31 ஆக., 2012

ஜீவிதா...

அன்புள்ள ஜீவிதாவிற்கு, நலமாக இருக்கீங்களா?. கதிரவன் தன்னுடைய அந்த நீண்ட கடிதத்தின் இறுதியில் நீங்கள் அமெரிக்கா சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். அவர் எழுதியது மற்றவர்களுக்கு வேண்டுமானால் நாவலாக இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கான கடிதம். எனக்கும் அப்படித்தான்.அது தன் உதிரத்தை வார்த்தைகளாக்கிய ஓவியம். அமெரிக்க வேலை உங்களுக்கு பிடித்திருக்கும். மிகவும் விரும்பித்தானே அங்கு போனீர்கள். நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையல்லவா அது. ஆனால் பாவம் கதிரவன் அவருக்கு வரைவது, கவிதை எழுதுவது அப்புறம் காதலிப்பது.. காதலிப்பது...காதலிப்பது இது தவிற வேறெதுவும் தெரியாத ஆத்மா அது. அதனால்தான் இணைய மைய்யத்துக்கு வந்து வாழ்த்துக்களாகவும், வரைந்த படங்களாகவும் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அவைகள் உங்களால் படிக்கப்படாமலே நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவர் பெயரிட்ட மின்னஞ்சல்கள் SPAM க்கு தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் கணிணி அறிவு பற்றி எதுவும் அறியாத அந்த அப்பாவி இப்போதும் உங்களுக்கு மின்ஞ்சல் அனுப்பிக்கொண்டிருப்பார்.

வரைந்தாலும் கவி எழுதினாலும் அதிலும் நீங்களே ஜீவிதமாக இருப்பது அவருக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரியும். குழந்தைகளை , பூனைக்குட்டிகளை, சுலைமான சேட் எனும் நஜ்மாவின் அப்பாவை, கான் முகம்மதுவை, பாலகிருஷ்ணனை, ரயிலில் மகனின் கொலையால் கதறும் கிழவியை என கதிரவன் உலகம் எளிய மனிதர்களுக்கானது. நீங்கள் உயரிய படிப்பை முடித்தவராய் இருக்கலாம், உங்கள் அம்மா மருத்துவராகவோ, உங்கள் பாட்டனார் நீதிபதியாகவோ இருந்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் உங்களால் கதிரவன் ஆக முடியாது. ஏன்? யாராலுமே கதிரவனாய் ஆக முடியாது.

உங்கள் பொருட்டு தன்னை மிரட்டிய மணிகண்டனையும், கன்னத்தில் அறைந்த ராகவனையும் அவர் உங்கள் பொருட்டே பொருத்துக்கொண்டார். தன் ஒரு கன்னத்தில் அறைந்த ராகவனிடமே அவர் தன் இன்னொரு கன்னத்திலும் அடி வாங்கத் தயாராக இருந்தார். ராகவன் தன்னை தாக்கப்போகிறான் எனத்தெரிந்து மொட்டைமாடியின் விளிம்புவரை போனவரை, அந்த அப்பாவி தன்னைத் திருப்பித் தாக்கமாட்டார் எனத் தெரிந்துகொண்டு அவரை அளவுக்கு அதிகமாக மிரட்டி கடைசியில் உதடு கிழியும் அளவு அறைந்தபோதும் உங்கள் மீதான காதலே கதிரவனை அமைதியாக்கியது. தான் இரவுகளை நேசிப்பவன் என்பதால் தான் வரைவதை இரவுகளில் தொடங்கும் அவரின் சிறிய அறையில் கற்களை வீசி எறியும் இளைஞர்களைக் கூட அவர் பொருத்துக்கொண்டார்.

ஒரு எளிய கலைஞனுக்கு தன்னை ஒரு பெண் பாராட்டினாள் என்கிறவுடன் வருகிற பரவசத்தையும் தாண்டி அவர் உங்களை முகம் பார்க்காமலே நேசிக்கத் துவங்குகிறார். அவர் கூச்சம் மிகுந்தவர் என்பதையும் தாண்டி உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்களும் அதை விரும்புகிறீர்கள். அவர் தன் சகல வாழ்வையும் நீங்களாக மாற்றிக்கொள்கிறார். எப்போது அவர் உங்களை சந்திக்க நேர்ந்தாலும் காதலின் அதீத பரவசம் அவரால் உங்களிடம் பேசவிடாமல் தடுக்கிறது. தொலைபேசியில் கூட உங்கள் குரலை கேட்பதற்குள்ளான அவரின் அவஸ்த்தையைவிடவும் உங்கள் குரலை கேட்டபின்னான ஆனந்தம் அவரை ஊமையாக்குகிறது.  இந்த உலகின் புனிதமான காதல்கள் என ஏகப்பட்ட காதலர்களின் காதல்கள் காவியங்களாக மாறின. அதில் பெரும்பாலனவை தோற்றுப்போனவையே. மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய கல்லறையை விடவும் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் கதிரவனின் கடிதம். காதலர்கள் தோற்றுப்போயிருக்கலாம் காதல் எப்போதும் பரிசுத்தமாகவே இருக்கிறது. கதிரவன் போல் அவ்வப்போது ஆசிர்வதிக்கப்பட்டு இவ்வுலகில்  காதல் ஒரு நிரந்தர புனிதத்தன்மை அடைந்துவிட்டது.

ஜீவிதா இதுவரை நீங்கள் அந்தக் கடித்ததை படித்திருக்க மாட்டீர்கள். ஒரே ஒருமுறை மட்டும் அந்தக் கடிதத்தை வாசித்துப்பாருங்கள் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் ஜீவிதா நீங்களே இருக்கிறீர்கள். இப்படி ஒரு காதலை, அர்ப்பணிப்பை, அன்பை, விட்டுக்கொடுத்தலை நாம் கதைகளால் மட்டுமே புனைய முடியும். அளப்பறிய பிரியம் என்பதை ஜீவிதா இதற்கு முன் உங்களால் அறிந்திருக்க முடியாது. உங்களுக்கே தெரியும் ஜீவிதா நீங்களும் அவரை காதலிக்கிறீர்கள் அல்லது காதலித்தீர்கள். யாரோ சிலர் அது மணிகண்டனாகவோ, ராகவனாகவோ கூட இருக்கலாம் அவர்கள் உங்களை தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்வை சுகப்படுத்திவிடாது ஜீவிதா, பணம் சுயநலத்தையும், பொறாமையும், வெறுப்பையுமே சம்பாதித்து கொடுக்கும் அது ஒரு போதும் தூய்மையான காதலை அண்டவிடாது. எனவே தயவு செய்து கருணை காட்டுங்கள் ஜீவிதா.
 
இணையம் வழி வரும் என் கடிதம் யார் மூலமாகவாவது உங்களுக்கு கிடைக்கப்பெறலாம். அப்போது கதிரவனைப்போல் இதனையும் ஒதுக்கிவிடாமல் படிப்பீர்கள் என நம்புகிறேன். இதில் நான் மன்றாடுவது ஒன்றே ஒன்றைத்தான் அது கதிரவனின் கடிதத்தை ஒரு முறை படித்துப்பாருங்கள். முதல் வரியில் துவங்கி இறுதி வரி வரை உங்களால் முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது. ஒருவேளை இப்போது உங்களுக்கு ஒரு காதலன் இருக்கலாம். அல்லது திருமணம் முடிந்து கணவனுடன் இருக்கலாம். அப்படி இருந்தால் இப்போதுதான் கதிரவனின் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான். இதுவரை உங்கள் காதலனால், கணவனால் காட்டப்படாத அன்பை தரிசிக்கும் வாய்ப்பு ஒருமுறையாவது உங்களுக்கு கிட்டட்டும்.

கதிரவன் இப்போதும் உங்களிடம் இருந்து எதையும் யாசிக்கவில்லை. ஏன்? உங்கள் அன்பை, காதலைக் கூட யாசிக்கவில்லை!. அவர் இவ்வுலகில் வாழும் மட்டும் ஒரே ஒரு பெயர் மட்டும் போதும் ஜீவிதா. உங்கள் பெயரை உச்சரித்தபடியே அவர் தன் இறுதி மூச்சுவரை காலம் தள்ளிவிடுவார். அவர் விரும்புவதெல்லாம் எப்போதும்போல் ஒரு ரசிகையாக தொடர்ந்து அவரை பாராட்டி வருவதுதான். இதனை செய்வதில் உங்களிடம் ஏன்? இவ்வளவு தயக்கம்!. ஒரு நல்ல ஜீவனை சிகரெட்டுகளாலும், மதுவாலும் கொன்று வருவது நீங்கள்தான் ஜீவிதா. காலம் அவரை தின்று தீர்ப்பதற்கு முன் ஒரே ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பிவையுங்கள். நீங்கள் நலமாக இருப்பதை சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு காதல் இருந்தாலோ, மணமாகி இருந்தாலோ அவரிடம் நிலமையை சொல்லுங்கள். ஒரு தோழியாகவாவது கதிரவனுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.

உங்களுக்கு வேண்டுமானால் கதிரவன் தேவையற்றவராக போயிருக்கலாம், ஆனால் எங்களைப்போல் அவரின் ஓவியங்களுக்கும், கவிதைகளுக்கும், இதோ உங்களுக்கு எழுதிய அந்த நீண்ட கடிதத்துக்கு ரசிகர்களாய் இருப்பவர்களுக்கு அவர் தேவை ஜீவிதா. மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறேன் ஜீவிதா. அவருக்கு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அன்புடன்,  
கே.ஆர்.பி.செந்தில்.
                                                                       குறிப்பு : யூமா.வாசுகி எழுதிய மஞ்சள் வெயில் நாவலின் தாக்கமே இந்தக் கடிதம். நீங்கள் காதலித்திருக்கலாம், காதலிக்கப்பட்டிருக்கலாம், காதலில் ஜெயித்தோ, தோற்றோ போயிருக்கலாம், இனிமேல்தான் காதலிக்கவே ஆரம்பிக்கலாம், காதலிக்காமலேயே திருமணத்துக்கு பின்னும் கூட உங்கள் மனைவியை சரியாக நேசிக்காமல் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன!. இது காதலிக்கும் ஆண்களுக்கான இலக்கியம். எளிய நடையில் யூமா.வாசுகி நம்மை ஜீவிதாவுடனான கதிரவனின் காதலை அதனால் அவர் படும் அவஸ்தைகளை, வார்த்தைகளை உயிராக்கியிருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், பேரன்பும் யூமா.வாசுகி அவர்களுக்கு
. 
நாவல்: மஞ்சள் வெயில்
ஆசிரியர்: யூமா.வாசுகி
வெளியீடு: அகல், 
342,டி.டி.கே சாலை, 
இராயப்பேட்டை, சென்னை – 14.
தொலைபேசி: 044-28115584
விலை: ரூ.65.00

23 ஆக., 2012

சென்னை பதிவர் சந்திப்பு ...

அனைவருக்கும் வணக்கம். வருகிற 25 ந்தேதி இரவே சென்னை வந்துவிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராத வேலைச்சுமையால் என்னால் இப் பிரமாண்டமான பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். ஆனாலும் பல வருடங்களாக இப்படி ஒரு பதிவர் சந்திப்பை நடத்தவேண்டும் என பலரும் ஆசைப்பட்டோம். நிறைய காரணங்கள் எம்மால் அதற்கு ஒரு இறுதி வடிவம் கொடுக்க இயலாமலே இருந்தது. ஆனால் இப்போது புலவர் ஐயா அவர்கள், சென்னை பித்தன் ஐயா அவர்கள், திரு. மதுமதி, திரு.பால கணேஷ் ஆகியோரின் ஆர்வம் அண்ணன் மோகன்குமார் தம்பிகள் செல்வின், சிவக்குமார், ஆனா.முனா (நான் இப்படித்தான் மொபைலில் வைத்திருக்கிறேன்), பிரபாகரன், கருண், சவுந்தர், ரஹீம் கசாலி, சிராஜ், நக்கீரன், வீடு சுரேஷ் குமார் (தம்பி மெயில் இன்னும் வரல) என என் படைத்தளபதிகள் துணையோடு வெற்றிகரமாக நடக்கப்போகிறது.

சென்னையில் இருக்கும் மூத்த பதிவர்களில் அண்ணன் மணிஜி, அண்ணன் காவேரி கணேஷ் , அண்ணன் உண்மைத்தமிழன், கார்க்கி, விதூஷ், பெஸ்கி, கேபிள், சுரேகா அமெரிக்கா போய்விட்டதால் அப்துல்லாவால் மனதளவிலான ஆதரவைத் தவிர மற்றவர்கள் கலந்து கொள்வோர் பட்டியலில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இத்தனை காலம் நம்மால் முடியவில்லை. ஆனாலும் யாரோ கைக்காசை போட்டு செலவழிக்கிறார்கள். எனவே அவர்களை பாராட்டும் விதமாக அனைவரும் கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்த்தேன். எப்போதும் நம் வழக்கமான பதிவர் சந்திப்புகளைப் போல் விருப்பப் பட்டவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் வரலாம், போகலாம் ஆனால் ஒரு நாள் முழுக்க திட்டமிடப்பட்டு நடக்கும் பதிவர் சந்திப்பில் நம் பெயர்களை பதிந்தால்தான் அவர்களால் நமக்கான உணவு ஏற்பாடுகளை சரியாக செய்ய முடியும் என்பதால் அன்பு கூர்ந்து சென்னையின் பிரபல பதிவர்கள் தங்கள் பெயர்களை பதிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

இடையில் மனிதாபிமானி எனும் ஒரு(அல்லது சில) பதிவரால்  தேவையற்ற குழப்பங்கள் ஆரம்பித்து இருக்கின்றன. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் அரபு தேசம் போனால் மட்டும்தான் இப்படியான மத குழப்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள். திடீரென ஐந்து வேலை தொழுவதும், மார்க்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்ததும் உடனே அல்லா மீதான நம்பிக்கை அதிகமாகி நீங்களே நபியாக மாறி இஸ்லாம் அல்லாதோரிடம் உங்கள் நம்பிக்கைகளை கடைவிரிக்கிறீர்கள் கொள்வோர் யாருமற்ற விரக்தியில் மனஉளைச்சல் மேலோங்க சாந்தியும் சமாதானமும் நிலவும் இவ்வுலகில் அதனை முழுதும் அகற்றப் போராடுகிறீர்கள் . மார்க்கம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறது ஆனால் அரபு தேசமாகட்டும், மலேயா, மற்றும் இன்னபிற இஸ்லாமிய தேசங்களாகட்டும், இத்துப் போன இந்தோனேசியாவாகட்டும் எவனும் இந்திய இஸ்லாமியர்களை சமமாக மதிப்பதில்லை, ஏன் பட்டாணி முஸ்லீம் மற்றவர்களை சமமாக பாவிப்பதில்லை, இப்படி உங்களுக்குள் களையவேண்டிய ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு எங்கள் தனிப்பட்ட மதுப் பழக்கத்தை வைத்து கிண்டலடிப்பது தனிமனித அத்துமீறல். இனி உண்மையான சாந்தியும், சமாதானமும் நிலவ அல்லா உங்களை ஆசிர்வதிப்பாராக. இன்ஷா அல்லா.

மற்றபடி பதிவர் சந்திப்புக்காக உழைக்கும் அனைத்தும் தோழர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மிகவும் நேர்த்தியாக நடத்தப்படும் ஈரோடு பதிவர் சந்திப்புகளையே இங்கு ஒவ்வொரு வருடமும் யாரோ ஒருவர் குறை சொல்லிக்கொண்டுதான் இருகின்றனர். எனவே நமக்கு சம்பந்தம் இல்லாதோரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால் அதனை செயல்படுத்துங்கள். இல்லாவிடில் புறந்தள்ளுங்கள்.

அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

17 ஆக., 2012

ஒரு விவாகரத்து...

சமீப வருடங்களில் நான் எந்தப் பஞ்சாயத்துகளிலும் கலந்து கொண்டது கிடையாது. ஊரில் என் தந்தையார் ஒரு பஞ்சாயத்தார். மிகவும் நேர்மையான ஆள் அவர். எந்த அளவுக்கு நேர்மையான ஆள் என்றால், நான் இரண்டாண்டுகளுக்குமுன் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மெசினை சிங்கப்பூரில் வாங்கியபோது, அந்த மெசினை, எனக்கு ஏற்கனவே தர வேண்டியிருந்த பணப்பாக்கிக்காக தன் நிறுவனப்பெயரில் சொந்தச் செலவில் இறக்கித் தருவதாகவும், அதற்கு ஏற்பபடும் செலவினங்களை எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்துக்கொள்ளச் சொல்லியும் சொன்னார். அப்போது தொடர்ச்சியாக அவர் இந்தியாவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை இறக்கிக்கொண்டு இருந்ததால் நானும் அவரே இறக்கித் தரட்டும் என அவரிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா வந்துவிட்டேன். இந்தியா வந்ததும் அவர்தான் இறக்கித் தருகிறார் என்பதை என் நெருங்கிய நண்பர்கள்  கேள்விப்பட்டு வேண்டாண்டா அவன் ஏற்கனவே உன்னை செமயா ஏமாத்துனவன் அவன்கிட்ட கொடுக்க வேணாம் என எச்சரித்தனர். விதி வலியது போலும், நான் என் நண்பர்களின் அறிவுரையைப் புறக்கணித்தேன். மெசினும் ஏற்றப்பட்டது. கையில் தற்சமயம் காசு இல்லை அதனால் கண்டெய்னர் வாடகை மட்டும் தாருங்கள் என முதலில் சிங்கப்பூர் பணமாக ஆயிரம் வெள்ளிகள் பெற்றுக்கொண்டார். ஒரு வாரத்தில் கண்டெய்னர் வந்து விட்டது என இங்கு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு கண்டேயினரை செட்டிங்கில்தான் எடுக்கவேண்டும் அதனால் தாமதமாகும் என ஒரு மூன்று மாதத்தைத் தள்ளினார். இப்படியே ஏதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லி ஆறு மாதம் கடந்தபோது முதன்முறையாக நான் கோபப்பட்டு பேசியபோது அவரும் தன் குரலை உயர்த்தினார். பேச்சு முற்றி உன்னால் முடிந்தால் என்னிடம் பொருளை வாங்கிப்பாரு என சவால் விட்டுவிட்டு தன் தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டார். அதன்பிறகு அந்த ஆளைத் தேடுவதிலேயே என் பொழுது கழிந்தது. ஒரு கட்டத்தில் என் சொந்த ஊரான மன்னார்குடியில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டு என் ஆட்களை அனுப்பி அவரைத் தூக்கிவந்து தங்கள் வசம் வைத்துகொண்டு பணம் கொடுத்தால் அனுப்பிவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அந்த நபரோ என் தந்தைக்கு போன் செய்து நான் அவரைக் கடத்தி வைத்திருப்பதாகவும் பணம் தந்தால்தான் விடுவிப்பேன் என மிரட்டுவதாகவும் போனிலேயே அழ, என் தந்தை எனக்கு போன்  செய்து விபரம் கேட்டபின், அவனை விட்டுர்றா பாவம் என்றார். நானோ அப்ப என் பணம் எங்கே என்று கேட்டபோது அவரோ, டேய் அவன்தான் கண்டிப்பா தர்றேன்னு சொல்றானே, மேலும் பணம் கொடுக்கலே என்பதற்காக ஒருவனைத் தூக்கி வருவது நியாயமான செயல் இல்லை. உனக்கு பணம்தானே வேணும், அதை நான் தருகிறேன், இப்ப அவனை விடப்போறியா? இல்லையா? என்று என்னிடம் கோபமாக கேட்டார். வேறு வழியின்றி நானும் அவரை விட்டுவிட்டேன். இன்றுவரைக்கும் என் பணமோ, மெசினோ வந்து சேரவில்லை, அந்த நபரும் மன்னார்குடியில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். என்ன நான் என் தந்தையுடன் இன்றுவரைக்கும் சரியாகப் பேசுவது கிடையாது. நான் ஊருக்கு கடந்த ஒரு வருடமாகப் போவதும் கிடையாது.

இப்படிப்பட்டவரின் மகனான என்னை பெரும்பாலும் லண்டனுக்குப் பணம் கட்டி ஏமாந்தவர்களும், சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்புகிறேன் எனச்சொல்லி பணம் வாங்கிகொண்டு காலம் தாழ்த்துபவர்களிடம் இருந்து பணம் பெற்றுத்தரச் சொல்லியும்தான் நிறைய பஞ்சாயத்துகள் வரும். நிறைய பேருக்கு பணம் திருப்பி வாங்கித்தந்தும் இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுப்பில் என் பழைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதால், இப்போது யாருக்குமே என்னை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள் இல்லை என்பதாலும் கொஞ்சம் நிம்மதியாக நான் உண்டு என் வேலை உண்டு என்றே இருந்தேன். கடந்த வாரம் என் நண்பர் என்னை வழியில் பார்த்துவிட்டு தனது அக்கா மகளுக்கு ஒரு பிரச்சினை நாங்கள் குடும்பத்தினர் மட்டுமே போகிறோம். நீங்களும் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் எனக் கெஞ்சவே நான் வேறு வழியில்லாமல் அவருடன் போனேன். போகும்போதே என்னிடம் விபரங்களை சொல்லிக்கொண்டே வந்தார். அதாவது தனது அக்கா மகளின் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், நான்கே நாட்கள்தான் மாப்பிள்ளை வீட்டில் வாழ்ந்தது எனவும், மறுபடி எடுத்த சமாதான நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்ப்படவில்லை அதனால் இன்றைக்குப் பேசி பிரிச்சு வச்சுடலாம் என்றார். நான் அதெப்படிங்க முடியும்ன்னு கேட்டேன், அவரோ இல்லைங்க, அக்கா பொண்ணு இனிமே அந்த மாப்பிள்ளையோட வாழ முடியாதுன்னு சொல்லிடுச்சு, அப்படியே வாழ வச்சா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லுது, அதனாலதான் சொல்றேன் பிரிச்சு வச்சிரலான்னு என்றார். சரி நான் அங்க போய் என்ன பேசணும் என்று கேட்டேன். அவரோ மாப்பிள்ளை வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க, நாங்க பொண்ணுக்கு போட்ட நகைங்க, எங்க பொண்ணு வீட்டுக்கு வரும்போதே கையோட எடுத்து வந்துருச்சு, நாங்க சீர் செஞ்ச சாமான்கள மட்டும் திருப்பி எடுத்துகிட்டா போதும், மற்றபடி அவங்க கல்யாண செலவைக் கேட்டா ஏதாவது கொடுக்கலாம் என்றார்.

மாப்பிள்ளை வீட்டாருடன் நான் மட்டுமே சென்று பேசினேன், முதலில் அவர்கள் கூறிய குறைகளைப் பொறுமையாக கேட்டேன். அவர்கள் தரப்பில் முதலிரவில் பெண் ஒத்துழைக்கவில்லை எனவும், மறுநாள் காலை மாப்பிள்ளை தன் அன்னையிடம் இதுபற்றிச் சொல்லவும், அவரின் அன்னை பெண்ணைக்கூப்பிட்டு உனக்கு யாரோடவாவது காதல் எதாச்சும் இருக்கான்னு கேட்க, அதற்கு பெண் கோபமாகி வீட்டை விட்டுப் போய்விட்டது எனவும், அதற்கடுத்த சமாதான முயற்சிகள் பலனற்று பெரிய விரிசலை உண்டு செய்துவிட்டதாகவும், இனி வாழவைக்க முடியாது எனவும் சொல்ல, பிரச்சினையை அவர்களே முடிவுக்கு கொண்டு வருவது அறிந்து, சரிங்க முடிச்சிக்கிறது அப்படின்னு வந்திட்டீங்க, இப்ப என்ன பண்ணலாம் எனக்கேட்டேன். 

பொதுவாகவே திருமணம் ஆன ஏழு வருடங்கள் கழித்து இம்மாதிரி விவாவகரத்து வழக்குகள் இருவருக்குள்ளும் வந்தால் மட்டுமே மாப்பிள்ளை தரப்பில் பெரிதாக பாதிப்பு இருக்காது, ஆனால் ஒரு வருடத்திற்குள் இப்படி பிரச்சினை என்றால் மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளே தள்ளும் அளவிற்கு சட்டம் பெண்கள் பக்கம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் இந்தப்பெண் நான் கோர்ட்டுக்கெல்லாம் வர விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டதால் இதனை எந்த அளவு சுமூகமாக முடித்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவு உங்களுக்கு நல்லது என சொல்லிவைத்தேன். அவர்களும் அதைக்கேட்டு கல்யாண செலவைக் கொடுக்க வேண்டாம், அவர்கள் வீட்டு சீரை இப்போதே எடுத்துப்போகட்டும், நாம் ஒரு வக்கீல் முன்னிலையில் இந்த விசயத்தை சமாதானமாக எழுதிக்கொள்ளலாம் என முடிவாகி பெண் வீட்டார் தரப்பில் சாமான்களை எல்லாம் ஏற்றி முடித்தபின் ஒரு பெரிய தகராறு உருவானது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் எரிச்சலில் இருந்த என் கோபம் தலைக்கு ஏறிப்போய் நான் இரு தரப்பையும் பார்த்து எச்சரித்து பெண் வீட்டாரை கொஞ்சம் கடுமையாகப் பேசி அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலை மாப்பிளை வீட்டார் தரப்பில் எனக்குத் தொடர்பு கொண்டு முதல்நாள் நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு நான்தான் இதை முடித்துவைக்க வேண்டும் எனகேட்க, நான் பெண் வீட்டாரை அழைத்துப்பேசி நேற்று வெள்ளியன்று (17.12.2010) இரவு, மாப்பிள்ளை, பெண் இருவரையும் அழைத்து மீண்டும் ஒருமுறை வாழ விருப்பமா எனக்கேட்டு அவர்கள் இருவரும் தங்களுக்குச் சம்மதமில்லை என்றதும், மனம் ஒப்பாததால் இருவரும் பிரிந்துகொள்கிறோம், இருவருக்கும் மறுமணம் செய்து கொள்ள நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துகொள்ளமாட்டோம் எனவும், விரிவாக எழுதி கையெழுத்து வாங்கிகொண்டு பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். 

எல்லாம் முடிந்து மணப்பெண்ணின் தாயார், மணப்பெண்ணின் தாலியை என்னிடம் ஒப்படைத்து மணமகன் வீட்டில் கொடுக்க சொன்னார். தாலி செண்டிமெண்ட் பார்க்காத, தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...

2 ஆக., 2012

நாட்டு நடப்பு 02/08/2012...


சுஜாதாவின் நகரம் கதையைப் போல்தான் இப்போதும் பெருநகரங்களும் அவற்றில் வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். கூட்டம் கூடிப்போய் நெரிசலில் பிதுங்கும் சென்னை போன்ற நகரங்கள் மோசமான நம் அரசியல் தலைவர்களின் ஒழுங்கற்ற திட்டமிடல்களால் நாளுக்கு நாள் இன்னும் மோசமாகி வருகிறது. எல்லோரும் அதிகாலை கழிவறை அவசரத்தோடுதான் எப்போதும் எரிச்சலாய் இருக்கிறோம். தற்போதைய சென்னை குடிசை வாசிகள் பெரும்பாலோரை தீவிபத்தை திட்டமிட்டு கிரேட்டர் சென்னையின் விளிம்புக்கு தள்ளிவிட்டார்கள். இரண்டு பெரிய கட்சிகளின் ஓட்டு வங்கியாகவும், சகல வேலைகளுக்கும் அதாவது ஆளை தூக்குவது முதல் அடிமை வேலைவரை இவர்கள்தான் பார்க்கிறார்கள் எனத்தான் எல்லோரும் கற்பனைக்கு ரெக்கை கட்டியிருந்தோம், நிஜமாக ஆளைத் தூக்குவது என்பது அவர்களுக்கு உள்ளாகவே மட்டும் நடக்கும் ஒரு விசயம் மட்டுமே. கூலிக்காய் செய்ய ஆங்காங்கே தனிப்படை இருக்கு. இது போலீசின் தனிப்படையைப் போல் நேர்த்தியானது. வடசென்னையைப் பற்றிய நரேன் எழுதிய இரண்டு கட்டுரைகளில் தெளிவாகவே இதனை எழுதியிருப்பார். இவர்களில் பெண்கள் வீட்டு வேலைக்கும், ஆண்கள் சாக்கடை சுத்தம் செய்வது முதலான அருவருப்பான வேலைகளுக்கும்தான். இன்னும் சொல்வதெனில் பிராட்வே பகுதிகளில் சேட்டுகளின் தொழிலை குறைந்த கூலிக்கு அமோகமாய் வளர்த்ததுமே. 

சமீபத்தில் எரிந்த அசோக் நகர் குடிசைகளுடன் இன்னும் மீதமிருக்கும் கூவக்கரையையும் உலக வங்கியின் ஏதோ ஒரு அதிகாரி லீ மெரிடியன் ஹோட்டலில் புளு லேபில் குடித்துக்கொண்டே கட்டம் கட்டியிருப்பார். ஆய் கழுவவே அக்வா பினா பயண்படுத்தும் நாட்டுக்கோட்டை சிதம்பரம் மாதிரியான நிதி திட்டங்களை கொண்டோர்களால் இதுவெல்லாம் நடக்காமல் போனால்தான் அதிசயம். யாரையாவது எப்பாடுபட்டாவது கவிழ்த்து கார் வாங்க நினைக்கும் எம்.எல்.எம் ஆட்களாய் சகலரும் மாறிவிட்டோம். பணத்தை எப்படி சம்பாதித்தால் என்ன திருக்குவளையில் இருந்து கருணாநிதி என்ன கொண்டுவந்தார்?. சசிகலா ஒரு வீடியோ கடையால் இத்தனை சம்பாதித்து இருக்க முடியுமா?. தமிழினக் காவலர் ராமதாசுக்கு வன்னியரை சுரண்டவே நேரம் இல்லை. திருமாவளவனுக்கு சோனியாவே சொக்கத் தங்கம். விஜயகாந்த் போன்ற காமெடியன் என தமிழ்நாட்டு அரசியலால் கொஞ்சம் நஞ்சம் ரோஷத்தையும் டாஸ்மாக்கில் தொலைத்து நிற்கிறோம். பில்லா ஓடுமா?, துப்பாக்கி சுடுமா?, விஸ்வரூபம் வெற்றி பெருமா? என தன் கனவு நாயகர்களின் மகத்தான வாழ்வுக்காய் ஃபேஸ்புக், ட்விட்டர், பதிவுலகம் என சரமாரியாக புள்ளிவிவரங்களை எடுத்து விடும் புள்ளி ராஜாக்கள்தான் இங்கு மொத்த பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் அம்பானிகளாக மாறிவிட்டார்கள்.

பள்ளிகளின் பேரூந்து விபத்துக்கள், சமீபத்திய ரயில் விபத்து என ஏழைகளின் உயிர் இரங்கல் அறிக்கைகளுக்காக படைக்கப்பட்டவைகளாகி விட்டன. இது  போன்ற மோசமான நிர்வாக கட்டமைப்புகளை நாம் எப்போது ஒழுங்கமைக்கப் போகிறோமோ?..

கருணாநிதி சரியில்லை என ஜெயலலிதாவைக் கொண்டுவந்தால் அவர் தன்னை இன்னொரு அழிக்கும் கடவுளாக கற்பனை செய்துகொண்டு கருணாநிதி கொண்டுவந்தார் என்கிற ஒரே காரனத்துக்காக அவரின் சிறப்பான திட்டங்களை குப்பைகளாக்கி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கேளிக்கை கூடமாக மாற்றும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. சோ போன்ற தமிழனின் எதிரிகளால் ஆலோசனை பெறப்படும் முதல்வரிடமிருந்து இதைதவிர  வேறென்ன எதிர்பார்க்க முடியும். இதுல கொடுமை என்னன்னா சென்னையில் அப்படி ஒரு நூலகம் இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களுக்கு என்ன பயன் என இணைய அறிவு ஜீவிக்கூட்டம் கேள்விகள் எழுப்புகிறது. அட வெண்ணைகளா கூகுள்காரன் காசு கேட்டிருந்தா இப்படி பொங்குவீங்களா?

சென்னை கொஞ்சம் கொஞ்சமாக தனது தனித்தன்மையை இழந்து விட்டது. இதற்கு முக்கிய காரனமே தற்போதைய ஆட்சியாளர்கள்தான் சென்றமுறை முன்னாள் மேயர் மா.சு தனிதன்மையுடன் இயங்கினார். ஆனால் தி.மு.க வின் மொத்த கவுன்சிலரும் குட்டி அரசர்களாக வலம் வந்து சென்னையை தி.மு.க விடமிருந்து விரட்டினர். ஆனாலும் இப்போது மிகவும் நியாயமானவராக இருப்பார் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் துரைசாமி பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவை மீறி அவரால் எதுவும் செய்யமுடியாது என சிலர் பேசுவது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. செயல்படாத மேயர், செயல்படவிடாத முதல்வர். ஆட்சியாளர் பிடியில் சிக்கிய மந்தை ஆடுகளாக மக்கள். நாட்டிற்கு சிறந்த நிர்வாகிகளை தந்த துரைசாமி போன்றோர்களால் சுதந்திரமாக் செயல்பட முடியவில்லை என்றால் அவ்ர் பதவி விலகியிருக்கவேண்டும். தனிப்பட்ட வாழ்வில் நேர்மையான மனிதரான அவரின் நிலமை இவ்வளவு கவலைக்கிடமாக மாறிப்போனது சென்னை நகர மக்களின் துரதிர்ஷ்டமே. முதல்வர் கவுன்சிலர்களை கண்டித்ததாக வரும் பத்திரிக்கை செய்திகளால் மட்டும் மக்கள் திருப்தியாகிவிடுவார்கள் என ஜெயலலிதா நினைக்கிறார் போல.

டெசோவால் காங்கிரசை மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்த டமிலின தலிவரால் அதே விசயத்தை வைத்து காங்கிரசால் மிரட்டப்பட்டு இப்போது வருகிற ஆகஸ்ட் 12 அன்று தீர்மானம் போடப்பட்ட அடுத்த நாளே தனி ஈழம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை இலங்கை தமிழர்களில் ஒருவர் பிரதமராக அறிவிக்கப்பட்டு அனைத்து தமிழர்களுக்கும் சம உரிமை கருணாநிதி உத்தரவால் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்களில் உ.பி க்கள் அறிவித்துவிடுவார்கள். 

இப்படியாக பார்த்து பார்த்து, உ.பிக்கள் சொல்வதுபோல நீ ஏதோ ஒரு திருட்டுக்கும்பலில் இருக்கனும் இல்லைன்னா நட்ட நடு செண்டராக உன்னை கேலி பேசுவோம் எனும் மிரட்டல் பவர் ஸ்டார்களுக்குப் பயந்து நாமும் அடிமைகளின் தலைவர்கள் அல்லது அஜீத்தோ, விஜயோ, குஷ்பூவோ நம்மை கண்டிப்பாக உய்விப்பார்கள் என தன் தினசரி மலச்சிக்கலோடு தூங்கும் தமிழனாய் மாறிவிடலாமோ எனத் தோன்றுகிறது. 

1 ஆக., 2012

புலிகள்...


புலிகள் சிநேகமானவை 

பசியற்று இருக்கும்போது 
கொல்லாமை தத்துவம் 
கொள்பவை..

எப்போதும் 
பதுங்கித்தான் பாயும் 
ஆக்ரோசமான  தாக்குதலாக இருக்கும் 
ஒரே அடி 
மரணம் நிச்சயம் ..

குழுவாகத்தான் வாழும் 
குட்டிகளுக்கு 
பிறந்த நாள் முதலாய் 
வேட்டையாடப் பயிற்சியும் ..

சில சமயம் 
தனியாய்ப் போகும் புலியை 
கூட்டமாக வந்து 
கழுதைப் புலிகள் 
கொல்வதுண்டு..

சிங்கம் அரசாளலாம்,
புலிகளின் காட்டில் நுழைய 
பயம் கொள்ளும் சிங்கம்..

சிங்கம் கிடைத்தவற்றை உண்டு 
வாழ்வை தக்க வைப்பவை, 
பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை 
புலிகள்.. 

ராசராசன் 
ராசேந்திரன் 
பிரபாகரன் 
புலிகளே வரலாறு ...