4 ஜூன், 2012

நினைவில் காடுள்ள மிருகம்...


பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் - சீவக சிந்தாமணி...

எனக்கு எல்லாம் இயல்பாய் நடக்கின்றன அல்லது அப்படி நடப்பதாக நான் கற்பனை செய்துகொண்டிருக்கிறேன். இந்திய மானிடப் பிறவிகளில் பெரும்பான்மைக்கு இருக்கும் சேமிக்கும் குணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. திருமணத்துக்கு முன்பான வாழ்வென்பது வேறு விதம் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பானான பின்னர் வலிந்து ஒரு பெரிய செலவினத்தை ஏற்படுத்தும் தினசரி வாழ்வை சென்னையின் மத்திய பிரதேசமான மாம்பலத்தில் ஏற்படுத்திக்கொண்டபோது வீடு வாடகைக்கு தந்த புண்ணியவான் அவ்வளவு பெரிய வீட்டை ரூ.12000 க்கு தந்தபோதும் மின்சாரம், மாதந்திர வீட்டு செலவுகள், பையனின் பள்ளி செலவுகள். எனது தனிப்பட்ட தினசரி செலவுகள் என மாதம் ரூ.40000 தாண்ட, இப்போதும் ஒரு நிரந்தர வேலையை கடந்த மூன்று வருடங்களாக ஏற்படுத்திக்கொள்ளாமல் கிடைத்த வேலைகளை செய்துகொண்டு காலத்தை நகர்த்தினேன். அல்லது காலம் என்னை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. இடைப்பட்ட சிறிய காலத்தி நண்பரின் புதிய நிறுவனம் ஒன்றை கட்டமைக்கும் வேலையை செய்தபோது தினசரி என்னுடைய யமஹா -ல் 95 கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோதுதான் புத்தனின் ஞானம் என் நெற்றியில் இறங்கியது.

காதல் மனைவிக்கு நானும் எமது இரு குழந்தைகள் மட்டும் வாழ்க்கை என்றாகி சுற்றம்(எனக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் குடும்பங்கள் உறவினர்) எம்மை மெல்ல நிராகரிக்கத் துவங்க நட்பும் விலக இணைய நட்புகளோடு மட்டும் உறவாடிக் கொண்டிருந்தேன். அவர்களிலும் நான் பழகிய சிலரைத் தவிர மற்றோருக்கு என் வருமானம் மற்றும் வேலை பற்றித் தெரியாது. மிக நீண்ட திட்டங்களை வடிவமைத்து கொண்டிருக்கும் எனது தினசரி இரவுகள் ஒரு சொம்பு லெமன் டீயால் நிரப்பப்படுகிறது. வாழ பணம் எவ்வளவு முக்கியம் என எனக்குத் தெரியாது. ஆனால் வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியம் என எனக்குத் தெரிய சுமார் 41 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. மனிதர்கள் இல்லாத தேசமாய் தேடிய வாழ்வில் அது கிடைக்கவே கிடைக்காது என்றானபின் மனிதர்களுடனான உறவை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன். போலி முகங்கள் சூழ்ந்த இவ்வுலகில் நட்புகளுக்கு தீராத பிரச்சினைகளின் நான் காரனமாகிப்போனேன். அல்லது என்னை காரனம் காட்டி அவர்கள் பிரச்சினைகளை சுலபமாக்கினர்.

போலி முகங்கள் எல்லோருக்கும் அவட்சியமாகும்போது எந்த முகமூடியும் பொருந்தாத என் அசல் முகத்தில் சேகுவாரவை ஒட்டிக்கொண்டேன். அது புரட்சிக்கானது என பலபேர் நினைத்து ஒரு சாதாரன தெரு புரட்சி கூட பன்னாத என்னை நினைக்க, அம் மாபெரும் மனிதனை சில உ.பி க்களால் கேலிச்சித்திரம் ஆக்கப்படுவதை விரும்பாமலே என் புகைப்படத்தை அடையாளமாக்கி உங்களை பயமுறுத்தும் ஆயுதத்தை கையிலெடுத்தேன். இங்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு போதை தேவையாய் இருக்கிறது. பெரும்பாலும் புகழ் போதையில் கிடந்து அல்லாடும் மானுடர்களின் முதுகில் எழுதப்படும் கேலிச்சித்திரங்களை பொருட்படுத்தாது அவர்களின் பொது வாழ்க்கையை தொடர்வதைப்போல் ஒரு எதார்த்தவாதியால் எப்போதும் சராசரியாய் நடிக்க இயலாமல் போகும் சூழ்நிலைகளை சொல்லி மாளாது.  

உலகம் முழுதும் இருக்கும் எனது நட்பு வட்டங்களால் என் தினசரிகள் உயிரூட்டமாய் இருப்பதை குவாட்டருக்கு கணக்கு பார்க்கும் என் தற்காலிக நட்புகள் அறிவதில்லை. கோடிகளை அசாதரனமாய் கடந்த எனக்கு பணம் கொடுத்த பாடம் மிக அதிகம். இன்னும் வலிய நற்குணத்தோடு என் வாழ்வை நகர்த்தும் பக்குவம் வந்திருக்கிறது. அது என்னை ’நான்’ என்கிற ஈகோவிடமிருந்து என்னை காப்பாற்றி வைத்திருக்கிறது. காலங்களும், கணக்குகளும் சரியாக இருந்தால் எங்களது திட்டங்கள் கோடானு கோடி தரும். அது இச்சமூகம் சிறிதளவு பயனுற உதவும். 

இங்கு பணம் இருக்கனும் அல்லது சகித்துக்கொண்டு மவுனமாய் இருக்க பழகனும். மிக எளிய மனிதர்களுடன் எப்போதும் இருந்துகொள்வதே சிறப்பென முடிவு செய்து என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை துவங்க மலேசியா செல்லவிருக்கிறேன். தேர்ந்த முன்னேற்பாடுகளால் அடுத்த ஆறு மாதம் நிரப்பப்பட்டிருப்பதால் இணைய உலகில் என்னால் முன் போல கவிதையென எதையாவது கிறுக்கக் கூட முடியாது என்பதால் எனது பதிவுலக பக்கங்கங்கள் இடைநிறுத்தப்படுகிறது. ஒரு ரயில் பெட்டியென நகரும் பதிவுலகில் எனக்கான நிறுத்தம் வந்துவிட்டது, மீண்டும் எனது பயணம் அதே பெட்டியில் துவங்கலாம், அல்லது வேறு பெட்டிக்கு மாறலாம். அதுவரை ஒரு வாசகனாக பதிவுலகில் நான் தொடர்வேன். மேலும் + ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ தொடர்ந்து இருப்பதற்க்கான (ஆண்ட்ராய்டு வாழ்க) சாத்தியம் உண்டென்பதால் அங்கு உலவும் சாத்தியங்கள் உண்டு. 

இணைய உலகினால் கிடைத்த மிகச்சிறந்த நட்புகள் எப்போதும் என்னை வழிநடத்தட்டும்..

எனவே எங்கே செல்லும் இந்தப் பாதை தற்காலிகமாய் தன் திசைகாட்டும் பலகையில் இருந்து விலகிச்செல்கிறது.

என்னை தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....