31 அக்., 2011

கால சர்ப்பம்...

அவர்கள் அப்படித்தான்
கொள்கை பேசுவார்கள் ..

நேற்று அதுவாக இருந்ததை

இன்று இதுவாக இருக்கிறது
என்பார்கள்..

தலைவன்

தலைவி
யாராவது ஒருவர்
அவர்களுக்கு தேவை
ப்படுவார்
பின்
தலைவன் மகன்
பேரன்
கொள்ளுப்பேரன்
அவர்கள் வீட்டு நாய்குட்டி என
மேடையில் சிலாகிக்க,
இப்போது
தமிழ்
குஷ்பூவின் தமிழ்..

தலைவிக்கு

தூய அன்பு உள்ளம்
நேற்றுகளை மறந்த
இன்றைய தமிழனுக்கு
போதி தர்மன்
பிரபாகரன்
சூர்யா
காசு கொடுத்து
கைதட்டி ரசிப்பான்..

ஆட்சிகளும் மாறும்

காட்சிகளும் மாறும்
ஆட்களும் மாறுவார்கள்
அதே சாலை
அதே பேரூந்து
அதே வாழ்க்கை
சகித்து சகித்து
மானம்கெட்டு
வாழப் பழகிவிட்டான்
டாஸ்மாக் தமிழன்..

நேர்மை

நியாயம்
நீதி
வீதியில் கிடக்கும்
மிதித்து பழகுங்கள்..   

20 அக்., 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை...

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்


பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.மேலும் படிக்க:

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை

15 அக்., 2011

புறம் பேசுதல் ...

ரகசியங்கள்
நிரம்பி வழிகிற 

வாழ்வின் பயணங்களில் 
எதிர்ப் படும் 
உங்களிடம் இருக்கும் கதைகள்
என்
திசைகளை மாற்றிவிடுகிறது..

எல்லாக் கதைகளிலும்
உண்மை 
இருப்பதில்லை 
உண்மையாகவும்
இருப்பதில்லை
எனினும்
அவைகள்
என் மனக்கூட்டில்
திரையிடுகிற
சோகங்களை 
சுமக்க முடியவில்லை..

எதிர்பார்க்காவிட்டாலும்  
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன 
சில பொழுது போக்கு 
சில வம்பு 
சில கள்ளக் காதல் என 
விரும்பப்படுகின்ற கதைகள்
மட்டுமே
சுவாரஸ்யம் கூட்டுகின்றன..

அவன், இவன் 
நீ, நான் 
எவனுமே சரியில்லை 
டீக்கடை 
சாக்கடை..

சினிமாவோ
அரசியலோ
பக்கத்து வீட்டுக்காரனோ, காரியோ
கிசுகிசுக்கள்
புனிதமானவை..

யார் கதைகளையோ
நாம் பேச,
நம் கதைகளை
யாரோ பேச
பேசப் பேச
பொய்கள்
உண்மையாகிவிட
சிலர்
விலகவோ
நெருங்கவோ
கதைகளே காரனம்..

கவனமாக இருங்கள்
இன்று உங்களை பாராட்டும்
அதே ஆள்தான்
நாளை உங்களை
தூற்றக்கூடும்
நேற்றைய நண்பர்கள்தான்
நம் இன்றைய எதிரிகள்..

14 அக்., 2011

சொல் ...

We are masters of the unsaid words, but slaves of those we let slip out. -Winston Churchill
குறள்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
விளக்கம் :
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்

மொழியில் வளமை அதன் வார்த்தைகளில்தான் இருக்கிறது. ஆதியில் தோன்றிய தமிழ் மெல்ல மறுவி இன்று சென்னைத்தமிழ் அளவுக்கு வந்து நிற்கிறது. அதிலும்  தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் தமிழ் படும்பாடு ஐயோ பாவம்! நல்ல வேளை பாரதி செத்துப்போனான். இப்பவும்கூட தமிழுக்கு சோறு போடுவதாக சொல்லிக்கொள்ளும் வைரமுத்து கூட இதைபற்றி பேசுவது இல்லை. அவருக்கு சோறு போடும் தலைவரின் ஊடகத்திலும் தமிழ்க்கொலை வெகுவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை தமிழ்கொலை அல்ல. வார்தைகளை கையாளும் விதம்.

பொதுவாகவே தமிழர்களுக்கு பேசப்பிடிக்கும் அதனால்தான் காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் இருந்து திராவிட இயக்க பெரியவர்களால் விரட்ட முடிந்தது. பெரியாரால் மூடனம்பிக்கைக்கு எதிராக ஆட்களை திரட்டமுடிந்தது. திரையில் தோன்றும் ஒல்லிகுச்சி நாயகன் தன் பெரிய எதிரியை ஒரு அசந்தர்ப்ப வசனதுடன் ஊதித்தள்ளும்ப்போது அவனால் கைதட்டி ரசிக்கவும், பின்னால் கைதுக்கி முதல்வர் ஆக்கவும், ஆக்கியபின் அவர்முன்னால் கைகட்டி வணங்கி நிற்கவும், சிலர் ஒருபடி மேலேறி காலில் விழவும் செய்கின்றனர்.

கிரமங்களில் வீட்டின் முக்கியமான சடங்குகளின் போது உறவின்முறையில் வரும் தகராறுகளில் ஒருவருக்கு ஒருவர் பேசும் வார்தைகளால் நிரந்தரமாக உறவு அற்றுப்போன குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்கள் மீண்டும் சேரும் வாய்புள்ள ஒரே இடம் சாவு வீடாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில்தான் தன் கவுரவங்களை விட்டுக்கொடுப்பார்கள். தவறு செய்த நபரும் தன் உறவின் பெருந்தன்மையால் தன் துக்கத்தை மீறி ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டு அழுததை என் கண்முன்னால் கண்டிருக்கிறேன்.

உறவுகளில் என்றில்லாமல் நட்புகளிலும் ஒரே ஒரு வார்த்தையை தவறாக பிரயோகித்து அதனால் முறிந்துபோன உயிர் நட்புகளையும் நான் பார்த்திருக்கிறேன். கடைசிவரை எதிராளி தன் தவறான வார்த்தைக்காக மண்ணிப்பு கேட்டபிறகும் மண்ணிக்காத நண்பர்கள் இருக்கிறார்கள்.

காதலில்தான் இது நிறைய நடக்கும். பெரும்பாலும் பெண்கள் தன்னை காதலிக்கும் ஆண்கள் தன் பேச்சை மதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் நம் இனம் அப்படியா காதலில் விழும்வரைக்கும்தான் எல்லா நடிப்பும் அதன்பிறகு நம் சுயரூபத்தை காட்டுவோம். அப்போது நேரும் தகராறில் ஆண்கள் உடனே கீழிறங்கி வந்து சாமாதானம் செய்யாவிட்டால் அவ்வளவுதான், அதன்பிறகு சின்ன சண்டை வளர்ந்து அல்லது வளர்க்கப்பட்டு நிரந்தரமாக உறவு முடிந்துபோகும்.

இப்படித்தான் என் வீட்டில் எனது தயார் அவருக்கும் எனது மனைவியான அவரது பேத்திக்கும் (என் சகோதரியின் மகளைத்தான் நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன்)  நடந்த சின்ன சண்டையில் நான் என் மனைவியை கண்டிக்கவில்லை என எனது தாயார் என்னிடம் வருத்தப்பட, நான் உங்க சண்டையை ஏன் என்னிடம் கொண்டுவருகிறீர்கள்? என கோபப்பட, அப்போது என்னைப்பார்த்து என் தாயார் உனக்கு நான் முக்கியமா? இல்லை உன் மனைவி முக்கியமா? எனக்கேட்க நானும் மிகுந்த நாணயஸ்தனாய் என் மனைவிதான் எனக்கு முக்கியம் என்று சொல்ல, என் தாயார் எங்கள் இருவரையும் வீட்டைவிட்டு போகச்சொல்லிவிட்டார். அன்று வீட்டைவிட்டு வெளியே வந்த நான் கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளாய் இன்னும் என் வீட்டிற்குப்போகவில்லை.

இது சம்பந்தமாக என்னிடம் சமாதானதுக்கு வந்த அத்தனைபேரிடமும் நான் சொன்னது : “ நான் அந்த வீட்டிற்கு கண்டிப்பாக வருவேன். என் பெற்றோர் இறந்தால் வருவேன்” அல்லது “ அவர்களுக்கு முன் நான் இறந்தால் என் உடல் வரும் என்று சொன்னேன்.

10 அக்., 2011

கேபிள் சங்கர் ...

பதிவுலகின் No.1 பிளாக்கரான கேபிள் சங்கரை எனக்கு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகத்தான் தெரியும். நான் தி.நகரிலும், அவர் சைதாப்பேட்டையிலும் இருந்தாலும் நான் அவரை பதிவுகளில் பார்ப்பதுடன் சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயங்களில் நான் அதிகம் சிங்கப்பூர், மலேசியா என சுற்றிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூரில் இருந்து வந்தபிறகு அவர் சிங்கப்பூர் சென்றபோது அவர் BUZZ ல் தன் சிங்கப்பூர் வருகையை பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு போனினேன். அங்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் எனக்குப் போனும்படி சொன்னேன். ஆனால் சிங்கை நண்பர்களின் அமோக கவனிப்பால் ( கேலாங் உள்ளிட்ட) என் உதவி அவருக்கு தேவைப்படவில்லை. அதன்பிறகு அவர் டைகர் ஏர்வேஸில் ஊருக்கு வந்த அதே நாள் என் நண்பனும் அதே ஏர்வேஸில் எனக்காக GLENFIDDICH விஸ்கியுடன் வருவதாக சொன்னதும் அவனை முக்கியமாக அந்த விஸ்கிக்காய்  ஏர்போர்ட் சென்றபோது நமது பதிவுலக தானைதலைவன் (அ) தானே தலைவன் வந்தார். அவரை அடையாளம் கண்டு ஒரு அலோ சொன்னதும் என்ன ஆட்டோகிராஃப் வேனுமான்னார். அண்ணே நானும் பிளாக்கர்தான்னு சொல்லி என் பேரை சொன்னதும் அவர் கையிலிருந்த பாட்டிலின்மேல் என் பார்வை சென்றதும் இன்னொரு நாள் பார்க்கலாம் தலைவா என விடைபெற்றார்.

அதன்பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பாரில்வைத்து பரஸ்பரம் அறிமுகமாகி அதன்பிறகு ஒருநாள் இரவு எனக்கு போனியபோது இன்னோரு முக்கியமான நபர் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார். அவர் பதிவுலக பஸ்ஸுலக அண்ணன் ( இன்னும் புரியலியா?) அப்புறம், அண்ணனுக்கு நேரம் கிடைக்கும்போதும் ஸ்ரீதேவி ஓட்டலில் சந்திப்புகள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் அல்ல தம்பி என்று தெரிந்தபின்னும் அவரை அண்ணன் என்றே அழைத்து வருவது தனிக்கதை. இதற்கு மேல் எழுதினால் அண்ணன் அப்துல்லா அவர்கள் என் நட்பினை (மறு)பரீசலனை செய்யக்கூடும் என்பதால் மறுபடியும் தானைத்தலைவன் பற்றி...

அதன்பிறகு தினசரி இரவு 9.30 க்கு எங்கைய்யா இருக்கேன்னு போனுவார். ரெண்டு பேரும் சினிசிட்டி போயி கையில் இருப்பு வைத்திருந்த கடைசி சொத்து அழியும்வரை குடித்து இருக்கிறோம். அதன்பிறகு கிடைத்த நூரு ரூவாய்க்கு ஒரு குவாட்டர் வாங்கி வீட்டு மொட்டைமாடியில் அடிப்போம் அதன்பிறகு புரவலர்கள் அழைக்காத நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைத்தோம்.

இத்தனை மாதங்களில் கேபிளின் ஆளுமையை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தகைய ரகசியத்தையும் அவரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். அவரது சிறுகதைகளில் மறைமுகமாக வருமே தவிர நம்பிக்கைகு உரிய ஆள் அவர். தனக்கு இருக்கும் சிரமங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லமாட்டார். ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்க முடிவுசெய்திருக்கும் மூன்று படங்களின் திரைகதையும் நான் முழுவதும் கேட்டிருக்கிறேன். அதனால் அது கண்டிப்பாக வெற்றிபெரும் என எனக்குத்தெரியும்.

ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என நினைத்து இவரின் ”மீண்டும் ஒரு காதல் கதை” யை வெளியிட்ட போதுதான் அவரின் உண்மையான மதிப்பீடு தெரிந்தது. அதற்குபிறகு நான்கு புத்தகங்கள் வெளியிட்டு நாங்கள் பதிப்பக துறையில் நுழையும்போதே லாபத்துடன் நுழைந்ததற்கு கேபிள்தான் காரனம். எந்தவொரு விசயத்தையும் வியாபார நோக்கத்தில் அனுகும்போது வரக்கூடிய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிக்கக் கூடிய புத்திசாலி, அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

அவர் மட்டும் சினிமா தவிர்த்து வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார். ஆனாலும் சினிமாவின் வீச்சு அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் ஓடு மீன் ஓட காத்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இவரின் சமீபத்திய வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரனம் யுடான்ஸ்  திரட்டி ஆரம்பித்த சில வாரங்களில் அதன் வளர்ச்சி அபாரமானது. அதில் மற்ற திரட்டிகளில் இல்லாத அனேக அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக டி.வி மற்றும் வீடியோ பிளாக்கிங் வசதிகள் பதிவுலகிற்கு புதியது. இன்னும் ஏகப்பட்ட அம்சங்களை அதில் கூடுதலாக வைக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்.

இத்தனை பன்முக திறமைகள் வாய்ந்த அவர் எப்போதும் கர்வமின்றி இருப்பதுதான் அவரின் பெருமையே. . அதேபோல் புதிதாக வருகிற பிளாக்கராக இருக்கட்டும், எந்த நேரத்தில் போனுகிற ஒரு வாசகனாக இருக்கட்டும் அந்த நேரத்தில் அவர்களுடன் பேச முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும்போது அவர்களுடன் பேசிவிடுவார்.

என் நெருங்கிய நண்பரும் சீனியர் பிளக்கருமான நரேன் கேபிளைப்பற்றி சொன்னார் : “ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட.... 

9 அக்., 2011

பதின்ம இரவுகள்...

ராத்திரிகளின் ரகசிய பக்கங்களில் 
சுவர்க் கோழிகளின் கிறுக்கல்களாய் 
காமத்தின் சித்திரங்கள்...

ரசிக்கத்தான் வேண்டியிருக்கிறது 
படத்தின் இடையிடையே காட்டப்படும்
பலமுறை பார்த்த
 
பழைய நீலங்களை..

இரண்டாம் காட்சி முடிந்து 
நீளும் பின்னிரவில்
துனைதேடும் மார்கழி நாய்கள்
வழித்துணையாய் கூடவரும்..

மனக் கதவுகளின் இடைவெளியில்
திரையிடும் காட்சிகளால்
கிறங்கும் பதின்மத்தின் ஆர்வம் 
விரல்களால் சுயம் தேடும்..

சொப்பனங்களில்
மாறி மாறி
அல்லது மாற்றி மாற்றி
சொப்பன சுந்தரிகள்
நனையும் உடைகள்..

இக்கவிதையின் ஊடே 
கிளர்த்தலின் விதிகள் 
தளர்த்தப்படுகின்றன..

8 அக்., 2011

போதி தர்மரும்!, ஏழாம் அறிவும்!!, தமிழனின் பெருமையும்!!! ...

A.R.முருகதாஸின் ஏழாம் அறிவு திரைப்படம் போதி தர்மர் அவர்களின் வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை அறிந்து போதி தர்மர் பற்றி கூகுளிடம் தேடியபோது ஏராளமான தகவல்கள் கிடைத்தன. எப்படி ஒரு தமிழனின் வரலாறு மூடி மறைக்கப்பட்டது என்பது ஆச்சர்யமே!. ஒரு வேளை அவர் புத்த மதத்தினை தழுவியதால் அவரின் பெருமைகள் இந்தியாவில் மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சீனாவில் அவரைப்பற்றிய அத்தனை குறிப்புகளுமே அவர் தென்னிந்தியாவில் பிறந்த பல்லவ வம்சத்தை சார்ந்த அரசகுமாரன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

படத்தின் முதல் இருபது நிமிடங்கள் மட்டுமே போதி தர்மரைப் பற்றி காட்டியிருக்கிறோம். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிப்பாருங்கள் என முருகதாஸ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். கூகுளில் கிடைத்த அவரின் ஏராளமான விவரங்களைப் படித்தபோது ஒரு தமிழனின் வரலாறு மட்டுமல்ல தமிழனின் அரிய கலை வடிவங்களும் கானாமல் போயிருப்பது அறிந்து வருத்தமாக இருந்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் தனது எல்லாப் படங்களிலும் தனி முத்திரை பதித்துவரும் முருகதாஸ் இப்படி நாம் யாரும் அறிந்திராத ஆனால் ஒரு பகுதி உலகமே கொண்டாடும் ஒரு தமிழனின் பெருமையை நமக்குத்தர முன்வந்திருக்கிறார். அவருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் எனது வந்தனங்கள்..

போதி தர்மரை பற்றித் தெரிந்துகொள்ள :

7 அக்., 2011

பதிவர்களும், சதுரங்கமும் ...

நான் வழக்கமாக சினிமா விமர்சனம் எழுதுகிற ஆள் இல்லை. ஆனால் நேற்று பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு போயிருந்தேன். அண்ணன் உ.த தொலைபேசியில் தம்பி உன் ஆளுங்களையும் (அதாவது ஜூனியர் பிளாக்கர்ஸ்) கூட்டிட்டு வான்னார்!. அட பதிவுலகில் நமக்கு இப்படி ஒரு இடமா? என நான் அசந்துபோய் போன் செய்து பேசியவர்களில் சிவக்குமார் போனையே எடுக்கவில்லை. செல்வின் மட்டும் பிரபாகரனை அழைத்துவருகிறேன் என்றார். உ.த வுக்கு வாக்கு கொடுத்துவிட்டோமே என எனது பதிவுலகம் சாராத நண்பர்கள் ஐவரை அழைத்து வந்தேன்.

வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது. ஜாக்கி மற்றும் சில பதிவுலக, முக நூலுலக நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தானைத்தலைவன் அல்லது தானே தலைவன் கேபிள் தனது உடாண்ஸ் டிவிக்காக எல்லோரையும் பேட்டி எடுத்தார். அப்போது தன் வீட்டில் உடான்ஸ் டிவி தெரியலை என சிரிப்பு போலீஸ் புகார் செய்தார். மணிஜி இணைய மிருக கெட்டப்புடன் வந்திருந்தார். டாக்டர் புருனோ சுறா எஃபெக்ட்டில் வந்து அதே எஃபெக்டில் படம் முடியும்வரை கலாய்த்தார். லக்கியும் தி.மு.க வின் இன்றைய நிலைக்கான காரனங்களை அடுக்கினார். என் தலைவருக்கு அவர் தலைவர் வாய்ப்பு வழங்கமாட்டார் என்று சொல்லிவிட்டதால் நான் இப்போது உ.பி யாகும் வாய்ப்பு தள்ளிப்போகிறது. அதிஷாவை கேபிள் தனியாக அழைத்துப்போய் பேட்டி எடுத்தார். காரனம் கேட்டதற்கு லைட் வெளிச்சம் போதலைன்னு சொன்னார்.

சாருசங்கர் கலக்கலாக என்ஃபீல்டில் வந்திறங்கினார். அவரை சுற்றி சுற்றி வந்து கேபிள் படம் எடுத்தார். அநேகமாக இது உடான்ஸில் வராது. ஆமாம் உடான்ஸ்னா என்னன்னு கேட்டா எப்புடி போடுவாங்களாம். காவேரி கனேஷ், தினேஷ், பட்டர்ஃப்ளை சூர்யா, மயில், க +, நரேன், ஆகியோர் வந்திருந்தனர். ஞானி வந்திருந்தார். முகநூல் நண்பர்கள் பதிவர்களைவிடவும் அதிகமாக வந்திருந்தனர்.

கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு, சிலப்பதிகாரம் இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள். மந்திரப் புன்னகையில் கூட வசனத்தில் அசத்தியிருப்பார். ஆனால் சதுரங்கத்தில் முதல் காட்சியில் துவக்கிவைத்த டெம்போவை போகப்போக வலுவிழக்கச் செய்து படம் முடியும்போது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு படம் எடுத்து அது இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிற நிலையில் அதனை இதற்கு மேல் என்னால் விமர்சிக்க முடியவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு நல்ல யோசனை என்னவெனில் இனி இப்படி தனிக்காட்சி போடுவதை தவிர்கலாம். காரனம் அது கரு.பழனியப்பனுக்கே தெரியும்.

நிகழ்சியை ஒருங்கினைத்த உண்மைதமிழன் அண்ணனுக்கு என் நன்றிகள்..

4 அக்., 2011

காக்கைகள்...

நான்
மரங்கள் நிறைந்த
ஒரு கிராமத்து வீட்டில்
வாழ்ந்திருந்தேன்
அணில்களோடு
சிறு பறவைகள்
அதிகமாய் காகங்கள்
அப்புறம் வீட்டு விலங்குகள் 

என
காடு பற்றிய புரிதல் இல்லாமலேயே
காட்டுவாழ்வின் சில பக்கங்களை
வாசிக்க முடிந்தது..

பின்

பிழைப்புக்காக 

நாடி வாழ்ந்த
நகரத்தில்
மரங்கள்
மிக சொற்பமாகவே இருந்தன
அவைகளில்
அணில்களே இல்லை
ஆனால் 

காகங்கள் மிகுதியாக இருந்தன
அவை 

வாழ்தலின் மிச்சமாகவும்
நான்
வாழ்தலின் உச்சமாகவும்
இந்த நகரத்தை
பங்கு போட்டுகொண்டோம்,
சக மனிதர்களிடம்
அல்லது
மனிதர்களால்
காட்டு வாழ்க்கையின்
எதிர்மறையான பக்கங்களை
வாசிக்க முடிந்தது..

நேற்று

ஒரு காட்டுக்குப்போனேன்
வழிதவறிய
என் பயனத்தில்
வழியெங்கும் காடுகள்
மரங்கள் நிறைந்த
மனிதர்கள் இல்லாத காடுகள்
அங்கு நான் விலங்குகள் எதையும்
பார்க்கவில்லை
அணில்களையும் பார்க்கவில்லை
பெயர் தெரியாத பறவைகளொடு
அதிகமாய் காகங்களையும்
பார்த்தேன்
வழிதவறிய பதட்டத்தில்
காட்டின் நிஜமான பக்கங்களை
வாசிக்கத் தவறினேன்..

வழி கண்டுபிடித்து

வீடு வந்து சேர்ந்த
உறக்கம் தொலைத்த
இரவில்
மனசெல்லாம் காடுகள்
விலங்குகள் இல்லா
காடுகள்,
காடென்றால்
விலங்குகள் இருக்குமே
என நான்
யோசிக்கத் துவங்கியபோது
கனவைக்கலைத்து
ஒரு
நகரத்தின் நாளினை
துவக்கிவைத்ததன
பால்கனியில் வந்தமர்ந்த
காக்கைகள்..