13 மார்., 2009

"ராமசாமி" அத்தியாயம் 7

சென்ற அத்தியாயத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை எழுத மறந்துவிட்டேன். சுட்டிகாட்டிய மணிகண்டனுக்கு நன்றி. மேலும் என் சிரமத்தை அறிந்து உடனே உதவ சொன்ன புவனாவுக்கும் என் நன்றி.

நண்பர் மணிகண்டன் ஏறக்குறைய எனக்கு இருபது ஆண்டுகளாக பழக்கம், என்னுடன் படித்த ராஜசேகர் மன்னார்குடி கல்லூரியில் படித்தான், அவனுடன் படித்த மணிகண்டன் முதலில் எனக்கு சாதரணமாக அறிமுகமானவர், ஆனால் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார், என்னுடைய நண்பர்களில் நான் மணிகண்டனை ரோல் மாடலாக கொண்டிருந்தால், இந்நேரம் என்னிடம் சுமாராக இருநூறு கோடி சொத்து இருந்திருக்கும், சிறந்த திட்டமிடலும் கடின உழைப்புமே மணிகண்டனின் சிறப்பு.


ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து, கிடைத்த வாய்ப்புக்களை ஒன்றைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு, இன்று துபையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார், அவரால் எனக்கு கிடைத்த நண்பர்கள் அநேகம், அவரிடம் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் நல்ல நண்பர்களை மட்டுமே எனக்கு அறிமுகபடுத்திவைப்பர், அவர் அறிமுகத்தால் கிடைத்த கண்ணன் அண்ணன்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தார். மேலும் அண்ணன் பாலா, தம்பி குமார் குடும்பத்தினர், நண்பர் செல்வம் குடும்பத்தினர் மற்றும் தம்பி சரவணன் குடும்பத்தினர் அனைவருமே மணியால் எனக்கு கிடைக்கபெற்றவர்கள்.

எதையும் நேர்மையாக அணுகும் குணம் கொண்ட மணியின் சில முடிவுகள் அவருக்கு எதிராகவே போனதுண்டு, அவருக்கு சில பலவீனங்களும் உண்டு, ஆனால் அதனை மிக எளிதாக கடந்துவந்துவிட்டார்.


என்னுடைய முதல் குழந்தை பிறந்தபோது என் கூடவே இருந்தார். கையில் ஒரு காசோலையுடன் வந்து எவ்வளவு தேவைப்பட்டாலும் எடுத்துகோங்க என்றார். புவனா அவருக்கு மனைவியாக கிடைத்தது மணியின் அதிர்ஷ்டம்.மிகவும் நல்ல அமைதியான பெண்.


வாழ்கையில் ஒரு சிலரைத்தான் தினம்தோறும் ஒரு தடவை நினைத்துகொள்வோம் அப்படி எனக்கு கிடைத்த சிலரில் மணியும் ஒருவர்.என் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய நெருக்கமான நண்பர்.மணியிடம் எனக்கு பிடிக்காத ஒன்று உண்டு, அது தன் உடம்பை கவனிக்காமல் விட்டது. கல்லூரியில் படிக்கையில் அவர் NCC மாணவர். தன்னுடைய உடம்பை கனகச்சிதமாக வைத்திருப்பார். ஆனால் அமீரகம் சென்றபின் உடம்பை கவனிக்காமல் விட்டுவிட்டார். இவ்வளவிற்கும் தண்ணி, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவர். யோகா செய்யுங்கள் மணி. புவனா நீங்களாவது மணியை அதிகாலை எழுப்பிவிட்டு மெதுவோட்டம் பழக சொல்லுங்கள்.


இவர் மீது மாற்று கருத்துகொண்ட நண்பர்கள் இவரைப்பற்றி சில விசயங்கள் சொன்னபோதுகூட என்னால் அவர்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை, காரணம் மணி ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது எப்படி என்மேல் பாசமாக இருந்தாரோ அதே பாசத்துடன்தான் இப்போதும் இருக்கிறார். மேலும் என்னால் அவருக்கு எவ்வித ஆதாயமும் இன்றுவரை இருந்ததில்லை, ஆனால் அவரால் நான் அடைந்த உதவி மட்டுமே உண்டு. அவரின் வீட்டில் என்னை எப்போதும் தன் சொந்த பிள்ளயைபோல்தான் பார்ப்பார்கள், மணிகண்டன் மீதுள்ள வருத்தங்களைகூட அவர் தந்தை என்னிடம் பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவிற்கு என்னை மிகவும் நெருக்கமாக கருதினார்.


அவர் தந்தையிடம் எனக்கு மிகவும் பிடித்தவிசயம் இந்த வயதிலும் உழைக்க நினைப்பது, தன் பிள்ளைகள் அவரை நிறைவாக வைத்திருந்தாலும் சும்மா இருக்காமல் வேலை செய்யவேணும் என நினைப்பவர். மதுக்கூர் போகும்போதெல்லாம் மணி வீட்டில் நான் தங்குவதில்லை என மணிக்கு வருத்தம், என்ன செய்வது நான் தெருவில் நின்றபோது என்னை அரவணைத்த கண்ணன் அண்ணன் வீட்டில் சென்று தங்குவதுதான் சரி. இப்போது நல்ல நிலைக்கு வந்தவுடன் நான் எப்போது ஊருக்கு சென்றாலும் கண்ணன் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டுத்தான் நான் பரவாக்கோட்டைக்கே செல்கிறேன். என்னைபொருத்தவரை கண்ணன் அண்ணனின் வீடுதான் என் சொந்த வீடு, அதற்க்கு அப்புறம்தான் எல்லாம். மணியால்தான் கண்ணன் அண்ணன் எனக்கு அறிமுகம் என்பதால், நான் மணிக்கே நன்றிகடன் பட்டிருக்கிறேன். மதுக்கூரை பொறுத்தவரை எனக்கு கிடைத்த அத்தனை அறிமுகமும் மணியால் கிடைக்கபெற்றவர்கள்தான்.


மணிகண்டன் அரசியலில் சிலகாலம் தீவிரமாக ஈடுபட்டார், தி.மு.க வில் இருந்து வைகோ விலகியபோது ம.தி.மு.க வில் தீவிரமாக ஈடுபட்டார். தொடர்ந்து தி.மு.க.வில் இருந்திருந்தால் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருப்பார். ஆனால் அரசியலில் இருந்து விலகி தொழில் நோக்கி நகர்ந்துதான் அவரின் புத்திசாலித்தனம். இப்பவும் அரசியல் ஆர்வம் இருக்கா மணி?.


இவர் ஒரு கொடையாளி என்பது நிறைய பேருக்கு தெரியாது. வெளியே தெரியாமல் நிறைய பேருக்கு உதவுவார். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு சில காதல்கள் உண்டு. ஆனால் அவற்றில் இருந்து கவனமாக விலகிவிட்டார். பெரும்பாலும் காதல் வயப்பட்டால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவோம். இவரோ காதலா? .. குடும்பமா? ... என்ற நிலை வந்தபோது காதலை தூக்கி எறிந்தார்.அப்போது இவர்மேல் எனக்கு பெரும்கோபமே இருந்தது, இப்போது யோசித்தால் இவர் எடுத்த முடிவு சரிதான் என்றே தோன்றுகிறது ( புவனாகிட்டே மாட்டிவிட்டுட்டேனா மணி?).


ஒரு சீரான வளர்ச்சியை எட்டிவரும் மணி ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆக வாழ்த்துகிறேன்....
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

கருத்துகள் இல்லை: