28 ஜூன், 2011

சுமாரானவள்...


நகரத்தை கடந்துகொண்டிருந்த 
முன்னிரவில் 
தன் முகத்திரையை மெல்ல 
மூடிக்கொண்டிருந்த
நகரம் 
சோம்பலாய் நகர்ந்த 
கூட்டம் குறைவான ஆம்னியின் 
பின்னிருந்து கையாட்டிக் கொண்டிருந்த 
ஒரு குழந்தையின் தூக்கத்தை 
திருடியபடி..

பாக்கெட் தண்ணீர் விற்ப்பவன் 
குரல் வழியே 
தாகத்தை நினைவுக்கு கொண்டுவந்தபோது 
வாங்க மறந்த நீர் பாட்டில் 
தூரத்துக் கடையில் 
தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த 
கண்களின் நொடிகளில் 
"இந்த பஸ் தஞ்சாவூர் போகுங்களா?"
என்றொரு குயில் குரல் 
நகரத்து சோம்பலை 
என் முகத்தில் இருந்து 
அகற்றியிருந்தது..

இனி தஞ்சாவூர் 
வரைக்கும் வரும் 
குயிலும் குரலும் ..

சுமாரானதுதான் பேரூந்து 
சுமாரானதுதான் குயில் 
சுமாரானவன்தான் நானும்..

8 ஜூன், 2011

மெல்ல மரித்துக்கொண்டிருக்கிறது மனிதம்...

என்னை நம்பு என்றாய்
நம்பினேன் 
நம்பிக்கைத் துரோகம் என்றாய்
யாருக்கு யார் செய்தால் என்ன?
துரோகம் ஒரு போதும் 
நம்பியவரை கைவிடாதிருக்கட்டும்..

நமக்கான உறவுகளை 
நாம்தான் உருவாக்கினோம்
நமக்கான அன்பையும் அப்படியே
நமக்கான பிரச்சினைகளும் 
நம்மால்தான் உருவானது 
நமது பிரிவில் மிச்சமிருப்பது 
சுயநலம் மட்டுமே..

அதனால் என்ன 
சுயநலம் பொதுவானதாக இருக்கும்வரை 
நியாங்களும் பொதுவானவைதான்..

நீ 
நிச்சயம் 
நியாயமாகத்தான் நடந்துகொண்டாய் 
நானும் அப்படித்தான் 
நடுவிலிருக்கும் இடைவெளிகள்தான் 
நமது அநியாங்களை 
நிரப்பிக்கொண்டிருக்கிறது..

உனக்கு இன்னொரு நட்பு கிடைக்கும் 
எனக்கும் அப்படியே...
அதன்பிறகு 
தொடர்ந்து வரும் துரோகங்களுக்கு 
நாம் பழகியிருப்பதால் 
துரோகங்கள் மன்னிக்கப்படலாம் 
அல்லது 
நியாயங்கள் பிரித்து வைக்கலாம் 
அவரவர் நியாயம் அவரவர்க்கு 
துரோகங்களும் அப்படியே..

எல்லோருக்குமே தேவைப்படுகிறது 
சில நட்புகளும் 
சில துரோகங்களும் 
சில கதைகளும்
நீ நியாயவான் 
நானும் நியாயவான் 
அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.. 

மனிதர்கள் இல்லா 
வாழ்வை விரும்புகிறேன் 
மனிதர்கள் நடுவில் 
மனிதனாக..

மெல்ல மரித்துக்கொண்டிருக்கிறது 
மனிதம் 
என்னைக் கொன்றவாறே..

7 ஜூன், 2011

ஓட்டைப் பாத்திரம்...

இந்த நகரத்தில்  
யாருமற்ற வீதியில் 
தனிமையின் கால்களால் 
கடந்து கொண்டிருக்கிறேன் 
காலத்தை..

நகரெங்கும் பரவியிருக்கும் 
சூரியப் புழுக்கம் 
மனதை தகிக்க வைத்து
உடலை 
வியர்வைக் கண்ணீரால் 
கழுவ,
பூட்டிய கதவுகளின் பின்னிருந்து 
வரும் 
சமையல் வாசனைகளை 
நுகர்ந்த தெரு நாய்கள் 
வால் குழைத்து 
நிழல் தேடுகிறது..

நேற்று மதியம் முதலாக 
எனக்கான அரிசியில் 
என் பெயர் இல்லை போல..

இன்னும் சற்று நேரத்தில் 
தற்காலிக 
அல்லது 
நிரந்தர 
கண் அயர்வுக்கு 
நான் போகக்கூடும்..


மொட்டைமாடிகளில் 
கைப்பிடிச் சோற்றிற்காக 
அலையும் காகமென 
இப்பெரு நகரமெங்கும் 
பரவிக்கொண்டிருக்கின்றன
என் பசித்த கனவுகள்
..

6 ஜூன், 2011

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்...

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரதிற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்..வலைத்தளங்கள் :

International Day in Support of Victims of Torture - 26 June


தோழர்களே!தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

4 ஜூன், 2011

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...


இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

நன்றி : கும்மி 

வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

2 ஜூன், 2011

இந்தியர்களின் சராசரி வயது 64...


அப்டீன்னு நான் சொல்லல... திருவள்ளுவரு (Nickname for wikipedia) சொல்றாரு. நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்க சாப்பிடுற உணவு எல்லாமே பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்தான்(processed food).சிங்கப்பூருக்குன்னு தனியா விவசாயமோ, இல்ல வேறவகையான உணவு உற்பத்தியோ இல்லை. அதுனால எல்லாமே வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் குறைந்தபட்சம் ரெண்டு நாள்லருந்து ஒருவாரம் பழசான உணவு வகைகளைத்தான் சாப்பிடறாங்க. ஆனா அவங்களோட சராசரி வயசு 82. இது ஏன்னு சொல்லி ஆரம்பத்துல எனக்கு சந்தேகமா இருந்திச்சி. ஏன்னா இந்தியர்கள் சாப்பிடுறது எல்லாமே ஃப்ரஷ்ஷான உணவுப்பொருட்கள்தான். அதுக்கப்புறம் அது சம்பந்தமா நெறைய தேடிப் படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கு சில ஆச்சர்யங்கள் கிடைச்சிது. அது என்னென்னன்னா...

எல்லாமே கலப்படமுங்கோ! வியாபாரிகள் அதிக லாபத்துக்காக இப்படி கலப்பட வியாபாரம் செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்களை பணக்காரர்களாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம்  நாட்டில் சுகாதரத்துறை அப்படீன்னு ஒன்னு இருக்கிற மாதிரியே தெரியலீங்க. என் நண்பர் சென்னை ஆட்டுதொட்டி அருகே ஒரு சிறிய கோல்ட் ஸ்டோரேஜ் வைத்திருந்தார். பக்கத்தில் வெட்டுகிற ஆடு முதல் மாடு வரைக்கும் மீந்ததை அங்குதான் வைப்பார்களாம். ஆனால் நாள் முழுதும் வெயிலில் கிடந்ததால் ஏற்கனவே கெட்டுப்போக துவங்கியிருக்கும் அவைகள் கோல்ட் ஸ்டோரேஜ் ல் வைப்பதால் ஒன்றும் பயனளிக்காமல் மேலும் கெட்டுப் போயிருக்குமாம். அதனைத்தான் தெருவோர கடைக்காரர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள் என்று சொல்வார்.

தண்ணீர் முதல் அத்தனை உணவு வகைகளும் இப்படி சுயநலத்துக்காக அடிப்படை நேர்மையின்றி விற்கப் படுவதால்தான் நமது சராசரி ஆயுளானது எல்லாவற்றையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சிங்கப்பூரர்களை காட்டிலும் குறைவாக இருக்கிறது.

நேரமிருப்பவர்கள் தொடர்புடைய சுட்டிகளை படித்து பாருங்கள், அதிர்சிகள் காத்திருக்கின்றன..