நான்,
இதற்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன்
அதை வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம்
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம்
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட
அந்த சம்பவத்தை,
அல்லது
என் கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள்
இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள்
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே
தொலைபேசியில் பாராட்டும் சிலர்
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை
அல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி
பின் மாநிலம் முழுதும் பரவி
மொழிபெயர்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும்
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும்
முதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும்
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும்
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும்
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும்
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும்
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த
உலகும்,
என்னை அல்லது அந்தக் கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும்
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும்
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில்
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால்
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள்
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட
ஒன்று கூடி,
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி
ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால்
மிகுதியாக அரசாங்க சொத்துகளும்
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும்
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்காக யார் இறந்திருந்தாலும்
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க
கலவரத்திற்கு காரணமாக என்னைக் கைது செய்த
அரசாங்கம்
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும்
இனி,
நான் எழுதவே மாட்டேன் என்றும்
எழுதி வாங்கிக்கொண்டு
எழுதி வாங்கிக்கொண்டு
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல்
எழுதிக்கொடுத்துவிட்டதால்
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள்
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும்
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள்
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம்
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால்
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ
என் மரணம் நிகழக்கூடும்
அப்போது மீண்டும் என்ன்னைபற்றி
அல்லது
அந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும்
வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு
மறக்கடிக்கப்படுவோம்
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...
9 கருத்துகள்:
உலகம் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்...
வீரியம் மிகுந்த கவிதைகள் காலத்தால் வீழ்த்தபடுவதில்லை...
அந்த இரண்டு கவிதைகள் என்னவென்று சொல்லமுடியுமா..?
கடைசி வரை அந்த இரண்டு கவிதை எது என்றே சொல்லவில்லையே
இரண்டு கவிதைகளை ரக்சியமாய் வைத்து சொல்லியிருக்கும் இந்தக் கவிதை ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது.
அருமை.
நல்ல வரிகள்...நல்ல சிந்தனை...
என்னென்னவோ யோசிக்க வைக்கிறது இந்த கவிதை.எதனால் மறக்கப்போகிறேனோ?
அண்ணே இன்னும் டீ வரலை...
அசத்தல்!
நல்ல வரிகள்.....
அந்த இரண்டு கவிதைகள சொல்லலாம்ல
நல்ல கவிதை. நன்றி.
-பாலாஜி-பாரி
கருத்துரையிடுக