30 ஜன., 2012

அடவு...


செவ்வகப் பெட்டிக்குள் 
பாம்புகளின் ஆட்டம் 
புணர்தலின் வேட்கையோடு பார்க்கும்
வரவேற்பறைக் கண்கள்
சாரைகள் இரண்டு (ஆண்,பெண்)
ஸ்லோபாய்சன் தடவிய தமிழை
காலர் மைக்குகளின் வழியே
துப்பிக்கொண்டிருக்க
மயில் ஆடும் திணைக்களத்தில்
மான் ஆடும் ஆங்கிலத்தில்
அனுதினமும் 
பாம்பாட்டியின் மகுடிச் சத்தம் 
கேட்டு மயங்கிய
நாகப்பாம்புகளின் தலைவனுக்கு
உறக்கத்திற்கு முந்தைய நிமிடத்தில்
புதிய டயாப்பரை மாட்டினான்
கட்சியின் கடைசித்தொண்டன்..

28 ஜன., 2012

ஏதோ ஒரு நவீனத்துவ கவிதைகள்!!!...


டு
 க்
 க
 க
 க் குடியிருப்பின் முறை வா
                                                        ச
                                                       ல் செய்பவள்
வரவில்லை இன்று
காற்றில்

        லை
                  கி
ன்
          ற
ன 
குப்பைகள்..
.......................................

நேரெதிர் சந்திப்பின்போதும்
ம்கமு திருப்பிக்கொள்ளும்
பழைய... ...
நண்பனின்
நினைவில் 
நான் 
இப்போது என்னவாக 
இருப்பேன்..

..................................................................
கடை வீதியில்
ஒரே கூட்டம்
ஒருவரை ஒருவர்
இடித்தபடி ந...க...ரு..ம்
மக்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு
          இ
       ல க்
          கு

.......................................................
த த் தி த் 
த த் தி த் 
தாவும் குருவி 
சமயங்களில் 
          ரே 
     ய 
உ 
பறக்கிறது 
ஆள் அரவம் கண்டு..

........................................................
ஒ     ங்     று
    ழு     க
ற்
க   ந் 
 து  லை
கிடந்த புத்தகங்களாய்
புணர்தலின் முடிவில்
நாம்...

பின்னூட்டங்களில் நீங்களும் இம்மாதிரி முயற்சி செய்யுங்களேன்..

27 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 3...


பத்தாம் வகுப்பில் 
உடன் படித்த ரேணுகாதேவி
ஒரு சலவைத்தொழிலாளியின் மகள்
அப்போது மிகுதியாக 
சாதி பார்த்துப்பழகும் என் ஊரில்
அவளென்றால் யாவருக்கும் பிரியம்தான் 
அழகு தேவதை அவள்
ஒரு நாள் அவளும் நானும்
இன்னபிற தோழிகள் சூழ 
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 
குழுமியிருந்தபோது
கடந்து போனதொரு வண்ணத்துப்பூச்சியொன்று
”அய்.. வன்னாத்திப் பூச்சி”யென்றேன்
சடாரெனக் கோபம் கொண்ட ரேணுகா
“அது வண்ணத்துப்பூச்சிடா” எனத் திருத்தினாள்..

பணிரெண்டாம் வகுப்பில்
ஒரு அரையாண்டுத் தேர்வின் மத்தியில்
எங்கள் இருவரின் காதலை
கழிவறை சுவற்றில் உறுதிப்படுத்தினார்கள்
சக தோழர்கள் ..

எங்கள் காதலின் உறுதியால் 
ஒரு சலவைத் தொழிலாளியின் குடும்பம் 
ஊரை விட்டு வெளியேறும் உத்தரவை 
ஏற்றுக்கொண்டது
முதல்நாள் இரவே 
இருவரும் ஓடிப்போகும் முடிவெடுத்து 
ஊர் எல்லையைக் கடக்குமுன் பிடிபட்டு 
அவரவர் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டோம்..

மறுநாள் காலை 
அவளின் தற்கொலையுடன் விடிய 
நான் என் தற்கொலை முயற்சியில் காப்பற்றப்பட 
இப்போதும் 
ஊருக்குப் போனால் 
தனியறையில் இருக்கும் நேரம் 
எங்கிருந்தோ வருகிறது 
வண்ணத்துப்பூச்சியொன்று 
அறையின் ஏதோ ஒரு மூலையில் 
வெகு நேரம் தவமிருக்கும் 
பின் 
ஏதோ ஒரு பல்லிக்கு உணவாகி
செத்துப்போகும்..

ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி..

ஊருக்குப் போவதை நிறுத்திய பின்னரும் 
எப்போதாவது
இந்த நகரத்தின் கொடிய இரவுகளில் 
சாத்திய சன்னல்களையும் மீறி 
எப்படியோ வந்துவிடுகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி
எங்கிருந்தோ வந்து சேர்க்கிறது 
ஒரு பல்லி..

சமீபமாக 
வண்ணத்துப்பூச்சிகளைத் தின்றால்
செத்துப்போக முடியுமா? என
விசாரித்துக்கொண்டிருக்கிறேன்..

24 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 2...


பிரியா பனிரெண்டாம் வகுப்பு

தும்பிகளும்
வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்த வயது
பூக்கள் 
அதிலும் 
சாமந்தியென்றால் கொள்ளைப்பிரியம்
எல்லா வண்ணங்களிலும் 
வண்ணத்துப்பூச்சி வரைவாள் 
ஒவ்வொரு நோட்டுக்கும்
ஒரு கலர் வண்ணத்துப்பூச்சி
அட்டையை அலங்கரிக்கும்..

பிரியா விலங்கியல் முதல் ஆண்டு

கல்லூரியில் விலங்கியல்தான் 
கிடைத்தது
பொம்பளை பிள்ளைக்கு அதுவே அதிகம் 
என்றார் மாமா,
இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பதால்
ஒத்துக்கொண்டாள் பிரியா
சோதனைச்சாலையில் பெரிய
சோதனையாகிவிட்டது அவளுக்கு
எலி
தவளை
கரப்பான் பூச்சி 
இன்னபிற பூச்சி வகைகளை 
ஆராய்வதில் பிரச்சினை இல்லை
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சியில் 
அவள் நிலைகுலைந்தாள்
இறந்த வண்ணத்துப்பூச்சிகள் 
மூன்றாவது வருடமுடிவுவரை 
விரட்டின
தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லாததால்
சரவணனுக்கு வாழ்க்கைப்பட்டு 
சென்னைக்கு வண்டியேறினாள்
கட்டிடங்களால் நிரம்பிய சென்னையில்
வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத 
வாழ்க்கை..

பிரியாவின் மகள் பாவனா

ரங்கனாதன் தெருவில்
ஒரு சாலை விற்பனையாளனிடம்
விதவிதமாய்
சுவற்றில் ஒட்டும் பேப்பர்
வண்ணத்துப்பூச்சிகளை 
வாங்கி வந்து 
அறை முழுவதும் ஒட்டியிருந்தாள் 
பாவனா..

பாவனாவின் அம்மா பிரியா

பாவனாவை 
கல்லூரியில் சேர்க்கும் காலம் 
கணிப்பொறி இயலில் சேர்த்து 
வண்ணத்துப்பூச்சிகளை காப்பாற்றியதாக 
பெருமை கொண்டாள்
அரசுக் கல்லூரியில் படித்த
அம்மா பிரியா..

23 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை...


அவன் தன் காதலியைக் கொஞ்சி 
ஒரு கடிதம் எழுதினான்
அன்பே,
என் வண்ணத்துப்பூச்சியே
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்
ஆனால் 
சில நேரங்களில் 
நீ அனிந்து வரும் பிங்க்
சல்வாரை நான் வெறுக்கிறேன்
நீ வரும்ப்போதெல்லாம்
பரவும் வண்ணத்துப்பூச்சி வாசனையை
அது தருவதில்லை
ஊதா சுடிதார்தான் பிரமாதம்
எனவே 
என் பிரிய வண்ணத்துப்பூச்சியே 
இனி நீ ஊதாவில்தான் வரவேண்டும்..

அவள்
பதில் எழுதினாள்
டேய்! பரதேசி 
வண்ணத்துப்பூச்சியை
எனக்கு பிடிக்கவே பிடிக்காது
எனக்குப் பிடிக்காத 
நான் வெறுக்கும் பூச்சியை
எப்போது நீ நேசிக்க ஆரம்பித்தாயோ
இனி 
உனக்கும் எனக்கும் 
ஒன்றும் இல்லை 
மேலும் ஊதா நிறத்தில் 
நான் உடுத்தவே மாட்டேன்..

அதன்பிறகு 
வண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போதெல்லாம்
வெறுப்பான் அவன்
சோகமாவாள் அவள்..

அப்புறம் 
இந்தக்கவிதையில் வரும் 
வண்ணத்துப்பூச்சியை 
யாரும் 
நிராகரிக்கவோ
நேசிக்கவோ
நேர்ந்தால் 
நானும் 
அந்த வண்ணத்துப்பூச்சியும்
பொறுப்பில்லை..

அதே போல்
இனி எங்காவது
ஊதா தவிர 
வேறு வண்ணங்களிலும்
வரும் வண்ணத்துப்பூச்சிகளை
இனி உங்கள் காதலியோடு 
ஒப்பிடாதீர்கள்,
சில வேளைகளில்
அதே காதலியோடு
அது உங்களை சேர்த்து வைக்கும் 
அபாயம் நேரிடலாம்.. 

21 ஜன., 2012

நானும், நள்ளிரவு பிசாசுகளும்...


நள்ளிரவு தாண்டிய பொழுதுகளில்
வழக்கமாக வழிமறித்து 
பணம் வாங்கும் 
பிசாசுகள் இரண்டு 
நேற்று நள்ளிரவிலும் கை காட்டியது 
பைக்கை ஓரம்கட்டி
இன்று என்னிடம் பணம் இல்லை
மொத்தப் பணமும் குடித்தாகிவிட்டது
மேலும் டிப்ஸ் தராமல் கடன் சொல்லிவிட்டுத்தான் 
வந்தேன் என்றேன்
எனது பர்சை வாங்கி நோண்டிய பிசாசொன்று
சக பிசாசிடம் பணம் இல்லாததை உறுதி செய்தது
இன்றைக்குப் பார்த்து வருமானமே இல்லை என்றும்
குறைந்த வருவாயை மேலதிகாரப் பிசாசுகளிடம்
கொண்டு சென்றால் அவைகள் தன் பரம்பரையை திட்டும் எனவும்
ஒரு பிசாசு மிகுந்த வருத்தத்துடன் சொன்னது
இன்னொரு பிசாசோ
இனி நான் வீட்டுக்குப் போகும்போது
குறைந்த பட்சம் ஐம்பது ரூபாயாவது 
வைத்திருக்க வேண்டும் என 
வேண்டுகோள் வைத்தது
இன்னொரு முறை 
இவ்வழியே வரும்போது சேர்த்துத் தருகிறேன் என 
அவைகளிடமே ரூ.50 கடன் வாங்கி 
வீடு வந்தேன்..

20 ஜன., 2012

திலீபனுடன் 12 நாட்கள்...


பசித்தது ...
அவனே 
உணவானான் - காசி ஆனந்தன்.

தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் எனும் புத்தகம் "தோழமை" வெளியீடாக திரு.மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது திலீபன் கீழ்க்கண்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது 
    சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் 
    சிங்களக் குடியேற்றம்,  உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் 
    சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது 
    உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என 
    அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு,
    தமிழ்க் கிராமங்கள், பள்ளிகூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள 
    இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்க்கொண்டார். அதிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

அவர் உண்ணாவிரதம் மேற்கொண்ட 12 நாட்களும் திரு.வாஞ்சிநாதன் அவர்கள் திலீபனுடன் உடனிருந்த பரபரப்பான நாட்களை நம் கண்முன் நிருத்துகிறார்.

ஒவ்வொரு நாளும் திலீபனின் உடல் மாற்றங்கள். அவரின் போராட்டத்தால் நடந்த அரசியல் நிகழ்வுகள். மக்கள் எழுச்சி, இந்திய, இலங்கை அரசின் கயவாளித்தனங்கள் என அனைத்தையும் சுருக்கமாக சொல்கிறார். 

புத்தகத்தை வாசிக்கும்போது நாமும் ஒவ்வொரு அத்தியாத்திலும் திலீபனுக்காகவும் நமது இனத்தின் ரத்த உறவுகளுக்காகவும் கண்ணீர் வடிக்க நேரிடுகிறது. 

தன் இனத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்த திலீபன்தான் நமக்கு குலதெய்வமாக இருக்க வேண்டியவன். ஆனால் நாம் தமிழகத்தில் யார் யாருக்கோ அடிமையாக இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

இந்தியாவில் தமிழகத்தைப் பொருத்தவரை ஈழப் போராட்டம் என்பது அரசியல் லாபங்களுக்காக ஒவ்வொரு அரசியல் தலைவரும் ஒவ்வொரு விதமாய் கையாண்ட துரோகமும் நம்மை கூனிக்குறுக வைக்கிறது. இந்திராகாந்தி, எம்.ஜி.ஆருக்குப் பின் நெடுமாறன் வைகோ தவிர யாரும் அக்கறை கொள்ளவில்லை. கருணாநிதி விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பில் மொத்த இனத்தையும் சோனியாவுடன் பழி தீர்த்துக்கொண்டார். 

இப்போதும் விடுதலைப்புலிகள் இல்லாத ஈழத்தில் இன்னமும் முள்வேலி முகாமுக்குள்தான் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை இந்திய அரசோ, அதில் அங்கம் வகிக்கும் கருணாநிதியோ அது பற்றி வாய்திறக்கவே இல்லை. இங்கிருக்கும் முகாம்களில் இருப்பவர்களுக்கு இப்போது ஜெயலலிதா செய்யும் உதவிகளைக் கூட கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் தன்னை பற்றிய பாராட்டு விழாக்களும், ஈழம் பற்றி பேசியவர்களுக்கு சிறை வாசமும்தான். சென்ற தேர்தலில் கருணாநிதி,திருமாவளவனும்,ராமதாசும் நடத்திய கேளிக்கூத்துகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்தும் இப்போது வரைக்குமே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவில்லை.

தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் 
வெளியீடு : தோழமை பதிப்பகம் 
விலை : ரூ. 55

18 ஜன., 2012

பயோடேட்டா - தொண்டன்


பெயர்                                : அடிமை அல்லது தொண்டன்
இயற்பெயர்                   : அடிப்படை உறுப்பினர்
தலைவர்                         : கட்சியின் தலைவர்
துணைத் தலைவர்கள்   : தலைவரின், மனைவி, மகன்,மகள்
                                                      பேரப்பிள்ளைகள்
மேலும் 
துணைத் தலைவர்கள்  :தலைவரின் சின்ன வீடு, மைத்துனன், மா.செ’க்கள்
வயது                                :  திராவிடக் குஞ்சுகள் இன்னும் வளரவே இல்லை
தொழில்                          : போஸ்டர் ஒட்டுவது, கோஷம் போடுவது
பலம்                                  : அறிவு வளராமல் இருப்பது
பலவீனம்                        : தலைவனை, தலைவியை கடவுளாக பார்ப்பது
நீண்ட கால சாதனைகள் நிரந்தரத் தலைவன், பொதுச்செயலாளர்
சமீபத்திய சாதனைகள்   : சீமான், விஜய், அன்னா அசாரே
                                                        போன்றவர்களையும் நம்புவது
நீண்ட கால எரிச்சல்         : பிரியாணியும், குவாட்டரும் மட்டுமே கொடுப்பது
சமீபத்திய எரிச்சல்     : கட்சிக்காரனுக்கு ஓட்டுக்கு துட்டு தராதது
மக்கள்                                : இலவச அரிசிக்கு வரிசையில் நிற்பவர்கள்
சொத்து மதிப்பு              : சில கரை வேட்டிகளும், வினைல் போஸ்டர்களும்

நண்பர்கள்          : சக தொண்டர்கள் மட்டும் (பதவியில் இருப்பவர்கள் அல்ல)
எதிரிகள்              : எதிர் அணியில் இருப்பவர்கள் 
                                    (தேர்தலுக்கு தேர்தல் மாறும்)
ஆசை                    : சிறந்த அடிமையாக காட்டிக்கொள்ள
நிராசை                : பிள்ளைகள் கல்வி கற்பதால் சொந்த வீட்டிலேயே
                                    பருப்பு வேகாதது
பாராட்டுக்குரியது      : கருணாநிதி, எம்,ஜி,ஆர், ஜெயலலிதா இப்போது 
                                                 விஜயகாந்த் என தலைவர்களை உருவாக்கியது
பயம்                                   : வீட்டில் மனைவியிடம் மட்டும்
கோபம்                             : இயலாமையில் கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது 
காணாமல் போனவை   : ஒவ்வொரு வீட்டிலும் ஒரே கட்சியை ஆதரிப்பது
                                               (இப்பல்லாம் ஒரே வீட்டில் பல கட்சித் தொண்டர்கள்)
புதியவை                   :  இணையத்தில் வீரம் பேசுவது
கருத்து                        : தலைவர் சொல் மிக்க மந்திரம் இல்லை
டிஸ்கி                         : ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் நிறுவனம்
                                          ஆகவும் அதன் தலைவர்கள், அவரின் குடும்பத்தார்கள் 
                                           பதவிகளையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு 
                                          ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்தே அவர்கள் 
                                          பின்னால் வாலாட்டும் தொண்டர்களின் 
                                          புத்தியைப் பார்த்து பரிதாபமே வருகிறது..                                             

17 ஜன., 2012

பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?)


சென்னை மாநகரப் பேரூந்தின் 
அன்றாடப் பயணி ஒருவன்
சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை உணர முடியாத 
நடுத்தர வாசியின் ஷேர் ஆட்டோ பயணத்தின் 
அடைசலில் சிக்கி இறங்கியபின் உடை கலைந்த 
வருத்தங்கள் பற்றி கவலைப்பட தேவையற்ற 
கார் வைத்திருப்பவன் தன் அலுவலக நேரம் முடிந்தபின் 
பாருக்குப் போகும்போது மனப்பாடம் செய்த பொய்யை 
சொல்ல வேண்டிய அவசியமற்ற 
பணக்கார முதலாளியின் 
விமானப் பயணத்தின் தாமதம் அறிந்தும் 
கவலை கொள்ளாது அருகிலிருந்தவளின் சில்மிஷத்தில்
இந்த நாள் கடந்துபோகும் இரவு வேளையில்
வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுத்த 
மரபணு மாற்ற விதையை பயன்படுத்தும் 
ஒரு அப்பாவி ஏழை விவசாயியின் மகனாகிய நான் 
சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலையொன்றைத் 
தேடி..

14 ஜன., 2012

மழை நாட்கள்...


உன்னைப் பார்த்த முதல் கனத்தில்
உன்மேல் காதல் வரவில்லை
காரனம்
நீ எனக்கு
முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு அப்படித்தான் என நினைக்கிறேன்..

நீயும்,
நானும்
சில சந்திப்புகளால்
காதல் வயப்பட்டோம்..

நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிக்கொண்டது மாதிரி
நடித்தோம்..

நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்..

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க
நான்தான் செலவு செய்தேன்..


நீ அடிக்கடி கோபப்பட்டாய்..
நான் விலகி செல்ல ஆரம்பித்தேன்..


நீ சில காரணங்களை சொன்னாய்
நானும் சொன்னேன்.


நீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்..


விதி நம்மை
ஒரு நேர்கோட்டில் நிருத்தியபோது
நாம் 
நம் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தோம்
அவர்கள்
விளையாட்டின் சுவாரஸ்யத்தில்
நம்மை மறந்தபோது
என் கைகளை
இறுகப்பற்றிக்கொண்டாய்
நம் கண்களில் 
கொஞ்சம் கண்ணீரும் 
கொஞ்சம்  காதலும் 
எட்டிப்பார்த்தது..

13 ஜன., 2012

புத்தகக் கண்காட்சியும், இரண்டு அடிதடிகளும்...


சண்டை : 1
நேற்று (12.01.2012) மாலை புத்தகக் கண்காட்சியில் உயிர் எழுத்து அரங்கின் முன்னால் வசுமித்ரன், சங்கரராம சுப்பிரமணியன் இருவரும் இலக்கிய விவாதங்கள் முற்றிய நிலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். தீவிர இலக்கியவாதிகள் முன்னிலையில் நடந்த இந்த சண்டை சுற்றியுள்ள நண்பர்களால் விலக்கிவிடப்பட்டாலும் அந்த நேரத்தில் அவ்விடத்தில் இருந்த சிலர் இவர்களை பார்த்த விதம் வருத்தமாக இருந்தது. என்னதான் படித்தவர்களாக இருந்தாலும் மனதளவில் இன்னும் மாறாமல் இருக்கும் இவர்கள் படைப்பாளிகளாக இந்த சமூகத்துக்கு என்ன கொடுத்துவிட முடியும்?. 

இந்த சண்டைக்கு நீண்டநாள் கருத்து மோதல் காரனமாக சொல்லப்பட்டாலும், ஊர் கூடியிருக்கும் ஒரு பொது அரங்கில் அதிலும் புத்தகக்கண்காட்சியில் நடந்த இந்த கேலிக்கூத்து படைப்பளிகள் அனைவரையும் சேர்த்து அசிங்கப்படுத்திவிட்டது. படித்தவர்கள் பண்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பது எழுதுவதற்கு மட்டும்தான் போலும்.

குழிப்பணியாரம்:
விமலாதித்த மாமல்லன் தலைமையில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் (கேண்டீனில்தான்) நான். கேபிள், நரேன், கவிராஜன், ரோசா வசந்த், லக்கி, அதிஷா, ஜெயராஜ் பாண்டியன் அனைவ்ரும் மாமல்லனின் பேச்சில் மயங்கியதை பார்த்ததும், மாமல்லன் அனைவருக்கும் குழிப்பணியாரம் வாங்கித்தருவதாக அடம்பிடித்தார். ஆனால் கேண்டீனில் மாவு தீர்ந்ததால் நாங்கள் தப்பித்தோம். மாமல்லனை தன் கேமராவால் விதவிதமாக சுட்டுத்தள்ளினார் ஜெயராஜ் பாண்டியன். அதில் ஒரு போட்டோவில் மாமல்லன் வெடிச்சிரிப்புடன் அபாரமாக இருந்தார். விரைவில் பேஸ்புக்கில் வரும்.

சண்டை: 2
இரவு 9 மணிக்குமேல் நண்பர்கள் ஜெயராஜ் பாண்டியன், நரேன், கேபிளுடன் ஆற்காடு மெஸ்சுக்கு சாப்பிடப்போனோம், உனவு முடித்ததும் ஜெயராஜ் பாண்டியன் கிளம்பிவிட்டார். அதன்பிறகு நான். நரேன், கேபிள் மூவரும் இந்திய சினிமாவை புரட்டிப்போடப்போகும் மூன்று திரைக்கதைகளை அலசிக்கொண்டிருந்தோம்.

இரவு பதினோரு மணிக்கு மேல் எங்களை ஒரு இருபது வயதுப் பையன் முழுப்போதையில் தள்ளாடியவாறு கடந்துபோனான். ஆற்காடு சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு ஒரு தற்காலிக வேகத்தடையாக இருந்தான். அவன் சாலையை கவனிக்காமல் தன் மொபைலில் யாருடைய நம்பரையோ தேடிக்கொண்டிருந்தபோது பில்ராத் போகும் சாலை வழியாக வந்த ஆட்டோ ஒன்று குடிமகனை உரசிக்கொண்டு திரும்பியது. அப்போதும் தன் மொபைலில் தீவிரத்தேடலில் இருந்தவனை ஆட்டோ ஓட்டுனர் சென்னையின் பிரத்யோக கெட்ட வார்த்தையில் திட்டவே, குடிமகன் பதிலுக்கு திட்ட, குடிமகனின் ஒல்லி தேகம் ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு நம்பிக்கையை வரவைத்து ஆட்டோவை நிறுத்திவிட்டு குடிமகனை ஒரு அறை விட, போதை குடிமகனையும் உசுப்பிவிட இருவரும் சாலையில் கட்டிப்புரண்டபோது, சண்டையை அருகில் இருந்தவர்கள் பிரித்துவிட்டனர். ஆனால் இருவரின் செல்போனும் கானாமல் போயின. குடிமகன் செல்போனை கேபிள் எடுத்துக்கொடுத்தார். ஆட்டோக்காரன் செல்போன் கானாமல் போய்விட்டது. ஆட்டோக்காரன் தன்னுடைய கேமாரா மொபைல் தொலைந்த துக்கத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது குடிமகன் ஆட்டோக்காரனிடம் வந்து மண்ணிப்புக் கேட்டான். காலம் கடந்த ஞானம்.

இதனால் அறியப்படும் நீதி:
இந்த இரண்டு சண்டைகளுமே நம் மக்களிடம் சகிப்புத்தன்மை என்பது எந்த அளவுக்கு கானாமல் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.

வாழ்க ஜனநாயகம்...

12 ஜன., 2012

அவர்களுக்கு வீடென்று ஒன்றும் இல்லை...


மழைதான் தொல்லை
வெயில்கூட பரவாயில்லை 
குளிர் மோசம்
குலம் பெருக்கித்தொலைக்கிறது
திறந்தவெளியில் புணர்கையில்
உச்சம் 
கூச்சம் கலைத்து 
வழிச்செல்வோரை 
மகிழ்வூட்டும்
தடம் மாறிய 
லாரிகள்
உடல் மீதேறி
பரதேசம் அனுப்பும்
பிள்ளைகள்
பள்ளி அறியாது
ரேசன் அட்டை 
மின்சாரம்
குடிநீர் 
எந்த வசதியும் தேவைப்படாது
போலீஸ் அடிக்கும்
போக்கிரிகள்
எம் பெண்டுகளை
தூக்கிச்செல்வான்
அல்லா
ஜீசஸ்
கிருஷ்னா
சிவன்
இலவச உணவுக்கு மட்டுமே
அன்றாடம் வேலை
அளவற்ற குடி 
தெருவோர அடுப்புச் சாப்பாடு
நவ நாகரீக மாந்தர் மத்தியில்
விலங்கு வாழ்க்கை
எப்போதும்
எங்கள் முகவரி
C/O : பிளாட்ஃபார்ம்..

11 ஜன., 2012

உயிர்ப்பிக்கும் காதல்...


பிரிவின்
கடைசி வினாடிகளில்
கண்களில் வழியும் நீர்
மழை நீங்கிய
நகரமொன்றின்
ஈரச்சாலைகளில்
ஒரு நதியை உருவாக்கும்
முயற்சியை கைவிட்டு
விசும்பல்கள் ததும்பி
இயல்பு நிலை திரும்புகிறது..

10 ஜன., 2012

பயோடேட்டா - நக்கீரன் "கோபால்”


பெயர்                        : நக்கீரன் "கோபால்”
இயற்பெயர்                    :     ஆர்.கோபால்
தலைவர்                   : நக்கீரன் குழுமம்
துணைத் தலைவர்              : தி.மு.க கொ.ப.செ
மேலும்
துணைத் தலைவர்கள்            : காமராஜ், ஜெகத், மற்றும் 
                                                             சிங்கள ஆதரவாளர்கள்
வயது                        : அரசில்வாதியாக மாறும் வயது
தொழில்                    : பணம் பன்னுவது          
பலம்                        : நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் 

                                     ஏமாளி வாசகர்கள்           
பலவீனம்                : என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை 
                                       தெரிந்து போவது
நீண்ட கால சாதனைகள்     : வீரப்பன் கேசட்டுகள் 

சமீபத்திய சாதனைகள்       : மீண்டும் பரபரப்பு (மாட்டுக்கறி மாமி)
நீண்ட கால எரிச்சல்             : வால்டர் தேவாரம், ஜெ. ஜெ.. 
சமீபத்திய எரிச்சல்               : சவுக்கு
மக்கள்                         : மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள்     
சொத்து மதிப்பு       : இன்னும் சில தினங்களில் தமிழக
                                         லஞ்ச ஒழிப்பு போலிசாரால் வெளியிடப்படலாம்
நண்பர்கள்                 : முன்பு மனித உரிமை பேசுவோர்,இப்போது
 
                                             உடன்பிறப்புகள்
எதிரிகள்                    : என்றென்றும் ஜெ..
ஆசை                         : அரசியல்வாதியாக
நிராசை                     : பத்திரிகையாளர்

பாராட்டுக்குரியது :ஜெயலலிதாவை எதிர்த்தது        
பயம்                            :அம்மாவின் ஆட்சி
கோபம்            : ஈழ ஆதரவு முகத்திரையை  கிழித்தவர்கள் மீது
காணாமல் போனவை    : நெற்றிக்கண்ணை திறப்பினும்
                                                     குற்றம் குற்றமே  
புதியவை               :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால் 
                                         செல்வம் கொட்டுமே
கருத்து                    : மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் 
                                      வளத்ததுதான்........            
டிஸ்கி                     : தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!

8 ஜன., 2012

நான் ஏன் போராளியாகவில்லை?...

ஒரு போராளியாய் 
மாற முடியாது என்னால் 
நான்
எனது குடும்பம் 
எனது சந்தோசம்
எனது தலைவன்
இப்படியாக 
ஏகப்பட்ட 
”எனது”க்களுக்காக
வாழவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு 
எம் தலைவர்கள்
குறைந்தது இரண்டு மனைவிகளை உடையவர்கள்
எனது கடவுள்களும்
எனது வழிகாட்டிகளும் அப்படித்தான் 
என் தலைவர்களைப் போலவே
ரகசிய ஆசைகளும் 
வாரிசுகளின் வாழ்வும் 
எனக்கு முக்கியம் 
மேலும் 
எனது ஜாதி
எனது ஊர்
எனது மாநிலம் 
எனது மொழி
எனது....
எனது ....
இப்படியாக 
மேலும் பலப்பல 
”எனது”க்களுக்காகவும்
நான் வாழவேண்டியிருக்கிறது
ஆகவே 
என்னால் 
ஒரு போராளியாக மாறவே முடியாது
மாறாக 
அவர்களை 
பாராட்டவோ
திட்டவோ
அல்லது 
அவர்களின் தியாகத்தை வைத்து 
ஆதாயம் தேடவோ
பழகிக்கொண்டுவிட்டதாலும் 
என்னால்
ஒரு போதும் போராளியாக
மாறவே முடியாது..
மாறவே முடியாது ...

மாறவே முடியாது ....

7 ஜன., 2012

தெர்மக்கோல் தேவதைகள்...


கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயண் எழுதி “உ”பதிப்பகத்தால் வெளியிடப்படும் அவரின் ஐந்தாவது புத்தகம் இது. சங்கர் நாரயணுக்கு என்று ஒரு ராசி உண்டு. அவரின் இரண்டாவது புத்தகமான “சினிமா வியாபாரம்” மற்றும் “கொத்து பரோட்டா” தவிர்த்து மற்ற மூன்று ப்த்தகங்களான “லெமன் ட்ரீயும் இரண்டு ஷட் டக்கீலாவும்” நாகரதனா பதிப்பகத்துக்கு முதல் புத்தகம், “மீண்டும் ஒரு காதல் கதை” எங்களின் “ழ” பதிப்பகத்துக்கு முதல் புத்தகம். இப்போது இவரின் “தெர்மக்கோல் தேவதைகள்” உலகநாதனின் “உ” பதிப்பகத்துக்கு முதல் புத்தகம். 

இப்படி முதல் புத்தகமாக சங்கர் நாராயணின் புத்தகத்தை வெளியிட்டதில் இதுவரை யாரும் புத்தக விற்பனைக்காக சிரமப்பட்டதே இல்லை. காரனம் சங்கரின் வாசகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். எங்கள் “ழ” பதிப்பக நிறுவனர் ஓ.ஆர்.பி.ராஜா “கொத்து பரோட்டாவை” புத்தகமாக வெளியிடலாம் என்று சங்கரை கேட்டபோது அவர் முடியாது என மறுத்துவிட்டார். ஆனால், ராஜா பிடிவாதமாக அதனை வெளிக்கொண்டு வந்தார். இப்போது கைவசம் ”கொத்து பரொட்டாவை” மற்ற புத்தகங்கள்தான் இருக்கிறது. ஈரோடு சென்றபோது நண்பர் கார்த்திகை பாண்டியனை சந்தித்தபோது ஒரு தகவலை சொன்னார். சென்னை வந்த அவர் நண்பர் வாங்கிவந்த புத்தகங்களில் “கொத்து பரோட்டாவும்” இருந்ததாக, அவரின் நண்பருக்கு கேபிளையும், அவரது வலைப்பக்கத்தையும் பரிட்சயம் இல்லை. ஆனாலும் அவர் “கொத்து பரொட்டாவை” வாங்கி வந்ததாக சொன்னார்.

கேபிளின் கதைகளுக்கு முதல் ரசிகன் நானும், நண்பர் ”விந்தைமனிதன்”  ராஜாராமனும்தான். காரனம் அவரின் பெரும்பாலான கதைகளை எழுதுவதற்கு முன்பே எங்களிடம் சொல்லியிருக்கிறார். அவரின் எல்லா கதைகளும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவரின் மற்றும் அவரின் நண்பர்களின் அனுபவங்களை கதைகளாக்குவதில் சமர்த்தர். ஒவ்வொரு கதைக்கும் அதில் வரும் ஒருசில இடங்கள்தான் அவரின் கற்பனையாக இருக்கும். அந்த கற்பனைதான் கதைக்கு முக்கியமான திருப்பத்தை தரும்.

”தெர்மக்கோல் தேவதைகள்” தொகுப்பில் மொத்தம் பதினெட்டு சிறுகதைகள் இருக்கிறது. முதல் கதையில் ஒரு உதவி இயக்குனரின் பார்வையில் நகர்கிறது. சினிமா உலகத்தில் இவரும் ஒருவராக இருப்பதால் சுயஎள்ளல் மிக நன்றாக வருகிறது. இப்படி ஒவ்வொரு கதையாக கேபிள் நம்மை இன்னொரு உலகத்திற்க்குள் அழைத்துச்செல்கிறார். இவரின் கதைகளில் வரும் பெண்களைப்பற்றி தனி ஆய்வே செய்யலாம். நுணுக்கமான பெண்களின் உலகிற்க்குள் இவர் அந்த பெண்களின் மனநிலையோடு கதைகளை விவரிக்கிறார்.

தெர்மக்கோல் எப்போதும் உள்ளிருக்கும் தன்மையை அதன் இயல்பிலேயே வைத்திருக்கும், அது வெப்பமோ, குளிர்ச்சியோ எதுவாக இருந்தாலும் அதன் தன்மை மாறாமல் காப்பாற்றும். அதேபோல் வெளியில் இருக்கும் வெப்ப மாறுதல்களை உள்ளே அனுமதிக்காது. அதேபோல்தான் இவரின் கதைகளில் வரும் பெண்மக்களும் தங்கள் இயல்புகளில் உறுதியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் ஒவ்வொரு கதையாக நான் விவரிப்பதைவிட வாங்கிப் படித்து நீங்களே திரு.சங்கர் நாராயணிடம் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.

மிக அருமையான கதைகள், மிக அருமையான தொகுப்பு அவசியம் படித்து, மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யவேண்டிய புத்தகம். 

இவரின் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..

தெர்மக்கோல் தேவதைகள்
விலை : ரூ.50
வெளியீடு: “உ” பதிப்பகம்

அதன் விபரங்கள் :

அரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
அரங்கு எண் : 334 டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்

இந்த அரங்குகளில் எங்களின் “ழ” பதிப்பகம், மற்றும் உலகநாதனின் “உ” பதிப்பக வெளியீடுகளும் கிடைக்கும்

6 ஜன., 2012

35 வது சென்னை புத்தகக் கண்காட்சி, முதல் நாள்...


நேற்று 05.01.2012 மாலை  5 மணிக்கு சென்னையில் 35 வது புத்தகக் கண்காட்சி இனிதே துவங்கியது. வார நாட்களில் தினமும் மாலை 3 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். மொத்தம் 682 அரங்குகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு,ஃப்ரென்ச் மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கும். நுழைவுக் கட்டணம் பெரியவ்ர்களுக்கு ரூ.5 ம், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அனுமதியும். அனைத்து புத்தகங்களுக்கும் 10% விலைக்கழிவு தருகிறார்கள்.

புத்தகக் கண்காட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து இருப்பதால் வீட்டில் இருந்தே தேவையான பைகளை எடுத்துச்செல்லுங்கள். மேலும் பல நல்ல ஆலோசனைகளை நண்பர் சிராஜ் வழங்கியிருக்கிறார். அவசியம் படித்து பின்பற்றுங்கள்..

எங்கள் “ழ” பதிப்பக ம்ற்றும் உலகநாதனின் “உ” பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் இடங்கள்..
1. அரங்கு எண் : 161,162, ராஜகுமாரி பப்ளிகேஷன்
2. அரங்கு எண் : 334 டிஸ்கவரி புக் பேலஸ்

மாலை ஆறு மணிவாக்கில் அரங்குக்குள் நுழைந்தபோது பைக் கட்டணமாக ரூ.10 கேட்டார்கள். ஆனால் முதல்நாள் மட்டும் அரங்கினுள் நுழைய இலவசமாய் அனுமதித்தார்கள். புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு, வாகனங்களுக்கு  கட்டணம் விதிப்பது சரியான செயல் இல்லை. பபாசி தொடர்ந்து இந்த தவறை செய்கிறது. 

அடுத்து நேற்று கூட்டம் அவ்வளவாக இல்லை. பதிவர்கள் லக்கி, அதிஷா இருவரும் முன்னமே வந்து அரங்கத்தை சுற்றிவந்தனர், அதன்பின் கேபிள் வந்தார். மேலும் பபஷா, கே.வி.ஆர், ராஜகோபால் ,தினேஷ், சங்கர், மயில் ஆகியோரும் வந்திருந்தனர். பபாஷா & கோ லயன் காமிக்ஸ் தொகுப்பை வாங்கியிருந்தனர், அவர்களின் உதவியால் மீனாட்சி புத்தக நிலையத்தில் ( அரங்கு எண் : 422) சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் சல்லிசாக வாங்க முடிந்தது. சுஜாதாவின் புத்தகங்கள் இதற்கு அடுத்தபடியாக விசா பதிப்பகத்தால் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. என்னுடைய பசங்களுக்காக கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். மயில் சு.வெங்கடேசனின் ”காவல் கோட்டம்” புத்தகத்தை வாங்கினார். தமிழினி காவல் கோட்டம் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஒரு இலக்கியவாதி ஜோல்னாப் பையை வழங்குகிறது.

நேற்று நிறைய கடைகளில் புத்தகங்கள் அப்போதுதான் வந்து இறங்கத்தொடங்கின. சாப்பாட்டுக்கடைகளும் அவ்வளவாக திறக்கப்படவில்லை நான்கு போண்டா ரூ. 50 க்கு விற்பதாக நண்பர் சொன்னார். கேபிளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் நண்பர் தன்னுடைய கவிதைப் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தார். வரும் சனியன்று நாகரத்த்னா பதிப்பகம் சார்பாக ஒரு கவிதை புத்தகம் வெளியிட இருக்கிறார். எனவே இனி அவர் நிறைய எண்டர் கவிதைகள் எழுதி உங்களை என்கவுண்டர் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

கிழக்கு இந்தமுறை தனது அரங்கங்களை தனித்தனியாக வைத்திருக்கிறது. இந்தவருடம் அவர்கள் சில புத்தகங்களை மட்டுமே வெளியிட்டதால் அங்கு கூட்டம் குறைவே. உயிர்மையில் ஓரளவு கூட்டம் இருந்தது. இந்தவருடம் உயிர்மையில் நான் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் அதிகம்., கீழைக்காற்று இம்முறை அதிக புத்தகங்களை வைத்திருக்கிறது, குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் இருக்கிறது. இம்முறை சி.டிக்கள் விற்பனையும் வந்திருக்கிறது. அதிகம் கல்வி சம்பந்தமான சி.டிக்கள்தான், ஹாலிவுட் படங்களும் கிடைக்கிறது..

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது ...

காதல்
நம் பதின்மத்துக்குள் 
ஒரு அழையா விருந்தாளியென 
நுழைந்துவிடுகிறது
பின் 
நம் மன வீட்டின் கதவுகளை 
நீக்கிவிட்டு 
அங்கே
ஒரு வளரும் கல்லறையாக 
மாறிவிடுகிறது
வணங்கவும் 
பூஜிக்கவும்
வையவும் 
நம்மை கட்டாயப்படுத்தும் 
அக் காதல் 
ரகசியதிலிருந்து தன்னை 
காமமாக விடுவித்துக்கொள்கிறது
அவசியம் மறைக்கவேண்டிய 
உறுப்புகளை
ரகசியமாக தடவியும் 
அந்தரத்தில் புணர்ந்தும்
தன்னை தீவிரப்படுத்தும் 
அதே காதல்
ஒரு அன்பில்
புணர்தலில்
நிராகரிப்பில்
இன்னொரு ஆத்மாவை 
நம்முள் நுழைக்கிறது
அது 
வாரிசுகளை உருவாக்கி
தன் வம்சத்தை பெருக்குகிறது
ஒரு அழையா விருந்தாளியாக 
நுழைந்த காதல்
உறுப்புகள் துவண்ட நாளில்
நம் மன வீட்டின் அத்தனை சுவர்களையும்
உடைத்துக்கொண்டு 
ஒவ்வொரு பெரிசுகளின் 
வாய் வழியாக 
வண்டை வண்டையாக 
இடம் மாறி
தன் இருப்பை 
நிலை நிருத்துகிறது..

5 ஜன., 2012

அறிவுப் புரட்சி செய்...


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
வெற்றிபெறுவோம்
புரட்சியின் விதிகள்
வரையறுக்கப்படாதவை..

எல்லா இடங்களிலும் 
நசுக்கப்படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப்படும் புரட்சி ..

மறுக்கப்பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை 
புரட்சி.. 

கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..

உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா
போராடு
சிறை செல் 
மரித்துப் போ
மாவீரன் என  
சுவரொட்டியில் சிரி..

சே
மாவோ 
லெனின் 
மார்க்ஸ் 
பெரியார் 
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..

இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை 
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது 
மாற்றத்தைக்  கொண்டு வர 
முதலில் நீ மாறு...