22 டிச., 2009

நியூட்டனின் மூன்றாம் விதி...

பிரிவின் வேதனை சுடுகிறது
என்பவனுக்கு
பிரிவின் பின்னர்தான்
திளைக்க திளைக்க
நினைவில் நனைகிறேன்
என்பதை எப்படி புரியவைப்பேன்..

நிராகரித்தலின்
வேதனையை அனுபவித்ததுண்டா
என்பவனிடம்
எப்படி பகிர ..
ஒரு
நிராகரித்தலின் பின்தான்
திகட்ட திகட்ட
அன்பை சுவைப்பதை...

எனக்கு மட்டும்
ஏன்
இப்படியெல்லாம் நிகழுது
என்றவனுக்கு
எல்லாவற்றிலும் மீண்டஅனுபவத்தை
எப்படி விளக்குவேன் ..?

ஐய்யகோ!..
புலிகளை அழித்துவிட்டனரே..!
கதறி துடித்த தோழனுக்கு
தெரியவில்லை
பதுங்கி பாய்வதுதான்
புலிகளின் குணமென்று....!!!

கொத்து குண்டுகள்
மொத்தமாய் போட்டவனுக்கு
யாரும் சொல்லவில்லையா
நியூட்டனின் மூன்றாம் விதியை..?

21 டிச., 2009

பூனை படித்த கதை

அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேனீருக்காக இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...

கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..

தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசி பூனைக்குட்டியை
கவ்விசென்ற பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...

19 டிச., 2009

குற்ற உணர்ச்சி


ஒரு பிற்பகல் வேளையில்
அவர்கள் என்னை அழைத்து சென்றனர்..
தொடர்ந்து விசாரித்தனர்...

நான் குற்றமற்றவன்
என தெரிந்தாலும்
தேடிவந்தவன் கிடைக்காத காரணத்தால்
என் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

எல்லாம் முடிந்து
வெளியில் வந்துவிட்டேன்.,
எல்லோருக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.,
இந்த விசயத்தில்
ஏன் உதவ முடியவில்லை என..,

இதற்க்கு முன்
அலுக்க அலுக்க
மற்றவர்களுக்காக
பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன்.,

முன்பை போலவே
இம்முறையும்
எதுவும் கேட்கவில்லை
என் மனைவி .....