27 பிப்., 2012

”ஈழம்” - திரு.சி .சிவசேகரம் அவர்களின் கவிதை...


திரு.சி .சிவசேகரம் அவர்களின் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது..

நாம் ஒவொருவரும் ஈழத்தை எப்படி பார்க்கிறோம் என்பதை காட்டும் கண்ணாடி இந்த கவிதை ...
கவிதை முகத்தில் அறைகிறது .... என்ன செய்யப் போகிறோம் ................

என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைபட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடிதுரைத் தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியகரதனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பால்க் கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டால் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்....

6 கருத்துகள்:

உணவு உலகம் சொன்னது…

திட மனம் படைத்தவர்களையும், ஒரு கணம் அசைத்திடும் கவிதை இது. பகிர்விற்கு நன்றி நண்பரே.

தனிமரம் சொன்னது…

ஈழத்து நிலையை துயரத்தோடு கவிதை படைப்பதில் சிவசேகரம் முதன்மையானவர் அவர்கவிதையைப் பகிர்ந்தற்கு நன்றி .

Marc சொன்னது…

மனதை அறையும் கவிதை

ஹேமா சொன்னது…

இன்னும் ஓயவில்லை நாங்கள்.இனியும் இனியும்.இன்றும் போகிறோம் ஐநா வாசலுக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு.எங்களோடு கை கோருங்கள் தமிழர்களாக.ஆனால் இந்திய அரசு கைவிட்டுவிட்டது இப்போதும்கூட !

பட்டுக்கோட்டையான் சொன்னது…

அண்ணே நல்ல கவிதை , இந்தமாதிரி ஈழத்தை பற்றி கவிதையோ அல்லது கட்டுரையோ படிக்கும்போது கோபம்தான் வருகிறது , அங்கிருக்கும் நம் சகொதர்களுக்குதான் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஆனால் !நம்நாட்டில் தன் ஊரைவிட்டு நாட்டைவிட்டு அகதியைவாலும் மக்களுக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று மனசாட்சி உறுத்துகிறது ....

Bibiliobibuli சொன்னது…

ஹேமா, இன்னுமோ இந்தியா கைவிட்டுட்டுது என்று சொல்லிக்கொண்டிருக்கிறீங்க, சரிதான். இது எங்க போய் முடியுமோ.