31 மார்., 2010

ரங்கநாதன் தெரு - அங்காடித்தெரு அல்ல


சென்னை தி.நகரில் வசிக்கும், அதுவும் உஸ்மான் சாலையை வசிக்கும் மக்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடமாக வாழும் சூழல் ஏற்பட்டது எனக்கு. எப்போதும் மக்கள் கூட்டத்தால் பிதுங்கி வழியும் ரெங்கநாதன் தெருவுக்கு செல்வதென்றால் பெரும்பாலும் தவிர்க்க முயற்சி செய்வேன். பொதுவாகவே கூட்டமான இடங்களை பிடிக்காது. ஆனால் நள்ளிரவுக்குப்பின் பேருந்து நிலையம் வரைக்கும் நடந்து வருவேன். அப்போது பெரும்பாலும் மயான அமைதி நிலவும். பகலில் அத்தனை மக்களும் நிரம்பிய வீதி, நள்ளிரவில் வறண்ட நதியென காட்சியளிக்கும்.


பண்டிகை காலங்களில் எங்களால் எங்கள் வாகனத்துடன் தெருவுக்குள் நுழைய முடியாது பெரும்பாலும் காவல்துறையுடன் சண்டைபோடவேண்டிவரும். ஆனால் என் உறவினருக்கும், நண்பர்களுக்கும் என் வீடு அங்கிருப்பது வசதியாக இருப்பதால், எப்போதும் விருந்தினர்கள் வீட்டில் இருப்பார்கள், விஷயம் இது பற்றியது அல்ல.

அங்கு தெருவில் கடைவைத்திருப்போர் பற்றியது, என்னதான் மலிவு விலையில் கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும் அதைவிட மலிவாக நடைபாதை கடைகளில் கிடைக்கும், என்ன பேரம் பேசி வாங்கத்தெரியவேண்டும். ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் வரும்போது அவர்களின் துயரம் சொல்லிமாளாது. பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி ஒளிவார்கள். நடைபாதை கடைகள் சட்டவிரோதமாக இருக்கலாம், ஆனால் அதைக்கொண்டுதான் அவர்கள் குடும்பம் வாழ்கிறது.

எனக்கு தெரிந்து அந்த தெருவில் அதிகம் சம்பாதிப்பது பிச்சைகாரர்கள்தான், விதவிதமான பிச்சைகாரர்களை அங்கு பார்க்கமுடியும், ஆனால் கை,கால்களின்றி மொட்டை வெயிலில் கிடக்கும் பிச்சைகாரர்கள் மனதை பிசைவார்கள், இவர்களை யார் தூக்கி வருகிறார்கள், எங்கிருந்து கொண்டுவருகிறார்கள் எனதெரியவில்லை. ஆனால் மூன்று மணிக்கு ஒரு தடவை ஆளை மாற்றிவிடுவார்கள்.

இரவுகளில் ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கும் காய்கறி அங்காடிக்கு செல்வேன், தெருவில் விற்கப்படும் கீரைகள் நேரம் ஆக ஆக விலை குறைந்து சமயத்தில் ரூபாய்க்கு இரண்டு கட்டுகள் கிடைக்கும். இரவு 9 மணியானவுடன் ராமேஸ்வரம் தெரு வழியாக ரெங்கநாதன் தெருவின் கடைகளுக்கு சிறிய வகை லாரிகளில் சரக்குகள் வர ஆரம்பிக்கும், அப்போது அங்கு ஏற்படும் நெரிசல் சொல்லிமாளாது, மருந்துக்குகூட ஒரு காவல் அதிகாரியை அங்கு பார்க்க முடியாது.

அந்த நேரத்தில்தான் கடைகளில் வேலை செய்யும் பெண்களும், ஆண்களும் இரவு உணவுக்காக ராமேஸ்வரம் வீதியில் ஒரு ரயில் வண்டியைபோல் நடந்து செல்வார்கள், அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சொல்ல இயலா துயரங்கள் ஆயிரம். சில நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அவர்களுடன் அங்கிருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்க சென்றிருக்கிறேன், அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரு எந்திரத்தனமாய் வேலை செய்வதை பார்த்து நிறைய பேர் அவர்களை திட்டுவதுண்டு, அவர்களை அப்போது விசாரிப்பேன் திட்டினால் கூட பரவாயில்லை அண்ணே, எங்களைப்பற்றி கண்காணிப்பாளரிடம் புகார் செய்துவிட்டு போய்விடுகின்றனர் அதுதான் பயம் என்றனர். அப்போது எனக்கு புரியவில்லை.

அங்காடித்தெரு பார்க்கும்வரை கிட்டத்தட்ட ஐந்து வருடம் அங்கு வாழ்ந்த நான் அங்கு வேலை செய்த சகோதர சகோதரிகளை பற்றி தெரியாமல் இருந்தது பற்றி வெட்கபடுகிறேன், இப்போது விசாரித்தால் படத்தில் காட்டியது அத்தனையும் கற்பனை அல்ல என்கின்றனர். வசந்தபாலனை பாராட்டுவதா? இல்லை அங்கு இன்னமும் துயருறும் மக்களுக்காக அழுவதா?..

"கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை ... "

1 கருத்து:

Jayadev Das சொன்னது…

நான் கூட அங்காடித் தெரு படம் பாத்ததும், என் மச்சான் கிட்ட சொல்லி ஐம்பது பேரு அந்த கடைக்குள்ள நுழைந்து அங்குள்ள owner-யும், மேனேஜர் பசங்களையும் நாலு கும்மு கும்மனும் போல தோணிச்சு. [அது சரி, இந்த பதிவை அருமைன்னு ரெக்கமன்ட் பண்ணிய பிரபாகரன் கூட கமன்ட் போடாமலேயே எஸ்கேப் ஆயிட்டாரா? குப்பை பதிவுகளுகெல்லாம் இருநூறு முன்னூறு பின்னூட்டங்கள் வருது, இங்க ஒன்னையும் காணோமே, என்னத்த சொல்ல??!!!]