21 டிச., 2013

மரணம் - சிறுகதை...

சடாரென கனவு கலைந்தது. நான் எங்கிருக்கிறேன் என்பதை நினைவுக்கு மீட்டு வர சில நிமிடங்கள் கடக்க வேண்டியிருந்தது. எழுந்து  தலகாணி அருகில் கிடந்த செல்போனை துழாவி மணி பார்த்தேன். சரியாக 2:31 என்றது. விளக்கைப் போடாமல் கதவைத் திறந்து மொட்டை மாடிக்கு வந்தேன். மார்கழி குளிர் முகத்தில் அறைய சற்று நிம்மதியாக இருந்தது. ஒரு அரைமணி நேரம் மெதுவாக ஓடியது.

கீழே வந்து தொலைக்காட்சியை உயிரூட்டியபோது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் டூயட் பாடிக்கொண்டிருந்தனர், பிறகு செய்திக்கு மாற்றினேன். டிஸ்கவரி, மூவிஸ் நவ், ஸ்டார் மூவிஸ் மீண்டும் தமிழுக்கு வந்தபோது எம்.ஜி.ஆர் இப்போது லதாவுடன் பாடிக்கொண்டிருந்தார். ப்ரிட்ஜில் இருந்த லெமன் டீயை குடிக்கலாம் எனும் நினைப்பில் விஸ்கி ஒரு லார்ஜ் அடித்தால் என்ன? என்ற கேள்வி மனதை திசை திருப்பியது. இரண்டு ஸ்மால் வித் ஐஸ் க்யூப். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, தேவிகா, சரோஜாதேவி, மஞ்சுளா என ஆட்களும், பாடலும் மாறிக்கொண்டேயிருந்தபோது மணி அதிகாலை 4 என செல்போனில் வைக்கப்பட்ட வாக்கிங் அலாரம் சொல்லியது. இறங்கி தெருவில் நடந்தேன். விஸ்கியின் உபயோகத்தால் இன்றைக்கு மப்ளர் தேவைப்படவில்லை. அவ்வளவு குளிரில் தனியாக கைவீசி நடப்பவனை,  சாலையில் காகிதத்தை கொளுத்தி குளிரை விரட்டும் முயற்சியில் இருந்த ஏ.டி.எம் செக்யூரிட்டி ஆயாசத்துடன் பார்த்தார்.
 
இப்போது மீண்டும் நான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. நான் செத்துப்போயிருந்தேன். சென்னையில் அல்ல ஊரில். ஊரை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அதனால் பத்து வருடத்துக்கு முந்தியிருந்த அதே ஊர் கனவிலும் மாறாமல் இருந்தது. மனிதர்களும் அதாவது பத்து வருடத்துக்கு முன்பு உறவுகள் அப்படியே இருந்தனர். ஹாலில் எங்கள் வீட்டில் அப்பா உபயோகப்படுத்திய பெஞ்சில் என்னை கிடத்தியிருந்தனர். அப்பாவை அவர் இறந்த போது நான் எப்படிப் பார்த்தேனோ அதே மாதிரி என்னையும் பார்த்தேன். ஒருவேளை இது அப்பாவைப் பற்றிய கனவாக இருக்குமோ? மனது லேசாக குழப்பியது.

 
காலையில் டிபன் சாப்பிடும்போது மனைவியிடம் சொன்னபோது கலகலவென சிரித்தாள். ”உங்களுக்கு, கடவுள் மீதே நம்பிக்கை கிடையாது!, கனவு கான்பதெல்லாம் மனப்பிராந்தி” என்றாள். பிராந்தியோ, விஸ்கியோ இத்தனை நாள் கனவில் இது மட்டும் ஏன் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்து குழப்ப வேண்டும்?. ஜாதகம் பார்க்கும் என் நண்பனுக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன். அவன் ”நீ மகர ராசி, கடக லக்னம் எனவே உனக்கு ஆயுள் கெட்டி, ஒன்னும் கவலைப்படாதே!” என்றான். மேலும் ”செத்துப்போன மாதிரி கனவு கண்டா நம்மை பிடித்த பீடை விலகிடுச்சுன்னு அர்த்தம்!” என்றான். மரண பயமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் ஏதோ குழப்பமாக இருக்கிறது.
 
அலுவலகம் கிளம்பும்போது பைக் வேனாமென்று யோசித்தேன். இருந்தாலும் நாத்திக சிந்தனை என்னை கிண்டல் செய்ய, பைக்கை எடுத்து நிதானமாக ஓட்டினேன். சென்னை அண்ணா மேம்பாலம் ஏறியபோது எங்கிருந்தோ, பைக் ரேசில் கலந்து கொண்ட சில இளைஞர்கள் எல்லா வாகனங்களையும் மிரள வைத்தனர். அதில் ஒருவன் என்னை சடாரென இடித்தான், மோதிய வேகத்தில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு பாலத்தில் மோதி கீழே விழுந்தேன். ஆனால் அடி சுமார்தான் என்பதால் உடனே எழுந்து நின்றேன். ஆனால் என்னை மோதிய பையன் பின்னால் வந்த மாநகரப் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்தான், ஒரு நபர் யாரிடமோ ”ஆள் போயிட்டான் சார்” என சொல்லிக்கொண்டிருந்தார்.

22 நவ., 2013

சில சுவாரஸ்யங்கள் - 22.11.2013...

அரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு வேலை விசயமாகப் போனால் அங்கிருக்கும் அதிகாரிகள் நேர்மை பற்றி உங்களிடம் பேசினால் கனிசமாக எதிர்பார்க்கிறார் என்பது பொருள்!. தொகை படிந்தவுடன் நேர்மையாக எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுவார்கள். ஒருவேளை நாம் பேரம் பேசத் துவங்கினால் அந்த வேலையைச் செய்ய எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டும் என்று ஆரம்பித்து பட்டியல் போட்டு தமக்கு அதில் கிடைக்கப்போகும் சொற்ப லாபத்தை குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகளிடம் எதாவது வேலை விசயமாக சென்றால் இப்படி  நிறைய சுவாரஸ்யங்கள் கிடைக்கும். சமீபத்திய சுவரஸ்யம், பட்டா மாற்றம் ஒன்றிற்காக விண்ணப்பித்தபோது நடந்தது. நான் கிராம் நிர்வாக அதிகாரியின்  சிப்பந்தி ஒருவரால் ஓரங்கட்டப்பட்டேன். முதலில் அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான் சென்னை வாசி என்றதும் ஊருக்கு வந்து போகும் செலவெல்லாம் இருக்கும்ல அதானல் ரூ.3000 கொடுங்க முடிச்சு கொடுத்துடறேன் என்றார். யோசித்து சொல்கிறேன் என வந்துவிட்டேன்.

..........................................................................................................
நாளிதழில் ஒரு விளம்பரம் பார்த்தேன்:

அதாவது டாஸ்மாக்கில் அதிகவிலை விற்றால் புகார் கொடுக்க ஒரு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லா டாஸ்மாக்கிலும் பியருக்கு ரூ.10-ம், குவாட்டருக்கு ரூ.5-ம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். போய் பிடிங்க ஆபிசருங்களா!
.....................................................................................
சமீபமாக முகநூல் பக்கம் பழியாய் கிடக்கிறேன். யார்? எதை எழுதினாலும்? படிக்கிறேனோ! இல்லையோ!! கண்டிப்பாக Like செய்துவிடுவேன். காரனம் தமிழ்மணம் ஓட்டு அரசியல் போல் அங்கும் மொய், முறைவாசல் என சரியாக செய்யவில்லை என்றால் நம்மையும் அவர்கள் சீண்டமாட்டார்கள்.

முகநூல் என்பது Social Network என்பதை விடவும், மிகப்பெரிய இலவச Business Marketing Space எனவே இதில் சிறு பொருள் வியாபாரிகள் முதல் மிகப்பெரிய Corporates வரைக்கும் கடை விரிக்கிறார்கள்.  அதே அளவு ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள்.

..............................................................................................................

கவிதை எபடியெல்லாம் எழுதலாம் என்கிற விதிமுறைகளை உடைத்தது புதுக்கவிதை வடிவங்கள்தான். சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் மூத்த கவிஞர்கள், புதுக்கவிதை என்பதே கிடையாது எல்லாம் உரைவீச்சுதான் என்பார்கள். முகநூல் பக்கம் போனால் அது உண்மைதான் என்பது தெரியும்.

சுமாரான கற்பனைகளை ஒரு பாரா எழுதி குத்து மதிப்பாக வார்த்தைகளின் முடிவில் ஒரு எண்டர் தட்டினால் கவிதை கிடைத்துவிடும்.

(உம்) : அன்பே எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பூக்களாய் நீ இருக்கிறாய்..

இதனை முதன் முதலாக காதல் செய்கிறவர்கள் அல்லது கவிதை எழுதுகிறவர்கள் எழுதினால்:

அன்பே
எத்தனைமுறை
பார்த்தாலும்
சலிக்காத
பூக்களாய்
நீ
இருக்கிறாய்..

கொஞ்சம் கவிதை புத்தகம் படிக்கிற அல்லது 25 வயசுக்கு மேல் காதல் வருகிறவர்கள் எழுதினால்:

அன்பே
எத்தனைமுறை பார்த்தாலும்
சலிக்காத பூக்களாய்
நீ இருக்கிறாய்..

ஆனால் முகநூலில் இப்படி ஒரு கவிதை வந்தால் பூக்களாய் என்று சொல்லிவிட்டு, பின் ஒருமையில் நீ என்று வருகிறதே என நான் உட்பட யாரும் கேள்வி கேட்காமல் Like செய்துவிடுவோம்.
.............................................................................................................

முகநூலில் காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்வதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன் செயல்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டில் தினசரி தேதிகள் கிழிக்கும் நாட்காட்டி இல்லை போல. ஏனென்றால் நிறைய பேர் அங்கிருந்துதான் தத்துவங்களை உருவி தான் பயன்பெற முடியாவிட்டாலும், உலகம் பயனுற வேண்டி டைப்புகின்றனர்.
.............................................................................................................

19 நவ., 2013

எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?....

கருத்து என்பது எல்லோருக்கும் பொதுவனாதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதில் நியாயம், அநியாயம் பார்ப்பதுமில்லை. இப்படித்தான் கருத்தியல் பற்றிய நமது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. ஆனால், ஓட்டுப்போட்டு நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம், நமக்கான அலுவல்கள் செய்ய நாமே வரிகள் மூலம் சம்பளம் கொடுத்து வேலை செய்ய ஆட்களை நியமிக்கிறோம். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிடுகிறது. பதவிக்கு வந்தவுடன் அவர்கள் அரசர்களாக மாறி விடுகிறார்கள். அலுவலர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் மக்கள் என்பவர்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பிணத்தை எடுக்கவும் பணம் இருக்கனும். இப்படி ஒரு நிலமை மாறவே மாறாதா? என பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அதாவது நடுத்தர, ஏழை வர்கத்திற்கு எப்போதும் இருக்கும் ஆதங்கம். ஆனால், அவர்கள் இல்லாத கடவுளிடம் முறையிட்டு வழமைபோல் அலுவலர்களிடம் கும்பிடு போட்டு நியாயமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கே கை கட்டி நிற்பார்கள். இவர்கள் முறையிடும் அதே கடவுள்தான்(ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வஸ்து இருந்தால்) அலுவலர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் எனும் அறியாமையில் இருந்து அவர்கள் தம்மை எப்போதும் மீட்டெடுக்க விரும்பாதவர்கள். இதற்கான அடிப்படை என்பது சுயநலத்தால் பின்னப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் மாதிரி நம் ஊர் மாறாவே மாறாதா? என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று. தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம், வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3 லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4 லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது. இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன் என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே கொள்கை அடிப்படையில்தான்!.

ஆனால் பொதுமக்களாகிய நாம் பக்கத்து வீடுகளை சகித்துக்கொள்வது இல்லை. அவர்களின் வளர்ச்சியை பொறாமைக்கண் கொண்டுதான் பார்க்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் கூட கிராம அளவில் அம்மக்களிடம் ஒற்றுமை நிலவியது. ஒரு பிரச்சனை என்றால் ஊர் கூடி முடிவெடுப்பார்கள். அது படிப்படியாக ஜாதி மோதல்களுக்கு மட்டும்தான் என குறுகி விட்டது. தெருவில் இருக்கும் நல்லவர்கள் யாரையாவது நாம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கிறோமா? மாறாக அதே தெருவில் எந்த வேலைக்கும் செல்லாமல் ரவுடித்தனம் செய்கிற, எதோ ஒரு அரசியல் கட்சியில் அல்லக்கையாக இருக்கிற ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின் எப்படி அவன் நேர்மையானவனாக இருப்பான் என்பார் கேபிள் சங்கர். கேட்டால் கிடைக்கும் எனும் ஒரு அமைப்பை சுரேகாவும், கேபிளும் ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நமக்கு காட்டியிருக்கிறார்கள். இப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கப்பட்டு அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள். இதேபோல் தமிழகம் தழுவி நிறைய சிறிய அமைப்புகள் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பகுதிகளில் மாற்றத்தை கொண்டுவர போராடுகிறார்கள். இணைய உலகில் சவுக்கு சங்கர், வினவு தளம் தவிர வேறு யாரும் துணிச்சலாக அரசு எந்திரத்தை விமர்சிப்பது இல்லை. ஈழ விவகாரத்தில் அம்மக்களின் போரட்டம் ஏன் ஆரம்பித்தது, பின் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். இறுதி யுத்தத்தில் எதனால் அவர்கள் தோற்றார்கள் என ஈழத்தின் மொத்த வரலாறையும் அறியாதவர்கள்தான் இப்போதும் ஈழ மக்களையும், இங்கிருக்கும் உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள். ஈழ ஆதரவு போராளிகள் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி பணம் வந்ததற்கான ஒரு ஆதரத்தைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் யாரென பார்த்தால் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என அறிந்தே அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கூலி பெறாத விசுவாசிகளாக முழங்குகிறார்கள். தெருநாய்கள் கூட உணவிட்டவருக்குத்தான் வாலாட்டும். நேர்மையாக இருப்பவர்களையும், தன்னால் இயன்றவரைக்கும் சமூகத்தில் யாருக்காவது உதவி செய்பவர்களையும் கேலி பேசும் இந்த அற்பர்களுக்கும் சேர்த்துதான் நாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். அறிந்தே பிழைகள் செய்யும் இம்மக்களை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்???

இங்கு நல்லவர்களே இல்லையா? என்றால். இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் நேர்மையானவராக நல்லக்கண்ணு ஐயாவும், தமிழருவி மணியனும் என இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்கள். அதிகாரிகளில் சகாயம், அஸ்ரா கார்க் போல சில நூறு பேர்களாவது இருப்பது ஆறுதல். நாம் ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே நமக்கு வேலை செய்ய வந்தவர்களிடம் நாம் வேலை வாங்கமுடியும் இல்லாவிட்டால் நம் முதலாளிகளுக்கு நாம் சம்பளம் கொடுப்பது தொடரவே செய்யும்.

17 நவ., 2013

ராவண தேசம் - விமர்சனம்...

ராஜிவ் கொலைக்குப் பிறகு ஈழம் சம்பந்தமான படங்களுக்கு என்ன மாதிரியான நிர்பந்தங்கள் இருந்திருக்கின்றன என நமக்குத் தெரியும். ஈழ ஆதரவு படம் என்றால் மத்திய, மாநில அரசுகளும், ஈழ எதிர்ப்பு, சிங்கள ஆதரவு படங்கள் என்றால் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும் சம்பந்தப்பட்ட படங்களுக்கான சிக்கலை ஏற்படுத்தின. முதன் முறையாக அப்படி எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வந்திருக்கும் படம். அதற்குக் காரனம் படத்தின் இயக்குனர் சாதுர்யமாக யார் பக்கமும் சாயாமல் படத்தின் முதல் பாதியை நகர்த்தியிருப்பதுதான்.
 

நாயகன் அஜெய் நூத்தகி( இவர்தான் படத்தின் இயக்குனரும்) நாயகி ஜெனிபரின் காதல் காட்சிகளோடு படம் துவங்குகிறது. முல்லைத்தீவு பகுதியில் கதை நடப்பதாக காட்டியிருக்கிறார்கள். ஆந்திரா பக்கம் வயல்வெளிகள், கடல் சூழும் ஒரு இடத்தில் படமாக்கியிருப்பார்கள் போல, கிடைத்த பட்ஜெட்டில் போடப்பட்ட செட், நாடக பாணி நடிகர்கள், கற்பனையான காட்சிகள் என சுமாராகவே படம் நகர்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் பதுக்கல் செய்யும் ஒரு வியாபாரி என்பது  மிகையான கற்பனை. அதே போல் ஒரு விடுதலைப்புலி தளபதி உயிர் தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த தனது போராளி ஒருவரை விட்டு தன்னை சுட்டுத்தள்ளச் சொல்வதும் அபத்தமான கற்பனையே. இதன் மூலம் இயக்குனர் இப்படத்தில் போராட்டம் சம்பந்தமான விசயங்களின் மேல் எந்தக் கவனமும் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிங்கள ராணுவம் பற்றிய காட்சிகளில் மட்டும் அவர்கள் பெண்களை பாலியல் வண்முறைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதையும், அப்பாவிகளை கொடுமைப் படுத்துகிறாகள் என்பதையும் காட்டியிருக்கிறார். மற்றபடி புலிகளின் காவல் பரண்கள் எல்லாம் பட்ஜெட்டின் வெளிப்பாடு. முதல் பாதிக்கான ஒரே ஆறுதல் சிறுவனின் பாத்திரப்படைப்பும், சில காட்சிகள் படமாகப்பட்ட விதமும். மேலும் புலிகளின் கொடி பறக்கும் காட்சிகள் சென்சாருக்கு தப்பியிருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகம்தான் இப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. முள்ளி வாய்க்கால் மீது ராணுவம் தாக்குதலை துவங்கும் முதல் நாள் இரவு அன்று நாயகன், நாயகி, வயதான தம்பதிகள், கடை வைத்திருக்கும் குமரன் தம்பதியினர், குழந்தையுடன் ஒரு தம்பதியினர், நாயகனின் நண்பர்கள் இருவர் என ஒரு படகில் இந்தியாவின் ராமேஸ்வரம் நோக்கி கிளம்புகின்றனர். சுற்றுப்பாதையில் முதல் இரண்டு நாள் எவ்வித பிரச்சினையும் இன்றி படகு நகர்கிறது. பாட்டுப் பாடுகின்றனர், காதல் காட்சிகள் இருக்கின்றது. குமரனின் பந்தாவான பேச்சு, அவரின் தம்பட்டம் என நகரும் படகுப் பயணம் மூன்றாம் நாள் இலங்கை நேவிக்கு சொந்தமான கப்பலைப் பார்த்ததும் அனைவரும் படகுக்குள் பதுங்குகின்றனர். அசதியில் அனைவரும் தூங்கி விடுவதால் நேவியிடம் இருந்து தப்பித்தாலும் திசை குழம்பிவிடுகிறது. இதன்பிறகு திசை மாறும் படகால் அடுத்தடுத்த நாள்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். பட்டினி, தண்ணீர் இன்றி கடல் நீரை குடிக்கவேண்டிய அவலம், மழை, மரணம் என நம்மையும் துன்பக் கடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.  இக்காட்சிகள் உலகம் முழுதும் அகதியாய் கடலில் பயணித்து கரைசேர முடியாத அத்தனை பேருக்குமானது, சமீபத்தில் மியன்மரில் இஸ்லாமியர்கள் இப்படி நூற்றுக்கணக்கில் இறந்து போனார்கள். ஈழத்தில் இருந்து பனிரெண்டு கடல் மைல் தொலைவில் இருக்கும் ராமேஸ்வரம் வருவதற்கே எம் இனம் இத்தனை துயரங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்றால், உலகம் முழுதும் அவர்கள் சென்று சேர எத்தனை இடர்களை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போது மனம் பதறுகிறது.

                                                                   
இறுதியில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மீனவர்களால் காப்பற்றப்பட்டு எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. படத்தை நம்முடைய ஈழ ஆதரவு, வெறுப்பு போன்ற கருத்துக்களையும், காட்சியமைப்புகளில் ஆங்காங்கே காணப்படும் அமெச்சூர் தனத்தையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் பத்து நாள் கடல் பயணம், அதீத சோகம் என லேசாக போர் அடித்தாலும், நடித்த நடிகர்கள் அனைவரும் கடலில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிகமாகும் உடல் வேதனையை சரியாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

16 நவ., 2013

விடியலை நோக்கி- ஈழம்...

நடந்துவரும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் அடுத்த இரண்டு வருட காலங்களுக்கு அதன் தலைவராக மாறப்போவதால் இலங்கை மீதான சர்வேதேச அழுத்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என நம்பி ராஜபக்சே கண்ட பகல் கனவு இப்போது அவருக்கே எதிராக மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறியவண்ணம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டில் தமிழக அளவிலான அழுத்தம், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்துக் கட்சிகளும் எதிர்நோக்கும் விதமாகவே முன்னெடுக்கப்பட்டது.  தமிழக காங்கிரஸ் இம்முறை தமிழர் நலனுக்கு ஆதரவாக தன்னைக் காட்சிப்படுத்துவதன் மூலம் தன் மீதான களங்கத்தை மறைக்க முயன்றது. பிரதமருக்குப் பதில் குர்ஷித் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழக மக்களின் பாரிய அழுத்தம் கொடுத்த வெற்றிதான். இதுவரை ஊடகம் தோறும் ஈழப் பிரச்சினையால் எப்போதும் தமக்கு பின்னடைவு இல்லை என முழங்கிய காங்கிரஸ் கட்சியின் சோனியா விசுவாசிகள், இம்முறை அடக்கி வாசித்தனர். தமிழகத்தில் விஜயகாந்த் மட்டுமே தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தன் சார்பாக ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிராக மாறுவதால் தமது ஜாகையை டெல்லிக்கு மாற்றும் அதீத ஏற்பாடுகளில் அவர் இருக்கிறார். ஆனால் அதே டெல்லியில் ஈழத் தமிழனுக்காக வாய் கிழியப் பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் மவுன விரதம் கடைப்பிடிக்க காங்கிரஸ் மீதான அவரின் தீராத நம்பிக்கை ஒரு காரனமாக இருக்கலாம்.

கடந்த ஒன்பது வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க தமிழர்கள் மத்தியில் பலத்த வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினைதான், தான் ஆட்சியமைக்க உதவியது என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் தமிழகம் சார்ந்த ஈழ ஆதரவு போராட்டங்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். கட்சத் தீவு மீட்பு, சட்டமன்றத் தீர்மானங்கள் என நம்பிக்கை தரும் விதமாகத்தான் நடந்துகொண்டார். ஆனால் இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் இப்போது தமிழக அளவில் ஈழ ஆதரவு போராட்டங்களை அவர் அனுமதிக்க மறுக்கிறார். கருணாநிதியை விடவும் ஜெயலலிதா இவ்வியசயத்தில் லட்சம் மடங்கு மேலானவர். கருணாநிதி ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது டெல்லியில் பதவிக்கு பேரம் பேசிய கொடுமையான மனதைக் கொண்டவர். விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பை அவர் சாகும் வரைக்கும் தமிழர்களுக்கு எதிராகவே உமிழ்கிறார். தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அடிமட்ட தொண்டர்கள் சமீபமாக விழிப்புணர்வுடன் பேசிவருவது ஆறுதலை அளித்தாலும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமைக்கு எதிராக திருப்பினால்தான் அவர்களுக்கும் மக்களிடம் பயம் வரும்.

முதல்நாள் தீர்மானம் மறுநாள் முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு எனும் முடிவுகளை ஜெயலலிதா என்கிற ஒற்றை ஆளுமையால்தான் எடுக்க முடியும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். இவ்விசயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக பகைத்துக்கொள்ள விரும்பாத போக்கை காட்டினாலும்  தமிழ் ஆர்வலர்கள், தமிழக மக்கள் மத்தியில் உச்சியில் நிறுத்தப்பட்டிருந்த அவர் மீதான பெருமிதம் சடாரென ஒரே நாளில் கீழிறங்கிவிட்டது. உடனே ஒரு அறிக்கையுடன் தன் டெசோ அமைப்பை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. ஞானதேசிகன் எனும் ஒரு நபர் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவருகிறார். முள்ளிவாய்க்கால் முற்றமே தேவையில்லாத ஒரு விசயம் என்று சொல்கிறார். ஜி.கே. வாசன் தவிர்த்து வேறு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் எப்போதும் தமிழர் விரோத போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர். ஒரு வகையில் தமிழக காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்களே குழிவெட்டுவதுதான் ஆச்சர்யம்.

யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்ததன் மூலம் மாநாட்டின் முதல் நாள் ராஜபக்சே முழங்கிய இலங்கை கடந்த நான்காண்டுகளாக அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனும் கோஷம் எவ்வளவு பொய்யானது என்பதை உலகமே பார்க்க உதவியது. சேனல் 4 ஊடகம் ஈழம் வரைக்கும் சென்று உலகத்திற்கு அங்குள்ள நிலமையை காட்டினாலும், இங்கிருந்து சென்ற தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்கள் இந்திய அரசின் பிரதிநிதிகள் போலத்தான் செயல்படுகின்றன. இந்த காமன்வெல்த் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை, ராஜபக்சே தான் எப்போதும் தீர்வு கான விரும்பாத ஒரு நபர் என உலகிற்கு தெரியவைத்திருக்கிறார். அதேபோல் தமிழக மக்கள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமனறத் தேர்தலில் அவர்கள் முன்னால்தான் நிற்க வேண்டிவரும் என்பதால் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருகின்றனர்.

உலகளாவிய அழுத்தம் இன்னும் தீவிரமாக இலங்கை அரசின் மேல பாய்வதற்கு உலகளாவிய தமிழர்களுடன், தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களும் தமது தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் தமிழர்களுக்கு ஒரு பொது வாக்கெடுப்புக்கான சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இன்னும் உலகெங்கும் தமது சொந்த மக்களை அகதியாக வாழ்வதை தன் பசப்பு வார்த்தைகளால் மூடி மறைத்து விட முடியும் என்பதை ராஜபக்சே எத்தனை காலம் சொல்ல முடியும். மாற்றம் வந்தே தீரும். அதிலும் வெகு விரைவில் வரும். கொல்லப்பட்ட லட்சக்கனக்கான உயிர்களுக்கு ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும்

15 நவ., 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்...

2009 மே 18 ல் ஈழத்தில் நடந்த இன அழிப்பை கண்டித்துத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான போரட்டத்தை நடத்தியபோது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் துவங்கி, சீமான், அமீர் கைது படலம், பிரபாகரன் படத்திற்குத் தடை, மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறை என எல்லாப் போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு நசுக்கினார் கலைஞர். மெரினாவில் நான்கே மணிநேரம் அவர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஈழமே கிடைத்துவிட்டதாக அவர் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டினர். காங்கிரஸ் தலைமையின் நோக்கம் அறிந்து விசுவாசம் காட்டிய கலைஞரை 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்ததைக்கூடப் பா.ம.க வின் தயவால் சமாளித்த தி.மு.க, பா.ம.க, விசிக கூட்டணியை அமைத்து படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக மாறினார். ஜெயலலிதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். அதுவரை கொட்நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வெற்றி அது. கலைஞர், சோனியா இருவரின் மீதான வெறுப்புதான் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரனமானது. சீமான், வைகோ, தா.பா என அனல் பறந்த பிரச்சாரம் வடிவேலு, குஷ்பூ இருவருக்கும் கூடிய கூட்டத்தால் மாறவில்லை. 

மேலும் படிக்க : ஜில் மோர்.காம்

12 நவ., 2013

புரட்சி என்பது...

ஒன்றுபடு, 
போராடு., 
வெற்றிபெறுவோம்..,
புரட்சியின் விதி வரையறுக்கப் 
படாதவை..

எல்லா இடங்களிலும் 
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப் படும் புரட்சி ..

மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை புரட்சி.. 

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரணத்தாலும் ..

கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..

உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி..

சே..
மாவோ.. 
லெனின் ...
மார்க்ஸ் ....
பெரியார் ...
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..
 
உன் சகோதரன் போராடினால்
குற்றம் சொல்லி
’கட்டு’ ரை எழுது
நீதான் செவப்பு
மற்றெல்லோரும் கருப்பென சொல்
ஒரு மதத்தை இழிவு செய்ய
இன்னொரு மதவாதிகளிடம்
கையேந்து...

இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை,
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது
மாற்றத்தைக்  கொண்டு வர 
முதலில் நீ மாறு...

21 அக்., 2013

கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...


நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும் சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் “கேப்டன் பிலிப்ஸ்". Forrest gump, Cast Away , The Terminal, Catch me if you can, Cloud Atlas போன்ற ஏராளமான அற்புதமான படங்களில் நடித்த Tom Hanks இப்படத்தில் கேட்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஆக வருகிறார். அவருக்குக் கிட்டதட்ட ஈடுகொடுக்கும் விதமாக மூஸ் எனும் கதாபாத்திரத்தில் ஆப்பிரிக்கரான பர்கத் அப்டி. மற்றக் கடற் கொள்ளையயர்களாக நடிக்கும் மூவரும் படத்தைப் பரபரப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.

இப்படமானது ‘Captain’s Duty: ‘Somali Pirates, Navy Seals and Dangerous Days at Sea’ என்ற நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது. படத்தின் உண்மையான கதாநாயகன் அமெரிக்காதான். தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்காக நேவியை இறக்கும் அமெரிக்கா எப்படிப் பணயக்கைதியான டாமை, தனது துல்லியமான திட்டமிடலால் காப்பாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் 'Bourne' பட வரிசைகளை இயக்கிய“பால் கிரீன்கிராஸ்” நமக்குக் காட்டியிருக்கிறார்.

Maersk கப்பலில் சரக்கை ஏற்றிக்கொண்டு சோமாலிய கடற்பகுதியை கடக்கும்போது கடற்கொள்ளையர்கள் தாக்கக்கூடும் எனும் எச்சரிக்கை மெயிலால் கப்பலை அதற்கான எதிர்கொள்ளலுக்குத் தயார் படுத்துகிறார் கேட்டன் டாம். ஒரு பெரிய கப்பலாகக் கொள்ளையடிக்க வேண்டும் எனும் திட்டத்தோடு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் Maersk கப்பலை பின் தொடர்கிறார் கொள்ளையர் தலைவனாக வரும் மூஸ். கப்பலில் கேப்டனை சிறைபிடித்தவுடன் இனி நான்தான் இக்கப்பலில் கேப்டன் என அவர் சொல்லும்போதே கைதட்டலை அள்ளுகிறார். டாம் தன்னிடம் உள்ள 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால் இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும் எனும் மூஸ் கப்பல் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கப்பலை விட்டு சொற்ப பணத்துடன் லைஃப் படகில் தப்பிக்கும்போது டாமையும் பிணையாகப் பிடித்துச் செல்கிறார்கள். அமெரிக்க நேவி எப்படி டாமை பத்திரமாக மீட்டது என்பதே மீதிக்கதை.
ஒரு சிறிய லைஃப் படகில் டாமுக்கும், மூஸுக்கும் நடக்கும் உரையாடல்களும், சம்பவங்களும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் டாம் மீட்கப்பட்டவுடன் கப்பலில் அவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்போது வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் டாம் எனும் நடிப்பு அசுரனுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சியில் அவர் அசத்தியிருப்பார்.

டாம் ஹான்க்ஸ் மற்றும் சோமாலிய கடற்பகுதி கொள்ளையர்களாக நடித்திருப்பவர்களுக்கு விருதுகள் நிச்சயம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.

17 அக்., 2013

குழந்தைகளுக்கான PLAY SCHOOL துவங்க முதலீட்டாளர்கள் தேவை...

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் (Greater Chennai) குறிப்பாக சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, OMR சாலையில் இருக்கும் IT நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பள்ளிகள் (PLAY SCHOOLS) மிகக் குறைவாகவே உள்ளன.

இந்தப் பகுதிகளில் நிறைய குழந்தைகள் பள்ளிகளை துவங்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இதன் தொடர்ச்சியாக LKG, UKG முதல் +2 வரை விரிவுபடுத்தும் நோக்கமாக, நண்பர் திரு.உதயகுமார்ஸ்ரீ அவர்கள் “அகஸ்தியா குழந்தைகள் பள்ளி ஒன்றை துவக்குவதற்கான முதலீட்டார்களை, பங்குதாரர் அடிப்படையில் வேண்டுகிறார். விருப்பமும், ஆர்வமும் இருப்பவர்கள் திட்டம் மற்றும் முதலீட்டு விவரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்.

திரு. உதயகுமார் ஸ்ரீ -  +91 – 90427 32377
மின்னஞ்சல் : udayakumar.sree@gmail.com

3 அக்., 2013

இந்தோனேசியாவிலிருந்து...


நேற்று காலை மலேசியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பினாங்கில் இருந்து ஒரு பழைய நண்பர் அழைத்திருந்தார்!.
“வணக்கம் செந்தில்!, இந்தியாவிற்கு கிரானைட் இம்போர்ட் பன்ன ஆள் இருந்தா!, இந்தோனேசியாவில்  ஒரு இடத்தில் ஏராளமாக கிரானைட் இருக்கு, நல்ல அதாவது genuine buyer இருந்தா சொல்லுங்க” என்றார்.
நான் “ வணக்கம் சார், இங்கயே தாராளமா கிடைக்குது, இருந்தாலும் யாருக்காவது தேவை இருக்குமான்னு விசாரிச்சு சொல்றேன்.”
அவர் “செந்தில் அந்த இடத்தில கிரானைட் மட்டும் இல்ல, அதுக்கும் கீழே காப்பர், மற்றும் மினரல்ஸ் குவிஞ்சு கெடக்கு, அதனாலதான் உங்க கிட்ட genuine buyer இருந்தா மட்டும்! சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.
நான் “ஏன் ஃப்ராடுன்னா ஒத்துக்க மாட்டீங்களா?”
அவர் “ செந்தில் என்ன சொல்றீங்க!?”
நான் “ யோவ் பின்ன என்னய்யா நீங்க ஃப்ராடு பன்றவன்கூட வியாபாரம் செய்ய நான் நல்லவனை அறிமுகப்படுத்தனுமா? இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க!, அதான் பாவமா இருக்கு!” என்றதும். அப்புறம் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்தார்.

கேபிள் சொல்வார் நூறுகோடி வியாபாரம் எல்லாம் நம்மை மாதிரி ஆட்கள் கிட்ட வந்தாலே அதெல்லாம் ஃப்ராடுதான்னு!!
.....................................................................................................................................................................
நானும், கேபிளும் மேற்கு மாம்பலம் எண்: 128, ஏரிக்கரை தெருவில் இருக்கு டாஸ்மாக் கடை எண்: 641 - ல் ரெண்டு பியர் வாங்கினோம். ஒரு பியரின் விலை ரூ.100 தான். ஆனால், விற்பனையாளர் ரூ.110 X2 = 220 எடுத்துக்கொண்டார். கேபிள் ஏன் MRP யை விடவும் அதிகம் விற்கிறீர்கள் என சண்டை போட்டதும் ரூ.10 மட்டும் மீதம் தந்தார். இன்னொரு பத்து ரூபாய் தர முடியாது என்றும் சொன்னார். கேபிள் விடாப்பிடியாக பணம் கேட்டதும். விற்பனையாளர் “அதிகாரிகள் சொல்லித்தான் வாங்குறோம், உன்னால முடிஞ்சத பன்னிக்கோ!” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!.
.............................................................................................................................................................
சமீபமாக வரும் திரைப்படங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவிர்த்து எல்லாப்படங்களிலுமே நாயகனை டாஸ்மாக்கில் குடித்து திரிபவனாகவும், பொறுக்கியாகவும் காட்டுகிறார்கள். ஆனால் நாயகிகள் அவனைத்தான் காதலிக்கிறார்கள்!. உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன?. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா?” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல!!!..
................................................................................................................................................................
அவசர அவசரமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து ராகுல் எதிர்க்கிறார் என ஒரு நாடகம் ஆடி அதனை வாபஸ் பெற்றுவிட்டனர். குற்றவாளிகளுக்கு இந்த அரசு வக்காலத்து வாங்க காரனமே, கடந்த பத்து வருஷமா இவங்க அடிச்சதை ஆட்சி மாறினா, மோடி உள்ள புடிச்சு போட்டு அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வச்சிடுவாறோ என்கிற பயம்தான்!.

ஆனால் நிறைய அரசியல்வாதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாங்க. இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் இவங்க அரசியல் செஞ்சு யாரை காப்பாத்த போறாங்க?. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது?. அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில்!. உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்!.
....................................................................................................................................................................


'' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''

''பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.

தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!''

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்
பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல் !

-

26 செப்., 2013

ஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...

தியாகி திலீபனின் நினைவு தினம்(26.09.2013) அவருக்கு என் வீரவணக்கம்....

வீரமறவன் நீ... 
தியாக தீபமாய் தன்னையே 
எரித்துக் கொண்டவன் நீ...
அகிம்சை தேசத்துக்கு உன்னையே 
கோரிக்கையாய் வைத்தவன் நீ...

நீ புலி ...
பசி துறந்து பலியான புலி ...

திலீபா நீ விதைக்கப்பட்டாய் 
எம் மனங்களில்,
இந்திய தேசத்தின் மீது மாறாத 
நம்பிக்கை கொண்டவன் நீ,
அன்றைக்கும், இன்றைக்கும், 
என்றைக்கும் உதவாது இந்தியா,

அன்று உன்னை மட்டும் இழந்தோம்,
இப்போது லச்சங்களில் இழந்தோம் 
இன்னும் 
இன்னும் 
இழப்பதற்கு 
தயாராய் இருக்கிறோம்,
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி 
ஒருநாள் உண்மையாகும்.

இத்தாலி அன்னையை 
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,
முள்ளிவாய்க்கால் 
முடிவல்ல ஆரம்பம்..

ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.
 
 

25 செப்., 2013

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!


அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடும்போது தேர்ந்த கவனத்துடன் தவறான வித்தைகளை ஐஸ்க்ரீமிற்கு அழும் குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தை தெளிப்பவர்கள் கோமாளிகளே. பெருநகரின் சாலைகளில் நம் தினசரி வாழ்க்கை ஒரு தேர்ந்த சர்க்கஸ் கோமாளியின் பிழைப்பாக மாறிவிட்டது. எல்லா சாலைகளுமே பார்க்கிங் மற்றும் நடைபாதை தொழிலதிபர்களால் பங்கிடப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் பயணத்தை தொடரும்படி நமக்கு நிபந்தனை விதிக்கிறது. எல்லோர் விதியையும் யாரோ ஒருவர்தான் தீர்மாணிக்கிறார் எனும் கருத்தை  சமீபத்தில் ஒரு அரசுப்பேரூந்தை, இரு சக்கர வாகனமோட்டி மயிரிழையில் (உண்மையில் விரற்கடை அளவு இடைவெளியில்) முந்தியதை பார்க்கும்போது கிட்டதட்ட உறுதி செய்கிறது.

ஒரு இரவில்  இப்படித்தான் நள்ளிரவு தாண்டி வீடு நோக்கிப் பயணித்தபோது பிளாட்பார வாசிகள் இருவரை தங்களது நீண்ட லத்தியால் சுளீரென அடித்தனர் ஒரு காவலர்கள். வேதனை தாங்காத வயதான பெரியவர்களான அவ்விருவரும் கதறியதை பொருட்படுத்தாத அந்த இளம் காவலர்கள் மீண்டும் அவர்களை அடிக்க கை ஓங்கியபோது எனக்கு தாங்க முடியவில்லை. அந்த காவலர்களை அழைத்து ”என்ன காரனத்திற்காக அடித்தீர்கள்?” என்றேன். அவர்களில் ஒருவர் “யார் நீ?, எதற்காக கேட்கிறாய்?” என அதட்டினார். “ டேய் சின்னப்பையந்தானே நீ!, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா?” என்னை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்?” எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இன்னொரு காவலர். ”முதலில் அடிச்சதுக்கு காரனம் சொல்லுங்கள் பிறகு என்னைப்பற்றி சொல்கிறேன்” என்றதும். ”இல்ல  சார், இப்ப நிறைய திருட்டு நடக்குது, வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் இப்படி பிளாட்பாரங்களில் துங்குவது போல் நடித்து நள்ளிரவில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்வதாகவும் அதனால் இரவு நேரங்களில் அவசியம் இவர்களை கண்காணிக்க வேண்டியிருப்பதாகவும்” சொன்னார். இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட பெரியவர்கள் இருவருமே என்னை சமதானப்படுத்தினர். நானும் அந்த இளம் காவலர்களிடம் என் விவரங்களை சொல்லிவிட்டு இனி பெரியவர்களிடம் இவ்வாறு முரட்டுத்தனம் காட்டாதீர்கள் என அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.

சென்னை முழுதுமே இப்படி தங்கள் வாழ்நாள் முழுதும் பிளாட்பாரங்களையே வீடாக வாழ்பவர்கள் அனேகம். இவர்கள் மழை, வெயிலால் அவதிப்படுவது ஒருபுறம் என்றால், சமூக விரோதிகளால் எரிச்சலாகும் காவல்துறையும் இவர்களை துரத்துகிறது. ஆனால் கோடி கோடியாக பணம் கொட்டி வீடு கட்டும் முக்கால் வாசிப்பேர் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசாங்கமும், காவல்துறையும் ஒரு கேள்வியும் கேட்பது இல்லை. சென்ற வாரம் நண்பனுக்கு வீடு பார்க்க சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீடு மட்டும்தான் வாடகைக்கு பைக் பார்க் செய்யனுன்னா ரோட்லதான் நிறுத்திக்கனும் என்றார். நண்பனும் அதற்கு ஒத்துக்கொண்டு வாடகைக்கி குடியேறிவிட்டான். ஆனால் சாலைகளில் நிறுத்திக்கொள்ள யார் அனுமதியும் தேவையில்லை போல!!
 
எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் அடுத்த வரிக்காக மோட்டு வளையை (இது சரியான பதமா?) உற்று நோக்கும் சமகாலக் கவிஞன் போல சென்னையின் குறுகிய சந்துகளில் வழி தேடி பயணிக்கும்போது அபூர்வமான சித்திரம் போல் மாலை வேளைகளில் வீட்டு வாசல்களில் கோலமிடும் நடுத்தர பெண்டீர் தம் எரிச்சலின் உச்சத்தை தண்ணீர் தெளிக்கும் சாக்கில் போகிறவர் மேலெல்லாம் ஊற்றிவிட்டு அதற்கான சாரி எனும் ஆங்கில பதத்தை உபயோகிக்க தெரியாத வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாக அவசரகதியில் போடப்படும் கோலமென சென்னை நகர் முழுதுமே அத்தனை தெருக்களிலும் 90% வீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் கட்டப்பட்டவைதான். பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு இடைவெளில் இல்லாமல் ஒருவர் வீட்டின் சுவரில் இன்னொருவர் போஸ்டர் சைசில் சுவர் பூசி இடம் மிச்சப்படுத்தும் அதிசயமான மேஸ்திரி எஞ்சினியர்கள் திறமைக்கு எல்லையே இல்லை.
இப்போதெல்லாம் அடுக்ககங்களில் நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ, அல்லது வேலை விசயமாகவோ பார்க்கப்போனால் அங்கிருக்கும் பாதுகாவலர் நம் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஏன் என்று கேட்டால்? பதில் சொல்லாமல் எழுதி வைக்கப்படிருக்கும் ஒரு அறிவிப்பை கைகாட்டுகிறார்.

அங்கே “பார்வையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது!.

18 செப்., 2013

பேரறிவும், பெருந்துயரும்...

அந்தக் குற்றப்பத்திரிக்கை
அவர்கள் விருப்பம்போல் 
புனையப்பட்டிருந்தன 
நீ 
மறுக்க மறுக்க 
உன் விரல் ரேகை பதியப்பட்டு 
தயாரிக்கப்படிருந்த அந்த ஆவணம் 
நாளை விசாரணைக்கு 
ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது..

நீ 
குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடினும் 
நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டு
ஒருவேளை 
உன்னை தூக்கிலிட
ஆணை பிறப்பிக்கப்படலாம்
உன் மரணத்திற்கான தேதிகள்
பலர் கை மாறலாம் 
நிராகரிக்கவோ 
ஆதரிக்கவோ 
அவர்களுக்கு 
பல காரணங்கள் தேவையாக இருக்கிறது..
 
ஒரு பழி வாங்கலாக 
ஒரு அரசியல் ஆதாயமாக 
சந்தர்ப்பங்கள் உனக்கு சாதகமாக 
அல்லது 
எதிராக முடிவெடுக்க வைக்கலாம்
அவர்களுக்கு தேவை 
அவர்களின் நலனே 
மேலும் 
அவர்களின் வாரிசுகள் நலனும் 
அதில் அடங்குகிறது..
 
ஒரு உண்ணாவிரதமோ 
மனிதச்சங்கிலியோ 
பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ 
உன் வாழ்நாளை 
நீட்டிக்க உதவலாம் 
நீ 
உன் சாவை 
எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
மரண நீட்டித்தல் என்பது 
மரணத்தை விடவும் 
கொடுமையான தண்டனை என்பதை
உன்னைத் தவிர யாருக்கும் புரியாது
அவர்கள் உன் மரணத்திற்கான 
தற்காலிக 
இடைவெளிக் கடவுள்களாக 
தங்களை கருதுபவர்கள்..

உன் தண்டனையை 
நிறைவேற்றுபவர்களுக்கு
உன் வாழ்வில் 
எந்த அக்கறையும் கிடையாது 
தன்னைக் கடிக்காத போதிலும் 
ஒரு எறும்பை நசுக்கிவிடுகிற 
மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்..
 
எனவே 
உன்னை தூக்கிலிட 
கட்டளையிடுமாறு 
கூச்சல் போடுவார்கள்
அவர்கள் தலைவனை விடவும் 
வாழும் தலைவியின் 
மனம் குளிர்ந்தால் போதும் 
மனித இனத்தின் 
நீங்கா களங்கம் அவர்கள் 
பக்கத்தில் 
கூப்பிடும் தூரத்தில் அரங்கேறிய 
கற்பழிப்புகளை, கொலைகளை 
நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்..

இங்கு நியாயம் என்பதே 
வரையறைக்கு உட்பட்டதுதான் 
யார் வரையறை செய்யும் 
அதிகாரத்தில் இருக்கிறார்கள் 
என்பதே முக்கியம் 
எனவே 
நீதி கேட்டு 
நெடும்பயணம் செய்து 
கலைத்துப்போவாள் உன் தாய் 
உன் தந்தை, சகோதரி, உறவினர் 
முகம் அறிந்த, அறியாத 
உன் நியாயம் உணர்ந்தோர் 
வெகு சொற்பமே 
அவர்களின் அழுகுரல் 
தொலைக்காட்சி நாடகங்களால் 
மறைக்கப்படும் 
இங்கு ஊடகங்கள் 
வியாபாரத்துக்கு மட்டுமே 
அவைகள்
இன்று உன்னையும்
நாளை வேறொன்றையும் வைத்து 
பிழைப்பு நடத்தும் 
முத்தமிழ் அறிஞரே 
மானாட, மயிலாட நடத்திப்பிழைக்கும்போது
ஊடகங்கள் உனக்கு துணைவராது..

சுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே 
குருடாகவும், செவிடாகவும் 
நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில் 
நாமெல்லாம் அடிமைகளே..

எனவே சகோதரனே 
இனி நீதிக்காக போராடாதே 
எல்லோரும் அம்மணமாக ஓடும்போது 
உனக்கேன் கோவணம் 
நிர்வாணம் பழகிக்கொள் 
இருக்கவே இருக்கிறது 
அருமருந்தாய் டாஸ்மாக் 
அரசாங்கமே நடத்துகிறது 
குடித்து, களித்து வாழ்வை நகர்த்து
கொஞ்சமாக கோஷமிடவும் கற்றுக்கொள் 
தி.மு.க வோ, அ.தி.மு.க வோ 
காங்கிரசோ, பி.ஜே.பி யோ
அல்லது 
ஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது 
உறுப்பினராக மாறு 
ஒருபோதும் கம்யூனிஸ்டாக மாறிவிடாதே
அது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..

தமிழ் கோசம் 
இனி ஒன்றுக்கும் உதவாது
சமயங்களில் 
உயிரும் 
மயிருக்கு சமமாகப் போகும்..

காயடிக்கப்பட்டு வாழ்வதைவிட 
சாவே மேலென நினைத்தால் 
எழு, புறப்படு, கைதாகு 
அதன்பின் 
இந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து 
துவங்கும் உன் வரலாறு.. 

13 செப்., 2013

கையெழுத்து...

கையெழுத்துக்களால் 
தலை எழுத்தை
மாற்ற முடியுமென,
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் 
தெரிந்து வைத்திருக்கிறான் 
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..

இதயத்தை துடிக்கவைக்கும்
ஜாமீனுக்கு இடும்போது 
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட 
நேரிடலாம் என..

சொத்து விற்கும்போது 
நடுங்கும் கை 
வாங்கும்போது நளினமாக 
விளையாடும் பத்திரத்தில்..

பிராக்ரஸ் கார்டில் 
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..

சகல இடங்களில் 
தேவையாகும் ஒரு கையெழுத்து 
தனித்தனி எழுத்தாகவோ 
கோணலாகவோ 
ஒற்றை எழுத்தில் சுழித்தோ 
படங்களைப்போல் அழகாகவோ..

எத்தனை முறை போட்டிருப்போம் 
ஓவ்வொரு முறையும் 
ஒவ்வொரு கதை இருக்கும்..

பிரபலங்களிடம் வாங்கியவை 
சில பரணிலும்,
சில வரவேற்ப்பறையிலும்,
சில குப்பையிலும்..

காதலை சொல்கிற கடிதம் 
காதலியைவிடவும் அழகானது..

பதிவு அலுவலகத்தில் 
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் 
கையெழுத்துகளில் சில
குடும்ப நல மன்றங்களில் 
முடிவடையும்..

சமயங்களில் நம் தலையெழுத்து
ஒரு கையெழுத்தால் 
தீர்மானிக்கப்படலாம்..  

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு 
ஒளிந்து வாழ்கிறேன் 
நான்..

6 செப்., 2013

கடவுள்களும்...பிரார்த்தனைகளும்..பலன்களும்...

Photo : KRP Senthil
கவிஞர் வைரமுத்து ஒரு நாத்திகர். ஆனால் ஒருமுறை அவரது பேட்டியில் ஆம்புலன்ஸ் ஏதாவது நாம் போகும் வழியில் கடந்தால் உள்ளிருக்கும் நோயாளி குணமடைய வேண்டும் என வாழ்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் சிறிது காலம் ஆன்மீகம் பயின்ற வகையில் ஆம்புலன்ஸ் கடந்தால் ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தி வைக்கிறேன். அடிப்படையில் ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் நல்ல பலனைத்தரும் என்பது ஆன்மீகத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. எல்லா மதங்களிலும், தனிப்பட்ட அமைப்புகளிலும் இவ்வாறு பிரார்த்தனை குழுமம் ஒன்று இயங்கவே செய்கிறது. ஆனால் பிரார்த்தனையின் ஏகப்பட்ட வடிவங்கள் இப்போது பெருவணிகமாக மாறிவிட்டது.

பிரார்த்தனை என்பது ஒரு incident management. அதாவது பிரச்சனை வந்தபிறகுதான் பிரார்த்தனை யாவருக்கும் தேவைப்படுகிறது. பொதுவாக எல்லோருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால் சிறிய விசயத்தில் துவங்கி மிகப்பெரிய ஆள்வோர்களின் பிரச்சனைகள் வரை பிரார்த்தனைகள் விரும்பும் வகையில், பணத்தின் இருப்பை பொருத்து மாறுபடுகிறது. ஏழைகளுக்கு ஒரு ரூபாய் நாணயம் போதுமானதாக இருக்கிறது, அதனை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அதனை காணிக்கை செலுத்துவார்கள். சிலர் கடன் வாங்கி செலவழிப்பதும் உண்டு. பெரும்பாலும் குலதெய்வ கெடா வெட்டுக்கு இப்படி கடன் வாங்கி செலவு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பணம் படைத்தோர் வேறு மாதிரி எடைக்கு எடை கொள்ளையடித்ததில் பங்கு கொடுத்து விடுவார்கள். எனக்கு தெரிந்த வரையில் சிலர் திருப்பதி ஏழுமலையானை தொழில் பங்குதாரர் ஆக்கி வருடா வருடம் லாபப் பங்கினை உண்டியலில் செலுத்துகிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படி நம்பிக்கைகளை வியாபாரம் செய்து சம்பாதிக்கும் ஆட்கள்  உண்டு. எந்தக் கடவுளும்  எனக்கு இதனை செய்தால் உனக்கு அதனை செய்வேன் என கேட்டதே இல்லை. எல்லாம் மனிதர்கள்தான் மனிதர்களால்தான்.

இஸ்லாத்தில் அல்லாவைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது ஆனால் அல்லாவின் பெயரால் நோய்களை குணமாக்குவதாக சொல்வதும், மாந்ரீகம் செய்வதும் மனிதர்களே. நாகூர் தர்காவிற்கு போனால் இப்படி ஏராளாமானோர் பிழைப்பதை பார்க்கலாம். வேளாங்கண்ணி மாதாவை கிட்டதட்ட இந்துக்கடவுளாகவே மாற்றி விட்டனர். கிருத்துவனாக இருந்தால் மட்டும் போதும், நீ எப்படி வேண்டுமானாலும் வணங்கு என சகலரையும் கிருத்துவர்கள் ஆக்கும் தொழிலை மும்முரமாக செய்கிறார்கள். இங்கு உடல் உபாதைகள் இருந்து நிவர்த்தியாக பிரார்த்தனை செய்தால் அதே உறுப்புகளை வசதிப்படி தங்கமாகவோ, வெள்ளியாகவோ செய்து காணிக்கை செலுத்துகிறார்கள். மேரி மாதா எப்போது இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தாள் என்பது ஃபாதர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்து மதத்தில்தான் சகலத்துக்கும் தீர்வு கிடைக்கிறது. சாலையில் வேப்ப மரமோ, அரச மரமோ இருந்துவிடக்கூடாது!. அதனை கடவுளாக்கி விடுகின்றனர். ஜோசியர்களின் திறமையால் சகலத்துக்கும் சாங்கியம் உண்டு. பெரும்பாலும் இப்படி தொடர்ச்சியாக எல்லோரும் ஏமாறுவதற்கு காரனம் என்னவென்றால், நம்ம ஆட்களுக்கு ஒரு குணம் உண்டு. பொதுவாகவே புதிதாக கிருத்துவனாக மாறிய ஆட்களை பார்த்தால் அவர்கள் கிருத்துவால்தான் சகலமும் மாறியதாக ஒருவர் விடாமல் ஒப்பிப்பார்கள். அதாவது தான் ஒன்றும் தவறான வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை பறைசாற்ற வேண்டி தான் காலையில் கக்கா போவதை சுலபமாக்கியது கூட எல்லாம் வல்ல ஆண்டவர்தான் என்பார்கள். இரவு 9 மணிக்கு மேல் சில தொலைகாட்சிகளில் இவர்கள் பேயோட்டுவதை பாருங்கள். ஏற்கனவே நொந்து நூலாகி பிரச்சனைக்கு தீர்வு கான இவர்களிடம் வந்தால், மேடையில் அவர்களின் காட்டு கூச்சலில் இருக்கும் மன தைரியத்தை இழக்கவே செய்வார்கள்.


நம்பிக்கை என்கிற வார்த்தைக்கு தெளிவின்மை என்பதே பொருள் என யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அதாவது உண்மையான ஒன்றை யாரும் நம்பவைக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போது சகலரும் கடவுளை நம்பச் சொல்கிறார்கள். கடவுளை நம்பச் சொல்லி மனிதர்கள் மூலம் தூதனுப்பும் கடவுள் ஏன் நம்மிடையே நேரடியாக சொல்லிவிடலாமே என எவனுமே யோசிப்பது இல்லை. தூதர்களும், ஃபாதர்களும், ஆனந்தாக்களும் எப்படி கடவுளிடம் வேலைக்கு சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை. சாதாரனமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்றாலே இங்கு ஏகப்பட்ட விசாரனைகளை கடக்க வேண்டும். ஆனால் இங்கு கடவுளாதல் சுலபம். காரனம் இங்குதான் சாருநிவேதிதா என்கிற குப்பை எழுத்தாளனை கொண்டாடும் கூட்டம் இருக்கு,. இந்த ஆள்தான் நித்தியை புரமோட் செய்தார். அப்புறம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபின் அந்தர்பல்டி அடித்தார். இதில் என் எழுத்தை இங்கு கொண்டாடவில்லை என்கிற கூச்சல் வேறு.

இங்குதான் கடவுளுக்கு மீடியேட்டர் தேவைப்படுகிறது. இங்கு எல்லோரும் கடவுளாக மாறத்துடிக்கிறோம். முடியவில்லை என்றால் அடிமைகளாக மாறி ஊரெங்கும் சூரியனே, சரித்திரமே, தமிழகமே, கேப்டனே, தெய்வமே என ஃப்ளெக்ஸ் வைக்கிறோம். இப்போது கவுண்டமணி சினிமாவில் இல்லை. இருந்திருந்தால் அவர் ஒரு படத்திலாவது தனக்கு பொறம்போக்கே, புண்ணாக்கே, வெத்து வேட்டே என செந்திலையோ, சத்யராஜையோ வைத்து கிண்டலடிக்க சொல்லியிருப்பார்.

இப்போது ஏசுவோ, நபியோ, புத்தரோ இவ்வுலகில் இருந்தால் இவர்களுக்காகவா நாம் இத்தனை சிரமப்பட்டோம் என தற்கொலை செய்துகொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக இவர்கள் போராடினார்கள். ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டும் வந்தார்கள். ஆனால் இப்போது???????

5 செப்., 2013

’எஸ்கேப்’ - பதவி உயர்வுக்கான மேஜிக் !...

 
”உங்களைப் பற்றி, உங்களுக்குப் புரியவைத்து உன்னத ஊழியனாக்கும் பயிற்சிக்கூடம் இந்தப் புத்தகம்.”  புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. ஒரு நல்ல திறமையான ஊழியனாக மாறும் மேஜிக் பற்றிய புத்தகம் ஒரு சிறந்த தொழிலதிபராக ஆசைப்படும் நமக்கு எப்படி உதவ முடியும் என்கிற எண்ணத்துடன் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகத்தை வைக்கவே இல்லை. ஒரே வீச்சில் படித்துவிட்டேன். நல்ல புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும். எனக்கும் ஒரு பழக்கம் உண்டு. என்னை சுவாரஸ்யப்படுத்தும் புத்தகத்தை முதலில் ஒரே வீச்சில் படித்து விடுவேன். பின்பு இரண்டு நாள் கழித்து அதே புத்தகத்தின் முக்கியமான விசயங்களை ஒவ்வொன்றாக படித்து அதனை அசைபோட ஆரம்பிப்பேன்.

ESCAPE நாம் பெரும்பாலும் இந்த வார்த்தைக்கு பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவது என்றுதான் அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், ஆசிரியர் சுரேகா நமக்கு இவ்வார்த்தையின் மூலம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகங்களின் மைல் கல். ஆரம்பம் முதலே கதையின் நாயகன் நரேந்திரனாக நாம் மாறிவிடுகிறோம். கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிகாரியான நரேன் தனக்குப்பின் வேலைக்கு சேர்ந்து தனக்கே மேலதிகாரியாக பதவி உயர்வு பெறும் சத்யா எனும் இளம் பெண்ணின் மீது பொறாமை கொள்ளாமல், தனது நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார். அதன்பின் சத்யாவால் அவர் முடிவை மாற்றிக்கொண்டு தன் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கான காரனங்களை ஆராய்கிறார். அப்போது ஒரு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்படி நிறுவனம் அவருக்கு பரிந்துரைக்கிறது. அங்குதான் மேலாண்மை பயிற்றுனராக விக்னேஷ் வருகிறார். யார் இந்த விக்னேஷ்?.

நீங்கள் சுரேகாவின் “தலைவா வா!” படித்திருக்கிறீர்களா?, படிக்கவில்லை எனில் உடனே வாங்கிப்படியுங்கள். “தலைவா வா!” புத்தகத்தின் நாயகன்தான் இந்த விக்னேஷ். விக்னேஷ் யார்? அவர் எப்படி ஒரு மேலாண்மை பயிற்றுனராக மாறினார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அதனை நான் இங்கு விவரிப்பதைவிட நீங்கள் அப்புத்தகத்தை படிப்பதுதான் சரி. ஏனென்றால் தலைவனாக மாற எல்லோருக்கும் ஒரு ரகசிய ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் எப்படி நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். விக்னேஷ் எப்படி படிப்படியாக ஒரு தலைமை அதிகாரியாக மாறினார் என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய விதிகள். எனவே உடனே ”தலைவா வா!” மற்றும் ”எஸ்கேப்” இரண்டு புத்தகங்களையும் வாங்குங்கள். முதலில் ”தலைவா வா!” படியுங்கள், பிறகு ”எஸ்கேப்” படியுங்கள். வாழ்வின் மாற்றம் உங்களை அறியாமலே உங்களுக்கு ஏற்படுவதை உங்களால் உணரமுடியும்.

இப்போது ESCAPE பற்றி பார்ப்போம். ESCAPE என்பதை ஆறு படிகளை கொண்ட வாழ்வின் வெற்றிக்கான ஏணியாக நாயகன் நரேனாக மாறிய நமக்கு விக்னேஷாக மாறிய சுரேகா விளக்குகிறார். ஓவ்வொரு படிகளும் ஒவ்வொரு வாரம். வாரா வாரம் படிப்படியாக நாயகன் நரேன் தன் தவறுகளை, நல்ல விசயங்களை, மேலாண்மை விதிகளை படிக்க ஆரம்பிக்கிறார். அவர் தன் மேலாண்மை வகுப்பை முடிக்கும்போது தனது நிறுவனத்திலும், தன் அன்றாட பணிகளிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்து தன்னையே முழுதுமாக உணர்கிறார் என்பதை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்த பயணியாக நம்மை மாற்றி விடுகிறார் சுரேகா.

வியாபாரம் செய்யும் எனக்கு இப்புத்தகம் என்ன மாதிரியான பாடத்தை கற்பிக்க முடியும் என்கிற அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், இப்போது என் கம்ப்யூட்டர் அருகில் ESCAPE தத்துவத்தை எழுதி என் ஒவ்வொரு செயல்பாட்டையும் அதனுடன் ஒப்பிட்டே இறுதி செய்கிறேன்.

’எஸ்கேப்’ படித்து முடிக்கும் வரைக்கும் எங்கேயும் நம்மை எஸ்கேப் ஆகவிடாத எழுத்து. எனவே சகலரும் இதனை வாங்கிப்படித்து வாழ்வில் மாற்றத்தைக்கான பரிந்துரை செய்கிறேன்.

‘எஸ்கேப்’
ஆசிரியர் : சுரேகா
வெளியீடு : மதி நிலையம்
விலை : ரூ.80
கிடைக்குமிடங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ், அகநாழிகை புத்தக உலகம்.

4 செப்., 2013

என்கவுண்டர் கவிதை...

நான்,
ஒரு கவிதை எழுதியிருந்தேன்
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம்
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட
அந்த சம்பவத்தை,
அல்லது கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள்
சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள்
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே
தொலைபேசியில் பாராட்டும் சிலர்
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை வெளியிடச்சொல்லி
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி
பின் மாநிலம் முழுதும் பரவி
மொழிபெயர்க்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என பரப்பினர்,
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என எதிர்த்தனர்,
முதன்முறையாக இடது, வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என மேடையில் முழங்கினர்,
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டனர்,
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் என அறிவித்தனர்,
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும்
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்பினர்,
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தனர்,
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசினர்,
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த உலகும்,
என்னையும் அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும்
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும்
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில்
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால்
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள்
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட
ஒன்று கூடி,
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகப்போவதாக
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி
ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால்
மிகுதியாக அரசாங்க சொத்துகளும்
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும்
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும்
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க
கலவரத்திற்கு காரணமாக என்னைக் கைது செய்த
அரசாங்கம்
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும்
இனி,
நான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் எழுதிக்கொடுத்துவிட்டதால்
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள்
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும்
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள்
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம்
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால்
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ
என் மரணம் நிகழக்கூடும்
அப்போது மீண்டும் என்னைப்பற்றி
அல்லது
என் கவிதை பற்றி சிலகாலம் பேசும் அனைவரையும்
வேறொரு சம்பவம்
திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டு
மறக்கடிக்கப்படலாம்
என்னையும்


என் கவிதையையும்...