30 ஜன., 2011

அனைவரையும் வரவேற்கிறேன்...


என் ஆருயிர் நண்பனும், "ழ" பதிப்பகத்தின் பதிப்பாளருமான பதிவர் தஞ்சாவூரான் என்கிற மாப்பிள்ளை O.R.B. ராஜா தனது மென்பொருள் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை (Axiom Semantics Technology Services - Data Warehouse and Business Intelligence Training, Staffing and Consulting) எண்.14, L.B. சாலை, அடையாறு, சென்னை - 20 (அடையாறு சிக்னல் அருகில், அரிஹந்த் ஈ பார்க் எதிரில்) முகவரியில் தொடங்க இருக்கிறார். இந்த நிறுவனத்தினை அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே சிறிய அளவில் தொடங்கி இன்று அமெரிக்கா வரைக்கும் கிளை பரப்பியிருக்கிறார். 

என்னுடன் டவுசர் போடாத காலத்தில் இருந்தே நண்பனாக இருக்கும் எதிர்வீட்டு மாமன் மகன், பனிரெண்டாம் வகுப்புவரைக்கும் ஒன்றாக படித்துவிட்டு, நான் கணக்கில் கோட்டைவிட, அவன் பூண்டி புஷ்பம் கல்லூரியில் கணிணியில் பட்டம் பயின்று, சிங்கப்பூருக்கு வேலைக்கு போய், அங்கிருந்து அமெரிக்கா சென்று அங்கு ஒன்பதாண்டுகள் பணியாற்றியவன். மனதில் இப்போதும் கிராமத்தானாக வாழும் அவன்தான் நான் பிளாக் உலகிற்கு வந்ததற்கு காரணகர்த்தாவும். 

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தபின் இங்கிருக்கும் மக்களுக்கு நாம் எதையாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவன். இவன் விளம்பரம் செய்துகொள்ளாது செய்த உதவிகள் அநேகம். இதை அரசியலுக்கு வந்து செய்யலாமே என அவனை வற்புறுத்துகிறேன். ஆனால் நல்லது செய்ய அரசியலுக்கு வந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை என மறுப்பான். எப்படியும் அரசியலில் அவனை கொண்டு வருவது என்கிற முனைப்பில் இருக்கிறேன் நான். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

இந்த நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.

29 ஜன., 2011

தமிழர்களின் எழுச்சி.. #tnfisherman...


"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்"

வண்டியில் ஏற்றும் சுமை மயிலிறகே ஆனாலும் குறிப்பிட்ட அளவினைத் தாண்டும்போது வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பது குறள்.

இந்திய அரசின் கோழைத்தனமும் சுயநலமும் நிறைந்த 'இறையாண்மை' வண்டியில் தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது மயிலிறகல்ல- தமிழ்மீனவனின் உயிர். இதோ முறியத் துவங்கி இருக்கிறது இறையாண்மை அச்சு!

தமிழக மீனவன் இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததும். இத்தனை நாள் இல்லாது இணைய உலகில் திடீரென ஒரு எழுச்சி நெருப்பாக பற்றிக்கொள்ளும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சமூகக் கோபமும், அக்கறையும் சராசரி இந்தியனிடம் குறிப்பாக தமிழனிடம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நண்பர் TBCD அனுமன் வால் தீயென பற்றவைத்த சிறுநெருப்பு இன்று உலகம் முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் ஈழத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இன அழிப்பு உச்சகட்டத்தை அடைந்தபோது இந்திய ஊடகங்கள் அதை திட்டமிட்டே மறைத்தன. அப்போது இப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கும். நம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே...

இப்படித் தொடர்ந்து ட்விட்டுவது இரண்டொரு நாளில் குறைந்துபோகும் என்றுதான் கருணாநிதி முதலான அரசியல் சுயநலங்கள் கணக்குப் போட்டிருக்கும். ஆனால் உலகின் அத்தனை ஊடகங்களையும் திரும்பிப்பார்க்க வைத்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் சல்யூட்.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் மாற்றம் நிச்சயம் வரும்.இந்த போலி அரசியல் வியாதிகளையும் நம்மால் துடைத்தொழிக்க முடியும்.

"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்"

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். 

இது சம்பந்தமான பதிவுகள்... ( இணைப்புகள் விடுபட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரியப்படுத்துங்கள்)#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ


மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?


ட்விட்டரில் நடக்கும் போராட்டம்!!!!!#tnfisherman


#tnfisherman மெளனசாட்சியின் மூன்று கவி தைகள்


மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

தண்ணீரிலும் கண்ணிரிலுமே வாழ்கை.


மீனவ நண்பன் - டிவிட்டருக்கு வாருங்கள் #ட்ன்பிஷேர்மன்இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?

28 ஜன., 2011

நகரத்து மிருகம்...

அய்யனார் கோயில் ஆலமரத்து ஊஞ்சல்
அன்றாடம் முங்கு நீச்சலுக்கு
ஆறுமுகக்கோனார் கம்மா
இச்சிலிபிச்சிலி ஒளிஞ்சு வெளையாட்டு
கெராமத்துப்பெரிசுகளின்
தீராப்பெருங்கதைகள்
அங்காளி பங்காளி அரும பெரும
மாமன் மச்சான் குடும்பப்பெரும
தாவணி மறைக்கும் தாமரைமொட்டுங்க
திருவிழாக்கடையின் கலர் சர்பத்து
திருட்டுக்கள்ளு தெவிட்டா சாராயம்
இன்னும் இனிக்குது
எம்புட்டோ நெனப்புங்க

ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்
மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்..


26 ஜன., 2011

குடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்...


விடிந்தால் 62 ஆவது குடியரசுதினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் துவங்க இருக்கின்ற வேளையில் குடியரசு பற்றிய சிந்தனைகள் ஒரு ஓட்டை அரசாங்கப் பேருந்தில் முக்கி முக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது எனக்குள் கிளைக்கத் தொடங்கின.

நேற்று(25.01.2011) காலை 10 பத்து மணிக்கு திருச்சியிலிருந்து அரசுப் பேருந்தில்( சூப்பர் டீலக்ஸ் ஏர்பஸ்ஸாம்!) சென்னைக்குக் கிளம்பிய நான் இரவு ஏழு மணிக்கு பெருங்களத்தூர் வந்து சேர்ந்தேன். இடையில் எங்கள் பஸ்ஸை முந்திச் சென்ற டிவிஎஸ் ஃபிஃப்டி வண்டியைப் பார்த்து அதிர்ச்சியான நான் ட்ரைவரிடம் சென்று "அண்ணே! கொஞ்சூண்டு வேகமாப் போலாமே?" என்றபோது அவர் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு " ஏங்க! நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்! சட்டில இருந்தாத்தானேங்க ஆப்பையில வரும்?" என்றபோது 'வாழ்க ஜனநாயகம்' என்று ஒரு அசரீரி எனக்குள் ஒலித்தது. வழியில் வரும்போது சாலையில் இருபுறங்களிலும் ஆட்களே இல்லாத வனாந்திரங்களிலுங்கூட 'தென்னகத்துப் பிரபாகரன்(!) திருமா, 'தளபதி' இசுடாலின், சின்ன மற்றும் பெரிய அய்யாக்கள் (தர்மதொரைக்கள் கணக்காக) சுவர்களிலும், ஃப்ளக்ஸ்களிலும் புன்னகை சிந்தி நவீன ரட்சகர்களாக அவதரித்திருந்தனர்.

இப்படியாகப்பட்ட உபதெய்வங்களுடனும், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேக தெய்வத்துடனும் இன்னுமொரு குடியரசுதினவிழா பாண்டுவாத்தியங்களுடனும், அணிவகுப்புக்களுடனும், 'விடுமுறைதின சிறப்பு' நிகழ்ச்சிகளுடனும் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கின்றது. வழக்கம்போல நாமும் சிறிது சாக்லேட்களுடன் 'தேசப்பற்றை' வெளிப்படுத்த இருக்கிறோம்.

நம் பதிவுலக அறிவுஜீவிகளும் 'மெய்சிலிர்க்க' இந்தியக்குடியரசு தினத்தைப்பற்றி 'தேசப்பற்று' பொங்கிட பதிவுகளை எழுதத் துவங்கி இருப்பார்கள். 

நான் ஒருவழியாக வீடுசேர்ந்து சலிப்பாக 'முட்டாள்பெட்டி'யைத் திறந்தால் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. முந்தாநேத்து செத்துப்போன மீனவனுக்காக இலங்கைத் தூதரகத்தின் முன்பு நம்ம திருமா ஆட்கள் குருமா கிண்டப்போக (மாணவர்கள் மற்றும் நாம் தமிழர் இயக்கம் போன்று நிஜமான உணர்வாளர்களைத் தவிர்த்துவிடுவோம்) எல்லோரும் 'அடையாள'க் கைது செய்யப்பட்டதாக செய்தி ஓடிக்கொண்டிருந்தது. 'என்ன ஆச்சர்யம்! தமிழனுக்கும் சூடுசொரணை  வந்திருச்சே! ஒருவேளை 'கிரிஸ்டல் உப்பு'க்குப் பதில் ஒரிஜினல் உப்பைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டானோ?' என்று கையைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.

ஆக ஒருவழியாய் இன்னுமொரு சம்பிரதாயக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. சன், ஜெயா, கலைஞர், விஜய் உள்ளிட்ட அத்தனைக் காட்சி ஊடகங்களும் 'சுதந்திரத்துக்காக' (ஆடைக்குறைப்பில் மட்டும்!) பாடுபடும் 'சமூகச் சிந்தனை'க் குறிக்கோள்களை உடைய 'ஐ டோண்ட் நோ டாமில்' நடிகைகளின் பேட்டிகளை ஒளி மற்றும் ஒலி பரப்பத் தயாராகிவிட்டன. இந்த நகைச்சுவைக்(அவலச்சுவை) காட்சிகள் அரங்கேறும் வேளையில் இந்தியத் திருநாட்டின் சீரும் சிறப்புமான (செருப்புமான!) முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

மத்திய மாநில அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் இவர்களது ரதகஜதுரக பதாதிகளான புரோக்கர்கள், அல்லக்கைகள், தொண்டர்கள்(குண்டர்கள்) முன்பெல்லாம் கடமையை மீறுவதற்கு மட்டுமே காசுகேட்ட நிலை போய் இப்போது கடமை என்று உச்சரிக்கவே காணிக்கை தரவேண்டியுள்ள சூழலில், அரசாங்கமானது மக்களின் சொத்துக்களை நவீன 'சமூகசேவகர்'களாக அவதாரம் எடுத்திருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தொழில் அதிப மனைவியருக்குத் தாரைவார்த்தும், இன்னும் ஸ்வான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை விலையில் மொத்தச் சொத்தையும் ஏலம்போட்டும் அப்படியும் மிச்சம்மீதியிருக்கும் கனிமவளங்களை பெருமுதலாளிகளுடன் கூட்டுப் பங்கு போட்டும் தேசத்தின் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் நட்சத்திர ஓட்டல் பார்களின் சைட் டிஷ்ஷாக மாற்றி விட்டனர்.

சச்சின் டெண்டுல்கர்கள் சதமடிக்கும்போது 'பீறிட்டெழுவது' மட்டுமே தேசபக்தி என்று நவீன அகராதிகள் அர்த்தம் கூறும் காலத்தில் மத்திய இந்தியாவில் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் எளிய மக்களைக் காசுகொடுத்து (நம்மூர்ல ஓட்டுக்கு ரெண்டாயிரமாம்!) வாங்க முடியாமல் 'நக்ஸலைட்' என்று புதிய நாமகரணம் சூட்டி அவர்களை துப்பாக்கி சுடும் பயிற்சி இலக்குகளாக்கியும், கற்களையும் கைகளையும் மட்டுமே ஆயுதங்களாக்கித் தெருவில் இறங்கி நிற்கும் காஷ்மீரிகளை 'தேசத்துரோகி'களாக்கியும், மான்சாண்டோ முதலாளிகளின் மரபணுமாற்ற விதைகளை(விஷங்களை) இறக்கி மொத்த இந்திய மக்களையும் ஆண்மையற்றவர்களாக்கக் காயடிக்கும் முயற்சிகளையும் செய்துகொண்டே கதர்க்குல்லாய் மாட்டி ஜெய்ஹிந்த் முழக்கம் போடுகின்றது இத்தாலித்தாயாரை சூத்ரதாரியாகவும், தலைப்பாக்கட்டுக்காரரை (நீயெல்லாம் ஒரு சீக்கியன்!) பொம்மையாகவும் கொண்டு தினம் ஒரு நாடகம் நடத்தும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சீரிய முயற்சியில் நிகழ இருக்கும் அறுபத்தி இரண்டாம் குடியரசு தின வாழ்த்துக்களை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஹெஹ்ஹே...!

போஃபர்ஸ் பேரத்தில் கொஞ்சமாகத்தான் 'அடித்தோம்' என்ற வருத்தத்தைப் போக்கி, பாஜகவின் பங்காரு லட்சுமணன்களையும்( வீடியோ வைத்து லஞ்சம் வாங்கும் நெஞ்சுரம் கொண்டவர்!) மிஞ்சிநிற்கும் சவாலை ஏற்று காமன்வெல்த்தை 'கல்மாடி' வெல்த்தாக மாற்றியும், கார்கில் விதவைகளின் வீட்டை 'ஆட்டை'யைப் போட்டும், அலை அலையாக அலைக்கற்றைகளை அள்ளிவீசி லட்சம்கோடி ரூபாய்களை கூமுட்டை இந்தியனுக்கும் அறிமுகப்படுத்தியும் தேசத்தை உலகத்தரத்துக்கு முன்னேற்றிச் செல்லும் தியாகப்பயணத்தில் இதுகாறும் இணைந்து இருக்கும் டமிளினத் தல கலைஞ்சர் மற்றும் இளவரசனார் இசுடாலின், மூமூமூமூமூத்த இளவரசனார் அளகிரி, இளவரசியார் கனிமொளி மற்றும் இணைவதற்காக ஏங்கி 'சீச்சீ!இந்தப்பளம் புளிக்கும்' ரேஞ்ஜுக்கு ஆளாகிப்போன கொடநாட்டுக்கோமகள் கோமளவல்லி அம்மையார்(நன்றி: ஈரோட்டு இளங்கோவன்), அவரது 'இணை'பிரியாத் தோழியும் மிடாஸ் முதலாளியுமான 'சின்னம்மா' சசிகலா நாச்சியார், இன்னும் டுப்பு டுப்பென்று தீபாவளித் துப்பாக்கி சுடும் 'கேப்டனார்', ஈழத்தை மீட்கும் சுந்தரபாண்டியர்கள் திருமா மற்றும் வைக்கோ(ல்), 'ராஜ்யசபா' வியாதியினால் பீடிக்கப் பட்டிருக்கும் பெரிய மற்றும் சிறிய மருத்துவர்கள்( லேகிய டாக்டர்கள்) ஆகியோர் புடைசூழ இந்திய ஜனநாயகமும் 'தேசபக்தி'யும் கனஜோராய் மார்கழி மாசத்துச் சுண்டல் கணக்காய் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கின்றது. 

உலகின் 'பெர்ர்ர்ர்ரீஈஈஈய' குடியரசு நாட்டின் 'குடி'ஜனங்களாகிய நாமும், தினம் தினம் குருவிக்குப் பதிலாகச் 'சுட்டுச்சுட்டு' விளையாடப்படும் ராமேஸ்வரத்து மீனவனுக்கு 'த்சொ,த்சொ' கொட்டிக்கொண்டும்,  செத்தவன் குடும்பத்துக்கு அஞ்சுலட்சம் கொடுத்து சரிக்கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் மாசத்துக்கு பத்துமுறை தவணைக்கு ரெண்டுரூபாவீதம் உயர்த்தப்படும் பெட்ரோலை முணகிக்கொண்டு வாங்கி அன்றாட 9-5 ஜீவனத்தை கவனித்தபடியும், 'இவனுங்களையெல்லாம் நிக்கவைத்துச் சுடணும்' வசனத்தை நாளுக்கு நூறுமுறை ஜெபித்தபடியும் இன்றைய குடியரசுதினத்தை மிட்டாய் சகிதம் 'கொண்டாடி' மகிழ்வோமாக!

பின் மற்றும் முக்கியமான குறிப்பு : 'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசபக்தி'ச் சிசுபாலர்கள் இந்தத்தளத்தை விட்டு விலகி அவரவர் ஊரில் இருக்கும் 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் கருணைகூர்ந்து வழங்கப்படும் மிட்டாய்களைச் சப்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

24 ஜன., 2011

துரோணா ... - 2


அறம் கெடும் நிதியும் குன்றும் வியும் மாயும் காலன் 
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் 
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோரென்னும் 
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே. சீவக சிந்தாமணி - 122 வது பாடல். 

அம்மாவைத்தவிர யாருமே என்னை அடித்ததில்லை. பள்ளியில் வாத்தியாரிடம் வாங்கிய அடியை கணக்கில் கொள்ளவேண்டாம்,  அது நம் மேல் கொண்ட அக்கறையின் மேல் அடிப்பது. ரவி என்னை அறைந்ததும், கடும் கோபமாகி நான் அவன்மேல் பாய்ந்தேன், இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதை பார்த்து அந்த பெண்மணி கத்தவே, நண்பர்கள் ஓடி வந்து எங்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். நண்பர்கள் இரு கோஷ்டியாக என்னை ஆதரித்தும், எதிர்த்தும் பிரச்சினை ஆனது. 

அப்போது அந்த பெண்மணி..

"மண்ணு திங்கறத, மனுஷன் திங்க ஆசப்படுறான், சின்னத்தம்பிய  வரசொல்லுங்க, அவரும் கொஞ்சம் திங்கட்டும்" என ஆடைகளை போட்டுக்கொண்டே அவளது தீர்ப்பை சொல்ல, இன்னொரு அண்ணன் கணேஷ் ஓங்கி அவளை ஒரு அறை விட்டு "மொதல்ல நீ இங்கிருந்து போடி" என்று அவளுக்கான பணத்தை தந்து அனுப்பினார். 

அன்று இரவு முழுதுமே நான் சமாதானம் ஆகவில்லை. ரவி கூட கொஞ்சம் இறங்கிவந்து "டேய், உங்க வீட்டுக்கு தெரிஞ்சா எங்களை சும்மா விட மாட்டாங்க, அதனாலதாண்டா... " என்றான். உண்மைதான், மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டதுதான் என் வீடு. இப்படி ஒரு விசயம் தெரிந்தால் என் வீட்டில் பிரச்சினை ஆகும். மேலும் அந்த சமயத்தில்தான் என் அண்ணன் பெரிய குடிகாரனாகி வீட்டில் அவனால் ஏற்ப்பட பிரச்சினைகளால் நொந்துபோய் இருந்தனர். நான் தப்பு செய்யமாட்டேன் என்கிற அளப்பரிய நம்பிக்கையில்தான் என்னை சுதந்திரமாக விட்டிருந்தனர்.

ஆனால் நான் ...

இந்த மாபெரும் பரந்த உலகில் எல்லா மனிதர்களும், சந்தர்ப்பத்தால் தப்பு செய்துவிட்டதாக சொல்பவர்களைத்தான் நான் சந்தித்து இருக்கிறேன், யாரும் விரும்பியே தவறுகளை செய்ததாக சொல்வதில்லை. ஆனால் நான் அப்போது செய்த அத்தனை தவறுகளுமே நான் திட்டமிட்டு செய்தவை. 

பத்தாம் வகுப்பு முடிந்து என் வாழ்வு தலைகீழாக மாறும் என அந்த விடுமுறையில் நான் நினைக்கவில்லை. ஆறாம் வகுப்பு முதல் என் நண்பர்கள் வட்டத்தை குறைத்துக்கொண்டு எந்நேரமும் படிப்பு அல்லது நூலகம் என்று இருந்தவன் நான். அப்படிப்பட்ட நான் பள்ளி திறந்தவுடன் பதினொன்றாம் வகுப்புக்குள் நான் நுழைந்தபோது அதுவரை வழக்கமாக என்னுடன் படித்தவர்களுடன் சில பழைய மாணவர்களும் இருந்தனர்.அவர்கள் பத்தாம் வகுப்பில் பெயிலாகி எப்படியோ மீண்டும் பாசாகி படிக்க வந்தவர்கள்.மெல்ல இவர்களின்பால் என் கவனம் திரும்பியது. அவர்களுக்கு படிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான், சைட் அடிப்பது, எல்லோரையும் கலாய்ப்பது, வகுப்புகளை கட் அடித்துவிட்டு சிகெரெட் பிடிப்பது, சமயங்களில் தண்ணி அடிப்பது என அவர்களின் உலகம் களைகட்டும், பெரும்பாலும் பாலியல் கதைகளால் நிரம்பி வழியும் அவர்களின் நாவசைவில் கிறங்கி நானும் அவர்களின் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன். அவர்கள்தான் சரோஜாதேவி, மருதம் போன்ற தீவிர பாலியல் இலக்கியங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

1987 களில் அப்போதுதான் கருப்பு & வெள்ளை டிவி க்கள் பரவலாக அறிமுகம் ஆனது , கிராமங்களில் சில வசதியான வீடுகளில் மட்டுமே வாங்கி வைத்திருப்பார்கள், அப்படி எங்கள் தெருவிலும் ஒரு வீட்டுக்கு முதன்முதலாக டிவி வந்தது, மாடியில் உயரமான சவுக்கு கம்பத்தில் ஆண்டெனா கட்டி வைத்திருப்பார்கள் ,தூர்தர்சனின் கொடைக்கானல் டிவி ஒளிபரப்பு மட்டுமே தெரியும், வெள்ளியன்று ஒலியும், ஒளியும நிகழ்ச்சியும், ஞாயிறு திரைப்படமும் மட்டும் பார்க்க சகலரையும் அனுமதிப்பார்கள், வீட்டுக்கு வெளியே பெரிய மேசையில் டிவியை வைத்துவிடுவதால் தெருவே அங்குதான் கூடியிருக்கும். என்னுடைய செட்டுங்களோடு நானும் ஐக்கியமாயிருப்பேன், முதல் அத்தியாயத்தில் சொன்ன நண்பர்களும் வருவார்கள், அந்த நண்பர்கள் அனைவருமே அப்போது என் அண்ணனின் செட்டு.

இப்படி ஒருநாள் டிவியில் போட்ட படத்தை பார்த்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கவே என் அண்ணின் செட்டில் இருந்த ரவியும், செங்குட்டுவனும் என்னைப்பார்த்து வெகுவாக நக்கலடித்தனர். ஏற்கனவே பள்ளியில் பெரிய செட்டுகளுடன் பழக ஆரம்பித்திருந்த எனக்கு அது கோபத்தை வரவழைக்க அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தேன், ஆனால் அவர்கள் என்னை சட்டை செய்யாமல் விடாமல் நக்கலடிக்கவே என்னுள் தூங்கிகொண்டிருந்த ஒரு மிருகம் மெல்ல விழித்தது.

அதன்பிறகு பள்ளியில் சிகெரெட் பழகிக்கொண்டேன், மெல்ல பியரில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணியையும் பழகிக்கொண்டேன், வீட்டினருகில் இருந்த என் சேக்களிகளை விட்டு விலகி அண்ணனின் செட்டுகளுடன் பழக ஆரம்பித்தேன், என்னுடன் இப்போதும் நெருங்கிய நட்பில் இருக்கும் சத்தி அத்தான் அதற்கு உதவினார். அந்த பழக்கம் இறுக்கமாகி காட்டாற்றின் தகராறில் வந்து முடிந்துவிட்டது.

இந்த சம்பவத்தால் ஏற்ப்பட்ட அவமானத்தை நான் கழுவ நினைத்தேன், ரவி மிகவும் முயன்று தோற்றுப்போன ஒரு பெண்ணை மடக்குவது என்பதுதான் பதிலடியாக இருக்கும் என சபதம் கொண்டேன். அது அடுத்த வாரமே எனக்கு அமையும் என அப்போது நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அந்த பெண்ணில் ஆரம்பித்து எத்தனை பெண்கள்....

ஒரு கட்டத்தில் ரவி மட்டுமல்ல என் சேக்காளிகள் உட்பட அத்தனை பேரும் என் மேல் பொறாமை கொள்ளும் அளவுக்கு போய் அது என் வீட்டினருக்கும் தெரிய ஆரம்பித்தது.

அந்த முதல் பெண் எனக்கு எப்படி கிடைத்தாள்?, அதன்பிறகு நான் சந்தித்த பிரச்சினைகள் அத்தனையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ..

தொடரும் ...

23 ஜன., 2011

துரோணா... - 1


"காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம் 
 காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் 

 காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் 
 காமமே அனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியும் கத்திதானே".... விவேக சிந்தாமணி.. 133வது பாடல் 

நீங்கள் முதன் முதலில் நேரிடையாக உடல் உறவு காட்சியை பார்த்திருக்கிறீர்களா?  அப்படி ஒரு காட்சியை நீங்கள் எந்த வயதில் பார்த்திருக்கிறீர்கள்? இது அதிர்ச்சியான கேள்வியாக இருக்கிறதா? செக்ஸ் என்பது வாழ்வியலின் இன்றியமையாத ஒரு அங்கமாக இருந்தாலும் இந்தியாவில் அதிலும் தற்கால தமிழ்க்கலாச்சார  சிக்கலில் இது சிரமமான கேள்விதான். முதன்முதலில் இப்படி ஒரு காட்சியை என் நண்பன் ஒருவன் நேரில் கண்டதாக சொன்னபோது எங்கள் இருவருக்கும் பணிரெண்டு வயது. தன் பெற்றோர் தான் தூங்கிவிட்டதாக நினைத்து அரையிருட்டில் முயங்கியதை பார்த்துவிட்டு அவன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எனக்கே ஏதோ மாதிரி இருந்தது. நான் முதன்முதலில் அப்படி ஒன்றை பார்க்க நேர்ந்தபோது பதினேழு வயது எனக்கு. இப்போதெல்லாம் சின்னப்பசங்க இணைய மைய்யங்களில் சர்வ சாதரணமாக பார்க்கிறானுங்க, ஆனா எனக்கு அன்று அது பயம் கலந்த சந்தோசத்தை கொடுத்தது. 

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது புளு பிலிம் பார்க்கும் ஆர்வம் நண்பர்களுக்குள் ஒருமுறை கொழுந்துவிட்டு எரிய அந்த தீயை அணைப்பதற்காக மன்னார்குடியில் ஒரு வீடியோ கடைக்காரனை சரிகட்டி வாடகைக்கு டிவி, கேசட் பிளேயர் (VCR) எடுத்துக்கொண்டு ஒரே ஒரு புளு பிலிம் கேசட் மட்டும்தான் இருக்கறது என கடைக்காரன் கொடுக்கவே, எதற்கும் இருக்கட்டும் என அப்போது வெளிவந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தையும் கொடு என்க்கேட்டபோது நண்பனோ, "டேய் இந்த கேசட்டையே நம்ம பயலுவ மாத்தி மாத்தி பாப்பானுக, அது வேற எதுக்குடா" என என்னை திட்டினான்.

எங்கள் ஊருக்கு பின்பக்கமாக இருக்கும் வடசேரி கிராமத்தின் வயல்காட்டில் இருந்த நண்பனின் மின் மோட்டார் கொட்டகைக்கு நாங்கள் சமாச்சாரங்களை கொண்டு வந்து சேர்த்ததே பெரும்பாடு. எல்லாவற்றையும் செட் செய்து புளு பிலிம் கேசட்டை போட்டால் அதில் கால்பந்து வீடியோ ஓடியது. போலிசுக்காக அப்படி பதிவு செய்திருப்பார்கள் என அனுபவசாலி ஒருவன் சொல்லவே. கடைசிவரைக்கும் மேட்டர் படம் மட்டும் இல்லவே இல்லை. கடைக்காரன் அவசரத்தில் மாற்றிக் கொடுத்துவிட்டான். எனவே எல்லோரின் வசையையும் வாங்கிகொண்டு 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்த்தோம். சொன்னபடி படம் காட்டவில்லை என்பதால் நண்பர்கள் துரோகிகள் ஆக மாறி யாரும் பணம் கொடுக்கவில்லை. நாங்களும் தூக்கி வந்து அவமானப்பட்டதை காரணம் காட்டி கடைக்காரனிடம் இருநூறு ரூபாய் அபராதம் வாங்கிக்கொண்டுதான் விட்டோம்.

இப்படியாக நேரடி அனுபவம் இல்லாத எனக்கு அன்று மணல்திட்டில்  இப்படி ஒரு காட்சி வரப்பிரசாதம் என்றாலும். ' கேபிள் சங்கரின் முற்றுப்புள்ளி' சிறுகதையில் வரும் நாயகனைப்போல் ஒரே நெர்வசாக இருந்தது. பின்னாட்களில் தாய்லாந்தில் லைவ் ஷோக்களை பார்த்தாலும், இந்த முதல் காட்சி போல வரவே வராது. 

அன்று 1988 -ன் ஒரு கோடைக்காலம் ..... 

நள்ளிரவு பணிரெண்டு மணியை தாண்டியிருந்தது. நாங்கள் ஒரு காட்டாற்றின் நடுவே மணல் திட்டில் நான்கு பேர் அன்று மாலை கரும்புக்காட்டில் வெடிவைத்துப்பிடித்த நரியை உரித்து வாட்டிக்கொண்டு இருந்தோம், எங்கள் அத்தனை பேரில் நான் மட்டுமே வயதில் சின்னவன் , நான்கு பேர் திருமணம் ஆனவர்கள், மீதிப்பேர் திருமண வயதை எட்டியவர்கள். நான் எப்படி இவர்களுடன் வந்து சேர்ந்தேன் என்பதை பின்னால் சொல்கிறேன். இப்படி ராத்திரிகளில் நாங்கள் அனைவரும் வயலுக்கு இரவில் நீர்ப் பாய்ச்சுவதாக சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம், அல்லது வயல்காட்டில் கிழங்கு, சோளம், வேர்க்கடலை இப்படி அனைத்து பொருட்களையும் ஆட்டய போட்டு தின்பது எங்களின் பொழுதுபோக்கு. கண்டுபிடித்தாலும் தின்பதற்க்காகத்தான் திருடியிருக்கிறோம் என்பது தெரிந்து திட்டிவிட்டு விட்டுவிடுவார்கள். சமயங்களில் கரும்புக்காட்டில் கிடைக்கும் காட்டுபூனைகள், நரிகள் கிடைத்தால் இப்படி காட்டாறு பக்கம் வருவோம்.

காட்டாற்றின் இன்னொரு பக்கம் மும்முரமாக எங்கள் ஊர் ஆட்கள் சிலர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அப்போது மது விற்பனை தனியார் வசம் இருந்தது. சாராயத்திற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அதனால்  கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடக்கும். எங்கள் ஊரிலேயே போலிஸ் ஸ்டேசன் இருக்கிறது, ஆனால் எங்கள் ஊர் ஆட்களிடம் மட்டும் மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.  நாங்கள் அங்குதான் சாராயம் வாங்கிக்குடிப்போம், அவர்கள் தங்களுக்காக சுத்தமான சாராயம் காய்ச்சி வைத்திருப்பார்கள், அதனை எங்களுக்கு மட்டும் தருவார்கள்,  இலவசமாகத்தான், பதிலுக்கு நாங்கள் நரிக்கறி தருவோம். இது வாரம் ஒருமுறை கட்டாயம் எங்கள் அட்டவணையில் இருக்கும். ஊரில் அரசால் புரசலாக தெரிந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை, அதற்கான காரணம் குடிப்பது ஒரு பெரிய குற்றமாக ஊரில் யாரும் நினைப்பதில்லை.

ஏற்கனவே உள்ளிறக்கிய கொஞ்சம் சாராயம் வயிறை பிரட்டவே தீயில் வாட்டிக்கொண்டிருந்த நரியின் தொடைகளை நண்பனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தாழைப்புதர்கள் பக்கமாக ஒதுங்கினேன். பவுர்ணமி நெருங்கிகொண்டிருந்ததால் முக்கால் நிலா தன்னை மேகங்களில் இருந்து விலக்கி நான் போகும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. கொஞ்சம் நடந்ததும் கேட்ட வித்தியாசமான முனகல் என்னை கவனம் திருப்பவே மெல்ல அதை நோக்கி முன்னேறினேன், தாழைப்புதர்களை தாண்டியதும் மணல்திட்டில் இரு உடல்கள் மும்முரமாக இயங்கிகொண்டிருந்தது. அதனை பார்த்ததும் அப்படியே உறைந்து போய்விட்டேன்.ரகசியமாக படித்த சரோஜாதேவி புத்தகங்கள் தராத அதிர்ச்சியும், சந்தோசமும் ஒன்று சேர்ந்து வயிற்று இரைச்சலை நிறுத்திவிட்டு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். 

மெல்ல நிலவொளியில் உருவங்கள் தெரிய ஆரம்பித்தன. ஒரு ஆள் போய் இன்னொரு ஆள் வந்தான், மூன்றாவது ஆளும் முடித்தபோது அவள் அயர்ச்சியில் போதும்யா கொஞ்ச நேரம் கழித்து பாத்துக்கலாம் என வந்த நாலாவது ஆளிடம் சொல்ல, அந்த நாலாவது ஆள், தான் வைத்திருந்த சாராயத்தை அவளிடம் நீட்டியபோது வாங்கி ஒரே இழுப்பில் முடித்தாள். மற்ற ஆட்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டனர். அந்த நாலாவது ஆள் மட்டும் அவளை மெல்ல சில்மிஷம் செய்ய, அவளோ டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே என உளறினாள்.

அங்கு இருந்த நான்கு ஆட்களும் என் நண்பர்களே. எனக்குத்தெரியாமல் கூட்டி வந்திருக்கிறார்கள், அதிலும் நான்காம் ஆள் என் நெருங்கிய நண்பன் ரவி, எனவே ஆர்வம் என்னை முன்னே தள்ள நான் நேரே அங்கு சென்றேன். அவன் என்னை எதிர்பார்க்கவில்லை,

 "டேய் மசுராண்டி நீ எங்கடா வந்தே... உனக்கு யார்ரா சொன்னது" என பதட்டமானான். 

நான் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முதன்முதலில் ஒரு பெண்ணை நிர்வாணமாக அப்போதுதான் பார்ப்பதால் எனக்கு வினோதமான இறுக்கம் வந்துவிட்டது.

ரவியோ "டேய். போடா இங்கிருந்து"என விரட்டினான். 

நானோ "டேய் ... டேய் ,... நானும் ஒரு தடவைடா..." என்றேன். 

பளாரென ஒரு அறை விழுந்தது எனக்கு...

தொடரும்..

22 ஜன., 2011

கருப்பன் உத்தரவு ...வலக்கை அரிவாளும், 
இடக்கை பாதி உடைந்தும் 
பரி மீதேறி,
பைரவர் துணையோடு 
ஊர்க்காப்பான் கருப்பன்..

பூட்டாத உண்டியலும் 
உடைந்த மண்குதிரைகளும் 
உயர்ந்த கான்க்ரீட் குதிரைகளும் 
காலி குவாட்டர் பாட்டில்களும் 
மீதி சுருட்டுக்களோடும் 
வயல்வெளியின் நடுவே 
ஒற்றைப்பனைமர
காக்கைகளின் வசிப்பிடத்தின் கீழே 
கருப்பன் சந்நிதி..

சாமியாடி குறி சொல்லும் 
சண்முகம் சித்தப்பா குரலில் 
தலைகட்டுக்கு ரெண்டென 
கருப்பு  சாமியின் கட்டளைக்காய் 
வருஷம் தவறாமல் கிடாவெட்டு..

முதல் மொட்டை,
காதுகுத்து 
பிணி நீக்கும் 
வரட்டி சாம்பலில் 
கருப்பன்  மகிமை..

பங்காளியை போட்டுத்தள்ளி 
சிறை சென்ற சண்முகம் சித்தப்பா 
இப்போதும் சொல்கிறார், 
எல்லாம் கருப்பன் உத்தரவு..

20 ஜன., 2011

நட்பு - பயோடேட்டா...

பெயர்                                   : நட்பு
இயற்பெயர்                        : ஒண்ணுக்குள்ளே ஒன்னு, மண்ணுக்குள்ளே மண்ணு
தலைவர்கள்                      : கர்ணன் முதல் பள்ளி நண்பன் வரை
துணை தலைவர்கள்        : சினிமா, இலக்கிய நாயகர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்
    : தோழிமார்கள்
வயது                                   : விவரம் தெரிகின்ற வயது முதல்
தொழில்                              : பலிகடா ஆவது 
பலம்                                     : நண்பேன்டா!
பலவீனம்                             : முதுகுக்குப்பின் நக்கலடிப்பது 
நீண்ட கால சாதனைகள்     : நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன் 
சமீபத்திய சாதனைகள்        : ராஜபக்சே, சோனியா நட்பு
நீண்ட கால எரிச்சல்           : நம்பிக்கைத்துரோகம்
சமீபத்திய எரிச்சல்             : ஆண், பெண் நட்பு
மக்கள்                                        : உறவினர் அல்லாதோர் 
சொத்து மதிப்பு                     : பேனா(ரெஜிஸ்டர் ஆஃபீஸில் கையெழுத்துப்போட),
                                                    கண்ணாடி டம்ளர்(டாஸ்மாக்கில் கம்பெனி கொடுக்க)
நண்பர்கள்                              : ஒரே அலைவரிசைக்காரர்கள், அல்லது 
                                                     செலவு செய்பவர்கள் 
எதிரிகள்                                   : நேற்றைய நண்பர்கள் 
ஆசை                                        : நண்பனின் தங்கைகள் 
நிராசை                                    : அவள் அண்ணன் என சொல்லிவிட்டாள்
பாராட்டுக்குரியது           : ஆபத்தில் துணை நிற்பது - உடுக்கை இழந்தவன் கை... 
பயம்                                          : போட்டுக்கொடுப்பானோ?
கோபம்                                    : காலை வாருவது
காணமல் போனவை      : ஜாதி, மத வேறுபாடுகள்
புதியவை                              : நள்ளிரவு கொண்டாட்டங்கள் (காண்டம் அவசியம்)
கருத்து                                    :"உன் நண்பனை பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி
                                                      தெரிந்து கொள்கிறேன்"
டிஸ்கி                                          : நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது 
                                                          நெருக்கமாக இருக்கிறாய்..

19 ஜன., 2011

வியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...

கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மற்ற அனைத்தும் அதன் சார்புத்தொழிலாகவும் இருக்கும். என்னதான் வீட்டில் டீ குடித்தாலும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே டீக்கடைகளில் அரட்டை கச்சேரி நடத்தினால்தான் பெரிசுகள் திருப்தி அடையும். சிறிய மளிகைக்கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தங்களால் இயன்ற அளவு நகரங்களில் இருந்து மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்ப்பார்கள். ஓரளவுக்கு தங்களுக்கான அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், எல்லாக்கிராமங்களுமே தங்களின் பெரும்பாலான தேவைகளுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களைத்தான் நம்பியிருக்கின்றன. 

ஒரு காலத்தில் வார சந்தைகள் மூலமாகத்தான் எல்லாப் பொருட்களும் வாங்கினர்.இப்போது சந்தைகள் ஒழிந்துவிட்டன, தென் தமிழகத்தில் மட்டும் இன்னும் பரவலாக இருக்கிறது. அதே போல ஆடு, மாடுகள் கிராமங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. மகளீர் சுய உதவிகுழுக்கள் நிறைய கிராமங்களில் இப்போது பொருளாதார ஆதாரங்களை உயிர்ப்பித்தாலும் நமது நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கிய கிராமங்கள் மெல்ல நகரங்களின் சாயங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்க்கு முழு முக்கிய காரணம் ஊடகங்கள்தான். 

நீங்கள் புதிதாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏற்ற சரியான இடம் இப்படி கிராமங்கள் சூழ்ந்த சிறு நகரங்கள்தான். இங்கு நீங்கள் ஒரு உணவகமோ அல்லது சிறிய பல்பொருள் வணிகம் செய்யும் அங்கடியோ, வேறு நீங்கள் விரும்புகிற எந்த வியாபாரமோ, அதற்கு இப்படிப்பட்ட இடங்கள்தான் சரியான தேர்வு. பெருநகரங்களில் நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் அதற்க்கான முதலீடு மிக அதிகம் தேவைப்படும் மேலும் உங்களுக்கான வாடிக்கையாளரை நீங்கள் மெல்லத்தான் பெற முடியும். ஆனால் சிறு நகரங்களில் நீங்கள் தொடங்கும் தொழிலுக்கு உங்கள் கிராமத்து ஆட்கள் அனைவரும் வாடிக்கையாளர் ஆவார்கள். மேலும் சுற்றுவட்டார மக்களும் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள் அவர்களும் உங்கள் சேவையின் தரத்தை சரியாக வைத்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பெரிய நகரங்களில் தொழில் செய்தால் ஆடிக்கு கூழ் ஊத்துகிரவர்கள் முதல் ஐயப்ப பக்தர்கள்வரை வசூல் வேட்டை செய்வார்கள். மேலும் அரசியல்வாதிகள், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், சில இடங்களில் உள்ளூர் தாதாக்கள் வரை நம்மை ஆதிக்கம் செய்வார்கள், ஆனால் உங்கள் பகுதியில் நீங்கள் வியாபாரம் செய்ததால் உங்களை இம்மாதிரி சில்லறை ஆசாமிகள் தொந்தரவு செய்யமாட்டார்கள். 

சிறுநகரங்களில் நீங்கள் எத்தகைய முதலீட்டை செய்வதாக இருந்தாலும் எதிர்காலத்தில் குறைந்தது பத்து கிளைகளாவது துவக்கும் எண்ணத்துடன் ஆரம்பியுங்கள், உங்களது திட்டமிடல் சரியாக அமைந்தால் பெரிய நகரங்களுக்கும் உங்கள் கிளைகளை பரப்பமுடியும். பெரிய நிறுவனம் ஆகிவிட்டால் சிறிய பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யாது. கிராம மக்களால் இருக்கும் ஒரே தொந்தரவு கடன் கேட்பார்கள், கொடுக்காவிட்டால் குறைசொல்வார்கள். இதற்க்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. ஒன்று: ஆரம்பத்தில் இருந்தே கடன் யாருக்கும் கொடுப்பது கிடையாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பது. இரண்டு: சிறிய அளவில் மட்டுமே கடன் கொடுப்பது அதாவது வராவிட்டாலும் சமாளித்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிற அளவு. இந்த வழியால் நல்ல வாடிக்கையாளர்கள் நம்மிடம் தொடர்ந்து வருவார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு தடவையோடு நம் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

இது குறைந்த முதலீட்டுக்கான யோசனை மட்டுமே. மற்றபடி பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இருந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலைக்கும் சென்று ஜெயிக்கமுடியும்.

18 ஜன., 2011

சித்தன் வாழ்க்கை...

மதுச்சாலைகளின்
சிறிய வெளிச்சத்தில் 
சிதறிய குப்பைகளின் மேல் 
சகிக்க முடியா மேசையில் 
இட நெருக்கடியை பகிர முடியாது 
நின்றவாறே எப்போதும் ..

கூடுதல் விலைக்கு 
விற்பவனின் பரம்பரையை 
ஏலம் விட்டான் ஒருவன்,
போலி சரக்கு தந்த 
ஆள்வோரை இன்னொருவன்..

கடைக்கு வெளியே 
இறைவனை நாடி 
புதிய வகை யோகாவை 
பயின்றுகொண்டிருந்தான் ஒருவன்,
கடவுளிடம் பேசிக்கொண்டு 
இன்னொருவன்..

சகித்துக்கொண்டுதான் 
வாழவேண்டியிருக்கிறது 
ஆள்பவர்களையும் 
அல்லக்கைகளையும் 
சமயங்களில் என்னையும்..

17 ஜன., 2011

எங்கே போகிறது இந்தியா - பகுதி நான்கு...

இந்தியாவைப்பற்றிய பெருமிதம் நம் அனைவருக்குமே இருக்கிறது,. மன்னராட்சி முடிந்து இங்கிலாந்து நம் தேசத்தை கைப்பற்றியவுடன் ஆப்பிரிக்க நாடுகளைப்போல் நம்மை சுரண்டாமல் நமக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்தார்கள். இன்றுவரைக்கும் அவர்கள் அமைத்துத் தந்ததைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்குமேல் நாம் செய்த அத்தனை வேலைகளும் தொலைநோக்கு பார்வை இல்லாது அத்தனை நகரங்களும் ஒழுங்கான கட்டமைப்புகளை கொண்டிராது மக்கள் நெரிசலில் பிதுங்கி வழிகிறது. நமது அரசியல்வாதிகள் தொலைநோக்குப் பார்வையில் எதையும் திட்டமிடாமல் செய்யும் ஒரே காரணம் மீண்டும் மீண்டும் செய்த வேலையையே திருப்பிச்செய்து கமிசன் அடிக்க வேண்டும் என்கிற காரணம்தான். சென்னையின் பெரிய சாலைகளில் நடுவில் இருக்கும் சாலை தடுப்புகள் இப்படித்தான் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இடித்து கட்டப்படுகிறது. 

ஹான்ஸ் ரோஸ்லிங் என்கிற ஆராய்ச்சியாளர் அனைத்து நாடுகளின் வளர்ச்சியையும், பொருளாதாரம், மருத்துவம், கல்வி என அனைத்துப்பிரிவுகளிலும் 1800 ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து அதனை நமக்கு எளிமையாக கிராபிக்ஸ் மூலம் விளக்கியிருக்கிறார். சீனா, ஜப்பான் ஆக்கிரமிப்பு, மற்றும் இங்கிலாந்து நடத்திய கொகேயின் வார் இரண்டாலும் இந்தியாவை விட மிகுந்த பின்னடைவை சந்தித்தாலும் அது மீண்டும் தொடர்ந்து இந்தியாவை பின்னுக்குத்தள்ளிவிட்டு தன்னை கட்டியெழுப்பி இருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சியே நகைச்சுவையானது. முந்தய காலத்தில் அங்கு யாரும் சுலபமாக தொழில் தொடங்கிவிட முடியாது. அதிலும் சாதாரண ஆட்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆள்வோரின் கட்டுப்பாடுகளை எப்படியாவது உடைத்துக்கொண்டுதான் மெல்ல தொழில் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் மெல்ல மெல்ல நாம் நமது ஜனநாயக உரிமைகளை இழந்துகொண்டு வருகிறோம். குறிப்பிட்ட ஒரே குடும்பம் அதிகாரத்தை தக்கவைத்திருப்பது நாட்டை நிச்சயம் தவறான பாதைக்குத்தான் இட்டுச்செல்லும். வெளிப்படையான அரசாங்கம் இப்போது இல்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை மக்களிடம் கருத்துக்கேட்டு செய்வதில்லை. உலக வங்கியிடமும், உலக கார்ப்பரேட்டுகளிடமும் நமக்குத்தெரியாமல் நாம் அடகுவைக்கப்பட்டு இருக்கிறோம். கருப்புப் பணம் வைத்திருப்பதில் உலகில் முதலிடத்தில் நாம்தான் இருக்கிறோம். அடிப்படை உணவுப் பொருட்ககளின் விலை அடிக்கடி தாறுமாறாக ஏறி இறங்குவதும், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே இருப்பதும் தவறான பொருளாதாரக் கொள்கையின் பலன்களே.

சென்றவருடம் நம்மால் சமாளிக்கக்கூடிய அளவைத்தாண்டிவிட்டது விலைவாசி. இனி இந்தவருடம் என்ன ஆகப்போகிறதோ!.


சமீபத்தில் ஈழத்தில் இருந்து வந்திருந்த இருவரை சந்தித்தேன். "மொத்த இலங்கையும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடப்போகிறது, அதுதான் எங்கள் வருத்தம்" என்றனர். நான் சிரித்துக்கொண்டே "ராஜபக்சேக்கு சீனா மேல்தான்" என்றேன். "எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது" என்றார். நானோ "இவ்வளவு பெரிய இந்தியாவை இத்தாலிதான் ஆளுகிறது, நாங்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்" என்றேன். புரிந்துகொண்டு வெகுநேரம் சிரித்தார்கள்.. 

14 ஜன., 2011

நம்பிக்கைத் துரோகம்...

கணந்தோறும் நிகழும்
கணக்கற்ற துரோகங்கள்
வழியும் குருதியும்
சிந்தும் கண்ணீரும்
இரக்கம் தேடியல்ல..

துரோகச் சித்திரங்களை
வரைய
வன்முறையில் மூழ்கடிக்கப்படும்
வாழ்க்கை..

வலியது ஜெயிக்க
எளியது பிழைக்க 
நியாயமாகும் சில
துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது 
உலகில் மனிதம் ..

வலியை
ஈனஸ்வரத்தில்
வழியவிட்டபடி
முற்றுப்புள்ளி இன்றி
இந்தக் கவிதை

11 ஜன., 2011

பிச்சைக்கார வாக்காள பெருமக்களே...

தேர்தல் நெருங்கிகொண்டிருப்பதால் ஆளும்கட்சியான தி.மு.க மட்டுமே  அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளை தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறது, அதன் எல்லா வட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி வரும் தேர்தலில் வகுத்திருக்கும் வியூகங்களை தொண்டர்களிடம் தெளிவாக விளக்குகிறார்கள். எல்லோரையும் கவனமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் ஆர்வக்கோளாறு உள்ள தொண்டர் ஒருவர் அவர்களின் திட்டங்களை சொன்னபோது அடப்பாவிகளா என்றிருந்தது. ஏற்கனவே அவர்களின் தேர்தல் வியூகம் பற்றி நானும் பத்திரிகைகளும் எழுதியிருந்தாலும், வரும் தேர்தலில் பணம் புகுந்து விளையாடும் என்றே தெரிகிறது.


தி.மு.க தன் இருப்பை தக்கவைத்து கொள்வதைக்காட்டும் முனைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அ.தி.மு.க காட்டாது இருப்பது, அது அடுத்த ஆட்சியை பிடிப்பதைவிட எதிர்க்கட்சியாக இருக்க விரும்புவதையே காட்டுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக கொடநாட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதா தனக்கு சமீபத்தில் கூடிய கூட்டம் கண்டிப்பாக தனக்கு ஒரு எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுத்தரும் என நம்பி இன்றுவரை கூட்டணி பற்றி கூட கவலைப்படுவதாக தெரியவில்லை. எப்படியும் தான் விரும்பாவிட்டாலும் அ.தி.மு.க என்கிற ஒரு கட்சி மட்டுமே தனக்கு எதிர்கட்சியாக இருப்பதை கலைஞரே விரும்புவார் என்பது ஜெவுக்கு தெரியும், கடந்த ஐந்து வருடங்களில் உருப்படியான எதிர்கட்சியாக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை. 

விருதகிரி படம் கொடுத்த வசூல் தெம்பில் கொஞ்சம் செலவழித்து கூட்டம் கூட்டி தன் பேரத்தை தக்கவைத்துகொள்ள இப்போதுதான் விஜயகாந்த் ஆரம்பித்துள்ளார். அதுல பெரிய நகைச்சுவையே மக்கள் உரிமை மீட்பு மாநாடு அது என்பதுதான். கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணிக்கு போகவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.அதனால் இப்போது முறுக்கு காட்டினாலும், மச்சானும், மனைவியும் வைத்ததே சட்டம் என்பதால் போதையில் உளறுவதாக சொன்னவரை இவர் அன்புச்சகோதரி, புரட்சித்தலைவி என மேடையில் முழங்கப்போகும் நாள் வெகு அருகில்தான்  இருக்கிறது.

பா.ம.க தனது அறிக்கையாக மூன்றாவது அணி அமைத்து அன்புமணியை முதல் அமைச்சர் ஆக்குவோம் என சொல்லியிருக்கிறது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக தி.மு.க வினர் காலில் விழுந்தாவது வருகிற தேர்தலில் இவர்கள் கூட்டணி வைத்துவிடுவார்கள். இவர்கள் வைக்கபோகும் ஒரே நிபந்தனை மீண்டும் மத்தியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி.

காங்கிரஸ் தங்கள் கட்சியின் ஊழலை மறைக்க கலைஞரின் அனுமதியுடன் ராசாவை வீட்டுக்கு அனுப்பிய விவகாரத்தை பத்திரிகைகள் உட்பட அனைவரும் மறக்கத் துவங்கிவிட்டோம். காங்கிரசை பொறுத்தவரை கலைஞர் ஒரு மூத்த ஆலோசகர். அதனால் வெளியில் அவர்கள் அடித்துக்கொள்வதைப்போல நடத்தும் நாடகத்தின் உச்சம் சமீபத்தில் அழகிரியின் ராஜினாமா நாடகம். வருகிற தேர்தலிலும் காங்கிரஸ்,தி.மு.க வுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்ளும். 

வாக்களரில் ஆரம்பித்து, பூத்தில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேருக்கும் வரும் தேர்தல் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. மக்களை இலவசங்களை வாரிக்கொடுத்து வாயை அடைத்த அரசு, தங்கள் சேனல்களின் புரோமோசனுக்காக இலவச தொலைக்காட்சியை தந்து வருமானத்தை பெருக்கிகொண்ட அரசு கடந்த ஐந்தாண்டில் சொதப்பிய அநேக விசயங்களை சரி செய்துகொள்ள வாக்களார் அனைவரையும் வளைப்பதற்கு தெளிவான திட்டங்களை வகுத்துள்ளார்கள். 

மற்ற கட்சியினரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம்தான், அதனை வாங்கிக்கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முந்தய தேர்தல்களில் பேசியதையே இப்போதும் பேசுவார்கள். மக்களை பிச்சைக்காரகள் ஆக்குவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.

ஆனால் ஆளும்கட்சி வரும் தேர்தலில் பயப்படும் ஒரே ஆள் யார் என்றால் அது சீமான் மட்டுமே. தனது வெற்றியைப்பற்றிக் கவலைப்படாத அ.தி.மு.க வுக்கு சீமான் ஆதரவு அளிக்கப்போவதாக சொன்னபோது தி. மு.க வினர் மத்தியில் கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது. காரணம் சீமானிடம் இருப்பவர்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் துடிப்பான இளைஞர்கள். தாங்களால் அ.தி.மு.கவினர் அனைவரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என நம்பும் தி.மு.க வால் சீமான் படையை விலைக்கு வாங்கவே முடியாது. அவர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமானவர்கள் என அவர்களுக்குத்தெரியும். அதனால் பூத் ஏஜெண்டுகளாக சீமான் கட்சியினர் வரவிடாமல் தடுக்கப்பார்பார்கள். மத்திய தேர்தலில் காங்கிரசார் தமிழகத்தில் மண்ணைக்கவ்வியதற்க்கு சீமானே காரணமாக இருந்தார். சமீபத்தில் ஒரு தி.மு.க வினரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சீமான் ஆபத்தானவர், அவர் தீவிர அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் கெட்டுப்போவார்கள், அவர் பேச்சைகேட்டு உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பார்கள் என்றார். கேட்கவே நகைச்சுவையாக இருந்தது. 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்...