10 ஆக., 2009

ராமசாமி அத்தியாயம் - 25



தேவதை கதைகள் "செல்வி"

ஒரு மனிதனுக்கு எப்போதாவது திடீரென ஞானம் பிறக்கும், புத்தனுக்கு போதிமரம் கிடைத்தமாதிரி அண்ணன் கணேசனுக்கு ஒரு நாள் தன் குழந்தை தொட்டிலில் தூங்கிகொண்டிருந்தபோது வாழ்க்கை பற்றிய பயம் திடீரென வந்ததாக சொன்னார். பெண் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகபோகிறாள் தற்போது வாழும் பற்றாகுறை வாழ்க்கை அவளை பாதித்துவிடக்கூடாதே என கவலை வந்துவிட்டது.

தனக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் தன் மனைவி பொறுமையாக குடித்தனம் செய்தாலும், இத்தனை நாள் எத்தனை பொறுப்பற்று இருந்திருக்கிறோம் என்பதே மனதுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. தன் திருமணமே மிகப்பெரிய போராட்டத்தில் ஜெயித்த நம்பிக்கை மனதில் இருந்தாலும். இப்படி எதிர்காலம் பற்றிய பயம் இதுவரை வந்ததில்லை. இத்தனை நாளும் செல்வி அடிக்கடி சொல்வதுதான் என்றாலும், தன் குழந்தை பற்றி யோசித்தவுடன் வந்த பயம் மனதை அரித்தது.

நண்பர்கள் சேர்ந்து சிங்கபூருக்கு சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்து ராஜனும், குமாரும் சிங்கப்பூர் சென்று வேலையில் அமர்ந்துவிட்ட பிறகும் தனக்கான விசா தொடர்ந்து கிடைக்காமல் போகவே, சரி ஒரு நல்ல சோசியகாரானாக சென்று பார்த்தால் தேவலை என நினைத்து, அவனை சென்று பார்த்தால் அவனோ உன்னால் வெளிநாடு போகவே முடியாது என்று கூறிவிட்டான். கோபத்தில் கோவிலுக்கு சென்று சாமியிடம் நான் சிங்கபூருக்கு சென்றே ஆகவேண்டும் அதற்க்கு நீதான் பொறுப்பு என சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, வீட்டில் செல்வி அப்பாவிடம் இருந்து போன் வந்தது, மீண்டும் விசா அப்ளை செய்யலாம் என சென்னை வரசொன்னார் என்றது. சென்னை வந்து குடும்பத்தோடு விசா அப்ளை செய்ய உடனே கிடைத்துவிட்டது.

நான் இடையில் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மீண்டும் சிங்கபூர் சென்றேன். அன்றைய காலை விமானத்தில் நானும் மாலை விமானத்தில் கணேசன் அண்ணன் குடும்பத்துடனும் ஒரே நாளில் வந்திறங்கினோம். அப்போது தெரியாது எங்களுக்குள் ஒரு புதிய உறவு துவங்கபோகிறது என்று. ஒரு இரண்டு நாள் கழித்து கணேசன் அண்ணன், செல்வி அண்ணி, குழந்தை சுஜனி மூவரும் எங்கள் பாசிர் ரிஸ் இல்லத்திற்கு வந்திருந்தனர், சம்பிராயதமான உரையாடலுக்கு பிறகு சிறிது நானும் கணேசன் அண்ணனும் தனித்து பேச வாய்ப்பு கிடைத்தது. தன்னை எல்லோரும் ஏன் குடும்பத்துடன் வந்தாய், தனியாக வந்தாலே வேலை கிடைப்பது சிரமம் இதில் குடும்பத்தோடு வந்தால் எப்படி சமாளிப்பை என பயமுறுத்துவதாக சொன்னார். நானோ இல்லை அண்ணா நிச்சயம் வேலை கிடைக்கும்,கவலைபடாதீர்கள் என ஆறுதல் கூறினேன். அவரோ நான் இங்கு கோவிலுக்கு சென்று ஒரு வாரத்துக்குள் எனக்கு வேலை கிடைக்கணும் என வேண்டிகொண்டதாக சொன்னார். கடவுள் நம்பிக்கை அற்ற எனக்கு அது அபத்தமாக இருந்தாலும். சொன்னபடி அவருக்கு வேலை நிச்சயம் ஆனது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் எங்களுடன் தங்கினர்.

அவர்களின் குழந்தை சுஜனி மிகவும் அருமையான குழந்தை, கணேசன் அண்ணன் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து பிரிந்த அவரின் நண்பர் குமாரின் மனைவி தங்கை மீனா அடிக்கடி சொல்லும் அது மிகவும் ராசியான குழந்தை என்று, உண்மைதான் கணேசன் அண்ணனுக்கு அது பிறந்தபின்தான் வாழ்வில் ஏற்றம் கிடைத்தது. சுஜனி எனக்கும் குழந்தைதான் இன்று அதற்க்கு பனிரெண்டு வயதாகிறது. ஆனாலும் எனக்கு இப்போதும் ஒன்றரை வயதில் இருந்த அதே குழந்தை தன்மையுடன்தான் இப்போதும் இருக்கும் மிகவும் புத்திசாலியான பெண்.

அதன்பிறகு அண்ணிதான் எங்களுக்காக சமைத்தது. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, வசதியாக வளர்ந்த பெண், ஆனால் சிரமம் பார்க்காமல் எங்களுக்காக சமைக்கும், சமைக்க தெரியாமல் சிரமப்படும், நாங்கள் சாப்பிடும்போது நன்றாக இருக்கா, வேறு ஏதாவது மாற்றம் செய்யனுமா எனகேட்கும். வீட்டு சாப்பாடே கிடைக்காமல் நாக்கு செத்துப்போன எங்களுக்கு எப்படி இருந்தால் என்ன. அதுவே அமிர்தமாக இருக்கும்.

பாசிர் ரிஸ் வீட்டில் நண்பர்களுக்குள் பிரச்சினை வந்து எல்லோரும் தனித்தனியே போய்விடுவது என முடிவு செய்தோம். அதில் கணேசன், மற்றும் குமார் இருவருக்கும்தான் பிரச்சினை வந்து இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை ஆனால் இருவரின் குடும்பத்தோடும் எனக்கு இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது. அப்படி இருவரும் பிரியும்போது கணேசன் அண்ணா ஜூரோங் வெஸ்ட் சென்றுவிட்டார், சாமான்களை எல்லாம் நானும் சம்பத்தும்தான் சென்று இறக்கிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு சிலமாதங்களில் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்கு அடுத்த மாதங்களில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. அவர்கள் ஒரு சொந்தவீடு வாங்கினார்கள் அப்போது நான் சிங்கபூரில் இருந்தேன், எனவே அப்போதும் நான்தான் சாமான்களை இடம்மாற்றி கொடுத்தேன். முதன் முதலில் நானும் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து வர்ணம் அடித்தோம். இப்போதும் அந்த வீட்டில்தான் வசித்துவருகிறார்கள்.

இதுவரை அண்ணனை பற்றியே எழுதியிருக்கிறேன், அண்ணியை பற்றியும் இருவரின் தூய்மையான காதலை பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வெளிவருகிறது ......

கருத்துகள் இல்லை: