22 ஆக., 2011

நாட்டு நடப்பு 22/08/2011


அன்ன ஹசாரே 

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் இவருக்கு நாடெங்கும் உள்ள படித்த மேல்தட்டு வர்க்கத்தின் ஆதரவு சிலிர்க்க வைக்கறது ( Incredible India ). ஆனால் திருட்டுக்கு எதிராக இருக்கும் ஏனைய சட்டங்கள் போலத்தானே இதுவும் ஆகும். நியாயமாகப் பார்த்தால் லஞ்சம் கொடுக்காத சீரோ ரூபி (zero rupee) இயக்கம் போல லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்கிற இயக்கமாகதானே உருவாகியிருக்க வேண்டும்.

மத்திய அரசே இவருக்கு அனுமதி தர மறுத்து, அதன்பின் அனுமதி தந்து, மேடை போட்டுக் கொடுத்து, பாதுகாப்பு கொடுத்து நடத்தும் நாடகமாகத்தான் இது இருக்கிறது. உலகெங்கும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, லாரிகள் வேலை நிறுத்தம் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆரம்பிக்கப் போகிறது. மேலும் 2G விவகாரம் பற்றிய பேச்சே காணும். மக்களின் அநியாய விழுப்புணர்ச்சியை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இன்னமும் டாஸ்மாக்கில் பில் கொடுப்பதில்லை, விலையைவிட ஐந்து ரூபாய் கூட வாங்குகிறான். இதை தட்டிக்கேட்க யாராவது ஒன்னு கூடுங்கப்பா!
# என் கவலை எனக்கு.

தமிழ் வாழ்க 

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவும் மணிக்கு கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைஎன்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நம்ம மக்களோட ஆங்கில அறிவை பார்த்து சிரிச்சு மாளலை. மேலும் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்சிகளில் உச்சரிக்கப்படும் தூய தமிழ் வார்த்தைகளை வெகுஜன ஊடகங்களில் பயன்படுத்தினால் யாரும் புரிந்துகொள்ள முடியாதா? என்ன!. அதிலும் இசையருவி. சன் மியூசிக் தொகுப்பாளர்களின் தமிழ் சகிக்கலை. நான்தான் தமிழ், தமிழ்தான் நான் என வாய் கிழிய பேசும் கருணாநிதி தன் சொந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்ப்பது இல்லை போல. 

தூக்கு தண்டனை 

பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு வழக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் போராடிவரும் வேளையில் அவர்களையும் அப்சல் குருவையும் ஒப்பிட்டு வாதம் நடத்தும் நம்மவர்கள் சிலருக்கு அப்சல்குருவாகட்டும், மற்றவர்களாகட்டும் அவர்களின் செயலுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய ஏதோ ஒரு கோபம் பற்றிய தார்மீக நியாயம் ஏன் புரியவில்லை. 

யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்காக மரணதண்டனை தேவையில்லை என்றுசொல்லும் வி.ஆர். கிருஷ்ண ஐயரை நான் ஆதரிக்கிறேன்.

புத்தகம் 

நண்பர்கள் நேசமித்திரன் மற்றும் கார்த்திகை பாண்டியன் இருவரின் முயற்சியால் வெளிவந்திருக்கும் காலாண்டிதழ் வலசை ஒரு வித்தியாசமான முயற்சி. வழக்கமான வார , மாத இதழ்கள் போலல்லாது புத்தக வடிவில் பதிப்பித்து இருக்கிறார்கள். இதனால் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடாமல் நம் புத்தக சேமிப்பில் ஒன்றாக மாறிவிடும். வெளிநாட்டு அறிஞர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த இதழ் பெண்ணின் உடல்மீது நடத்தும் அரசியல் மற்றும் வன்முறைகளைப் பற்றி பேசுகிறது. நமது சக பதிவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ஆசிரியர் இருவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்தும். புத்தகம் அதி தீவிர இலக்கியவாதிகள் மட்டும் படித்துப் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதுதான் ஒரு சிறுகுறை.

எங்களது  பதிப்பக வெளியீடுகளான, வீணையடி நீ எனக்கு, கொத்து பரோட்டா, சாமானியனின் கதை, பணம் ஆகிய புத்தகங்கள் சிங்கப்பூரின் அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது.  

ஈழம் 

ஆனந்த விகடனில் தொடராக வெளிவரும் சி.மகேந்திரன் எழுதும் வீழ்வே னென்று நினைத்தாயோ? கண்ணில் நீர் வரவைக்கிறது. ஈழம் பற்றிய அதன் அவசியம் பற்றிய புரிதல் இல்லாதோர் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

ஜெ vs கருணா 

முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று ஜெ அறிவித்ததும் முதலில் வரவேற்ற கருணா பின்னர் மறுப்பது ஏன்?.

 ஒருவகையில் கருணா அன் கோ வை நாம் பாராட்டியே ஆகவேண்டும் தமிழகத்தில் போடுவது பொய்வழக்கு என மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள் மத்தியில் போட்ட வழக்குகளைப் பற்றி பேசாமல் அதன் உண்மைத்தன்மையை ஒத்துக் கொள்ளும் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. 

பதிவர் சண்டை 

சமீபமாக ஜாக்கி சேகரை கிண்டல் செய்து வெளிவரும் சாம் மார்த்தாண்டன் பதிவுகள் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் ஜாக்கியை மட்டுமல்லாது சிபியையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். நகைச்சுவையாக இன்னொருவர் எழுதிய விசயத்தை எழுதுவது தப்பில்லை ஆனால் சமயங்களில் உருவத்தைக் குறித்த நக்கல்கள் தனிமனித தாக்குதல். அதனை தவிர்ப்பது நல்லது. 

ஜாக்கி இதற்காக கோபப்பட்டார் எனக்கேள்விப்பட்டேன். இதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும். எனக்கென்னமோ ஒரிஜினலை மிஞ்சும் அளவுக்கு சாம் மார்த்தாண்டன் எழுதவில்லை என்றே தோன்றுகிறது. 

கொஞ்சம் கேபிளையும் கவனிங்கப்பா! ரொம்பத்தான் துள்ளுறார் தில்லுதுர!

20 ஆக., 2011

ஒரு கவிதை ... மூன்று கோணங்களில்...


சாதாரணமாய்..

இரா முழுதும் பரவிய தனிமையில் 
போதுமானதாக இல்லை வாங்கி வந்த சரக்கும்,
பைத்தியக்காரத்தனமான முடிவெடுத்து விட்டான் என நண்பர்களும் 
போய்ச்சேர வேண்டியவன்தான் என வெறுப்பவர்களும் 
அய்யோ போயிட்டியே ராசா என பெத்தவளும் 
இன்னும்..
இன்னும் ..
அத்தனை பேச்சுக்கும் தீனி போட 
செத்து விடலாம்தான்..?

அசாதாரணமாய்...

இராத் தனிமைக்கு 
போதுமானதாயில்லை அரை நெப்போலியன்.
வெற்றாக வாழ்வதிலும் 
விரக்தியின் உச்சம் என்னைத் 
'தொங்கிரு'... எனத் துரத்த 
கோட்டி புடிச்ச பய 
சாவுக்கு வந்த கேடுன்னு ஊர் சனம் பேச 
விழுந்தடிச்சு அழுவா பெத்தவ....

பின் நவீனத்துவமாய்....

நீளும் இரா 
கிலேசக்கிறுகிறுப்பில் அமிழ்ந்த மனம்
துரத்தும் ஒப்பாரி வீச்சில்
பிரேதக்களை பொருந்திய முகங்கொண்ட தாய்...
மனப்பிறழ்வின்  வீச்சம் சுமக்கும் காற்றில் சொற்களின் நடனம்
மயானத்திலும்...

19 ஆக., 2011

யாரும் அறியாதபோது ...

யாவரும் அறியும் வண்ணம் 
நான் யோக்கியனாகவே இருக்கிறேன்

அப்படித்தான் 
நீயும் 
அவனும் 
அவர்களும் இருக்கிறார்கள்..

ஒரு பேருந்து பயணத்தில் 
அது முடிவதற்குள்ளாக 
என்னுடன் பயணித்த முகம் அறியாத 
ஒருத்தியை 
நான் மனதினுள் புணர்ந்ததை 
இன்றுவரை யாரிடமும் சொன்னதில்லை..

அவள் மட்டுமல்ல 
இன்னும் நிறைய பேரையும் 
சூழல்கள்தான் மாறியிருக்கும்..

என் நெருங்கிய நண்பனின் 
வெற்றியை வெளிப்படையாக 
கொண்டாடி 
உள்ளுக்குள் புழுங்கியிருக்கிறேன்
வெற்றிகளும் நண்பர்களும் 
மாறினாலும் 
நான் 
இன்னும் அப்படியேதான்  
இருக்கிறேன்..

இப்படியாக 
தெரிந்தவன் அறிந்தவன் 
பக்கத்து வீட்டுக்காரன் 
சக ஊழியன் 
பிரபலங்கள் என 
எந்தப் பாகுபாடும் இன்றி 
எரிச்சலில் மிதந்திருக்கிறேன்..

எல்லோருக்கும் நல்லவனாக 
நடிக்கிறோம் 
நடிப்பின் உன்னதம் தெரிந்தும் 
பாராட்டப்பட்டிருக்கிறேன்..

சக கலைஞர்கள் 
இன்னொரு சகாவை 
பாராட்டுவதைப்போல்..


18 ஆக., 2011

ஊழல் மட்டும்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினையா? ...


சமீப காலமாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பேசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் இப்படி தலைவிரித்து ஆடும் அளவுக்கு காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் என்பது தெளிவு. இதற்க்கு முன்பாக எல்லாத் துறைகளிலும் கமிசன் மட்டுமே பார்த்து வந்த அமைச்சர் பெருமக்கள் இப்போதுதான் கோடிகளை ஆயிரக்கணக்கில் குவிக்க ஆரம்பித்து அது புகைய ஆரம்பித்து பெருநெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு முறையற்ற அரசு இப்படி தொடர்ந்துகொண்டு இருப்பது இம்முறை வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் என்கிற கட்சியை ஒட்டு மொத்தமாக காலி செய்யப்போகிறது என்பது திண்ணம் என்றாலும், மாற்றாக நினைக்கக்கூடிய பி.ஜே.பி காரர்கள் எந்த அளவுக்கு சரியாக இருக்கப்போகிறார்கள் என்பதும் சந்தேகமே!.

வட இந்தியாவில் ஒரிசா, அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற பகுதிகளில் இன்னும் சுதந்திரத்துக்கு முந்தைய சூழல்தான் நிலவுகிறது. இந்திய ரானுவத்தாரின் அடக்கு முறையால் அங்கு ஒரு எமெர்ஜென்சி சூழலைத்தான் மக்கள் அனுபவித்துவருகிறார்கள் அதற்க்கான தீர்வை இதுவரைக்கும் யாருமே முன்வைக்கவில்லை. அங்கு சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் மக்களுக்கான போராட்டத்தை இதுவரை அவர்கள் மண்ணைத்தாண்டிய எந்த சுதந்தர போராட்ட தியாகியும், சாமியாரும் முன்னெடுக்கவில்லை. ஏன் பேசுவதுகூட இல்லை. 

மக்களின் அடிப்படை உணவுக்கான விவசாய உற்பத்தி இப்போது நவீன ரக விவசாயம் என்கிற போர்வையில் அமெரிக்க கைக்கூலி தனியார் பண முதலைகள் வசம் மாறிக்கொண்டிருக்கின்றன மெல்ல நம் விவசாயத்தின் பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு மலட்டு விதைகள் பரப்படுகின்றன. என்டோசல்பான் பற்றிய மத்திய அரசாங்கத்தின் மவுனம் நாம் யார் ஆளுகையில் வாழ்கிறோம் என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றன. 

கல்வி இங்கு பணம் வாங்கிக்கொண்டாவது முறையாக தரப்படுகிறதா? என்றால் இல்லை என்பது நம் அனைவருக்குமே நன்றாகத் தெரிந்த விசயம். நூற்றுக்கு தொண்ணூற்றி ஐந்து கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த மற்றும் எஞ்சினியரிங் முடித்த மாணவர்கள் அதுபற்றிய போதிய அறிவில்லாமல் வெளியே வந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலைக்குப் போகிறார்கள். அல்லது அதன்பிறகு தனியார் பயிற்சி நிறுவனங்களில் படித்து அதற்கும் ஆயிரக்கணக்கில் அழுதுதான் வேலைக்குப் போகிறார்கள். சமச்சீர் கல்வி  பட்ட  பாட்டை நாம் அறியவில்லையா என்ன? .

நல்ல சாலைவசதி இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நமக்கு அருமையான சாலைவசதிகள் கிடைக்கபெற்றன ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் சுங்க வரிகள் அநியாயக் கட்டணம் வைத்து இருக்கிறார்கள். இப்பணம் எந்த நிறுவனத்துக்கு போகிறது. எந்த அடிப்படையில் அவர்களுக்கு வசூலிக்கும் உரிமத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து இன்னும் மின்சாரப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. இதனை நிவர்த்தி செய்ய எந்த அரசும் முழுமையான திட்டங்களை வகுக்கவில்லை.

மாநில அரசாங்கங்கள் ஒரு பாதையிலும், மத்திய அரசாங்கம் ஒரு பாதையிலும் சென்றுகொண்டிருக்கிறது. எப்போதும் ஒரு நாடு தழுவிய விசயங்களை இணைந்து யாருமே செய்வது இல்லை. ஒருவேளை முந்தைய தமிழக அரசைப்போல் இணைந்திருந்தாலும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய மக்களுக்கான அரசாக ஒருபோதும் இருப்பதில்லை. தெலுங்கானா மற்றும் கேரளா, கர்நாடாக அரசுகள் உடனான நமது நதிநீர்ப் பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும் என்பதே யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரனுக்கு சோனியாவும், ராகுலும் நன்றாக வாழ்ந்தால் போதும். அவங்களுக்கு மாநிலப் பிரச்சினைகள் மேல் எந்த அக்கறையும் கிடையாது. ஆனாலும் தொடர்ந்து தனித்து ஆட்சியைப் பிடிப்போம் என்று சவால்விடும் அப்பாடக்கர்கள் அவர்கள்.

நம் நாட்டின் மீனவர்களை தொடர்ந்து ஒரு சிறிய நாட்டின் ராணுவம் விரட்டி அடிக்கிறது. அதற்க்கான ஒரு தீர்வை இன்னும் நாம் எட்டவே இல்லை. ஆனால் அன்னா அசாரே முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஏராளமான படித்த மேல்தட்டு வர்க்கம் முழக்கம் செய்கிறது. இன்னும் சில நாட்களில் அல்லது வாரங்களில் இது அடங்கிப்போகும் ஆனால் எப்போதும் ஒருவேளை உணவுக்காக கையேந்துபவர்கள் நம் நாட்டில் தொடர்ந்து இருக்கவே செய்வார்கள்.

நமக்கும் இருக்கவே இருக்கிறது இந்தியத் தொலைக்காட்சிகள் அதன் இடைவிடாத கேளிக்கைகளில் மூழ்கிவிடுவோம். வாழ்க ஜன நாயகம்! வாழ்க மக்களின் விழிப்புணர்ச்சி!!

17 ஆக., 2011

பயோடேட்டா - அன்னா அசாரே ...


பெயர்                 : அன்னா அசாரே 
இயற்பெயர்      : கிசான் பாபுராவ் ஹசாரே  
தலைவர்           : ஜன லோக்பால் 
துணைத் தலைவர் : ஊடகங்கள் 
மேலும் 
துணை தலைவர்கள்
 : ஊழலை எதிர்க்கும் அனைவருமே 
வயது                  : 74 வயது இளைஞர் 
தொழில்             : முழு நேர தேசியவாதி 
பலம்                    : மக்களின் கோபம் 
பலவீனம்    :  ஒருங்கிணைப்பு இல்லாதது 
நீண்ட கால சாதனைகள்  : தன் சொந்த ஊரின் தண்ணீர் தேவையை 
                                                        பூர்த்தி செய்தது 
சமீபத்திய சாதனைகள்    : விடாக்கண்டனாக மூன்றாவது முறையும் 
                                                       உண்ணாவிரதம் இருப்பது 
நீண்ட கால எரிச்சல்   : லஞ்ச லாவண்யம் மற்றும் ஊழல் 
சமீபத்திய எரிச்சல்             : காங்கிரஸ்காரர்கள் 
மக்கள்                            : எரிச்சலில் இருப்பவர்கள் 
சொத்து மதிப்பு   : காங்கிரஸ்காரன் கிட்டதான் கேக்கணும் 
நண்பர்கள்                      : கிரண் பேடி, சாந்தி பூஷன் உள்ளிட்ட 
                                             அனைத்து ஆதரவாளர்களும் 
எதிரிகள்                         : ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் 
ஆசை                               : ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது 
நிராசை   : அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் 
பாராட்டுக்குரியது   : இந்த வயதிலும் இருக்கும் போராட்ட குணம் 
பயம்   : கூட இருப்பவர்களின்மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் 
கோபம் : பிரதமர் உள்ளிட்ட காங்கிரசாரின் பூசி மெழுகும் பேச்சின் மீது 
காணாமல் போனவை : அரசின் கட்டுப்பாடுகள் 
புதியவை                          : பெரும்பான்மை மக்கள் இவரை ஆதரிப்பது 
கருத்து                               : கருத்து சுதந்திரம் அரசால் முடக்கப்படுகிறது 
டிஸ்கி : இவரின் குழுவினரையும் சேர்த்துக்கொண்டு அனைத்து அரசியல் 
                 கட்சிகள் உள்ளிட்ட ஒரு லோக்பால் வரைவை உருவாக்க காங்கிரஸ் 
                 அரசு தயக்கம் காட்டுவது ஏன்?.