3 ஜன., 2012

விமர்சனம்...


இந்த வார்த்தையே சினிமா விமர்சனத்தை மட்டுமே பொதுவாக குறிப்பதாக அனைவராலும் நம்பும் அளவுக்கு மாறிவிட்டது. நம் பார்வைகள் குறித்த பதிவுகளாகவும், பரிமாறல்களாகவும், எதிர்க் கருத்துகளாகவும் பார்க்கப்படும் விமர்சனங்கள், தனி மனித பார்வைகளாக இருந்தாலும் அவை சமுதாயத்தின் பார்வையே. பொதுவாக படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை மக்களிடம் முன்வைக்கும்போது தன்னுடைய படைப்புக்கான அங்கீகாரத்தையும், பாராட்டுக்களையும் மட்டுமே எதிர்பார்க்கிறான். வெகு சிலரே தன்னுடைய படைப்புகளுக்கான எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு பதிலளிக்கிறார்கள், அல்லது தங்களது அடுத்த படைப்புகளை சரிசெய்து கொள்கிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகில் இப்போது இணையவழியே சுலபமாக தங்கள் எழுத்தை பார்க்கும் பலரும் அதிகப்படியாக மொக்கைகளாக எழுதித்தள்ளுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அனைவருமே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்காததுதான். மிகுதியான வாசிப்புதான் நம்மிடம் இருந்து தரமான படைப்புகளை வெளிக்கொண்டுவரும். ஆனால் நாம் நூல் நிலையங்களில் சென்றுகூட படிப்பது இல்லை. 

தமிழின் முக்கியமான படைப்புகளை, வரலாறுகளை, எழுத்துலக ஜாம்பாவன்களை அறிய முனைவது இல்லை. இங்கே யாவருக்கும் மிகச்சுலபமாக வருவது கவிதைதான். அதிலும் புதுக்கவிதை என்று ஒரு வஸ்து வந்தபின் "ஏ மனிதா!..." என்று ஆரம்பிக்கும் சமூக விழிப்புணர்வு கவிஞர்கள் முதல் "உன் பார்வை என்ன சுனாமியா?" என்று எழுதும் காதல் கவிஞர்கள் வரை சரமாரியாக எழுதித் தள்ளுகிறார்கள். கேபிளின் "எண்டர் கவிதைகள்" உருவான விதம் அறிந்தால் நீங்கள் அனைவரும் எங்களின் மீது கொலைவெறி கொண்டு பாயக்கூடும். இவ்வாறாக தன் எழுத்துத் திறமையை உலகுக்கு அறியவைத்து தன்னைத்தானே பாராட்டி மகிழும் பதிவர்களை கண்டு உண்மையில் ஆச்சர்யம் அடைகிறேன். ஏனெனில் இந்தக் கொலைவெறி கவிஞர்களில் நானும் ஒருவனே என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன், கூச்சம் மிகுதியாகி சொல்லிக்'கொல்'கிறேன்.

பழைய இலக்கியங்கள், அல்லது கு.ப.ரா. புதுமைபித்தன், ப.சிங்காரம், ஜெயகாந்தன், அசோகமித்ரன். இந்திராபார்த்தசாரதி, கி.ரா போன்றவர்களின் படைப்புகளை படிக்க முடியாவிட்டாலும் சுஜாதா, பாலகுமாரன் அல்லது சாரு, ஜெமோ, வாமுகோமு, தமிழ்மகன், பாரா புத்தகங்களை வாசித்தால் கூட எழுத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து நல்ல கதைகளையோ, கட்டுரைகளையோ தரமுடியும், கவிதை எழுதுபவர்கள் அவசியம் மனுஷ்யபுத்திரனை படியுங்கள். இப்போது கவிதை எழுதும் எத்தனை பேர் பாரதியை படித்திருப்பீர்கள்? 

பலமுறை யுவகிருஷ்ணா பதிவுகளை ஒன்றரை நிமிசத்துக்குள் படிக்கும் அளவுக்கு எழுதுங்கள் என்று சொல்லுவார். என்னைப்போல ஆட்களுக்குத்தான் அதன் நிஜம் தெரியும். காரணம் அனைத்து பதிவுகளையும் படிக்கிற ஆள் நான். நம்ம ஆளுங்க ஒரு பதிவாவது உருப்படியா எழுதமாட்டங்களா? என்கிற ஆதங்கத்தில் தொடர்ந்து ஒருத்தர் விடாமல் படிப்பேன். ஆனால் முதல் பாராவை தாண்டமுடியாத அளவுக்கு இருக்கிறது பெரும்பாலோரின் எழுத்துக்கள். என்னைவிட அப்துல்லாதான் ரொம்ப பாவம். அவர் எனக்கு முன்பிருந்தே பல வருடங்களாக எல்லோரின் பதிவுகளையும் படிப்பவர். அத்தனைபேரின் பதிவுகளையும் படித்துவிட்டு இதற்குமேல் தானும் எழுதினால் தானும் இந்தக்கூட்டத்தில் ஒருவனாகி விடக்கூடும் என்ற கவலையால் தன் பிளாக்கை ஒரு அடையாளத்துக்காக விட்டுவைத்திருக்கிறார். 

ஆகவே நண்பர்களே இந்த விமர்சனத்தையும், ஏற்றுக்கொள்வதோ அல்லது காறித்துப்புவதோ உங்களின் உரிமை என்பதால், உங்களின் விமர்சனத்தை( நீ என்ன எழுதிருக்கேன்னு புரியலை என்பவர்கள் தவிர்க்கவும்) சொல்லிவிட்டுப் போகும்படி வேண்டி வணங்கி(ஹெ..ஹெ) கேட்டுக்கொள்கிறேன்.

30 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

விமர்சனங்கள் என் கால் தூசு :)

Philosophy Prabhakaran சொன்னது…

// அதிலும் புதுக்கவிதை என்று ஒரு வஸ்து வந்தபின் "ஏ மனிதா!..." என்று ஆரம்பிக்கும் சமூக விழிப்புணர்வு கவிஞர்கள் முதல் "உன் பார்வை என்ன சுனாமியா?" என்று எழுதும் காதல் கவிஞர்கள் வரை சரமாரியாக எழுதித் தள்ளுகிறார்கள். //

அய்யா புரட்சிக்காரரே... அந்த பதிவர் இந்த வரிகளை படித்தால் கண்டுபிடித்துவிடுவார்... உஷார்...

Philosophy Prabhakaran சொன்னது…

முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று சொல்வது எப்படியோ அதே போல தான் புத்தக வாசிப்பு உள்ளவர்கள் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்பதும்...

ஏன் அன்றாடம் சமுதாயத்தில் பார்க்கும் சம்பவங்கள், கடந்து வரும் செய்திகள் போன்றவற்றில் இருந்து ஒருவன் எழுத்தை கற்றுக்கொள்ள முடியாதா...?

ஒருவர் ஒரு பாதையில் வெற்றி கண்டுவிட்டால் எல்லோரும் அதே பாதையில் சென்றுதான் வெற்றிபெற வேண்டும் என்பதல்ல... Everyone has their own way to success...!

BTW, யாராவது எங்களுக்கு புத்தகங்கள் படிப்பதற்காக மட்டும் மாதம் இருபதாயிரம் சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தினால் நாங்கள் கூட சிறந்த வாசிப்பாளர்களாக உருவெடுப்போம்...

Philosophy Prabhakaran சொன்னது…

// நீ என்ன எழுதிருக்கேன்னு புரியலை என்பவர்கள் தவிர்க்கவும் //

உண்மையிலேயே இப்பதான் (என்னை மாதிரி பாமரர்களுக்கும்) கொஞ்சம் புரியுறா மாதிரி எழுதியிருக்கிங்க...

Philosophy Prabhakaran சொன்னது…

உடான்ஸ்-ல நீங்க இணைச்சாதான் உங்களுடைய நட்சத்திர பதிவா காட்டும்... எனவே நீங்களே இணைத்துக்கொள்ளவும்....

பெயரில்லா சொன்னது…

இதை படித்து முடிக்க சரியாக 1 நிமிடம் 31 வினாடிகள் ஆனது.

பெயரில்லா சொன்னது…

//
Philosophy Prabhakaran கூறியது...
விமர்சனங்கள் என் கால் தூசு :)///

தம்பி..உன்னோட 2012 ஆண்டு பலனை நீயே எழுதிட்ட. :-)

பெயரில்லா சொன்னது…

இதற்கான எதிர்பதிவை விரைவில் போடுகிறேன். அதுவரை காக்க..காக்க!

ப.கந்தசாமி சொன்னது…

பதிவுகளின் நோக்கம்= ஒரு கருத்தை மக்கள் முன் வைத்து அதன் மீது ஒரு ஆரோக்யமான விவாதம் நடத்தி, சமுதாயத்திற்கு உபயோகமான ஒரு தெளிவை உருவாக்குவது = என்று நான் கருதுகிறேன். பல ஆங்கிலப் பதிவுகளில் இவ்வாறு நடக்கிறது.

பெயரில்லா சொன்னது…

அதெப்படிண்ணே என்னைப் போன்ற கத்துக்குட்டிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பதால் இந்த பதிவா.

பிரபாவுக்கு வம்புபினை நோண்டுவது வேலையென்றால் சிவாவுக்கு நோண்டியதை நொங்கெடுப்பது தான் வேலையா, நடத்துங்கய்யா உங்க கச்சேரிய.

Thangavel Manickam சொன்னது…

உங்களின் பதிவின் கருத்து ஏற்றுக் கொள்ளும்படியானதாக இல்லை. எல்லோரும் எடுத்தவுடனே இலக்கண சுத்தியுடன் எழுத இயலாது. என்ன வருமோ அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்.

dheva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
dheva சொன்னது…

ஒரு மிகச்சிறந்த வாசிப்பாளனே... தலைசிறந்த படைப்பாளியாகிறான்...!

வரிக்கு வரி உடன்படுகிறேன் செந்தில்...!

யுடான்ஸ் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுவும் கடந்து போகும்! நன்றி!

rajamelaiyur சொன்னது…

/Philosophy Prabhakaran சொன்னது…

விமர்சனங்கள் என் கால் தூசு :)

//

இதுதான் சரி

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஆகவே நண்பர்களே இந்த விமர்சனத்தையும், ஏற்றுக்கொள்வதோ அல்லது காறித்துப்புவதோ உங்களின் உரிமை...///////
////////

சிவா ஏற்கனவே துப்ப ஆரம்பிச்சாச்சி ..
போயி பார்க்கவும் ..........

நிரூபன் சொன்னது…

வணக்கம் செந்தில் அண்ணா,
நல்லதோர் பதிவு,
எமக்கு வரும் பாராட்டுக்களை விட, விமர்சனங்களே எம்மை மேம்படுத்தும் என்பதனை எல்லோராலும் இலகுவில் உணர முடிவதில்லை. சில தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் விரோதிகளாகப் பார்க்கும் பழக்கம் தான் எம் தமிழ் கூறும் நல் உலகில் இருக்கிறது, இந் நிலை மாற வேண்டும்!

கவிதைக்கு நீங்கள் குறிப்பிட்ட வரிகளை நினைத்தி நானும் சிரித்தேன்!
ஆனாலும் என்ன...இவர்கள் தம்மைத் தாமே கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போது...நாம் ஏது சொன்னாலும் திருத்திக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லையே அண்ணா.

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

//கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று சொல்வது எப்படியோ அதே போல தான் புத்தக வாசிப்பு உள்ளவர்கள் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்பதும்//

இதை நானும் ஆமோதிக்கிறேன்.


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர் தான் மீண்டும் ஆரம்பித்துள்ளேன். இப்போதைக்கு என் எழுத்து சகிக்க முடியாது போல் தோன்றினாலும் சீக்கிரமே இம்ப்ரூவ் பண்ண முயற்சிக்கிறேன்.

பதிவுக்கு நன்றி.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சாரு, ஜெமோ, வாமுகோமு, தமிழ்மகன், பாரா///
ஆமா...இவங்கல்லாம் யாரு?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சாரு, ஜெமோ, வாமுகோமு, தமிழ்மகன், பாரா///
ஆமா...இவங்கல்லாம் யாரு?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

என்ன தலைவரே.... நீங்க எல்லாப்பதிவையும் படிக்கனும் என்பதற்காக ஒன்றரை நிமிடத்தில் பதிவெழுத்னுமா...இது ரொம்ப அநியாயம்?
ஒரு மூனு நிமிஷமா உயர்த்தக்கூடாதா? எங்களைப்போல சின்ன சின்ன பூச்சிகள் பிழைத்துக்கொள்வோமே?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

/கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று சொல்வது எப்படியோ அதே போல தான் புத்தக வாசிப்பு உள்ளவர்கள் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்பதும்////
புத்தக வாசிப்பு உள்ளவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுத வரும்.
அவர்களின் நடை எல்லோரையும் கவரும் விதமாகவும் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கோகுல் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

விமர்சனங்கள் என் கால் தூசு :)//

இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.

கோகுல் சொன்னது…

வாசிப்பு எழுத்துநடை மேம்படுத்தும் தான்.
இதிலிருக்கும் இன்னொரு பிரச்சினை என்னென்னா படிக்கறவங்களுக்கும் அந்த வாசிப்புப்பழக்கம் இருந்தாகாணும்,இல்லேன்னா கொஞ்சம் பிரச்சினைதான்.நாம ஒண்ணு சொல்லப்போய்,படிக்கறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கப்போய் .......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நின்னுக்கோரி..... வர்ணம்...... இப்ப கரெக்டா தலைவரே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////! சிவகுமார் ! கூறியது...
//
Philosophy Prabhakaran கூறியது...
விமர்சனங்கள் என் கால் தூசு :)///

தம்பி..உன்னோட 2012 ஆண்டு பலனை நீயே எழுதிட்ட. :-)/////

2012 மட்டுமா?

Unknown சொன்னது…

வாசிப்பு பழக்கம் மிகுதியாக இருப்பவர்கள் எல்லாம் எழுத்தாளர்களாக மாறுவதில்லை...எதையும் வாசிக்காமல் எழுதுபவர்களின் படைப்பு சுய புராணமாகத்தான் இருக்கும்..அது கூட சுவையாக இருப்பதுன்டு சர்ச்சையாவதும் உண்டு,ஆனால் எழுதும் ஆர்வமுடையவர்களுக்கு இணையம் ஒரு சைக்கிள் ஓட்டி பழகும் குழந்தை மனநிலைதான்...பின்னாளில் விமானம் ஓட்டும்போதும் அந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்டிய பழக்கம்தான் கை கொடுக்கும்.என்பது என் தாழ்மையான கருத்து.

Unknown சொன்னது…

//நம்ம நிலமை இப்படி ஆச்சே!!! //
அண்ணா கே.ஆர்.பி...அறிவாளி வேறு!புத்திசாலி வேறு! இப்ப இணையத்தில புத்திசாலிகதான் முண்ணனியில இருக்காங்க! நீங்க...?

சிராஜ் சொன்னது…

/* மிகுதியான வாசிப்புதான் நம்மிடம் இருந்து தரமான படைப்புகளை வெளிக்கொண்டுவரும். */
இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் கூறிய எழுத்தாளர்கள் எல்லாம் தொழில் முறை எழுத்தாளர்கள். அவர்களுக்கு நாள் முழுதும் எழுத்தை பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அதனால் அவர்களால் அவ்வாறு எழுத முடிகிறது. ஆனால் நாம் அப்படி அல்லவே செந்தில் அண்ணா.

சிராஜ் சொன்னது…

மற்றபடி ஒன்றரை நிமிடங்களில் படிக்கும் படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் யுவ கிருஷ்ணாவின் எண்ணங்கள் தானே ஒழிய, அது ஒரு பொதுவான விதியாக முடியாது. யுவ கிருஷ்ணா புதிய தலைமுறையில் எழுதும் எந்தப் பதிவையும் ஒன்றரை நிமிடங்களில் படித்து முடிக்க முடியாது.