30 செப்., 2011

தோற்றம் - மறைவு ...

பார்வைகள் தீண்டிக்கொண்ட 
ஒரு நொடியின் மரணத்தில்   
உயிர்த்தது நம் காதல்..

பறிமாறிக்கொண்ட அனைத்திலும்   
மேன்மையானது  
மின்தூக்கித் தனிமையின்  
முதல் எச்சில் வினாடிகள்..

அன்னிய தேசம்   
அலுவல் நிமித்தம்   
அனுப்பப்பட்டோம்,  
அங்கு   
அதிகப்படியான  இரவுகளை     
ஆதி மனிதர்களாய் கடந்தோம்..

இருவரின்
வாழ்வியல் கடமைகள்   
திருமண ஒப்பந்தத்தை   
தள்ளி வைத்து நகர்ந்த காலத்தில்   
ஊடாக வந்த நட்புகளால்   
சந்தேக சங்கடம் ..

நிலவை தொலைத்த   
நாளின் நள்ளிரவில்   
உரத்த குரலெடுத்து  கதறிய 
காதல்  
மறுநாள் அதிகாலை,  
பார்வைகள்  தீண்டத் தயங்கிய 
கணத்தில்    
மரித்துப்போனது..

29 செப்., 2011

Shake up your story : Raghava KK

28 செப்., 2011

கட்டையன் என்கிற சின்னச்சாமி...

சின்னச்சாமிக்கு சொந்த ஊர் கிடையாது
எங்கிருந்து?
எப்படி?
எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தான்
எனவும் யாருக்கும் தெரியாது
எல்லார் வீட்டிலும் சொன்ன வேலையை செய்வான்
கொடுத்ததை வாங்கிக்கொள்வான்
மீந்ததை சாப்பிடுவான்
பிள்ளையார் கோவிலில் வாசம் செய்வான்
சின்னச்சாமி என்கிற பெயரும்
என் போன்ற சொற்ப நபர்களுக்கே தெரியும்
மற்றவர்களுக்கெல்லாம்
அவன் கட்டையந்தான்
எப்போதும் அவன்தான் எங்களுக்கு
சரக்கு வாங்கி வருவான்
ஒரு கிளாசில் ஊற்றிக்கொடுத்தால்
மறைவாய் சென்று குடிப்பான்
சாப்பிடும் போது கடைசிக்கவள
சோற்றிற்காய் நம்மையே கவனிக்கும்
வளர்ப்பு நாயென
சுற்றி வருவான்
எங்களைத் தவிர வேறு யாருமே
தனிச்சாப்பாடு வாங்கிக் கொடுத்ததில்லை
அதன்பிறகு ஒருநாள்
கிணற்றில் தவறி விழுந்து செத்துப்போனான்
ஊரார் ‘உச்’ கொட்டி வருத்தம் தெரிவிக்க
நற்பணி மன்றம் சார்பாக
ஆற்றோரம் புதைக்கப்பட்டான்
இப்போதும்
சாப்பிட மறுக்கும் பிள்ளைகளுக்கு
கட்டையனிடம் பிடிச்சு கொடுத்துடுவேன்
என பயங்காட்டி சாப்பிடவைக்கின்றனர்
அம்மாக்கள்
அவசரமாய் விழுங்குகின்றன
கட்டையன் என்கிற சின்னச்சாமியை அறியாத
பிள்ளைகள்...

27 செப்., 2011

ஒரு வாழ்வியல் பழமொழியும், அதன் விளக்கமும்...

சமீபத்தில் ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன் சுவாஸ்யமான பேச்சின் நடுவில் அவர் ஒரு பழமொழி சொல்லி விளக்கம் கேட்டார்.

பழமொழி : ”ஒரு ஆண் உட்கார்ந்தால் எழுந்திருக்க கூடாது, பெண் படுத்தால் எழுந்திருக்ககூடாது”

இதனை சொல்லி முடித்ததும் அவர் பெரியவர் என்பதால் இதில் இரட்டை அர்த்தம் ஏதும் இல்லையே என அவரிடம் கேட்டேன். அவர் சிரித்துவிட்டு இல்லை தம்பி இது வாழ்வியலுக்கான அடிப்படை விசயம் எனவே யோசித்துவிட்டு நாளைக்கு வந்து சொல்லுன்னார். அதன்பிறகு எனக்குத் தெரிந்த நெருக்கமான அனைவரிடமும் கேட்டேன், பெரும்பாலனவர்கள் அவர்களுக்கு தெரிந்த கர்பனைகளை சொன்னார்கள். சிலர் பாலியல் விளக்கங்களை சொன்னார்கள்.

மறுநாள் பெரியவரிடமே சென்று விளக்கம் கேட்டேன்.

விளக்கம் : ஒரு ஆண் உட்கார்ந்தால் எழுந்திருக்க கூடாது என்று சொல்வது. சபைகளில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் ஒரு ஆணானவன் அமர்ந்தபின் அந்த இருக்கையை விழா நடத்துபவர்கள் வேறு ஒருவருக்கு விட்டுத்தரும்படி கேட்ககூடாது. அதனால் தன் நிலை அறிந்து அதற்கான  இடத்தில் அமர்வதோடு, சபையின் மரியாதைக்கு உரிய இடத்தில் அமரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,

ஒரு பெண் படுத்தால் எழுந்துகொள்ளக்கூடாது என்பதன் விளக்கமாக ஒரு பெண் வீட்டில் எல்லா வேலைளையும் முடித்துவிட்டு உறங்கப்போய்விட்டால் அவள் வேறு எதற்காகவும் இடையில் எழுந்துகொள்ளக்கூடாது. அதாவது நேரம் தவறி வரும் கனவனுக்காக உணவு தயாரிக்கவோ, அல்லது மற்ற அரைகளில் விளக்கை அணைத்துவிட்டோமா, அல்லது ஸ்டவ் ஒழுங்காக அணைக்கபட்டிருக்கிறதா? அல்லது கதவை ஒழுங்காக பூட்டியிருக்கிறோமா என சந்தேகப்பட்டும் எழுந்திருக்ககூடாது. அப்படி அவள் விடிவதற்கு முன் இடையில் இது போன்ற காரனங்களுக்காக எழுந்துகொள்வாள் எனில் அந்த குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது என்று அர்த்தம் என விளக்கினார்.

மிக ஆழமான இந்தக்கருத்தினை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

26 செப்., 2011

இரண்டு கவிதைகளும், ஒரு என்கவுண்டரும்...

நான்,
இதற்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன் 
அதை வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம் 
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி 
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை 
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம் 
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட 
அந்த சம்பவத்தை,
அல்லது 
என் கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள் 
இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் 
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே 
தொலைபேசியில் பாராட்டும் சிலர் 
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை 
அல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி 
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி 
பின் மாநிலம் முழுதும் பரவி 
மொழிபெயர்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி 
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட 
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும் 
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும் 
முதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து 
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும் 
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும் 
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும் 
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும் 
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும் 
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த 
உலகும், 
என்னை அல்லது அந்தக் கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க 
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும் 
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும் 
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக 
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில் 
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால் 
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக 
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு 
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த 
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள் 
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட 
ஒன்று கூடி, 
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக 
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென 
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி 
ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால் 
மிகுதியாக அரசாங்க சொத்துகளும் 
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும் 
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்காக யார் இறந்திருந்தாலும் 
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு 
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க 
கலவரத்திற்கு காரணமாக என்னைக் கைது செய்த 
அரசாங்கம் 
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து 
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும் 
இனி, 
நான் எழுதவே மாட்டேன் என்றும்
எழுதி வாங்கிக்கொண்டு 
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை 
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் 
எழுதிக்கொடுத்துவிட்டதால் 
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை 
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை 
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு 
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள் 
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும் 
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள் 
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம் 
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால் 
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ 
என் மரணம் நிகழக்கூடும் 
அப்போது மீண்டும் என்ன்னைபற்றி 
அல்லது 
அந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும் 
வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது 
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு 
மறக்கடிக்கப்படுவோம்  
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...

25 செப்., 2011

அபாய வளைவுகள்...

எப்போதும் 
உன் கண்கள் வழியே
உன் மனதுக்குள் நுழைய முயல்கிறேன்
உன் குத்தீட்டிக் கண்கள்
ஒரு பாலியல் குற்றவாளியைப்போல்
என்னை விசாரனை செய்கிறது..

என் பின்னிருக்கையில்

நீ அமர நேரும்போதெல்லாம்
தெளிவாகத்
தள்ளியே அமருகிறாய்
பள்ளம் இருக்கும் பார்த்து போ என்கிறாய்
நுனி விரல்களால் கை குலுக்குகிறாய்
அளவாய் சிரிக்கிறாய்
எல்லோரிடமும் நான் நல்லவன்
என பாராட்டி வைக்கிறாய்..

கேட்டுவிடும் தூரத்தில்தான்

நீ இருக்கிறாய்
கேட்டு மறுத்து விட்டால் கூட பரவாயில்லை
போட்டுக் கொடுத்து மானத்தை வாங்கிவிட்டால்
என்ன ஆவது என
என் ஆறாம் அறிவு எச்சரித்தாலும்
சபிக்கப்பட்ட இந்த நகரத்து 
சாலைகளைப் போல
அபாயகரமாகத்தான் இருக்கிறது
அவள் வளைவுகளும்..

24 செப்., 2011

அப்பாடக்கர் யாரு? ...

உள்ளாட்சி தேர்தலில் முதல் ஆளாக கருணாநிதி தனித்துப் போட்டி என அறிவித்ததும். அப்போதே வெற்றி பெற்றதாக தி.மு.க தொண்டர்கள் சந்தோசப்பட்டனர். அது தேர்தல் வெற்றிக்கான சந்தோசம் இல்லை. காங்கிரஸ்காரர்களை விட்டு விலகிவிட்டோம் என்கிற சந்தோசம். தங்கபாலு, ஈரோட்டு இளங்கோவன் போன்ற வெத்து வேட்டு தலைவர்களுக்கெல்லாம் பயப்பட வைத்துவிட்ட தலைவர் தன் தொண்டர்களுக்கு நிஜமாகவே அளித்த தீபாவளி பரிசு அது. ஆனால் கருணாநிதியை நம்பிக்கொண்டிருந்த திருமாவுக்கு அந்த அறிவிப்பு செம அல்வா. சட்டமன்றத் தேர்தலில் பத்து இடத்தைக் கொடுத்ததில் ஒரு இடம் கூட ஜெயிக்காத வருத்தம் அல்லது ராமதாசுடன் கூடிக்குலாவுவதால் வந்த வெருப்பாக கூட இருக்கலாம். எது எப்படியோ யாருக்கும் காவடி தூக்கவேண்டியதில்லை என்பதில் தி.மு.க தொண்டர்கள் நிஜமான சந்தோசத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அடுத்து ஜெயலலிதா எல்லாத்தொகுதிகளுக்கும் தந்து வேட்பாளர்களை அறிவித்து, அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். கம்யூனிஸ்டுகள் மட்டுமே இன்னமும் அவர்களிடம் தொங்கிக்கொண்டு இருந்தாலும், விஜயகாந்த் மவுனத்தை உடைத்து தனித்து போட்டி என அறிவித்து வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதாலும் கடந்த நூறு நாள் அதிமுக ஆட்சியி சமச்சீர் குளறுபடியைத் தவிர சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா தந்திருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும் முன்னனி வெற்றியை அதிமுக வினர் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பாராவிதமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 இடங்களில் வென்ற தேமுதிக எதிர்கட்சியாக எந்தவித நடவடிகைகளிலும் ஈடுபடவில்லை. ஆளும்கட்சிக்கு ஜால்ரா தட்டுவதில் மட்டுமே குறியாக இருந்ததால் மக்களிடம் இவர்களுக்கான எதிர்பார்ப்பு குறையவே செய்யும். ஆனாலும் சட்டமன்ற தேர்தலைப்போல இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் பதவியாவது கிடைத்தால்தான் தன் இருப்பை தொடர்ந்து தக்கவைக்கவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேரத்தில் முந்தவும் முடியும்.

ராமதாஸ் ஆச்சர்யமாக தனித்து போட்டி என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருக்காதா பின்னே இதுவரை யார் முதுகிலாவது சவாரி செய்தே பழக்கப்பட்ட அவர்கள் இப்போது தங்கள் உண்மையான செல்வாக்கை அல்லது பல்புகளை வாங்கப்போகிறார்கள். வார்டு மெம்பர்களாவது கிடைக்க வாழ்த்துவோம்.

வைகோ தனித்து போட்டிதான் என்று முன்னமே சொல்லியிருக்கிறார். இதிலும் போட்டியிடவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் தனித்துவிடப்பட்டுவிடுவார் என அவ்ருக்கு தெரியும். இருக்கும் கொஞ்ச தொண்டர்களையாவது காப்பாறிக்கொள்ள முயல்கிறார்.

திருமா இன்னமும் மௌனமாக இருக்கிறார். ரொம்பவும் மவுனமா இருந்தா வேட்பாளருக்கான வேட்புமனு தேதி தள்ளிப்போயிடுண்ணே!

காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயரை வெளியிடும் முன்னமே வேட்டியை கிழித்துக்கொள்ளும். அதன் பிறகு அன்னை சோனியா அல்லது தலைமகன் ராகுல் சொன்ன பட்டியல் வெளியிடப்படும். நிஜமான பல்பு இந்தமுறை காங்கிரசுக்குதான்.

ஆகா எல்லா அரசியல் கட்சிகளும் தன் பலத்தை சோதிக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் சொந்த செல்வாக்கால் ஜெயிப்பவர்கள் அதிகம் இருந்தாலும். சென்னையில் இப்போதிய மேயர் மா.சு நல்லவர், பெயரைக்கெடுத்துகொள்ளாமல் எளிமையாய் நிர்வாகம் செய்தவர் என்பதால் இவரை எதிர்த்து போட்டியிடும் துரைசாமிக்கு சரியான போட்டியாளராக இருப்பார். ஆனால் இருவரில் யார் வந்தாலும் சென்னைக்கு நன்மையே. இதுபோல நேரடியான போட்டி என்பது திமுக, அதிமுக வுக்குதான் அதனால் மற்றவர்களெல்லாம் தாங்களும் அப்பாடக்கர்தான் என நிரூபிக்க இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.காரனம் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓவ்வொரு கட்சியும் கூட்டணி பேசும்போது தங்களுக்கான ஒட்டு வங்கியை காட்ட இது உதவும்.

கடந்த சட்டமன்ற தேர்தலைவிடவும் அதிக சுவாரஸ்யங்கள் இந்த தேர்தலில் நமக்கு கிடைக்கப்போகிறது.

23 செப்., 2011

"தி.மு.க" இனி...

சமீபமாக நடந்த தேர்தலில் பலத்த அடி வாங்கிய தி.மு.க வின் பெருந்தலைகள் சிலர் உள்ளே போன நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்திருக்கிறது. காலம் கடந்து தனித்து தேர்தலை சந்திக்கப்போவதாக கலைஞர் சொன்னாலும். உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும்பாலும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கால் ஜெயிக்கும் திறமைதான். ஆனால் மிகப்பெரிய இயக்கமான தி.மு.க வில் தோல்விக்கான பொறுப்பேற்று கலைஞர் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டாலினை வழி நடத்த சொல்லியிருக்கவேண்டும். இப்போதும் பிடிவாதமாக பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பது அவருக்கோ, ராஜாத்தி அம்மாளுக்கோ, அழகிரிக்கோ உவப்பை ஏற்படுத்தலாம் ஆனால் முப்பது வயதிற்குள் இருக்கும் இன்றைய இளையோர் விஜயகாந்த் அணியிலோ, சீமான் பின்னாடியோ, திருமாவளவன் பின்னாடியோ இருக்கிறார்கள் அவர்களை ஈர்ப்பதற்கான முன்னோடிகள் தி.மு.க வில் யாருமே இல்லை. சென்ற தேர்தலில் குஷ்பூவும் வடிவேலுவும் ஸ்டார் பேச்சாலர்களாக களம் இறக்கப்பட்டபோது தன் வாழ்நாளை தி.மு.க வுக்காகவும் கலைஞருக்காகவும் அர்பணித்த தொண்டர்களின் வேதனையை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஆழமான அரசியல் வரலாற்றை அறியாதாவன் தி.மு.க தொண்டனாகவே இருக்க முடியாது. கலைஞருக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கோ அதே அளவு ஞாபகமும் அரசியல் பேசும் திறமையும் கொண்ட அடிமட்ட தி.மு.க தொண்டர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

விருப்பு வெருப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவனாக பார்கப்பட்ட, பூஜிக்கப்பட்ட தலைவராக அவரைத்தான் நாம் முன்னிருத்தினோம். ஆனால் பதவி சுகத்துக்காகவும், குடும்பத்தினரின் ஆசைக்காகவும் ஒட்டுமொத்த இனமும் அவர்முன் நின்றபோது மூன்று மணி நேர உண்ணாவிரத்தோடு ஈழத்தில் அமைதியை நிலைநாட்டியதாக ஊரெங்கும் வண்ண சுவரெட்டிகளில் சிரித்தபடி அறிவித்து. இனத்தின்மேல் மரியாதையும் பாசமும் வைத்திருந்த அத்தனைபேரின் குல எதிரியாக மாறிப்போனார். ஒவ்வொரு தி.மு.க தொண்டனுமே கலைஞரை நெஞ்சில் சுமந்துகொண்டு பிரபாகரனை தங்கள் சொந்த சகோதரராக பார்ப்பவர்கள்தான். ஆனால் பிரபாகரன் தன்னை மதிக்கவில்லை என்கிற ஒரே காரனத்திற்காக ஈழத்தமிழன் எவனையும் மதிக்கவில்லை கலைஞர். ஒரு தி.மு.க தொண்டன் என்னிடம் சொன்னார், முத்துக்குமார் தன்னையே எரித்துக்கொண்டபோது எழுதிய கடிதத்தில் கலைஞரை திட்டாமல் பாராட்டி ஏதாவது எழுதியிருந்தால் கலைஞர் ஏதாவது செய்திருப்பார் என. சாவுல கூட அவரை பாராட்டினால்தான் நடவடிக்கை எடுப்பார் கலைஞர் என அவரின் அடிமட்ட தொண்டன் அவரை அறிந்தே வைத்திருக்கிறான்.

இன்னொரு தொண்டர் அடிக்கடி சொல்வார் சினிமாவில் வாரிசு வரலாம், வியாபாரத்தில் வாரிசு வரலாம், அரசியலில் மட்டும் வந்தால் என்ன என்றார். இப்போதும் கலைஞரின் வாரிசான ஸ்டாலின் கட்சியின் தலைவராக வருவதை யாருமே குறைசொல்லவில்லை,ஆனால் அழகிரி, தயாளு, கனிமொழி, தமிழரசு, தயாநிதி மாறன், அழகிரியின் பெண் இன்னும் உற்றார் உறவினர் என எத்தனை அதிகார மைய்யங்கள் செயல்பட்டன. இதுக்கெல்லாம் மொத்தமாக தன் வாக்கை பயன்படுத்தி நீங்கள் எதிர்கட்சியாக இருப்பதைகூட நாங்கள் விரும்பவில்லை என ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவைத்தபின் அவரின் அரசியல் வாரிசுகளில் ஸ்டாலினை தவிர மற்றவரெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை.  

தலைவர் கட்சியின் உயர்மட்டத்தை எப்படி ஆக்கிரமித்து வைத்திருக்கிறாரோ அதேபோலத்தான் மாவட்ட செயலளர்களும் சாவுற வரைக்கும் தன் பதவியை தக்கவைத்துக்கொண்டதுடன் மட்டுமல்லாது தன் வாரிசுகளையும் களம் இறக்குகின்றனர். புதியவர்களுக்கான வாய்ப்பு அது கலைஞர் குடும்பத்தினராக இருந்தால் மட்டுமே. ஏன் இந்த ஆளு இன்னும் பதவியை விடாப்பிடியா பிடிச்சுட்டு தொங்கறார்ன்னு யாரும் கேக்கமுடியாது கேட்டா எம்.ஜி.ஆர், வைகோ மாதிரி கட்டம் கட்டப்படுவோன்னு பயந்தே யாரும் வாயை தொறக்கிறதே இல்லை. நம்மை மாதிரி ஆளுங்க சொன்னா இந்தியாவிலேயே என் தலைவனுக்கு ஈடு இனை யாருமே இல்லைன்னு கூமுட்டை தொண்டனுங்க கூவுவாங்க. நாம் கலைஞரைப் பற்றி பேசினால் அவர்களின் தலைவர் மாதிரியே ஏன் ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ பற்றி பேசமாட்டேன்னு சொல்றீங்கன்னு எதிர்பாட்டு பாடுவார்கள்.

தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் நாந்தான் மாறாத பற்று வைத்துள்ளேன் என வக்கனையா பேசவும், எழுதவும் செய்ற அதே கலைஞருக்கு சொந்தமான தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு தமிழ் அறிஞர்களுக்கே வெளிச்சம், தேர்தலில் தோற்றுவிட்டோம் என்றபோதே மானாட மயிலாட போட்டு பார்த்துக்கொண்டிருந்தவர்தானே கலைஞர். பாராட்டு கூட்டம் நடத்தியே தன்னைத்தானே மகிழ்வித்துக்கொண்டும் மாமன்னன் ராஜாராஜான் சத்ய விழாவில் பட்டுவேட்டி பட்டு சட்டையுடன் தன்னையே மகாராஜாவாக நினைத்துக்கொண்டு வலம் வருவதில் கவனம் செலுத்திய கலைஞர். எம்மக்கள் அழிந்தபோது பதவிக்காக பேரம் பேசிய கலைஞர். தன் வாழ்நாள் சாதனையாக இன்னோர் மகத்தான விசயத்தையும் செய்து காட்டிவிட்டார் அது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என ஈழப்போருக்கு சப்பைகட்டு கட்டிய ஜெயலலிதாவை. எதிர்கட்சியாக இருந்தபோதும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஜெயலலிதாவை, அடிமட்ட தொண்டன் உட்பட ஈழம் என்றால் என்னவென்றே அறியாத அதன் மேல்மட்ட தலைவர்கள் வரைக்கும் உள்ள அ.தி.மு.க வின் நிரந்தர செயலாளரான ஜெயலலிதாவை பெரும்பான்மை இடத்தை கொடுத்து அமரவைத்தும், தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள அத்தனை தமிழர்களாலும் போற்றப்படும் இடத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டதற்கும் கலைஞரே காரனம்.

இனியும் உங்கள் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்காமல் போனால், கடந்த தேர்தல் முடிந்தபின் ஊருக்குப் போகும்போது ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்த தி.மு.க கரை வேட்டி கட்டியிருந்த ஒரு நபரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றபோது இரட்டை இலைக்கு தம்பி என அதிர்ச்சியை கிளப்பினார். அவர் கரை வேட்டியை நான் மீண்டும் உற்றுப்பார்த்ததும், நான் தி.மு.க காரந்தான் தம்பி, அந்த அம்மாவாச்சும் ஒரு டீக்கடைக்காரரை முதல்வர் ஆக்குனுச்சு, தலைவர் அப்படியா? அதனாலதான் என்றார். இதுதான் இப்போதைய தி.மு.க வின் தொண்டனின் மனநிலை.

எந்த இயக்கம் அடிமட்ட தொண்டனை மதிக்கவில்லையோ அந்த இயக்கம் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது. தன் வாழ்நாளில் கட்சியை மிக கட்டுக்கோப்பாகவும், எத்தனையோ இடர்கள் வந்தபோதும் சலைக்காமல் போராடிய கலைஞர் அவரின் கடைசி காலங்களில் கட்சியை தடுமாற்றத்தில் வைத்திருக்கிறார். இது இளையோருக்கான காலம் ஆகவே  ஓய்வெடுங்கள் கலைஞரே .

22 செப்., 2011

மீந்த இரவுகள்...

இரவுகளை 
தின்று தீர்க்கும்
தீராக் காமமாய் 
நிலப்பெண்ணுக்கு ஆடைபோர்த்தும்
கிருஷ்ணப் பெருமழை..

பசித்தபின்
ருசி தெரியாது 
காசுக்குப் போகலாம் 
வேசையால் வரும் 
வியாதிக்கு பயம்..

சுடலைமாட சுவாமிக்கு 
குளிருது கொதிக்குது 
ஒற்றையாய் நின்று
தவிக்குது தயங்குது..

போதையில் பகிர்ந்ததை
தெளிந்தபின் பிதற்றுவான் 
நண்பன்..

அறிந்தபின் மனமே 
தெளிவது நீதி
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தல..
 
அதே மழை 
அதே கிருஷ்ணன் 
அனுதினமும்
ராதைகள் அற்ற கிருஷ்ணன்..

பாஸ்போர்ட், தேவர் மகன், ஒரு குடிகார தெய்வம்...

நன்றி : The Hindu
பனிரெண்டாம் வகுப்பில் பெயிலாகி ஒருவருடம் வீட்டில் இருந்தபோது எங்க ஊர் குலவழக்கப்படி பாஸ்போர்ட் வாங்கேன் என என் வீட்டிலும் சொல்லவே அதற்கான முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தேன். எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் +2 முடிச்சவுடன் பாஸ்போர்ட் வாங்கிடனும் ஏன்னா? அப்போது  வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்த காலம், அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். பணம் அனுப்பலேன்னாலும் பயபுள்ளைங்க வம்பு வழக்குல சிக்காமயாவது இருப்பானுங்கன்னு அப்படி ஒரு ஏற்பாடு. வம்பு வழக்குல நாங்க சிங்கப்பூர் வரைக்கும் பிரபலமான ஆளுங்க. ஒருவேளை காலேஜ் போற மாதிரி இருந்தா மூணு வருஷம் முடிஞ்சவுடனே சிங்கப்பூர்தான். அரசாங்க வேலை பார்த்த ஆளுங்ககூட வேலையை விட்டுட்டு வெளிநாட்டுக்குப்  போன காலம் அது.

பொதுவா பாஸ்போர்ட் தேவைன்னா மன்னார்குடில இருக்கிற யாராவது ஏஜென்ட்கிட்டதான் கொடுப்பாங்க. ஆனா நாங்கல்லாம் நேரடியா திருச்சி பாஸ்போர்ட் ஆபிசுக்கே போய்த்தான் அப்ளை பண்ணுவோம். காரணம் அப்பல்லாம் பாஸ்போர்ட் கட்டணமாக ரூ.300 தான் இருந்தது. ஆனால் மன்னார்குடி ஏஜெண்டுகள் ரூ.1000 க்கு மேல வாங்கிட்டு இருந்ததானுங்க. மேலும் அவனுங்க மொத்தமா போய் அப்ளை செய்வதால் வரத்தாமதமாகும் என்பதால் நாங்களே நேரடியாக போய்விடுவோம்.படிச்சதுக்கு இதுகூட தெரியாட்டி வீட்டு மக்களே நம்மளே மதிக்குமா?

இந்த பாஸ்போர்ட் அப்ளை செய்ய திருச்சி போறது இருக்கே! அது ஒரு சாகசமான வேலை. காலையில நான்கு மணிக்கு எழுந்து மொத பஸ்ஸ புடிச்சு மன்னார்குடி வந்து அங்கிருந்து தஞ்சாவூர் வந்து கார்த்திக் ஹோட்டல்ல காலை உணவை முடித்துக்கொண்டு திருச்சி பஸ்ல ஏறி மத்திய பஸ் ஸ்டாண்டு வந்து அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டு போற டவுன் பஸ்சுல ஏறி மரக்கடை, பாஸ்போர்ட் ஆபிசுல்லாம் இறங்குங்கன்னு கண்டக்டர் சொன்னா திமுதிமுன்னு பாஸ்போர்ட் ஆபிசுக்கு வரவங்க கூட்டமா இறங்குவோம். உடனே எங்களை அங்கிருக்கும் ப்ரோக்கர்கள் மடக்குவார்கள். எங்களைப்போல விவரமானவர்கள் ஏஜெண்டு வரச்சொன்னார் என நழுவிவிடுவோம் ஆனால் விவரமில்லாத அத்தனை பேரையும் அன்பாகவோ, மிரட்டியோ பேரம்பேசி பணிய வைப்பார்கள்.

இந்த ஏஜெண்டுகள் நம்மை அழைத்துப்போய் இன்னொரு ஆளிடம் ஒப்படைப்பார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய அலுவலகத்தில் நம்மைப்போல ஏராளமான அப்பாவிகள் காத்திருப்பார்கள். அங்குவைத்து ஆபிசர்கள் போல நமது டாக்குமெண்டுகள் பரிசோதிக்கப்படும் . பின்னர்  விண்ணப்பங்களை நிரப்பி பணம் வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்கவைப்பார்கள். ஒருவேளை தேவையான டாக்குமெண்டுகள் இல்லையெனில் வக்கீல் அபிடவிட் தேவைப்படும். அதற்கும் தயாராக வக்கீலின் கையெழுத்தோடு வெற்றுப்பத்திரம் வைத்திருப்பார்கள். அதற்கு தனிக்கட்டணம். இப்படி இவர்கள் அவசரமாக தவறாக நிரப்பிய விவரங்களால் ஏகப்பட்ட பேருக்கு பெயரில் ஆரம்பித்து, பிறந்த தேதி, பெற்றோர் பெயர்கள். ஊர்ப்பெயர் என ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இப்படி குளறுபடி ஆனால் அதனை மாற்றுவதற்கு மீண்டும் பாஸ்போர்ட் ஆபிசுக்கு நடையாய் நடக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆபிசர் விசாரிப்பதால் தேவையற்ற விசாரணைகள் ஒவ்வொருமுறையும் ஆராம்பிக்கும். நிறைய ஆட்கள் இம்மாதிரி நடையாய் நடந்து வெறுத்துப்போய் யாரவாது இன்னொரு ஏஜெண்டிடம் இன்னொரு பாஸ்போர்ட் அப்ளை செய்து அது தெரிந்துபோய் கடைசியில் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனவர்களே ஏராளம் இருக்கிறார்கள்.

இன்றைய தேதிக்கு பாஸ்போர்ட் பெற ஏராளமான எளிய வழிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருந்தாலும். இன்றைக்கும் அத்தனை பாஸ்போர்ட் அலுவலகங்களின் வெளியிலும் ஏஜெண்டுகள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் புதுப்படங்கள் திருச்சி, தஞ்சவூரில்தான் ரிலீஸ் ஆகும்.அதனால், யாருக்காவது பாஸ்போர்ட் அப்ளை செய்யவேண்டும் என்றால் புதிய சினிமா பார்ப்பதும் பயணத்திட்டத்தில் தவறாது இடம்பெறும். இப்படி நாங்கள் சென்றபோது தேவர்மகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. சரி பாஸ்போர்ட் அப்ளை செஞ்சுட்டு அப்படியே படம் பார்த்துட்டு வந்துடலாம் என நானும் நண்பன் ராஜசேகரனும் கிளம்பினோம். திருச்சி மாரீஸ் காம்பளக்ஸில் தேவர்மகன் படம் பார்த்து முடியும்வரைக்கும் எல்லாம் சுமூகமாகத்தான் போனது. படம் முடிந்து மத்திய பேரூந்து வந்தபோது இரவு எட்டு மணியாகி இருந்தது. நண்பன் இங்கேயே சாப்பிட்டுரலாம் என்றான். நானோ இல்லடா பஸ் காசு போக 20 ரூபாதான் இருக்கும் அதனால மன்னார்குடில போயி சாப்பிட்டுக்கலாம் என்றேன். நண்பனோ, ரொம்ப பசிக்குதுடா இங்க பக்கத்துல எங்காவது கையேந்திபவன் இருக்கும், அங்க போய் சாப்பிட்டா கம்மியாதான் இருக்கும் என்றான்.

கொஞ்ச தூரம் நடந்து வந்ததும் டாக்சி ஸ்டாண்ட் பக்கமாக ஒரு கையேந்திபவனில் ஆளுக்கு ரெண்டு இட்லியும், ஒரு தோசையும் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தோம். இட்லி வைத்ததும் கறிக்கொழம்பு ஊத்தவா என்றான் ஒரு ஆள். சரி என்றதும் சால்னா போல ஒன்றை ஊற்றினான். சாப்பிட்டு முடித்ததும் எவ்வளவு என்றால் நாப்பது ரூபாய் என்றான். அதிர்ந்துபோய் எப்படி நாப்பது ரூபாய் வரும்ன்னு கேட்டா கறிக்கொழம்பு ரெண்டு பேருக்கும் இருபது ரூபாய். அப்புறம் இட்லி,தோசை இருபது ரூபாய் என்றான். வெறும் குழம்பை ஊற்றிவிட்டு இருபது ரூபாய் கேட்டு ஏமாற்றுகிறாய் என என் நண்பன் அவனிடம் எகிற, அப்போது பாத்து சாப்பிட வந்தவர்கள் எல்லாம் நகர்ந்துவிட்டனர். அதனால் மேலும் கோபமான கடைக்காரன் எங்களிடம் நீங்கள் சண்டை போட்டதால் கஸ்டமர் எல்லாம் போயிட்டாங்க அதனால பணம் கொடுத்துதான் ஆகனுன்னு சொல்ல, நண்பன் சண்டைக்குப்போக, அப்போது அங்கு நல்ல போதையில் வந்த ஒருவர், எதுக்குப்பா பசங்ககிட்ட சண்டை போடுறீங்க என கடைக்காரனை அதட்டினார். பின்னர் என் நண்பன் விபரத்தை சொன்னபின் எங்களுக்கான காசை அவரே தருவதாக சொல்லி எங்களை போகச்சொன்னார்.

அவர் மட்டும் வரவில்லை எனில் அன்று மிகுந்த பிரச்சினை ஆகியிருக்கும். தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன். 

21 செப்., 2011

சதுரங்க முத்தங்கள்...


சதுரங்கப் பலகையில் 
எதிரெதிர் அமரும்போது 
நீ கவனமாக 
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை 
நான் விரும்பித் தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது 
உன் கண்களுக்கு தப்புவதில்லை 
எனது பிஷப்புகளும் 
ஆமென்.. 

கொடுத்தாலும் வாங்கினாலும் 
முத்தங்களுக்காய் பலியான 
சிப்பாயாக மாறியவன் 
நான்.. 

செக் வைத்த இறுமாப்பில் 
நீ 
வெற்றிச் சிரிப்பை காற்றில் பரவவிட்டபோது 
உறைந்துபோன முத்தங்களால் 
இந்த கவிதை தன்னையே 
இன்னொரு முறை 
எழுதத்துவங்கியது ..

அடுத்த ஆட்டம் 
இன்னும் சிறிது நேரத்தில் 
ஒரு 
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும் 
நீ ராணியாகவும் 
நான் ஜெயிக்க நீ தோற்க 
நீ ஜெயிக்க நான் தோற்க..

20 செப்., 2011

பயோடேட்டா - மோடி ...

பெயர்                 : மோடி (மஸ்தான்)
இயற்பெயர்      : நரேந்திர மோடி 
தலைவர்           : இந்துத்வாவாதிகளின்
துணைத் தலைவர் : பி.ஜே.பி
மேலும் 
துணை தலைவர்கள்
 : காவி கட்டியவர்கள் மட்டும்
வயது                  : பிரதமர் ஆகும் வயது
தொழில்             : இந்து மதத்தை காப்பாற்றுவது
பலம்                    : No. 1 மாநிலம்
பலவீனம்          :  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்  
நீண்ட கால சாதனைகள்  : ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத முதல்வர், 
                                                          நல்ல நிர்வாகி
சமீபத்திய சாதனைகள்    : அத்வானியை பின்னுக்கு தள்ளியது
நீண்ட கால எரிச்சல்          : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா
சமீபத்திய எரிச்சல்             : கட்சிக்குள் குழி பறிப்பவர்கள்
மக்கள்                            : இந்துக்கள் மட்டும்
சொத்து மதிப்பு          : கட்டை பிரம்மச்சாரி என்பதால்
                                             சொத்து சேர்க்கும் அவசியம் இல்லாது போய்விட்டது
நண்பர்கள்                      : சாமியார்கள் மட்டும்
எதிரிகள்                         : முன்பு இஸ்லாமியர்கள்
ஆசை                               : பிரதமர் பதவி
நிராசை                           : முஸ்லீம்கள் மண்ணிக்க மாட்டார்கள்
பாராட்டுக்குரியது    : பூகம்பத்துக்குப் பின் குஜராத்தை கட்டமைத்தது 
பயம்                                 :  R.S.S மற்றும் V.H.P
கோபம்                           : அமெரிக்கா விசா தர மறுத்தது 
காணாமல் போனவை : மனித நேயம்
புதியவை                        : உண்ணாவிரதம், குஜராத்தில் இஸ்லாமியர்
                                               சந்தோசமாக இருக்கிறார்கள் எனக் காட்டுவது

கருத்து                             : பிரதமர் பதவிக்கான ரேசில் முந்தும் இவரை 
                                              பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

டிஸ்கி                               : இவருக்கு போட்டியாளராக ராகுல் முன்னிருத்தப்படும்
                                               ஒரே காரனத்திற்க்காக மட்டுமே இவர் 
                                              ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.

19 செப்., 2011

நாட்டு நடப்பு 19/09/2011...

உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம் எட்டாவது நாளாக தொடர்கிறது இதற்க்கான ஆதரவு பெருகிவரும் வேளையில். அதிசயமாக கேப்டனும் குரல் கொடுத்திருக்கிறார். மின் உற்பத்தி தொடங்கும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பது விழலுக்கு இறைக்கும் நீர்தான் என்றாலும் இனி வரும் காலங்களில் நாம் எவ்வளவு முன் எச்செரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது உதாரணமாய் இருக்கும் என்பதால் அந்தப் பகுதி மக்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இதேபோல் மோடியும் மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார். ஏற்கனவே மூன்று மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்ட கருணாநிதியின் உண்ணாவிரதம்போல் இதுவும் ஒரு அரசியல் நாடகமே. பிரதமர் பதவிக்கான ரேசில் முந்தும் முயர்ச்சி.

உள்ளாட்சி தேர்தல்
இந்த தேர்தலில் அனைத்து கட்சியினரும் தனியாக நிற்பதுதான் அவர்களுக்கான உண்மையான பலத்தை தெரிந்து கொள்ள உதவும் என்றாலும் போயஸ் தோட்ட வாசலுக்கு கம்யூனிஸ்டுகள் நடையாய் நடப்பது தோழர்கள் மேலுள்ள மரியாதையை குறைக்கவே செய்கிறது.
ஒரே சந்தோசம் இந்த தேர்தலில் காங்கிரஸ் துடைத்தொழிக்கப்படும் என்பதுதான்.  

அறிவிப்பு
எங்களது ழ பதிப்பகத்துக்கு முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கூடிய விரைவில் விரிவான பதிவை இடுகிறேன்.

இலவசம்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்தபடி இலவசங்களை துவங்கிவிட்டார். கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதி மக்களுக்கு மின் விசிறிக்குப்பதில் மின் அடுப்பு வழங்குவதாக சொல்லியிருக்கிறார். இலவசங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டும் அரசு அப்படியே தமிழக ஆட்டோக்களுக்கும் ஒரு கடிவாளம் போடவேண்டும். அதிலும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் கட்டணம் எல்லை மீறுகிறது. நான் கால் டாக்சிக்கு மாறி நீண்ட வருடம் ஆகிவிட்டது என்றாலும். சமீபத்தில் சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து திருமுல்லைவாயல் சிப்காட் போக ரூ.250 கேட்டார். சரி என வந்தால் இடத்திற்கு வந்தவுடன் ரூ.1000 கொடு என சண்டைபோட ஆரம்பித்தார். கடைசியில் போலிசுக்கு போகலாம் என நான் சொன்னதும் கெஞ்ச ஆரம்பித்து ஒரு மணிநேரம் காத்திருந்து மேற்கொண்டு ரூ.200 கொடுத்தபின்தான் நகர்ந்தார்.

மகிழ்ச்சி
நண்பர் கேபிள் சங்கர் அவர்களால் துவங்கப்பட்ட யுடான்ஸ் திரட்டிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் முதன் முதல் நட்சத்திர பதிவராக தம்பி பிலாசபி பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு வாழ்த்துக்கள். 

17 செப்., 2011

தேநீர் தயாரிப்பவன்...

நகரத்தின் நெரிசல் சாலைகளில்
காலம் வெகு சீக்கிரமாய்
என்னை இழுத்துச்சென்றுகொண்டிருக்கிறது..


எல்லோரையும் போலவே
எனக்கும் கோடிகளில் வாழ்த்தான் ஆசை
எல்லோர் போலவும்
எதார்த்தம் எதுவென புரிந்த பின்னரும்..

பினத்தின் முன்
தன் அத்தனை முகமூடிகளையும்
கழட்டியபடி ஆடிச்சென்ற ஒருவன்
விதியின் சக்கரத்தை
இன்னொருமுறை சுழற்றுகிறான்..

ஒரு தேநீர் தயாரிப்பவனின்
தினசரிகளைப்போல் கடந்து போகிறது
வாழ்க்கை
சபிக்கமுடியாத பாவனைகளோடு
தயாரிக்கப்படும் தேநீர் குவளைக்குள்
இருக்கும் சொற்பமாய்
எனக்கான தருணங்களை மீட்டெடுக்கிறேன்..

16 செப்., 2011

இது மக்களுக்கான ஆட்சிதானா? ...

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏதாவாது ஒரு காரணம் காட்டி தினமும் அதனை நடக்கவிடாமல் பார்த்துக்கொள்வதிலேயே எல்லாக் கட்சிகளும் குறியாக இருந்தனர். ஸ்பெக்ட்ரம் கிட்டதட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. சோனியா உடல்நிலையை காரணம்காட்டி அமெரிக்காவில் பதுங்கிவிட அவரது பிள்ளை ராகுல் அதிக பல்புகள் வாங்கிக் குவித்தார். அன்னா ஹாசாரே தன் பங்கு காமெடியை முடித்துக் கொண்டார். அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து அதன் சோகத்தை தமிழக மக்கள் இம்மானுவேல் சேகரனாலும், சித்தேரி ரயில் விபத்தாலும் ஊடகங்களால் மாற்றப்பட்டு சீரியல்களில் மூழ்க நினைத்தபோது வந்து சேர்ந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு. கூடவே கேஸ் விலையை ரூ.750 க்கு உயர்த்தும் முடிவை மத்திய அரசாங்கம் அறிவிக்க இருப்பதாக செய்திகளை முன்கூட்டியே கசியவைத்து மக்களை மனதளவில் தயார்ப்படுத்துகிறார்கள். பெட்ரோல் விலை இப்படி தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பது நிச்சயமாக நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கும்.

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் எல்லோருமே லட்சாதிபதிகள் ( அரசு கணக்குப்படி மட்டும்) ஆனால் சாதரண கவுண்சிலரே ஐந்து ஆண்டுகளில் கோடிகளை சம்பாத்தித்து ஸ்கார்ப்பியோவில் பவனி வருகிறார்கள். அடுத்து வருகிறவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்களே தவிர மக்கள் பிரச்சினைகளை பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. சமீபத்திய அன்னா அசாரே ஆதரவாலர்களில் எத்தனை பேர் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவார்கள்?. அவர்களைப் பொருத்தவரை ரேசன் கார்டுக்கு கியூவில் நிற்க கூடாது அவ்வளவுதான். யாராவது ஊழலை ஒழிக்கிறேன் என உண்ணாவிரதம் இருந்தால் ஆகா வந்துவிட்டார் இன்னொரு மகாத்மா என கொடி பிடித்து ஊர்வலம் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற மனநிலை கொண்டவர்கள் அவர்கள். இவர்களில் எத்தனை பேருக்கு எல்லா அநியாங்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து சிறை செல்லும் எளிய மனிதர்களான கம்யூனிஸ்ட்கள் பற்றி தெரியும். சமீபத்திய சமச்சீர் கல்வி விசயத்தில் உச்ச நீதிமன்றம்வரை சென்று வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான் ஆனால் அரசியல் கட்சிகள் தாங்கள்தான் அதற்கு காரனகர்த்தா என கூட்டம் போடுகிறது. சமீபத்தில் பா.ம.க அன்புமணிக்காக அவரின் அடிபொடிகள் ஒரு பேனர் வைத்திருந்தனர் அதில் கொட்டை எழுத்தில் “சமச்சீர் நாயகனே” என அவருக்கு பட்டம் சூட்டியிருந்தார்கள்.

ரூ.70க்கு குறைந்த விலையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை கொடுக்க நினைக்கும் அரசு, வருமானத்துக்காக மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற்றும் அரசு. இலவசம் என்ற பெயரில் அவசியமற்ற பொருட்களின் மேல் கவனம் செலுத்தும் அரசு. மக்களுக்கான உண்மையான அரசாக இருப்பதாக காட்டிக்கொள்ள முயலும் தமிழக அரசு. கல்வி விசயத்தில் ஏகப்பட்ட சொதப்பல்களை அரங்கேற்றி இப்போதுதான் மூன்று பருவத்தேர்வுகளையும் செமஸ்டர் முறைக்கு மாற்றுவோம் என ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறது. எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்த் ரொம்பவே பம்முகிறார். உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் பார்ப்போம் புலியா? பூனையா? என.

அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியும், ராகுலும் களம் இறங்கப்போகிறார்கள் என செய்தி வருகிறது. ராகுலை பொருத்தவரை இதுவரை நான்கு தேர்தல்களை நடத்தி 0% ரிசல்ட் காட்டியிருக்கிறார்.மேலும் காங்கிரஸ் இந்தமுறை செம அடி வாங்கியிருப்பதால் அதற்க்கு இனி சவப்பெட்டிதான்.
மோடியைப் பொருத்தவரை தீவிர இந்துத்துவா என்பதுதான் குஜராத் வண்முறைகளை இஸ்லாமிய மக்கள் ஒருபோதும் மண்ணிக்க மாட்டார்கள் என்பதும் பார்ப்பனர் அல்லாத இவரை பி.ஜே.பி தலமை கடைசி நேரத்தில் கைகழுவலாம். எது எப்படி இருந்தாலும், ராகுலுக்கு ஆயிரம் மடங்கு மேல் மோடி. காரனம் ஊழல் குற்றாச்சாட்டு இல்லாத கட்டை பிரம்மச்சாரி. நல்ல நிர்வாகி. கடைசி நேரத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியும் இருக்கும். ஆனால் அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்.

ராஜீவ் கொலைவழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள் என்பது மற்றவர்களைவிடவும் காங்கிரஸ்காரனுக்குதான் நன்றாகத் தெரியும். ஆனால் தமிழ் நாட்டு காங்கிரஸ்காரனுங்க போடும் ஓவர்சீன்தான் மிகுந்த எரிச்சலை அடைய வைக்கிறது. விசுவாசத்தைக் காட்டுவதில் அ.தி.மு.க அடிமைகளை மிஞ்சிவிட்டனர்.

கடைசியாக அக்பரின் அவைக்கு வந்த அவரது சிற்றரசன் ஒருவன் தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக எந்த சிறிய குற்றங்களும் நடைபெறவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசமாக இருப்பதாக சொல்லவும். அவையில் இருந்த பீர்பால் படைதளபதியை கூப்பிட்டு இந்த சிற்றரசன் ஆளுகைக்கு உள்ளிட்ட சில இடங்களில் நம்ம ஆட்களை விட்டு ரகசியமாக தீ வைக்கவும், கொள்ளையிடவும் சொல்லுங்கள் என்றார். சிற்றரசனும், அக்பரும் பதற்றமாக பீர்பாலைப் பார்க்கவும். பீர்பால் நிதனமாக மன்னா! மக்கள் பிரட்சனைகள் இன்றி சுபிட்சமாகவும், சந்தோசமாகவும் இருந்தால் நமக்கு எதற்க்கு வரி கட்டவேண்டும், நாம்தான் இப்பொது நன்றாக இருக்கிறோமே என நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இப்படி பிரச்சினைகள் இருந்தால்தான் நாம் பாதுகாப்பு கொடுப்போம். ஆஹா மன்னர் இருப்பதால்தான் நமக்கு பாதுகாப்பு என அவர்களும் நமக்குப் பயப்படுவார்கள் என்றார். எனக்கென்னமோ இன்னைக்குவரை அதுதான் நிலமை என தோன்றுகிறது.     

15 செப்., 2011

இமிக்ரேசன் அனுவங்கள் - PAN CARD...

நான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்பவன். பொதுவாகவே எரிச்சலான பயணங்கள் விமானப் பயணங்கள்தான். முதன் முறை போகும்போது மட்டுமே நமக்கு அதிக ஆர்வமாக இருக்கும்.. அதுவும் இப்போதிருக்கும் பட்ஜெட் விமானங்கள் காசு மட்டுமே மிச்சம் பிடிக்க உதவும். மற்றபடி அது நம்ம ஊரில் ஆம்னி பஸ்சுக்கும், கார்பரேசன் பஸ்சுக்கும் உள்ள வித்தியாசம்தான்.. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் விமானப் பயணத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமானது.

பொதுவாகவே ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் தரைவழி இணைப்புகள் சற்று பரபரப்பாகவே இருக்கும்.. கண்காணிப்பு அதிகம் தேவைப்படும் இடம் என்பதால் எல்லோரையும் திருடனைப்போல்தான் விசாரிப்பார்கள்.. காரணம் இரு நாட்டிருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளி. ஏன் நம்ம ஊர் காரைக்காலையே எடுத்துக் கொண்டால் அதன் பார்டர் ஊரான வாஞ்சியூரில் நம்ம ஆளுங்க சரக்கடிக்க போவதில்லையா அது மாதிரிதான்.

அமெரிக்காவில் மெக்சிகோ பார்டர், ஆப்பிரிக்க நாடுகளின் பார்டர், சிங்கப்பூர் - மலேசியா மற்றும் இந்தோனேசியா பார்டர், மலேசியா- தாய்லாந்து பார்டர், இந்திய- பக்கத்து நாடுகளின் பார்டர் போன்றவை பிரிசித்தி பெற்றவை.

நான் சிங்கப்பூரில் இருந்தால் அடிக்கடி மலேசியாவின் ஜோஹூர் பாருவுக்கு செல்வேன் அங்கு எல்லாமே சிங்கப்பூரின் விலைகளைவிட பாதி விலையில் கிடைக்கும். என் நண்பர் இரு நாட்களுக்கு ஒருமுறை காய்கறி உட்பட அங்கு சென்றுதான் வாங்குவார். அவர் வசிப்பது சிங்கப்பூர் பார்டர் வூட்லாண்ட்ஸ் ஏரியா அதனால் தேக்கா என்று அழைக்கப்படும் குட்டி இந்தியாவுக்கு சென்று வருவதை விட இது மிகப் பக்கம்.

நம் ஊர்க் காரர்கள் சிங்கப்பூரில் விசிட் விசாவிலேயே சென்று வியாபாரம் பார்ப்பார்கள், முன்பெல்லாம் இப்போது மாதிரி ஒரு மாத தங்கும் விசா தரமாட்டார்கள். குத்து மதிப்பாக குடுப்பார்கள், அதிகபட்சமாக பதினான்கு நாட்கள்தான் கொடுப்பார்கள்.  ஆனால் நம்ம ஆட்கள் செய்த நிறைய தவறுகளால் ஒரு நாள் தங்கும் விசா கூட கொடுப்பார்கள். 

இதுக்கெல்லாம் நம்ம ஆட்கள் சளைத்தவர்களா என்ன? அவர்கள் மலேசியா சென்று மீண்டும்  சிங்கப்பூர் வந்து நிறைய டகால்டி வேலைகள் பார்ப்பார்கள். ஆனால் மலேசியாவில் எல்லோருக்கும் ஒரு மாத தங்கும் விசாதான். அங்கு உள்ள குடி நுழைவு அதிகாரிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவார்கள், அவர்களுக்கு நம்ம  ஆட்கள் நிறைய கொடுத்துப் பழக்கி விட்டனர், அதனால் அவர்களும் யாராக இருந்தாலும் கோப்பி மணி ( காபி குடிக்க காசு ) கேட்பார்கள், சிங்கப்பூர் காரர்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆட்களிடம் கேட்க மாட்டார்கள். மட்றபடி பாகுபாடு பார்க்காது ஐரோப்பியர், அமெரிக்கர் என அனைவரிடமும் வாங்குவார்கள்.

நான் பெரும்பாலும் இரண்டு நாளைக்கு ஒரு முறை மலேசியாவுக்கு செல்வேன், என் பாஸ்போர்ட்டை பார்ப்பவர்கள் என்னிடம் எதிர்பார்க்க  மாட்டார்கள். காரணம் விசா ஸ்டாம்பிங் அடிக்க இடமே இருக்காது. அதனால் அடிக்கடி வருபவன் எதுவும் தேறாது என வெறுப்பாக விட்டுவிடுவார்கள். இப்படியாக ஒரு நாள் நான் போகும்போது ஒரு புது ஆபிசர் என்னை கடுமையாக விசாரித்தார். என்னைப் பொறுத்தவரை அவர்களை காமெடி பீசாகத்தான் பார்ப்பேன் என்பதால், சிரித்துக்  கொண்டே ஏடாகூடமாக பதில் சொல்வேன்.

கடைசியில் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று கேட்டார். நான் வெறும் ஐம்பது மலேசியா ரிங்கிட்டுகள் மட்டுமே இருக்கு, மேற்க்கொண்டு எதுவும் தேவை என்றால் என கடன் அட்டைகளை பயன் படுத்திக் கொள்வேன் என்றேன். அவரோஉனக்கு நான் விசா தர முடியாது நீ பெரிய ஆபிசரை பாரு என்று சொல்லி அங்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்றதும் அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உன் கடன் அட்டைகளைக் காட்டு என்றார். என கடன் அட்டைகளுடன் பான் கார்டும் இருந்தது, முதலில் அதனைப் பார்த்த ஆபிசர் உடனே எழுந்து எனக்கு கை கொடுத்து விட்டு சாரி சார், நீங்க இந்திய அரசாங்கத்தில் வேலை செய்பவர் என முன்னமே சொல்லியிருக்கலாமே என வருத்தப்பட்டு உடனடியாக அவரே விசா அடித்து அனுப்பி வைத்தார். எனக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும் வெளியில் வந்து என் பான் கார்டை மீண்டும் பார்த்தபோது நம் இந்திய அரசை நினைத்து சிரிச்சு மாளலை.

நீங்களும் சிரிக்கனுன்னா ஒரு முறை உங்க பான் கார்டை பாருங்க... அதில GOVERMENT OF INDIA, INCOMETAX DEPARTMENT எனப் போட்டிருக்கும்.

14 செப்., 2011

கணினி விற்பனைக்கு...

INTEL G31 M/B, CORE2DUO 2.6GHZ,
2GB RAM,
DVD R/W
250GB HDD
17" LG or DELL LCD
Keyboard and OPtical Mouse
-----Cash and carry RS.13500
Door Delivery anyware in Tamil nadu Rs.500 Extra

We have 30 Nos..

Contact : 80988 58248

13 செப்., 2011

நாய்பிழைப்பு...

தெரு நாய்களுக்கு லைசன்ஸ் இல்லை  
முதலாளிகளும் இல்லை 
கிடைத்தவற்றை சாப்பிடும் 
கொடுப்போருக்கு வாலாட்டும் 
தான் வாழும் தெருவை 
தன் உலகமாக கருதும்
பக்கத்துத் தெரு நாய்கள் நுழைந்தால் 
பஞ்சாயத்துகள் நடக்கும் 
சமயங்களில் சண்டைகளில் முடியும்..

கார்த்திகை மாதத்தில் 

எல்லோரும் முகம் சுளிக்க அல்லது 
ரகசியமாய் ரசிக்கும்படி 
தெருவிலேயே கூடும் 
பின் 
குட்டிகள் நிறைய போடும் 
வாகனங்களில் அடிபட்டு  செத்ததுபோக 
சில ஊனங்களும் உண்டு..

நள்ளிரவுக்குப்பின் யாரும் வந்தால் 
ஊரையே கிளப்பும் 
அடிக்கடி சிலரை கடித்தும் விடுவதால் 
நாளிதழில் செய்திகளாய் வரும்..

மறுநாள் மட்டும் வரும்
 
கார்ப்பரேசன் ஆட்கள் 
கிடைத்தை பிடித்துப்போவர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து பின் 
தெருவில் விடுவதாய் சொன்னாலும் 
போனவை திரும்பியதில்லை..

நன்றியின் இலக்கணம்
வளர்ப்பு நாய்கள் மட்டுமே.
தெரு நாய்கள்
எல்லோருக்கும் எப்போதும் சனியன்களே..