29 ஏப்., 2013

அப்பா!...

KR.பன்னீர்செல்வம்
கே.ஆர்.பி என்று எங்கள் ஊர் பெரிசுகளால் அழைக்கப்படுகிற கே.ஆர்.பன்னீர் செல்வத்தேவர் அவர்கள் நேற்று காலை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் ஒரு முக்கிய நரம்பின் பாதிப்பால் தன் கடைசி மூச்சை நெருங்குகிறார் என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இன்று மாலை அறிவித்து விட்டார்கள்.

கிட்டதட்ட 90 வயதுக்குமேல் இருக்கும் அவர் தன் சிறிய வயதிலேயே  தகப்பனாரை இழந்து மிகுந்த போராட்டத்தில் தன் இளைய வாழ்வை கடந்தவர். மிகுந்த செல்வ செழிப்பு இருந்தாலும், அக்கா, தம்பி, தாயாருடன் ”கடுமையான விவசாயியாக திகழ்ந்தார்” என பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரின் மிகப்பெரிய செல்வாக்குடைய எனது அம்மாவின் அப்பாவான சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் அவர்கள் தானே முன்வந்து தனது இரண்டாவது மகளான எனது அம்மா சந்தானலட்சுமியை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்த சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் பற்றி வாட்டாகுடி இரணியன் சரித்திரத்திலும், நமது கலைஞரின் “நெஞ்சுக்கு நீதியிலும்” சில செய்திகள் இருக்கிறது.

இளைமையிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட எனது தந்தையார் இன்றுவரை அதே இயக்கத்தில் இருக்கிறார். திருமதி. இந்திராகாந்தி அவர்களின் போது மட்டுமே அவர் அழுது நான் பார்த்திருக்கிறேன். அவர் அம்மா இறந்த அன்று கூட அவர் அழவில்லை. என் வீட்டில் ஒரு பக்கம் ராஜீவ்காந்தி படமும் இன்னொரு பக்கம் பிரபாகரன் படமும் இருக்கும். என் வீட்டிற்கு அப்பகுதி காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி வருவார்கள். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு வரும் காங்கிரஸ்காரர்கள் பிரபாகரன் படத்தை அகற்ற சொன்னபோது அது சின்னப்பையனுக்கு பிடித்த விசயம் என மறுத்துவிட்டார்.

ஒருமுறை எனக்கு பணம் கொடுக்கனுன்னு ஒருத்தனை ஆள் வைச்சு தூக்கிட்டு வந்திட்டோம். அப்ப அவன் எனது தந்தையாருக்கு போன் செய்ய அவரோ என்னை “காசு தரலேன்னா தூக்கிட்டு வருவியா?. ”இது தப்பான விசயம், மொதல்ல அவன விடுன்னு!” சொன்னார்.

அதன்பிறகு ஒருநாள் ”தம்பி கடன் கொடுப்பதாக இருந்தால், திருப்பி தரலேன்னா கூட பரவாயில்லை அப்படின்னா மட்டும் கொடு”  அதேபோல “கடன் வாங்குவதாக இருந்தால், திருப்பிக்கொடுக்கும்போது வாங்கும்போது இருக்கும் அதே மனநிலையில் இருக்க வேண்டும் “ என மகாபாரதக்கதையை உதாரணம் காட்டி அறிவுரை சொன்னார்.

2002 ஆம் ஆண்டு எனது தயாருக்கும், எனது மனைவிக்குமான கருத்து வேறுபாட்டில் நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது அவர் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கவில்லை. மேலும் நான் சம்பாதித்த பணத்தை தன் மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்தார். நிலத்தின் மீதான வருமானம் உள்ளிட்ட எதுவும், எப்போதும் எனக்கு தரவில்லை. அந்த வருத்தம் எப்போதும் அவர்மீது எனக்கிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் நண்பர் ஒருவர் என்னிடம் அப்பா அது பற்றி பேசியதாக சொன்னார். நான் எப்படியும் சம்பாதித்து பெரிய ஆள் ஆவேன் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும். அதனால்தான் மற்ற பிள்ளைகள் மேல் காட்டிய அக்கறைய என்னிடம் காட்டவில்லை என்று சொன்னதாக சொன்னார். 

எனது மூத்த மகன் ஒரு வயதாக இருக்கும்போது ஒருமுறை ஊருக்கு அழைத்து சென்று காட்டினேன். இரண்டாவது மகன் பிறந்து நாலு வயது முடிந்துவிட்டது. இன்றுவரைக்கும் அவனை அவர் பார்க்காததுதான் அவரின் மிகப்பெரிய வருத்தம். கண் பார்வை முழுதும் போன நிலையில் கடந்த மாதம் என் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு ஊருக்கு போனபோது பத்தாண்டுகள் கழித்து வீட்டிற்கு போனேன். எனக்கு மட்டும் அவர் எதுவுமே செய்யவில்லை என வருத்தப்பட்டார். ”தான் கூடிய விரைவில் இறந்துவிடுவேன். அம்மாவை பாத்துக்க” என்றார். ”மே மாதம் லீவில் பசங்களை அழைத்து வந்து காட்டுகிறேன்” என்றேன்.  

இன்றைக்கு பிள்ளைகளை ஊருக்கு அழைத்துப்போகிறேன். ஊருக்குப்போகிறவரை அவர் உயிருடன் இருப்பாரா? எனத்தெரியாது. ஆனாலும் கிரமத்தின் அத்தனை பேரின் மதிப்புக்குரியவராக, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவராக, இன்றுவரை கிராமத்தின் அனைத்துக்கட்சி விவசாய சங்கத்தலைவராக, நல்ல பஞ்சாயத்தாராக அவர் தக்கவைத்திருக்கும் நற்பெயரை தனது பேரப்பிள்ளைகளுக்கு அவர் விட்டுசெல்கிறார்.

25 ஏப்., 2013

சகவாசம்...

Photo : KRP Senthil
சகவாசம் என்றால் என்ன என்பது மாதிரியான ஆராய்ச்சிகளை நிறையபேர் நிறைய மாதிரி செய்திருக்கிறார்கள். அத்தனையும் அவர்களின் சொந்த அனுபவத்தில் கிடைத்த பேரதிர்ச்சிகளாக இருப்பதற்கான காரனம் அவர்கள் உதிர்க்கும் தத்துவ முத்துக்கள் அ வாந்திகள் மூலம்,  அதன் வரலாறு அறியப்படுகிறோம். இப்படித்தான் சின்ன வயசுல...ன்னு ஆரம்பித்து ரம்பமாக நம்மை கூறு போடும் ஜந்துக்கள் அவை அ அவர்கள். ஆனாலும் பாலியல் கதைகளைக்காட்டிலும் சில கதைகள் ஒரு படி கீழிறங்கி சுவராஸ்யமாக அமைந்துவிடுகின்றன. அடுத்தவன் அவஸ்த்தைப்பட்டால் அதைவிட சுவாரஸ்யம் வேறெங்கும் கிட்டாது.
இப்படித்தான் நண்பன் ஒருவன் தனது அடுத்த படத்துக்கான கதையை என்னிடம் சொல்ல ஆரம்பித்தான். கவனிக்க அவன் சொன்ன மாதிரியே சொன்னால் நீங்கள் அனேகமாக இந்தப்பத்தியில் இருந்து விலகிவிட நேரிடும் என்கிற அபாயம் இருக்கிறது. எனவே சுருக்கமாக:
கதை நாயகன்: ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி.
கதை நாயகி: ஹன்சிகா மோத்வானி மாதிரி ஒரு பேரழகி (சைசிலும்).
கதை: நாயகிக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும்போதே குடும்ப வறுமை காரனமாக நாயகனுக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. ஆனாலும் நாயகன் செய்யும் தொழில் பிடிக்காததால் இருவரும் இணை சேராமல் இருக்கிறார்கள்...  அலோ எங்க ஓடுறீங்க. அதுக்குள்ளயும் முழுக்கதையும் புரிஞ்சிடுச்சா என்ன?

கிளைமாக்ஸ் : இப்படி ஒரு பெயரில் காண்டம் விற்பது கூட தெரியாத எதிர்கால சினிமாவை தீர்மானிக்கப்போகிற டைரக்டராக அவன் எப்படி வரப்போகிறான் என்கிற சந்தேகம் எனக்கு இருந்தாலும். முடிவு அவன், நான், நீங்கள் மற்றும் கோடானு கோடி தமிழ் ரசிகர்கள் தெரிந்து வைத்திருப்பதுதான்.

” நாயகனை, நாயகி ஏற்றுக்கொண்டு விடுவாள்” ஆனால் கதைப்படி என்பதையும் தாண்டி ஹன்ஸிகா மாதிரி ஒரு அழகி சாக்கடை எல்லாம் எப்படி இனி அள்ளப்போகிறாள்” என்கிற எனது கவலையை அன்றைய தினம் கதை சொன்ன எதிர்கால டைரக்டருடன் டாஸ்மாக் சரக்கு அடித்து தீர்த்துக்கொண்டேன்.
பிரபல திரை விமர்சகரிடம் இந்தக்கதையை சொன்னபோது ரொம்ப அசிங்கமா இருக்கிற உதவி இயக்குநர்கள் எல்லோரிடமும் இப்படி ஒரு கதை இருக்கும் என சொன்னார். ”ஏங்க அழகுன்னா அது செவப்பா இருக்கிறதா?” என ரொம்ப அப்பாவியாக கேட்டேன்.

“ஃபேர் அண்டு லவ்லி பத்தி நீ என்ன நெனக்கிரே?”ன்னு கேட்டார். அது ஏன் எல்லாரும் நாம ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம, அவங்க நம்மகிட்ட ஒரு கேள்வி கேக்குராங்க??

ரொம்ப போரடிக்கிறேன்ல,
சகாக்களை நாம் தண்ணியடிக்கும்போது விரிவாக அறியலாம்:

முதல்வகை: முதல் கட்டிங்கில் ரொம்ப தெனாவெட்டாக சப்ளையரை கூப்பிடும் அத்தனை பிதாமகன்களும் மூன்றாவது உள்ளிறங்கி ரசவாதம் ஆனபின் சப்ளையரை அண்ணா, மாப்ள, தலைவா ரேஞ்சுக்கு உயர்த்தி கடைசியில் நம் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து வள்ளல் ஆகிறவர்கள்.
அடுத்த வகை:ஆங்கிலத்தை எல்லா மொழிகளுடனும் மிக்சியில் அரைப்பார்கள். இந்த பயலுகளுக்கு ஆங்கிலம் நல்லாத்தெரிந்த ஒரு பிகரை உஷார் பன்னமுடியாத ஆதங்கம். ஆனா பாருங்க சப்ளையருங்களுக்கு மட்டும் இவனுங்க மொழி அத்துப்படி.
மூனாவதா ஒருத்தன் இருக்கான் பாருங்க அவந்தான் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. பிளான் பன்னியே குடிக்கிறவனுங்க. தனக்கான பிராண்டில் ஆரம்பித்து, மிக்சிங், சைட் டிஷ் கடைசியாக ஒரு ஃபுல் பிரியாணி என தன் தேவையை சரியாக தெரிந்து வைத்திருக்கும் ஆளு. சாப்பாடு முடிஞ்ச ஒடனே அவன் மொபைலுக்கு அவென் பொண்டாட்டியிடமிருந்து(என்னா ஒரு டைமிங்கு) போன் வரும்.  பயளும் ரொம்ப நல்லவனா மாறி எல்லாருக்கும் வணக்கம் வச்சிட்டு ஆட்டோக்கு பணம் வாங்கிட்டு போயிடும். அதுலயும் நாலு கிலோ மீட்டர்ல இருக்கிற அவென் வீட்டுக்கு போக எல்லா ஆட்டோக்காரரும் 200 ரூவா வாங்குவாங்கன்னு இவென் சொல்றத போதையில இருக்கிற மத்த பயளுங்க எப்படி நம்புறானுவன்னு இன்னி வரைக்கும் புரியல.

என்னிய மாதிரி ஆளுங்களுக்கு பெரச்சனை இல்ல. எவ்ளோ போட்டாலும் என் பைக் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திடும்.
ஆனா பாருங்க இந்த டாஸ்மாக் சரக்கு அவ்ளோவும் டூப்ளிகேட்தான் மறுநா முதுகு ஏன் வலிக்குதுன்னு தெரியல. தல சாருவும் இதே கம்ப்ளெயிண்ட் பன்றாரு. அதனால இப்பல்லாம் தமிழ்நாட்டு சரக்கு அடிக்கிறதே இல்ல. எவனாவது காசு கொடுத்து ஸ்லோ பாய்ஷன் வாங்குவானா?.
இதனால மான்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி, தமிழக முதல்வர், அம்மா அவர்கள் என்போன்ற என்னற்ற பயபுள்ளைகளை திருந்த வாய்ப்பளித்த காரனத்தால் “அம்மா ஆட்சியே நல்லாட்சி” என அப்துல்லா, அபிஅப்பா, சவும்யன், லக்கி, ப்ரகாஷ் போன்ற உ.பி க்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இப்படி சகவாசம் எண்ணிலடங்கா நன்மை, தீமைகளை கலந்துகட்டி நம்மை செம்மைபடுத்தவே செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது!!

எங்கூர்ல எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. ரொம்ப வயசானவங்க, கெட்ட வார்த்தைகளை கவிதையா பேசுவாங்க, அதேமாதிரி கோவம் வந்தா கடுமையான சாபமும். இப்பிடியாப்பட்ட அத்தைக்கு பரம சாதுவான ஒரு புருஷன்  எங்க மாமா. அவரும் சின்னப்பசங்க மாதிரி நாங்க சொன்ன அவ்வளவு வேலையும் செய்வாரு, ராவானா வயக்காட்டுல  நாங்க இளவட்டங்க தண்ணியடிப்போம், பகல்ல நரிக்குறவனிடம் காசு கொடுத்தால் அன்றைய தினம் கிடைக்கும் பறப்பன, நடப்பன, ஊர்வன இப்படி ஏதாவது ஒன்னு கொண்டுவந்து தருவான். அதுதான் அன்றைய ராத்திரி சைடு மற்றும் மெயின் டிஷ்.  அப்புறம் ரொம்ப நாளைக்கு நரிக்குறவன் எங்கூர் பக்கம் வரல. ஒரு நாள் எங்க கூட்டாளி நல்ல சேவலா பாத்து ஒன்ன ஆட்டைய போட்டு வந்துட்டான். மாமாதான் வெவரனையா சமைச்சு கொடுத்தாரு. சட்டிய கழுவவே தேவையில்லாத அளவுக்கு மிச்சம் சொச்சத்தையும் அவரே முடிச்சாரு. ஆனா பாருங்க அடுத்த நாள் ”கீழால போயிட்டே இருக்குடா” ன்னு வயக்காட்டுலயே படுத்துட்டாரு.

அப்ப கோழிய ஆட்டைய போட்டு வந்த சேக்காளி விழுந்து, பொரண்டு சிரிச்சான்.

“ஏண்டான்னு” பொரடில ஒன்னு செல்லத்தட்டா மாமா தட்டி கேட்டாரு?

”அதில்ல மாமா, அத்தெ விட்ட சாபம் ஒனக்கு மட்டும் பலிச்சிருச்சின்னு” மறுபடியும் விழுந்து சிரிச்சான்.

அப்பத்தான் தெரிஞ்சது பய மாமா வீட்டு கோழியத்தான் ஆட்டைய போட்டிருக்கான்னு!?

ஏன்னா அத்தை வையுற மொத வார்த்தையே “ பேதில போவான்னு!” தான்.

”இதுக்குத்தான் சின்னப்பசங்க கூட சகவாசம் வச்சிக்ககூடாதுடான்னு!” சொல்லி தலையில அடிச்சிகிட்டாரு மாமா

22 ஏப்., 2013

பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்...

படம் : விஜயகுமார்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருகாலத்தில் விளங்கிய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) காவிரியில் கர்னாடாக கைவைத்த பின் முப்போகம் விளைந்த நிலங்கள் இருபோகமாக மாறி பின் ஒருபோகம் என்றாகி சென்ற வருடத்தில் வறட்சியில் ஒருபோகமும் வீணாகிப்போனது. பெரும்பாலான ஆற்றுப்பாசன நிலங்களுக்கு இதுதான் நிலமை என்றாலும் பணம் படைத்தவர்கள் பெரும் பொருள் செலவில் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை பல இடங்களில் 800 அடி வரைக்கும் நீர்மூழ்கி மோட்டார்களைக் கொண்டு உறிஞ்சிவிட்டனர். இலவச மின்சாரம் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் மாற்றி மாற்றி தள்ளுபடி செய்த கடன்களால் பணக்காரர்களே அதிகம் பயனடைந்தனர். இப்போது இலவச மின்சாரம் தடைபட்டதால் நிறைய நிலச்சுவாந்தார்கள் தென்னை விவசாயத்துக்கு மாறினர். இப்படியாக நமது பாரம்பரிய விவசாயத்தை நாமே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருந்தபோது நம்மாழ்வார் எனும் கடவுள் தோன்றி நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அத்தனை விவசாயிகளுக்கும் ஆப்படிக்கும் வேலையை துவங்கியிருக்கிறது.

மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளடங்கிய திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் விவசாய நிலங்களை மீத்தேன் படுகைகள் என அறிவித்து அவற்றை எடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ஒரிஸ்ஸா, நாகாலாந்து பகுதிகளில் இயற்கை வளத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்த மத்திய அரசு இங்கும் The Great Eastern Energy Corporation Ltd எனும் தனியார் நிறுவனத்துக்குத்தான் உரிமம் வழங்கியிருக்கிறது.

மீத்தேன் வாயு எடுப்பதால் விளைநிலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தஞ்சை திரு.விஜயகுமார் தனது முகநூல் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். அது :

சோறு வேணுமா அல்ல கரி வேணுமா ?
***********************************
நிலக்கரிப் படுகை மீத்தேன் (நி.ப.மீ) என்றால் என்ன? நிலத்தடியில் நிலக்கரி இருக்குமானால், அந்தக் கரிப்பாறைகளில் உள்ள நுண்துளைகள் வழியே, கரிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும்மீத்தேன் வாயு ஊடுறுவி வெளிவரும். இது நிலக்கரிப் படுகை மீத்தேன்
ஆகும். (Coal Bed Methane) இங்கே நிலக்கரியை வெட்டி எடுப்பதுவேலையல்ல. கரிப்பாறை நுண்துளைகள் வழியே மீத்தேன் வளியை
உரிஞ்சி எடுப்பதே வேலை.

நி.ப.மீ எப்படி எடுக்கப் படும்?
****************************
ஆழ்துளைக் கிணறுகள் வேட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள். அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.

அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.

இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உரிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உரிஞ்சி எடுப்பார்கள்.

இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.

நி.ப.மீயால் ஏற்படக் கூடிய கெடுதிகள் என்ன?
****************************************
விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்.
* நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்.
* மேலும் நன்னீர் நிலத்தடியில் வறழ வறழ, கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்.
* இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்.
* துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப் பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச் சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்.
* காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில் மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப் பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் அது மீத்தேன் கிணறுகள் பெருகும்.
* தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும். இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்.
* மீத்தேனுக்குப் பின்னர் நிலக்கரியில் கைவைப்பார்கள். பெட்ரோலும் அங்கிருந்து வரக் கூடும்.
* வேளாண்மையை கைவிட்ட மக்கள் ஆரம்பத்தில் நிலங்களை விற்றுக் கிடைத்த காசில் சிறிது பகட்டாக இருந்தாலும் ஓரிரு தலைமுறைகளில் கரிக்களஞ்சியத்தின் கூலித் தொழிலாளிகளாய், பாலாவின் பரதேசி திரைப்படத்தில் வரும் பரதேசிகளாக ஆகிவிடுவர்.
* பசுமையான செழிப்பான மிக அகண்ட வேளாண்மைப் பகுதியில் வெட்டப்பட்ட சுரங்கங்கள், ஆழ்கிணறுகள் காலப் போக்கில் வற்றிவிட அவற்றைக் கைவிட்டு நிறுவன்ங்கள் வேறு தொழிலுக்குப் போய்விடும். பின்னர் “Abandoned Mines and deep wells” என்ற பெயரில் பயனற்று மண்மேடாகப் போகும். பல ஆயிரம் ஆண்டுகள் பச்சையாக இருந்த நிலங்கள் அரை அல்லது ஒரு நூற்றாண்டில் பாலையாக ஆகிப் போகும்.

* நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.
நி.ப.மீ திட்டத்தை ஏற்கக் கூடாததற்குக் காரணங்கள் யாவை!
*****************************************************
* வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம்.
* அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.

*கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.

*தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?
 
இத்தகைய தகவலை மக்களுக்கு தெரியப்படுத்திய சமுக சிந்தனையாளர் நாக.இளங்கோவன் அவர்களை வாழ்த்த ஒவ்வொரு தமிழனும் கடமை பட்டிருக்கவேண்டும் .

கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

உங்களுக்கு சோறு வேணுமா கரி வேணுமா முடிவு செய்து கொள்ளுங்கள் ....
இப்படிக்கு,
Vijay Kumar

தொடர்புடைய சுட்டிகள்:
 
  
Secrecy over coal based methane project fuels row

17 ஏப்., 2013

தீராக்காதல்...

அதே நிலா
அதே குளம்
அதே முன்னிரவு 
நீ அமர்ந்திருந்த
அதே கல்..

எறியும்
ஒவ்வொரு கல்லும்
வட்ட வட்டமாக 
நீரை நகர்த்த முயல்கிறது
குளத்தில்,
நீ விலக்கிய
நம் காதலைப்போல்..

என்னைப்போலவே 
ஒரு 
கரும்பச்சை தவளையும் 
வெகு நேரம்
பாடிக்கொண்டிருக்கிறது
தன் துயரத்தை,
பாம்புக்கு 
இரையாகியிருக்கலாம்
அதன் துணை..

கடைசி சொட்டு
மதுவும் தீர்ந்தபின்
குளத்தில் தள்ளாடும்
நிலாவென
மீதமிருக்கும் என் வாழ்வு
தேடியலைகிறது
தன்
கடைசி விடியலை..

15 ஏப்., 2013

பிசாசுகள் உலவும் நகரம்..

Photo : KRP Senthil
கிராமக்கதைகளில்
நள்ளிரவுக்கு மேல் வரும்
பிசாசுகள் 
நகரங்களில்
பகலெங்கும் உலவுகிறது,
கிடைத்த இடைவெளிகளில்
பேரூந்துகளிலும் 
அலுவலக
மதிய உணவு
நேரங்களிலும்
நெருக்கடி மிகுந்த
ரங்கநாதன் தெருவிலும்
எப்போதாவது
எதிர்ப்படும் பிசாசுகளில் 
பால் பேதங்கள் இருப்பதில்லை,
சிறிய டீக்கடை
அல்லது
கொஞ்சம் நீண்ட
மதுச்சாலை சந்திப்புகளின்
தவற விடப்பட்ட
சொற்களின் குரூரம் 
நள்ளிரவுகளில் 
இமைகளை திறந்து
இம்சிக்க,
அதிகாலை 
தன்
கோரப்பற்களை
காட்டி முறைத்தது 
நான்
நன்கறிந்த
ஒரு மாயப்பிசாசு
நிலைக் கண்ணாடியில் ...

12 ஏப்., 2013

தருணங்கள்…


Courtesy by :Gappingvoid

கடந்துபோன அத்தனை தருணங்களிலும் ஏதோ ஒரு வடிவில் வாசனையாக விரும்பத்தக்க அல்லது வெறுத்து ஒதுக்க நம்மிடம் ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. விபரம் அறிந்த வயது முதலாகவே அதீதமாக நட்பின் வாசனைகள் இவ்வாறு என்னை தோண்டி துரத்தி, கொண்டாடி, கொன்று மகிழ்ந்திருக்கின்றன. அறியும் அப்பருவத்தில் முதன்முதலாய் தொடங்கி இன்றுவரை என்னுடன் ஒரு வாசனையாக வரும் நண்பனும் மாப்பிளையுமான ஓ.ஆர்.பி. ராஜாவும். அவனைக்காட்டிலும் இன்னும் அதீத நெருக்கத்தையும் அன்பையும் எப்போதும் ஒளித்துவைத்தபடி ஒரு சிறிய புன்னகை கொண்டு என் சிரமங்களை விசிறிவிடும் அவனது சித்தப்பாவும் நான் எப்போதும் பாசமாக அழைத்து மகிழும் சத்தியமூர்த்தி என்ற முழுப்பெயர் தொலைத்து யாவருக்கும் சத்தியான எனது சத்தி அத்தான். இப்படியாக மிக நெருக்கமாக நமது அந்தரங்கங்களை அறிந்த மனிதர்கள் வாழ்வின் பாதைகளில் அடங்காத நினைவுகளோடு பயணிக்க வைப்பவர்கள் குறிஞ்சிப்பூக்களென சிலரே.

வியாபார மாயவலைக்குள் தந்திரமான சிலரால் நான் சிக்கிக்கொண்டபோது அதிலிருந்து மீளும் முயற்சியில் மேலும், மேலும் சிக்கி ஒரு கட்டத்தில் என் தற்கொலைக்கான கடைசி நிமிடம் வரை வந்திருந்தேன். மனைவி, மகன்கள், கடன் கொடுத்து காப்பாற்ற முயற்சித்த நண்பர்களின் அன்பு என விடாப்பிடியாக மீண்டும், மீண்டும் வழிதவறி விழுந்த கிணற்றுத் தவளையாய் இலக்கற்ற ஒரு பயணம் நோக்கி தொடர்ந்து வட்டமடித்தேன். ஒரு வழிப்பயணத்தில் வந்து அறிமுகமான வயதில் சிறியோனாய் இருந்தும் அறிவில் பெரியோனாய் இருக்கும் வசந்த் எனக்கு வியாபாரம் தொடர்பான அத்தனை புத்தகங்களையும் அறிமுகம் செய்து கிணற்றில் இருந்து பெரும் கடலுக்குள் தூக்கிப்போட்டான்.

ஒரு பக்கம் கடன், மறுபக்கம் குடும்பம், இவ்விரண்டுக்கும் சேர்த்த எதிர்காலம் என வாழ்க்கை கடலின் தீராத திசைகளால் மென்மேலும் அழுத்தம் கூடிப்போன தருணத்தில், காப்பாற்றிக்கொண்டிருக்கிறான் என நினைத்த நண்பன் இன்னுமொரு பிரச்சினைக்குள் தள்ளிவிட்டுப்போனான். இன்னும் மேலதிக நெருக்கடிகள் கூடிப்போன தருணத்தில் இருந்த சொற்ப நட்பும், உறவும் விலகி மீண்டு வரமுடியாத ஆழத்துக்குள் போயிருந்தபோது கடந்த மூன்றரை வருடங்களாக ஒவ்வொரு இரவிலும் எனக்கு ஆறுதல் சொல்லி தன் வெற்றியோடு என் வெற்றிக்கும் பாடுபட்ட கிடைத்தற்கரிய கேபிள் சங்கர் எனும் ஆளுமை. அவர் செல்லும் இடமெல்லாம் எனையும் கூட்டிச்சென்று என்னை சஞ்சலத்தில் இருந்து மீட்டெடுத்தார். 

இப்படியான நெருக்கடிகளில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக பணம் அனுப்பி எனது கவுரவத்தை காப்பாற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சொந்த ஊருக்கே திரும்பிப்போக முடிவெடுத்தபோது எனது கடனில் பெரும்பகுதியை ஏற்றுக்கொண்டிருக்கும் தொழிலதிபரும், நண்பருமான முத்து என்னை விடாப்பிடியாக சென்னையில் தக்கவைக்க அத்தனை உதவிகளையும் செய்து தருவதாக வாக்களித்து தடுத்து நிறுத்தினார். 

மூன்றரை ஆண்டுகளில் ஏகப்பட்ட படிப்பினைகள், ஏகப்பட்ட வியாபார திட்டங்கள் என நான் தொடர்ந்து என்னை செதுக்கி வந்ததில் பங்குதாரர்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வெறுத்துப்போய். முதலீட்டார்களின் தாமதம் என் மனநிலையோடு பிள்ளைகளின் கல்விக்கான பொருளாதார நிலையையும் கலைக்கத் துவங்கிவிட்டது. எனவே சில காரனங்களுக்காக துனிச்சலாக தனியனாக கிடைத்த பொருளாதார உதவிகளையும், வசந்த் செய்துகொடுத்த இணையப் பக்கம் துணையோடும் வரும் சித்திரை முதல் நாள் முதல் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றை துவக்க இருக்கிறேன்.  

துவங்குவதற்கு முன்பாகவே தொலைபேசியில் அழைத்து ஆதரவு கொடுத்த அண்ணன் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களை இத்தருணதில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

நல்ல முதலீட்டாளர்களுக்காக முயற்சி மேற்கொண்ட நரேனுக்கும் எனது நன்றிகள்.

இந்த நிறுவனம் கண்டிப்பாக ஜெயிக்கும் என உற்சாகப்படுத்தி துவங்கவைத்த கேபிள் சங்கருக்கு எனது வந்தனங்கள்.

எனது அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக்கொண்ட தம்பிகள் வசந்த், செய்யது இருவருக்கும் எனது வந்தனங்கள்.

அலுவலகம் அமைக்க எல்லா உதவிகளையும் செய்வதாக சொல்லி தெம்பூட்டிய தம்பி விந்தைமனிதன் ராஜாராமனுக்கு எனது நன்றிகள்.

தோழி கவுசல்யா, நண்பர் பழனி, நண்பர் ராஜமாணிக்கம், நண்பர் மணிகண்டன், தம்பி சிவக்குமார், தம்பி சரவணன், தம்பி நந்தா, தம்பி ரமேஷ் ஆகியோருக்கு அன்பும்,நெகிழ்ச்சியும்..

கடந்த மூன்றரை ஆண்டுகளாக இணையவழி கிடைத்த நட்புகளே என்னை செம்மைப்படுத்தி வந்திருக்கின்றன. எனவே உங்கள் அன்பும், ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு உண்டு எனத்தெரியும் என்பதால் எவ்வித விழாவும் இல்லாமல் நேரடியாக இதனையே அறிவிப்பாகவும் ஆரம்பமாகவும் உங்கள்முன் வைக்கிறேன்.

www.krpconsultants.com

வாழ்வின் இன்னொரு தருணம் 14.04.2013 முதல் ஒரு புதிய வாசனையை நிரப்பும் என்ற நம்பிக்கையோடு….

9 ஏப்., 2013

ப்ரியாவின் வண்ணத்துப்பூச்சிகள்...


Photo : KRP Senthil
ப்ரியா பனிரெண்டாம் வகுப்பு

வண்ணத்துப்பூச்சிகள் பிடிக்கும்
அவளுக்கு
எல்லா வண்ணங்களிலும் 
வண்ணத்துப்பூச்சி வரைவாள் 
ஒவ்வொரு நோட்டுக்கும்
ஒரு கலர் வண்ணத்துப்பூச்சி

ப்ரியா விலங்கியல் முதல் ஆண்டு

கல்லூரியில் விலங்கியல்தான் 
கிடைத்தது
பொம்பளை பிள்ளைக்கு
அதுவே அதிகம் என்றார் மாமா,
இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பதால்
பிரியாவும் ஒத்துக்கொண்டாள்
சோதனைச்சாலை பெரிய
சோதனையாகிவிட்டது அவளுக்கு
எலி
தவளை
கரப்பான் பூச்சி 
இன்னபிற பூச்சி வகைகளை 
ஆராய்வதில் பிரச்சினை இல்லை
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய
ஆராய்ச்சியில் 
அவள் நிலைகுலைந்தாள்
இறந்த வண்ணத்துப்பூச்சிகள் 
மூன்றாவது வருடமுடிவுவரை
கனவுகள் முழுதும் 
விடாது விரட்டின
தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லாததால்
சரவணனுக்கு வாழ்க்கைப்பட்டு 
சென்னைக்கு வண்டியேறினாள்
கட்டிடங்களால் நிரம்பிய சென்னையில்
வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத 
வாழ்க்கை..

ப்ரியாவின் மகள் பாவனா

ரங்கனாதன் தெருவில்
ஒரு சாலை விற்பனையாளனிடம்
விதவிதமாய்
சுவற்றில் ஒட்டும் பேப்பர்
வண்ணத்துப்பூச்சிகளை 
வாங்கி வந்து 
அறை முழுவதும் ஒட்டியிருந்தாள் 
பாவனா..

பாவனாவின் அம்மா ப்ரியா

பாவனாவை 
கல்லூரியில் சேர்க்கும் காலம் 
கணிப்பொறி இயலில் சேர்த்து 
வண்ணத்துப்பூச்சிகளை காப்பாற்றியதாக 
பெருமை கொண்டாள்
அரசுக் கல்லூரியில் படித்த
அம்மா ப்ரியா..

பாட்டி ப்ரியா 

தொலைக்காட்சியில்
சீரியல் பிடிக்காமல் 
பேத்தியுடன் கார்ட்டூன்களிலும்
அனிமல் பிளானெட்டிலும்
வண்ணத்துபூச்சிகள் பற்றிய
நிகழ்வுகளில் 
மனதை பறிகொடுக்கிறாள்
இப்போதெல்லாம்..

8 ஏப்., 2013

இன்றும்..நேற்றும்..முந்தைய நாட்களும்...

Photo: KRP Senthil
எடைபோடும்
தராசின் தட்டுகளாய்
அந்தரத்தில்
கீழ் மேலாய்
தினசரி வாழ்க்கை..


விருந்தினர் வராத
நகரத்து வீட்டில்
தொடர்ந்து கத்துகிறது
ஒற்றைக்கால்
காகம்..

வெக்கை இரவுகளில்
குளிர்விக்கும்
மின் வெட்டு முத்தங்கள்
வியர்வை பிசுபிசுப்பில்..

பாதி நிலவு
மொட்டை மாடி
வானத்தில்
நாளைய வாழ்வு
ஒர்
எரி நட்சத்திரமாய்
வீழ்ந்து மடிகிறது..