19 நவ., 2013

எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?....

கருத்து என்பது எல்லோருக்கும் பொதுவனாதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதில் நியாயம், அநியாயம் பார்ப்பதுமில்லை. இப்படித்தான் கருத்தியல் பற்றிய நமது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. ஆனால், ஓட்டுப்போட்டு நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம், நமக்கான அலுவல்கள் செய்ய நாமே வரிகள் மூலம் சம்பளம் கொடுத்து வேலை செய்ய ஆட்களை நியமிக்கிறோம். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிடுகிறது. பதவிக்கு வந்தவுடன் அவர்கள் அரசர்களாக மாறி விடுகிறார்கள். அலுவலர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் மக்கள் என்பவர்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பிணத்தை எடுக்கவும் பணம் இருக்கனும். இப்படி ஒரு நிலமை மாறவே மாறாதா? என பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அதாவது நடுத்தர, ஏழை வர்கத்திற்கு எப்போதும் இருக்கும் ஆதங்கம். ஆனால், அவர்கள் இல்லாத கடவுளிடம் முறையிட்டு வழமைபோல் அலுவலர்களிடம் கும்பிடு போட்டு நியாயமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கே கை கட்டி நிற்பார்கள். இவர்கள் முறையிடும் அதே கடவுள்தான்(ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வஸ்து இருந்தால்) அலுவலர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் எனும் அறியாமையில் இருந்து அவர்கள் தம்மை எப்போதும் மீட்டெடுக்க விரும்பாதவர்கள். இதற்கான அடிப்படை என்பது சுயநலத்தால் பின்னப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் மாதிரி நம் ஊர் மாறாவே மாறாதா? என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று. தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம், வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3 லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4 லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது. இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன் என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே கொள்கை அடிப்படையில்தான்!.

ஆனால் பொதுமக்களாகிய நாம் பக்கத்து வீடுகளை சகித்துக்கொள்வது இல்லை. அவர்களின் வளர்ச்சியை பொறாமைக்கண் கொண்டுதான் பார்க்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் கூட கிராம அளவில் அம்மக்களிடம் ஒற்றுமை நிலவியது. ஒரு பிரச்சனை என்றால் ஊர் கூடி முடிவெடுப்பார்கள். அது படிப்படியாக ஜாதி மோதல்களுக்கு மட்டும்தான் என குறுகி விட்டது. தெருவில் இருக்கும் நல்லவர்கள் யாரையாவது நாம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கிறோமா? மாறாக அதே தெருவில் எந்த வேலைக்கும் செல்லாமல் ரவுடித்தனம் செய்கிற, எதோ ஒரு அரசியல் கட்சியில் அல்லக்கையாக இருக்கிற ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின் எப்படி அவன் நேர்மையானவனாக இருப்பான் என்பார் கேபிள் சங்கர். கேட்டால் கிடைக்கும் எனும் ஒரு அமைப்பை சுரேகாவும், கேபிளும் ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நமக்கு காட்டியிருக்கிறார்கள். இப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கப்பட்டு அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள். இதேபோல் தமிழகம் தழுவி நிறைய சிறிய அமைப்புகள் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பகுதிகளில் மாற்றத்தை கொண்டுவர போராடுகிறார்கள். இணைய உலகில் சவுக்கு சங்கர், வினவு தளம் தவிர வேறு யாரும் துணிச்சலாக அரசு எந்திரத்தை விமர்சிப்பது இல்லை. ஈழ விவகாரத்தில் அம்மக்களின் போரட்டம் ஏன் ஆரம்பித்தது, பின் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். இறுதி யுத்தத்தில் எதனால் அவர்கள் தோற்றார்கள் என ஈழத்தின் மொத்த வரலாறையும் அறியாதவர்கள்தான் இப்போதும் ஈழ மக்களையும், இங்கிருக்கும் உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள். ஈழ ஆதரவு போராளிகள் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி பணம் வந்ததற்கான ஒரு ஆதரத்தைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் யாரென பார்த்தால் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என அறிந்தே அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கூலி பெறாத விசுவாசிகளாக முழங்குகிறார்கள். தெருநாய்கள் கூட உணவிட்டவருக்குத்தான் வாலாட்டும். நேர்மையாக இருப்பவர்களையும், தன்னால் இயன்றவரைக்கும் சமூகத்தில் யாருக்காவது உதவி செய்பவர்களையும் கேலி பேசும் இந்த அற்பர்களுக்கும் சேர்த்துதான் நாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். அறிந்தே பிழைகள் செய்யும் இம்மக்களை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்???

இங்கு நல்லவர்களே இல்லையா? என்றால். இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் நேர்மையானவராக நல்லக்கண்ணு ஐயாவும், தமிழருவி மணியனும் என இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்கள். அதிகாரிகளில் சகாயம், அஸ்ரா கார்க் போல சில நூறு பேர்களாவது இருப்பது ஆறுதல். நாம் ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே நமக்கு வேலை செய்ய வந்தவர்களிடம் நாம் வேலை வாங்கமுடியும் இல்லாவிட்டால் நம் முதலாளிகளுக்கு நாம் சம்பளம் கொடுப்பது தொடரவே செய்யும்.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லவர்களை தேட வேண்டிய நிலையில் உள்ளது தான் வேதனை...!

ஜோதிஜி சொன்னது…

இந்த பதிவுக்கு ஓட்டு போடுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

நமக்கு இருக்கும் தலைகள் நம்மை சரியாக புரிந்து கொண்டு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

mohamed salim சொன்னது…

சாதிய மோதல்கள் ஒழிந்தால் தான் எல்லாமே வசப்படும்!இதை அறிந்து தான் ஆளும் வர்க்கம், தான் வாழ , மக்களை சாதீய ரீதியாக பிளவுபடுத்துகிறது.

ssk சொன்னது…

நல்லகண்ணு சரி , தமிழருவி... ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லவர்களை தேடினாலும் கிடைப்பார்களா என்ன?

மதுரை சொக்கன் சொன்னது…

அவல நிலை!