13 செப்., 2013

கையெழுத்து...

கையெழுத்துக்களால் 
தலை எழுத்தை
மாற்ற முடியுமென,
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் 
தெரிந்து வைத்திருக்கிறான் 
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..

இதயத்தை துடிக்கவைக்கும்
ஜாமீனுக்கு இடும்போது 
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட 
நேரிடலாம் என..

சொத்து விற்கும்போது 
நடுங்கும் கை 
வாங்கும்போது நளினமாக 
விளையாடும் பத்திரத்தில்..

பிராக்ரஸ் கார்டில் 
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..

சகல இடங்களில் 
தேவையாகும் ஒரு கையெழுத்து 
தனித்தனி எழுத்தாகவோ 
கோணலாகவோ 
ஒற்றை எழுத்தில் சுழித்தோ 
படங்களைப்போல் அழகாகவோ..

எத்தனை முறை போட்டிருப்போம் 
ஓவ்வொரு முறையும் 
ஒவ்வொரு கதை இருக்கும்..

பிரபலங்களிடம் வாங்கியவை 
சில பரணிலும்,
சில வரவேற்ப்பறையிலும்,
சில குப்பையிலும்..

காதலை சொல்கிற கடிதம் 
காதலியைவிடவும் அழகானது..

பதிவு அலுவலகத்தில் 
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் 
கையெழுத்துகளில் சில
குடும்ப நல மன்றங்களில் 
முடிவடையும்..

சமயங்களில் நம் தலையெழுத்து
ஒரு கையெழுத்தால் 
தீர்மானிக்கப்படலாம்..  

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு 
ஒளிந்து வாழ்கிறேன் 
நான்..

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான்...

/// காதலை சொல்கிற கடிதம்
காதலியைவிடவும் அழகானது... /// இது அழகான உண்மை...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

//பதிவு அலுவலகத்தில்
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின்
கையெழுத்துகளில் சில
குடும்ப நல மன்றங்களில்
முடிவடையும்...//

உண்மை அண்ணா...

காதலியைவிட அதைச் சொல்கிற கடிதம் பற்றிய வரிகள்.... சூப்பரோ சூப்பர் அண்ணா...

சீனு சொன்னது…

ஹா ஹா ஹா ஒளிந்து வாழுறா மாதிரி தெரியலையே :-)

சமயங்களில் நம் தலைஎழுத்தை கையெழுத்து தான் தீர்மானிகின்றன.. :-)

Unknown சொன்னது…

உண்மை சுடுது...

Unknown சொன்னது…


கையெழுத்தின் தலை எழுத்தையே சொல்லும் கவிதை அருமை

அகலிக‌ன் சொன்னது…

காதலியின் கையெழுத்தே ஒரு கவிதை! கேள்விபட்டிருக்கிறேன். உண்மையில் ஒரு கையெழுத்து கவிதையாகமுடியுமென்பதை இன்று காண்கிறேன்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிலசமயங்களில் நம் கையெழுத்து நம் தலையெழுத்தையும் மாற்றிவிடும்! உண்மையான வார்த்தைகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

arasan சொன்னது…

நிதர்சனம் நிரம்பிய படைப்பு அண்ணே ..

சேக்காளி சொன்னது…

// அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு
ஒளிந்து வாழ்கிறேன்
நான்//
வெளக்கம் ப்ளீஸ்