29 பிப்., 2012

க்ரூரம்...


க்ரூரமாய் தகிக்கும்
மத்திய நாள் சூரிய அம்புகளென
உன் வார்த்தைகள்
என் நடு மண்டைக்குள் 
அனலடிக்கின்றன
தகிப்பின் உக்கிரத்தில்
மூளை 
உனக்கான வேட்டையைத்
துவக்கும் நாளினை
குல தெய்வ சாட்சியாய்
சத்தியம் செய்கிறது..

இது குருஷேத்ரமல்ல
ஆனாலும் 
சகுனியைத் துதித்து
ஒரு முதல் அம்பு
அது உன்னை
உன் குடும்பத்தை
குடும்ப உறுப்பினர்களை
துளைத்து
ஒரு தேநீர் கடை வாசலில்
என்னிடம் திரும்ப வந்தது..

நியூட்டன் விதிகள்
சமயங்களில்
எதிராய்த் திரும்பும் 
என முன்பே கணித்திருந்த
என் சீரிய அறிவை மெச்சியவாறே
அடுத்த கனையை ஏவினேன்
அது தேநீரோடு 
அங்கிருந்த அனைவருக்கும்
பகிரப்பட்டு
ஊர் முழுதும் பரவத்துவங்கிய 
நாளின்
நள்ளிரவில்
நீ ஊரை நீங்கினாய்..

ஜெயித்தலின் க்ரூரம்
வார்த்தைகளில்
விஷம் தடவியபடி
நாளை முதல்
இந்த ஊரெங்கும்
வலம் வரும்..

27 பிப்., 2012

”ஈழம்” - திரு.சி .சிவசேகரம் அவர்களின் கவிதை...


திரு.சி .சிவசேகரம் அவர்களின் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது..

நாம் ஒவொருவரும் ஈழத்தை எப்படி பார்க்கிறோம் என்பதை காட்டும் கண்ணாடி இந்த கவிதை ...
கவிதை முகத்தில் அறைகிறது .... என்ன செய்யப் போகிறோம் ................

என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைபட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடிதுரைத் தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியகரதனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பால்க் கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டால் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்....

24 பிப்., 2012

ஒரு என்கவுண்டரும், இரண்டு கவிதைகளும்...


நான்,
இதற்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன்
அதை வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம் 
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி 
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை 
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம் 
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட 
அந்த சம்பவத்தை,
அல்லது 
என் கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள் 
இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் 
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே 
தொலைபேசியில் பாராட்டும் சிலர் 
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை 
அல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி 
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி 
பின் மாநிலம் முழுதும் பரவி 
மொழிபெயர்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி 
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட 
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும் 
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும் 
முதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து 
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும் 
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும் 
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும் 
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும் 
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும் 
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த 
உலகும், 
என்னை அல்லது அந்தக் கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க 
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும் 
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும் 
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக 
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில் 
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால் 
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக 
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு 
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த 
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள் 
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட 
ஒன்று கூடி, 
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக 
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென 
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி 
ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால் 
மிகுதியாக அரசாங்க சொத்துகளும் 
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும் 
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்காக யார் இறந்திருந்தாலும் 
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு 
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க 
கலவரத்திற்கு காரணமாக என்னைக் கைது செய்த 
அரசாங்கம் 
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து 
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும் 
இனி, 
நான் எழுதவே மாட்டேன் என்றும்
எழுதி வாங்கிக்கொண்டு 
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை 
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் 
எழுதிக்கொடுத்துவிட்டதால் 
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை 
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை 
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு 
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள் 
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும் 
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள் 
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம் 
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால் 
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ 
என் மரணம் நிகழக்கூடும் 
அப்போது மீண்டும் என்ன்னைபற்றி 
அல்லது 
அந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும் 
வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது 
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு 
மறக்கடிக்கப்படுவோம்  
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...

சரண்டர்...


என்னிடம் இருக்கும் 
ஆயுதங்களை 
யாருக்காவது தர விரும்பினேன்
எவரும் முன்வராத
மூன்றாம் நாள் இரவில்
ரத்தக் கறைகள்
படிந்த கத்தி
விசும்பத்துவங்கியது
இரண்டு குண்டுகள் 
மட்டுமே மீதமிருந்த 
துப்பாக்கி 
தன்னைத் தானே சுட்டு
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
மிரட்டியது
பயண்படுத்தாத மீத ஆயுதங்கள்
தம்மை கயாலான் கடையில்
போட்டுவிடாதே 
எனக் கெஞ்சியது
வேறு வழியே இல்லாமல்
அருகில் இருந்த காவல் நிலையத்தில்
ஒப்படைத்தேன்
அவர்கள்
என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு
இதுவரை யாரும் சிக்காத வழக்குகளை
என் பெயரில் முதல் தகவல் அறிக்கை
தயாரித்து
ஒப்புதல் கையெழுத்தோடு
சிறையில் தள்ளினார்கள்
கம்பிகளுக்குப் பின்னால்
ஒரு சுயசரிதை எழுதிக்கொண்டிருந்தபோது
அறை நண்பர்கள்
தங்கள் ஆயுதமாக மாறிய கதையினை
சிலர் அதனை சாகசமாகவும்
சிலர் கண்ணீரோடும்
சிலர் கிடைக்காத கூலிக்காக
கோபத்துடனும் 
பகிர்ந்தனர்
எங்கள் கதை வெளியிடும்
வாரப்பத்திரிக்கை
வெளியே சூடாக விற்பதாகவும்
அதற்கான சன்மானமாக
லட்ச ரூபாயும் தந்தனர்
அனைவருக்கும் நான் அதனை
சரியாக பகிர்ந்தளிக்கவில்லை என 
ஒரு நள்ளிரவில்
என்னைக் கொலை செய்துவிட்டனர்..

22 பிப்., 2012

வசந்த கால கோலங்கள்....


சொற்கள் நடனமிடும் 
கவிதையாய்
வரி வரியாய் 
வாசம் ததும்பும்
வசனங்கள் நிறைந்தது
நம் காதல்..

பிரதி வெள்ளிக்கிழமை 
சாயங்காலம் 
சரியாக ஐந்து மணிக்கு 
பிரகார வெளியில் 
இரு ஜோடி காலணிகள்..

உள்ளே சாமியும் 
ஓங்காரமும் 
ஓம்காரத்தின் உள்ளுணர்வும் 
கடந்து வரும் 
தெய்வீகம் நீ...

நீ பேசும்போது
புருவ மடல்களில்,
ஆடும் செவியின் 
தொங்கல்களில் நான்..

சலிக்கவே இல்லாத ''நின்னையே பா’ரதி'’
பிங்க் நிற சல்வார்,
முதல் கடிதம்,
சிவப்பு ரோஜா.. 

எல்லாமே 
நினைவுகளில் மட்டும்
என்றானபின்
இப்போதும் இருக்கிறதா?
உன் கணவனோடு 
நான் கை குலுக்கிய 
புகைப்படம்..

21 பிப்., 2012

வெயில்...


”இந்த வெயிலை என்ன செய்ய
அறையெங்கும் மின்வெட்டால்
பரவும் புழுக்கத்தில் கசியும் வியர்வை 
பெருக்கெடுத்து ஆடைகளை நனைக்க
பெரு நகரமெங்கும் இப்படியாக
வெயிலை வருடம் தப்பாது வைதாலும்
வெறுப்புடன் பொருத்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது ஒரு
வேண்டா விருந்தாளியைப் போல... ”

"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.

நினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாள் பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாறிவிட்ட என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போது சென்னையின் மே மாத வெயில். வெயில் என்னுள் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப்போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது

எத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.

முதல் காதல் மலர்ந்த மழைராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு மழைதான். கிராமத்து நாட்களில் காலைப்பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.

என் மூத்த சகோதரன் கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும் எனக்கு. நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 

ஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போது திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

சென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில் தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.

அதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் "மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா?"  என்று கேட்டபோது "கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை" என்று சொல்லிவிட்டு, "ஏன் அப்படி கேட்டீர்கள்?" என்றார். நான் சிரித்துக்கொண்டே "என் ராசி அப்படி!" என்றேன். அப்போது அவர் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என!.

சொன்னமாதிரி அந்த வருடமும் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததால் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும்   தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.

எனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என்  தனிமையை நீக்க தொடர்ந்து கூவியபடி இருந்தது.

குறும்புகள் செய்யும் காதலியைப்போல மழை என்னுடன் எப்போதும் தீராவிளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல்முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது. 

இப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

20 பிப்., 2012

மூடுபனி...


மெர்குரி விளக்குகளின் கீழ்
இடம்மாறும் 
நெடுஞ்சாலை நிழலென
தேய்ந்து
வளர்ந்து
இந்த நகரத்தில்
சுற்றுகிறதென் வாழ்வு..
...........................................................

நுரைத்திருந்த கோப்பைகளின்
வழியே ஊடுறுவும்
பொன்னிறக் குமிழிகளாய்
ஒரு 
நீள் இரவு நகர்கிறது
காலியாகும் பாட்டில்கள்
கலைந்த சித்திரமாய்
மேசைக்கடியில் 
ஓர் உடைந்த காதலை
ஒப்புவிக்கிறது...
.............................................................
கூட்டம் அதிகமாக இருந்த 
டாஸ்மாக் பார் ஒன்றில்
நின்றவாரே
V.S.O.P 
முழு பாட்டில்
நெத்திலி ஃப்ரை - 2
ஆம்லெட் - 2
ஆஃபாயில் - 4
கொஞ்சம் கலைஞர்
கொஞ்சம் ஜெயலலிதா
கொஞ்சம் சினிமா
நிறைய வம்பு
போதைக்கு ஊறுகாய்..

.........................................................

முன்னெப்போதும் இல்லாத
உற்சாகம் எனக்கு
நீ செத்துப் போனதால்
கொஞ்சம் வருத்தமும் இருந்தது
நான்
கொன்றிருக்க வேண்டும் ..

19 பிப்., 2012

கடவுள்களும்,கந்தசாமிகளும்...

பிள்ளையார் 
பிரச்சினை இல்லை
அருகம்புல் வைத்தால்
சரியாப்போச்சு
முருகன் கோபக்காரன் 
சஷ்டி விரதம் முக்கியம்
சனி பாவம் தீர்க்க
அதே சனியன்று
எல்லாக் கிரகத்துக்கும் சேர்த்து
பனிரெண்டு முறை சுற்றினால் சுபமே..

கர்ப்பக் கிரகம் வெளியேயும்
ஏதேதோ சாமிகள்
கற்பூரமோ
நெய்விளக்கோ 
அல்லது 
வலது கையை எடுத்து 
உதட்டருக்கே ஒரு ”ச்” சோ..

இப்படியாக 
சாமிகளை வணங்கி
வேண்டும் வரம்
கிடைக்காமல் போனால்
பித்ருக்கள் சமாதானம் ஆக
அமாவாசை விரதம் இரு
குலதெய்வம் தேடி ஓடு
கூடவே ரெண்டு ஆடு
குவார்ட்டர் பிராந்தி
படுகை சுருட்டு ஒரு கட்டு..

கடவுளுக்கும் தெரியவில்லை
மனுசனுக்கும் விளங்கவில்லை
எதைக் கொடுத்து
எதைப் பெறுவதென்று...

13 பிப்., 2012

பிப்ரவரி - 14 ...

அது 
அறியும் ஆர்வம் கொண்ட
அறியாப் பருவம்
உன் தனிமை வீட்டில் 
ஒரே ஒரு முறை மட்டும் 
காண்டம் இல்லாமல் 
அடுத்த விலக்கு வரைக்கும் 
நீ பயந்தாய்
பயம்
எனக்கும்தான்..

ஆனாலும் 
அடுத்தமுறை
நீ மறுத்துவிட்டாய்
"என்னை கட்டிப்பியா?" என்றாய்
நான் யோசித்திருந்த கணம் 
நீ அழுதாய்
காமம் 
காதலானது..


இப்போதும் 
இரவுகளில்
உன் உறங்கும் முகத்தில்
அதே காதலை
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சமயங்களில் 
விடியும் வரைக்கும்..

8 பிப்., 2012

களவு - 4 - சென்னையில் ஒரு இரவு ...

13.06.2010 சென்னை இரவு 8.00 மணி

இன்று காலை முதலே நரேன் உற்சாகமாக இருந்தான். கையில் இருக்கும் பணம் அவனை அதை உடனே செலவு செய்யத் தூண்டியது, நண்பன் வேலை விட்டு வந்தவுடன் அவனிடம் 3000 ரூபாயைக் கொடுத்தான்.

“ஏதுடா! இவ்வளவு பணம்?” - நண்பன்
“இதுக்கேவா? இங்க பாரு” என மீதமுள்ள பணத்தைக் காட்டினான்.
“டேய் பணம் எப்படி வந்துச்சுன்னு சொல்லு”

நரேன் நடந்த அனைத்தையும் அவனிடம் மறைக்கால் சொன்னான்..

“என்னடா இப்படி பண்ணிட்டே! ஒன்னும் பிரச்சினை வராதே?”
“வந்தா பாத்துக்கலாம், முதல்ல நீ குளிச்சிட்டு தூங்கு, இன்னைக்கு ஒனக்கு லீவுதானே? நாம இன்னைக்கு பாருக்குப் போவோம்!”

நரேன் எப்போதுமே பணம் இருந்தால் அதனை உடனே செலவழித்து விடுவான்.

சென்னையின் மத்தியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பாருக்கு அவனும் நண்பனும் சென்றபோது இரவு மணி 8.00.

இரவு பத்து மணிக்கு மேல் ஒரு குரூப் வந்தது. அவர்கள் உள்ளே நுழைந்ததும் மொத்த பாரும் கொஞ்சம் அடக்கியே வாசித்தமாதிரி இருந்தது. அவர்களுக்கு அவசரம் அவசரமாக் டேபிள் ஒதுக்கப்பட்டது. அவர்களுடன் ஒரு புகழ்பெற்ற நடிகையும் இருந்தாள்.

சரக்கு ஏறிப்போனதும் அவர்கள் மையத்துக்கு வந்து ஆடத்துவங்கினர். நரேனும் அவர்களுடன் சென்று ஆடினான். ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்து. அப்பொது அந்த பிரபல நடிகை நரேனைக் கட்டிபிடித்து கண்ணதில் முத்தமிட்டால். நரேன் அவளுடன் சேர்ந்து ஆட முயற்சி செய்யும்போது அந்தக் கூட்டதில் இருந்த ஒருவன் நரேனை பளீரென அறைந்தான். இருவரும் கட்டிபுரண்டனர். எங்கிருந்தோ போலீஸ் வந்து நரேனை மட்டும் அள்ளிக்கொண்டனர்.

நரேன் முகத்தில் தண்ணீரை அடித்தார் ஒரு போலிஸ். கண் முழித்து பார்த்தபோது ஒரு அறையில் தன்னை சுற்றி நான்கு தடிதடியான போலிஸ் பாதி யூனிஃபர்மில் இருந்தனர். மெல்ல எழுந்தான்.

அப்போது கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவருக்கு சல்யூட் வைத்தனர். நரேனுக்கு முதல் நாள் இரவு ஏதோ விபரீதமாக நடந்திருப்பதாக உணர்ந்தான்.

“தம்பி உன் பேர் என்னப்பா?” - அதிகாரி
“நரேன் சார்!”
“குடிக்க வந்த எடத்துல ஒழுங்கா நடந்துக்க மாட்டியா?”
“சார் என் மேலே எந்த தப்பும் இல்ல!”
“அது தெரியும்பா! நீ யாரோட பிரச்சினை வச்சுகிட்டேன்னாவது தெரியுமா?”
“சார் நடிகை யாருன்னு தெரியும், அவங்கதான் என்னோட ஆட வந்தாங்க”

அவர் கொஞ்ச நேரம் யோசித்தார். பின்...
“தம்பி அது பிரச்சினை இல்ல, அவளை அழைச்சிட்டு வந்தது முக்கியமான வி.ஐ.பி யோட புள்ள, அவளை யாராவது தொட்டா அவன் பிரச்சினை பன்னுவான்”
“சார் அதுக்கு போலீஸ் எதுக்கு சார்?”
“ம்... அவன் அரசியல்வாதி புள்ளே, பின்னே எங்களைத்தான் ஏவுவான்’

கண்ட நாயி சொல்றதெல்லாம் கேக்க வேண்டியிருக்கு என சலித்துக்கொண்டார்.
பின் ஒரு அதிகாரியை அழைத்து.

”இவென்.. மேலெ ஒரு வாரம் ஜெயில்ல போடுறது போல ஒரு கேஸ் புக் பண்ணிருங்க:” 
“சார் நான் என்ன தப்பு பண்ணேன் சார்”
” பெரிய ஓட்டலுக்கு ஒன்னை மாதிரி ஆளெல்லாம் போறதே தப்புதான்,”
“சார் கேசெல்லாம் எதுக்கு சார்?”

நரேனிடம் அருகே வந்து மெதுவாக கிசுகிசுத்தார்..

”தம்பி அந்த நாதாரி ஒங்கள அடிச்சி கை காலெ ஒடைச்சு வெளிள வீசுங்கன்னு சொல்லிட்டான், அவனுக்கு அவ மேல கோவத்த காட்டமுடியாது, இப்ப ஒங்கள வெளில விட்டா கோவதுல அவென் ஆளுங்க ஏதாச்சும் பண்ணிருவாங்க, அப்புறம் எங்களுக்கதான் தலைவலி. இவென் இப்படி சொல்றான் அவென் அப்பன் ஒன்னை பதினஞ்சு நாள் செயில்ல போடச்சொல்றான், அவென் அப்பனுக்கு ஏதாச்சும் கொலக்கேசு ஆயிப்போச்சுன்னா தன்னோட அரசியல் பாதிக்கும்ன்னு கவெல, புள்ளைய கண்டிக்க முடியாத அப்பென் மக்களுக்கு என்னத்தே கிளிப்பானோ! அதானால புரிஞ்சுக்கோங்க”
“சார் நான் இப்ப என்ன செய்யனும்?”

அதன் பிறகு அவன் கோர்ட்டுக்கு ஏற்றப்பட்டான் குடிபோதையில் சாலையில் போவோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளை தரகுறைவாக திட்டியதாகவும் FIR பதிவு செய்திருந்தனர்.

நீதிபதி பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அவனை அழைத்துகொண்டு புழல் சிறைச்சாலை சென்றார் ஒரு அதிகாரி..


நரேன்..

வயது 28 (பிறந்த நாள் தெரியாது)

கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் - விசாலாட்சி தம்பதியரின் ஒரே மகன். பூர்வீகம் மன்னார்குடி. கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் நிறைய சகோதர, சகோதரிகளுடன் பிறந்தவர். சிறு வயது முதலே பெரியாரைப் பிடிக்காத ராஜாஜியின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் தொண்டருமான அவரின் அப்பாவால், பெரியார் அப்படி என்னதான் பேசுகிறார் என ஆர்வமாகி அப்பாவுக்கு தெரியாமல் திராவிடர் கழக கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். அது அவரின் பேரறிவைத் தூண்டி ஒரு நாத்தியவாதியாக மாறினார். அதனால் தந்தையால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு நீடாமங்கலத்தில் உள்ள பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். பின் தாத்தாவின் சிபாரிசால் சென்னையில் ஒரு பிரபலமான ஐயங்கார் கம்பெனியில் வேலை கிடைத்தது. மிகவும் நேர்மையானவர். சிறந்த தொழிற்ச்சங்கவாதி எனப்பெயர் எடுத்தவர். எந்த ஐயங்கார் குடும்பமும் பெண் தர முன்வராததால் அதே தாத்தா பார்த்து ஒரு ஏழை ஐயங்கார் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

நரேனின் அம்மாவிற்கு அப்பாதான் தெய்வம். அப்பாவின் கொள்கை காரனமாக அவளும் கடவுளை நிராகரித்தாள். ஒரு பையன் போதும் என அப்பா முடிவெடுத்தில் அம்மாவுக்கு மட்டும் வருத்தம் தங்களைப் போல பிள்ளையும் தனியாக வாழவேண்டிவரும் என அப்பாவிடம் மன்றாடினாள். ஆனால் இந்தியா போன்ற வருமை நாட்டில் ஒரு குழந்தையே அதிகம் என மறுத்து விட்டார். அப்பாவின் தீவிர நாத்திகத்தால் அவர் உயிரோடு இருந்தவரைக்கும் எந்த சொந்தமும் அவரை வந்து பார்க்கவில்லை. இவரும் போகவில்லை. அவரைப் பொருத்தவரை. வீடு, அலுவலகம், சங்கம் ஓய்வாக இருந்தால் படிப்பு என வாழ்க்கையை சுருக்கிக் கொண்டார். மயிலாப்பூரில் அரை கிரவுண்டில் சொந்த வீடு வாங்கினார், நரேனை M.Com வரை படிக்க வைத்தார். தனது 50வது வயதில் தூங்கும்போதே மாரடைப்பில் செத்துப்போனார்.

அப்பா போனதும் அம்மா அந்தக் கவலையால் படுக்கையில் விழுந்தாள். அப்பாவின் அலுவலகம் அவனுக்கு வேலை தர முன் வந்தது. ஆனால் அம்மாவை கவனிக்க யாரும் இல்லாததால் அவன் வேலையை மறுத்துவிட்டான். அப்பாவின் அலுவலகம் தந்த பணம், அப்பாவின் பிராவிடண்ட் பணம், வங்கி சேமிப்பு. அம்மாவின் சொற்ப நகைகள் என அனைத்தும் அம்மாவுக்கே செலவானது. கையில் காசு தீர்ந்த ஒரு இரவில் அவனை அருகே அழைத்து கையை இறுகப் பற்றியவாறே இறந்து போனாள். அப்பா இறந்தபோது அவரின் அலுவலக நண்பர்கள், சங்கத்தினர் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டனர். அம்மா இறந்ததும் நரேனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுதும் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான். விடிந்ததும் அப்பாவின் அலுவலகத்துக்கு சென்று சங்க ஆட்களிடம் சொன்னபிறகு அவர்களில் சிலர் மட்டும் வந்து அம்மாவின் அடக்கம் செய்யும் வரைக்கும் உடன் இருந்தனர். அடக்கம் செய்யும் வரைக்குமான செலவுகளையும் சங்க ஆட்கள் பகிர்ந்துகொள்வதாகவும். அவன் விருப்பப்பட்டால் அவனுக்கு மீண்டும் கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று விடைபெற்றனர்.

நரேனுக்கு அதற்குப் பிறகு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. அவன் நண்பர்கள் முடிவு செய்து மறுநாள் காரியம், பதினாறாம் நாள் செய்யவேண்டியவை என எல்லாம் முடிந்தபோது யாருமற்ற வீட்டில் தனியாக இருந்தான். அப்பாவின் கம்பெனியில் வேலைக்கான ஆர்டர் வந்தது ஆனால் ஓசூர் கிளையில் பணியாறும்படி உத்தரவு வந்தது. அவனுக்கு அதில் விருப்பமில்லை.

கல்லூரி நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வீட்டை வங்கியில் வைத்து பணம் வாங்கி வியாபாரம் செய்தான். ஆரம்பத்தில் பிரமாதமாகப் போனது, பின் இரண்டாவது வருடத்தில் பிசினஸ் படுத்து விட்டது. நண்பன் திடீரென கிடைத்த வெளிநாட்டு வேலையால் பறந்துவிட. வீடு வங்கியால் ஏலத்திற்குப் போய் நடு ரோட்டுக்கு வந்தான்.

அன்றைய தினத்தில் இருந்து கிடைத்த வேலைகளை செய்வது. தன் கல்லூரி நண்பனின் அறையை பகிர்ந்துகொள்வது என வாழ்வை சகித்துக்கொண்டான். அபாரமான கணக்கியல் நிபுனன். ஆனால் எதிர்கால லட்சியம் என்று எதுவுமில்லை. ஒரு முறை மன்னார்குடி சென்று உறவினர்களைப் பார்த்ததில் யாருக்கும் இவன்மேல் அக்கறை இல்லை. இவனும் ஐயங்கார் பழக்கங்களில் இருந்து விடுபட்டு கிடைததை சாப்பிடுவான். நினைத்தால் திருவண்ணாமலைக்கு போவான். ஒரு வாரம் தங்கி எல்லா சாமியார்களையும் பார்ப்பான்,. கொஞ்சமாக அப்போது மட்டும் கஞ்சா அடிப்பான். ஆனால் வேறு சமயங்களில் சிகிரெட்டை தொடமாட்டான்.

படித்த கம்யூனிஷ, பெரியாரிஷ புத்தகங்களைக் காட்டிலும் ஓஷோவு, ஜே.கேவும் யு.ஜி கிருஷ்ண மூர்த்தியும்தான் பிடித்திருந்தார்கள். ஃப்ராய்டை புரிந்து கொள்வதில் தீவிரம் காட்டுபவன். காதல் என்பது செக்ஸ்க்காக மட்டும் என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன். அதனால் தன்னைக் காதலிக்க முயற்சி செய்த மூவரில் இருவரை மடக்க முடியாமைக்கு இப்போதும் வருந்துபவன். நண்பர்கள் அதிகம். ஆனால் யாரையும் நெருக்கமாக நினைக்க மாட்டான். அறையை பகிர்ந்துகொள்ளும் ஒரே நெருக்கமான நண்பனும், ஒரு தற்காலிக காதலி ஒருத்தி (ஆடிட்டர் ஒருவரின் காரியதரிசி) தவிர யாருடனும், எதையும் பகிர மாட்டான்.

தொடரும்...

4 பிப்., 2012

கொஞ்சம் காற்று வரட்டும்...


ஆதியில் 
இருந்த கடவுளுக்கு 
மதம் ஒரு பொருட்டேயில்லை
மொழிகள் அற்ற தேசத்தில் 
மனிதர்கள் காதலிக்கத் துவங்கினர்
விலங்குகள்
காட்டுக்கு இடம் மாறின
நதிகளின் பாதையில் 
கடவுளை நகர்த்திய மனிதன்
சில புதிய மதங்களை அறிவித்தான் 
பல மொழிகளில் 
ஒரே மதம்
பலவாகவும்..

.........................................
வால்மீகியிடம் இருந்து 
கம்பனுக்கு மொழி பெயர்கையில்
கடவுளானான் ராமன்
அரக்கனானான் ராவனன்
ராமனோ
ராவனனோ
சீதை எப்போதும் அழகிதான்
கம்பனுக்கும் 
வால்மீகிக்கும் 
எல்லா காதலனுக்கும் 
பொதுவாக
படைக்கப்பட்டவள் சீதை
பத்தினி என்பதாலும் ..
...............................................................
இரவு
வெகு நேரம் பெய்தது 
பெருமழை
விடியும் நேரம்
சுடுகாட்டில் 
சொட்டிக் கொண்டிருந்தது
வாகை மரத்திலிருந்து
தற்கொலைக்கு சாட்சியாய்
மீத மழை..
....................................................................
தவிர்க்க நினைக்கும்போதெல்லாம்
நீ தவறாது வருகிறாய்
மன்னிக்க முடியாத குற்றம்
எதுவுமில்லை என்றாலும்
ஏனோ உன்னை மட்டும் 
பிடிக்கவில்லை 
எப்போதும்..
..................................................................
சொற்கள் 
தன் கவனத்தை 
தவறவிடும் போதெல்லாம் 
நேர்ந்து விடுகிறது
ஒரு துக்க சம்பவம்..
...............................................................
எங்கெங்கோ சென்று
இறுதியில் 
இங்கே வந்தாய்
ஏற்கவும் 
மறுக்கவும் 
மனசில்லாத தினத்தில்
வந்த வ்ழியே 
திரும்பிக் கொண்டிருக்கிறாய்
வீட்டுக்குள் 
விசும்பல் சத்தம்..
.................................................
பழைய ஓட்டு வீட்டில்
பூனைகள் தூங்குகின்றன
பாழய்த்தான் போய்விட்டது
நம் காதலும்..
..........................................................
நெருப்பை புணர்ந்த சீதை
வண்ணானின் சந்தேகத்தை
உறுதிப்படுத்தினாள்..

3 பிப்., 2012

களவு - 3 - புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்...


நாங்கள்
ஒரு குற்றமும் செய்யவில்லை
பெண்ணாகப் பிறந்து விட்டோம்
அவ்வளவுதான்...

11.06.2010 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி..

“மகமாயி! நீ மெட்ராசு போயித்தான் ஆவனுமா புள்ளே?”- பாவனாவின் அப்பா
“அப்பா என்னை அந்தப்பேர் சொல்லிக் கூப்பிடாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது”- பாவனா
“அது கெடக்கட்டு கலுத, நாங் கேட்டதுக்கு பதுல சொல்லு”
“ஆமாப்பா, டிக்கெட் கூட வாங்கிட்டேன், பத்தரை பஸ்சுக்கு இப்ப கெளம்புனாத்தான் சரியா இருக்கும்”
“ஏதோ பெத்தவுக ஒன் நல்லதுக்குத்தானே கலியாணம் பத்தி பேசுனோம். அதுக்காவ இப்புடி கோச்சுட்டு போலாமா புள்ளே?”
“அப்பா நான் கோவிச்சுட்டு ஒன்னும் போவல! வேலைக்குதான் போறேன்”
உங்க மாப்புளயும் அவன் மொகரெயும் என முனகினாள்..
அதற்குள் பாவனாவின் சித்தப்பா மகன் பைக்கை எடுத்து வரவே, பாவனாவின் அம்மா
“தோ.. உன் பொறந்தவென் வந்துட்டான், கெளம்புடி” என கண்களை துடைத்தாவாறே எழுந்தாள்..

பாவனா..
வயது சரியாக 23 (பிறந்த தேதியெல்லாம் தேவையா என்ன?)
ஒரு குக்கிராமத்தில் குறி சொல்லும் சிவனாண்டித் தேவர் - பாக்கியத்தம்மாளுக்கு பிறந்த மூன்றாவது பெண், முதல் இரண்டுப் பெண்களுக்கு பிறகு பையந்தான் என சத்தியம் செய்த சிவனாண்டியின் வாக்கு பொய்யாகி பெண்ணாகப் பிறந்தவள். நல்ல கருப்பாக பிறந்த அவளுக்கு ’மகமாயி’ எனப் பெயர் வைத்தார். தன் வாக்கு பொய்த்தாலும் மாரியாத்தாவே தனக்குப் பிறந்திருப்பதாக ஊரெல்லாம் சொல்லுவார். சரக்கு உள்ளே போனால் மட்டும் மாரியாத்தாளுக்கு வசவுதான்.

இப்படியாக ஜனித்த மகமாயிக்கு பத்தாம் வகுப்பு வரைக்கும் அந்தப் பெயரால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவளுக்கு அது அவமானமாக இருந்தது. அதிலும் கம்யூனிஸ்டான சித்தப்பாவால் படிக்க கிடைத்த புத்தகங்கள் அவளுக்கு வேறு மாதிரியான உத்வேகத்தை தந்தது. அவளுக்கு முன்னால் “மகமாயி” என்றும் அவள் இல்லாதபோது ‘கருப்பாயி’ என்றும் எல்லொரும், அக்காள்கள் உட்பட அழைப்பது அவளுக்கு தெரியும். எனவே தன் பெயரை மாற்றிக் கொள்வது பற்றி அவள் தீவிரமாக யோசிக்கத் துவங்கினாள். சித்தப்பா ஜென்னி என பெயர் சொன்னார். அது அவளூக்குப் பிடித்திருந்தாலும் யாராவது ஜன்னி என கூப்பிடுவார்கள் என நிராகரித்தாள்.

இறுதியில் தன் ஆங்கில ஆசிரியையின் பெயரான பாவானா அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவளின் ஆசிரியை ‘மகமாயி’ மேல் மிகுந்த பரிவு கொண்டிருந்தாள். புதுக்கோட்டையில் இருந்து தினசரி வந்து போக முடியாமல் அந்த கிராமத்தில் ‘மகமாயி’ வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடிவந்தாள். மகமாயிக்கு அவள் ஆசிரியை ஒரு தேவதையாகவே தெரிந்தாள். அவள்தான் ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசும் அளவுக்கு சொல்லித் தந்தாள். எனவே ஆசிரியை மிகுந்த கூச்சத்துடன் அனுமதிக்க பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன் “பாவனா” வானாள்.

அதன்பிறகு பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகள் புதுக்கோட்டையிலும் MCA வல்லம் பெரியார்- மணியம்மையிலும் படித்தாள். பெண்ணுக்கு படிப்பெதுக்கு என சிவனாண்டிதேவர் கல்லூரிக்கு பணம் கட்ட மறுத்துவிட்டார். சித்தப்பாதான் பணம் கட்டினார். கல்லூரியில் படித்த பெரியார் புத்தகங்கள் அவளை முழு நாத்திகவாதியாக மாற்றிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் வேலை கிடைப்பது சிரமமாக மாறியது, அவளின் சித்தப்பாவும் யார் யாரிடமோ சொல்லிப்பார்த்து கடைசியில் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மாதம் 3000 ரூபாய் சம்பளத்திற்கு
வேலைக்குப் போனாள். பள்ளியின் பேரூந்து தன் ஊருக்கும் வந்து போகும் என்பதால் வாங்கும் சம்பளத்தில் சித்தப்பாவுக்கு 1500, அம்மாவுக்கு 500 (மதிய சாப்பாட்டுக்கு) தனக்கு ஆயிரம் என பிரித்துக் கொள்வாள். 

தன் முதல் இரண்டு மகள்களில் ஒருத்தியை சொந்த மைத்துனனுக்கும், இன்னொருத்தியை தூரத்து சொந்தத்தில் ஒருவனுக்கும் இருந்த நிலத்தை விற்று கட்டிக்கொடுத்த சாமியாடி சிவனாண்டியின் மகமாயி என்கிற பாவனாவுக்கு மாப்பிள்ளை கிடைக்கவேயில்லை. அவருக்கும் இப்பல்லாம் பெரிசா வருமானம் இல்ல. எல்லாரும் டவுனு ஜோசியக்காரன் கிட்ட எதிர்காலம் அறியச்சென்று விடுவதால் தலித்துகள் மட்டும் இன்னமும் இவரிடம் குறி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் இப்போது குவாட்டருக்கு காசு கொடுப்பது இல்லை. வியாதிக்கெல்லாம் மருந்து கொடுப்பாரு இப்ப அதுவும் போய் ஊருக்குள்ள ஒரு மெடிக்கல்ஸ் வந்து செட்டு மாதிரைகளால் சகல வியாதிகளையும் குணப்படுத்தினர்.

சாதில இருக்கிற பசங்க பெரும்பாலும் படிக்காம சிங்கப்பூர், மலேசியா போய் சம்பாதிக்கிறவனுங்க, அவனுகள மகமாயிக்கு புடிக்கவே இல்லை, வெளியூரு மாப்பிள்ளைக போட்டோ பாத்துட்டு இவ்வளவு கருப்பா இருப்பதால் வேண்டாம் என பொண்ணு பார்க்க வராமலே பதில் சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

இப்படியாக மாப்பிள்ளைகள் கழிந்ததில் பாவனாவுக்கு கூட வருத்தம்தான். இதற்கிடையில் பாவனாவின் பள்ளி பேரூந்து ஓட்டுனன் (அவனும் தேவர்தான்) அவளுக்கு நூல் விட்டான். பத்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவன் அவன். பாவனாவுக்கு அவனை பரிசீலிக்கலாமா? கூடாதா? என பகுத்தறிவு சிந்தனைகள் குழப்ப. அதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்த ஒரு எஞ்சினியர் தன் முதல் மனைவி கேன்சரில் இறந்துவிட இரண்டாம் தாரமாய் பாவனாவைக் கேட்க, பொண்ணு பாக்க வந்து தனக்கு மனைவி என்பது கூட முக்கியமில்லை. தன் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் வேண்டும் என்பதால்தான் இந்தத் திருமணம் என்றான். அவன் கூடவே வந்த இரண்டு பிள்ளைகளும் இது நம்ம மம்மியா? ஐயோ வேண்டாம் டாடி என அப்போதே முரண்டு பிடித்தன.

பாவனாவுக்கு குழப்பமாக இருந்தது. அவனுக்கு 40 வயது என்பதும், அவனின் இரண்டுப் பிள்ளைகளும் அவளை பயமுறுத்தின. அவன் தெளிவாக தனக்கு சொந்தமான ஊரில் உள்ள வீட்டில் பாவனாவின் பெற்றோர் குடியிருக்கலாம் என்றும். இரு அக்காள் வீட்டுக்காரனுக்கும் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதும். குடும்பம் மொத்தமும் பாவனவுக்கு அவனை கட்டிக்கொள்ளச் சொல்லி வேப்பிலை அடித்தது. ஆனால் அவளின் சித்தப்பா தெளிவாக இருந்தார். சிங்கப்பூரில் மெய்ட் கிடைப்பது சிரமம். அதிலும் இரண்டுப் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் வேலைக்கு யாரும் வர விரும்ப மாட்டார்கள். அதனால்தான் உன்னை வேலைக்காரியுமாச்சு, பொண்டாட்டியுமாச்சுன்னு நெனெக்கிறான் வேண்டாம் புள்ளே என்றார்.

அதுநாள் வரை சித்தப்பாவை எல்லாமாக நினைத்த குடும்பம் அவரை தூற்றியது. இப்படியாக திசை மாறிய பாவனாவின் வாழ்க்கை. அவளின் தோழி மூலமாக சென்னைக்கு இடம் மாறியது.

தொடரும்...

2 பிப்., 2012

களவு - 2 - சென்னை ...


நீ மீனாக இரு
சிறிய மீன்களை
பெரிய மீன்களே வேட்டையாடும்
எனவே 
பெரிய மீன்போல் நடிக்கவாவது செய்..

நாள் 12.06.2010 சனிக்கிழமை மதியம் 2.00 மணி சென்னையின் OMR  சாலை..

“பைக்கை ஒரங்கட்டுப்பா” - ட்ராபிக் கான்ஸ்டபிள்
“சார், அவசரமா ஒரு இண்டர்வ்யூ போறேன்” - நரேன்
“ டாக்குமெண்ட் காட்டிட்டுப் போப்பா, ஹெல்மெட் வேற போடல!”
நரேன் பைக்கை ஓரங்கட்டி டாக்குமெண்டை தேடினான், எதுவும் சிக்கவில்லை.
“சார்! இது ஃப்ரெண்டோட பைக்கு, அதனால டாக்குமெண்ட் எங்க வச்சிருக்கான்னு தெரியல!!”
“ ஃப்ரெண்டுக்கு போனை போட்டு எங்கிருக்குன்னு கேட்டு, தேடிப்பாரு!”
“சார்! என் மொபைல்ல அவுட்கோயிங் போகாது, உங்க மொபைல் கொஞ்சம் கொடுங்க,”
“டேய்! ஏண்டா, இம்சை பன்றே, சரி ஒரு 100 ரூவா கொடுத்துட்டுப் போ!!”
“சார், என்கிட்ட பத்து பைசா கிடையாது. ப்ளீஸ் சார், என்னை விட்ருங்க”
”கயில பத்து பைசா கூட இல்ல, மொபைல் வேலை செய்யாது, ஓ.சி பைக்கு, சார் எங்க இருக்காரு?”
“திருவல்லிக்கேணில ஒரு மேன்ஷன்ல சார்”
“ எந்த ஊர் ஒனக்கு”
“இந்த ஊர்தான் சார்”
“இந்த ஊர்ல இருந்துட்டு ஏன்யா, மேன்ஷன்ல இருக்கே, வீட்டுல எதுனா தகறாரா?”
“அதெல்லாம் இல்ல சார், என்க்குன்னு யாரும் கிடையாது, அதான் ஃப்ரெண்டுகூட ரூம்ல இருக்கேன்”
உடனே ஏட்டு தன் சக தோழரை அழைத்து..
“யோவ் பெரிசு இங்க வாயேன். ஒரு இண்ட்ரெஸ்டிங் கேசு சிக்கிருக்கு!” 
அவர் வந்ததும் அதே கேள்விகளை வேறு மாதிரி கேட்கவும், கடுப்பான நரேன்
“சார் உங்களுக்கு இப்ப என்ன வேனும்”
“டேய் 100 ரூவா கொடுத்துட்டு எடத்த காலி பண்ணு, இல்லன்னா திருட்டு வண்டின்னு சொல்லி உள்ள தள்ள வேண்டிவரும்”
“சார் இது என்னோட ஃப்ரெண்ட் வண்டின்னுதான் சொல்றேன்ல, வேனுன்னா வண்டிய வச்சுக்குகங்க, ஒரிஜினல் எடுத்துவந்து காட்டிட்டு வாங்கிக்குறேன்”

நரேன் அப்படி வீரமாக சொன்னாலும் உள்ளுக்குள் உதைத்தது, அவன் நண்பன் தூங்கும் நேரமாக அவன் வண்டியை ஆட்டையை போட்டுட்டு வந்திருக்கிறான். சரியாக 5 மணிக்கு அவன் நைட் ஷிப்ட் போவான். அதற்குள் போய்விடலாம் என்று பார்த்தால் இந்த போலிஸ்காரன் சாவடிக்கிறானே என மனதிற்க்குள் திட்டிக்கொண்டான்.

“யோவ் என்ன யோசிக்கிறே, பணம் தர்றியா? கேஸ் எழுதவா?”
“சார் என்னை உங்க பையன் மாதிரி நெனச்சுகங்க, என்கிட்ட காசு சுத்தமா இல்லை சார்”
”பொறம்போக்கு நீ, உன்னைய என் பையன் மாதிரி நெனைக்கனுமா?” 
“சார் மரியாதையா பேசுங்க”
“தாயோளி உனக்கு என்னடா மரியாதை”
“டேய் லஞ்சம் வாங்குற நாயி நீ.., என்னைக் கேவலமா பேசுறியா”
அதற்குள் இன்ன்னொரு போலிஸ்காரர் பளாரென அறைந்து ”
”நாயே ஒரம் ஒக்காரு”
“சார் அவர்தான் கேவலமா பேசுறாரு”
“டேய் ஓங்கி மிதிச்சேன் செத்தே போய்டுவே, ஒரு அதிகாரிய பாத்து நாயின்னு சொல்றே, இரு ஒன்னை ஸ்டெசன்ல வச்சு லாடம் கட்டுறோம்”

சற்று நேரத்தில் அங்கு வந்த பேட்ரோலிங் வண்டியில் நரேன் ஏற்றப்பட்டான். வண்டி திருடுபவன் என சந்தேகத்தில் பிடித்ததாக பேட்ரோலிங் போலிஸிடம் சொன்னார்கள்.

மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனில் சில ஆட்களுடன் அமரவைக்கப்பட்டிருந்தான் நரேன். 

மாலை சரியாக 5.00 மணிக்கு அவன் நண்பன் மொபைலில் அழைத்தான்,
“டேய் எங்கடா இருக்கே, வண்டிய எடுத்துட்டுப்போனியா?”\
“வண்டி நாந்தான் வச்சிருக்கேன், மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷன் வாடா!”
“டேய் என்னடா சொல்றே! எதாச்சும் ஆக்ஸிடெண்டா? வண்டிக்கு ஏதும் ஆகலியே”
“இல்லடா, டாக்குமெண்ட் இல்லைன்னு புடிச்சு வச்சுருக்காங்க, வரும்போது ஒரிஜினல் டாக்குமண்டோட வாடா”
“அட நாதாரி டாக்குமெண்ட் சீட்டுக்கு அடிலதானே இருக்கு!, ஒரு போன் பன்னிருக்கலாம்ல”
“அவுட் கோயிங் போகாதுடா, மொபைல்ல காசு இல்ல”
“சரி ஆபிஸ்ல பர்மிஷன் சொல்லிட்டு வாறேன், ஒன்னும் கவலைப்படாதே என் மாமா கிட்ட சொல்லி மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு பேசச்சொல்றேன்.”

அவன் மாமா செக்ரெட்டேரியட்டில் வேலை பார்க்கிறார் என்பதால், அவன் வந்து அழைத்துப்போய்விடுவான் என்பது நரேனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் பக்கத்தில் இருந்த மூவரில் ஒருவர் அவனிடம்
“என்ன கேசு தம்பி”
“ஒன்னும் இல்ல சார், டாக்குமெண்ட் இல்லைன்னு புடிச்சிட்டு வந்துட்டாங்க,” 
“பணம் கொடுத்துப் பார்த்திருக்காலாமே தம்பி”
“பணம் கேட்டாங்க சார், கயில பத்து காசு இல்லேன்னு சொன்னேன், கேவலமா பேசி அடிச்சிட்டாங்க சார்”
அதைச்சொல்லும்ப்போது நரேனுக்கு கண்கள் கலங்கின,
”தம்பி கவலைப்படாதீங்க, இப்ப உங்களுக்கு பணம் ஏதாச்சும் வேனுமா”
“என் ஃப்ரெண்டோட மாமா செக்ரெட்டேரியட்டுல இருக்காரு, அவரு போன் பன்னா விட்ருவாங்க”
”சரிப்பா, எதச்சும் உதவின்னா, கூச்சப்படாமே கேளு என்றார்”
”ரொம்ப நன்றி சார்”
அதற்குள் இன்னொரு நபர் நரேனிடம் பேசிக்கொண்டிருதவரிடம் காதில் ஏதோ சொன்னார்,
“தம்பி ஒரு உதவி பண்ணமுடியுமா?’
“இந்த நிலமையில நான் எப்படி சார் உங்களுக்கு உதவமுடியும்?”
“ஒன்னும் இல்ல தம்பி, எங்கள உனக்கு கொஞ்சம் முன்னாடிதான் அழைச்சுட்டு வந்தாங்க, இப்ப எங்க கிட்ட இருக்கிற பேக்குல முக்கியமான ஆவனம் இருக்கு, நீங்க எப்படியும் வெளில போய்டுவீங்க, அதனால இதை உங்களுது மாதிரி வெளியே எடுத்துட்டுப்போய்டுங்க, நான் கொடுக்கிற போன் நம்பருக்கு பேசுனா, ஒருத்தர் வந்து வாங்கிட்டுப் போவாரு”
“சார் ஒன்னும் பிரச்சினை வராதே?”
“ஒன்னும் வராது தம்பி, அவர் உங்ககிட்ட வாங்கும்போது உங்களுக்கு 10000 பணம் கொடுக்க சொல்றேன்”

பத்தாயிரம் என்றதும் நரேன் சம்மதித்தான், இது அவன் வாழ்க்கையை புரட்டிப்போடப் போவது அறியாமல்.

பேக்கை மெதுவாக அவனிடம் நகர்த்தினர். அதனை தூக்கிப்பார்த்ததில் நல்ல கணமாக இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்து..

”யாருப்பா நரேன்’
”சார்”
”ஏன்பா, போலிஸ்கிட்ட சண்டை போடுவியா என்ன?, ஏதோ தெரிஞ்சவங்க சொல்லப்போக ஒன்னை விடுறோம், இல்லைன்னா கதையே வேற”
“சாரி சார் மண்ணிச்சுருங்க”
“சரி ஏட்டையாகிட்ட நான் சொல்லிக்கிறேன், வெளில ஒன் ஃப்ரெண்டுகிட்ட வண்டி சாவி கொடுத்துட்டேன், நீ போகலாம்”
வெளியில் வரும்போது கவனமாக பேக்கை எடுத்துக்கொண்டான், அவர்கள் இவனுக்கு கட்டைவிரலை உயர்த்திக்காட்டினர்.
வெளியில் இருந்த நண்பன் 
“பரதேசி ஒன்னால எவ்வளவு பிரச்சினை பாரு”
“சாரிடா மச்சி”
“சரி எனக்கு வேலைக்கு நேரமாச்சி, ஒன்னை பீச் ரோடுல விடறேன், பஸ் பிடிச்சு ரூமுக்குப்போ”
பீச் ரோட்டில் நண்பன் டிராப் செய்து கிளம்பியதும்
நரேன் பீச் ரோடில் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான். கையில் பேக் கொடுத்தவன் இரண்டு 500 ரூபாய்களை கொடுத்திருந்தான். அதனால் நரேனுக்கு சந்தோஷம் எகிறியது.
நேராக ரூமுக்கு வந்து பேக்கை வைத்துவிட்டு முதலில் டாஸ்மாக் சென்று ஜில்லுன்னு ஒரு KF Strong குடித்தான், பிரியாணி சாப்பிட்டான், செல்போனை ரீஷார்ஜ் செய்தான். பேக் தந்தவர்கள் கொடுத்த நம்பருக்கு போன் செய்து விபரம் சொன்னான், அவர்கள் மீண்டும் அழைப்பதாக சொன்னதும் ரூமுக்கு வந்து தூங்கிப்போனான். 

திடீரென செல்போன் அடித்தது. முழித்துகொண்டு...
”ஹ...லொவ்”
“சார் நரேனா?”
“ஆஹ்ஹ்மாம், யாரு?”
“சார் அந்த பேக்கு!”
“இருக்கு எப்ப வாங்கிக்கிறீங்க?”
”சார் உங்க அட்ரஸ் சொல்லுங்க”
சொன்னான்...
“சரி சார் இன்னும் ஒரு ம்ணி நேரத்துல வந்துடறேன், உங்க மேன்ஷனுக்கு பக்கத்தில் வந்ததும் கூப்பிடறேன்.”
செல்போனில் மணியைப் பார்த்தான் அதிகாலை 3.00 மணி..
சரியாக 4.00 மணிக்கு அதே ஆள் அழைத்தான்
“ஹலோ”
“சார் கதவைத்தொறங்க”
கதவைத் திறந்ததில் யாரும் இல்லை, சரி மேலே வருவார்கள் எனக் காத்திருந்தான்.
இரண்டு நிமிடம் போயிருக்கும் பாத்ரூமுக்குள் யூரினை வெளியேற்றினான்.
அவர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர், 
அவசரமாக டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தான்.
“யாருங்க?”
“நாங்கதான் சார், அந்த பேக் எங்கருக்கு?”

கட்டிலுக்கு அடியில் இருந்து இழுத்துக் கொடுத்தான்,
ஒருவன் பேக்கை பிரித்துப்பார்த்தான் இன்னொருவனிடம் திருப்தியாக தலையாட்டினான்,
நரேன் பேக்கை எட்டிப்பார்க்க முயலும்போது மூடிவிட்டான்.
அந்த இன்னொருவன் 10000 ரூபாய் எண்ணிக்கொடுத்தான்.

“ரொம்ப நன்றி தம்பி”
“பரவாயில்லை சார்”

அவர்கள் வெளியேரியதும். தாம் செய்வது சரியா? என ஒரு கனம் யோசித்தான். எதுவாக இருந்தால் என்ன பிச்சையெடுக்காத குறையாக வாழும் நம்க்கு இந்தப்பணம் ஒரு வரம், கடவுள் இருக்கிறான் என நினைத்துக்கொண்டான். விசிலடித்தான், பணத்தை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு ஷூவை (நண்பனுடையது) பீச் நோக்கி நடந்தான்.
நீண்ட நாட்களுக்குப்பின் அதிகாலை வாக்கிங்..

பீச் உற்சாகமாக இருந்தது, இந்தப்பணத்தில் என்னென்ன செய்யலாம் என மனதில் கணக்குப் போட்டவாரே.. மெதுவாக ஓடத்தொடங்கினான்...

தொடரும்..

1 பிப்., 2012

களவு - 1 - தாய்லாந்து...


தருவதிலும் 
பெருவதிலும்
முத்தங்கள்
உயிரை 
உடல் மாற்றுகின்றன..


இன்று 31.12.2011 இரவு 11.00 மணி பட்டாயா ரிசாட் ஒன்றில்:

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”. - பாவனா
“ப்ச்!” - நரேன்
”ஏன்?”
”வேண்டாம், வேற ஏதாச்சும் பேசு”
”ரெண்டு நாளா காலையில போயிட்டு சாயங்காலாம்தான் வாரே!.. எங்க போறே?” 
”ம்..ஹூம்! வேறே கேளு”
“போடா!”
“ஓகே! கோபம் வேனாம், இன்னும் கொஞ்ச நேரத்தில புது வருஷம் பொறக்கப்போவுது, அதனால சந்தோஷமா ஏதாவது கேளேன்!!”
“நான் ஒனக்கு எத்தனாவது பொண்ணு!?”
”ப்ச்”
“சொல்லு, எத்தனாவது?”
“இதுக்கெல்லாம் போய் கணக்கு வச்சுக்குவாங்களா!?”

நரேன் அப்படித்தான் அவனுக்கு பெண்கள் என்பது தற்காலிகம்தான், சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்க்கும் அவனுக்கு ஆறு மாதம் முன்புதான் பாவனா பழக்கமானாள், இவர்கள் இருவரையும் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். வார இறுதியில் பேங்காக்கோ, இந்தோனேசியாவோ போய்விடுவான், பெரும்பாலும் காசு கொடுத்துப் போவது அவனுக்குப் பிடிக்காது. சிங்கப்பூரில் அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் அவனிடம் மடிந்திருக்கிறார்கள். அவனைப்பொருத்தவரை யாரிடமும் சுலபமாக பேசிவிடுவான். நேரிடையாகவே அவனுடன் டேட்டிங் வரமுடியுமா? எனக்கேட்டுவிடுவான், எந்தப்பெண்ணாக இருந்தாலும் சீக்கிரமே அவனுக்கு போரடித்து விடுவார்கள். ஆனால் பாவனா அப்படியல்ல, அவள் வேறு கதை, அவள் மெல்ல மெல்ல அவனை தன்வசம் கொண்டுவிட்டாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. ஆனாலும் அவன் பாவனாவுடன் பழகியபிறகு வேறு பெண்களை நாடவில்லை.

“எனக்கு அப்புறம் யாரும் இல்லைன்னு எனக்குத்தெரியும்! அதனாலதான் கேட்டேன், நாம கல்யாணம் பண்ணிக்கலான்னு” - பாவனா.
”இல்ல, அதுக்கு சாத்தியம் இல்ல, இப்ப நமக்கு இப்படி Living together la என்ன பிரச்சினை?” - நரேன்.
“நீ எனக்குத்தெரியாமே என்னமோ பன்றே, அதான் ஒரு கட்டுப்பாடு இருந்தா நல்லதுன்னு நெனச்சேன்”
“கட்டுப்பாடு!..... கடசில நீயும் சராசரிப் பொண்ணுதான்னு நிரூபிக்கிறே”
“பட்டயா வந்து ரெண்டு நாளாவுது, காலையில போறே, சாயந்தரமாத்தான் வாறே, நானும் எத்தனை நேரம்தான் ரூமுல விட்டத்த பாத்துட்டு படுக்கிறது, நாளைக்கு என்னையும் கூட்டிட்டுப் போ!”
“சரி பணிரெண்டு மணியாகப்போவுது, வா ஒருமுறை இந்த வருடத்தின் கடைசி செக்ஸை கொண்டாடலாம்”

ஒரு நீண்ட உறவுக்குப்பின் இருவரும் களைத்துப்போய் மணியைப் பார்த்ததில் அது ஒரு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. 

நரேன் ஸ்காட்ச் ஒரு லார்ஜ் ஊற்றிக்கொண்டு பாவனாவுக்கு ஒயினை ஒரு கிளாசில் நிரப்பியவாறே, கிளம்பி டிரஸ் போடு வெளில பீச் வரைக்கும் போகலாமென்றான். 

ஒரு குளியல் போட்டுட்டு வாரேன் என குளியலறைக்குள் நுழைந்தாள் பாவனா,
அவளின் வாளிப்பான உடலில் வழியும் வெந்நீர் திறந்திருந்த குளியலறையின் வெளியே இருந்த அவனையும் உற்சாகமாய் அழைக்க ஸ்காட்சை ஒரே கல்பில் அடித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

இருவரும் உடைகளை உடுத்தும்போது அதிகாலை மணி 2.15.

பட்டயா பீச்சில் புத்தாண்டின் உற்சாகம் இன்னும் மிச்சமிருந்தது. எல்லா இடங்களிலும் ஜோடிகள், காதல்ர்கள், கேக்கள், லெஸ்பியன்கள், தற்காலிக காதலிகள். லர்கள் என வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். 

நரேன் ஒரு Guinness stout பியரும் , பாவனா ஒரு carlsberg பியரும் வாங்கிக்கொண்டனர். 

பீச் ஓரமாக பியரை சிப்பிக்கொண்டே நடந்தனர்.

”நாம எப்ப சிங்கப்பூர் திரும்பறோம்” - பாவனா
“அநேகமா நாளை மறுநாள்” - நரேன்
“டிக்கெட் கன்ஃபார்ம் பண்ணிட்டியா?’
“இன்னும் இல்லை, நாளைக்கு மதியம் பண்ணிர்லாம்”
“இப்பவாவது சொல்லு, நாம உண்மையிலேயே நியூ இயர் கொண்டாடத்தான் வந்திருக்கோமா?”
“பாவனா மொதல்ல என்னை நம்பு, நான் எதையும் உங்கிட்ட மறைக்க விரும்பல, ஆனா நான் இன்னொரு வேலையாவும் இங்க வந்திருக்கேன், அதைப்பத்தி கண்டிப்பா உங்கிட்ட சொல்லுவேன்”
“நீ எங்கிட்ட மறைக்கிறதப் பாத்தா!, எதுவும் தப்பான விசயம் இல்லையே?”
“இல்லைப்பா எனக்கே அது தப்பா? ரைட்டான்னே தெரியாது, இப்ப எதுவும் கேட்காதே, நிச்சயம் ஒங்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்”
” I Love You டா” என்றாள் கண்களில் நீர் வழிய..
அவளை அப்படியே இருக்க அனைத்து முத்தமிட்டான்.
பட்டயாவின் பீச் அந்த இரவிலும் பளீர் விளக்குகளால் பகலாக மின்னியது. மேலாடை இல்லாமல் சிலர் ஆடையே இல்லாமல் சிலரும் பீச்சில் நீராடினர்.
“தாய்லாந்தே நிர்வாண தேசம்தான்” - நரேன்
“எதனால சொல்றே” - பாவனா
“பாதி தேசம் புத்தரை பின்பற்றி நிர்வாணம் அரிய முற்படுது, மீதி தேசம் நிர்வாணத்தில் கடவுளை அடைய முயலுகிறது!”
“செக்ஸ் தவிர வேறு எதுக்காகவும் யாருமே தாய்லாந்து வர்றதில்லையா?”
“அப்படி சொல்ல முடியாது!, இங்கு சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு, பெரும்பாலான உணவு வகைகள், மேலும் மலிவு விலை ஆடைகள், கைவினைப்பொருட்கள் என கலந்துகட்டிய சுற்றுலாவாசிகள் வரும் நாடு இது. ஆனாலும் இங்கு வரும் பெரும்பாலான ஆண்கள் செக்ஸ்க்காக மட்டுமே வ்ருகிறார்கள் என்பதுதான் உண்மை”
விடவதற்கு இன்னும் சற்று நேரம் இருந்தது, ஆனால் தூக்கம் வருகிறது என்று நரேன், பாவனாவை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினான்.
விடுதியில் அறையை திறக்கும் மேக்னட்டிக் கார்டை கதவின் முன் தேய்த்தபோது அதற்க்கு அவசியம் இல்லாமலே கதவு தானாக திறந்துகொண்டது.
அறை முழுவதும் கலைக்கப்பட்டு, வந்தவ(ன்) ர்கள் அவசரத்தில் அனைத்தையும் மூலைகொன்றாக வீசியிருந்தா(ன்)ர்கள்.
நரேன் அவசரமாக பேக்குகளை பரிசோதித்தான், பாஸ்ப்போர்ட்டுகள் பத்திரமாக இருந்தன.

தொடரும்...