27 ஜூலை, 2013

பொன்னியின் செல்வன்...

பொன்னியின் செல்வனைப்பற்றி சொன்ன அத்தனை பேரும் அதனை எத்தனை சிலாகித்துப்பேசுவர் என தமிழ்கூறும் நல்லுலகில் அத்தனை பேருக்கும் தெரியும் ஆனால், அதனை பிடிக்காத! ஏன் வெறுக்கும் ஒரு ஆள் ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்குத்தெரியுமா?!. அது நானேதான். பொன்னியின் செல்வன் மட்டுமல்ல, உடையாரும் எனக்குப்பிடிக்காது. ஒரு புனைவாக கற்பனை நாவலாக சாண்டியல்யன் எழுதியவற்றைப்போலவே இவைகளும் என்பதுதான் எனது கருத்து. யாராவது பொன்னியின் செல்வனைப்பற்றி பேசினால் நான் மேலே சொன்ன மாதிரி என் கருத்தை சொல்லும்போது என் மீது வெறுப்பையே உமிழ்கின்றனர். ஒவ்வொருவரும் ஏகப்பட்ட தடவை அதன் மொத்த பாகங்களையும் கீழே வைக்காமல் படித்ததாக உச்சி முடி சிலிர்க்க பேசுவார்கள். நான் வெறுமனே இன்று வெயில் அதிகம் என்கிற செய்தியை கேட்பவனைப்போல் இருப்பேன். காரனம் நானும் அதனை பத்து தடவைக்குமேல் படித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்னதைப்போல் வந்தியத்தேவனோ, குந்தவையோ, வானதியோ, பழுவேட்டரையர்களோ, ஆதித்த கரிகாலனோ, ராஜராஜனோ கூட என்னை வசீகரிக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப்போல் அல்லாமல் தற்போதைய தொலைக்காட்சி மெகா சீரியல் மாதிரிதான் எனக்கு அந்த நாவல். பாலகுமாரன் எழுதிய உடையார்  மெகா மெகா சீரியலை போன்றது அவ்வளவுதான்.

தஞ்சைதான் எனக்கும் பூர்வீகம். ஆனால், என் தாத்தா காலத்தோடு ஏதோ ஒரு காரனத்துக்காக பெரு நகரமான சென்னைக்கு வந்துவிட்டோம். சென்னையில் அன்றிலிருந்து அதாவது, எனக்கு விவரம் தெரிந்த நாளிருந்து இன்றுவரை திருவல்லிக்கேணி வாசி. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். வேலை விசயமாகவோ, நண்பர்களின் மற்றும் அவர்கள் சார்ந்த விஷேசங்களுக்காகவோ பலமுறை பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன், ஏன்? பல நாடுகளுக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால் நான் போகாத ஒரே இடம் தமிழ்நாட்டில் இருந்தது என்றால் அது தஞ்சாவூர்தான். அப்போதைய தஞ்சாவூரான, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு கூட நான் போனதில்லை. நான் இன்றுவரை அதனைப்பற்றி யோசித்ததும் இல்லை.

சற்றுமுன்பு அலுவலகத்தில் அழைத்து தஞ்சாவூர் பெரியகோவிலையும், அரண்மனையும் பற்றி ஒரு ஆவனத்தயாரிப்புக்காக என்னை அதற்கான விபரங்களை சேகரித்து வரவேண்டும் என பணித்திருக்கிறார்கள். என் வேலை என்னவென்பதை உங்களிடம் சொல்லவே இல்லை இல்லையா?. நான் ஒரு தொழில் ஆலோசகனாக வேலை செய்கிறேன். அதாவது யாராவது பெரிய தொழில் தொடங்கவேண்டும் என்றால் அதற்கான பகுதியை தேர்வு செய்தபின் முதலில் என்னைத்தான் அங்கு அனுப்புவார்கள். நான் சென்று அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மனநிலை, எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என அனுமானித்தால் அவர்களின் விவரம். மேலும், அவர்களை சரிகட்டுவதற்கான யோசனைகள். பொருட்களை வாங்க, விற்க சாலை வசதிகள் சரியாக இருக்குமா?. குடிநீர் ஆதாரங்கள். அப்பகுதியை நிர்வாகிக்கும் அதிகார வர்க்கங்களில் நேர்மையான, சரிக்கட்டக்கூடியவர்களின் விபரம் மற்றும் அப்பகுதியின் ஒட்டுமொத்த சாதக, பாதகங்களையும் திரட்டுவதுதான் என் தலையாய பணி!.

தஞ்சையில் என் முதலாளியின் நண்பரின் வீட்டில் எனக்கு தங்க ஏற்பாடு செய்யப்படிருந்தது. பக்கத்து வீடு இப்போதைய அதிகாரமில்லாத மன்னரான ராஜா போன்ஸ்லேயுடையது என அங்கிருக்கும் ஒருவர் சொன்னபோது. ஏன் எனக்கு அந்த வீட்டின்மீதே ஒரு இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டது?. காலை உணவு முடிந்ததும் உதவியாளர் என்னை பெரிய கோவிலுக்கு கூட்டிச்சென்றார். உள்ளே நுழையும்போதே அங்கு கட்டப்பட்டிருந்த யானை வினோதமாக பிளிரியது. நேராக கருவூரார் சன்னதி சென்று வணங்கினேன். அதன்பிறகு அங்கிருக்கும் அரசு அதிகாரிகளிடமும், அர்ச்சகர்களிடமும் முக்கியமான விபரங்களை சேகரித்துக்கொண்டேன். ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்காக டாக்குமென்றி தயாரிக்கத்தேவை என்றதும், எவ்வித தயக்கமும் இல்லாமல் அவர்கள் சொன்னதை நான் ஒலிப்பதிவு செய்ய அனுமதித்தனர்.

மதிய உணவும் கோவிலில் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தனர். உண்மையில் ராஜ உபசரிப்பு. அதிசயமாக எல்லோரும் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தனர். மதியத்துக்குமேல் அவர்களில் ஒருவரே என்னை அரண்மனைக்கு கூட்டிச்சென்றார். அரண்மனையில் பெரும்பாலான இடங்கள் அரசு அலுவலங்களாக மாற்றப்பட்டிருந்ததை பார்த்ததும் வருத்தமும், கோபமும், இயலாமையும் ஏற்பட்டது. சரஸ்வதி மகாலில் என்னைப்பற்றிய விபரங்களை சொன்னதும் என்னுடைய மின்னஞ்சல் முகவரி வாங்கிக்கொண்டு எனக்குத்தேவையான அத்தனை விபரங்களையும் தருவதாக உறுதியளித்தார் ஒரு சினேகமான இளம் அதிகாரி.

அதன்பிறகு எனக்கு உதவியாக வந்தவரையும், கோவிலில் இருந்து வந்த அதிகாரியையும் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு அரண்மனைக்குள் தனியாக நடக்க ஆரம்பித்தேன். மாலை நான்கு மணி இருக்கும் மிகவும் அசதியாக இருக்கவே அங்கிருக்கும் ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்தேன், அப்புறம் கையிலிருக்கும் நாளிதழினை விரித்து படுத்தேன். எப்போது தூங்கினேன் எனத்தெரியாது.

அரண்மனை முழுதும் கும்மிருட்டாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கும் என மனது உற்சாகப்படுத்தியது. நான் இதனை எதற்காக செய்யவேண்டும் பகையா?, தேசபக்தியா?. ஆனால் வாக்கு கொடுத்தாகிவிட்டது. மிக வேகமாக ஆதித்த கரிகாலன், சோழநாட்டின் அடுத்த பேரரசன் நான் இருக்கும் பகுதிக்கு யார் மீதோ ஏற்பட்ட கோபத்துடன் வந்துகொண்டிருந்தான். ஒரே வீச்சு மிகச்சரியாக என் குறுவாள் அவன் இதயத்தை துளைத்தது. பத்து வருட பயிற்சி அல்லவா?!. என்னை நானே பெருமிதம் செய்துகொண்டேன். அதன் முனையில் தடவப்படிருந்த நஞ்சின் வீரியம் மிக விரைவாக வேலை செய்தது. அருகில் சென்று அவன் இறந்து விட்டதை உறுதி செய்துகொண்டேன்.

காலை எட்டு மணியாயிருச்சு எழுந்து குளிச்சுட்டு வாங்க, பத்து மணிக்கு நாம கிளம்பனும் என உதவியாளர் என்னை எழுப்பினார். முழித்ததும்தான் ஞாபகம் வந்தது. நான் நேற்று மாலை அரண்மனையில் அல்லவா இருந்தேன்?!. எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்?!. ஒரே குழப்பமாக இருந்தது.

சரி ஒரு குளியல் போட்டுவிட்டு நிதானமாக யோசிக்கலாம் என தலையணை மேல் கிடந்த துண்டை எடுத்தேன். தலையணை சற்றே நகர்ந்ததில் உள்ளிருந்து ஒரு பொருள் எட்டிப்பார்த்தது. அது ரத்தக்கறை படிந்த ஒரு குறுவாள்.

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

அட... அழகான பேன்டசி சிறுகதை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

புனைவு என்பதைவிட பாலகணேஷ் அண்ணன் சொன்னது போல பேன்டசி சிறுகதை இது...
அருமை... வாழ்த்துக்கள் அண்ணா.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அழகான கதை! பகிர்வுக்கு நன்றி!

பொன் மாலை பொழுது சொன்னது…

அப்போ .... ???...பொன்னியின் செல்வன் பிடிக்கவில்லை என்று போட்ட பிட்டெல்லாம் இந்த புனைவுக்குத்தானா?
ஆனா நல்லாதாகீது தலீவா,

Unknown சொன்னது…

Hey...thriller story...it was gripplng...