26 செப்., 2013

ஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...

தியாகி திலீபனின் நினைவு தினம்(26.09.2013) அவருக்கு என் வீரவணக்கம்....

வீரமறவன் நீ... 
தியாக தீபமாய் தன்னையே 
எரித்துக் கொண்டவன் நீ...
அகிம்சை தேசத்துக்கு உன்னையே 
கோரிக்கையாய் வைத்தவன் நீ...

நீ புலி ...
பசி துறந்து பலியான புலி ...

திலீபா நீ விதைக்கப்பட்டாய் 
எம் மனங்களில்,
இந்திய தேசத்தின் மீது மாறாத 
நம்பிக்கை கொண்டவன் நீ,
அன்றைக்கும், இன்றைக்கும், 
என்றைக்கும் உதவாது இந்தியா,

அன்று உன்னை மட்டும் இழந்தோம்,
இப்போது லச்சங்களில் இழந்தோம் 
இன்னும் 
இன்னும் 
இழப்பதற்கு 
தயாராய் இருக்கிறோம்,
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி 
ஒருநாள் உண்மையாகும்.

இத்தாலி அன்னையை 
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,
முள்ளிவாய்க்கால் 
முடிவல்ல ஆரம்பம்..

ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.
 
 

25 செப்., 2013

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!


அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடும்போது தேர்ந்த கவனத்துடன் தவறான வித்தைகளை ஐஸ்க்ரீமிற்கு அழும் குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தை தெளிப்பவர்கள் கோமாளிகளே. பெருநகரின் சாலைகளில் நம் தினசரி வாழ்க்கை ஒரு தேர்ந்த சர்க்கஸ் கோமாளியின் பிழைப்பாக மாறிவிட்டது. எல்லா சாலைகளுமே பார்க்கிங் மற்றும் நடைபாதை தொழிலதிபர்களால் பங்கிடப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் பயணத்தை தொடரும்படி நமக்கு நிபந்தனை விதிக்கிறது. எல்லோர் விதியையும் யாரோ ஒருவர்தான் தீர்மாணிக்கிறார் எனும் கருத்தை  சமீபத்தில் ஒரு அரசுப்பேரூந்தை, இரு சக்கர வாகனமோட்டி மயிரிழையில் (உண்மையில் விரற்கடை அளவு இடைவெளியில்) முந்தியதை பார்க்கும்போது கிட்டதட்ட உறுதி செய்கிறது.

ஒரு இரவில்  இப்படித்தான் நள்ளிரவு தாண்டி வீடு நோக்கிப் பயணித்தபோது பிளாட்பார வாசிகள் இருவரை தங்களது நீண்ட லத்தியால் சுளீரென அடித்தனர் ஒரு காவலர்கள். வேதனை தாங்காத வயதான பெரியவர்களான அவ்விருவரும் கதறியதை பொருட்படுத்தாத அந்த இளம் காவலர்கள் மீண்டும் அவர்களை அடிக்க கை ஓங்கியபோது எனக்கு தாங்க முடியவில்லை. அந்த காவலர்களை அழைத்து ”என்ன காரனத்திற்காக அடித்தீர்கள்?” என்றேன். அவர்களில் ஒருவர் “யார் நீ?, எதற்காக கேட்கிறாய்?” என அதட்டினார். “ டேய் சின்னப்பையந்தானே நீ!, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா?” என்னை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்?” எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இன்னொரு காவலர். ”முதலில் அடிச்சதுக்கு காரனம் சொல்லுங்கள் பிறகு என்னைப்பற்றி சொல்கிறேன்” என்றதும். ”இல்ல  சார், இப்ப நிறைய திருட்டு நடக்குது, வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் இப்படி பிளாட்பாரங்களில் துங்குவது போல் நடித்து நள்ளிரவில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்வதாகவும் அதனால் இரவு நேரங்களில் அவசியம் இவர்களை கண்காணிக்க வேண்டியிருப்பதாகவும்” சொன்னார். இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட பெரியவர்கள் இருவருமே என்னை சமதானப்படுத்தினர். நானும் அந்த இளம் காவலர்களிடம் என் விவரங்களை சொல்லிவிட்டு இனி பெரியவர்களிடம் இவ்வாறு முரட்டுத்தனம் காட்டாதீர்கள் என அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.

சென்னை முழுதுமே இப்படி தங்கள் வாழ்நாள் முழுதும் பிளாட்பாரங்களையே வீடாக வாழ்பவர்கள் அனேகம். இவர்கள் மழை, வெயிலால் அவதிப்படுவது ஒருபுறம் என்றால், சமூக விரோதிகளால் எரிச்சலாகும் காவல்துறையும் இவர்களை துரத்துகிறது. ஆனால் கோடி கோடியாக பணம் கொட்டி வீடு கட்டும் முக்கால் வாசிப்பேர் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசாங்கமும், காவல்துறையும் ஒரு கேள்வியும் கேட்பது இல்லை. சென்ற வாரம் நண்பனுக்கு வீடு பார்க்க சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீடு மட்டும்தான் வாடகைக்கு பைக் பார்க் செய்யனுன்னா ரோட்லதான் நிறுத்திக்கனும் என்றார். நண்பனும் அதற்கு ஒத்துக்கொண்டு வாடகைக்கி குடியேறிவிட்டான். ஆனால் சாலைகளில் நிறுத்திக்கொள்ள யார் அனுமதியும் தேவையில்லை போல!!
 
எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் அடுத்த வரிக்காக மோட்டு வளையை (இது சரியான பதமா?) உற்று நோக்கும் சமகாலக் கவிஞன் போல சென்னையின் குறுகிய சந்துகளில் வழி தேடி பயணிக்கும்போது அபூர்வமான சித்திரம் போல் மாலை வேளைகளில் வீட்டு வாசல்களில் கோலமிடும் நடுத்தர பெண்டீர் தம் எரிச்சலின் உச்சத்தை தண்ணீர் தெளிக்கும் சாக்கில் போகிறவர் மேலெல்லாம் ஊற்றிவிட்டு அதற்கான சாரி எனும் ஆங்கில பதத்தை உபயோகிக்க தெரியாத வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாக அவசரகதியில் போடப்படும் கோலமென சென்னை நகர் முழுதுமே அத்தனை தெருக்களிலும் 90% வீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் கட்டப்பட்டவைதான். பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு இடைவெளில் இல்லாமல் ஒருவர் வீட்டின் சுவரில் இன்னொருவர் போஸ்டர் சைசில் சுவர் பூசி இடம் மிச்சப்படுத்தும் அதிசயமான மேஸ்திரி எஞ்சினியர்கள் திறமைக்கு எல்லையே இல்லை.
இப்போதெல்லாம் அடுக்ககங்களில் நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ, அல்லது வேலை விசயமாகவோ பார்க்கப்போனால் அங்கிருக்கும் பாதுகாவலர் நம் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஏன் என்று கேட்டால்? பதில் சொல்லாமல் எழுதி வைக்கப்படிருக்கும் ஒரு அறிவிப்பை கைகாட்டுகிறார்.

அங்கே “பார்வையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது!.

18 செப்., 2013

பேரறிவும், பெருந்துயரும்...

அந்தக் குற்றப்பத்திரிக்கை
அவர்கள் விருப்பம்போல் 
புனையப்பட்டிருந்தன 
நீ 
மறுக்க மறுக்க 
உன் விரல் ரேகை பதியப்பட்டு 
தயாரிக்கப்படிருந்த அந்த ஆவணம் 
நாளை விசாரணைக்கு 
ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது..

நீ 
குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடினும் 
நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டு
ஒருவேளை 
உன்னை தூக்கிலிட
ஆணை பிறப்பிக்கப்படலாம்
உன் மரணத்திற்கான தேதிகள்
பலர் கை மாறலாம் 
நிராகரிக்கவோ 
ஆதரிக்கவோ 
அவர்களுக்கு 
பல காரணங்கள் தேவையாக இருக்கிறது..
 
ஒரு பழி வாங்கலாக 
ஒரு அரசியல் ஆதாயமாக 
சந்தர்ப்பங்கள் உனக்கு சாதகமாக 
அல்லது 
எதிராக முடிவெடுக்க வைக்கலாம்
அவர்களுக்கு தேவை 
அவர்களின் நலனே 
மேலும் 
அவர்களின் வாரிசுகள் நலனும் 
அதில் அடங்குகிறது..
 
ஒரு உண்ணாவிரதமோ 
மனிதச்சங்கிலியோ 
பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ 
உன் வாழ்நாளை 
நீட்டிக்க உதவலாம் 
நீ 
உன் சாவை 
எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
மரண நீட்டித்தல் என்பது 
மரணத்தை விடவும் 
கொடுமையான தண்டனை என்பதை
உன்னைத் தவிர யாருக்கும் புரியாது
அவர்கள் உன் மரணத்திற்கான 
தற்காலிக 
இடைவெளிக் கடவுள்களாக 
தங்களை கருதுபவர்கள்..

உன் தண்டனையை 
நிறைவேற்றுபவர்களுக்கு
உன் வாழ்வில் 
எந்த அக்கறையும் கிடையாது 
தன்னைக் கடிக்காத போதிலும் 
ஒரு எறும்பை நசுக்கிவிடுகிற 
மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்..
 
எனவே 
உன்னை தூக்கிலிட 
கட்டளையிடுமாறு 
கூச்சல் போடுவார்கள்
அவர்கள் தலைவனை விடவும் 
வாழும் தலைவியின் 
மனம் குளிர்ந்தால் போதும் 
மனித இனத்தின் 
நீங்கா களங்கம் அவர்கள் 
பக்கத்தில் 
கூப்பிடும் தூரத்தில் அரங்கேறிய 
கற்பழிப்புகளை, கொலைகளை 
நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்..

இங்கு நியாயம் என்பதே 
வரையறைக்கு உட்பட்டதுதான் 
யார் வரையறை செய்யும் 
அதிகாரத்தில் இருக்கிறார்கள் 
என்பதே முக்கியம் 
எனவே 
நீதி கேட்டு 
நெடும்பயணம் செய்து 
கலைத்துப்போவாள் உன் தாய் 
உன் தந்தை, சகோதரி, உறவினர் 
முகம் அறிந்த, அறியாத 
உன் நியாயம் உணர்ந்தோர் 
வெகு சொற்பமே 
அவர்களின் அழுகுரல் 
தொலைக்காட்சி நாடகங்களால் 
மறைக்கப்படும் 
இங்கு ஊடகங்கள் 
வியாபாரத்துக்கு மட்டுமே 
அவைகள்
இன்று உன்னையும்
நாளை வேறொன்றையும் வைத்து 
பிழைப்பு நடத்தும் 
முத்தமிழ் அறிஞரே 
மானாட, மயிலாட நடத்திப்பிழைக்கும்போது
ஊடகங்கள் உனக்கு துணைவராது..

சுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே 
குருடாகவும், செவிடாகவும் 
நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில் 
நாமெல்லாம் அடிமைகளே..

எனவே சகோதரனே 
இனி நீதிக்காக போராடாதே 
எல்லோரும் அம்மணமாக ஓடும்போது 
உனக்கேன் கோவணம் 
நிர்வாணம் பழகிக்கொள் 
இருக்கவே இருக்கிறது 
அருமருந்தாய் டாஸ்மாக் 
அரசாங்கமே நடத்துகிறது 
குடித்து, களித்து வாழ்வை நகர்த்து
கொஞ்சமாக கோஷமிடவும் கற்றுக்கொள் 
தி.மு.க வோ, அ.தி.மு.க வோ 
காங்கிரசோ, பி.ஜே.பி யோ
அல்லது 
ஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது 
உறுப்பினராக மாறு 
ஒருபோதும் கம்யூனிஸ்டாக மாறிவிடாதே
அது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..

தமிழ் கோசம் 
இனி ஒன்றுக்கும் உதவாது
சமயங்களில் 
உயிரும் 
மயிருக்கு சமமாகப் போகும்..

காயடிக்கப்பட்டு வாழ்வதைவிட 
சாவே மேலென நினைத்தால் 
எழு, புறப்படு, கைதாகு 
அதன்பின் 
இந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து 
துவங்கும் உன் வரலாறு.. 

13 செப்., 2013

கையெழுத்து...

கையெழுத்துக்களால் 
தலை எழுத்தை
மாற்ற முடியுமென,
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் 
தெரிந்து வைத்திருக்கிறான் 
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..

இதயத்தை துடிக்கவைக்கும்
ஜாமீனுக்கு இடும்போது 
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட 
நேரிடலாம் என..

சொத்து விற்கும்போது 
நடுங்கும் கை 
வாங்கும்போது நளினமாக 
விளையாடும் பத்திரத்தில்..

பிராக்ரஸ் கார்டில் 
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..

சகல இடங்களில் 
தேவையாகும் ஒரு கையெழுத்து 
தனித்தனி எழுத்தாகவோ 
கோணலாகவோ 
ஒற்றை எழுத்தில் சுழித்தோ 
படங்களைப்போல் அழகாகவோ..

எத்தனை முறை போட்டிருப்போம் 
ஓவ்வொரு முறையும் 
ஒவ்வொரு கதை இருக்கும்..

பிரபலங்களிடம் வாங்கியவை 
சில பரணிலும்,
சில வரவேற்ப்பறையிலும்,
சில குப்பையிலும்..

காதலை சொல்கிற கடிதம் 
காதலியைவிடவும் அழகானது..

பதிவு அலுவலகத்தில் 
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் 
கையெழுத்துகளில் சில
குடும்ப நல மன்றங்களில் 
முடிவடையும்..

சமயங்களில் நம் தலையெழுத்து
ஒரு கையெழுத்தால் 
தீர்மானிக்கப்படலாம்..  

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு 
ஒளிந்து வாழ்கிறேன் 
நான்..

6 செப்., 2013

கடவுள்களும்...பிரார்த்தனைகளும்..பலன்களும்...

Photo : KRP Senthil
கவிஞர் வைரமுத்து ஒரு நாத்திகர். ஆனால் ஒருமுறை அவரது பேட்டியில் ஆம்புலன்ஸ் ஏதாவது நாம் போகும் வழியில் கடந்தால் உள்ளிருக்கும் நோயாளி குணமடைய வேண்டும் என வாழ்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் சிறிது காலம் ஆன்மீகம் பயின்ற வகையில் ஆம்புலன்ஸ் கடந்தால் ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தி வைக்கிறேன். அடிப்படையில் ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் நல்ல பலனைத்தரும் என்பது ஆன்மீகத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. எல்லா மதங்களிலும், தனிப்பட்ட அமைப்புகளிலும் இவ்வாறு பிரார்த்தனை குழுமம் ஒன்று இயங்கவே செய்கிறது. ஆனால் பிரார்த்தனையின் ஏகப்பட்ட வடிவங்கள் இப்போது பெருவணிகமாக மாறிவிட்டது.

பிரார்த்தனை என்பது ஒரு incident management. அதாவது பிரச்சனை வந்தபிறகுதான் பிரார்த்தனை யாவருக்கும் தேவைப்படுகிறது. பொதுவாக எல்லோருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால் சிறிய விசயத்தில் துவங்கி மிகப்பெரிய ஆள்வோர்களின் பிரச்சனைகள் வரை பிரார்த்தனைகள் விரும்பும் வகையில், பணத்தின் இருப்பை பொருத்து மாறுபடுகிறது. ஏழைகளுக்கு ஒரு ரூபாய் நாணயம் போதுமானதாக இருக்கிறது, அதனை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அதனை காணிக்கை செலுத்துவார்கள். சிலர் கடன் வாங்கி செலவழிப்பதும் உண்டு. பெரும்பாலும் குலதெய்வ கெடா வெட்டுக்கு இப்படி கடன் வாங்கி செலவு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பணம் படைத்தோர் வேறு மாதிரி எடைக்கு எடை கொள்ளையடித்ததில் பங்கு கொடுத்து விடுவார்கள். எனக்கு தெரிந்த வரையில் சிலர் திருப்பதி ஏழுமலையானை தொழில் பங்குதாரர் ஆக்கி வருடா வருடம் லாபப் பங்கினை உண்டியலில் செலுத்துகிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படி நம்பிக்கைகளை வியாபாரம் செய்து சம்பாதிக்கும் ஆட்கள்  உண்டு. எந்தக் கடவுளும்  எனக்கு இதனை செய்தால் உனக்கு அதனை செய்வேன் என கேட்டதே இல்லை. எல்லாம் மனிதர்கள்தான் மனிதர்களால்தான்.

இஸ்லாத்தில் அல்லாவைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது ஆனால் அல்லாவின் பெயரால் நோய்களை குணமாக்குவதாக சொல்வதும், மாந்ரீகம் செய்வதும் மனிதர்களே. நாகூர் தர்காவிற்கு போனால் இப்படி ஏராளாமானோர் பிழைப்பதை பார்க்கலாம். வேளாங்கண்ணி மாதாவை கிட்டதட்ட இந்துக்கடவுளாகவே மாற்றி விட்டனர். கிருத்துவனாக இருந்தால் மட்டும் போதும், நீ எப்படி வேண்டுமானாலும் வணங்கு என சகலரையும் கிருத்துவர்கள் ஆக்கும் தொழிலை மும்முரமாக செய்கிறார்கள். இங்கு உடல் உபாதைகள் இருந்து நிவர்த்தியாக பிரார்த்தனை செய்தால் அதே உறுப்புகளை வசதிப்படி தங்கமாகவோ, வெள்ளியாகவோ செய்து காணிக்கை செலுத்துகிறார்கள். மேரி மாதா எப்போது இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தாள் என்பது ஃபாதர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்து மதத்தில்தான் சகலத்துக்கும் தீர்வு கிடைக்கிறது. சாலையில் வேப்ப மரமோ, அரச மரமோ இருந்துவிடக்கூடாது!. அதனை கடவுளாக்கி விடுகின்றனர். ஜோசியர்களின் திறமையால் சகலத்துக்கும் சாங்கியம் உண்டு. பெரும்பாலும் இப்படி தொடர்ச்சியாக எல்லோரும் ஏமாறுவதற்கு காரனம் என்னவென்றால், நம்ம ஆட்களுக்கு ஒரு குணம் உண்டு. பொதுவாகவே புதிதாக கிருத்துவனாக மாறிய ஆட்களை பார்த்தால் அவர்கள் கிருத்துவால்தான் சகலமும் மாறியதாக ஒருவர் விடாமல் ஒப்பிப்பார்கள். அதாவது தான் ஒன்றும் தவறான வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை பறைசாற்ற வேண்டி தான் காலையில் கக்கா போவதை சுலபமாக்கியது கூட எல்லாம் வல்ல ஆண்டவர்தான் என்பார்கள். இரவு 9 மணிக்கு மேல் சில தொலைகாட்சிகளில் இவர்கள் பேயோட்டுவதை பாருங்கள். ஏற்கனவே நொந்து நூலாகி பிரச்சனைக்கு தீர்வு கான இவர்களிடம் வந்தால், மேடையில் அவர்களின் காட்டு கூச்சலில் இருக்கும் மன தைரியத்தை இழக்கவே செய்வார்கள்.


நம்பிக்கை என்கிற வார்த்தைக்கு தெளிவின்மை என்பதே பொருள் என யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அதாவது உண்மையான ஒன்றை யாரும் நம்பவைக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போது சகலரும் கடவுளை நம்பச் சொல்கிறார்கள். கடவுளை நம்பச் சொல்லி மனிதர்கள் மூலம் தூதனுப்பும் கடவுள் ஏன் நம்மிடையே நேரடியாக சொல்லிவிடலாமே என எவனுமே யோசிப்பது இல்லை. தூதர்களும், ஃபாதர்களும், ஆனந்தாக்களும் எப்படி கடவுளிடம் வேலைக்கு சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை. சாதாரனமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்றாலே இங்கு ஏகப்பட்ட விசாரனைகளை கடக்க வேண்டும். ஆனால் இங்கு கடவுளாதல் சுலபம். காரனம் இங்குதான் சாருநிவேதிதா என்கிற குப்பை எழுத்தாளனை கொண்டாடும் கூட்டம் இருக்கு,. இந்த ஆள்தான் நித்தியை புரமோட் செய்தார். அப்புறம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபின் அந்தர்பல்டி அடித்தார். இதில் என் எழுத்தை இங்கு கொண்டாடவில்லை என்கிற கூச்சல் வேறு.

இங்குதான் கடவுளுக்கு மீடியேட்டர் தேவைப்படுகிறது. இங்கு எல்லோரும் கடவுளாக மாறத்துடிக்கிறோம். முடியவில்லை என்றால் அடிமைகளாக மாறி ஊரெங்கும் சூரியனே, சரித்திரமே, தமிழகமே, கேப்டனே, தெய்வமே என ஃப்ளெக்ஸ் வைக்கிறோம். இப்போது கவுண்டமணி சினிமாவில் இல்லை. இருந்திருந்தால் அவர் ஒரு படத்திலாவது தனக்கு பொறம்போக்கே, புண்ணாக்கே, வெத்து வேட்டே என செந்திலையோ, சத்யராஜையோ வைத்து கிண்டலடிக்க சொல்லியிருப்பார்.

இப்போது ஏசுவோ, நபியோ, புத்தரோ இவ்வுலகில் இருந்தால் இவர்களுக்காகவா நாம் இத்தனை சிரமப்பட்டோம் என தற்கொலை செய்துகொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக இவர்கள் போராடினார்கள். ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டும் வந்தார்கள். ஆனால் இப்போது???????

5 செப்., 2013

’எஸ்கேப்’ - பதவி உயர்வுக்கான மேஜிக் !...

 
”உங்களைப் பற்றி, உங்களுக்குப் புரியவைத்து உன்னத ஊழியனாக்கும் பயிற்சிக்கூடம் இந்தப் புத்தகம்.”  புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. ஒரு நல்ல திறமையான ஊழியனாக மாறும் மேஜிக் பற்றிய புத்தகம் ஒரு சிறந்த தொழிலதிபராக ஆசைப்படும் நமக்கு எப்படி உதவ முடியும் என்கிற எண்ணத்துடன் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகத்தை வைக்கவே இல்லை. ஒரே வீச்சில் படித்துவிட்டேன். நல்ல புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும். எனக்கும் ஒரு பழக்கம் உண்டு. என்னை சுவாரஸ்யப்படுத்தும் புத்தகத்தை முதலில் ஒரே வீச்சில் படித்து விடுவேன். பின்பு இரண்டு நாள் கழித்து அதே புத்தகத்தின் முக்கியமான விசயங்களை ஒவ்வொன்றாக படித்து அதனை அசைபோட ஆரம்பிப்பேன்.

ESCAPE நாம் பெரும்பாலும் இந்த வார்த்தைக்கு பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவது என்றுதான் அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், ஆசிரியர் சுரேகா நமக்கு இவ்வார்த்தையின் மூலம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகங்களின் மைல் கல். ஆரம்பம் முதலே கதையின் நாயகன் நரேந்திரனாக நாம் மாறிவிடுகிறோம். கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிகாரியான நரேன் தனக்குப்பின் வேலைக்கு சேர்ந்து தனக்கே மேலதிகாரியாக பதவி உயர்வு பெறும் சத்யா எனும் இளம் பெண்ணின் மீது பொறாமை கொள்ளாமல், தனது நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார். அதன்பின் சத்யாவால் அவர் முடிவை மாற்றிக்கொண்டு தன் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கான காரனங்களை ஆராய்கிறார். அப்போது ஒரு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்படி நிறுவனம் அவருக்கு பரிந்துரைக்கிறது. அங்குதான் மேலாண்மை பயிற்றுனராக விக்னேஷ் வருகிறார். யார் இந்த விக்னேஷ்?.

நீங்கள் சுரேகாவின் “தலைவா வா!” படித்திருக்கிறீர்களா?, படிக்கவில்லை எனில் உடனே வாங்கிப்படியுங்கள். “தலைவா வா!” புத்தகத்தின் நாயகன்தான் இந்த விக்னேஷ். விக்னேஷ் யார்? அவர் எப்படி ஒரு மேலாண்மை பயிற்றுனராக மாறினார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அதனை நான் இங்கு விவரிப்பதைவிட நீங்கள் அப்புத்தகத்தை படிப்பதுதான் சரி. ஏனென்றால் தலைவனாக மாற எல்லோருக்கும் ஒரு ரகசிய ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் எப்படி நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். விக்னேஷ் எப்படி படிப்படியாக ஒரு தலைமை அதிகாரியாக மாறினார் என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய விதிகள். எனவே உடனே ”தலைவா வா!” மற்றும் ”எஸ்கேப்” இரண்டு புத்தகங்களையும் வாங்குங்கள். முதலில் ”தலைவா வா!” படியுங்கள், பிறகு ”எஸ்கேப்” படியுங்கள். வாழ்வின் மாற்றம் உங்களை அறியாமலே உங்களுக்கு ஏற்படுவதை உங்களால் உணரமுடியும்.

இப்போது ESCAPE பற்றி பார்ப்போம். ESCAPE என்பதை ஆறு படிகளை கொண்ட வாழ்வின் வெற்றிக்கான ஏணியாக நாயகன் நரேனாக மாறிய நமக்கு விக்னேஷாக மாறிய சுரேகா விளக்குகிறார். ஓவ்வொரு படிகளும் ஒவ்வொரு வாரம். வாரா வாரம் படிப்படியாக நாயகன் நரேன் தன் தவறுகளை, நல்ல விசயங்களை, மேலாண்மை விதிகளை படிக்க ஆரம்பிக்கிறார். அவர் தன் மேலாண்மை வகுப்பை முடிக்கும்போது தனது நிறுவனத்திலும், தன் அன்றாட பணிகளிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்து தன்னையே முழுதுமாக உணர்கிறார் என்பதை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்த பயணியாக நம்மை மாற்றி விடுகிறார் சுரேகா.

வியாபாரம் செய்யும் எனக்கு இப்புத்தகம் என்ன மாதிரியான பாடத்தை கற்பிக்க முடியும் என்கிற அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், இப்போது என் கம்ப்யூட்டர் அருகில் ESCAPE தத்துவத்தை எழுதி என் ஒவ்வொரு செயல்பாட்டையும் அதனுடன் ஒப்பிட்டே இறுதி செய்கிறேன்.

’எஸ்கேப்’ படித்து முடிக்கும் வரைக்கும் எங்கேயும் நம்மை எஸ்கேப் ஆகவிடாத எழுத்து. எனவே சகலரும் இதனை வாங்கிப்படித்து வாழ்வில் மாற்றத்தைக்கான பரிந்துரை செய்கிறேன்.

‘எஸ்கேப்’
ஆசிரியர் : சுரேகா
வெளியீடு : மதி நிலையம்
விலை : ரூ.80
கிடைக்குமிடங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ், அகநாழிகை புத்தக உலகம்.

4 செப்., 2013

என்கவுண்டர் கவிதை...

நான்,
ஒரு கவிதை எழுதியிருந்தேன்
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம்
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட
அந்த சம்பவத்தை,
அல்லது கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள்
சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள்
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே
தொலைபேசியில் பாராட்டும் சிலர்
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை வெளியிடச்சொல்லி
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி
பின் மாநிலம் முழுதும் பரவி
மொழிபெயர்க்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என பரப்பினர்,
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என எதிர்த்தனர்,
முதன்முறையாக இடது, வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என மேடையில் முழங்கினர்,
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டனர்,
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் என அறிவித்தனர்,
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும்
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்பினர்,
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தனர்,
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசினர்,
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த உலகும்,
என்னையும் அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும்
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும்
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில்
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால்
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள்
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட
ஒன்று கூடி,
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகப்போவதாக
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி
ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால்
மிகுதியாக அரசாங்க சொத்துகளும்
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும்
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும்
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க
கலவரத்திற்கு காரணமாக என்னைக் கைது செய்த
அரசாங்கம்
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும்
இனி,
நான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் எழுதிக்கொடுத்துவிட்டதால்
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள்
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும்
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள்
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம்
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால்
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ
என் மரணம் நிகழக்கூடும்
அப்போது மீண்டும் என்னைப்பற்றி
அல்லது
என் கவிதை பற்றி சிலகாலம் பேசும் அனைவரையும்
வேறொரு சம்பவம்
திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டு
மறக்கடிக்கப்படலாம்
என்னையும்


என் கவிதையையும்...