12 செப்., 2012

நகரும் நதி...

நாம்
ஒருவரை
ஒருவர்
விழுங்கிக் கொண்டிருந்தபோது
நீர்ச்சுழலில் இழுக்கப்பட்ட
சருகென
சட்டென
உச்சம் தொட்ட
வினாடியில்
களைத்து சுருங்கிய
என்னை
இருக்கத்தை விடாத
உன் அழுத்தும் காமம்
என் உடலில் பரவும்
வெப்ப ஆவி
அதீதமாய் சூடேற்ற
மீண்டும்
உன் உதடுகளில் இருந்து
துவங்குகிறேன்
சிரிக்கும் உனது கண்கள்
கிறங்கி மூட
நீர்ச் சுழல் தள்ளிய
சருகென
மிதக்கத் துவங்குகிறோம்
இருவரும்...

11 செப்., 2012

காடு...

அந்தக் காடு செவ்வக வடிவில் இருந்தது. செவ்வகம் என்றால் அளந்து வைத்தது மாதிரியெல்லாம் இல்லை. அருகில் இருக்கும்  மலை மேல் ஏறி ஒரு விமானப் பார்வையில் அது செவ்வகமென குத்து மதிப்பாக  சொல்லிவிடலாம். ஆதியில் அதாவது முப்பாட்டன் காலத்தில் அங்கு சிறுத்தைகள் இருந்ததாகவும் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளையும் ஒரு முறை கிழவி ஒருத்தியையும் கபளீகரம் செய்ததாகவும்,   பின்னாளில் வெள்ளைக்காரன் வந்து மான், முயல், மயில், இரண்டு சிறுத்தைகள் அதன் குட்டிகள் என அனைத்தையும் வேடையாடி கபளிக்ககரம் செய்ததாகவும் பாட்டி இரவில் கதை சொல்லுவாள். தாத்தனைக் கேட்டால் பாட்டி பொய் சொல்லுகிறாள் எனவும் தான்தான் அவ்வூரிலேயே சிறந்த வேட்டையாடி எனவும், சிறுத்தைகளை  வெறுங்கைகளால் அடித்து கொன்றவன் என உதார் விடுவார். பாட்டி கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு அது கொறவன் வச்ச வெடில செத்துப் போனதுன்னுல்ல ஊருல சொல்லிகிறாகன்னு சொல்லுவாள். தாத்தன் பாட்டிய “போடி பொச கெட்டவள ஒங்கப்பன் மாதிரிதானெ ஒனக்கும் புத்திருக்கும், சாரயத்துக்கு தக்கன பஞ்சாயத்து பேசுறவந்தானே ஒங்கப்பன்” என ஆரம்பிப்பார். அதற்கப்புறம் நடக்கும்  சுவாரஸ்யமான சண்டைகள் அப்பா வரும்வரை தொடரும். தாத்தனும், பாட்டியும் அவ்வளவு அன்யோன்யமாக இருப்பார்கள்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை அடிக்கடி வந்து போகும். எல்லாம் வீட்டுப் பிரச்சினைகளை பார்க்காமல் ஊர்க்காரங்க பிரச்சினைகளையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றாரு என்பதுதான் பெரும்பாலான சண்டைகளுக்கு அடிநாதம். உண்மையில் வீட்டில் என்ன நடக்கிறது. நானும் தங்கையும் எந்த வகுப்பில் படிக்கிறோம் என்பது கூட அப்பாவுக்குத் தெரியாது. பின்னாளில் உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரங்கள் வரை அவருக்கிருந்த ஞானம் என்னை அடித்துப் போட்டது. மழை நிரப்பிய நாளொன்றில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீட்டு விவகரத்தில் ஏன் கவனம் செலுத்துவதில்லை என வெளிப்படையாகவே கேட்டபோது “ ஏன் ஒங்கம்மா நல்லாத்தானெ பாக்குறா! பொறவு நான் வேற கொழப்பனுமா?” என்றார். அவரைப் பொருத்தவரை நாளுக்கு நூறு முறையாச்சும் அம்மாவை வம்புக்கிழுத்து தன் காதலை புதுப்பித்துக் கொண்டேயிருப்பார்.

அப்புறம் காட்டில் இருந்த ஏராளமான இலுப்பை, மா, நாவல், தென்னை என பெயர் தெரியாத மரங்களில் ஆரம்பித்து அத்தனையும் மந்திரி ஒருவர் தனது ஐந்தாட்டு திட்ட வருமானமாக மாற்றிவிட்டார். அதன்பிறகு  புதர்கள் நிறைந்த  மறைவிடங்கள் சொக்கு மாமா சாராயம் காய்ச்சும் மர்மப் பிரதேசமாக மாறியது. பத்தாண்டுகள் முன்னர் வரைக்கும் ஆடு, மாடுகளை பத்திக் கொண்டு போய் மேய்ச்சலுக்கு விடுவார்கள். அப்புறம் மாடுகள் குறைய ஆரம்பித்தன. ட்ராக்டர் வந்து காளை மாடுகளை இறைச்சிகளாக்கியது. பசு மாடுகள் லட்சுமி கடாட்சம் என சொல்லி வைத்தவனாலும், காப்பி கடையைல போயி குடிக்கிறதா எனும் பெருந்தனத்தாலும் தப்பித்தன. வசதி குறைவானவர்களுக்கு அதுவே ஜீவனை தந்து கொண்டிருந்தது. ஆடுகளும், கோழிகளும் கூட சொற்பமாகின.கல்லூரிக்கு போகும் காலம் காடு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பித்தது.

அப்புறம் தங்கைக்கு நிச்சயம் செய்யப்போகிறோம், என்ற கடிதம் அவசரமாய் என்னை ஊருக்கு அழைக்கவே. ஊருக்கு வந்து இப்பத்தானே +2 போறா அதுக்குள்ளே என்ன அவசரம் என்றேன். தாத்தன் அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், போயி குளியல போட்டுட்டு வாடா சாப்பிடுவோம் என மொத்தமாக அடக்கினார். சாப்பிடும்போது அம்மாவே சொன்னார். அத்தை மகனுக்குத்தான் தங்கையை கொடுக்கப் போகிறோம் என. அது இன்னொரு ஆச்சர்யம். அத்தை உறவை அறுத்துக் கொண்டு போய் பல வருஷங்கள் ஆச்சு, குல தெய்வ கோவிலில் வைத்து தங்கைக்கு மொட்டையடித்து, காது குத்தும்போது அத்தை வீட்டுக்காரர்  மடியில் வைத்து குத்தாமல்.  தாய் மாமா மடியில் வைத்து குத்திவிட்டார்கள் என்று கோபம் வார்த்தைகளில் வெடித்துது. யார் சமாதானம் சொல்லியும் கேட்காமல் பாதியிலேயே புருஷனையும், பிள்ளையையும் இழுத்துக்கொண்டு போய்விட்டாள். ”இப்போது எப்படிம்மா?” என்றேன். ”ம்... எல்லாம் ஒந்தங்கச்சிகாரிய கேளுன்னு” சொல்லிட்டு எழுந்து போய் விட்டார்.

ஆத்ம நண்பன் ஒருவனுக்கு ஊர் விவகாரங்கள் அத்துப்படி மாலையில் அதே காட்டின் கம்மாய் ஓரம் சரக்கடிச்சபடி விசாரிச்சா. அத்தை பையனுக்கும், தங்கைக்கும் காதலாம், விவகாரம் அப்பா காதுக்கு வரவும். அத்தை, மாமாவைக் கூப்பிட்டு முறைப்படி நடக்க வேண்டியதை பார் என்று சொல்ல, அதேன்  நாளைக்கு நிச்சயதார்த்தம் என்றான். அத்தை மகன் என்ன செய்கிறான் என்றால் அவனும் ஒங்கப்பா மாதிரிதான், என்ன ஒங்கப்பா நல்ல பஞ்சாயத்து, அவென் கட்டப் பஞ்சாயத்து அவ்வளவுதான் என்றான். எனக்கு தங்கையின் முடிவை நினைத்து கவலையாகியது. அதன்பிறகு கல்யாணம் முடிந்து, ஒருமுறை அவள் புருஷன் ஒரு பஞ்சாயத்தில் வெட்டு குத்தாகி அது கொலையில் முடிந்தது. வழக்கு விவாகரத்துக்காக சென்னையில் என் வீட்டில் வந்து தங்கியிருந்தான். அப்போது கூட சென்னையில் தனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதாகவும். தன் மனைவியின் சந்தோஷத்துக்காகவே மச்சான் வீட்டில் வந்து தங்குவதாக சொன்னான். மரியாதையாகத்தான் நடந்து கொண்டான். காலையில் அலுவலகம் போகும்போது அவன் சொல்லும் இடத்தில் ட்ராப் பன்னிடுவேன். வீட்டுக்கு அவனைப் பார்க்க யார் யாரோ வருவார்கள் நள்ளிரவு தாண்டி மிதமான போதையில் கதவு தட்டுவான். திறக்கும்போது வாசலில் சிலநேரம் காருடன் நிற்கும் போலிஸ்காரரையோ, கரை வேட்டியையோ, வக்கீலையோ பார்ப்பேன்.

ஒரு நாள் என் கல்லூரித் தோழி சென்னைக்கு வந்திருந்தாள். அவள் எப்போது சென்னை வந்தாலும் என் வீட்டில்தான் தங்குவாள். அவள் நல்ல தோழி எனக்கு. ஒரு காதல் தோல்வியின் விரக்தியில் இருந்து அவளை மீட்டெடுத்தவன் நான் என்பதால் பிரியமாக இருப்பாள். காலையிலேயே அவளைப் பார்த்ததும் அவன் எதுவும் கேட்கவில்லை. அன்று இரவு சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான். நாங்கள் இருவரும் அவனை ஓட்டலுக்கு சாப்பிட அழைத்தோம். வந்தான், சாப்பிட்டான், சாப்பிடும் நேரம் கூட யாருக்காவது போனில் பேசிக் கொண்டே இருந்தான். இரவு வீட்டுக்கு வந்து அவளை என் பெட்ரூமில் படுக்க சொல்லிவிட்டு நான் ஹாலில் படுக்க வந்தேன். டி.வி யில் பழைய எம்.ஜி.ஆர் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அதனை அனைத்து விட்டு, என்னிடம் ”மாச்சான், நீங்க உள்ளேயே படுத்துக்கலாம், நான் தப்பா நெனைக்க மாட்டேன்” என்றான். அது ஒரு தூண்டில் என்பதை அறியாமல் “அலோ நீங்க நெனைக்கிற மாதிரில்லாம் இல்ல!, அவ என் ஃப்ரெண்டு” என்றேன். “படிச்ச பயளுக இப்படித்தான் மழுப்புவீங்க” என்றான். “மாப்பிள்ளை நான் யாரிடமும் மழுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஃப்ளீஸ் போய் படுங்க” என்றேன். அதற்கப்புறம் அவன் எதுவும் பேசவில்லை.

ஆனால் மறுநாள் காலை வீட்டின் கதவை தட்டியது என் அப்பா, அம்மா, தங்கை மூவரும். ஆச்சர்யத்தில் என்ன விசயம் என்றால்? அம்மா நேராக என் பெட்ரூம் சென்று பார்த்துவிட்டு வந்து “யாருடா அது?” “அம்மா அவ என் ஃப்ரெண்ட், ஒரு வேலை விசயமா சென்னை வந்திருக்கா, சென்னை வந்தா இங்கதான் தங்குவா” என்றேன். ”பொண்ணு கொடுத்த மாப்பிள்ளைய வீட்டுல வச்சிகிட்டே இப்படித்தான் கூத்தடிப்பியா?” என்றார் அப்பா. அதற்க்குள் மாப்பிள்ளையே வெளியே வந்து அப்பாவை சமதானம் செய்ய, சத்தம் கேட்டு தோழி வெளியே வர, நடக்கும் விவரம் புரியாமல் எல்லோரையும் பயத்துடன் பார்க்கும் அவளை தங்கை ஓங்கி அறைந்தாள். அவ்வளவுதான் நான் கோபம் தலைக்கேறி ”எல்லாரும் வெளியே போங்க” என்றேன். அப்பா, அம்மாவும் அழ ஆரம்பித்தனர். அதற்குள் தங்கையும், அவள் கணவனும் அப்பா, அம்மாவை நான் கெஞ்சக் கெஞ்ச அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதன்பின் தோழிக்கு நிலமையை விளக்கினால் அவள் அழ ஆரம்பிக்க என் வாழ்வு திசை மாறுவதை உணர்ந்தேன். அடுத்த நாள்வரை அலுவலகம் செல்லவில்லை. தோழிக்கு என் நிலமையை புரியவைத்ததும் அவள் தன்னால்தானே இத்தனையும் என்று அன்று நாள் முழுதும் அழுதுகொண்டே இருந்தாள். வீட்டுக்கு போன் செய்து தாத்தனிடமும், பாட்டியிடமும் நிலமையை விளக்கினேன். நேற்று இரவு மாப்பிள்ளை போன் செய்து தான் இருக்கும்போதே வீட்டிற்கு ஒருத்தியை அழைத்து வந்து கூத்தடிப்பதாக சொல்லி அவர்களை வரவழைத்திருக்கிறான் என தாத்தன் சொன்னார். இன்னும் யாரும் ஊருக்கு வரவில்லை, வந்தவுடன் எடுத்து சொல்லி சமாதானப் படுத்துகிறேன் என்று சொன்னார். அவர் முடிக்கும்போது அழ ஆரம்பித்தார். நான் ”தாத்தா என்ன இது” என பதறினேன். “இல்லடா ஒங்கப்பன் ஊருக்கே நாயம் பேசுரவன், ஆனா அவனே பெத்த புள்ள சொல்றத நம்பள இல்லைடா” என்றார்.

உடனே தோழியையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினேன். ஆனால் கடைசிவரை தாத்தனையும் பாட்டியையும் தவிர அத்தனை பேரும் எங்களை நம்பவில்லை. திருப்பி சென்னை வரும் வழியில் அழுதழுது முகமெல்லாம் வீங்கிக் கிடந்த அவளிடம் ”என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்றேன். அவள் ”காரை நிறுத்துடா, நான் இறங்கி பஸ் பிடிச்சு போறேன்” என்றாள் கோபமாக. ஆயிரம் சாரி கேட்டு வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு காரை கிளப்பும்போதே அவள் அசதியில் தூங்க ஆரம்பித்தாள். அவள் விழிக்கும்போது கிட்டதட்ட சேலத்தை நெருங்கியிருந்தது கார். அது அவள் ஊர்.

அவள் வீட்டில் எல்லோருக்கும் என்னை நன்கு தெரியும் என்பதால் முதல் நாள் இருவரையும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் இருவருமே மூடியாக இருந்ததால் மறுநாள் அவள் தந்தையிடம்  எல்லாவற்றையும் சொன்னேன். பொறுமையாக கேட்டுவிட்டு. ”சாரிப்பா என் பெண்ணால்தானே” இவ்வளவும் என்றார். அதன்பிறகு என் திருமண விருப்பத்தை சொன்னதும் மகளை கூப்பிட்டுக் கேட்டார். ஆனால் அவளோ ”முடியாதுப்பா அது இன்னும் சிக்கலை உருவாக்கும், அவனை போகச் சொல்லுங்கப்பா” என பிடிவாதம் பிடித்தள். அலுவலகத்துக்கு 15 நாள் மெடிகல் லீவ் அனுப்பிவிட்டு அங்கேயே இருந்தேன். அங்கிளை சமாதனப் படுத்தி அப்பாவிடம் பேசச் சொன்னேன். அப்பா பொறுமையாக கேட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன். ஊருக்கு வந்து என் மாப்பிள்ளையின் சகோதரியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நிபந்தனை விதித்தார். விதியின் வலையை மாப்பிள்ளை சரியாகத்தான் விரித்திருக்கிறான்.

அதன்பிறகு தோழியையும் அவள் குடும்பத்தினரையும் சிரமப்பட்டு சம்மதிக்கவைத்து அவளையே திருமணம் செய்துகொண்டேன். தாத்தனுக்கும், பாட்டிக்கும் மட்டும் விசயம் தெரியும். இருவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும். சரியாக மூன்று வருடம் கழித்து மனைவி, மகனுடன் ஊர் வந்திருக்கிறேன். என் தாத்தனும், பாட்டியும் இரவு ஒரே நேரத்தில் இறந்து விட்டார்கள் எனத் தகவல் கிடைததும் பதறி ஓடி வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் பிழியப் பிழிய காதலை பறிமாறிக்கொண்ட என் ஆதர்ஷங்கள் போய்விட்டன. தன் கொள்ளுப் பேரனை அவர்கள் பார்க்க விரும்புவதற்காக இடையில் ஒரு முறை அவர்களை பழனிக்கு வரச்சொல்ல்லி அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் காட்டியிருக்கிறேன். பிரிய மனமின்றி பிரிந்தார்கள் அப்போது. இப்போதும் மாப்பிள்ளையும், தங்கையும்தான் வீட்டின் சடங்கு சம்பிரதாயம் உட்பட எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். அப்பா சில மணிநேர தயக்கத்துக்குப் பிறகு பேரனை அம்மாவிடம் இருந்து வாங்கிக் கொண்டார். எல்லா சடங்குகளும் முடிந்தன. 16 ஆம் நாள் காரியம் வரை கூட தங்கையும், மாப்பிளையும் எங்களிடம் பேசவில்லை, என் மகனைக்கூட அவர்கள் பிள்ளைகளுடன் விளையாடவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

எல்லாம் முடிந்து நாளை ஊருக்கு கிளம்புகிறேன் என்றபோது அப்பாவும், அம்மாவும் பாட்டியின் நகைகளையும், சொத்து பத்திரங்களையும் கொடுத்தனர். சொத்து எனக்கும், தங்கைக்கும் சமமாக பிரிக்கப் பட்டிருந்தது. என் மனைவி அப்பாவையும், அம்மாவையும் தங்களுடன் சிலகாலம் வந்து இருக்கும்படி சொன்னாள். அப்பாவும், அம்மாவும் மறு பேச்சு பேசாமல் கிளம்பிவிட்டனர். பேரன் அவர்கள் இருவருடனும் மிக நெருக்கமாகிவிட்டான். மறுநாள் அப்பா, அம்மாவுடன் கிளம்பும்போது மாப்பிளையையும், தங்கையையும் அழைத்தேன். என் பங்காக எனக்கு பிரிக்கப்பட்டதை அவர்களே பயண்படுத்திக் கொள்ளும்படி சொன்னேன். மாப்பிள்ளையும் என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

காரில் ஊரைக் கடந்தபோது அக்காடு முழுவதுமாக அழிக்கப்பட்டு கிரானைட் குவாரி ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது.

8 செப்., 2012

கிளிகள் அமரும் கிளைகள்...

நீ யாரோ
நானும் யாரோ...

நீ
எனக்கு  முதல் பெண் அல்ல,
நானும்
உனக்கு  முதல் ஆணாக
இல்லாமல் இருக்கலாம்..


நம்மை
சந்தர்ப்பங்கள்
சந்திக்க வைத்தன
பின்
நீயும்,
நானும்
பல
சந்திப்புகளை உருவாக்கினோம்..

நீ
எனக்காகவும்,
நான்
உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது
மாதிரி
நடித்தோம்..

நீ
என்னை மிகவும் நேசித்தாய்
நானும்
அப்படிதான்.,
உயிருக்கு உயிராக
என்று
வைத்துக் கொள்ளலாம்..

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க
என்
பணம் கரைந்தது..

பின்
சந்திப்புகளில்
நாம்
நேரம் தவறினோம்
நீ
சில காரணங்களை சொன்னாய்
நானும் அவ்வாறே,
நான் பொய்யன் என்றாய்
அடிக்கடி கோபப்பட்டாய்..
நான்
விலகிச்செல்ல ஆரம்பித்தேன்..

நீ
யாரையோ
திருமணம் செய்துகொண்டாய்,
நானும்
ஒருத்தியுடன் வாழ்கிறேன்..

இப்போது..

நீ யாரோ எனக்கு
நானும்
அப்படியாகத்தான்
இருப்பேன் உனக்கு..

இப்படியாக
நீயும்
நானும்
இன்னும் பலரும்..

7 செப்., 2012

தினசரிகளை கழிக்கும் நாட்காட்டி...

ஊருல இருந்தாக்க இந்நேரம் கேபிள் எங்கய்யா இருக்கேன்னு ஒரு போனை போட்டிருப்பாரு. இங்க மலேசியால இப்ப நேரம் ம்ணி 11.30 PM. ஊரில 9.00 PM தான். ரெண்டரை மணிநேரம் வித்தியாசம். மூனே முக்கால் மணி நேரம் பறந்தா நம்ம ஊரை அடஞ்சிடலாம். அதாவது ஊருல இரவு பத்து மணிக்கு விமானத்த புடிக்கும்போது இங்க மலேசியாலயோ, சிங்கப்பூரிலயோ மறுநாள் காலை 4.15 க்குத்தான் தரையிறங்குவோம். ஆனா மலேசியால இருந்து இரவு 8.00 மணிக்கு ஏறினா சென்னையில் இரவு 9.30 மணிக்கே இறங்கிடலாம். வெறும் நாலு மணி நேரப் பயணத்தில் குடும்பத்தைப் பார்த்துடலாம். டிக்கெட்டும் முன் கூட்டியே எடுத்தா போக வர அதிகபட்ச்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் ஆகும். ஆனா மூனு மாசமா இந்த வாரம், அடுத்த வாரன்னு பசங்க கிட்ட பொய் சொல்றேன், அவனுங்களும் இப்ப கேக்குறத விட்டுட்டானுக. எங்க விட்டேன் கேபிள் போன்ல கூப்பிட்டு இருப்பாருன்னு சொன்னேன் இல்லையா?.

ஊரில் இருக்கும்போது கேபிள் இந்த நேரத்துக்குத்தான் கூப்பிடுவாரு. அப்படியே என் வீட்டுக்கு வந்து என்னை பிக்கப் பன்னுவாரு. வீட்டம்மா மறக்காம சாவிய எடுத்துட்டு போங்கன்னு ஞாபகப்படுத்தும். காரனம் இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்புவோம்ன்னு எங்களுக்கே தெரியாது. கெளம்பினோன்னா கேபிள் பைக்கு இப்ப நானோ அதுவாவே கெழமைக்கு தக்கபடி சினி சிட்டிலயோ, ஸ்ரீ தேவிலயோ (கடைசி ரெண்டு மாசம் அங்க போகல) லஷ்மன் ஸ்ருதிக்கு எதிர்ல இருக்குற பார்லயோ, அல்லது எதிர்கால இயக்குனர்கள் வீட்டுக்கோ கூட்டிட்டுப் போகும். அதுக்கப்புறம் பேச்சு பேச்சு பேச்சுதான் குடி என்பது எப்போதும் அளவாகத்தான் இருக்கும். நான் மலேசியா வருவதற்கு முன்னரான கடைசி மாசம் அது கூட இல்ல. அப்புறம் புறப்பட்டு எங்காவது சாப்பிடப் போவோம். அதன்பிறகு ரோட்டோரம்  எதாவது ஒரு டாபிக் ஓடும். வீட்டுக்கு வரும்போது. மணி அதிகாலை 2 க்கு மேல்தான் இருக்கும். சமயங்களில் 12.30 க்கு வருவோம். இந்தப் படம்தான் என்றில்லாமல் சகல மொழிப் படங்களையும் பார்ப்போம். இப்ப தலைவர் நான் இல்லாமல் சிரமப்படுகிறார்.

இங்க மலேசியால நான் இருக்கிற இடத்துல இருந்து   டவுன் 4 கி.மீ என்பதால். நண்பர் வெங்கட் காலையில் பேப்பர் போடும் வேலைகளை முடித்துவிட்டு எனக்காக வருவார். அவர் வந்தபின் தினசரி ஒரு இண்டஸ்ட்ரியல் ஏரியா அல்லது எனக்கான சில சந்திப்புகளுக்காக அவர் பைக்கில் ஊர் சுற்றுவோம். அப்படியே மதிய சாப்பாடு ஒரு முழு சாப்பாடும் கூடுதலாக ஒரு வெள்ளிக்கு சோறும் பார்சல் வாங்கி வந்து இருவரும் சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு அவரின் கதைகளைக் கேட்பேன்.

இந்த வெங்கட் ஒரு சுவாரஸ்யமான மனிதர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அதீத ஆர்வம் அவரை உலகின் புரதான தொழிலில் இறங்கச் செய்துவிட்டது. அவர் ஊரில் இருந்து இரண்டு பெண்களை அழைத்து வந்து தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று ஒரு மாததிற்குள்ளாகவே இன்னொரு ஆளை செட் பண்ணிட்டு இவர் பாஸ்போர்ட்டையும் தூக்கிட்டு ஓடிருச்சு. இன்னொரு பொண்ணு புதுசு என்பதால் இவரிடமே இருந்தது. ஆனால் அவர்களை இங்கு அழைக்க மட்டுமே ஒன்றரை லட்சம் செலவு செய்திருக்கிறார். சென்ற வாரம் இன்னொரு பெண்ணை ஊருக்கு அனுப்பிவிட்டு இந்தத் தொழிலால் 30 ஆயிரம் நஷ்டமாச்சு அண்ணே என வருத்தப்பட்டார். சுவாரஸ்யமான கதைகளுக்கு சொந்தக்காரர். இவர் கதைகளை ஒரு தொடராக எழுதலாம். ஆனால் தம்பி ரமேஷ் தான்தான் எழுதுவேன் என அவரிடம் ரைட்ஸ் வாங்கிவிட்டதால் அவனே எழுதக் கூடும். அதனால் அவரைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது. ஆனாலும் மலேசிய சூழலை பயண்படுத்திக் கொண்டு நேர்மையாக சம்பாதிக்கும் உத்திகளை அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சமீபமாக நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.

மலேசிய பதிவர் சந்திப்பு நடந்த நாள்களுக்கு முன்னர் ஒரு வாரமும் அதன் பின்னரும் மது தேவைப்படவில்லை. இணையம் வந்துவிட்டதால் இடைவிடாத வியாபாரத் தேடல் என்னை ஆட்கொண்டுவிட்டது. இங்கு என் பக்கத்து வீட்டில் சில மலேசிய நண்பர்கள் குடியிருந்தனர். அவர்கள் மலேசியாவின் வேறு மாநிலத்தவர்கள். பொதுவாக இரவு நேரங்களில் வீட்டில் இருக்க மாட்டார்கள். சென்ற மாதத்தில் ஒரு நாள் பகலில் என் வீட்டு கதவைத் தட்டினார் ஒருவர். “அண்ணே உங்க போன் கொஞ்சம் கொடுங்க, என் போனில் பேட்டரி தீந்துடுச்சு” என்றார். எனது மொபைலில் முயற்சித்தபோது அவர் நண்பரின் மொபைல் ‘not reachable, ஆக இருந்தது. அவர் முகம் மிகவும்  வாடியிருப்பதை பார்த்ததும். “அண்ணே ஏதாவது பிரச்சனையா?” என்றேன். அவர் “ ஆமாண்ணே எனக்கு கேஸ் ச்ட்ரிக் இருக்கு காலையில் இருந்து கையில் காசு இல்லாததால் எதுவும் சாப்பிடலை, அதான் கூட்டளிய கூப்பிட்டேன்” என்றார். உடனடியாக பத்து வெள்ளிகளை கொடுத்து போய் சாப்பிட்டு வாங்க என்றேன். அதை தயக்கமாக வாங்கிக் கொண்டு “அண்ணே இந்த உதவிய நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பின்பு பதினைந்து நாளில் வீட்டை காலி செய்தனர். அப்போது அவர் வந்து என்னிடம் ஒரு போனைக் கொடுத்தார். நான் “எதுக்கு அண்ணே” என்றேன். அவர் “அன்னைக்கு எனக்கு பத்து வெள்ளி கொடுத்தீங்களே அதுக்காகத்தான்” என்றார். அது விலையுள்ள போன் என்பதால் நான் மறுத்து விட்டேன். வேனுன்னா அந்த பத்து வெள்ளிய மட்டும் திருப்பிக் கொடுங்க என்றதும், அவர் இல்லண்ணே இது வாங்கிக்கங்க இல்லன்னா இன்னொரு நாள் பெரிதாக உங்களுக்கு ஏதாவது செய்வேன் என சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு விடை பெற்றார்.

ஒரு பத்து வெள்ளி என்பதைவிட பசி போக்கிய ஒருவனுக்கு திரும்ப ஏதாவது செய்யனுமே எனும் அவரின் செண்டிமெண்ட்தான் மலேசியத் தமிழர்களுக்குள் இருக்கும் ஈரத்தை எனக்கு உணர்த்தியது. 

6 செப்., 2012

புத்தனை புணரும் பிக்குகள்..

அகிம்சாவாதி
புத்தனென
தலைமை பிக்கு
உரையாற்றிக் கொண்டிருந்தான்.
ஆசிரமத்தின் உள்ளரையில்
புணர்ந்து கொண்டிருந்தனர்
தூக்கி வரப்பட்ட
தமிழச்சி ஒருத்தியை
இன்னும் சில
பிக்குகள்.
மாத விலக்கில் இருந்த
அவளின் உதிரம்
ஒவ்வொரு சொட்டாய்
அவள் உயிரை
அவ்வரையின்
தரையெங்கும்
நிரப்பிக் கொண்டிருந்தன.
சுவற்றின் மேலே
சிரித்தபடி
புத்தன்.

5 செப்., 2012

கடவுள் வியாபாரம்...

courtesy by : gapingvoid art
1996-ல நண்பனின் திருமண தோஷம் விலக ஆலங்குடி குரு ஸ்தலத்துக்கு அவன் பார்த்த ஜோசியனின் ஆலோசனைப்படி ஒரு அர்ச்சனைய போடலான்னு வண்டி கட்டினோம். அப்ப சிங்கை ரிட்டர்ன் நான் போதாக்குறைக்கு அங்கு தொழில் வேறு ஓடிக்கொண்டிருந்ததால் பணம் ஏகத்துகும் செலவு பன்னும் ஏமாளி. அத மோப்பம் புடிச்ச ஒரு கடைகாரன் முறைப்படி அர்ச்சனை செய்தால்தான் பலன் கிடைக்கும் என மந்திரிக்கவும் நண்பன் அவனிடம் ரெண்டு செட் ஆர்டர் செய்தான். பின்னே காசு நாந்தானே அவுக்குறேன்.

எல்லாம் வாங்கியபின் அர்ச்சனைக்கு வரிசை கட்டினோம். வியாழன் என்பதால் கூட்டம் வேறு அதிகம். கிடைத்த சப்பை பிகரை நோக்கியவாரே நகர்ந்தோம். அது குன்ஸா சிரிக்கும்போது தெரிந்த சொத்தைப் பல்லு பயமுறுத்தினாலும் கிடைத்த பிகரை தக்கவைக்கும் முயற்சியில் நண்பன் மொத்த சாமானையும்.என் கையில் கொடுத்துவிட்டான்.

சரியாக எங்கள் முறை வரும்போது வாசலில் அந்த ஏரியா உ.பி குடும்பத்தினரை சுமந்த டாடா சுமோ(அப்ப அதுதான் பெரிய கார்ர்ர்ர்ர்) வந்து நின்றது. உடனே ஐய்யருங்க எங்களை பின்னுக்குத் தள்ளி அக்குடும்பத்தை வரவேற்றனர். கரை வேட்டிக் காரருக்கும் அவர் வீட்டு  அம்மணிக்கும் பெரிய மாலை போட்டு பிரமாதமாக பூஜை செய்தனர். அரை மணி நேரத்துக்கும் மேல் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. கடைசியில் உ.பி பத்து ரூபாய் தட்டில் போட்டார். ஐய்யமாருங்க வாசல் வரை சென்று வழியனுப்பிய பின்னர்தான் வந்தனர்.

நண்பனுக்கோ அவனின் சப்பை பிகர் அவனுருகே உரசிக்கொண்டு நின்றதால் அரை மயக்கத்தில் இருந்தான். அவனிடம் பூஜை பொருட்களை ஒப்படைத்துவிட்டு தலைவலிப்பதாய் சொல்லி வெளியே வந்துவிட்டேன்.
அங்குதான் கடவுள் பற்றிய தேடல் துவங்கியது.

கடவுள்னு ஒருத்தர் கோவில்ல இருந்தா இவனுங்க பன்னுற அயோக்கியத்தனத்த எப்படி பொருத்துக்குறாரு. அதுலயும் குரு நம்மை சரி செய்வார் என இங்க அவர தாஜா பன்ன வந்தா அவரவிட ஐயமாருங்க பெரிய ஆளா இருப்பாங்க போல. என் மனசுக்குள் கடவுள் பெரிய ஒலக்கய எடுத்து நச்சு நச்சுன்னு அடிக்கவும்  இன்ஸ்டண்ட் புத்தனானேன். அப்ப கடவுள் என்பது இங்க இல்லை. பிக்காலிப் பயலுவோ(நன்றி அபி அப்பா) நம்மை ஏமாத்துறாங்க. அதனால ஒடனே நீயே தேடு என எனக்குள் திருவிளையாடல் படம் ஓடியது. அப்புறம் என்ன இனி ஆண்டவனை தேடிப்பாத்திட வேண்டியதுதான். ஆனா அந்தப் பயல் அதான் கடவுள் எந்தக் கோவில்லயும் இல்லை என நானே, ஆமாங்க நானேதான் முடிவு பன்னேன்.

அர்ச்சனை முடிந்து வெளியே வந்த நண்பன் எனக்கான பையைக் கொடுத்தான். நான் அதனை அப்படியே வாயிலில் இருந்த பிச்சைக்கரனிடம் கொடுத்தேன். அவென் என்னிய ஒரு பைத்தியக்காரனை பாக்குற மாதிரியே ஒரு லுக்க போட்டான். என் நண்பனிடம் இப்ப எதுவும் பேசாதே என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதன் பிறகு ஓஷோ, ஜே.கே.தீவிரமாகப் படித்து. அங்கிருந்து வேதாத்ரி மகரிஷியின்  தத்துவங்களில் ஈர்க்கப்பட்டு அங்கேஆசிரியப் பயிற்சி வரைக்கும் போனேன். அப்போதுதான் ஒரு நண்பர் ”WHY I AM NOT A CHRISTIAN” படிக்கக் கொடுத்தார். அதன் பின் ”நான் ஏன் இந்து அல்ல” தொடர்ச்சியாக பெரியார் புத்தகங்கள் படித்த போதுதான் ராகுல சாங்கிருத்யானின் " வால்காவிலிருந்து கங்கைவரை"  என்னை புரட்டிப் போட்டது.
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள். சுத்த சைவமாக இருந்தேன். முட்டை கலந்திருக்கும் என்பதால் பிரெட் கூட தொடமாட்டேன். குடிப் பழக்கம் அறவே இல்லை.  சிங்கப்பூரில் சைவ உணவுக்கு தேக்கா தவிர்த்து நாயா அலையனும். சமயங்களில் வெறும் சாதமும், கீரையும் வாங்கிக்கொள்வேன். சீன உணவில் கீரையில் கூட கொஞ்சம் நெத்திலி கிடக்கும். ஒவ்வொன்றாக பொருக்கி எடுத்துவிட்டு சாப்பிடுவேன். தாய்லாந்து போனால் சைவ உணவு தேடும் என்னை ஒரு ஜந்துவாக பார்ப்பார்கள்.

அப்புறம் நானே சமைக்க முயற்சி பன்னேன். அதாவது தினம் ஒரு கீரை வாங்கி அலசிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி சும்மா வதக்கிவிட்டு சோற்றில் போட்டு சாப்பிடுவேன். தினசரி கீரை வாங்கும்போது அங்கிருக்கும் இரண்டு கீரைகளை மட்டும் வாங்க மாட்டேன். ஒன்று மரவள்ளி தழை, மற்றது சர்க்கரை வள்ளி தழை. ஒரு நாள் அந்த சீனன் ”ஏன் இதுகளை மட்டும் வாங்க மாட்டேங்கிறே அதுவும் நல்ல கீரைதான்” என்றார். நான் அவரிடம் ”நாங்கள் இதை சாப்பிட மாட்டோம் ஆட்டுக்கு உணவாக கொடுப்போம், அப்புறம் அந்த ஆட்டை அடிச்சு சாப்பிடுவோம்” என்றேன். அதன்பிறகு இப்போதுவரை அந்தக் கீரையை சாப்பிடவில்லை என்றாலும் சமீபமாக நாட்டு ஆட்டுக் கறி சாப்பிடுகிறேன்.


நான் செய்த பிஸினெஸ் ஓவ்வொரு முறையும் என் ஆத்ம நண்பர்களால் ஆட்டைய போடப்படும் போதும். மீண்டும் அங்கிட்டு இங்கிட்டு பணம் பொரட்டி அடுத்த பிஸினஸ் ஆரம்பிப்பேன். இப்படியாக போன வாழ்க்கையில் விடிவெள்ளியாக யூ.ஜி.கிருஷ்ண மூர்த்தி என ஒருத்தர் வந்தார். அண்ணசாலை லேண்ட்மார்க் புத்தக கடையில் ஒரு நாள் யூ.ஜி யின் புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அதன் பின்னட்டையில் “எனக்கு சுடும் அதிகாரம் இருந்தால், நான் முதலில் சுடுவது ஆசிரியர்களைத்தான்” என்றிருந்தது. நான் அங்கு கிடைத்த அவரின் மூன்று புத்தகங்களையும் அப்போதே வாங்கிவிட்டேன்.

அதில் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக சொல்லியிருப்பார், நீ ஒரு போதும் கடவுளைத் தேடாதே. அது மிகப்பெரிய வலி. ஒரு வேளை கடவுளுக்கு உன்மேல் பிரியம் இருந்தால் அவர் உன்னைத் தேடி வருவார். நீ எப்போதும் போலவே இயல்பாக வாழு என்பார். அதன்பிறகு எனக்கு கடவுள் தேவைப்படவில்லை. எப்போதாவது திருவண்ணாமலை போவேன். இரண்டு நாள் இருப்பேன். ஒரே ஒருமுறை மட்டும் மனைவி இரண்டாவது பையன் கருவில் இருந்தபோது பிரசவத்தில் சிக்கலும், கையில் பைசாவும் இல்லாமல் இருந்தபோது திருவண்ணாமலை மலை மீதமர்ந்து தனியாக ப்ரார்த்தனை செய்தேன். கடவுளும் போனா போகுது என சுகப்பிரசவம் அருளினார். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கையில் மீதமிருக்கும் 150 ரூபாயுடன் நின்றபோது தம்பி சரவணனின் அம்மா 30000 ஆயிரம் ரூபாயை கையில் தந்தார்.

இப்படித்தான் இருக்கனுன்னு எல்லாரும் ஆசைப்படுறோம். அதற்கான முயற்சிகளையும் நாம் கைவிடுவதில்லை. ஆனால் எப்படியெப்படியோ வாழ நேர்கிறது. பத்தாம் வகுப்புவரை மிக நேர்மையான அப்பாவியான பையனாக இருந்த நான பதினொன்றாம் வகுப்பில் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் பெயிலான சீனியர்கள் அட்டெம்ப்டில் பாசாகி மீண்டும் எங்களுடன் படிக்க வந்த போது அவர்களின் ஆசியால் சிகெரெட்டில் துவங்கி மதுவில் உற்சாகமானது ஒரு வாழ்வின் அபத்தம். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் சிகிரெட் யாருக்குமே தெரியாம அடிக்க முடியுமா? நான் அடிச்சேன். ஒரு சிகிரெட் அடிக்கும் நேரத்தைவிட அதனை மறைக்க நான் படும்பாடு துயரங்கள் நிறைந்தவை. அப்போதும் ஒரு காதல் இருந்தது. ஆனால் என் பாதை உனக்கு சரிப்படாது என அவளுக்கு தெளிவாக சொல்ல பாலகுமாரனின் புத்தகங்கள் எனக்கு உதவின. அப்போது மறுத்த எனக்கு அதன்பின் அடுத்த வருடமே நான் திகட்ட திகட்ட காதலில் எப்படி கரைந்து போனேன் என்றும் இப்போதும் விளங்கவில்லை. நீ என்னடா காதலிச்சே நான் உன்னை காதலிக்கிறேன் பாருன்னு இப்போதும் என்னை தன் சிறிய மனதிற்குள் சிறை வைத்துவிட்ட மனைவிக்கு, அவள் காதலை அதே அளவு இல்லாவிட்டாலும் முடிஞ்ச அளவு திரும்பக் கொடுக்க முடியாமல் மலேசியாவில் பொருள் தேடியலைகிறேன்.

அப்போதும் சரி அதன்பிறகு எப்போதும் சரி கடவுள் தேடல் என்னை இன்னொரு விளிம்புக்கு தள்ளியவாரே இருந்தது. ஆனால் என்னைக் கடந்து செல்லும் நட்புகளால் நான் மிகவும் காயப்பட்டேன். யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்று புதைத்து விடுவார்கள். அது வைத்திருந்த அத்தனை தொடர்புகளையும் தூக்கியெறிந்து முகம் அறியாத இணைய நண்பர்களிடம் என்னை திருப்பியது.

நல்லவேளை ஜக்கி, நித்தி, கல்கி மாதிரி ஆளுங்க சகவாசம் தேவைப்படல, இருந்திருந்தா நானும் பகுதி நேர கடவுளா மாறி சென்னையில் (இங்கதான் இளிச்ச வாயனுங்க அதிகம்) ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கும் வாய்ப்பு எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது.


அதன்பிறகு என்னற்ற பிரச்சனைகள் எல்லாமும் நானே சரிசெய்துகொள்வேன் எனும் நம்பிக்கை கடவுளை என்னிடமிருந்து தூரத்தியடித்தது. நம்ம திருடி திங்கிறதுக்கு ஏற்படுத்தின கடவுள வேற யாராவது மனுசப்பயளுக திருடிட்டு  போயிடுவாகளேன்னு பெரிய பூட்டா பூட்டி வச்சிருக்கிற எந்தக் கோவிலயும் அதுக்குள்ள இருக்கிற கருங்கல்ல கும்பிட வரிசை கட்டும் பயபுள்ளைகள பாத்ததாக்க ஆச்சர்யமா இருக்கும். மத்ததுக்கு எல்லாம் ஆயிரம் லாஜிக்கு பாக்கும் இவனுக இதுக்கு பாக்க மாட்டானுகளான்னு, ஆனா இப்பவும் தன் எதிர்கால முதலமைச்சர கூட சினிமாவுல தேடுற பயக அப்படித்தான் இருப்பானுகன்னு என் ஆசான் திருவண்ணாமலை போனா மட்டும் ஞானம் வரும் செந்தில் சித்தன் சொன்னதால் நான் இப்பல்லாம் அதெ பத்தில்லாம் நோ யோசனை.


ஆனால் இப்போது நண்பர் நரேன் மூலமாக மீண்டும் ஒரு வியாபரத்திற்காக கடவுள் தேவைப்படுகிறார். எதையும் லாஜிக்குடன் பார்க்கும் லாஜிஸ்டிக் ஆள் நான் என்பதால் இவ்வியாபரத்திற்கு நானே பொருந்துவேன் என நினைத்திருப்பார் போல. இப்ப பக்திதான் Top Most Business என்பதால். அந்தப் பக்கமும் இறங்குகிறோம். இனி பக்திமான்களுக்கு கடவுள் தரிசனம் எளிதாகும். கணினி யுகத்துக்குள் கடவுளுக்கும் Schedule  போடப்போகிறோம்.
அதனால் எல்லா முக்கியமான (வருமானம் முக்கியம்)ஆலயங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரு பயணம்  இருக்கு.

நாத்திகத்தில் இருந்துகொண்டே பக்தியை ஆராயப்போகிறேன்....

4 செப்., 2012

கண்களில் உடையும் நதி...

போட்டோ: சுரேஷ்குமார் சிங்கப்பூர்
அலமாரியை சுத்தம் செய்த மனைவி
இந்தக் குப்பையெல்லாம்
துக்கிப் போட்டாத்தான் என்ன?” வென்றாள்.
என் காதலின் மிச்சங்கள்
அவையென
அவளுக்கும் தெரியும்
அவள்
தூக்கியெறிய மாட்டாள்!
என்னாலும் முடியாது!

தொலைபேசிகள் எட்டிப்பார்க்காத
கிராமத்துக் காலம் அது
வைரமுத்து சொன்னது போல்
தபால்காரன் தெய்வமாய் இருப்பான்.
அவசர அவசரமாய் எழுதுகிறேனென்று
என் கையெழுத்து மீது
எப்போதும் 
செல்லக் கோபம் அவளுக்கு.

குண்டு குண்டாக
நேர் கோட்டில் எழுதியிருப்பாள்
அவள்.
வரிக்குதிரையாய் இருக்கும்
அத்தனை வரிகளும்
அப்போது மனப்பாடம்
வாரத்திற்கு ஆறு கடிதம்
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
அத்தனையும் காவியங்கள்

ஒழுகும் மழை நீராய்
காதல்
எங்களை
கடிதங்களால் உயிர்பித்தது
சாமிக்கு நேர்ந்த
வளர்ப்பு கிடாயென
என்னை
வாக்குக்கு பலியாக்கினார் 
அப்பா.

நேரில் சந்தித்து
நிலைமையை விளக்கியபோது,
பரவாயில்லை விடென்றாள்
அவள் கண்களில் இருந்து
உடைந்தது ஒரு நதி.

இப்போது
ஒவ்வொரு கடிதமாய்
திரும்பப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்துப் பூச்சிகள்
மலம் கழித்த அவைகள்
ஒரு கையாலாகதவனின்
சமாதியாய் தெரிகிறது..

3 செப்., 2012

சீரோ டிகிரியும் முகமூடியும் கொஞ்சம் ரமணி சந்திரனும்..

போட்டோ: சுரேஷ் குமார் - சிங்கப்பூர்

எப்போதும் போலவே இவ்வுலகம் சேவல் கூவியபின் விடிகிறது!. அதிகாலை 4 ம்ணிக்கே டீக்கடை கும்பல் கொஞ்சம் கொஞ்சமாய் கூடத்துவங்குகிறது. நான் தினசரி அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். கொஞ்சமாய் தியானம், கொஞ்சமாய் யோகா முடித்து படிக்க ஆரம்பித்தால் சரியாக ஆறு மணிக்கு மது எழுந்து காபி கலக்கித் தருவாள். அப்போதிலிருந்து எனது நிமிடங்கள் பரபரப்பாகிவிடும். என்னெனில் சரியாக 8 மணிக்கு அலுவலக வண்டி வந்துவிடும். இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் ஒரு தீவிர வாசகி என்பதை நீங்கள் அறிய வேண்டாமா? அதற்குத்தான்.

எல்லா இலக்கியவாதிகளையும் படித்திருக்கிறேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிப்பேன். படிப்பதில் எனக்கு பாகுபாடு கிடையாது. ஆனால் இலக்கியவாதி என்று தன்னை விடாமல் மார்க்கெட் செய்யும் ஒருவரால் ஒரு சம்பவம் நடந்தது. இதனை ஒரு சிறுகதையாகவோ, புணைவாகவோ நீங்கள் எடுத்துக்கொள்வது உங்களின் விருப்பத்தைப் பொருத்தது. இதன் தலைப்பே யார் அந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். பிரச்சினைக்கு காரனம் அவர் இல்லை. அவரை நான் இதுவரைக்குமே பார்த்தது கிடையாது. ஏன் ஒரு தொலைபேசி அழைப்போ, பாராட்டுக் கடிதமோ, திட்டியோ கூட எழுதியது கிடையாது. அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரம் அவர் தன் சகல பெண் தோழிகளைபோல் என்னையும் கொண்டாடி எழுதியிருப்பார்!. காரனம் என் பெயரும் கூட. பல நேரம் என் கல்லூரித் தோழிகள் சிலர் அவரை சும்மா அதிகம் பெண் தோழிகள் இருப்பதாக புளுகுகிறார் என்று சொல்வதுண்டு. ஆனால், எனக்குத் தெரியும் பெண்கள் நிறைய பேர் அவரை விரும்பிப் படிக்கிறார்கள் என்று. இப்போது அதெல்லாம் எதற்கு. என் பெயர் நிவேதிதா. இதுதான் இந்தக் சம்பவத்தை நீங்கள் படித்துக் கொண்டிருப்பதற்கான காரனமே.

இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் முன்பு ஒரு மதிய உணவு வேலைக்குப் பின் எனது மேலதிகாரி என்னை அழைத்து ஒருவரை அறிமுகப் படுத்தினார். அவர் பெயர், என்ன வேலை, அவருக்கு நான் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டார். அவரை அழைத்துக்கொண்டு என் கேபினுக்கு வந்தேன். அவர் என்னைவிடவும் உயர் பதவிக்காக வந்திருப்பவர். அவருக்கு முன்னர் எனது தோழியும் இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை வாங்கித் தந்தவளுமான மது அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். முதல் பத்தியில் எனக்கு காப்பி கலக்கித் தந்த அதே மதுதான். இதைவிட அதிக சம்பளம் கிடைத்ததால் வேறு கம்பெனிக்கு அவள் மாறிப்போக தற்காலிகமாக நான் அவள் பார்த்த வேலையையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

Hi என்  பேர் சங்கர் நாராயணன்

Hi sir, I am நிவேதிதா

sweet name  நிவேதிதா

thanks sir”

அதன்பிறகு வேலை பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது என் மேஜையில் கிடந்த அந்த புத்தகத்தை எடுத்தப் பார்த்தார்.

“இந்தப் புத்தகம் நீங்கள் எழுதினதா!?

அவர் அப்படி கேட்டதும் தமிழ்நாட்டில் ரஜினியை தெரியாமல் கூட ஒருத்தன் இருப்பான் போல என நினைத்துக் கொண்டேன்.

“இல்லை சார், அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர்!

“இல்லை உங்க பேர் போட்டிருந்தது. அதான் கேட்டேன்

அது நம்ம தலைவன் எழுதிய மிகச்சிறந்த நாவலான 0 டிகிரி”  அதனை நான் பலமுறை படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் ஒருமுறை வாசிக்க எடுத்து வந்தபோதுதான் அவர் கண்ணில் பட்டிருக்கிறது.

Sir, உங்களுக்கு புக் படிக்கிற பழக்கம் இருக்கா?

Yah, I read only Business magazines, அப்புறம் அப்பப்போ என் அம்மா படிக்கிற குமுதம், விகடனை சும்மா புரட்டுவேன் அவ்வளவுதான்

நீ அந்தக் கேசா என மனதில் சிரித்துக்கொண்டேன். அதற்கப்புறம் அவன் கேட்டதுதான் கொடுமை.

” இந்த புக்க கொடுங்களேன் படிச்சு பாக்குறேன்

இல்ல Sir, அது கொஞ்சம் தீவிரமான இலக்கியம்

“அது என்னங்க இலக்கியத்துலயே தீவிர இலக்கியம்?

இதென்னடா குமுதம் படிக்கிறவனுக்கு எதுக்கு இந்த மாதிரி புத்தகமெல்லாம் என்று நினைத்தேன். ஆனால் நம்ம எழுத்தாளரே அந்த குப்பையிலும் எழுதியவர்தானே என்பதால்,

“இது உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை?, அதனால்தான்!....” என்றேன்.

“கொடுங்க படிச்சுத்தான் பாக்குறேனே” என என் அனுமதிக்கு கூட காத்திராமல் எடுத்துக் கொண்டான்.

அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் அவன் வேலை பழகிக்கொண்டான். அதன்பிறகு எனக்கு வேறு செக்சனுக்கு மாற்றி விட்டார்கள். கிட்டதட்ட ஒரு மாதம் போயிருக்கும். ஒரு நாள் தற்செயலாக அவனை கேண்டீனில் பார்த்தேன். பரஸ்பரம் விசாரித்துவிட்டு

“Sir, அந்த புக் படிச்சிட்டீங்களா

“ Oh, Sorry அதை நான் படிக்காமயே வச்சிருந்தேன். என் நண்பன் ஒருவன் படிச்சுட்டு தருகிறேன் என வாங்கிப்போனான். இன்னும் தரல, ரொம்ப முக்கிமான புத்தகமா?
“இல்லை Sir, பரவாயில்லை அவர் திருப்பிக்கொடுத்தவுடன் கொடுங்கள்

அப்புறம் நான் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் என் வீட்டில் எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதில் ஒரு மாப்பிளை வீட்டுக்காரன் என் அலுவலகத்திற்கு வந்து விசாரிக்கவும் அப்போது என் மேலதிகாரி சங்கரை கைகாட்டவும், அவன் சொன்ன விசயத்தால் அந்த வரன்  போனதுடன் என் வீட்டிலும் எனக்கு செமத்தியாக டோஸ் விழுந்தது.

அவன் சொல்லியிருக்கிறான் “ அவளையா பெண் பாக்குறீங்க!, அவ அலுவலகத்தில் வச்சே செக்ஸ் புக் படிக்கிறா!, என்கிட்டயே வேற படிக்க கொடுத்தா!, நல்லவேளை நான் அந்த மாதிரி ஆள் இல்ல!, அதனால அவ செக்சன கூட மாத்தி விட்டுட்டேன்னா பாத்துகங்க,  இந்த மாதிரி பொண்ணாலதான் மொத்த I.T ல வேலை பாக்குறவங்களுக்கும் கெட்ட பேரு வருது!” னு சொல்லவும்.....

இதனை கேட்டவுடன் மாப்பிளை வீட்டார் என் அப்பாவிடம் சொல்லி என்னை கண்டிச்சு வளக்க சொல்லி அறிவுரையெல்லாம் சொல்லிவைக்க, அப்பா அம்மாவிடம் அவளை இனிமே வீட்டுல வச்சு புத்தகம் படிக்க சொல்லு என சொன்னதாக அம்மா சொன்னார், நல்லவேளை அப்பாவும், அம்மாவும் நிறைய புத்தகம் படிப்பவர்கள் என்பதால் என்னைப் புரிந்துகொண்டனர். இதை மதுவிடம் சொன்னதும் அப்படி என்னதாண்டி இருக்குது அந்த புத்தகத்துலன்னு நச்சரிச்சு எங்கெங்கோ தேடி இன்னொரு பிரதி வாங்கிக் கொடுத்தேன். பிரச்சினை என்னன்னா படிச்சிட்டு அவளும் என்னை திட்ட ஆரம்பிச்சா.

” எவெண்டி அவென் உம்பேர பின்னாடி வச்சுருக்கான், அவனுக்கும் ஒனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?” அது, இதுன்னு தினசரி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடுவா.

ஏன்னா இவ இருக்காளே இவ one only ரமணி சந்திரன் புத்தகம் மட்டும்தான் படிப்பாள். வேறு புத்தகம் எதுவும் தொடவே மாட்டா!. நானும் ரமணி சந்திரனோட சில நாவல் படிச்சிருக்கேன். ஆனா அத்தனையும் டெம்ளேட்டா ஒரே மாதிரியா இருக்கும். திரும்பத் திரும்ப இயக்குனர் விக்கிரமன் அவர் சகா எஸ்.ஏ. ராஜ்குமார் மாதிரி ஒரே மேட்டர். நோ மசாலா. டீவி சீரியல் கணக்கா ஒரே பிரமாண்ட நாவலாகூட எழுதிறலாம. ரமணி சந்திரன் படிக்கிறவளுக்கு தலய எப்படி புரியும்!.

அதுக்கப்புறம் இனி அவர் எழுதின எல்லா புத்தகத்தையும் படிச்சவனைத்தான் நான் திருமணம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.

அவருக்கு மிஸ்கின் புடிக்காம போனாலும் எனக்கு ரொம்பப் புடிக்கும் ஆனா இப்ப பாருங்க அந்தா ஆளும் தன்னை ஒலகப் பட இயக்குனருக்கு சமமா சொல்லிக்கிட்டு திரியுது. பாலா இப்படித்தான் டெம்ளெட்டா “அவன் இவன்” பன்னினர். பாருங்க தலக்கும் புடிக்கல. எனக்கும் கூட புடிக்கல. இப்ப முகமூடி போறதுக்கு டிக்கெட் எல்லாம் புக் பன்னிட்டேன். ஆனா தல சொன்னபிறகு அத பாத்து தலவலி வர்றத காட்டிலும் குப்புற படுத்துகிட்டு “எக்ஸைல” இன்னொரு வாட்டி படிச்சி புரிஞ்சிக்க முயற்சி பன்னலாம்.

இப்ப தலக்கு “அன்பே வா” ரொம்பப் புடிக்குமாம். எனக்கு அந்தப்படம் கூட ரமணி சந்திரன் நாவல் படிக்கிறது மாதிரிதாங்க. சரோஜா தேவியின் ஓவர் மேக்கப்பும், எம்.ஜி.ஆர் இருவது வயது பையனாட்டம் கையை பின்னாடி கட்டிக்கிட்டு டான்ஸ் ஆடுவதும் பாக்க சகிக்காது. இத எப்புடி திரும்பத் திருமப் பாக்கிறாருன்னு தெரியல. ஒருவேளை நாகேஷ், மனோரமா நடிப்பு கவர்ந்திருக்கலாம்!.

மேலும் அவருக்கு இன்னைக்காவது ஒரு mail தட்டி உடலான்னு இருக்கேன்.

நீங்களே சொல்லுங்க “ அவர் எத்தனை சாத்தான் கிட்ட இருந்து என்னை காப்பாத்திருக்காரா? இல்லையா?...