21 டிச., 2013

மரணம் - சிறுகதை...

சடாரென கனவு கலைந்தது. நான் எங்கிருக்கிறேன் என்பதை நினைவுக்கு மீட்டு வர சில நிமிடங்கள் கடக்க வேண்டியிருந்தது. எழுந்து  தலகாணி அருகில் கிடந்த செல்போனை துழாவி மணி பார்த்தேன். சரியாக 2:31 என்றது. விளக்கைப் போடாமல் கதவைத் திறந்து மொட்டை மாடிக்கு வந்தேன். மார்கழி குளிர் முகத்தில் அறைய சற்று நிம்மதியாக இருந்தது. ஒரு அரைமணி நேரம் மெதுவாக ஓடியது.

கீழே வந்து தொலைக்காட்சியை உயிரூட்டியபோது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் டூயட் பாடிக்கொண்டிருந்தனர், பிறகு செய்திக்கு மாற்றினேன். டிஸ்கவரி, மூவிஸ் நவ், ஸ்டார் மூவிஸ் மீண்டும் தமிழுக்கு வந்தபோது எம்.ஜி.ஆர் இப்போது லதாவுடன் பாடிக்கொண்டிருந்தார். ப்ரிட்ஜில் இருந்த லெமன் டீயை குடிக்கலாம் எனும் நினைப்பில் விஸ்கி ஒரு லார்ஜ் அடித்தால் என்ன? என்ற கேள்வி மனதை திசை திருப்பியது. இரண்டு ஸ்மால் வித் ஐஸ் க்யூப். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, தேவிகா, சரோஜாதேவி, மஞ்சுளா என ஆட்களும், பாடலும் மாறிக்கொண்டேயிருந்தபோது மணி அதிகாலை 4 என செல்போனில் வைக்கப்பட்ட வாக்கிங் அலாரம் சொல்லியது. இறங்கி தெருவில் நடந்தேன். விஸ்கியின் உபயோகத்தால் இன்றைக்கு மப்ளர் தேவைப்படவில்லை. அவ்வளவு குளிரில் தனியாக கைவீசி நடப்பவனை,  சாலையில் காகிதத்தை கொளுத்தி குளிரை விரட்டும் முயற்சியில் இருந்த ஏ.டி.எம் செக்யூரிட்டி ஆயாசத்துடன் பார்த்தார்.
 
இப்போது மீண்டும் நான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. நான் செத்துப்போயிருந்தேன். சென்னையில் அல்ல ஊரில். ஊரை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அதனால் பத்து வருடத்துக்கு முந்தியிருந்த அதே ஊர் கனவிலும் மாறாமல் இருந்தது. மனிதர்களும் அதாவது பத்து வருடத்துக்கு முன்பு உறவுகள் அப்படியே இருந்தனர். ஹாலில் எங்கள் வீட்டில் அப்பா உபயோகப்படுத்திய பெஞ்சில் என்னை கிடத்தியிருந்தனர். அப்பாவை அவர் இறந்த போது நான் எப்படிப் பார்த்தேனோ அதே மாதிரி என்னையும் பார்த்தேன். ஒருவேளை இது அப்பாவைப் பற்றிய கனவாக இருக்குமோ? மனது லேசாக குழப்பியது.

 
காலையில் டிபன் சாப்பிடும்போது மனைவியிடம் சொன்னபோது கலகலவென சிரித்தாள். ”உங்களுக்கு, கடவுள் மீதே நம்பிக்கை கிடையாது!, கனவு கான்பதெல்லாம் மனப்பிராந்தி” என்றாள். பிராந்தியோ, விஸ்கியோ இத்தனை நாள் கனவில் இது மட்டும் ஏன் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்து குழப்ப வேண்டும்?. ஜாதகம் பார்க்கும் என் நண்பனுக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன். அவன் ”நீ மகர ராசி, கடக லக்னம் எனவே உனக்கு ஆயுள் கெட்டி, ஒன்னும் கவலைப்படாதே!” என்றான். மேலும் ”செத்துப்போன மாதிரி கனவு கண்டா நம்மை பிடித்த பீடை விலகிடுச்சுன்னு அர்த்தம்!” என்றான். மரண பயமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் ஏதோ குழப்பமாக இருக்கிறது.
 
அலுவலகம் கிளம்பும்போது பைக் வேனாமென்று யோசித்தேன். இருந்தாலும் நாத்திக சிந்தனை என்னை கிண்டல் செய்ய, பைக்கை எடுத்து நிதானமாக ஓட்டினேன். சென்னை அண்ணா மேம்பாலம் ஏறியபோது எங்கிருந்தோ, பைக் ரேசில் கலந்து கொண்ட சில இளைஞர்கள் எல்லா வாகனங்களையும் மிரள வைத்தனர். அதில் ஒருவன் என்னை சடாரென இடித்தான், மோதிய வேகத்தில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு பாலத்தில் மோதி கீழே விழுந்தேன். ஆனால் அடி சுமார்தான் என்பதால் உடனே எழுந்து நின்றேன். ஆனால் என்னை மோதிய பையன் பின்னால் வந்த மாநகரப் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்தான், ஒரு நபர் யாரிடமோ ”ஆள் போயிட்டான் சார்” என சொல்லிக்கொண்டிருந்தார்.

11 கருத்துகள்:

ரமேஷ் வீரா சொன்னது…

இது எப்ப அண்ணா?

Unknown சொன்னது…

தம்பி கனவு வந்தது ஒருநாள், அண்ணா சாலையில் ரேஸ் ஓட்டியவன் அடிபட்டது இன்னொரு சம்பவம், இரண்டையும் கதையாக்க முயற்சி செய்ததன் விளைவு. இக்கதை :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படியா கனவு வரணும்...?!!!

சென்னை அப்படி...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயங்கரமான கனவு அண்ணா...
கதை சூப்பர்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

சென்னையில் ரேஸ் ஓட்டுபவர்களால் பயம் தான்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கனவையும் நடப்பையும் இணைத்தது நன்று

பெயரில்லா சொன்னது…

கனவு கனவாகவே இருக்கட்டும்.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

விளைவு

பெயரில்லா சொன்னது…

Nice Post wish you All the best - See more at: http://wintvindia.com/

சசிமோஹன்.. சொன்னது…

பைக் வேனாமென்று யோசித்தேன். இருந்தாலும் நாத்திக சிந்தனை என்னை கிண்டல் செய்ய, பைக்கை எடுத்து நிதானமாக ஓட்டினேன்.///// ம்ம்ம்ம்

Unknown சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன்.

மிக்க நன்றி தலைவரே,

நண்பர் சுரேஷுக்கும் எனது நன்றிகள்..