக்குன்னு தெரியல. வாஜ்பாயின் திட்டமான தங்க நாற்கர திட்டத்தை செயல் படுத்தி அதனை தங்களின் திட்டமாக விளம்பரம் போட்டுகிட்டாங்க. அடுத்து தெலுங்கானா பிரச்சினை, அதற்காக போராடியவர்கள் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள், அதற்கடுத்து தண்டகாரண்யா பிரச்சினை, இன்றைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் கட்டுபாட்டில், இன்றுவரைக்கும் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடிக்கின்றனர். வீரப்பனை சுட்டுகொன்ன  விஜயகுமார் பொறுப்பேற்று இருக்கிறார், அனேகமாக நக்சலைட்டுகளை பூண்டோடு ஒழிக்கும் திட்டம் தயாராகி கொண்டிருக்கும். இப்ப ஆந்திரா, கர்நாடக இரண்டையுமே கட்சி வேறுபாடின்றி ரெட்டி சகோதரர்கள் கையில் வைத்திருக்கின்றனர். 

மும்பையில்  தீவிரவாதிகள் தாக்குதலின்போது பலியான கார்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கி போலியானது என விசயம் கசிந்தபோது பல்லிளித்த அரசு, சசிதரூர் விசயத்தில் மவுனம் காத்த அரசு அவர் ராஜினாமாவுடன் எல்லாம் முடிந்து போகும் என நினைத்தால், அதற்கடுத்து கல்மாடி, இவரால் இந்தியாவின் ஒட்டுமொத்த மானமும் விமானம் ஏறியது. அடுத்து அசோக் சவான், இப்ப ராசா, நாளைக்கு யாரோ. இதற்கிடையில் கர்நாடாகாவில் எடியூரப்பா இதுவரைக்கும் பதவியை பிடித்து தொங்கிகொண்டிருக்கிறார். பி.ஜெ.பி இந்த விசயத்தில் மவுனம் காப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை.  இன்றைய தேதியில் தமிழகத்தின் அதிகார மைய்யங்கள் கணக்கில் வராத அளவுக்கு இருக்கிறது,. முதல்வரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எல்லா இடங்களிலும் பரவி மன்னராட்சி நிலையை மறுபடி கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்கட்சியாக இருந்து தட்டிக்கேட்க்க கூடிய பலத்தையும், அதிகாரத்தையும் பெற்ற ஜெயலலிதா கொட நாட்டில் தூங்குகிறார். ராமதாஸ் தன் மகனுக்கு ராஜயசபா சீட் கொடுத்தால் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார். விஜயகாந்த் விருத்தகிரி படத்தில் பிசியாக இருந்துகொண்டு கூட்டணிக்கும், பெட்டிக்கும் மச்சானை அனுப்புகிறார். வைகோ, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் அறிக்கைகளை இப்ப யாரும் மதிக்கிறது இல்லை.இன்றைக்கு இதுதான்  தமிழ்நாட்டின் நிலைமை. 

மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவிக்கு ராகுல்தான் வருவார். இப்பவே கிட்டத்தட்ட ராகுலின் கையில்தான் காங்கிரஸ் இருக்கு, அதற்குள்ளாகவே இங்கு ஊழல் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது, அடுத்து இவரே வந்தால் என்ன ஆகும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் படு தோல்வி அடையவைத்த பீகார் மக்களால் ஓரளவுக்கு நிதானத்துக்கு வருவார்கள். பக்கத்து நாடான சைனா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் தலைமை பொறுப்பை ஏற்கபோகிறது , இப்பவே காஷ்மீருக்கு தனி விசா, அருணாச்சல பிரதேசம் என்னுது என பிரச்சினைய கிளப்புது. போகப்போக நமக்கு நிறைய ஆப்பு இருக்கு. சைனா உற்பத்தி திறனை தன்னகத்தே முழுமையாக கொண்டுவந்து உலக சந்தையில் முக்கால் வாசிக்கும் மேல் ஆதிக்கம் செலுத்திகொண்டிருக்கிறது. நாமோ இன்னும் சேவைத்துறையை கையில் வைத்துகொண்டு வல்லரசு கனவுகளில் காலம் தள்ளுகிறோம். 

நாளை எதுவும் நடக்கலாம்.. இன்றே விழிப்புணர்வு பெறுவோம் ...

25 நவ., 2010

தாய்மையுடைத்து ...

புனிதர்களின் விளக்கங்கள் 
தீர்க்கமானவை
பழய மொந்தையில் புதிய கள்,
தலையாட்டு, 
பின் பற்று, 
பற்றுகள் இருந்தால் எழுதிவை .

அயோத்தியின் தீ 
சீதையை  சலவை செய்து 
ராமனை அழுக்காக்கியது.

கறைபட்ட கணவனால் கைவிட்ட 
காரிகை 
ஒற்றைத் துணியுடன்,
இழுத்து வாவென்றவன் 
கொடையாளி..

பதி, வதியின் காதல் கொன்ற 
மதி கெட்ட மன்னன்
காணாமல் போனான் 
கம்பனும்..

மெரினா சுடுமணலில் 
குடையின் கீழ்
காதல் பார்த்தால் 
மிரட்டிவை காவலா என்றான்
இந்நாள் மன்னன் ..

அடங்காவிட்டால் 
அமாவாசை, பவுர்ணமி 
அலையும் மனதின் கூச்சல் 
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..

மார்க்கம் சொன்ன 
மார்க்கம் 
கணவனின் மனைவிமார்கள்
முக்காடுகள் சுமந்தவாறே..

பாதிரிமார்கள் புனிதர்கள், 
இன்னொரு மீட்பன் வருவான்
கன்னியாஸ்த்ரீகளின் கருப்பையில் 
பிறப்பெடுக்க..

ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு...

அறுத்துக்கட்டிய " அகமுடையார்கள்"...

தேவர் இனமக்கள் பொதுவாக மூன்று உட்பிரிவுகளில் அடங்குவார்கள் முக்குலத்தோர் என அழைக்கப்பட்ட கள்ளர், மறவர், அகமுடையார் என இம்மூன்றும் அதன் உள்ளடக்கங்களும் கொண்ட இவர்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த இனத்தின் திருமணங்கள் அதன் தனிபிரிவுகளுக்கு உள்ளேதான் பெரும்பாலும் நடக்கும் என்றாலும் கொஞ்சம் நகர வாழ்க்கைக்கு பழகிய பிறகு மற்ற பிரிவுகளிலும் இப்போது பெண் கொடுத்து, எடுக்கிறார்கள், தென் தமிழகம் முழுவதும் பரவலாக வாழும் இம்மக்களில் கள்ளர்கள் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மிகுதியாகவும், அகமுடையார்கள் திருவாரூர், புதுக்கோட்டை , மதுரை மாவட்டங்களில் மிகுதியாகவும், மறவர்கள் திருநெல்வேலி பகுதிகளில் மிகுதியாகவும் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி ரீதியாக தங்கள் சார்ந்த ஜாதியின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டவர்கள். இந்த ஜாதியில் மறுமணங்கள் பரவலாக நடைபெறும், ஆனால் எங்கள் ஊரில் மறுமணம் என்பது மிக அதிகம். அதனால் எங்கள் ஊர்க்காரர்களை மட்டும் சில வருடங்கள் முன்புவரைக்குமே அறுத்துகட்டிய ' அகமுடையார்கள்' என்றுதான் சுற்றுவட்டாரத்தில் அழைப்பார்கள்.

திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம் எங்கள் ஊரான பரவாக்கோட்டை கிராமம். சிங்கபூர்வரை தன் புகழை பரப்பியுள்ள இக்கிராம வாசிகள் அதன் சுற்றுவட்டார மக்களாலும் சற்று பயத்துடன் பார்க்கபடுகிறவர்கள். இதற்க்கு பலமான காரணம் ஒரு ஆளை கைவைத்தால் அவனுக்காக அந்த ஊரே திரண்டு வரும். அதனால் இந்த ஊர் ஆட்கள் என்றால் யாரும் வம்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மிகவும் பாசக்கார மக்கள் மிகுந்த ஊரும் இதுதான். இருபது வருடங்களுக்கு முன்புவரைக்கும் இத ஊர்காரர்கள் வெளியூர்களில் பெண், கொடுத்து எடுப்பது என்பது வெகு அபூர்வமான விசயம் அதிலும் அப்படி நடந்த திருமணங்களும் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று குடியேறியவர்கள், அல்லது அப்படி குடியேறியவர்கள் பார்த்துவைத்த மணமக்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எங்கள் ஊருக்குள்தான் சம்பந்தம் வைத்துகொள்வார்கள். பெண் பெரியவளானவுடன் மாப்பிள்ளை முடிவு செய்யப்பட்டுவிடும். காதல் திருமணங்களும் அதிகம் நடக்கும் இதுவும் உறவு முறைக்குள்தான் என்பதால் பெரிய எதிர்ப்பெல்லாம் இருக்காது. நான் திருமணம் செய்ததும் என் மூத்த சகோதரியின் மகளைத்தான், என் மனைவி கர்ப்பம் அடைந்தபோது நான் அவளை மருத்துமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு மருத்துவர் படிச்சவங்க நீங்களே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டார். நான் எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாக இப்படிதான் நடக்கிறது, ஆரோக்கிய குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது வெகு அபூர்வம் என்றேன். இப்போது எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்றுவரைக்கும் அவர்தான் மருத்துவர்.

பெரியாரின் கொள்கைகளை மிகத்தீவிரமாக பின்பற்றியவர்கள் எங்கள் கிராம மக்கள், அதுவும் பெரியார் பிறப்பதற்கு முன்பிருந்தே. விதவைகள் என்பது வெகு அபூர்வம், அதுவும் பிள்ளைகள் நிறைய பிறந்தபின் கணவர் இறந்தால் மட்டுமே. மற்றபடி சிறிய வயதில் கணவர் இறந்துவிட்டால் உடனே மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெரும்பாலும் இறந்த கணவரின் தம்பி, அப்படி தம்பி இல்லையென்றால் கணவரின் பங்காளி வீட்டில் உள்ள ஒரு ஆண் என எல்லோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். இது ஒரு பிரச்சினையாக அங்கு இன்றுவரைக்கும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என் பள்ளிதோழனுக்கு திருமணம் நடந்தது, திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியுடன் பிணக்கு ஏற்ப்பட்டு தற்கொலை செய்துகொண்டான், ஆனால் மருமகள் பக்கம் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட நண்பனின் குடும்பத்தினர், சிங்கப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நண்பனின் தம்பியை வரவழைத்து திருமணம் செய்து வைத்தனர்,. இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இப்போதும் அங்கு அய்யர் வைத்து மந்திரம் சொல்லி நடக்கும் திருமணங்கள் வருடத்திற்கு ஐந்துக்கும் குறைவாகத்தான் நடக்கும். எல்லாத் திருமணங்களும் தலைவர்கள் வைத்துதான் நடக்கும், தலைவர்களும் உறவு முறைக்கரர்களே, அரசியல் சார்ந்த சிலர் மட்டும் கட்சித் தலைவர்களை வைத்து நடத்துவார்கள். இப்படி ஒரு  விதவைத்திருமணம் செய்வது என்பது ஒரு சமுதாய புரட்சி என்பது அவர்களுக்கு தெரியாமலே இதனை செய்துவந்தார்கள். அதேபோல விவாகரத்து செய்வதும் எளிது பங்காளிகள் உள்ளடக்கிய பஞ்சாயத்தில் கூப்பிட்டு வைத்து பேசுவார்கள், பெரும்பாலும் வழக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஒன்று சேர்த்து வைத்து விடுவார்கள். முந்தய காலத்தில் விவாகரத்து செய்வதற்கு இரண்டு வீட்டுக் கூரையிலும் கொஞ்சம் பிய்த்து எடுத்துவந்து அதனை துண்டுகள் ஆகிவிட்டால் பிரிந்துவிட வேண்டியதுதான். சொத்துக்களும் சூழநிலைக் கேற்ப பிரித்து கொடுத்துவிடுவார்கள், அது அனைவரும் ஏற்றுக் கொண்ட தீர்ப்பாகவே எப்போதும் இருக்கும். ஆனால் சமீப வருடங்களாக ஒரு சில விவாகரத்து பிரச்சினைகள் நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறது.

அதேபோல் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது, சாதி மாறி திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாகத்தான் எப்போதாவது நடக்கிறது. சாதி மாறிய திருமணங்களை இப்போதுதான் லேசாக அங்கீகரிக்க துவங்கினாலும், அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் ஏனோ நகரங்களுக்கு நகர்ந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பெண்களை பக்கத்து ஊர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான். வரதட்சினை என்பதும் கட்டாயமாக இதுவரை இல்லை, பெண் வீட்டார் என்ன கொடுத்தாலும் ஏற்றுகொள்வார்கள். அதே போல இப்ப படிச்ச பொண்ணுங்க அதிகமா இருக்காங்க, ஆனா குறைந்த படிப்பு மாப்பிளை படிச்சிருந்தா அதனையும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை பையனின் குடும்பமும், பையனின் திறமையும்தான் அளவுகோலே. முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் பெண்களை படிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது கல்லூரி வரைக்கும் அனுமதி தருகிறார்கள், படிப்பு முடிந்து சில பெண்கள் சென்னைவரைக்கும் வந்து வேலை பார்கிறார்கள். இப்படி வெளியில் அனுப்புகிறவர்களிடம் கட்டாயம் வாங்கபடும் சத்தியம் போகிற இடத்தில் காதல், கத்தரிக்கானு எதுவும் இருக்ககூடாது, ஒருவேளை யாரையாவது புடிச்சிருந்தா அவன் தேவர் சமூகத்தில் பிறந்தவனா இருக்கணும் என்பதுதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் எத்தனை வருடம் தாங்கும் எனத் தெரியவில்லை.

நான் காதலித்த பெண் வேளாளர் வகுப்பை சேர்ந்தவள், அவள் விபத்தில் இறந்தபின் திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை மிகவும் கட்டயபடுத்திதான் என் சகோதரியின் மகளை திருமணம் செய்து வைத்தார்கள். என் மனைவியிடம் என் கடந்த கால வாழக்கை பற்றி விபரமாக எடுத்து சொல்லி அவள் சம்மதம் பெற்றபின்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் தாலி கட்ட மாட்டேன் என சொன்னேன். அதனால் மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அன்றைக்கு மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். தாலி கட்டவில்லை, இன்றுவரைக்கும் என் மனைவி மெட்டி கூட அணிவதில்லை . என் வீட்டின் பூஜையறை தேவையற்ற பொருட்களை போட்டுவைக்கும் இடமாகத்தான் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு சாமி, கோவில், கடவுள், பூஜை இந்த விசயமெல்லாம் மேலோட்டமாக மட்டுமே தெரியும், மத சம்பந்தமான சடங்குகள் எதுவுமே நான் செய்வதில்லை. நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. இன்றுவரைக்கும் ஆன்மிகம் சம்பந்தமான அத்தனை விசயங்களையும் தேடித்தேடி படிக்கிறேன், அடிக்கடி திருவண்ணாமலை போவேன், நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

நான் பெரியாரிஸ்ட்டுதான், கம்யூனிசத்தை ஆதரிக்கும் கேப்பிடலிஸ்ட்டுதான் ஆனால் இந்த சமுதாய ஒழுங்கில் இருந்து நான் ஒருபோதும் வெளியில் சென்றதில்லை.  அதன் உள்ளேயே இருந்துகொண்டுதான் அதனை விமர்சிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்கிறேன். என் வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும். தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த  ஒரு சமூகத்தின் கிளையே நானும்..

மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்..

23 நவ., 2010

பயோடேட்டா - கலாசாரம் ...


பெயர்                        :  கலாச்சாரம்                                      
இயற்பெயர்                    : கற்புநிலை                     
தலைவர்கள்                     : மதவாதிகள், குருமார்கள்                        
துணைத் தலைவர்                : மேல்சாதிக்காரர்கள்        
மேலும்
துணைத் தலைவர்கள்            : எல்லா ஆண்களும் 
வயது                        : வேட்டைச் சமூகம் விவசாயம் செய்யத் துவங்கிய 
                                    காலம் முதல்                 
தொழில்                    : ஸ்கூல் வாத்தியார் மாதிரி கையில் குச்சியுடன் மிரட்டுவது              
பலம்                        : சமூகக் கட்டமைப்பு                  
பலவீனம்                    : நவநாகரீகம் பேசும் அரைவேக்காட்டுக் கலாச்சாரப் 
                                        புரட்சியாளர்கள்            
நீண்ட கால சாதனைகள்            : சமூகம் அடுத்தடுத்த படிகளில் ஏற ஏணியாய் இருந்தது
சமீபத்திய சாதனைகள்            : மாற்றங்களை ஏற்றுக் கொள்வது (வேறு வழியே இல்லை!) 
நீண்ட கால எரிச்சல்            : கிளர்ச்சியாளர்கள் (பெரியாரிஸ்டு, கம்யூனிஸ்டு 
                                                  இன்ன பிற இஸ்ட்டுகள்...)    
சமீபத்திய எரிச்சல்                : லிவிங் டுகெதர்     
மக்கள்                        : செம்மறியாடுகள்                 
சொத்து மதிப்பு                : செவ்விலக்கியங்களும், காலத்தால் அழியாத 
                                              கலைச் செல்வங்களும்         
நண்பர்கள்                    : ஆமாஞ்சாமிகள், கலாச்சாரக் காவலர்கள் (சிவசேனா, 
                                         அல்-கொய்தா, பெந்தகோஸ்தே, வஹாபிகள்)            
எதிரிகள்                    : சினிமா, பப் மற்றும் டிஸ்கொதே ஹால்கள்             
ஆசை                        : உடல் மறைக்கும் ஆடை                
நிராசை                    : அங்கங்கள் மின்ன மின்ன...               
பாராட்டுக்குரியது                : காட்டுமிராண்டிகளை நாகரீகமாக்கியது       
பயம்                        : கலாச்சாரக் கலப்புகள்                 
கோபம்                    : எதிர்த்துக் கேள்வி கேட்பது    
காணாமல் போனவை            : குடும்ப ஒற்றுமை மற்றும் உறவு முறைகள்     
புதியவை                    : கலப்புத் திருமணங்கள்               
கருத்து                    : லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் போலிக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?                 
டிஸ்கி                        : நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்
--  

22 நவ., 2010

மேய்ப்பனைத் தேடும் மந்தைகள்...


ஆனைமுகனுக்கு அருகம்புல், தோப்புக்கரணம் 
அளவாய்ப் பிடித்த கொழுக்கட்டை
ஆண்டி முருகனுக்கு பஞ்சாமிர்தக்காவடி 

அம்மனுக்கு கூழும், வேப்பிலையும்
திருப்பதிக்குப் போனா மொட்டை காணிக்கை
குலசாமிக்கு கவிச்சி மணக்க கெடாவெட்டு, சாராயமும்

முப்பெரும் கடவுளுக்கு சமஸ்கிருதம் தாய்மொழியாம்
சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..


அல்லாவுக்கு ஜும்மா கட்டாயம் 
ஏசுவுக்கு ஞாயிறு பிரார்த்தனை,

அப்புறம்
வசதிக்கு தக்க விரதமோ,நேர்த்திக்கடனோ 
இல்லாவிட்டாலும் இருக்கின்றன
வழிநெடுக மரங்கள் 
மஞ்சள் குளித்தபடி...
எப்போதும் மிச்சமிருக்கும்
ஏதேனும் ஒரு வேண்டுதலும்
ஏதேனும் ஒரு காணிக்கையும்
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"எல்லாம் அவங் கொடுக்குறது!"

அதன்பிறகும்
ஆனந்தாக்களின் கைகளும்
கால்களும் நீளும்
சாம்பல் பூசிவிடவும்
பாதம் கழுவப்படவும்...
"சிவாய நம!"பெறும் 
(ஆ)சாமிகள்
தருவதில்லை எப்போதும்...

நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்
மேய்ப்பனைத் தேடி....

21 நவ., 2010

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...


If you were just intent on killing people you could do better with a bomb made of agricultural fertilizer. -Ian Hacking 

நகரத்தின் புழுதிகளை சுமந்து சுமந்து என் கைகளும், முகமும் எங்கள் கிராமத்து வயல்களில் வேலை பார்த்த மகளீரின் கரங்கள் போல் ஆகிவிட்டன. அன்றாடம் இரு சக்கர வாகனத்தில் சென்னை வீதிகளில் சர்க்கஸ் பழகும் அத்தனை பேருக்கும் இப்படித்தான் ஆகிவிட்டது, அதுவும் மழைவிட்ட மறுநாள் அடிக்கும் வெயிலில் கிளம்பும் புழுதி இலவசமாய் எங்கள் தலைகளுக்கு டை அடித்துவிட்டுப்போகும், அதனால் ஷாம்பூ கம்பெனிகள்தாம் வாழ்கின்றன. சமீபத்தில் என் நண்பன் விக்கிரவாண்டி அருகே ஒரு அரைகிரவுண்டு வாங்கப்போவதாக சொன்னான். அங்க வாங்கி என்னடா பண்ணுவே என்றேன். சும்மா ஒரு முதலீடு செஞ்சு வைக்கத்தான் என்றான். நான் ஊருக்கு போகிறபோதெல்லாம் செங்கல்பட்டு தாண்டியபின் இரு புறமும் சவுக்கு காடுகளையும், திண்டிவனம் தாண்டியபின் முந்திரிக்காடுகளையும், சேத்தியாதோப்பு தாண்டியபின் பசேலென நெற்பயிர்களையும் பார்ப்பேன், பகலில் பயணம் செய்யும்போது இதனை வழிநெடுக பார்க்கையில் மனதிற்கு இதமாக இருக்கும். ஆனால் கடந்த இருபது வருடத்தில் மெல்ல பொலிவிழந்து பொட்டல் காடுகளாய் கற்தூண்கள் நட்டுவைக்கப்பட்டு வீட்டுமனைகள் ஆக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும் நகர வாசிகள் தங்கள் முதல் முதலீடுகளை தங்கத்திலும், அதற்கடுத்த முதலீடுகளையும் வீட்டுமனைகளிளும்தான் போடுகிறார்கள். தங்கம் அதன் விலையில் பல மடங்கு ஆகிவிட்ட நிலையிலும், அதன் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறிதான்,காரணம் சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தூக்கப்போவதாக சொன்னதும், அதன் விலை கிராமுக்கு Rs.1200 க்கு வந்துவிடும் என வியாபாரிகள் சொன்னதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் நிலம் அப்படி அல்ல போட்ட காசுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும். காரணம் ஒரு நிலம்போல் மற்றொரு நிலத்தை நாம் உருவாக்கவே முடியாது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளிகிழங்கு விளைவித்து அதனை வண்டி கட்டி பக்கத்து ஊர்களில் எடுத்து சென்று விற்ப்பார்கள். நெல்லை வாங்கிக்கொண்டு கிழங்கை தருவார்கள், பின்னர் சிங்கப்பூர் சம்பாத்தியம் அதனை நிறுத்திவிட்டது. படிப்படியாக எல்லா நிலங்களிலும் தென்னை மரம் நடப்பட்டு விட்டது. இதனால் தற்போது நாடு திரும்பிவிட்ட எங்கள் ஊர்க்காரர்கள் பாலங்களில் அரட்டைகச்சேரிகளும்,மாலையானால் டாஸ்மாக் பார்களிலும் பொழுதை கழிக்கிறார்கள். மற்றவர்களும் தங்கள் வயல்களை குத்தகைக்கு விட்டுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்துவிடார்கள். நான் உட்பட, நானும் விவசாயத்தை மறந்து தொழிலதிபர் கனவுக்கு மாறி, நிரந்தரமாக சென்னைவாசியாகிவிட்டேன், ஆனால் தற்போது வியாபாரம் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க படிக்க இனி இந்த உலகின் நடக்கபோகும் அடுத்த புரட்சி என்பது, தண்ணீருக்கும், உணவுக்கும் நாம் கொடுக்கபோகும் விலைதான். நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்புக்கு நாம் செலவிட்ட தொகை இன்றைய கணக்கில் பைசாக்களாக குறைந்துவிட்டது. ஆனால் இன்றைக்கு ஒரு கிலோ சர்க்கரை விலை எக்கச்சக்கமாக ஏறி விட்டது. இதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது. சர்க்கரை மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்க்கு வாங்கிகொண்டிருக்கும் மளிகை பொருட்களின் விலை அதிகமாகிகொண்டே வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம் உணவுத்தேவை என்பது மிகுந்துவிட்டது, ஆனால் உற்பத்தியோ குறைந்துகொண்டே வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணம் எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது. இன்னும் நில உச்சவரம்பு சட்டம் உயிரோடு இருக்கிறது. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கபட்டுவிட்டன. விவசாயிகளும் அதிக விலை கிடைக்கிறதே என தங்கள் நிலங்களை விற்றுவிட்டார்கள். சமீபத்தில் மானாமதுரைக்கு போயிருந்தேன் அங்கு ஒரு வட இந்திய சேட்டிடம் ஆயிரத்து முந்நூறு ஏக்கர் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதாக சொன்னார். அவர் ஒரு சென்ட் நிலத்தை ஐம்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இப்பொது சென்ட் ஐந்நூறுக்கு விற்க தயாராக இருப்பதாக சொன்னார். நான் இடத்தை சென்று பார்வையிட்டேன், அருமையான விளைநிலம் ஆனால் ஆண்டுக்கணக்காக அவை விவசாயம் செய்யபடாமல் இருந்தது. அதற்கான காரணத்தை விசாரித்த போது அங்கு வசிக்கும் மக்கள் மிக சொற்பம், அவர்களுக்கான தேவைகளும் மிக குறைவு அதனால் சும்மா கிடக்கும் நிலம்தானே என விற்றுவிட்டு நகைகள் வாங்கிவிட்டனர். 

ஆனால் இவர்களுக்கு போதுமான வழிப்புணர்வு இருந்தால் அந்த நிலத்தை விற்றிருக்கமாட்டார்கள். அமெரிக்காவில் ஐநூறு ஏக்கர் நிலத்தை மூன்று பேர் மட்டுமே உள்ள குடும்பத்தினர் நிர்வாகிப்பார், காரணம் அவர்களுக்கு கிடைக்கபெற்ற அரசு மானியங்களும், கடனில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களும், ஆனால் குடும்பத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கும் நம் ஆட்கள் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். ஒரு காலத்தில் முறையாக கூட்டு விவசாயம் செய்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை கால மாற்றத்தில் வயலில் இறங்காமலே சாப்பிட நினைப்பதால்தான் இந்த நிலைமை. கூட்டு விவசாயம் என்பது ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு ஒருவர் வயலில் மற்றவர்கள் வேலை செய்து கொடுப்பது. இப்போதோ ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை (தஞ்சை, நாகை, திருவாரூர்) எடுத்துகொண்டால் ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒரே பயிரை விவசாயம் செய்வார்கள். பின் ஆட்கள் எப்படி கிடைப்பார்கள். அதிலும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். அதிலும் ஒழுங்காக பட்டம் பார்த்து விதைக்காமல் பருவ மாற்றங்களில் சிக்கி நிவாரண நிதி கேட்டு அரசிடம் கையேந்துவார்கள். அரசு ஒதுக்கிய தொகையை கிராம நிர்வாக அதிகாரி, கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பங்கிட்ட பிறகு கிடைக்கும் மிச்சத்தை வாங்கி சரக்கடிச்சுட்டு உலக அரசியல் பேசுவார்கள்.

உங்களுக்கு விவசாய ஆர்வம் இருந்தால் விவசாயம் செய்ய வாருங்கள், நம் மரபு விதைகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யுங்கள். நம்மிடம் இருந்த அற்புதமான விதைகளை நாம் இணைந்து மீண்டும் உருவாக்கி ஒரு புதிய புரட்சியை செய்வோம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற ஏமாற்றுக்காரர்களின் முகமூடியை கிழிப்போம். நம்மாழ்வார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் வழி நடந்து தரமான, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விளைய வைப்போம். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி ஏக காலத்தில் நிறைய உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை அநேக விவசாய ஆர்வலர்கள் இலவசமாக நமக்கு சொல்லித்தருகிறார்கள். எங்கோ ஒரு நாட்டில் பிறந்து புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில்லில் குடிவந்து நம் மரபு விதைகளை பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்திய விகடன் தீபாவளி மலரில் வந்துள்ளது.மேலும் விகடன் வெளியீடான "பசுமை விகடன்" முழுக்க முழுக்க இயற்க்கை விவசாயத்தை பற்றி மட்டும் கட்டுரைகள் கொண்ட தமிழின் தலை சிறந்த இதழ். அதனை நாம் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலே நமக்குள் விவசாய ஆர்வம் ஊற்றெடுக்கும். இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.

அடுத்த கட்டுரையில் விவசாயம் எந்ததெந்த வகையில் நமக்கு லாபகரமாக இருக்கும் என்பதனைப்பற்றி எழுதுகிறேன்

18 நவ., 2010

மழை நாட்கள்..

நீ யாரோ
நானும் யாரோ
சந்திப்புக்கு சற்றுமுன் வரைக்கும்..

நீ என்னையும்,
நான் உன்னையும் 
சந்தர்ப்பங்களால் உருவான 
சந்திப்புகள்..

நீ எனக்கு  முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு  முதல் ஆண் அல்ல,.

நீயும்,
நானும் திட்டமிட்டே 
சில சந்திப்புகளை உருவாக்கினோம்.

நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது மாதிரி
நடித்தோம். 
நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்.. 

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க,
என சேமிப்பு கரையத்துவங்கியது..

தவிர்க்கப்பட்ட சந்திப்புகளுக்கு
நீ
சில காரணங்களை சொன்னாய்
நானும் சொன்னேன்..

நீ அடிக்கடி கோபப்பட்டாய்..
நான் விலகிச் செல்ல ஆரம்பித்தேன்
அல்லது அதை விரும்பினேன்..

நீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்..


நேற்றைக்கு முதல்நாள் மாலை 
ஒரு 
எதிர்பாரா சந்திப்பில் 
என் கைகளை நீ இறுகப்பற்றிய 
தருணத்தில் 
உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..

16 நவ., 2010

நடிப்புச் சுதேசிகள்...


நடிக்கத்தான் வேண்டியிருக்கறது 
எல்லோரிடமும் 
எல்லா சமயங்களிலும்..

மனதுக்குள் குரூரத்தை புதைத்தவாறே 
சில புன்னகைகளை 
தாமதமாக வரும்போது 
மனைவிக்காக காரணங்களை 
கடன் கேட்டு வரும் நண்பனிடம் 
தன் இருப்பின் நிலைமையை
மேலாளரிடம் விடுப்புக்கான காரணத்தை 
இப்படியாகவும்..

சமயங்களில் 
செல்லுபடியாகா நடிப்புகளில் 
கை கொடுக்ககூடும் சில வசனங்கள்
எப்புடி உங்களால மட்டும் முடியுது 
தலைவரு சொன்னா மீற முடியுங்களா?
அண்ணன யாருன்னு நெனச்சே 
இப்படியாக சமாளிக்கலாம்..

எனக்கு நடிக்கவே தெரியாது 
பொய் சொல்றவங்கள கண்டா ஆகாது 
நான் யாருக்காகவும் என்னை விட்டுகொடுக்க மாட்டேன் 
இப்படியானவை மட்டுமே 
இப்போதெல்லாம் நடிப்பில் பின்னுகின்றன .. 

15 நவ., 2010

ஆ... ராசா - பயோடேட்டா...

பெயர்                                  : ஸ்பெக்ட்ரம் ராஜா
இயற்பெயர்                       : ஆ.ராஜா
தலைவர்                            : (நேற்றுவரைக்கும்) தகவல் மற்றும் தொழில்நுட்பம்
துணைத்  தலைவர்         : மனைவியின் நிறுவனங்களுக்கு 

மேலும்
துணைத் தலைவர்கள் 
 :xxxxxxxxxxxxx 

வயது                                  : 48 வயது 

தொழில்                             : தலைமைக்கு விசுவாசமாக இருப்பது
பலம்                                   :  மன்மோகன் பெயரையும் சேர்த்துக்கொள்வது 

பலவீனம்                           : பலியாடு 
நீண்ட கால சாதனைகள்        :சிறந்த பேச்சாளர்
சமீபத்திய சாதனைகள்          : ஹி ..ஹி ..
நீண்ட கால எரிச்சல்                : மாறன் சகோதரர்கள்
சமீபத்திய எரிச்சல்                  : காங்கிரஸ்காரர்கள் 

மக்கள்                                          : கலைஞர் குடும்பத்தினர் மட்டும்  

சொத்து மதிப்பு                         : கோடிகளில் 

நண்பர்கள்                                 : முதலில் விண்ணப்பித்தவர்கள்
எதிரிகள்                                     : ஊடகங்கள்
ஆசை                                          : கலைஞர் காப்பாற்றுவார்
நிராசை                                       : BSNL நிறுவனத்தை தான் இருப்பதற்குள் காலி 
                                                         செய்ய முடியாமல் போனது
பாராட்டுக்குரியது                   : தாக்குபிடித்தது
பயம்                                            :  வழக்கு வரப்போகிறது
கோபம்                                        : காமெடி பீசாகியது
காணாமல் போனவை           : ராஜினாமா செய்யமாட்டேன்
புதியவை                                    : சட்டி சுட்டதடா
கருத்து                                         : இவ்வளவு பணமும் எங்கண்ணே வச்சுருக்கீங்க?
டிஸ்கி                                          : யோக்கிய காங்கிரஸ்காரர்களே சொம்பை 
                                                          ஒளிச்சு வச்சாச்சா?

14 நவ., 2010

கதை சொல்லிகள்...

தேவதைகள் வரங்களை மட்டுமே தருபவை
அசுரர்கள் வீரமாய் போரிட்டு இறுதியில் மடிவார்கள் 
கடவுள்கள் சரியான செயலுக்கு பரிசும் 
தவறுகளுக்கு தண்டனைகளும் தருபவர்கள் 

வடையின் மூலம் சொல்லப்படும் நீதிக்காக
காகமும், நரியும்
முயற்சியின் அவசியத்தையும் சொல்வதற்காக 
ஆமையும், முயலும்
சாகா வரம் பெற்றன,

ஒரு ஊர்ல 
என ஆரம்பித்து தேசங்களை 
கடந்து போன சரித்திரங்களும்,
சிங்கமாகவும், புலியாகவும் 
யானைகளாகவும்
எம்மை  மாற்றி காட்டுக்குள் 
நடந்த விலங்குகளின் திருவிழாக்களும்,

இனிக் 
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும் 
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும் 
சிறைபட்ட நாள்முதலாய்..

13 நவ., 2010

காங்கிரசை "கை" கழுவ 10 காரணங்கள்...

We must wash literature off ourselves. We want to be men above all, to be human. -Antonin Artaud 

1.அன்றும், இன்றும், என்றும் பண்ணையார்களின் கட்சி ( காமராஜர், கக்கனை தவிர்த்து)

2.தமிழநாட்டின் நலனுக்காய் இப்ப எந்த காங்கிரஸ் காரனாவது பேசுறானா ?

3.சிங்களனுக்கு துணை போய்விட்டு தமிழக மீனவர்களை அவன் சுட்டுத் தள்ளுவதை பற்றி எவனும் பேசாததால்.

4.காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிற காங்கிரஸ் காரர்கள்  இன்றுவரை அவரை போன்ற யாரையும் தலைவராக கூட அறிவிக்காத காரணத்தால்.

5.நான் பெரியாரின் பேரன் என்று சீமான் சொன்னபோது பெரியாரையும்,சீமானையும் கொச்சை படுத்திய இளங்கோவன் போன்ற ஆட்கள் இருப்பதால்.

6.தனித்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட வரமாட்டோம் என்று தெரிந்தே திராவிட கட்சிகளின் மேல் சவாரி செய்துகொண்டு திமிராக அவர்களை நக்கலடிப்பதால்.

7.இனம் அழிந்து கொண்டிருந்தபோது அதற்கு சப்பை கட்டு கட்டிய இனத் துரோகிகள் என்பதால். 

8.புலிகள் இயக்கம் இனி இல்லவே இல்லை, அங்கு இனி போராடவும் ஆள் இல்லை என்று சொல்லும் இவர்கள் இன்றுவரைக்கும் அங்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்கள குடியேற்றத்துக்கு துணை நிற்பதால்.

9.எத்தனை கோஷ்டிகள் என்ற விவரம் தெரியாத காரணத்தால்.

10. இது உங்கள் கருத்துக்காக விட்டு வைத்திருக்கிறேன்.

11 நவ., 2010

அரசியல் போதைக்கு ஆறு கோடி ஊறுகா...

சாக்கடைப்புழுக்கள்   
நெளியிற அரசியல்...
மேதாவி வியாக்கியானம்

கட் அவுட் பட்டங்களில்
சிரிக்கிறார்கள்
தொண்டர்களின் கடவுளர்

வட்டம், சதுரம்
ஒன்றியம், ஊராட்சி
சிறுதெய்வப் படைக்கு
ஊரெல்லாம் பூசை
கொள்கைக் கிடாவெட்டு
மணக்குது கவிச்சி

தேவாசுரப் போட்டி
மத்தாய்ச் சுற்றும் மக்கள்
கடைவது அமுதமல்ல
ஆட்சி...
கரன்சி பலத்தில் கனஜோர்

'சேவை' செய்ய வந்தாங்களாம்
பலகாரத் தூளாச்சும்
பந்திக்கு மிஞ்சுமா? 


ஓட்டுக்கு ஆயிரம்
பாட்டுக்கு நூறுநாள் வேலை 
இலவச டி.வி
எப்பவாச்சும் கொஞ்சம் கரண்ட்டு
ரூவாக்கு கிலோ அரிசி

ரத,கஜ,துரக பதாதிகள்
ரம்மி சேருமான்னு
தாத்தா வெயிட்டிங்

வாய்தா போடு கோர்ட்டுக்கு
வண்டிய எடு கொட நாட்டுக்கு
கும்பகர்ணன் தங்கச்சிக்கு
'கை கொடுக்கும் கை' கனவுக்கு அவசரம்

"ஹே!ஹே! பத்து சீட்டு பதினைஞ்சு ரூவா...
போனா வராது பொழுதுபட்டா கெடைக்காது"
பொழப்ப  கடைவிரிக்கும் போலி கேப்டன்

மவனுக்கு ராஜ்யசபா
மத்தவனுக்கு பூஜ்யசபா
மருத்துவரு கண்ணு
மகசூல்மேல

ஈழத்துப் பொணமெல்லாம் எங்களுக்கே சொந்தம்
அழுக அழுக அரசியல்ல லாபம்
திருமா கணக்கு
வருமா சரியா?

காமராஜர் படத்துக்கு
ஈழத்து எலும்புமாலை
ஆட்சில பங்கு கேட்க
அன்டிராயரைக் கிழிச்சிக்க
ஐயோ பாவம் .... காங்கிரசு 

வெதைக்கலன்னாலும் வெள்ளாம
வீட்டுக்கு வரும்...
சலவ நோட்டு, மூக்குத்தி,
சொப்புக்கொடம்

மணக்குற பிரியாணியோட
மெதக்கலாம் டாஸ்மாக்குல

கலைஞ்சரு, செயா,
சன்னு, விஜய்
சேனல மாத்திக்க
செவத்தோரம் பாய்விரிச்சி
கவுந்தடிச்சி படுத்துக்க

நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா?